Wednesday, April 6, 2022

ஸ்டீபன் ஹாக்கிங்ன்ஸ்

ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா ? - சுப. வீரபாண்டியன் - கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியீடு.

◆  நமது பூமி, கோளங்கள், அண்டம், அதன் செயல்பாடுகள் பற்றிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு, மூன்று விஞ்ஞானிகளின் பங்களிப்பு மிக முக்கியமாக பேசப்படுகின்றது....

1642ல் பிறந்த நியூட்டன். அவரின் புவியீர்ப்பு விசை பற்றிய கண்டுபிடிப்பு ! 

1879ல் பிறந்த ஐன்ஸ்டீன். அவரின் சார்பியல் கோட்பாடு பற்றிய கண்டுபிடிப்பு ! 

1942ல் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங். அவரின்  கருந்துளைகளைப் பற்றிய ஹாக்கிங் ரேடியேஷன் ! இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில்தான் விமானங்களும், ராக்கெட்களும் செலுத்தப்படுகின்றன.

◆  விஞ்ஞான அறிவு வளர, வளர, கண்டுபிடிப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க விஞ்ஞானிகளின், கடவுள் நம்பிக்கை பற்றிய புரிதல்களும் தெளிவாக வெளி வருகின்றது. 

தங்கள் கண்டுபிடிப்புகளிலிருந்து நிறைய பாடம் கற்றார்கள். புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் - நியூட்டன் கடவுள் நம்பிக்கை கொண்டவர் ( Theist ).  

ஐன்ஸ்டீன் கடவுள் பற்றிய கவலையில்லாதவர் ( Agnostic ). ஸ்டீபன் ஹாக்கிங் கடவுள் இல்லையென்றே சொன்னவர் ( Atheist ) .

◆  ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய கடைசிப் புத்தகம் Brief Answers to the Big Questions ( ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் என தமிழில் வெளிவந்துள்ளது ).

இந்த நூலில், ஹாக்கிங் மிகப்பெரிய பத்து முக்கியமான கேள்விகளுக்கு விடையளித்திருக்கின்றார். 

அதில் முதலாவதான கேள்வி - Is there a God ? கடவுள் இருக்கிறாரா ?

◆  அரசியல் மேடைகளிலும், பகுத்தறிவு கூட்டங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் தனது வாதத்திறமையால் எல்லோரையும் வசீகரிக்கும் பேச்சை வழங்கும் அய்யா சுப. வீரபாண்டியன். 

அறிவியல் சம்பந்தமான உரையாக - ஹாக்கிங், கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்வியையும், அவர் தந்த பதிலையும் ஒரு சிறப்பு கூட்டத்தில் பேசி, அதை தொகுத்து தரப்பட்டதே, இந்த சிறிய நூல்.

◆  சுப. வீரபாண்டியனின் இந்த நூலை படிக்கும் போது, ஹாக்கிங் எழுப்பியுள்ள பத்து கேள்விகளையும் அதற்கான அறிவார்ந்த பதில்களையும் அறிய ஆவலாக உள்ளது. 

கடவுள் இருக்கிறாரா என்ற முதல் கேள்விக்கு தரப்பட்டுள்ள பதில்களில் சில -----

◆  " கடவுள் முதல் நாள் இதைப் படைத்தார். இரண்டாவது நாள் இதைப் படைத்தார். மூன்றாவது நாள் அதைப் படைத்தார் என்கின்றனர். சரி ! - 

அதற்கு முதல்நாள் வரை என்ன செய்து கொண்டிருந்தார் ? "......


◆  " ஒரு பந்தை மட்டையால் ஓங்கி அடிக்கிற போது, அந்தப் பந்து எங்கே போய் விழும் என்பதை கண்டிப்பாக நம்மால் சொல்ல முடியும். எதை வைத்து ?

அதனுடைய வேகம் என்ன, பந்தினுடைய அளவென்ன, அது தட்டப்படுகின்ற திசை என்ன என்பதை வைத்து !

அடிக்கிற பந்து எங்கே போய் விழும் என்பது, அந்த பந்தின் எடையைப் பொறுத்து, திசையைப் பொறுத்து, வெளியைப் பொறுத்து, விசையைப் பொறுத்து. 

எப்பொழுதாவது முன் பக்கமாக ஓங்கி அடிக்கப்பட்ட பந்து, பின் பக்கமாக வந்து விழுந்தால், என்னிடம் சொல்லுங்கள் ! - 

அப்போது கடவுள் இருக்கிறார் என நான் ஒப்புக் கொள்கிறேன் ! "..........

◆  இந்த சிறிய நூல், ஸ்டீபன் ஹாக்கிங்யின்  முழுப் புத்தகத்தையும் வாங்கி படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. அறிவை தெளிவு செய்யும் கேள்வி பதில்கள், ஹாக்கிங் இந்த உலகிற்கு தந்தது.

தேடுதல் தரும் விஞ்ஞானம் !

தேறுதல் தரும் அஞ்ஞானம் !

பொ.நாகராஜன். சென்னை.

11.07.2021.

********************************************

No comments: