Thursday, March 17, 2011

நதி நீர் இணைப்பு மசோதா - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -1

(5 மே 2000 அன்று நாடாளுமன்றத்தில் மசோதாவைத்தாக்கல் செய்தபோது வைகோ ஆற்றிய உரை )

தீர்வு என்ன?

உலகெங்கும் பல்வேறு நாடுகளிடையே ஓடும் நதிகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும்போது ஒரே நாட்டுக்குள் ஓடும் ஆறுகள் பற்றிய பூசல்கள் தீர்ப்பதில் என்ன சிரமம் இருக்க முடியும் ?

வைகோ

மாநிலங்களிடையே ஒடுகின்ற நதிகளை நாட்டுடைமையாக்கக்கோரி நாடாளுமன்றத்தில் தாம் கொண்டு வந்த தனிநபர் மசோதா மீது தொடர்ச்சியாக நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று மறுமலர்ச்சி தி.மு.கழக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 11.08.2000 அன்று ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:-

அவைத் தலைவர் அவர்களே, மாநிலங்களிடையே ஒடுகின்ற நதிகளை நாட்டுடைமையாக்குவது பற்றி இந்த மசோதா மீதான விவாதத்தை நான் தொடங்கி வைத்த அன்று மாநிலங்களுக்கிடையேயான ஆற்றுநீர்ப் பங்கீடு தொடர்பான பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிட்டேன். அதில் இரண்டு பிரச்சினைகள் மிக முக்கியமானவை. ஒன்று பஞ்சாப், ஹரியாணா,இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கிடையிலான ரவி-பியாஸ் ஆற்றுநீர்த் தகராறு. மற்றொன்று தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், மத்திய ஆட்சிப்பகுதியான பாண்டிச்சேரி ஆகியவற்றுக்கு இடையிலான காவிரி நதிநீர்ப் பிரச்சினை.

இவற்றில் ரவி-பியாஸ் ஆற்றுநீர்ப் பூசல், மாநிலங்களிடையேயான நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டத்தின் வரைமுறைகளின்படி 1986 ஏப்ரல் மாதம் நடுவர் தீர்ப்புக்காகத் தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது. காவிரிப் பிரச்சனை 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடுவர் மன்றத் தீர்ப்புக்கு விடப்பட்டது. ரவி-பியாஸ் ஆற்றுநீர்ப் பூசல் தீர்ப்பாயம் தனது தீர்ப்பு அறிக்கையை 1987 ஜனவரி 30 அன்று அளித்தது. அந்தத் தீர்ப்பின் மீது இருதரப்பு மாநிலங்களும், மத்திய அரசும் 1956 ஆம் ஆண்டு மாநிலங்களிடை ஆற்றுநீர்ப் பிரச்சினைகள் சட்டத்தின் 3 ஆம் பகுதியின் 5ஆம் பிரிவின்படி விளக்கமும், வழிகாட்டும் நெறியும் கோரியுள்ளன.

தீராத பிரச்சினை

காவிரி நடுவர் மன்றம் 1991 ஜூன் 25 அன்று ஓர் இடைக்கால ஆணையைப் பிறப்பித்தது. ஆனால், முதன்முறையாகக் கர்நாடக மாநிலம், ஆளுநர் வாயிலாக இந்த இடைக்கால ஆணையின் நோக்கத்திற்கு எதிராக இரு அவசரச் சட்டங்களைப் பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டங்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனினும், இது மத்திய-மாநில அரசுகளிடையே இன்னும் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இந்த நாட்டின் உணர்வுபூர்வமான ஒருமைப்பாடு, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம் நாம் பேசுகிறோம். அப்படி உண்மையான, உணர்வுபூர்வமான தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்காகவே இந்த மசோதாவை நான் முன்மொழிந்திருக்கிறேன்.

ஆறுகளின் பலன் நாடு முழுவதற்கும், அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு, மாநிலங்களிடையே ஓடுகின்ற ஆறுகளை நாட்டுடைமையாகக் வேண்டுமென்று இந்த மசோதா வலியுறுத்துகிறது. இந்தப் பிரச்சனை மீது, இந்த அவையின் உறுப்பினர்கள், கட்சி பேதமின்றித் தங்கள் கருத்துகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

விலை மதிப்பில்லாத சொத்து

நீர் என்பது விலைமதிப்பிடற்கரிய ஒரு தேசியச் சொத்து. நீர்வளங்களைப் பயன்படுத்துவது குறித்துத் திட்டமிடுவதும், மேம்படுத்துவதும் தேசியக் கண்ணோட்டத்துடன் நடைபெற வேண்டும் என்ற குறிக்கோளை தேசிய நீர்க் கொள்கை உள்ளடக்கியிருக்கிறது. இந்தத் தேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படைக் கூறுகள் யாவை? முதலாவதாக, நீரானது விலைமதிப்பிட முடியாத ஒரு தேசிய வள ஆதாரம். இதனை மேம்படுத்துவது தேசியக் கண்ணோட்டத்துடனேயே நடைபெற வேண்டும்.

கிடைக்கின்ற நீர்வளங்கள் மேல்மட்ட நீராயினும், நிலத்தடி நீராயினும் அவற்றை எத்துணை அதிக அளவு பயன்படுத்த முடியுமோ அத்துணை அதிக அளவு பயன்படுத்த வேண்டும். நீர் பற்றாக்குறையாக உள்ள பகுதிகளுக்குப் பிற பகுதிகளிலிருந்து உபரி நீரைக் கொண்டு செல்ல வகை செய்ய வேண்டும். இதில், ஒரு ஆற்று வடிநிலப் பகுதியிலிருந்து அந்த வடிநிலத்தின் தேவைகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட பின்னர் உபரி நீரை மற்றொரு வடிநிலத்துக்கு மாற்றுவதும் உள்ளடங்கும்.

நீர் ஒதுக்கீட்டில் பொதுவாகக் குடிநீருக்கு முதலிடம் அளிக்கப்பட வேண்டும். அடுத்து நீர்ப் பாசனம், புனல் மின்விசை, பிற பயன்பாடுகள் இதே வரிசையில் இடம்பெறுதல் வேண்டும். இதில் நீர்வழிப் போக்குவரத்தும் முக்கியப் பங்குப் பணியாற்ற முடியும். அனைத்து ஆறுகளையும் நாட்டுடைமையாக்கிவிட்டால் -அந்த நோக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுமானால் - போக்குவரத்துச் செலவு மிகவும் மலிவாக அமையும்.

ஆறுகளை இணைத்தல்

புகழ்பெற்ற பொறியியல் வல்லுநரும், மத்திய அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக விளங்கியவருமான டாக்டர் கே.எல். ராவ் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே ஆறுகளை இணைப்பதற்கான ஓர் ஆலோசனையைக் கூறினார். அப்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சகமாக இருந்தது, இப்போது ‘நீர்வளத்துறை அமைச்சகம்’ என அழைக்கப்படுகிறது. ஆறுகளை இணைப்பது குறித்து அவர் 1960 களில் ஓர் அறிக்கை அளித்தார்.

பாட்னாவுக்குச் சற்று மேற்கே தொடங்கிப் பல தொடர் கால்வாய்களை வெட்டி, பருவ காலங்களில் கங்கை ஆற்றிலிருந்து வடிந்தோடும் உபரி நீரின் ஒரு பகுதியைக் காவிரிக்குக் கொண்டு செல்லலாம் என்று 1960 களின் இறுதியில் அவர் ஒரு திட்டத்தைத் தெரிவித்தார். இந்தத் திட்டத்தில் ஓர் உணர்வுபூர்வமான அம்சமும் அடங்கியிருக்கிறது. கங்கை - காவிரி இணைப்பு குறித்து வெகுவாகப் பேசப்பட்டதை நான் நினைவு கூர்கிறேன்.

கங்கை நதிப்புறத்து மக்களைக் காவிரி வடிகால் பகுதி மக்களுடன் பிணைப்பதால் நாடு வளங்கொழிக்கும் என்னும் கருத்து நெடுநாட்களாக நிலவி வருகிறது. அமரகவி சுப்பிரமணிய பாரதியார் இவ்வாறு கனவு கண்டார். ஆனால், என்ன நேர்ந்தது? டாக்டர் ராவ் அமைச்சர் பதவியிலிருந்து நீங்கிய சிறிது காலத்திற்குப் பிறகு அவருடைய திட்டத்திற்கான செலவு குறைத்து மதிப்பிடப்பட்டு விட்டதாக நினைத்தார்கள்.

அதனால், அவர்கள் கங்கை - காவிரி இணைப்புத் திட்டம் குறித்து மற்றொரு ஆய்வு நடத்தினார்கள். கங்கை நீரை இந்தியாவெங்கும் கொண்டு செல்வது நடைமுறையில் இயலாத காரியம் என்றும், அதற்கு அபரிமிதமாகச் செலவாகும் என்றும், ஏராளமான அளவு மின்விசை தேவைப்படும் என்றும் இந்த ஆய்வுக்குழுவினர் முடிவுக்கு வந்தனர். எனவே, இத்திட்டம் இறுதியாகக் கைவிடப்பட்டது.

தென்னிந்திய ஆறுகளை இணைத்தல்

இதற்குப் பதிலாக, நீர்வளங்களை மேம்படுத்துவதற்கான தேசியக் கண்ணோட்டத்துடன் ஒரு திட்டத்தை வகுத்தார்கள். இது இரு பகுதிகளைக் கொண்டிருந்தது. ஒன்று, ‘இமாலய ஆறுகள் மேம்பாட்டுத் திட்டம்’ ( Himalayan Rivers Development ) என்றும், இரண்டாவது ‘தீபகற்ப ஆறுகள் மேம்பாட்டுத் திட்டம்’ ( Peninsular Rivers Development ) என்றும் அழைக்கப்பட்டன. தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மை என்னும் பெயரில் ஒரு தன்னாட்சி அமைவனம் 1981 இல் நிறுவப்பட்டது. இந்த அமைவனம் முதலில் தீபகற்ப ஆறுகளுக்கான திட்டத்தை வகுத்தது. இது, வடக்கிலுள்ள மகாநதி, நர்மதா,கோதாவரி ஆகிய ஆறுகளை தெற்கிலுள்ள காவிரி, வைப்பாறு, தாமிரபரணி வரையிலான ஆறுகளுடன் இணைக்க வகை செய்தது. நீர்வளம் உபரியாக உள்ள பகுதிகளிலிருந்து நீர்ப் பற்றாக்குறையாகவுள்ள பகுதிகளுக்கு உபரி நீரைக் கொண்டு செல்வதற்கு ஏராளமான இணைப்புக் கால்வாய்களை அமைக்கலாம் என்று தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மை ஆலோசனை கூறியது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பஸ்தார் வட்டாரத்தில் உற்பத்தியாகும் மகாநதி, சம்பல்பூர் அருகே ஒரிசாவுக்குள் நுழைகிறது. இந்த சம்பல்பூர் அருகில்தான் ஹிராகுட் அணை கட்டப்பட்டுள்ளது. பாசனத்துக்காகவும், புனல்மின் உற்பத்திக்காகவும், வெள்ளக் கட்டுப்பாட்டுக்காகவும் நீரைத் தேக்கி வைப்பதற்காக இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணையைக் கட்டியபிறகும், இந்த ஆற்றில் போதிய நீர் உள்ளது. குறிப்பாக, பருவ காலங்களில் நீர் மிகையாக இருக்கிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும்போது, கட்டாக் நகருக்கு அடிக்கடி மகாநதியினால் வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தல் எற்படுகிறது.

தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மையின் திட்டப்படி, முதலில் மகாநதியின் குறுக்கே மணிபந்திரா என்னுமிடத்தில் ஓர் அணை கட்டவேண்டும். அங்கிருந்து மகாநதியின் உபரி நீராகிய 1,11,500 மில்லியன் கனமீட்டர் நீரில், 8,000 மில்லியன் கனமீட்டரை ஒரு புவியீர்ப்புக் கால்வாய் மூலம் கோதாவரி ஆற்றுக்குத் திருப்பிவிடலாம். இதற்கு வழியில் நீர் இறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நீரைத் தவுலேஸ்வரம் அணை அருகே கொண்டுபோய் விடலாம்.

இப்போதுள்ள தவுலேஸ்வரம் அணையின் மேற்பகுதியில் கோதாவரி, போலாவரம் குறுக்கே மற்றொரு அணையைக் கட்டி, 21,550 மில்லியன் கனமீட்டர் நீரைக் கிருக்ஷ்ணா நதிக்குக் கொண்டு செல்லலாம். இதில், கோதாவரியின் உபரிநீராக மதிப்பிடப்பட்டுள்ள 15,000 மில்லியன் கனமீட்டர் நீரும், மகாநதியிலிந்து தவுலேஸ்வரத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படும். 6,500 மில்லியன் கனமீட்டர் நீரும், வழியில் ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீ காகுளம், விசாகப்பட்டினம் மாவட்டங்களில் பாசனத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் 1,500 மில்லியன் கன மீட்டர் நீரும் உள்ளடங்கும்.

இதன்பின், அடுத்த இணைப்புகள் வருகின்றன. இதன்படி, கோதாவரியிலிருந்து உபரிநீரை கிருக்ஷ்ணா நதிக்குத் திருப்பி விடுவதற்கான மூன்று இணைப்புகள் அமைக்கத் திட்டம் வகை செய்கிறது. முதலாவதாக, பிரகாசம் அணை அருகே 1,200 மில்லியன் கன மீட்டர் நீரைக் கொண்டு சேர்ப்பதற்காக, போலாவரம்-விஜயவாடா இணைப்பு அமைத்தல்;இரண்டாவதாக, 4,370 மில்லியன் கன மீட்டர் நீரைக் கொண்டு செல்ல இச்சம்பள்ளி - புளிச்சிந்தலா இணைப்பை ஏற்படுத்துதல்; கிருக்ஷ்ணா ஆற்றின் குறுக்கேயுள்ள நாகார்ஜூனசாகர் அணைக்குக் கிழக்கே புளிச்சிந்தலா உள்ளது. கோதாவரியின் குறுக்கே இச்சம்பள்ளி அணைகட்டும் திட்டம் பல பத்தாண்டுகளுக்கு முன்பே வகுக்கப்பட்டது. மூன்றாவதாக, இச்சம்பள்ளி - நாகார்ஜூனசாகர் இணைப்பு. இது, சுமார் 14,000 மில்லியன் கன மீட்டர் நீரை நாகர்ஜூன சாகர் அணைக்குக் கொண்டு செல்லும்.

நாகார்ஜூனசாகர் அணையிலிருந்து பெண்ணாற்றின் குறுக்கே இப்போதுள்ள சோமசீலா அணைக்கு 12,000 மில்லியன் கன மீட்டர் நீரை மாற்றலாம். அதில் 9,800 மில்லியன் கன மீட்டர் நீரைக் காவிரிக்குக் கொண்டு செல்லலாம். எனவே, மகாநதியிலிருந்து நீரைக் காவிரிக்குக் கொண்டு சென்று, இந்த ஆற்றிலுள்ள பேரணையில் (கல்லணை) சேர்த்துவிட முடியும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழப் பேரரசன் கரிகால் வளவன் இந்த அணையைக் கட்டினான். இன்று இந்தப் புத்தாயிரமாண்டின் நுழைவாயிலில் இதுபற்றிப் பேசுகிறோம். ஏனென்றால், நாம் அடுத்த தலைமுறைக்காக - அடுத்த நூற்றாண்டுக்காகத் திட்டமிட வேண்டியிருக்கிறது.

வழியில், பாசனத் தேவைகளையும், சென்னை நகருக்குக் குடிநீர் வழங்குவதையும் கவனத்தில் கொள்ளுமிடத்து, கடைசியாகச் சென்றடையும் நீரின் அளவு 5,000 மில்லியன் கன அடிதான் இருக்கும். இதில் 3,000 மில்லியன் கன அடி நீர் காவிரி வடிகால் பகுதியில் பயன்படுத்திக் கொள்ளப்படும். 200 மில்லியன் கன அடி நீரை இன்னும் தெற்கே, புனித நகரம் அமைந்துள்ள வைகை ஆற்றுக்குக் கொண்டு செல்லலாம்.
(தொடரும்)

No comments: