Monday, June 20, 2022

திராவிட இயக்க ஆய்வாளர் விநாயகம் கந்தசாமி - பேரா.அ. மார்க்ஸ்

 திராவிடர் இயக்கக் குறிப்புகள்

++++++++++++++++++++++++++++++++++

தோழர் விநாயகம் கந்தசாமி திராவிட இயக்க  ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர். தமிழக திராவிட இயக்கம் மட்டுமல்லாமல் மலேசிய - சிங்கப்பூர் திராவிட இயக்கம் குறித்த வரலாற்றையும் எழுதி வருபவர். 

"திராவிடர் இயக்கக் குறிப்புகள்" - எனும் தலைப்பில் அவர் எழுதி வரும்  குறிப்புகள் முக்கியமானவை. நாம் கவனிக்கத் தவறும் பல அம்சங்களை அவர் கவனப்படுத்தி வருகிறார். திராவிட இயக்கம் குறித்த அவரது இத் தொடரின் 35வது குறிப்பு இது.

திராவிட இயக்கத்தின் மீது பெருந் தாக்குதல் நாலாபுறங்களில் இருந்தும் நடந்து கொண்டிருக்கும் காலம் இது. அதற்கு உரிய மறுப்பையும் எதிர்ப்பையும் முன்வைக்க வேண்டியவர்களும், அதற்கான வசதிகள் உள்ளவர்களும் மௌனம் காப்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் திரaவிட இயக்கம் எனும் பெயருல் இன்றைய திமுகவின் குடும்ப அரசியலுக்கு முட்டுக் கொடுப்பவர்கள்- இத்தனைக்கும் மத்தியில்தான் எந்த உரிமையும் கோராமல், எந்தப் பெருமைக்கும் தன்னை ஆட்படுத்திக் கொள்ளாமல் திராவிட இயக்க வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கும் நம் விநாயகம் கந்தசாமி போன்ற ஒப்பற்ற நண்பர்கள். 


அவரது இந்தத் தொடரைத் தொகுத்து வாசியுங்கள். 

_________________________________________________

திராவிடர் இயக்கக் குறிப்புகள் - 35

விநாயகம் கந்தசாமி.

1953

பிப்ரவரியில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார், ‘சென்னை தமிழ்நாட்டுக்கே சொந்தமானது’ என்று முழங்கினார்.

பிப்ரவரி 22 இல் W.P.A.சவுந்திர பாண்டியனாரும்,

ஏப்ரல் 22 இல் கைவல்யமும்,

மே 6 இல் R.K. சண்முகம் செட்டியாரும்,

செப்டம்பர் 17 இல் திரு.வி.க.வும்

மற்றும் ஜூன் 30 சாக்கோட்டை எஸ்.ஆர்.சாமியும்,

முத்தையா முதலியார் ஆகியோர் முடிவெய்தியமை

திராவிடர் இயக்கத்துக்கு பேரிழப்புகளாகும்.

நாடெங்கும் ‘கணபதி உருவப்பொம்மை’யை மே 27 இல் ‘புத்தர் விழா’வாகக் கொண்டாடி, பொதுக்கூட்டத்தில் உடைக்கும்படி பெரியார் அறிவுறுத்திட தமிழமெங்கும் பல்லாயிரக்கணக்கான பிள்ளையார் பொம்மை கள் உடைந்து நொறுங்கின.

பெரியார் இரண்டாம் முறையாக ஆகஸ்ட் 1 இல் ரயில் நிலைய பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை அழிக்கும் கிளர்ச்சியை நடத்தினார்.

சுயமரியாதை திருமணம் செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் ஆகஸ்ட் 31 இல் தீர்ப்பளித்தது கண்டு பெரியார் வெகுண்டு எழுந்தார்.

ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் ஒழிந்தபாடில்லை. பெரியார் ‘பார்ப்பானே வெளியேறு! திராவிடனே! தயாராயிரு!’ என்று குரல் கொடுத்தார்.

ஆச்சாரியார் ‘திராவிட இயக்கத்தை எறும்பு, மூட்டைப்பூச்சியைப் போல் நசுக்குவேன்!’ என்றார்.

ஆச்சாரியார் கல்வித்துறையில் S.S.L.C. தேர்வில் வடிகட்டும் முறையை மீண்டும் புகுத்தினார்.

‘சலவைத் தொழிலாளி குலத் தொழிலையே செய்ய வேண்டும்’ என்றார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில், அக்டோபர் 10,11 நாட்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் ‘கழக ஆண், பெண் அனைவரும் சட்டத்துக்குட்பட்ட கத்தியை வைத்துக்கொள்ளுங்கள்’ என பெரியார் ஆணையிட்டார்.

ஈரோடு சண்முக வேலாயுதம் தொடங்கிய ‘ஈரோட்டுப் பாதை’ வார இதழைப் பெரியார் நவம்பர் 8 இல் தொடங்கி வைத்தார்.

1954

பெரியார் முயற்சியால் ஈரோட்டில் ஜனவரி 24 இல் ‘குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாடு’ டாக்டர் எஸ்.ஜி. மணவாள ராமானுஜம் தலைமையில் நடை பெற்றது.

இதுபோன்று தமிழகமெங்கும் ‘குலக்கல்வித்திட்ட எதிர்ப்பு மாநாடு’கள் நடைபெற்றன.

நாகையில் மார்ச் 27,28 இல் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானித்தபடி ‘குலக்கல்வித்திட்ட எதிர்ப்புப் படை’ நீடாமங்கலம் அ. ஆறுமுகம் தலைமையில் சென்னை நோக்கிப் புறப்பட்டது.

படை சென்னையை அடையுமுன்னே உடல்நலமில்லை என்று காரணம் காட்டி ஆச்சாரியார் மார்ச் 30 இல் முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

பெரியார் ஆதரவுடன் காமராசர் முதலமைச்சராக ஏப்ரல் 14 இல் பதவியேற்று அய்ந்தாவது நாளில் (ஏப்ரல் 18 இல்) குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார்.

நாடெங்கும் ராமாயணத்தை தோலுரித்துக் காட்டும் பிரச்சாரத்தை பெரியார் நடத்த, நடிகவேள் எம்.ஆர். ராதா ‘இராமாயணம்’ நாடகம் நடத்தி அதன் யோக்கியதையை அம்பலப்படுத்தினார்.

நவம்பர் 23 இல் பெரியார், மணியம்மை ஆகியோர் பர்மா, மலேயா சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

ரங்கூன் புத்தர் மாநாட்டில் கலந்து கொண்டனர். அம்பேத்காரை ரங்கூனில் சந்தித்து உரையாடினார்.

எம்.ஆர்.இராதாவின் இராமாயண நாடக எதிரொலியாக ஆட்சியாளர் டிசம்பர் 21 இல் நாடகக் கட்டுபாடுச் சட்டத்தைக் கொண்டுவந்து நிறை வேற்றினார்.

#திராவிடர்இயக்கக்குறிப்புகள்

No comments: