Tuesday, November 14, 2023

பெரியார் என அழைத்த பினாங்கு ஜானகி அம்மையார்

 1930 ஆம் ஆண்டிலேயே  “பெரியார்” என்றழைத்த பினாங்கு ஜானகி அம்மையார்.

(முரசொலி பாசறைப்பக்கத்தில் வெளியான என் கட்டுரை-வழக்கறிஞர் அருள்மொழி)

‘கல்வியே பெண்களுக்கு கம்பீரத்தை வழங்கும் ‘ என்ற கருத்தை விடாமல் வலியுறுத்திய பினாங்கு ஜானகி, “ பெண்களுக்கு வேண்டிய சீதனம் யாது ? “ என்ற தலைப்பில்,6.4.1930 அன்று வெளியான குடி அரசு ஏட்டில்  கல்வியின் மேன்மையையும், தந்தை பெரியார் அவர்களின்  ஒப்பற்ற அன்பையும் மனம் நெகிழும்படி எழுதினார் பினாங்கு ஜானகி.

“ உதாரணமாக, நம் திரு.ராமசாமி பெரியார் அவர்கள் இந்நாடு வருவதாக பெரிய ஆர்ப்பாட்டமாக இருந்த காலத்தில் பெரியார் அவர்களைக் காண பெரும் ஆவல் கொண்டிருக்கும் பொழுது,பெரியார் வர இரண்டொரு தினத்திற்கு முன் பிரசவ வேதனையால் நான் ஆஸ்பத்திரி செல்ல நேர்ந்தது.பெரியாரைப் பார்க்க கொடுத்து வைக்காது எங்கு எனது உயிர் போய்விடுமோ! வென்றஞ்சி சஞ்சலப்பட்ட பட்டுக் கொண்டிருக்கையில், பெரியார் அவர்கள் பினாங்கில் இறங்கிய நாளன்று என்னை விசாரித்து எனது ஷேமலாபங்களைக் கேட்டு,ஈப்போவிற்கு அவசரமாகப் போக வேண்டியதிருப்பதால், திரும்புவாயில் என்னைப் பார்ப்பதாய்ச் சொல்லிவிட்டுச் சென்றார் என்றே சேதி கிடைத்தது.இதனிடையில் ஆண்குழந்தை பிறந்து நற்சுகமடைந்தேன். திரும்ப பெரியார் பினாங்கு வந்தவுடன்,பெரியார் அவர்களும் ஶ்ரீமதி மணியம்மையார் அவர்களும் என்னைச் சந்தித்து வாரியெடுத்து, மார்போடணைத்து என் ஷேமங்களைக் கேட்டார்கள். அதன்பின் சுவாமி சிதம்பரனார், திரு பொன்னம்பலனார், ஶ்ரீமான் நடராஜன் இவர்களெல்லோரும் வந்து என் நற்ஷேமங்களைக் கேட்டார்கள்.

 இவர்களெல்லாம் என்னை எதற்காக மதித்து என்ஷேமங்களைக் கேட்க வேண்டும். நான் அவ்வளவு பெரிய பணக்காரியுமல்ல. என் தாய் தகப்பனார்கள் கருணை வைத்து ஏதோ சிறிது கல்வி என்ற ஆபரணத்தை கற்க வைத்ததினால் அன்றோ இப்பெரியார்கள் என்னை மதித்தார்கள்.நானும் ஏதேனும் பித்தளைப் பாத்திரங்களைசீதனமாய்க் கொண்டு சட்டி சுரண்டவும்,அடுப்பூதும் தொழில்களில் மட்டும் இருப்பேனாகில்என்னை அடுப்பங்கரையைத் தவிர வேறு ஒருவரும் மதியார். ஆனபடியால்,பெண்கள் நன்மதிப்பு பெறவேண்டுமானால்,கல்வி என்ற கண்ணிறைந்த ஆபரணத்தை அணியவேண்டும். “

கல்வியின் தேவை பற்றிய இந்தச் சிந்தனை அவரது மனதில் எவ்வளவு ஆழமாக இருந்ததென்றால்  1929 ஆம் ஆண்டு மலேயா சுற்றுப்பயணத்தில்,  தந்தை பெரியாருக்கு எத்தனையோ பேர் பரிசுப் பொருள்களைக் கொடுத்தார்கள். ஆனால் பினாங்கு ஜானகியோ சிறிய எழுத்துக்களைப் படிக்க உதவும்  ‘ஒரு கைப்பிடி போட்ட பூதக்கண்ணாடியை’ தந்தை பெரியாருக்கு வழங்கினார். அதேபோல் நாகம்மையாருக்கு ஒரு் சிறிய  பவுண்டன் பேனா பென்சில் அடங்கிய பெட்டியும் வழங்கினார்.

இக்கட்டுரையில் நமக்கு இன்னொரு செய்தியும் கிடைக்கிறது. 1938 ,நவம்பர் 13 அன்று தந்தை பெரியாரை  ‘பெரியார்’ என்று மட்டுமே அழைக்க வேண்டும்  என்ற தீர்மானத்தை  தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நிறைவேற்றியது என்பது வரலாறு. அதற்கு பல ஆண்டுகள் முன்பே அவர் ‘பெரியார்’ என்றும் ராமசாமிப் பெரியார் என்றும்  அழைக்கப்பட்டார் என்பதை பினாங்கு ஜானகி அவர்களின் கட்டுரை உறுதி செய்கிறது. 

1940 களில் நடந்த இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மலேசியாவைக் கைப்பற்றியது. பின்னர் அவர்களை வெளியேற்றி மீண்டும் பிரிட்டிஷ் ஆட்சி வந்தபோது சீன மக்களில் ஒரு குழுவினர் அரசை எதிர்த்து கிளர்ச்சியும் கொரில்லா யுத்தமும் நடத்தினர். அதனால்1948  ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு மலேசியாவில் அவசர நிலையை அறிவித்தது. அது 1960 ஆம் ஆண்டு வரை நீடித்தது. மக்கள் கடுமையான சட்ட திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொண்டார்கள். அந்த சூழ்நிலையில் திடீரென்று அப்பாவு பண்டிதரும் ஜானகி அம்மையாரும் நேரில் விசாரணைக்கு வரவேண்டுமென்று அரசு அதிகாரிகள் அழைத்தனர். விசாரணையில் அவர்கள் எதிர்கொண்ட கேள்வி “ எதற்காக உங்கள்  மகனுக்கு சன்யாட்சென் என்று பெயர் வைத்தீர்கள் ?” என்பதுதான்.

“ நாங்கள் பகுத்தறிவாளர்கள். சமூக சீர்திருத்தவாதிகள்.அதனால் எங்கள் மூத்த மகனுக்கு சமரசம் என்றும் மகளுக்கு சம தர்மம் என்றும்   பெயரிட்டோம்.மூன்றாவது மகனுக்கு, இந்தியாவில் பெண்கள் கணவனின் சிதையிலே  உடன்கட்டை ஏற்றப்பட்ட கொடுமையை எதிர்த்துப் போராடிய  இராஜாராம் மோகன்ராய் பெயரை வைத்தோம். கடைசி மகனுக்கு சீனத்து சீர்திருத்தவாதியும் புதிய சீனத்தின் தந்தை என்று  பாராட்டப்பட்டவருமான சன்யாட்சென் பெயரை வைத்தோம். “ என்று ஜானகியும் அப்பாவு பண்டிதரும் கொடுத்த விளக்கத்தை ஏற்று அவர்களை தொல்லை செய்யாமல் விட்டது பிரிட்டிஷ் ஆட்சி. எந்த ஆதிக்கத்திற்கும் அஞ்சாத அப்பாவு ஜானகி இணையர்கள் தொடர்ந்து இயக்கப்பணியை ஆற்றினார்கள். 

1954 ஆம் ஆண்டு தந்தை பெரியார்,அன்னை மணியம்மையார் மற்றும் தோழர்களுடன் மலேசிய நாட்டில் கொள்கைப் பிரச்சாரம்  மேற்கொண்டபோது மிகச் சிறப்பாக கூட்டங்களை நடத்தி தந்தை பெரியாருக்கும் உடன் வந்த தோழர்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பை வழங்கினர் அப்பாவு பண்டிதரும்  ஜானகி அம்மையாரும் . 

சித்த வைத்தியம் செய்வதில் புகழ்பெற்றவராக விளங்கிய அப்பாவு பண்டிதர் தமிழகத்தில் சிலகாலம் தங்கி இருந்தார். அப்போது அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவர்களின் முயற்சிகளைத் தாண்டி உடல் நலிவுற்று  26.1.59 அன்று  இறந்துவிட்டார். சென்னையில் நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில  தந்தை பெரியார் அவர்கள் பங்கேற்று ஜானகி அம்மையாருக்கு  ஆறுதல் கூறினார்.

அப்பாவு பண்டிதரின் மறைவு ஜானகி அம்மையாருக்கு மிகப்பெரும் இழப்பு., ஒத்த கொள்கையால் இணைந்த முப்பதாண்டுகால சுயமரியாதை மணவாழ்வு முடிவுற்ற பின்னும் ஜானகி அம்மையார் திராவிட இயக்க வீராங்கனையாகவே வாழ்ந்தார். தன்  பிள்ளைகள்  பகுத்தறிவு நெறியுடன் வாழவேண்டும் என்று வலியுறுத்தினார். தாயும் தந்தையுமாய் தானே பிள்ளைகளுக்கு வழிகாட்டினார்.அனைவருக்கும்  சுயமரியாதைத் திருமணமே நடத்தினார். முதுமையிலும் இயன்றவரை கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அவரது தொண்டினை மறவாது, 2004 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்க மலேசியா சென்றிருந்தபோது ஜானகி அம்மையாரை நேரில் சந்தித்து அவரை நலம் விசாரித்தார்.. முதுமையினால் சோர்வுற்ற போதும் தளராத கொள்கை உறுதியுடன் அவருடன் உரையாடினார் ஜானகி அம்மையார்.  கல்வியே பெண்ணுக்கு கம்பீரம் என்று இளம்வயதிலேயே எடுத்துரைத்த ஜானகி அம்மையாரின் வாழ்வு 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவுற்றது. அந்த வாழ்க்கை தரும் படிப்பினைகளுக்கு முடிவேது .?

No comments: