Friday, October 17, 2014

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 3

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 3

மறைமலையடிகளின் ஆய்வு:

திராவிடர் என்ற இனமே இல்லை என்று கூறுகின்றவர்களுக்கு விடையாக, திராவிடர்கள் தோற்றத்தில் எவ்வாறு இருப்பர் என்பதை மறைமலையடிகள் தனது தமிழர் மதம் என்ற நூலில்,
தமிழர்களும் அவர்களோடு இனமான திராவிட மக்களும் பெரும்பாலுங் குள்ளமான வடிவினரென்றும், கரிய நிறத்தினரென்றும், தழைத்த கூந்தலும் அதில் ஒரேவொரு காற் சுருண்ட மயிரும் வாய்த்தவரென்றும், கரிய விழியினரென்றும் நீண்ட மண்டையோட்டினரென்றும் ஒரேவொருகால் அடியிற் குழிந்த அகன்ற மூக்கினரென்றும், என்றாலும் அதனால் தட்டையாகக் காணப்படாத முகத்தினரென்றுந் திட்டமாய் அறியலாயினர். இங்ஙனம் அறியப்பட்ட உறுப்படையாளங்கள் உடைய தமிழரும் அவர் இனத்தவருமே இப்போது இலங்கை முதல் இமயம் வரையிற் பரவியிருக்கும் மக்கட் கூட்டத்தாரிற் பெரும்பகுதியினராய்க் காணப்படுகின்றனரென ரிசிலி என்னும் ஆசிரியர் முடித்துக் சொல்லி யிருக்கின்றனர். அவரைப் பின்பற்றி ராப்சன் என்னும் ஆசிரியரும் பின்வருமாறு வரைகின்றனர்:
இந்திய மக்களின் பண்டைத் தொகுதியில் முதன்மையாய் இருந்தவர்கள் திராவிட வகுப்பினரே யாவர்; அவர், வழி நாட்களில் வந்து குடியேறிய ஆரியர், சித்தியர், மங்கோலியர் முதலான மற்றைக் குழுவினருடன் கலப் புற்று மிகவும் வேறு பாடுற்றனர்.
இன்னும், ஆரியர்கள் வடமேற்கே யிருந்து வந்து குடியேறுகின்றுழித் தம்முடன் கொணர்ந்த ஐரோப்பிய ஆரிய மொழிகளை இத் தேயத்தில் நுழைத்த ஞான்று வட விந்தியாவின் மேற்கேயுள்ள நாடுகளில் மெய்யாகவே வழங்கி வந்தவை திராவிட மொழிகளே யயன்பதிற் சிறிதும் ஐயமில்லை. வேத மொழியிலும், அதற்குப் பிற்பட்ட சமஸ்கிருத மொழியிலும், பிராகிருத மொழிகளிலும், இன்னும் முற்பட்ட குடிமக்கள் மொழிகளிலும், எல்லாந் தமிழ் மொழிக்கேயுரிய குறியீடுகள் புகுந்திருத்தல் ஆராய்ந்து கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றது. ஆகவே, இந்திய ஆரியர்கள் வருதற்கு முன்னமே, திராவிட மொழிகளைப் பேசுவாரே தென்னிந்திய வட இந்திய நாடுகளில் முதன்மை யாக நிறைந்திருந்தனர் என்று கருதுதற்குச் சிறந்த சன்றுகள் இருக்கின்றன
என்று ஆய்ந்து கூறுகின்றார். மேலும் திராவிட ஆரியர் என்று மறைமலையடிகள் கூறுகின்ற போது,
‘... இப்போதுள்ள நம் இந்து மக்களில் இவர் ஆரியர், இவர் தமிழர் என்று புலப்படப் பிரித்துக் காண்டேல் சிறிதேனும் இயலுமோ? இயலாதே. என்றாலும், சித்தியருந் திராவிடருங் கலந்த கலப்பிற் றோன்றிய மக்களை யும் மங்கோலியரும் திராவிடருங் கலந்த கலப்பிற் றோன்றிய மக்களை யும் பிரித்துக் காண்டல் இஞ்ஞான்று எளிதாய் இருத்தல் போலவே, திராவிடரும் ஆரியருங் கலந்த கலப்பிற் பிறந்த மக்களையும் பிரித்தறிதல் இயல்வ தாகவே யிருக்கின்றது. இங்ஙனமாக ஆரிய திராவிடக் கலவையிற் றோன்றிய மக்களையே ஆரியராகக் கருதி, அவர் உறையும் இடம் சரசுவதி யாறு மணல்வெளியிற் சுவடு மறைந்து போன இடமான விநசநா என்னும் ஊரிலிருந்து அலகபாத்து அல்லது பிரயாகை வரையிலுள்ள மத்ய தேசமே ஆகுமென்று மனுமிருதி (2,21) கூறுவதாயிற்று
என்கிறார். இங்கு திராவிடர் என்பவர் யார் என்பதையும் திராவிட ஆரியரே இப்போதைய பார்ப்பனர் என்றும் விரிவாக விளக்குகின்றார் மறைமலையடிகள்.
தென்னாட்டுப் பார்ப்பனர்கள் என்பவரே திராவிடர் என்பதற்கு பேராசிரியர் செயராமன் அவர்கள் மேற்கோள் காட்டுகின்ற சான்று கல்ஹனரால் எழுதப்பட்ட 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராஜதரங்கனி என்னும் காஷ்மீர் வரலாற்றைப் பேசும் நூலாகும்.
இந்த காஷ்மீரில் வாழ்ந்த மக்கள் குறித்து மறைமலையடிகள் தமது தமிழர் மதம் என்ற நூலில், மநு ஒரு திராவிட மன்னன் என்னும் தலைப்பில்,
மநு என்பவன் நாகரிக ஒழுக்கத்திற் சிறந்த ஒரு திராவிட மன்னர் என்றும், இம்மாநிலத்தைக் கடல் நீர் கவரத் துவங்கிய காலத்தில் அம்மன்னன் மலைய நாட்டில் ஓடிய கிருதமாலை ஆற்றங்கரையிற் றவஞ் செய்து கொண்டிருக்க ஒரு மீன்வடிவிற் றோன்றிய திருமால் அவனை அவ்வெள் ளத்திற்குத் தப்புவித்தனரென்றும், அவ்வெள்ளம் வடிந்த பின் அம் மன்னன் பல முகமாய்ச் சிதர்ந்தோடிப் போன குடிமக்களை யயல்லாம் ஒருங்கு சேர்ந்து, அவரை மீண்டும் நாடு நகரங்களில் நிலை நிறுத்தி அவர் ஒழுக வேண்டிய வாழ்க்கை முறைகளைக் கற்பித்தனனென்றும், அங்ஙனம் அவன் கற்பித்த அறநூலே, மநு மிருதி எனப் பெயர் பெறலாயிற்றென்றும் பாகவதம், மற்ச புராணம், அக்கினி புராணம் முதலான நூல்கள் நுவலா நிற்கின்றன.
பேராசிரியர் செயராமன் அவர்கள்தான், தொன்மங்கள் (புராணங்கள்) மிகைப் படுத்தப் பட்டவையாகவும், கட்டுக்கதைகள் நிரம்பியவையாகவும் இருக்கக் கூடியவை. ஆனால் அவற்றுள் சில வரலாற்றுச் செய்திகள் உள்ளீடாக இருக்கும் என்று கூறிவிட்டாரே.
மேலும் செயராமன் அவர்கள், இது மேலும் நுணுகிப்பார்க்க வேண்டிய ஒன்று என்று வேறு கூறிவிட்டார். எனவே மறைமலையடிகளையே தொடர்ந்து சான்றுக்கு அழைப்போம்...
இவ்வரலாற்றினை நுனித்தறியுங்காற், காசுமீரத்திற்றங்கிய ஆரியர் நாகரிக வொழுக்கஞ் சிறிதும் இலராகவே, அவரைத் திருத்துதல் ஒருவாற்றானும் இயலாமை கண்டு அவரை அறவே விட்டொழித்து, இன்னுங் கிழக்கே கங்கையாறு பாயும் நடுநாடு வரையிற் போந்து வழிநெடுக நாகரிக வாழ்க்கையில் உயிர் வாழ்ந்த தமிழருடன் கலந்து, தமிழருடைய பழக்க வழக்கங்களிற் பழகிக், கொலை புலை கட்குடி சூது வெறியாட்டுகளைப் பையப் பைய விட்டுச் சீர்திருத்தி வந்த திராவிட ஆரியருடைய வாழ்க்கை முறைகளையே பின்னுஞ் சீர்திருத்தி அவர்க்கு அறிவு தெருட்டும் பொருட்டே மநுவென்னுந் தமிழ் மன்னன் மத்திய தேசத்தில் அல்லது நடுநாட்டில் உறைந்த திராவிட ஆரியரை நோக்கியே மநுமிருதி என்னும் அற நூலை வகுப்பானாயினனென்று ஆராய்ந்து உணர்தல் வேண்டும்.
ஆகவே, காசுமீரதேயத்தின்கண் வந்து குடியேறிய ஒரு சிறு தொகுதியினரான ஆரியரைத் தவிர, வேறு தனிப்பட்ட ஆரியர் இவ்விந்தியதேயத்தில் இலரென்பதும், காசுமீரம் இராசபுதனம் முதலான சில இடங்களிற் றங்கிய ஆரியரைத் தவிர இமய மலைக்கும் விந்திய மலைக்கும் இடையேயுள்ள நாட்டிற் குடி புகுந்த ஆரியர் அனைவரும் அவர்க்கு முன்னமே அங்கெல் லாம் நாகரிகத்திற் சிறந்தவராய் வயங்கிய திராவிட மக்களிற் கலந்து திராவிட ஆரியராயினரென்பதும், இங்ஙனந் திராவிட ஆரியக் கலவையிற் றோன்றிய மக்கள் ஆரியருடைய தீய பழக்க வழக்கங்களைப் பெரும் பாலுங் கைவிட்டுத் தமிழருடைய அருளொழுக்க முறைகளைச் சிறிது சிறிதாகக் கைக்கொண்டு ஒழுகத் துவங்கினமையின், தவவொழுக்கத்தின் மேம்பட்ட தமிழ் மன்னனாகிய மநுவென்பான், அவரைப் பார்ப்பனர், அரசர், வணிகர், தொழிலாளர் என நான்கு வகுப்பினராகப் பிரித்து, அவரவர்க்குரிய ஒழுகலாறுகளை முறை செய்து நூல் இயற்றலாயினன் என்பதும் மனத்திற் பதித்தல் வேண்டும். இந் நால்வகைச் சாதி வகுப்பு, திராவிட ஆரியர்க்காக வகுக்கப்பட்டதேயன்றி, அது தமிழ் மக்கட்கும் உரியதாக வகுக்கப்பட்டது அன்று. ஏனென்றால், ஆரியர் இங்கு வருதற்கு முன்னமே, அந்தணரும், அரசரும், வேளாளரும், பதினெண்டொழிலாள ரும் (அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற் பெருங்குலத்தாருள், வேளாளர் ஏனை முக்குலத்தில்லறத் தாரையும் தாங்கிவந்ததினால், வேளாளரே சிறந்த இல்லறத் தாராகக் கருதப்பட்டனர். மருத நிலத்தூரில் நிலையாக வசித்து ஆறிலொரு கடமையை அரசனுக்கு ஒழுங்காக இறுத்து வந்த வரும் வேளாளரே. வண்ணான், மயிர்வினைஞன், செம்மான், குயவன், கொத்தன், கொல்லன், கன்னான், தட்டான், தச்சன், கற் றச்சன், செக்கான், கைக்கோளன், பூக்காரன், கிணையன் (கிணைப்பறையன்), பாணன், கூத்தன், வள்ளுவன், மருத்துவன் ஆகிய பதினென் தொழிலாளரும்; உழவனுக்குப் பக்கத் துணை யாயிருந்து தத்தம் தொழிலைச் செய்து அவனிடம் கூலி அல்லது தாம் செய்த பொருட்கு விலை பெற்று வந்தனர். இதனால், அவர் பதினெண் குடி மக்கள் எனக் கூறப்பட்டு வேளாளருள் அடக்கப் பட்டனர் என்கிறார் பாவாணர்-கவி) பண்டைத் தமிழ் மக்களுள் இருந்தமை, இப்போதிருப் பவற்றுள் மிகப் பழைய நூலாகிய தொல் காப்பியத்தின் புறத்திணையியலிற் போந்த,
அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்
என்னுஞ் சூத்திரத்தாலும், அங்ஙனங் கூறப்பட்ட அந்தணர் முதலாயி னார்க் குரிய உரிமைகளைக் கிளந்தெடுத்துரைக்கும்,
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய
என்றற் றொடக்கத்தனவாக வரூஉம் மரபியற் சூத்திரங்களாலும் நன்கு ணரக் கிடக்கின்றது
என்று நுணுகி ஆய்ந்து கூறி விட்டார் மறைமலையடிகள். இந்தப் பின்னணியில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இராஜதரங்கினி என்ற காசுமீரத்து வரலாற்று நூலைப் பார்க்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் வரலாறுகள் எல்லாம் திரித்து மாற்றி எழுதப்பட்டதை இங்கு நினைவு கொள்ளுதல் வேண்டும். குமுதம் தீராநதி டிசம்பர் 2002 இதழில் இந்தியாவின் பூர்வக் குடிகள் திராவிடர்களா? ஆரியர்களா என்ற கட்டுரையில்,
...தற்போது பா... அரசு பூர்வீகக் குடிமக்கள் ஆரியர்களே எனக் கூறி வருவதாகவும், அதற்கான ஆதாரங்களாக சில நூல்களை வெளியிட்டும், டில்லி, கல்கத்தா போன்றி தேசிய அருங்காட்சியகங்களும் அதற்கான ஆதாரங்களை உருவாக்கி வருவதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.... இப்போது எழுந்துள்ள சர்ச்சையினால் அதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது. இது பற்றி சில உலகப்புகழ் பெற்ற இந்திய வரலாற்று ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டோம். உலகப் புகழ் பெற்ற தொல் பொருளியல் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும் பனாரஸ் இந்துப் பல்கலையில் பயின்று, பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்று விட்டவருமான பேராசிரியர் .எச்.தானி, கல்கத்தாவிற்கு வந்த போது நமக்கு அளித்த பேட்டி:
கே: இந்த நாகரிகம் ஆரியர்களுடையது என வரலாற்று ஆதாரங்களுடன் சில நூல்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளனவாமே!
: The Decipyered Indus Script என ஒரு நூலை என்.ஜஹா மற்றும் என்.எஸ். ராஜாராம் என்பவர்கள் எழுதியுள்ளனர். இதில் ஹரப்பாவில் கண்டு எடுக்கப்பட்டுள்ள முத்திரைகளில், குதிரை உருவம் இருப்பதாகப் படத்துடன் குறிப்பிட்டுள்ளார்கள். இதை பல வரலாற்று நூலாசிரியர்கள் நுணுக்கமாக ஆராய்ந்ததில் முன் பாதி சிதைந்த நிலையில் கிடைக்கப் பெற்ற முத்திரையின் உருவத்தில், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன், காளை மாட்டின் பின் பாதியை, குதிரையின் முன் பாதியுடன் இணைத் துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே குதிரையை அதிகமாகப் பயன் படுத்தும் ஆரியர்களுடையது இந்த நாகரிகம் என்று ஆதாரத்தையே உருவாக்கிக் கொண்டு விட்டார்கள்.
இது பற்றி மத்திய அரசின் ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவின் சார்பிலும் இது போன்ற கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூல் வெளியிடப் பட்டுள்ளது. அதிலும் என்.எஸ். ராஜாராம் சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்ற குறிப்பிட வேண்டும் எனவும் சரஸ்வதி ஆற்றங் கரையில் இருந்துதான் இந்த நாகரிகமே தோன்றியது எனவும் கூறியுள்ளார். காரணம், வட இந்தியாவில் சில இடங்களான பஞ்சாப், ஹரியனா, மேற்கு உத்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் இந்த ஆறு ஓடியதாக நம்பப்பட்டு வருகிறது. மேலும் இந்த இடங்களில் நடத்திய அகழ்வராய்ச்சியின் போதும், சிந்து சமவெளி நாகரிகக் கண்டு பிடிப்புகள் சில கிடைத்துள்ளன. எனவே தான் ராஜாராம் இப்படி ஒரு குறிப்பை எழுதியுள்ளார்.
தற்போது சரஸ்வதி ஆறு பற்றியும் வெகு நுணுக்கமாக ஆராய்ந்து கண்டு பிடிக்க வேண்டிய உடனடி கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த நாகரிகம் திராவிடர்களுடையதுடன் பொருந்துகிறது என்பதை தமிழகத்தில் அகழ்வா ராய்ச்சி செய்வதன் மூலம் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.
இப்படி வரலாறுகளை திருத்திய எழுதியக் கூட்டம் தான் இராஜதரங்கினி என்ற நூலையும் எழுதியிருக்கலாம் என்ற அய்யம் எழுதுகிறது. திராவிடத் தேசியத்தை எதிர்ப்பதிலும் திராவிடர் என்ற மரபினத்தை எதிர்ப்பதிலும் மட்டும் தோழர் பெ.மணியரசன், பேராசிரியர் .செயராமன் போன்ற போலித் தமிழ்த்தேசியவாதிகள் முயலுவதில்லை. சந்தடிச் சாக்கில் பார்ப்பனர்களைத் தூக்கிப்பிடிப்பதிலும் முனைப்பாக இருக்கிறார்கள். நிற்க.
தமிழ்க்கடல் மறைமலையடிகளின் வாதத்தை தொடருவோம்,
இனி, இருக்கு வேத புருட சூத்தத்தில், தொழிலான் மட்டுமின்றிப் பிறப்பி னாலும் பார்ப்பனருக்கு ஏனையயல்லாச் சாதியாரினும் பார்க்க மிக்கதோர் உயர்வு சொல்லப்பட்டிருத்தலை உற்று நோக்குங்கால், அப் பதிகத்தைப் படைத்து அதனுள் நுழைத்தவர் ஒரு திராவிட ஆரியப் பார்ப்பனரே யாவரென்பது துணியப்படுகின்றது..... மற்றுத் திராவிட ஆரியக் கலப்பிற் றோன்றிய பார்ப்பனரோ, ஏனை வகுப்பினர் அனைவரையும் அடிமைகள், வைப்பாட்டி மக்கள் எனப் பொருள் படுஞ் சூத்திரர் என்னும் இழி சொல்லால் மிக இழித்துப் பேசி, அவரைத் தொடுதலும் ஆகாது, தாம் உணவருந் துங்கால் அவர் தம்மைக் காண்டலும் ஆகாது என ஒரு பெருங் கட்டுப்பாடு வகுத்துக் கொண்டு தாமே இம்மாநிலத் தேவர்கள் எனத் தம்மைத் தாமே உயர்த்துச் சொல்லித் தமக்குப் பிறப்பினாலேயே பெரும் பெருமை தேடுபவராயிருக்கின்றனர். இத்தன்மையினரான இத்தென்னாட்டுப் பார்ப்ப னரன்றி வேறு எவர்தாந் தாம் இறைவனது முகத்தினின்றும் பிறந்தவர் என்று சிறிதும் அச்சமின்றி அத்தனை நெஞ்சழுத்தத்துடன் கூறத் துணிவர்? அதனை யயண்ணிப் பார்க்குங்கால் தென்னாட்டுப் பார்ப்பனர் எவரோ அப் புருட சூத்தப் பதிகத்தைப் படைத்து இருக்கு வேதப் பத்தாம் மண்டிலத்தில் நுழைத்து விட்டாரென்பது திண்ணமாய்ப் பெறப் படுகின்றது
என்று தென்னாட்டுப் பார்ப்பனர் பற்றிக் கூறி சவுக்கடி கொடுத்துவிட்டார். பேராசிரியர் செயராமன் அவர்களும் தோழர் மணியரசன் அவர்களும், என்னடா இவன் பெரியாரை துணைக்கழைப்பான் என்று நினைத்தோம். ஆனால் இவன் மறைமலையடிகளை அல்லவா அழைத்துவிட்டான் என்று நினைக்கலாம்.
நான் விட்டாலும் மறைமலையடிகள் இவர்களை விடத் தயாராக இல்லை. இன்னும் மேலே தொடருகிறார்,
நடுநாட்டில் திராவிடருடன் கலந்து தோன்றிய திராவிட ஆரியரில் ஒரு சிறு கூட்டத்தாரே மெல்ல மெல்லத் தென்னாடு போந்தவராவார். எங்ஙனமெனிற் கூறுதும், அத் திராவிட ஆரியர் தம்மைப் பார்ப்பனரென உயர்த்துப் பேசிக் கொண்டு, அவ்வுயர்வுக்கு ஒரு பெருந்துணையாகத் திராவிடப் பொது மக்களுக்குத் தெரியாத ஆரிய மொழியைத் தேவர் களாகிய தமக்குரிய தேவமொழியாகப் பயின்று , அம் மொழியில் திராவிட முனிவரால் தொகுத்து வைக்கப்பட்ட இருக்கு, எசுர், சாமம், அதர்வம் முதலான வேதங்களை ஓதியும், பழைய மிலேச்ச, ஆரியர் செய்து போந்த உயிர்க்கொலை, கட்குடியயாடு கூடிய வெறியாட்டு வேள்விகளைத் தாம் திராவிட மன்னர் பாற் கரவாயப்பெற்ற பெரும் பொருள் கொண்டு ஆயிரக் கணக்காக வேட்டும் வடக்கேயுள்ள நடுநாடுகளில் அருளொழுக்கத்திற்கு மாறான கொடுஞ் செயல்களைப் பரவச் செய்து வந்தனர். அது கண்டு மனங்குழைந்த தனித்தமிழ் முனிவர்களான கபிலரும் பதஞ்சலியும் முறையே சாங்கியமும் யோகமும் இயற்றி அருளும் அன்புமே இறை வன் குணங்கள். அருளும் அன்பும் உடையாரே இறைவன்றிருவருளைப் பெறுவர். உயிர்க்கொலையுங் கட்குடியும் மக்களை இம்மை மறுமையிலும் நிரயத்திற் வருத்துந் தீவினைகளாமென அறிவுரை கூறி எங்கும் அறி வொளி யினைப் பரவச் செய்வாராயினர்.
மறைமலையடிகள் 1916 ஆம் ஆண்டு தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கினார். பெரியார் அவர்கள் 1925-க்கு பின் தன்மான இயக்கத்தைத் தொடங்கினார். 1892- இல் ஜான். ரெத்தினம் அவர்கள் திராவிடர் கழகம் என்ற அமைப்பைத் தொடங்கினார். பண்டிதர் அயோத்திதாசர் ஆதி திராவிட மகாசன சபை என்ற அமைப்பைத் தொடங்கினார். திராவிட என்ற சொல்லை திரு.ஜான் ரத்தினம் அவர்களும் பண்டிதர் அயோத்திதாசரும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை விளிப்பதற்காகப் பயன்படுத்தினர்.
பின்பு 1912- இல் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் குறியீடாக டாக்டர் நடேச முதலியார் அவர்கள் திராவிட சங்கம் தொடங்குகிறார்.
1916 இல் பிட்டி. தியாகராயர் அவர்களாலும் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களாலும் பார்ப்பனரல் லாதார் இயக்கம் என்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டது. திராவிடன் என்ற பெயரில் இதழும் தொடங்கப்பட்டது. இதன் தாக்கமாக பெரியாரும் திராவிடர் என்ற குறியீடைப் பயன்படுத்துகிறார்.
தன்னுடைய தொடக்கக் கால பரப்புரைகளில் மறைமலையடிகளின் பண்டைக் கால தமிழரும் ஆரியரும் என்ற நூலை கையில் வைத்துக் கொண்டு பெரியார் பேசினார் என்று வெல்லும் தூயத் தமிழ் ஆசிரியர் .தமிழமல்லன் அவர்கள் கூறியுள்ளார்.
வரலாற்று போக்கில் பெரியார் ஆழ்ந்துணர்ந்து பயன்படுத்திய திராவிடர் என்ற சொல்லை தமிழர் மீது மட்டுமே திணித்தார் என்கிறார் மணியரசன். காழ்ப்புணர்ச்சி யின் காரணமாகவே பெ.மணியரசன் கூறுகிறார் என்பதை மெய்ப்பிக்க யாழ்ப்பாண தமிழறிஞர் .சி.கந்தையா பிள்ளை அவர்களை சான்று கூற அழைப்போம்.
(தொடரும்)

- கவி

No comments: