Thursday, March 17, 2011

நதி நீர் இணைப்பு மசோதா - வைகோ நாடாளுமன்றத்தில் பேச்சு -3

நதிநீர்ப் பங்கீடு கோட்பாடுகள்


நதிநீர்த் தகராறுகள் தொடர்பான நெடிய வரலாற்றில் நதிநீர்ப் பங்கீடு குறித்துப் பல்வேறு கொள்கைகளும், கோட்பாடுகளும் வகுக்கப்பட்டுள்ளன. இத்தகைய பூசல்களுக்குத் தீர்வு காண்பதற்கான நெறிமுறைகளை வகுப்பதில் பல அமைப்புகள் பங்கு பெற்றிருக்கின்றன.

இவற்றில் முதலிடம் பெறுவது ‘முழு ஆட்சிப் பரப்பு இறையாண்மைக் கோட்பாடு ( Absolute Territorial Sovereignty) ஆகும். இதனை ‘ஹார்மோன் கோட்பாடு ( Harmon Theory )’என்றும் கூறுவர். அமெரிக்காவுக்கும், மெக்சிகோவுக்கும் இடையில் ரியோகிராண்ட் ஆறு தொடர்பாக எழுந்த பூசலில் அரசுத் தலைமை வழக்கறிஞர் ஹார்மோன் 1895இல் தெரிவித்த கருத்தினையொட்டி இது இவ்வாறு அழைக்கப்பட்டது.

இந்தக் கோட்பாட்டின்படி ஒரு கரையோர அரசு, மற்ற சக கரையோர அரசுகளின் மீதான பாதிப்புகளைப் பொருட்படுத்தாமல், தனது நீரைத் தன் விருப்பப்படிப் பயன்படுத்தலாம். மற்ற நாடுகளிடமிருந்து நீர் தொடர்ந்து பாய வேண்டும் என்று கோருவதற்குக் கரையோர நாடு எதற்கும் உரிமை இல்லை. சில அரசுகள் இந்தக் கோட்பாட்டை ஆதாரமாகக் காட்டி, இறையாண்மையானது ஒரேயொரு அரசிடம் மட்டுமே அமைந்திருக்கிறது என்று வாதிடலாம். முழு ஆட்சிப் பரப்பு இறையாண்மைக் கோட்பாட்டின் அடிப்படையில் இது அடாவடியானது என்று நதிநீர்ப் பிரச்சினையில் தலைசிறந்த வல்லுநரும், உலகப் புகழ்பெற்ற பன்னாட்டுச் சட்ட அறிஞருமான எச்.ஏ.ஸ்மித் கூறியுள்ளார்.

போர் அச்சுறுத்தல் நீங்கலாக எந்தவிதக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாமல், தன் அண்டை நாடுகளுக்கு ஈடு செய்ய முடியாத தீங்கினை விளைவிப்பதற்கு ஒவ்வொரு அரசையும் இது அனுமதிக்கிறது. எனவே, ஹார்மோன் கோட்பாட்டை நாம் ஏற்க முடியாது.

இதே தத்துவதத்தின் அடிப்படையில்தான் இந்தியாவில் நர்மதா, கிருக்ஷ்ணா, ரவி, பியாஸ் ஆகிய ஆறுகள் தொடர்பாக அடுத்தடுத்து அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்கள், ஹார்மோன் கோட்பாடு அடிப்படையிலான ஆட்சிப் பரப்பு இறையாண்மைக் கோட்பாட்டைத் திட்டவட்டமாக ஏற்க மறுத்துவிட்டன. இதுதான் மிக முக்கியம். இந்தியாவில் ஹார்மோன் கோட்பாட்டை நாம் ஏற்கவில்லை. அதனை அடியோடு ஒதுக்கித் தள்ளிவிட்டோம். அதை ஏற்றுக் கொண்டால், ஒரு குறிப்பிட்ட மாநிலம், ஒரு நதி தனது ஆட்சிப் பரப்புக்குள் ஓடுவதால், அந்த ஆற்றின் நீர் மீது மற்ற மாநிலங்கள் எவ்விதத் தனிப்பட்ட உரிமையும் கொண்டிருக்க அனுமதிக்க முடியாது எனக் கூற இடம் ஏற்படும். அதனால்தான் ஹார்மோன் கோட்பாட்டை இந்தியா ஏற்கவில்லை.

இரண்டாவது கோட்பாடு ‘இயற்கை நீரோட்டக் கோட்பாடு( Theory of Natural Water flow )’ ஆகும். இது முந்தைய கோட்பாட்டுக்கு எதிரிடையானது. இதனை “ஆட்சிப் பரப்பு ஒருமைப்பாட்டுக் கோட்பாடு ( Territorial Integrity Theory )” என்றும் கூறுவர்.

இக்கோட்பாட்டின்படி, கீழ்நிலைக் கரையோர அரசு ஒவ்வொன்றும், தலைநிலைக் கரையோர அரசின் தலையீடு எதுவுமின்றி, ஆற்றின் இயற்கையான நீரோட்டத்திற்கு உரிமையுடையது ஆகும். ஏனென்றால், இத்தகைய தலையீடு, ஆற்றின் ஓர் அங்கமாக அமைந்துள்ள கீழ்நிலைக் கரையோர அரசின் ஆட்சிப் பரப்பு ஒருமைப்பாட்டினை மீறுவதாகும்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கீழ்நிலைக் கரையோர நாடான எகிப்து, நைல் நதி தொடர்பாகச் சூடானுக்கு எதிராக இந்தக் கோட்பாட்டை முன் வைத்தது. இந்த வாதத்தை நைல் நதி நீர் ஆணையம் தள்ளுபடி செய்துவிட்ட போதிலும், சூடான் சார்பாக வாதாடிய பிரிட்டன், தலைநிலைக் கரையோர நாடு ஆற்று நீரைப் பயன்படுத்துவது குறித்து ரத்து அதிகார உரிமையை 1929இல் எகிப்துக்கு வழங்கியது. இது திட்டவட்டமாக ஒரு அரசியல் தீர்வாகும்.

முதல் உரிமை

மூன்றாவது கோட்பாடு, “முன் ஒதுக்கீட்டுக் கோட்பாடு ( Doctrine of Prior Appropriation )” என்பதாகும். இது, தலைநிலைக் கரையோர நாடுகளுக்கும், கீழ்நிலைக் கரையோர நாடுகளுக்கும் நடுநிலையான ஒரு கோட்பாடாகும். இக்கோட்பாட்டின்படி ஆற்று நீரைப் பயனளிக்கும் பயன்பாட்டிற்கு அளிக்கின்ற முதல் பயன்பாட்டாளர், அத்தகைய பயன்பாட்டின் அளவுக்கு ஒரு முதல் உரிமையை ஈட்டுகிறார். “காலத்தால் முதல், உரிமையிலும் முதல் ( Prior in Time - Prior in Right )” என்பது இந்தக் கோட்பாட்டின் தாரக மந்திரமாக அமைந்தது.

இந்தக் கோட்பாடு, பன்னாட்டுச் சட்டத்தின் பகுதியாக அமையவில்லை. இந்தியாவில் தீர்ப்பாயங்கள் முன்புள்ள தீர்ப்புச் சட்டங்களிலும், பன்னாட்டுச் சட்ட நூல்களிலும் நீர் ஒதுக்கீட்டுக்கு “முதல் ஒதுக்கீடு” ஒரு மீதூர்ந்த நெறிமுறையாகக் கருதப்படவில்லை. எனினும் மற்ற தொடர்புடைய அம்சங்களில் அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

சமுதாய நலக் கோட்பாடு

நான்காவது கோட்பாடு “சமுதாய நலக் கோட்பாடு ( Community of Interest Theory )” ஆகும். இதன்படி, ஆற்று வடிகால் பகுதி முழுவதும் நாடுகளின் எல்லைகள் எவ்வாறிருப்பினும், ஒரே பொருளாதாரப் பிரிவாகக் கருதப்படுகிறது. ஆற்றுநீர், கூட்டுக் கரையோர அரசுகளின் சமுதாயத்திற்குச் சொந்தமாக்கப்படுகிறது. அந்த நீர் ஒருங்கிணைந்த முறையில் பெருமளவு நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். தர்க்க முறையில் இது ஒரு கவர்ச்சியான கோட்பாடு. ஆனால், நடைமுறையில் நாட்டு எல்லைக் கோடுகள் இருக்கும் வரையில், ஆறுகளைத் தனியொரு பொருளாதாரப் பிரிவாகக் கருதுவதன் மூலம் நாடுகளிடையே எழும் பூசல்களைத் தவிர்த்துவிட முடியாது என்ற உண்மையை இது கவனத்தில் கொள்ளவில்லை.

எனினும், அடிப்படைப் பூசல்களுக்குத் தீர்வு கண்டவுடன், வடிநில நாடுகள் தங்கள் பொதுச் சொத்துக்களின் ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்காக ஒத்துழைக்கலாம் - ஒத்துழைக்க இயலும்.

இந்தியாவுக்கு ஏற்ற கோட்பாடு

இந்தக் கோட்பாடு, மாநிலங்களிடையிலான நீர்ப் பூசல்களைத் தடுப்பதற்கு அல்லது தீர்ப்பதற்கு ஆறுகளை நாட்டுடைமையாக்க வேண்டுமென்று இந்தியாவில் அடிக்கடித் தெரிவிக்கப்பட்டு வரும் கருத்துக்கு அரண் அமைத்துக் கொடுக்கிறது. எனவே, சமுதாய நலக் கோட்பாட்டின்படியுங்கூட ஆறுகள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும். இதுதான் முக்கியமான அம்சமாகும். வடிநிலப் பகுதி முழுவதையும் தனியொரு பிரிவாக எடுத்துக் கொள்ளும்போது, அனைத்து ஆறுகளிலும், அனைத்து முனைகளிலும் நீர் கிடைக்கும்படி செய்வதற்காக நாடு முழுவதையும் தனியொரு பிரிவாக ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?

வெள்ளப் பெருக்குகள் ஏற்படும் சில பகுதிகளில் மக்கள் அடித்துச் செல்லப்படுகிறார்கள் - கொல்லப்படுகிறார்கள். அதேசமயம், வேறு சில பகுதிகளில் வறட்சி காரணமாக மக்கள் சொல்லொணா அவதிக்குள்ளாகிறார்கள். கால்நடைகள் செத்து மடிகின்றன. இந்நாட்டின் ஒரு பகுதியில் வெள்ளப் பெருக்கினால் பேரழிவு ஏற்படுகிறது. பிற பகுதிகளில் கடும் வறட்சி மக்களைத் தாக்குகிறது. ஆகவே, ஆறுகள் நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற கருத்தினை சமுதாய நலக் கோட்பாடு வலியுறுத்திக் கூறுகிறது. இதனை எச்.எம்.சீர்வை சுட்டிக் காட்டுகிறார்.

இறுதியாக, மாநிலங்களிடையிலான ஆறுகளின் நீரை, நியாயமாகப் பங்கீடு செய்தல் நியாயமாகப் பயன்படுத்துதல் தொடர்பான கோட்பாடுகளும் உள்ளன.

ஹெல்சிங்கி விதிகள்

இவற்றில் பெரிதும் குறிப்பிடப்படுவது “ஹெல்சிங்கி விதிகள்( Helsinki Rules )” ஆகும். மாநிலங்களுக்கிடையிலான ஆறுகள் குறித்த பூசல்களைத் தீர்ப்பது பற்றிப் பேசுபவர் யாராக இருந்தாலும், அவர்கள் “ஹெல்சிங்கி விதிகள்” பற்றிக் குறிப்பிடுகிறார்கள். இந்த முயற்சிகளில் மிகவும் முழுமையானதும், நன்கறியப்பட்டுள்ளதும் ஹெல்சிங்கி விதிகளில் அடங்கியுள்து. ஃபின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சிங்கி நகரில் 1966இல் நடந்த பன்னாட்டுச் சட்டச் சங்கத்தின் ( International Law Association ) 52ஆவது மாநாட்டில், பல ஆண்டுகள் விவாதத்திற்குப் பிறகு, இந்த விதிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சட்ட வல்லுநர்கள் பல ஆண்டுகள் கூடி ஆலோசித்து, விரிவாக விவாதங்கள் நடத்தி, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தனர். அதுதான் “ஹெல்சிங்கி விதிகள்” என்ற கோட்பாடாக உருப்பெற்றது.

ஹெல்சிங்கி விதிகளுக்குப் பன்னாட்டுச் சட்டம் என்ற தகுதி கிடைக்கவில்லை. என்றாலும், இவை பன்னாட்டுச் சட்டத்திற்கான ஓர் ஆதாரம் என்ற தகுதியைப் பெற்றுள்ளன. ஏனென்றால், பன்னாட்டு நதிகள் சட்டத்தில் ஈடிணையற்ற வல்லுநர்கள் எனக் கருதப்படும் வித்தகர்களின் பத்தாண்டுகளுக்கும் அதிகமான அரும்பெரும் முயற்சியினால் இவை உருவானவையாகும். புகழ்பெற்ற வல்லுநர்களின் குழு ஒன்று பல ஆண்டுகள் கூடி விவாதித்தது. இறுதியில் பன்னாட்டுச் சட்டத் துறையில் ஒரு முடிவுக்கு வந்தனர். இந்தத் துறையில் உயர்ந்த தகுதி வாய்ந்த, உலகப் புகழ்பெற்ற நீதி இயலறிஞர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரின் கருத்துகளை உள்ளடக்கிய ஒரு வடிவமாக இது அமைந்தது.

ஹெல்சிங்கி விதிகள் 37 பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இவற்றில், 4, 5 ஆகிய பிரிவுகள், பன்னாட்டு வடி நில நீரை நியாயமாகப் பயன்படுத்துதல் என்ற தலைப்பைக் கொண்ட இரண்டாம் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன. ஹெல்சிங்கி விதிகளின் அணுகுமுறையானது, “பூசல்களுக்கான அமைதித்தீர்வு ( Pacific Settlement of Disputes )” பற்றிய ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் 33ஆம் பிரிவினைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவிலுள்ள, 18 பெரிய ஆற்று வடிநிலப் பகுதிகளில் 16 பகுதிகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களை உள்ளடக்கியதாக உள்ளன. குஜராத்திலும், தமிழ்நாட்டிலும் உள்ள இரு சிறிய வடிநிலங்கள் மட்டுமே விதிவிலக்கு.

தரப்பினர்களுக்கிடையில் தீர்க்கப்படாமல், மாநிலங்களிடை நீர்ப்பூசல்கள் சட்டத்தின் கீழ் தீர்ப்பாயங்களின் தீர்ப்புக்கு அனுப்பப்பட்ட பூசல்கள் நர்மதா, கிருக்ஷ்ணா, கோதாவரி, ரவி, பியாஸ், காவிரி ஆகியவை தொடர்பானவை. அரசமைப்பு வகைமுறைகள் பல உள்ளன. மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் (1919 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்) வரும்வரையில், சிறிய நீர்ப்பாசனத் திட்டங்கள் நீங்கலாக, நீர்ப்பாசனப் பணிமானங்கள் அனைத்தும் இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. இவை இங்கிலாந்திலுள்ள இந்திய அமைச்சரின் ஒப்பளிப்புக்கு உட்பட்டவையாக இருந்தன.

1919ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின்படி நீர்ப்பாசனம் மாகாண அரசுக்குட்பட்டதாக, ஆனால் ஒதுக்கப்பட்ட பொருளாக ஆக்கப்பட்டது. இதன்படி, ஒரு மாகாணத்திற்கும் இன்னொரு ஆட்சிப் பகுதிக்கும் இடையிலான தொடர்புகளைப் பாதிக்கும் மாகாணங்களிடையேயான பொருள்கள் மத்தியச் சட்டமன்றத்தின் சட்டமியற்றுதற்கு உட்பட்டவையாகும். 1919இல் இந்த நிலை இருந்தது. மாநிலங்களிடையே ஓடும் ஆறுகளின் பள்ளத்தாக்குகளின் நீரைப் பயன்படுத்துதல் தொடர்பான பூசல்களை நடுவர் மன்றத் தீர்ப்புக்கு அனுப்ப நாடாளுமன்றம் சட்டத்தின் மூலம் வகை செய்தது. இரண்டாவது சட்டம், அரசமைப்பின் 262ஆம் பிரிவின்படி இயற்றப்பட்டது. இதுதான் முன்னர் குறிப்பிடப்பட்ட 1956ஆம் ஆண்டு மாநிலங்களிடை நீர்ப்பூசல்கள் சட்டமாகும்.

துணை அவைத் தலைவர்:திரு. வைகோ நீங்கள் ஏற்கனவே 46 நிமிடங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்கள் மசோதா. இதுபற்றிப் பேச ஏராளமான உறுப்பினர்கள் விரும்புகிறார்கள்.

வைகோ: இன்னும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்வேன். அதிக நேரம் எடுத்துக் கொள்ள மாட்டேன்.
(தொடரும்)

No comments: