Wednesday, April 13, 2022

பெரியார் என்றும் வாழ்வார்

 "பெரியார் என்றும் வாழ்வார்" 

பேரறிஞர் அண்ணா, 1942 ஆம் ஆண்டு முதல், "திராவிட நாடு" இதழைக் காஞ்சிபுரத்திலிருந்து வெளியிட்டு வந்தார். அதில் அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் அத்தனையும் வரலாற்றுக் கருவூலங்களாகத் திகழ்கின்றன. அத்துடன் "மன்னன் சிரமும் மக்கள் கரமும்", "ரோமாபுரி ராணிகள்", "ஆரிய மாயை" என்று அவர் எழுதிய கட்டுரைத் தொடர்களையும் அவ்விதழில் வெளியிட்டு வந்தார்.

புதுவையில் அண்ணாவின் நெருங்கிய நண்பராக இருந்தவர் கவிஞர் ச. சிவப்பிரகாசம் அவர்கள். இவர் திராவிட இயக்க இதழ்களில், கவிஞர் புதுவைச் சிவம் என்ற பெயரில் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதி வந்தார். தன்னுடைய நூல்களுடன், பெரியார், அண்ணா, பாரதிதாசன் ஆகியோரின் நூல்களையும் தனது "ஞாயிறு நூற்பதிப்பகம்" வழியாக வெளியிட்டு வந்தார்.

திராவிடநாடு இதழில், அறிஞர் அண்ணா அவர்கள் 'பரதன்' என்ற புனைப்பெயரில் எழுதிய "ஆரிய மாயை" என்னும் தலைப்பிலான கட்டுரைத் தொகுப்புகளை அண்ணாவின் அனுமதியுடன், முதன்முதலாகப் புதுச்சேரியில் (பிரஞ்சிந்தியா) இருந்து நூலாக வெளியிட்டவர் ச. சிவப்பிரகாசம். அண்ணாவின் முன்னுரையோடும், ஞாயிறு நூற்பதிப்பக உரிமையாளர் என்ற முறையில் ச. சிவப்பிரகாசம் எழுதிய பதிப்புரையோடும் "ஆரிய மாயை" நூல் 1947-ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் வெளிவந்தது. விலை எட்டு அணா.

இந்நூலின் முதற் பதிப்பு இருக்கிறதா? என்று கேட்டுத் திராவிடர் கழகத் தலைவரும், விடுதலை இதழின் ஆசிரியருமான திரு. கி. வீரமணி அவர்கள் தகவல் அனுப்பியிருந்தார். நேற்று (11.4.2022) புதுவை வந்திருந்த அவரை, நேற்றுக் காலை, திராவிடர் கழக மாணவர் அணி நடத்திய "புதிய கல்விக் கொள்கை எதிர்ப்புப் போராட்டத்தில்" கலந்து கொண்டு, பின்னர் ஆசிரியரைச் சந்தித்த குழுவினரில் என் மகன் இள. கோவலனின் அறிமுகத்தின் போதுதான், அண்ணாவின் "ஆரியமாயை" நூலைப் பற்றிக் குறிப்பிட்டு, எனக்குத் தகவல் அனுப்பியிருந்தார் ஆசிரியர்.

நேற்று மாலை பொதுக் கூட்டத்திற்கு முன்பாக ஆசிரியர், திரு கி. வீரமணி அவர்களை, அவர் கோரிய அந்நூலுடன் சென்று சந்தித்தேன். நலம் விசாரிப்புகள் முடிந்து, அந்நூலைக் கையில் வாங்கியவுடன், ஆவலுடன் புரட்டிப் பார்த்து, அதன் பதிப்பக முகவரியான "அம்பலத்தாடு ஐயர் மடத்து வீதி" என்பதைப் பற்றிக் குறிப்பிட்டு, "இம்முகவரி அந்நாள் திராவிட இயக்கத் தலைவர்கள் நினைவில் எப்போதும் இருக்கும்" என்றார்.

அந்நூலில் எனது தந்தையார் கவிஞர் ச. சிவப்பிரகாசம் எழுதிய பதிப்புரையை அங்கிருந்த எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாகப் படித்தார். ஆங்காங்கே சில இடங்களில் நிறுத்தி, சில விளக்கங்களையும் கூறினார். அதில் அறிஞர் அண்ணாவை, "தோழர் சி. என். அண்ணாதுரை" என்று குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து, "பாருங்க, எவ்வளவு தோழமை அவங்களுக்குள்ள" என்று பழைய நினைவுகளைக் கண்களில் தேக்கிக் கூறினார்.

"இந்நூலை, அப்போது நான் எட்டணாவுக்கு வாங்கினேன்" என்று சிறு குழந்தை போல மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிட்டவர், ஆனால் தற்போது அந்நூல் தன்னிடம் இல்லை என்று கூறி, என்னிடம் இருந்த நூலைப் பிரதி எடுத்து அனுப்பும் படிக் கேட்டுக் கொண்டார். "அனுப்புகிறேன் ஐயா" என்று கூறி விடைபெற்றேன். மனதிற்கு நிறைவான, நெகிழ்வான சந்திப்பாக அது அமைந்திருந்தது.

என் மாணவப் பருவத்தில் நான், பெரியார் மடியில் அமரும் வாய்ப்புப் பெற்றவன். பின்னர், பெரியார், அம்பேத்கரைப் படித்து அவர்களுடனேயே பயணப்பட்டுக் கொண்டிருப்பவன். நேற்று என் கண்களுக்குத் திரு. கி. வீரமணி அவர்கள், தாடி இல்லாத "பெரியார்" ஆகக் காட்சி தந்தார்.

 முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.

No comments: