Wednesday, June 29, 2022

1920 ஆம் ஆண்டு திராவிடர் இயக்கக் குறிப்புகள்

திராவிடர் இயக்கக் குறிப்புகள்

1920

மாண்டேகு - செம்ஸ் போர்ட் அறிக்கை தொடர்பாக, சட்டமன்றத்தில் பார்ப்பனர் அல்லாதாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த சமரசப் பேச்சு, கவர்னர் வெல்லிங்டன் ஏற்பாடு செய்தபடி ஜனவரி 13-இல் நிகழ்ந்தது. 

இக்கூட்டத்தில் பார்ப்பனப் பிரதிநிதிகளும், நீதிக்கட்சி உறுப்பினர்களும் சென்னை மாகாண சங்கத்தினரும் கலந்துகொண்டு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாட்டுக்கும் வர இயலாததால் நடுவர் தீர்ப்புக்கு விட முடிவு செய்யப்பட்டு, லார்ட் மெஸ்டன் நடுவராக நியமிக்கப்பட்டார்.

நடுவர் லார்ட் மெஸ்டன், தீர்ப்பின் படி, பார்ப்பனரல்லாதாருக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

1919 ஆம் ஆண்டு மாண்டேகு - செம்ஸ் போர்ட் சட்டபடி, சென்னை மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் 132 ஆகவும், அதில் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய தொகுதிகள் 98 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்படக்கூடிய தொகுதிகள் 98 இல் 65 தொகுதிகள் பொதுத் தொகுதிகள் எனவும், 33 தொகுதிகள் சிறப்பு தொகுதிகள் எனவும் பிரிக்கப் பட்டன. 

இந்த பொதுத் தொகுதிகள் 65 இல், லார்ட் மெஸ்டன் தீர்ப்புப்படி, 28 தொகுதிகள் பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கப்பட்டு மீதி தொகுதிகளிலும் பார்ப்பனரல்லாதார் போட்டியிடலாம் என்று நிர்ணயிக்கப்பட்டது. 

இந்த அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் நவம்பர் 20 இல் நடை பெற்றது. 

இதில் நீதிக்கட்சியினருக்கும், ஹோம்ரூல் இயக்கத்தினருக்கும் கடும் போட்டி நிலவியது. 

இரட்டை ஆட்சிமுறையை எதிர்த்து காங்கிரஸ்  தேர்தலில் கலந்துகொள்ளவில்லையாயினும் வாக்காளர்களைத் தடுத்தல், கழுதைகளின் கழுத்தில் ‘எனக்கு ஓட்டு போடு’ என்ற எழுதிய அட்டைகளைக் கட்டி அதன் வாலில், காலில் டின்களைக் கட்டி விரட்டிவிட்டு, காலித்தனம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டனர்.

சென்னை மாகாணத்தின் 98 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்று நீதிக்கட்சியினர் வெற்றி வாகை சூடினர். 

சட்டமன்ற பெரும்பான்மைக் கட்சித் தலைவர் என்ற முறையில், கவர்னர் லார்ட் வெல்லிங்டன் முதன் மந்திரி பதவியேற்று, அமைச்சரவை அமைக்குமாறு தேர்தலில் நின்று பெருவெற்றி பெற்றவரும், நீதிக்கட்சித் தலைவருமான தியாகராயரைக் கேட்டுக்கொண்டார்.

ஆனால், தியாகராயர் பதவி ஏற்க மறுத்துவிட்டு, தனது கட்சிப் பிரமுகர்கள் மூவரின் பெயரைப் பரிந்துரை செய்து அமைச்சரவை  அமைக்கச் செய்தார். 

தாம் பதவி ஏற்காமைக்கு (தனிப்பட்ட முறையில் தமக்குப் பதவி ஆசை இல்லை என்பதை நிருபிக்க) அவர் கவர்னருக்கு எழுதிய கடிதத்திலும், நேரிலும் சந்தித்துக் கூறிய கருத்துகளின் சாரம் வருமாறு:

‘இந்திய வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லை எனும்படி, அரசியல் ஞானமற்ற பாமர மக்களைத் தட்டி எழுப்பிய ‘பாவத்துக்’காக என்னையும், அகால மரணமடைந்த என் அருமை சக தலைவர் டாக்டர் டி.எம்.நாயரையும் வெள்ளையனின் வால் பிடிப்பவர்கள் என்றும் வெள்ளையன் பூட்ஸ் காலை நக்குபவர்கள் என்றும் ‘செண்ட்பெர்சண்ட்’ தேசபக்தர்களான காந்தியார், ராஜ கோபாலாச்சாரியார் போன்ற காங்கிரஸ் தலைவர்களாலும், அவர்களுடைய பத்திரிக்கைகளாலும், தூற்றப்படும் நான், இப்பதவியை ஏற்பேனேயானால், என் புனிதமான கட்சிக்குக் களங்கம் விளைவித்தவன் ஆவேன். அதனால் என் பதவி ஏற்கமாட்டேன்; மன்னிக்க வேண்டும்’.

ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் அளவுக்கு தன் குடும்பச் சொத்தை நீதிக் கட்சிக்காகச் செலவழித்த வள்ளலும், 

நாற்பது ஆண்டுகளாகச் சென்னை நகராட்சியில் உறுப்பினராக இருந்ததோடு, அதன் முதலாவது தேர்ந் தெடுக்கப்பட்ட தலைவராகவும் ஆன பெருமைக்குரியவரும், 

(அப்போது சென்னை மாநகராட்சி அல்ல. நகராட்சிதான்.

1933 இல் மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டது. முதல் மேயர் ராஜா சர். M. A. முத்தையா செட்டியார்தான்.

- வாலாசா வல்லவன் )

இந்திய ஜனநாயக வரலாற்றில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில், தனது உயிரினும் மேலாக நேசித்த நீதிக்கட்சி வெற்றி வாகை சூடியது கண்டு பூரித்துப்போனவரும்

தனக்கென வாழாப் பிறர்க்குரியாளருமான சர்.பி.தியாகராயரின் இந்த அறிவிப்பு எதிரிகளையும் வியக்கச் செய்தது!

தியாகராயரால் பரிந்துரைக்கப்பட்ட மூவரும் அடங்கிய முதலாவது நீதிக் கட்சி அமைச்சரவை டிசம்பர் 17 இல் பதவி ஏற்றது!

இந்திய ஜனநாயக வரலாற்றின் துவக்க ஆட்சி என்று வருணிக்கப்படும், நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவையில், கடலூர் ஏ.சுப்பராயலு (ரெட்டியார்) முதல் அமைச்சராக இருந்து கல்வி, மக்கள் நல்வாழ்வு ஆகிய துறைகளைக் கவனித்துக் கொண்டார். பனகல் அரசர் இரண்டாவது அமைச்சராக இருந்து, உள்ளாட்சித்துறை முதலிய சில துறைகளைக் கவனித்துக் கொண்டார். கே.வி. ரெட்டி நாயுடு, மூன்றாவது அமைச்சராக இருந்து, வளர்ச்சி முதலிய சில துறைகளைக் கவனித்துக் கொண்டார்.

சென்னை நகராட்சியில் நடேசனார் ‘பஞ்சமர்’ என்ற பெயரை நீக்கி ‘ஆதி திராவிடர்’ என்று பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவந்து நிறை வேற்றினார்.

அதே நேரத்தில், காங்கிரஸ் இருந்து வந்த பெரியார், தாம் பொது நிறுவனங்களில் வகித்து வந்த ஏறத்தாழ 29 பதவிகளையும் ராஜினாமா செய்தார்; 

ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்தார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற மாகாண காங்கிரஸ் மாநாட்டில் வகுப்பு ரிமைத் தீர்மானம் கொண்டுவந்தார். மாநாட்டுத் தலைவர் எஸ்.சீனுவாச அய்யங்கார் வகுப்புரிமைத் தீர்மானத்துக்கு அனுமதி மறுத்தார்.

#திராவிடர்இயக்கக்குறிப்புகள்

No comments: