Monday, June 13, 2022

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கவி

கால்டுவெல் எழுதிய 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' நூலைப் படிக்க முயற்சிப்பது எவ்வளவு இடர்பாடுகள் நிறைந்தது என்பதையும் எவ்வளவு ஆழ்ந்த புலமை வேண்டும் என்பதையும் அறிந்து தற்காலிகமாக படிப்பதை நிறுத்தியுள்ளேன்.

தோற்றுவாய்ப் பகுதியையும் முதற் பாகத்தையும் இயன்றளவு படித்து முடித்துவிட்டேன்.

இரண்டாம் பாகம் படிக்கும்போது திணறிவிட்டேன். படித்ததில்

சில குறிப்புகள்....

1. திராவிட நெடுங்கணக்கு என்ற தலைப்பில், கால்டுவெல் அவர்கள் மூன்று வகையான நெடுங்கணக்குகள் வழக்கில் உள்ளன என்கிறார்.

தெலுங்கு-கன்னட வரி வடிவுகளை ஒரு நெடுங்கணக்கு என்கிறார்.

துளு மொழி, மலையாள வரிவடிவத்தில் எழுதப்பட்டு வந்தன என்றும் தற்போது மங்களுர், ஜெர்மன் மி­ன் பதிப்பகத்தில் வரும் துளு மொழி நூல்கள் கன்னட வரிவடிவுகளைப் பயன்படுத்துகின்றன என்றும் பிரைகில் என்பவர் எழுதிய துளுமொழி இலக்கண நூலும் கன்னட வரிவடிவத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்றும் கூறுகிறார் கால்டுவெல்.

கூ மொழி இலக்கண நூல் ஒரியா வரிவடிவத்தில் காணப்பட்டாலும் தெலுங்கு வரிவடிவே ஏற்புடையது என்கிறார் கால்டுவெல்.

ஏனைய திருந்தா மொழிகள் அனைத்தும் உரோமன் வரிவடிவங்களைப் பயன்படுத்துகின்றன என்றும் கூறுகிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட நெடுங்கணக்குகளும் வழக்கொழிந்து போன வரி வடிவங்களும் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்படுத்தப்படும் கிரந்த எழுத்துக்களும், பழைய தேவநாகரி எழுத்துக்களிலிருந்து, அசோகன் கால கல்வெட்டுகளில் காணப்படும் ஒருவகையான எழுத்துகளிலிருந்தோ பிறந்தவை என்றும், பனை ஓலைகளில் எழுத்தாணி கொண்டும் எழுதும் தென்னாட்டு வழக்கம் காரணமாய், மாறி இன்றைய வரிவடிவங்களைப் பெற்றிருக்கின்றன என்கிறார் கால்டுவெல்.

திராவிட வரிவடிவங்கள் மாற்றம் பற்றி பீம்ஸ் என்பவர், ஒரிய மொழிகளின் வரிவடிவங்கள் ஆரியரல்லாத இனமொழிகளின் வடிவெழுத்துக்களோடு (தெலுங்கு, மலையாளம், தமிழ், சிங்களம், பர்மிய மொழிகள்) ஒத்துள்ளன என்றும் பர்மிய வரிவடிவங்கள் வட்டமாக மட்டுமே உள்ளன என்றும் நேர்க்கோடு என்பது கிடையாது என்றும், அசோகன் கையாண்ட வரிவடிவ எழுத்துக்கள் நேர்க்கோடுகளும், கோணங்களும் உடையனவாய் உள்ளன என்றும், அவை சியோனி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகின்றன என்றும் கூறுகிறார்.

இதனுடைய தொடர்ச்சி கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமராவதி என்ற இடத்தில் காணப்பட்ட கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இதில் சதுரங்களாக இருந்த வரிவடிவங்கள் அரை வட்டங்களாக மாற்றம் பெறுகின்றன.

இம்மாற்றங்களிலிருந்தே திராவிட, சிங்கள மொழிகளின் நெடுங்கணக்குகள் தொடங்கப்பட்டன.

அடுத்து பர்மா, சயாம் மொழிகளின் வரிவடிவம் பற்றி குறிப்பிடுகின்றார் கால்டுவெல். அதில்,  பர்மா, சயாம் மொழிகளின் வரிவடிவங்களும், கூட்டு எழுத்துக்களில் இரண்டாவது எழுத்திற்குத் தனிவடிவம் தரும் பஸங்கன் முறையும், உயிர் எழுத்துக்களின் வேறுபாட்டைக் குறிக்க, வேறுபாட்டுக்குறிகளை வழங்கும் சந்தங்கன் முறையும், இம்மொழிகள் ஆரிய மொழியின் வழி வந்தன என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது என்கிறார்.

ஜாவா நாட்டு அழகிய வரிவடிவங்களும் அவ்வாறே தோன்றின என்கிறார் கால்டுவெல்.

அடுத்து ஓரிய மொழிக் குறித்து கூறும் கால்டுவெல், எழுதும் ஆற்றலை ஓரியர்கள் வங்காளத்திலிருந்து பெற்றனரா அல்லது மத்திய இந்தியாவிலிருந்து பெற்றனரா என்று தெரியவில்லை என்கிறார். 

மேலும், ஓரியர்களும், வங்காளக் கரையோரப் பகுதியில் வாழும் பிற மொழியாளர்களும், தாலிப்பனை, விசிறிப் பனை, பனை இவற்றின் ஓலைகளில் எழுதுகின்றனர்.

நீண்ட நேர்க்கோடுகளால் ஆன தேவநாகரி எழுத்துக்கள், இப்பனையோலையில் எழுத இயலாது. எழுதினால், எழுத்தாணி பனையோலையை பிளந்து விடும் என்கிறார் கால்டுவெல்.

எழுத்தாணி வலது கையிலும், ஓலை இடக்கையிலும் வைத்து, இடது கைப்பெருவிரல் எழுத்தாணியின் அசைவிற்குக் காரணமாக இருப்பதால் வட்டவடிவ எழுத்துக்களை எழுதுவதற்கு ஏதுவாக இருக்கிறார் என்றும் பீம்ஸ் அவர்களின் குறிப்புகளை எடுத்துக் கூறுகிறார் கால்டுவெல்.

தமிழில் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பதைக் காட்ட வல்ல அகச்சான்றுகள் கிடைக்கவில்லை என்கிறார் கால்டுவெல்.

பிராம்ணர்கள், தமிழ்நாட்டில் குடியேறுவதற்கு முன்னரே, பண்டைத்தமிழர்கள், எழுத்துக்கலையினை அறிந்திருந்தனர் என்றும், அப்பிராம்மணர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த போது, தமிழ் வரிவெழுத்துக்களை தங்கள் மொழியாகிய சமஸ்கிருதத்திற்குரிய ஒலிகளை வெளியிடும் ஆற்றல் வாய்ந்த சில வடிவெழுத்துக்களையும் சேர்த்து, தமிழ் எழுத்துக்களையும் சீர்திருத்தினர் என்றும் கிரந்த லிபி அல்லது நூல் எழுத்துக்கள் என்று அவர்களால் அழைக்கப்பட்ட அவ்விணைப்பு எழுத்துக்கல் இருந்தே இன்றையத் தமிழில் வழங்கும் வரிவெழுத்துக்கள் தோற்றுவிக்கப்பட்டன என்றும் எல்லீஸ் கூறியதையும் இங்கு எடுத்துக் கூறுகிறார் கால்டுவெல்.

‘சமஸ்கிருதத்திற்கு முந்திய... தமிழ் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பது குறித்து ஐயப்பாடு இருக்கிறது. தாய் மொழியில் எழுத்தையும், நூலையும் குறிக்க வழங்கும் தனித்தமிழ்ச் சொற்கள் உள்ளன என்பது உண்மையே யயனினும், பிராம்மணர்கள் இந்நாட்டில் முதன் முதலாகக் குடியேறியதற்கு முற்பட்ட காலத்தில், தமிழில் வடிவெழுத்துக்கள் இருந்தன என்பதைக் காட்ட வல்ல அகச்சான்றுகள் கிடைத்தில’ என்கிறார் கால்டுவெல்.

மேலும், பழைய காலத்துக் கல்வெட்டுகளில் தமிழ் மொழியை வழங்க மேற்கொண்ட பல்வேறு வகை வடிவெழுத்துகள் தொடக்கத்தில் சமஸ்கிருத எழுத்துகளை வழங்க மேற்கொண்ட நெடுங்கணக்கு முறையின் அடிப்படை மீது அமைந்துள்ளனவாகவே தோன்றுகிறது என்கிறார் கால்டுவெல்.

இது தொடர்பாக மீண்டும் எல்லிஸ் அவர்களை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல்.


‘திருவாளர் எல்லீஸ் அவர்களின் கருத்தோடு ஒத்த கருத்து அல்ல என்றாலும் அவர் கருத்தோடு தொடர்புடைய கருத்து ஒன்றைத் திருவாளர் எட்வர்டு தாமஸ் என்பார் வெளியிட்டுள்ளார்’ என்று கூறும் கால்டுவெல், 

‘அசோகன் கல்வெட்டுகளில் காணப்படுபவையும், சமஸ்கிருதம் அல்லது பிராகிருத மொழிகளை வழங்க மேற்கொள்ளப் பயன்பட்டவையும் ஆன மிகப் பழைய வடிவெழுத்துக்கள், திராவிட இனப்பிறப்பை அடிப்படையாகக் கொண்டன என்றும் அவை துரேனியர் (திராவிடர்) மொழிகளின் தேவைகளுக்காகவே தொடக்கத்தில் தோற்றுவிக்கப்பட்டன என்றும்,

 அவை வடமொழி ‘ஹகர’ வொலிகளை ஒலிக்க மேற்கொள்ளப்பட்ட பிராகிருத அல்லது லாட் நெடுங்கணக்குகளாய் பழைய திராவிட வடிவெழுத்துக்கள் மாற்றியமைக்கப்பட்ட காலத்தில்தான் அவற்றின் மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டது’ என்றும் எட்வர்டு தாமஸ் கூறியதை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல்.

லாட் மொழியில் ‘ஏ’காரத்தைக் குறிக்க வழங்கும் வடிவெழுத்தே ‘ஐ’காரத்தைக் குறிக்கவும் வழங்கப்படுகிறது என்றாலும் அந் நெடுங்கணக்கில், ‘எ’கர, ‘ஏ’கார ஒலிகளைக் குறிக்க வரும் வடிவெழுத்துக்களிடையே வேறுபாடு உள்ளது என்கிறார் தாமஸ் என்பதையும் எடுத்துக் காட்டுகிறார் கால்டுவெல்.

கொச்சியில் வாழும் யூதர்களிடத்தும், மலபார் கடற்கரையில் வாழும் சிரியன் கிறித்தவர்களிடத்தும் உள்ள அரசப் பரிசுகள் அடங்கிய பட்டயங்கள் போலும் பழைய தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்பெறும் தமிழ் வடிவெழுத்துகள் தனியாக ஆராயத் தக்க தகுதியுடையன என்கிறார் கால்டுவெல்.

அக்கல்வெட்டுகள், பல ஆண்டுகளுக்கு முன்னரே, சென்னை இலக்கியக் கழக வெளியீட்டில் வெளியிடப்பெற்று ஆராயப்பட்டுள்ளன. அவற்றில் மலையாள வாடை சிறிது வீசுகிறது எனினும், அவை தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டுகளில் காணப்பெறும் வடிவெழுத்துகள் சென்னை மாநில அரசியல் அலுவலில் இருந்த, பேராசிரியர் பர்னல் என்பவரால் பம்பாயினின்றும் வெளியாகும் இந்தியன் ஆண்டிகுவரி என்னும் வெளியீட்டின், 1872 ஆம் வெளியீட்டில் அச்சிடப் பெற்றுள்ளன என்ற செய்தியையும் தருகிறார் கால்டுவெல். இந்த பேராசிரியர் பர்னல்தான், தான் கண்டு வெளியிட்ட மிகப் பழைய திராவிட நெடுங்கணக்கு, எகர, ஏகார ஒலிகளை அறிவிக்கும் வடிவெழுத்துகளில் எவ்வித வேறுபாடும்  காட்டுவதில்லை என்றும் அந்நெடுங்கணக்கு அசோகன் கல்வெட்டில் காணப்பெறும் சமஸ்கிருத நெடுங்கணக்கிலிருந்து தோன்றியது என்பதற்கு சான்றாக இதை எடுத்துக் காட்டியவர் என்கிறார் கால்டுவெல்.

அவ்வடிவெழுத்துகள், கொச்சியை சேர்ந்த யூதர்களும், கிறித்துவர்களும் வைத்திருந்த செப்புப் பட்டயங்களிலிருந்து பெயர்த்தெடுத்த படிகளிலிருந்து எடுக்கப்பட்டன என்றும்  அப்பட்டயங்களில் காணப்பெறும் வானநூல் பற்றிய செய்திகளைக் கொண்டு, அப்பட்டயங்களில் ஒன்று கி.பி. 774 ஆம் ஆண்டைச் சேர்ந்ததென முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூடுதல் செய்தியையையும் தருகிறார் கால்டுவெல்.

தென்னாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பழைய கல்வெட்டுகள், இப்பட்டயங்களே யாதலாலும், தமிழ் வடிவெழுத்துகளின் தொன்மை வடிவம் இஃது எனத் தெரிவிப்பன அவையே ஆதலாலும் அப்பட்டயங்கள் வடிவெழுத்தாராய்வார்க்குப் பெரும்பயன் அளிப்பவாகும் என்பதை மேற்கோள் காட்டுகிறார் கால்டுவெல்.

எட்டாம் நூற்றாண்டில் கிடைத்த கல்வெட்டுகள்தான் கால்டுவெல் போன்றவர்களுக்கு கிடைத்த மிகத் தொன்மையான கல்வெட்டுகளாக தெரிந்திருக்கிறது என்பது அவர்களுக்கு தமிழின் தொன்மைக் குறித்து அறிவதில் உள்ள நெருக்கடியை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. 

‘யூதர்களிடத்தும்,சிரியன் கிறித்துவர்களிடத்தும் கிடைக்கும் பட்டயங்களில் காணப்பெறும் தமிழ், மலையாள வடிவெழுத்துகளே, அசோகன் கல்வெட்டுகளில் காணப்பெறும் எழுத்துகளின் பிறப்பிடமாம் என்று முடிவு செய்வதோடு,

தென்னாட்டுக் கல்வெட்டுகளில் காணப்பெறும் வடிவெழுத்துகள் பொய்னீஷ்யாவிலிருந்து செங்கடல் வழியாக வந்த வாணிப மக்களால் கொண்டுவரப்பட்டவை என்பதால், அவை எகிப்து மொழி எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும்,

பழைய தமிழ் நெடுங்கணக்கு, யேமன் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப் பெற்ற கல்வெட்டுகளில் காணப்பெறும் தென் கிழக்கு அரேபிய மொழியாகிய ஹிம்யாரிடிக் மொழி நெடுங்கணக்கோடு ஒத்துள்ளது என்றும்,

மெய்யயழுத்துகளின் வடிவம், உயிர் எழுத்துகளின் சேர்க்கைக்கேற்ப மாற்றப்படும் இயல்பால், தமிழ் நெடுங்கணக்கு, ஒருவகையில் அந்த ஹிம்யாரிடிக் மொழியோடு பெரிதும் மாறுபட்டு,

அபிசீனியாவில் வழங்கும் செமிடிக் இன மொழிகளுள் ஒன்றாய எதோபிய மொழியின் நெடுங்கணக்கோடு ஒற்றுமை கொண்டுள்ளது என்றும் கருதுகின்றார் பேராசிரியர் பர்னல்’ என்கிறார் கால்டுவெல்.

‘இம்முடிவுகள் மேலும் ஆராய்ந்து நோக்கத்தக்க சிறப்பு வாய்ந்தனவே எனினும், நாமறிந்த இந்தியப் பண்பாட்டு வரலாற்றினை அறிவிக்கும் நிகழ்ச்சிகளோடு தொடர்பற்றனவாகத் தோன்றுகின்றன’ என்று பேராசிரியர் பர்னல் அவர்களோடு முரண் படுகிறார் கால்டுவெல்.

ஆரியர்கள் தோன்றிய இடத்திலேயே தானும் தோன்றி, தென்கோடி வரை பரவி வளர்ந்த இலக்கிய வளத்தைப் போன்றே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வழங்கிய அசோகன் கல்வெட்டிற காணப்பெறும் வடிவெழுத்துகளே, பல நூற்றாண்டுக் காலமாகச் சிறிது சிறிதாக மாற்றம் பெற்று, கி.பி. 774 இல் வழக்கில் இருந்ததாக அறியப்பட்ட தமிழ்-மலையாள எழுத்துகளாக மாறின என்ற கொள்கை,

அவ்வசோகன் கல்வெட்டெழுத்துகள், தமிழ்-மலையாள வடிவெழுத்துகளிலிருந்து தோன்றியன அல்லாமல் வேறு இல்லை என்ற கொள்கையிலும் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது’ என்று முடிக்கிறார் கால்டுவெல்.

‘தமிழ்-மலையாள வடிவெழுத்துகள், இப்பொழுதுள்ள வடிவினும் வேறுபட்ட வடிவங்களைப் பண்டு பெற்றிருந்தன என்பதை ஒப்புக் கொண்டாலும் அவற்றை நிலைநாட்டும் சான்று எதுவும் கிடைக்கவில்லை’ என்றும் கூறுகிறார் கால்டுவெல்.

‘பழைமையுடையவாக அறியப்பட்ட தென்னிந்திய நெடுங்கணக்குகள், அகர, ஆகார, இகர, ஈகார, உகர, ஊகாரம் இவற்றின் குறில், நெடில்களைக் குறிக்கத் தனித்தனி வடிவெழுத்துகளைப் பெற்றிருக்கவும், 

சமஸ்கிருதம், இன்றைய மலையாளம் ஆகிய மொழிகளைப் போல, எகர, ஏகாரங்கள், ஒகர, ஓகாரங்கள் இவற்றின் குறில் நெடில்களைக் குறிக்க, தனித்தனி வடிவெழுத்துகளைப் பெறாது, இரு ஒலிகளையும் குறிக்க ஒரே வடிவெழுத்தைப் பெற்றிருப்பதை நோக்கும் போது,

அந்நெடுங்கணக்கு, சமஸ்கிருத ஒலிகளை அறிவிக்கத் தோற்றுவிக்கப்பட்டவையே அல்லாமல் திராவிட மொழி ஒலிகளைக் குறிக்கத் தோன்றியவை அல்ல என்றே தோன்றுகிறது.

சுருங்கச் சொன்னால், இந்திய வடிவெழுத்துகளின் தோற்றம் - அஃதாவது, அசோகன் நெடுங்கணக்கு, திராவிட நெடுங்கணக்கினின்றும் தோன்றியதா அல்லது திராவிட நெடுங்கணக்கு அசோகன் நெடுங்கணக்கிலிருந்து தோன்றியதா என்பது இன்னமும் முடிவாக உறுதி செய்யப்படவில்லை என்பதே என் கருத்து’ என்று கூறிய கால்டுவெல்,

‘என்றாலும் இப்போதுள்ள நிலையில் திருவாளர் பீம்ஸ் அவர்கள் கொள்கையோடு இணைந்து, பின் முடிவை ஏற்றுக்கொள்ளவே நான் விரும்புகிறேன்’ என்கிறார்.

எட்வர்டு தாமஸ் அவர்கள் வெளியிட்ட ‘இந்தியப் பழமைப் பற்றி பிரின்செப் அவர்கள் எழுதிய கட்டுரைகள்’ என்ற நூலில் இந்திய நெடுங்கணக்குகள பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன என்ற குறிப்பையும் தருகிறார் கால்டுவெல்.

‘தமிழ் வடிவெழுத்துகள், தேவநாகிரி எழுத்துக்களோடு எத்துணை வேற்றுமையுடையவாக இருந்தாலும் அதனினும் பன்மடங்கு அதிகமாக இன்றைய தெலுங்கு-கன்னட வடிவெழுத்துகள், தமிழ் வரிவடிவெழுத்துகளோடு பெரிதும் வேற்றுமை யுடையனவாக உள்ளன’ என்கிறார் கால்டுவெல்.

‘ஆனால், தெலுங்கு-கன்னட எழுத்துகளுக்கும் கொச்சிப் பட்டயங்களில் காணப்படும் எழுத்துக்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமை நிலவுகின்றது’ என்று கூறும் கால்டுவெல், ‘இன்றைய மலையாள வடிவெழுத்துகள், தமிழ் கிரந்த எழுத்துகளிலிருந்து தோற்றுவிக்கப்பட்டன என்பது உறுதி செய்யபட்ட உண்மையாகும்’ என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார் கால்டுவெல்.

‘தென்னிந்திய நெடுங்கணக்குகளுக்கும், இன்றைய வட இந்திய நெடுங்கணக்குகளுக்கும் இடையே மிகப் பெரிய வேற்றுமை நிலவுவதற்குக் காரணம்,தென்னிந்திய மொழிகள், வட இந்தியமொழிகளைவிட மிகப் பழைய காலத்திலேயே இலக்கிய வளர்ச்சி பெற்றுவிட்டமையே ஆகும்’ என்கிறார் கால்டுவெல்.

மேலும் கால்டுவெல் அவர்கள், தென்னிந்திய மொழிகள், குகை வடிவ எழுத்துகள் வழக்கிலிருந்த அந்த மிகப் பழைய காலத்திலேயே இலக்கிய வளர்ச்சிப் பெறத் தொடங்விட்டன என்றும், ஆனால் அக்காலத்தில், தேவநாகரி எழுத்துகள் தோன்றிய நேரத்தில் வட இந்திய இலககிய வளர்ச்சி தோன்றியதா என்பதே ஐயம் என்கிறார் கால்டுவெல்.

இங்கு இன்னொரு ஒப்பீட்டையும் செய்கிறார் கால்டுவெல் அவர்கள், அதாவது, தெலுங்கு, கன்னட நெடுங்கணக்குகள் தேவநாகரி முறையில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. அல்லது, அமைப்புமுறை, தன்மை ஆகிய இவ்விரண்டில் மட்டுமே அவை அவற்றோடு ஒத்துள்ளன என்று கூறலாம் என்கிறார் கால்டுவெல்.

‘சமஸ்கிருத மொழி அறியாத குறில் ‘எ’, குறில் ‘ஒ’, வல்லின ‘ற’ எழுத்துகளையும், வேதகால சமஸ்கிருதத்தில் வழக்கிலிருந்து, இன்றைய சமஸ்கிருதத்தில் வழக்கிறந்து போன,‘ள’ எழுத்தையும் அம்மொழிகள் பெற்றிருப்பதே இவ்விரு இன மொழிகளுக்கும் உள்ள வேற்றுமையாகும்’ என்பதோடு,

 ‘தமிழ், மலையாள மொழிகளுக்கே உரிய ‘ழ’ எழுத்தைப்பழங் கன்னடமும் பெற்றுள்ளது’ என்றும் கூறுகிறார் கால்டுவெல்.

பொதுவாக, மலையாள நெடுங்கணக்கு, புதுக்கன்னட நெடுங்கணக்கோடும், தெலுங்கு நெடுங்கணக்கோடும் ஒத்து நிற்கும் எனினும், தமிழ் மொழிக்கே உரிய ‘ழ’ கரத்தைப் பெற்றிருப்பதும், எகர, ஏகாரங்களைக் குறிக்க ஒரே வடிவெழுத்தையும், ஒகர, ஓகாரங்களைக் குறிக்க ஒரே வடிவெழுத்தையும் பெற்றிருப்பதையும் மலையாளம் அவ்விரு மொழிகளோடு கொண்டுள்ள வேற்றுமையாம் என்கிறார் கால்டுவெல்.

சமஸ்கிருத ‘இஸ்’ ஒலி எழுத்துகளையும், ‘ஹகர’ ஒலி எழுத்துகளையும் சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கிய சொற்களை யயாலிக்கும் போதும் எழுதும் போதும் மட்டுமே அந்நெடுங்கணக்குகள் இடம் பெறுகின்றன.

சமஸ்கிருத ஆதிக்க வளர்ச்சியால் சிற்சில இடங்களில் சமஸ்கிருதச் சொற்கள் அல்லாத பிற சொற்களை ஒலிக்கும் போதும் அவ்வெழுத்துகள் இடம் பெறத் தொடங்கிவிட்டன என்றாலும், திராவிட ஒலிகளை வெளியிட அவை தேவையற்றவை என்கிறார் கால்டுவெல்.

தமிழ் இலக்கணம், சமஸ்கிருதத் துணை யில்லாமலே முழுதும் ஒழுங்கு செய்யப்பெற்று, பண்படுத்தப் பெற்றுவிட்டமையாலும், சமஸ்கிருத ஒலிப்புமுறை, தமிழர் அறியாத ஒலிப்புமுறை, தமிழர் அறியாத ஒன்று, தமிழில் இடம் பெறாத ஒன்று.

ஆகையால் தமிழ் ஒலிப்பு முறை, தமிழ் நெடுங்கணக்கொன்றின் மூலமாகவே சிறப்பாக அமைந்துவிட்டது. அந்நெடுங்கணக்கு எழுத மேற்கொண்ட பொருள்கள், தோற்றத்தில் சமஸ்கிருதம் போன்றிருப்பினும், அவற்றை எழுதிய முறை அனைத்துமு; தமிழ்த் தன்மையுடையனவே என்றும் அறுதியிட்டுக் கூறுகிறார் கால்டுவெல்.

No comments: