Friday, October 17, 2014

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை – 5

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை – 5

தோழர்கள் எஸ்.வி.இராசதுரை - .கீதா அவர்களின் ஆய்வு:

தனித்தமிழ் நாடு என்ற கோரிக்கையை பெரியார் எப்படி உருக்கொண்டார் என்பதற்கு தோழர்கள் எஸ்.வி.இராசதுரை அவர்களும் தோழர் கீதா அவர்களும் பெரியார் சுயமரியாதை சமதர்மம் என்னும் நூலில் பின்வருமாறு விளக்குகிறார்கள்;
தனித்தமிழ் மாநிலக் கோரிக்கை என்பதும் தனித் தமிழ்நாடு, திராவிடநாடு கோரிக்கைகளும் அரசியல் ரீதியாக வலுப்பட்டதும் ஓரளவு மக்களாதரவைப் பெற்றதும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது தான். நாட்டுப் பிரிவினை என்ற கருத்தைப் பெரியார் தனது 15 ஆண்டுகாலப் பார்ப்பனீய எதிர்ப்புப் போராட்டத்தின் நீட்சியாகவே உருவாக்கினார். பெரியார் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பல தமிழ் தேசிய நீரோட்டங்கள் சங்கமித்தன என்றாலும் அந்த நீரோட்டங்களுக்கான கிரியா ஊக்கியாகப் பெரியார்தான் விளங்கினார்.
பெரியார் தனித்தமிழ் நாடு பற்றிப் பேசிய பிறகுதான் 1937 அக்டோபரில் சென்னைப் பொதுக்கூட்டமொன்றில் பேசிய சோமசுந்தர பாரதியார், தமிழ்ப் பண்பாட்டைக் காப்பதற்காகத் தமிழ் மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் அதற்கு உகந்த தருணம் என்றும் பேசினார். 12.10.1937 இல் திருநெல்வேலி தமிழ்ப் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் தமிழறிஞர் எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை தலைமையில் சோமசுந்தர பாரதியாரும் சி.என். அண்ணாதுரையும் (அண்ணா) சொற்பொழிவாற்றிய இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்திலும் தமிழ் மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (தினமணி 18.10.1937, 17.10.1996)
12.11.37இல் திருவையாறு செந்தமிழ்க் கல்லூரி சார்பில் உமாமகேசுவரன் பிள்ளை தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய சோமசுந்தர பாரதியார் ஆந்திர மாகாணத்தைக் காங்கிரசார் பிரித்து விடத் தீர்மானித்தது போல் தமிழ் மாகாணத்தையும் பிரித்துவிட ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவது அவசியமென்றும் வற்புறுத்தினார். (கு.. 21.11.37). திருச்சியில் 1937 டிசம்பர் 26 இல் நடைபெற்ற மூன்றாவது சென்னை மாகாணத் தமிழ் நாட்டில் தமிழ் மாகாணம் ஒன்று தனியாகப் பிரிக்க வேண்டும் என அது சம்பந்தமான அதிகாரிகளை இம் மகாநாடு கேட்டுக் கொள்கிறது என்ற தீர்மானம் சி.டி.நாயகத்தால் கொண்டுவரப்பட்டு வழக்கறிஞர் சூர்யமூர்த்தி, கே.வி.அழகர்சாமி ஆகியோரால் ஆதரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது (கு..2.1.38).
(அம் மாநாட்டுத் தொண்டர் படைத் தலைவராக இருந்தவர் தேவநேயப் பாவாணர் (கு..19.1237). அம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய தமிழறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை (கா.சு.பிள்ளை), தமிழர்களின் பழம் பெருமை, ஆரியர் வருகையால் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகியன பற்றி ஐரோப்பிய அறிஞர் ஜில்பர்ட் ஸ்லேட்டர் கூறியதைத் தொகுத்து கூறியதுடன் தனித்தமிழ் மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தினார். (கு..2.1.38) மேற்சொன்ன மாநாட்டை நடத்துவதற்காக திருச்சியில் உமாமகேஸ்வரன் பிள்ளை தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கருமுத்து தியாகராச் செட்டியார், பண்டிதர் மீனாட்சி சுந்தரம், பண்டிதமணி பல்லவராயன், மதுரை ஆர்.கார் மேகக் கோனார், நா.மு.வேங்கடசாமி நாட்டார், சி.என். அண்ணாதுரை (அண்ணா), குஞ்சிதம், தேவநேயப் பாவாணர், திருப்பூர் சென்னியம்மாள் ஆகியோர் (கு..7.11.37).
4.12.38 அன்று காரைக்குடியில் நடந்த ராமநாதபுரம் மாவட்ட இரண்டாவது தமிழ் மாநாட்டில் சோமசுந்தர பாரதியார் தனது தலைமையுரையில் கூறினார்: நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தால் மட்டும் போதாது. அது நமக்கே உரியதா மென்பறிதல் வேண்டும். ஆங்கிலர் ஆட்சியிலும் இந்தியா, இந்திய நாடுதான். எனில், அது இந்தியருடைய உரிமையற்றதாயிருந்தது. அதுபோல் காங்கிரஸ் ஆட்சியில் மாகாணங்கள் மாகாண மொழியுடை யாருடையன என்ற அளவோடு அமையுமா? அல்லது ஒவ்வொரு மொழியுடைய மாகாணமும் அரசியல் மொழியினர்க்கே உரிமையுடையதாகப் போகிறதா? தமிழகம் தமிழருக்கே உரியதா? அல்லது படேல், நேரு, போசு முதலிய வட நாட்டாரின் ஆதிக்கத்துக்கு அடங்கி மீட்சியற்ற அன்னோர் ஆட்சிக்கடிமை நாடா?... அந்நியராட்சி குறைந்தது நமக்கு ஆட்சியுரிமை வழங்கப்பெற்ற மாகாணங்களினி நம்மவருக்கு முற்றுரிமை பேணுவது மாகாண ஆட்சிகளில் கூட மக்களுக்கு உரிமையே கிடையாது என்பது காந்தியாருள்ளிட்ட நம் தலைவர் பலரும் மந்திரியாரும் இப்போது கூறிவரும் உண்மைக்கு மாறாகும்... ஆதலால் இன்று கூட்டத்திற்கு வந்துள்ள பெரியாரும் பலரும் உளங்கலந்து பேசி நம்மவருக்கு உண்மை நலமும் குறையா முற்றுரிமையும் பேணி வளர்க்கும் வழிகளை ஆராய்ந்து வகுத்திடுக... இந்தியாவை நினைத்து நம் சொந்தத் தமிழ்நாட்டை நாமிழத்தல் ஓம்ப வேண்டுமா? சாவா மருந்து தேடி நம் தமிழ்ச் சமுதாய வாழ்வு பேணுக. தமிழும் தமிழகமும் தலைநின்றோங்கி வீறு பெறுக.(கு..18.12.38).
ஆனால் அம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட தமிழ்நாடு பற்றியது அல்ல. மாறாக தன்னாட்சி பெற்ற தமிழகமாகும்.
தமிழ்நாடு தனி மாகாணமாகப் பிரிக்கப்பட்டு தமிழ் அரசாங்க மொழியாக்கப்படல் வேண்டும். அகில இந்திய காரியங்களைத் தவிர மற்ற முழு அதிகாரங்களும் அந்தந்த மாகாண மக்களிடமே யிருக்க வேண்டும். (குஅ, 25.12.38,N.A.238).
திருச்சியிலிருந்து புறப்பட்ட இந்தி எதிர்ப்புத் தொண்டர் படை (செஞ்சட்டையணிந்த 100 பேர்) 11.9.38 அன்று சென்னைத் திருவல்லிக்கேணி கடற்கரையை அடைந்தனர். அன்று மாலை 5.30 முதல் நள்ளிரவு வரை நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில்தான் (ஒன்றரை இலட்சம் பேர் கலந்து கொண்டதாக குடிஅரசு கூறியது). தமிழ்நாடு தமிழருக்கே என்ற புகழ்மிக்க அரசியல் முழக்கம் முதன் முதலாக எழுப்பப்பட்டது. ஆனால் அது குறித்து விடுதலையில் எழுதப்பட்ட தலையங்கம் (குடிஅரசு 25.9.38 இல் மறுபிரசுரம் செய்யப்பட்டது). அம்முழக்கம் இந்தியாவிலிருந்து பிரிந்த தனித் தமிழ்நாட்டையல்ல. மாறாக அன்றைய சென்னை மாநிலத்திலிருந்து தமிழ் மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டு இந்தியக் கூட்டாட்சியில் இயங்க வேண்டும் என்பதைதான் குறித்தது.
1938 இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் உருவானது தனித் தமிழ் மாகாண கோரிக்கை தான் என்பதையும் தனித்தமிழ் நாடு கோரிக்கையல்ல என்பதையும் தோழர் எஸ்.வி.இராசதுரை அவர்களும் தோழர் . கீதா அவர்களும் விரிவாக மேலே விளக்கினார்கள்.
தமிழ்நாடு தமிழருக்கே என்ற தலைப்பில் நூல் எழுதிய .சக்திவேல் போன்றவர்களுக்கு இது ஒரு சிறந்த விளக்கமாகும். தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை நாவலர் சோமசுந்தர பாரதியார் தான் முதலில் முன்வைத்தார் என்றும் பெரியார் அதை தான் எடுத்துக் கொண்டார் என்றும் அபத்தமாக .சக்திவேல் அவர்கள் தன்னுடைய குறுவேட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், வழக்கறிஞர் சக்திவேல் அவர்கள் தனது குறுவேட்டில் திராவிடம் என்பது மாயை என்று கூறியவர் சேர, சோழ, பாண்டிய நாட்டைக் குறிக்கக் கூடிய விற்கொடி, புலிக் கொடி, மீன்கொடியை நூல் அட்டையில் வடிவமைத்துள்ளார். சேரர் என்ற அரசனையும் சேர நாட்டையும் விற்கொடியையும் நீங்கள் கொண்டு வந்தாலே திராவிடம் என்பது மாயை அல்ல என்பது விளங்கி விடும். அப்போதைய சேர நாடு இப்போதைய மலையாளப் பகுதி. மேலும் தமிழ்நாடு தமிழருக்கே என்று தலைப்பிட்டுள்ளாரே, ஒரு வேளை இவர் தனிநாடு கேட்கிறாரா என்றால் அதுவும் இல்லை.
.பொ.சி அவர்கள் கூட பிரிவினை வரலாறு என்ற தலைப்பில் நூல் எழுதியுள்ளார். என்னமோ தனித் தமிழ் தமிழ்நாடு கேட்பது போன்று புள்ளி விவரங்களையெல்லாம் கொடுத்திருப்பார். ஆனால் இறுதியில்பாரத தேசத்தில் ஒரு மாகாணமாக இருப்பதற்குதான் இவ்வளவு எடுப்பு. இதனால் தான் .பொ.சி.யின் வழித்தோன்றல் வழக்கறிஞர் .சக்திவேலும் மயிர் கூச்செரியும் வகையில் தலைப்பிட்டுள்ளார். இங்கிருக்கிற நாயுடு என்ற சாதியினரை தெலுங்கர் என்று கூறி அவர்களையும் மலையாளிகளையும் வெளியே போகச் சொல்லுகிறார். அப்படியென்றால் கேரளாவிற்கு பிழைப்புத் தேடியும் அங்கேயே வாழ்கின்ற தமிழர்களையும் மற்றும் கர்நாடகாவில் வாழ்கின்ற தமிழர்களையும் ஆந்திராவில் வாழ்கின்ற தமிழர்களையும் அவர்கள் விரட்டினால் இவர் நிலை என்ன?
நாயுடுகளை தெலுங்கர் என்று கூறி வரும் இவர்கள், வீட்டில் உருது பேசுவோரும் தங்கள் பெயர்களை இஸ்லாத்தோடு சார்ந்து வைப்பவர்களுமாகிய இஸ்லாமியர்களைப் பற்றி என்ன சொல்வார்கள்?
ஏற்கனவே கூறியுள்ளது போல், பெரியார் அவர்கள், திராவிட நாட்டில், முஸ்லிம்கள், ஆதிதிராவிடர்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள் ஆகியவர்களும் திராவிடர்களே ஆனதால் அவரவர்கள் சமயம், ஆத்மார்த்தம் என்பவற்றின் உணர்ச்சி இன்றுள்ளது போலவே அவரவர்கள் இஷ்டப்படி இருக்கும் என்று கூறுகிறார்.
தனித்தமிழ் நாடு கோரிக்கை எவ்வாறு உருப்பெற்றது என்பதை தோழர் எஸ்.வி.இராசதுரையும் தோழர் .கீதா அவர்களும் பின்வருமாறு விளக்குகின்றனர்;
‘1938 அக்டோபரில் சேலத்தில் நடந்த இந்தி எதிர்ப்புக் கூட்டமொன்றில் பேசிய பெரியார், பார்ப்பனர்கள், வடநாட்டவர் ஆகியோரின் சுரண்டலிலிருந்து தமிழர்களைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி, இந்தியாவிலிருந்து தனியாகப் பிரிவதுதான் என்றும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற போராட்டத்தைத் தமிழர்கள் இறுதிவரை நடத்த வேண்டும் என்றும் கூறினார். (ஹி.பு.238). குடிஅரசு 23.10.38 இல் வெளி வந்த தமிழ்நாடு தமிழருக்கே என்ற கட்டுரை, தமிழர்கள் தங்களை இழிவு நிலையில் வைத்திருக்கும் வருணதர்மம், இந்து மதம், இந்திய தேசீயம் ஆகிய வற்றிலிருந்து விடுதலையடைய வேண்டும் என்று கூறியது. தமிழ்நாட்டுத் தொழிற் துறையும் வர்த்தகமும் வங்கி (வட்டித்) தொழிலும், பம்பாய், ஷோலாப்பூர், அகமதாபாத், பஞ்சாப் முதலாளிகள், மார்வாரிகள், சிந்திகள், பார்சிகள், குஜராத்திகள், மூல்தானிகள் ஆகியோரின் ஆதிக்கத்திலுள்ளன என்றும் தமிழ் முதலாளிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், ஏழைகள் ஆகிய எல்லோருமே சுரண்டப்படுகிறார்கள் என்றும் செல்வம் வட நாட்டுக்குச் செல்வதுடன் தமிழர் நலனுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறியது. இதில் மேல் நாட்டானுக்கும் வட நாட்டானுக்கும் வித்தியாசமில்லை என்று கூறிய அக்கட்டுரை தமிழ் நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச் சின்னா பின்னமாக்குங்கள்! தமிழ்நாடு தமிழருக்கே என்ற வாசகங்களுடன் முடிவடைகிறது. (குஅ 23.10.38, ஈவெரா சிந்தனைகள் 658-660). தமிழ் மாநிலப் பிரிவினை முழக்கம், தனித்தமிழ்நாடு கோரிக்கை முழக்க மாக மாறியதைக் காண்கிறோம்.
தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தின் வரலாற்றுச் சூழலை விளக்கிய தோழர் எஸ்.வி.இராசதுரை அவர்களும் தோழர் . கீதா அவர்களும், திராவிடம் என்ற சொல் பற்றியும் திராவிடர் என்ற சொல் பற்றியும் கீழ்க்கண்டவாறு அலசுகின்றனர்,
இங்கு திராவிடம் என்ற சொல் பற்றிய சில செய்திகளைக் கூறுவது அவசியமாகிறது. அச்சொல்லை உருவாக்கியவர்கள் பெரியாரோ, சுயமரியாதை இயக்கத்தினரோ, திராவிடக் கழகத்தினரோ, தி.மு..வினரோ, ஏன் நீதிக்கட்சியினரோ கூட அல்ல. இது குறித்து அறிஞர் இராம.சுந்தரம் கூறுவதாவது:
கால்டுவெலுக்கு முன்பே திராவிட என்கிற சொல் தென்னிந்தியர்களை/தென் மொழிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குமரிலபட்டர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு) திராவிட பாஷைகள் பற்றிக் குறிப்பிடுகிறார். (tadyatha dravidadi bhasayam eva.... So in the Dravidia and other languages) மனுஸ்மிருதியில் திராவிட இனம் பற்றிய குறிப்புண்டு. கிரியர்சன் (linguistic Survey of India. Vol.1), தனக்குத் தெரிந்த மட்டில் ஹாட்சன் (Dr. Hodgson) என்பவர்தான் Dravidian என்ற சொல்லை முதன் முதலாகத் தென்னிந்திய மொழிகளை குறிக்கப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார். 1816 இல் வெளியான A.D.Camp wellஇன் தெலுங்கு மொழி இலக்கண நூல் முன்னுரையில் எல்லீஸ் என்பார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, மால்டோ முதலிய மொழிகளைத் தென்னிந்திய மொழிகள் (dialects of South India) என்று குறிக்கிறார். சமஸ்கிருதம் தொடர்பாக நூல் எழுதிய ஆசிரியர்களும் திராவிட என்ற சொல்லை இனம்/மொழி தொடர்பாகக் குறித்தனர். 1854 வரை இது தொடர்கிறது. எனவே Caldwell coined the term என்று சொல்லுவதை விட, அவரே கூறுவது போல, The word I have chosen is Dravidian from Dravida, the adjectival form of Dravida’ என்பது பொருந்தும். எனினும், இந்தச் சொல்லை திராவிட என்ற சொல்லை- வரையறுத்த பொருளில், பயன்படுத்தி உலகெங்கும் பரவச் செய்த பெருமைக்குரியவர் கால்டுவெல் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.
கேரள அறிஞர் டி.கே.ரவீந்தரன் எடுத்துக் காட்டியுள்ளது போல கால்ட்வெலின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள சில கருத்துகள் அவரே எதிர்பார்த்திராத பண்பாட்டு, சமூக, அரசியல் உணர்வுகளை ஏற்படுத்தியது. தென்னிந்திய மொழிகள் பலவற்றை அவர் திராவிட மொழிகள் என வரையறுத்தது மட்டுமின்றி, தமிழர்கள், தாங்கள் பார்ப்பனர்களால் சூத்திரர்கள் எனறு அழைக்கப்பட்டு வந்ததை மறுதலித்து தங்களைத் தமிழ்நாட்டில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள திராவிட சாதி அடையாளத்தைக் கொண்டே குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்றார். இறையியல் அறிஞர் ஜி.யு.போப் மட்டுமின்றி ஜே.எச்.நெல்சன், மவுண்ட் ஸ்டூவர்ட், எல்பின்ஸ்டன் கிராண்ட் - டஃப் போன்ற ஆங்கிலேய அதிகாரிகளும் கூட தமிழர்களையும் தமிழ் மொழியையும் குறிக்க திராவிடர், திராவிடம் என்ற சொற்களைப் பயன்படுத்தினர். பேராசிரியர் பி.சுந்தரம் பிள்ளை, ஜே.எம். நல்லசாமி பிள்ளை, டி. பொன்னம்பலம் பிள்ளை, வி.கனகசபை பிள்ளை, சோமசுந்தர பாரதியார், எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, மு.சீனிவாச அய்யங்கார், ஜே.பி.டி. டேவிட், மறைமலையடிகளார் முதலிய தமிழறிஞர்கள், நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பே திராவிடம், திராவிடர் என்ற சொற்களை மொழி, மரபின அடிப்படையில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்ப்பண்பாடு, தமிழர் நாகரிகம் ஆகியவற்றைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தினர்.
மேற்சொன்னவர்களில் மு. சீனிவாச அய்யங்கார் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே திராவிடம் என்பதை ஆரிய -பார்ப்பன மேன்மைக்கும் ஆதிக்கத்துக்கும் எதிரான கருத்தாக்கமாகப் பயன்படுத்தினர். ஆரியம் - திராவிடம் என்ற எதிர்வு நிலைகளை நீதிக் கட்சியிலிருந்த தமிழர்கள் மட்டுமல்லாது அக்கட்சிக்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட சென்னை மாகாணச் சங்கத்திலிருந்த பார்ப்பனரல்லாத தமிழர்களும் கூடப் பயன்படுத்தினர் (Irschik, 277-289). தமிழ் மாவட்டங்களில் இருந்த நீதிக்கட்சிக் கிளைகள் திராவிட சங்கங்கள் என அழைக்கப்பட்டன (கேசரி,60). நீதிக்கட்சியின் அதிகாரபூர்வமான தமிழ் ஏட்டிற்கும் திராவிடன் என்ற பெயரே இடப்பட்டது.
தமிழர்களின் மொழி, பண்பாட்டு, மரபின, நாகரிக அடையளக் குறிப்புச் சொற்களாக திராவிடம், திராவிடர் ஆகியன நீதிக்கட்சியிலிருந்த தமிழர்களால் பயன்படுத்தப்பட்டன. எடுத்துக் காட்டாக , 1918 இல் மதுரையில் நடந்த ஒரு பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் பேசிய தங்கவேலு பிள்ளை என்ற நீதிக் கட்சி உறுப்பினர், பண்டைய, வரலாற்றுப் புகழ் பெற்ற நகரமான மதுரை, திராவிட நாகரிகத்தின், திராவிட இலக்கியத்தின் தொட்டில் என்றும் திராவிடர்களின் முன்னேற்றமும் வளர்ச்சியும் இந்தத் தொன்மையான நகரத்தின் பொது வாழ்க்கையின் வளர்ச்சியுடனும் மேம்பாட்டுடனும் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த நகரம் நமது சமுதாயத்தின் சமூக, கல்வி, அரசியல் வளர்ச்சியுடன் இருப்பிடமாக இருந்து வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார் (Irschik, 289). நீதிக் கட்சியின் பார்ப்பன எதிர்ப்புக் கருத்தியலில் திராவிடம் என்பது தொடர்பான மொழியியல், பண்பாட்டு, மரபினச் சொல்லாடல்கள் இடம் பெற்றிருந்த போதிலும், நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்பிருந்தே தமிழறிஞர் களிடையே செல்வாக்குச் செலுத்தி வந்த அளவுக்கோ நீதிக்கட்சியிலிருந்த தமிழ் உறுப்பினர்களிடையே செல்வாக்குச் செலுத்தி வந்த அளவுக்கோ அக்கட்சியிலிருந்த பிற மொழியினரிடையே அவை செல்வாக்குச் செலுத்த வில்லை. 1917 இல் சென்னையில் நடந்த முதல் நீதிக்கட்சி மாநாட்டில் தலைமையுரையாற்றிய பிட்டி தியாகராயர், திராவிட நாகரிகம், திராவிடர் என்று பேசுகையிலும் வட அவற்றைத் தமிழ் நாகரிகம், தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் ஆகியவற்றுடனேயே தொடர்புபடுத்தியது குறிப்பிடத்தக்கது:
திராவிட நாகரிகத்தின் மேதமை, மனிதனுக்கு மனிதன் பிறவியிலேயே வேறுபாடு இருப்பதை ஏற்றுக் கொள்வதில்லை. திராவிடச் சிந்தனையின் தலைவர்களான திருவள்ளுவர், அவ்வை, கம்பர் ஆகியோர் கடவுளின் தலையிலிருந்து பிறந்தவர்களாக உரிமை பாராட்டுவதில்லை... பிறப்பால் ஏற்படும் வேறுபாட்டை அறிமுகப் படுத்தியவர்கள் ஆரியர்கள் தான். அவர்கள்தான் அந்த வேறுபாட்டை விரிவு படுத்தி வருணாசிரம தர்ம அமைப்பை உருக்கினர் (Irschik, 289).
நீதிக்கட்சியிலிருந்த தெலுங்கர்களில், மரபின அடிப்படையில் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோரை உள்ளடக்கும் வகையில், திராவிடர் என்ற சொல்லைப் பார்ப்பன எதிர்ப்புக்குப் பயன்படுத்தியவர்கள் கே.வி.ரெட்டி நாயுடு போன்ற விதிவிலக்கான ஒரு சிலரே (Irschik, 276). அவரும் கூட காஞ்சிபுரத்தில் 1938 பிப்ரவரியில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேசுகையில், அம் மாநாட்டில் பேசிய நீதிக்கட்சி மலையாளியான கிருஷ்ணன் நாயரைப் போலவே, குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் ஆகியவற்றின் சிறப்பைப் பற்றியே குறிப்பிட்டார். தென்னிந்தியாவில் பேசப்படும் மொழிகளுக்கெல்லாம் மூலமொழி தமிழ்தான் என்ற கால்ட்வெல்லின் கருத்தை அவர்கள் ஒப்புக் கொண்டிருந்ததால் தமிழை அவர்கள் உயர்வாகக் கருதினர் .
தென்னாடு போந்த திராவிட ஆரியர் என்ற மறைமலையடிகளால் குறிப்பிடப்பட்ட பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் குடியேறியதாலும் அவர்கள் தாக்கம் தமிழ்நாட்டிலேயே அதிகம் இருந்ததாலும் பார்ப்பன எதிர்ப்புக் குறியீடாகிய திராவிடர் என்ற சொல் தமிழ்நாட்டில் அதிக வலிவு பெறத் தொடங்கியது என்றால் மிகையாகாது. எனினும் நடுநிலையில் நின்று தோழர்கள் எஸ்.வி.இராசதுரை அவர்களும் தோழர் .கீதா அவர்களும் ஆராய்ந்துள்ளார்கள். எனவே தான் அவர்கள் தங்களது ஆய்வை கீழ்க்கண்டவாறு தொடருகிறார்கள்,
எது எப்படியிருப்பினும் திராவிடம் என்பதுடன் பிற மொழியினரை விடக் கூடுதலாக அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் நீதிக்கட்சியிலும் அதற்கு வெளியிலும் இருந்த தமிழர்கள்தான். அதற்கான சமூக, பண்பாட்டுக் காரணங்களை இர்ஷிக் கூறுகிறார்:
திராவிடம் என்பது அதனுடைய மரபினப் பொருளில் மிகத் தொடக்கக் கட்டத்தில் தமிழ் மொழி பேசுபவர்களுடன் மட்டும் தான் அடையாளப் படுத்தப்பட்டது. ஏனெனில், நவீன இந்தியாவில் பேசப்படும் திராவிட மொழிகளில் மிகத் தொன்மையானது தமிழ்தான் என்று கருதப்பட்டது. திராவிடர் என்ற தகுதிக்கு உரிமை பாராட்டிக் கொள்வதில் தெலுங்கர்களுக்கு அத்தகைய ஆர்வம் ஏதும் இருக்கவில்லை. ஏனெனில், தமிழைப் போலன்றி தெலுங்கு மொழி ஏராளமான சமஸ்கிருதச் சொற்களைக் கொண்டிருக்கிறது. அக் காரணத்தால், தெலுங்குப் பண்பாடு என்பது ஆரியச் செல்வாக்கு எனக் கூறப்படுமொன்றிக்குக் கட்டுப்படாத சுயேச்சையான பண்பாடு என்று உரிமை பாராட்டிக் கொள்வதற்கான வாய்ப்பைக் குறைத்தது. மற்றொரு காரணம் என்னவென்றால் வேளாளர்களுக்கும் தமிழ்ப் பார்ப்பனர்களுக்குமிடையே இருந்த போட்டியுணர்வு, பகைமையுணர்வு ஆகியவற்றுடன் ஒப்பிடத் தக்க வகையில், ஒருபுறம் காப்புகள், கம்மாக்கள், (தெலுங்கு வேளாள (விவசாய) - சூத்திர சாதியினர் -நூலாசிரியர்கள் எஸ்.வி.இராசதுரை, .கீதா) ஆகியோருக்கும் மற்றொருபுறம் பார்ப்பனர்களுக்குமிடையில் எதிரெதிர் துருவ நிலைகள் தெலுங்குப் பகுதியில் இருக்கவில்லை. இக் காரணங்களால், தென்னிந்தியாவில் முதன்மையான திராவிட மொழிக் குழுக்கள் அனைத்தையும் சேர்ந்த பார்ப்பனரல்லாதார், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் சேர்ந்த போதிலும், திராவிடம் என்பதை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவது என்பது தமிழ்நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாதாரிடம் மட்டுமே படிப்படியாக குறுக்கப்பட்டு நின்றது (Irschik, 275-276).
பார்ப்பனரல்லாதார் இயக்கம், பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியுள்ளவர்களிற் மிகப் பெரும்பாலானோரைப் போலவே, இர்ஷிக்கும் அயோத்திதாசரின் திராவிட மகாஜன சபை , எம்.சி.ராஜாவின் ஆதி திராவிட மகாஜன சபை , ரெட்டைமலை சீனிவாசனின் பறையர் மகாஜன சபை போன்ற அமைப்புகளின் பார்ப்பன எதிர்ப்புப் போராட்டத்தைக் கருத்தில் கொள்வதில்லை.
அயோத்திதாசர், திராவிடம், தமிழ் ஆகிய இரண்டும் ஒரே பொருள் தருவதாகவே கருதினார். எடுத்துக்காட்டாக அவர் எழுதிய வரிகளிற் சில : .... புத்தபிரான் சகட பாஷையாம் சமஸ்கிருதத்தையும் திராவிட பாஷையாம் தமிழையும் வரிவடிவி லியற்றி திரிபேத வாக்கியங்களையும் அதன் உபநிட்சயார்த் தங்களையும் வரைந்துள்ள போதினும் ஒவ்வோர் புத்த சங்கங்களிலுமிருந்த சமணர்களும் பிராமணர்களும் புத்த தன்மங்களை பெரும்பாலும் சகட பாஷையில் உபயோகித்து வந்தார்கள் (ஒரு பைசாத் தமிழன், 24.6.1908). சாதி பேதமற்ற திராவிடர்களாம் சுதேசிகளின் திருத்தம் (தமிழன், 2.12.1908). தமிழ் நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோரை திராவிடர் என அயோத்தி தாசரும் ஆதி திராவிடர் என எம்.சி.ராஜா, வீரையன் போன்றோரும் அடையாளப்படுத்தினர்.
எனவே திராவிடம், திராவிடர், திராவிட நாகரிகம் என்பன தமிழர்களால் உருவாக்கிக் கொள்ளப்பட்ட மொழி, பண்பாட்டு, சமூக, மரபின, அரசியல் குறிப்புச் சொற்களே என்பதும் இந்தி எதிர்ப்புப் போராட்டக் கால கட்டத்தில் முகிழ்த்த தமிழ்த் தேசிய அரசியலுக்கான குறிப்புச் சொல்லாக அமைந்தன என்பதும் அத்தமிழ்த்தேசிய அரசியலுமே ஏறத்தாழ 50 ஆண்டுகாலப் பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களின் அளவு ரீதியான வளர்ச்சி பண்புரீதியான பாய்ச்சலாக மாறியதன் வெளிப்பாடே என்பதும் தமிழர்களின் சுய அடையாளத்தையோ தேசிய உணர்வையோ நசுக்குவதற்காக நீதிக்கட்சியிலிருந்த தெலுங்கர்களாலோ உருவாக்கப்பட்டவையல்ல என்பதும் தெளிவு. இன்னும் சொல்லப்போனால் நீதிக்கட்சியிலிருந்த பார்ப்பனரல்லாத தமிழர்களிடம் இருந்த தமிழ் மொழி உணர்வுக்கும் தமிழ் மொழியின் அடிப்படையில் ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வேட்கைக்கும் ஈடான தெலுங்கு மொழி வேட்கையும் அம் மொழியின் அடிப்படையிலான அடையாள வேட்கையும் தெலுங்கர்களிடையே இருக்கவில்லை. அவர்கள் பிரதேச அடிப்படையிலான அடையாளத்தையே - அதாவது ஆந்திரர் என்பதையே விரும்பினர். நீதிக்கட்சியிலிருந்த (அதற்கு வெளியிலுமிருந்த) தமிழர்களைப் போலவே, பெரியாரும் திராவிடம் என்ற குறிப்புச் சொல்லை முதன்மையாக தமிழர்களையும் தமிழ்மொழி, பண்பாடு ஆகியவற்றையும் மட்டுமே குறிக்கப் பயன்படுத்தினார்.
(தொடரும்)

- கவி

No comments: