Thursday, March 17, 2011

நதி நீர் இணைப்பு - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -1

நதி நீர் இணைப்பு - வைகோ

நம்நாட்டில் ஏராளமான நதிகள் பல மாநிலங்களிடையே ஓடுகின்றன .அதிக அளவிலான நீர் பயன்படுத்தப்படாமலேயே ,கடலில் கலந்து வீணாகின்றது .இந்த ஆறுகளின் நீர்வளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் ஒரு முன்னோக்குத் திட்டத்தை வகுத்தோமானால் நம்நாட்டின் வளமான வேளாண்மைச் செல்வத்துடன் உலகிலேயே நாம் தலையாய பொருளாதார வல்லரசாகத் திகழ முடியும் . வைகோ .


அவைத் தலைவர்: இப்போது, மாநிலங்களிடையே ஓடும் ஆறுகளை நாட்டுடைமையாக்குதல் மசோதாவை (1999) எடுத்துக் கொள்வோம். திரு. வைகோ அவர்களைப் பேச அழைக்கிறேன்.

திரு. வைகோ (சிவகாசி): நதிநீரை மாநிலங்களிடையே சரிசமமாகப் பகிர்ந்தளிப்பதற்கான நோக்கத்துக்கும், அதனுடன் தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்கும் மாநிலங்களிடையே ஓடும் ஆறுகளை நாட்டுடைமையாக்குவதற்கு வகை செய்வதற்கான இந்த மசோதாவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென முன்மொழிகின்றேன்.

தலைவர் அவர்களே! நான் பல மாதங்களாக ஏங்கிக் கொண்டிருந்த இந்த வாய்ப்பினை எனக்கு அளித்தமைக்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பன்னிரண்டாவது மக்களவையில் இந்த மசோதா முன்மொழியப்பட்டது. ஆனால், எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏனென்றால், அப்போது இந்த மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் ரகுவன்க்ஷ் பிரசாத் சிங் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார். அது மிகவும் முக்கியமான, கவனத்துக்குரிய ஒரு மசோதாவாகும். எனினும் அவர் என்னுடைய இந்த மசோதாவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வழிவிட்டுத் தன் உரையைச் சுருக்கிக் கொண்டார். அதற்காக அவருக்கு என் நன்றி!

வளங்கொழிக்கும் நாடு!

ஐயா! நம் நாடு எழில் மிகுந்த நாடு; உலகிலேயே இணையற்ற வளங்கள் நிறைந்த நாடு. பனிமூடிய மலைச் சிகரங்கள் - அழகிய வற்றாத நதிகள் - முக்கடல்கள் - குறிப்பாகத் தென்கோடியைச் சூழ்ந்த தீபகற்பம் - பரந்து விரிந்த இயற்கை நிலப்பரப்பு- பெரும் மக்கள் தொகை - இத்தனையும் கொண்டது இந்திய நாடு. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இன்னும் ஐந்தாண்டுகளுக்குள், மக்கள் தொகையில் நாம் சீனாவை விஞ்சிவிடுவோம்.

ஆனால், தலைவர் அவர்களே! அழகிய இயற்கை நிலக்காட்சிகள், பனிமூடிய மலைச் சிகரங்கள், அளவற்ற கடல் செல்வம் ஆகியவற்றை நான் வருணித்த அதே சமயத்தில், இலட்சக்கணக்கான மக்கள் தாங்கவொண்ணா வறட்சியினால் - அவலத்துக்குள்ளாவதையும் என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக, அண்மைக் காலமாக, குஜராத், இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் நிகழ்கிற காட்சிகளை தூர்தர்ஷனிலும், பிற சம்பவங்களை தொலைக்காட்சிகளிலும் பார்த்தபோது நாம் பெரிதும் அதிர்ச்சியடைந்தோம். உழவர்களின் கண் முன்னாலேயே கால்நடைகள் செத்து விழுகின்றன. உழவர்கள் இந்தக் கால்நடைகளைத் தங்கள் குடும்ப உறுப்பினர்களைப் போல் எவ்வாறு பேணி வளர்க்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

வறட்சி பாதித்த இந்த மாநிலங்களில் பல இடங்களில் ஏராளமான கால்நடைகளின் சடலங்கள் கிடப்பதைக் காண்கிறோம். குடிநீர் இல்லாமல் இவை செத்திருக்கின்றன. குடிநீர்ப் பற்றாக்குறை காரணமாக மக்களும் அவதிப்படுகிறார்கள்.

பல்லாண்டுகளுக்கு முன்பு, பி.எல்.-480 திட்டத்தின் கீழ் அயல்நாடுகளிலிருந்து உணவு தானியங்களுடன் பெரிய கப்பல்கள் வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இன்று, உணவு தானியங்களில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதியும் செய்து வருகிறோம். இதற்கான பெருமை நமது உழவர் பெருமக்களையே சாரும்.

இப்போது, இந்தப் புத்தாயிரமாவது ஆண்டில், உலகில் ஒரு பொருளாதார வல்லரசாக நாமும் உருவாக வேண்டும் என்ற குறிக்கோளுடன், மற்ற நாடுகளுடன் போட்டியிட்டு வருகிறோம். நம் நாட்டில் அளவற்ற வளவசதிகள் உள்ளன. “என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?” என்பது முக்காலும் உண்மை. இலட்சோப இலட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் உண்டு. ஆனால், இவற்றின் பாசனத்துக்கு நீர் தேவை.

வீணாகும் நதிநீர்!

அவைத்தலைவர் அவர்களே, நம்நாட்டில் ஏராளமான நதிகள் பல மாநிலங்களிடையே ஓடுகின்றன; பிறகு கடலோடு கலந்துவிடுகின்றன. பெரும்பாலான நீர் பயன்படுத்தப்படாமலேயே, கடலில் கலந்து வீணாகின்றது. இந்த ஆறுகளின் நீர்வளத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் ஒரு முன்னோக்குத் திட்டத்தை வகுத்தோமானால், நம் நாட்டின் வளமான வேளாண்மைச் செல்வத்துடன் உலகிலேயே நாம் தலையாய பொருளாதார வல்லரசாகத் திகழ முடியும்.

நதிகளை நாம் மிகுந்த பயபக்தியுடன் சமயப்பற்றுடன் - ஆராதிக்கின்றோம். நம் நாட்டு ஆறுகளைப் பெண்களின் பெயர்களால் அழைக்கிறோம். நதிகளை பெண் தெய்வங்களாகவே போற்றுகிறோம். இராமாயண இதிகாசத்தில் கூட, இராமபிரான் கங்கைச் சமவெளிகள் வழியே சென்றதாகவும், கோதாவரி முதலிய ஆறுகளைக் கடந்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆறுகளின் பெருவாரியான நீர் வீணாக்கப்படுகிறது. மாநிலங்களிடையே பாயும் சில ஆறுகளின் நீரினைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாகப் பூசல்களும் எழுந்துள்ளன.

பல நாடுகளிடையே ஓடும் ஆறுகளும் உண்டு. மெக்சிகோ-அமெரிக்கா; ஃபிரான்ஸ்-ஜெர்மனி; சூடான்-எகிப்து; பாகிஸ்தான்-இந்தியா முதலிய நாடுகளின் வழியே பாயும் நதிகள் சில உள்ளன. ரவி, பியாஸ் நதிகளின் நீரைப் பங்கிட்டுக் கொள்வதற்காக ஒரு நதிநீர் உடன்படிக்கையும் உள்ளது. இந்த உடன்படிக்கையில் காலஞ்சென்ற ஜவகர்லால் நேருவும், தளபதி அயூப்கானும் கையெழுத்திட்டுள்ளனர். மாநிலங்களிடையிலான நதிநீர்ப் பூசல்களைத் தீர்ப்பதற்கு, நம் நாட்டில் மாநிலங்களிடையே ஓடும் ஆறுகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்க வேண்டும் என்று எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம்.

ஐக்கிய இந்திய நாடுகள் ( United State of India )

ஐயா! இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு. அது ஒரு கூட்டாட்சி நாடாகவே இருக்க வேண்டும். இந்நாட்டை “இந்தியா, அதாவது, மாநிலங்களின் ஒன்றியம்” என்பதற்குப் பதிலாக “இந்திய ஐக்கிய நாடுகள்” ( United States of India ) என்று அழைத்தால் நான் மகிழ்ச்சியடைவேன். அந்த நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன். மாநிலங்களிடையே ஓடும் ஆறுகள் அனைத்தின் மீதும் மத்திய அரசே உரிமையும், கட்டுப்பாடும் கொண்டிருக்க வேண்டும் என்றும், நதிநீர் ஒதுக்கீடு தொடர்பாக முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஓர் ஒழுங்குமுறைக்கிணங்க நதிநீரைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

இவ்வாறு செய்வதால், தொடர்புடைய மாநிலங்களின் நலன்களுக்குக் குந்தகமின்றி, பல்வேறு மாநிலங்களிடையே நதிகளின் நீரைப் பகிர்மானம் செய்வதற்கு உதவும். அது மட்டுமின்றி, நம் கைவசமுள்ள நீர்வள ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்துவதற்கும் இது உதவும்.

பொருளாதார இழப்பு!

வட மாநிலங்களிடையே ஓடும் ஆறுகளின் நீரைப் பகிர்ந்து கொள்வதில் உடன்பாடு எதுவும் ஏற்படாத காரணத்தால், 8000 மெகாவாட் புனல் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பினை இழந்து வருகிறோம்; அத்துடன் மிகப் பெருமளவில் பாசன வாய்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கலாம். இந்தக் காரணங்களால், நமது பொருளாதாரம் ஆண்டுதோறும் ரூ. 12,000 கோடி முதல் ரூ. 14,000 கோடி வரை நிதி இழப்பைச் சந்தித்து வருகிறது.

இந்த நாட்டில், காவிரி நதிநீர்ப் பூசல், கிருக்ஷ்ணா நதிநீர்ப்பூசல், சர்தார் சரோவர் அணைப் பூசல் போன்ற முக்கியமான நதிநீர்ப் பூசல்கள் நிலவிவருகின்றன. பஞ்சாப், அரியாணா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிடையே மேலும் ஆறு நதிநீர்ப் பூசல்களும் இருந்து வருகின்றன; இப்பூசல்கள் தற்போது தீர்வு முறையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. இந்தப் பூசல்கள் ஒவ்வொன்றும், உரியகாலத்தில் முறையாகத் தீர்க்கப்படாவிட்டால், உணர்ச்சியைத் தூண்டிவிடும் கடும்பிரச்சினையாக மாறிவிடக்கூடும்.

கடந்த 18 ஆண்டுகளில், மாநிலங்களிடையிலான நதிநீர்ப் பூசல்கள், எண்ணிக்கையளவிலும், உணர்ச்சியைத் தூண்டும் அளவிலும் அதிகரித்து வந்திருக்கின்றன. 2025ஆம் ஆண்டுவாக்கில், நம் நாட்டில் தனிநபர் ஒருவருக்குக் கிடைக்கும் நீரின் அளவு மிகக் குறைவாக ஆண்டுக்கு 1,500 கன அடியாக இருக்கும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர். இதனால், இனிவரும் ஆண்டுகளில் மாநிலங்களிடையிலான நதிநீர்ப் பிரச்சினைகளை இன்னும் ஏராளமாக நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்தப் பொருள்பற்றி ஒரு தலைச் சார்பின்றி - அரசியல் கட்சி நோக்கமின்றி - நடுநிலைக் கண்ணோட்டத்துடன் நான் பேசுகிறேன். எந்த அரசாங்கத்தையும் - எந்த அரசியல் கட்சியையும் - எந்த மாநிலத்தையும் தாக்கிப் பேசுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை. ஏனென்றால், காவிரி நதிநீர்ப் பூசலினால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரில் நானும் ஒருவன். இந்தப் பூசலினால் எனது மாநிலமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த ஒரு மாநிலத்தையும் கண்டிப்பதற்கு இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ளப் போவதில்லை.

தேசிய நதிநீர்க் கொள்கை தேவை!

தற்போது மாநிலங்களிடையே ஓடும் நதிகளின் நீர்பற்றி நிலவிவரும் பூசல்களிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இப்போதுள்ள நதிநீர்ப்பூசல் தீர்வு செயல்முறையும், 1956ஆம் ஆண்டு மாநிலங்களிடையே நதிநீர்ப் பூசல்கள் சட்டமும் போதியனவாக இல்லை; அவை பயனளிக்கவில்லை; திறம்படச் செயற்படவில்லை. 1987ஆம் ஆண்டில் வகுக்கப்பட்ட தேசிய நீர்க் கொள்கையும் அவ்வாறே பயன்படவில்லை.

எனவே, மாநிலங்களிடையே நதிநீர்ப் பூசல்கள் சட்டத்தை, அது மாநிலங்களிடையிலான நதிநீர்ப் பூசல்களை உடனடியாகத் தீர்ப்பதற்கான ஒரு திறன் வாய்ந்த சட்டமுறை ஆவணமாக விளங்கும் வகையில் திருத்துவது அவசரமும் அவசியமும் ஆகும்.

அதேபோன்று, வடிநில மாநிலங்களிடையே நதிநீரைப் பகிர்ந்தளிப்பதற்கான வழிமுறைகளை உள்ளடக்கும் வகையில் தேசிய நதிநீர்க் கொள்கையையும் மேம்படுத்த வேண்டும். மேலும், நாட்டின் அரிதான நீர்வள ஆதாரங்களை உகந்த அளவில் பயன்படுத்திக் கொள்வதற்காக, ஒரு கொள்கைக் கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும்.

(தொடரும்)

No comments: