Friday, October 17, 2014

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 8

பெரியார் - தமிழ்த் தேசத் தந்தை - 8

ஆங்கில மொழி - மொழிஞாயிறு பாவாணரின் ஆய்வு:

பெரியாரின் மொழிப் பார்வை குறித்து தோழர் மணியரசன் அவர்கள் கூறியுள்ளவற்றைக் கவனிப்போம்,
மொழிகுறித்த பெரியாரின் பார்வை மொழியல் அறிவியலுக்கு முரணானது. ஆங்கிலத்தைப் பகுத்தறிவு மொழி என்றும் அறிவியல் மொழி என்றும் கருதி அதைப் பயிற்று மொழியாகவும் வீட்டு மொழியாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவர்களுடன் நெருக்கமாக இருக்க பார்ப்பனர்கள் ஆங்கில மொழியைக் கற்று தேர்ச்சிப் பெற்றனர். ஆங்கில வழிக் கல்வியிலும் சிறந்து விளங்கினர். இதன் பொருட்டே தமிழர்களை மேம்படுத்தும் வகையில் அவருடைய பாணியில் பெரியார் அவர்கள், வேலைக்காரியிடத்தில்கூட ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றார். உடனே தமிழ்ப்புலவர்களும் போலித் தமிழ்த் தேசியவாதிகளும் பெரியார் கன்னடியர் என்பதால் தமிழை இகழ்கின்றார் என்று பொய்ப் பரப்புரைச் செய்தனர். இங்கு ஆங்கிலத்தின் இன்றியமையாமை குறித்தும் இருமொழிக் கொள்கைக் குறித்தும் தேவநேயப் பாவாணர் அவர்கள் தனது மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை என்னும் நூலில் தெளிவாக பின்வருமாறு விளக்குகிறார்:
ஆங்கிலம் ஓர் அறிவியல் மொழியாதலால், இந்தியரனைவர்க்கும் அறிவு புகட்டி, காந்தியடிகளும் நேருவும் போன்ற தேசத் தொண்டரையும் தலைவரையுந் தோற்றுவித்து, விடுதலைப் போராட்டத்தைத் தூண்டி, விடுதலையும் பெற்றுத் தந்தது. இந்தியர் ஆங்கிலத்தைக் கற்கவுங் கேட்கவுங் கூடாதென்றும், கற்பினுங் கேட்பினும் நாவையறுக்கவும் காய்ச்சிய ஈயத்தைக் காதில் வார்க்கவும் வேண்டுமென்றும் ஆங்கிலர் கோட்பாடு கொண்டிருந்திருப்பின் காந்தியடிகளும் நேருவும் தோன்றி யிரார்; இந்தியா விடுதலை பெற்றிருக்காது.
இனி, ஆங்கிலத்தால் மட்டுமின்றி ஆங்கிலாராட்சியினாலுதாம் இந்தியா பெருநன்மை பெற்றது.... இற்றைக் கல்வியெல்லாம் அறிவியலும் (Science) கம்மியமு ( Technology) மாதலால், ஆங்கிலம் அறிவுத்துறையில் இந்தியர்க்கு இன்றியமையாததாகும். ஆங்கிலம் அறிவியல் மொழியும் உலக மொழியுமாயிருப்பதுடன், எதிர்காலத்தில் ஒரே உலகப் பொது மொழியாகும் வாய்ப்புமுள்ளது என்பதை அறிதல் வேண்டும்.
ஆங்கிலம் தானே இங்கு வந்திராவிடின், இந்தியர் மேனாடு சென்று வருந்தித் தேடி அதைக் கண்டுபிடிக்கும் நிலைமை நேர்ந்திருக்கும். அது தானே இங்கு வந்ததனால், வலிய வந்தாற் கிழவி என்பது போல், அதன் அருமை பெருமை அறியப்படாதுள்ளது. இற்றை யறிவியற் கெல்லாம் அடிப்படையான நீராவி வலிமையும் மின்னாக்கமுங் கண்டுபிடிக்கப்பட்ட நாட்டு மொழியாகிய ஆங்கிலம், இந்தியர்க்குக் கிடைத்தது, இறைவன் பேரருள் என்றும், ஆங்கிலர் வன்கொடையெயன்றும் வலிய வந்த வானமுதம் என்றும் போற்றத் தக்கதாகும்.
.... கல்லூரிகளில் மட்டுமின்றிப் பள்ளிகளிற் பணியாற்றும் தமிழாசிரியர்க்கும் ஓரளவு ஆங்கிலக் கல்வித் தகுதி வேண்டியிருப்பதனால், ஆங்கிலத்தின் இன்றியமையாமையை மேற்கொண்டு விளக்க வேண்டுவதில்லை.
தமிழ்நாடு இந்தியை எதிர்த்து இருமொழித் திட்டத்தையே மேற்கொள்வதால், அதற்கும் ஆங்கிலத் துணை இன்றியமையாததாகும். ஆங்கிலம் நீங்கி விட்டால், இந்தி உடனே அந்த இடத்தை இணைப்பு மொழி அல்லது பொது மொழியென்னும் பெயராற் பற்றிக் கொள்ளும். அதற்காகவே அடி முதல் முடி வரை எல்லாக் கல்வியையும் நாட்டு மொழிகளில் நடத்துமாறு, இந்தி வெறியர் மிகுந்த நடுவணரசு ஊக்கியும் வற்புறுத்தியும் வருகின்றது. தாய்மொழிப் பற்று வெறியளவு விஞ்சிவிடின், ஆங்கிலப் பற்றுத் தானாக அகன்றுவிடுமென்பது அதன் கருத்து. இதன் மருமத்தை அறியமாட்டாத சில தமிழாசிரியரும், தம்மைத் தலைசிறந்த தமிழ்ப் பற்றாளராகவும் தமிழ்க் காவலராகவும் காட்டல் வேண்டி, தமிழ் ஒன்றே எல்லா நிலையிலும் கல்வி வாயிலாக இருத்தல் வேண்டுமென்று தம்பட்டமடித்து வருகின்றனர்.
தமிழும் (தாய்மொழியும்) ஆங்கிலமும் ஒருங்கே கல்வி வாயிலாக இருப்பதனால், தமிழுக்கு ஒரு கேடுமில்லை. தமிழும் தழைத்தோங்கும். வெளிநாடு செல்பவர்க்கும் ஆங்கிலவறிவாற் பிழைப்பவர்க்கும் ஆங்கிலம் பயன்படும்.
ஓர் அயன் மொழியைக் கற்பதற்குச் சிறந்தவழி பேச்சுப் பழக்கமே. ஆங்கிலம் கல்வி வாயிலாக இருப்பின், பேசிப் பழக மிகுந்த வாய்ப்புண்டு. அதனால் ஆங்கிலத்தில் விரைந்தும் பிழையின்றியும் பேசும் ஆற்றல் பெறலாம். ஆங்கிலர் காலத்துப் பட்டந்தாங்கியர்க்கும் இக்காலத்துப் பட்டந்தாங்கியர்க்கும் ஆங்கிலப் பேச்சாற்றலிலும் எழுத்தாற்றலிலும் உள்ள வேற்றுமை, இதை வெள்ளிடை மலைபோல் தெள்ளிதிற் காட்டும். அக்காலத்துச் சேர்முகக் கல்வியரும் இக்காலத்துப் பட்டந்தாங்கியர் போல் அறிவாற்றல் பெற்றிருந்தனர்.
இனி, ஆங்கிலவாயிற் கல்வியால் தமிழ்ப்பற்றுக் குறையுமென்பது மட நம்பிக்கையே. ஆங்கிலத்திற் சிறந்த மெய்ப் பொருளிற் பேராசிரியரான பி. சுந்தரம் பிள்ளையே தமிழனுக்குப் பள்ளியெழுச்சி பாடித் தமிழுணர்ச்சியூட்டியவர். மறைமலையடிகள், பூரணலிங்கம் பிள்ளை, உமாமகேசுவரம் பிள்ளை, பவானந்தம் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், கா.சுப்பிரமணியப் பிள்ளை முதலிய பல தமிழ்த் தொண்டர் ஆங்கில வாயிற் கல்வி கற்றவரே. ஆங்கில வாயிற் கல்வி கற்றவர்க்குத் தமிழ்ப் பற்றிராதென்பது, பெற்றோருடனன்றிப் பிறருடன் பேசுவோர்க்குப் பெற்றோர் மேற் பற்றிராதென்று சொல்வதொத்ததே.
இனி, தமிழொன்றே கல்விவாயிலாதல் வேண்டுமென்பார் உண்மையில் தமிழ்ப்பற்றாளருமல்லர்; அறிவியல் கம்மியக் குறியீடுகளை எல்லாம் மொழிபெயர்க்காது அப்படியே ஆள வேண்டுமென்பர். தமிழுக்கு உயிர்நாடி தூய்மையே. அதனையிழந்து விடின், தமிழ் தமிழாயிராது வேறொரு திராவிட மொழியாக மாறிவிடுமென்பதை அவர் அறியார். ஆதலால் ஆங்கிலங் கற்கும் ஆற்றலற்றவர்க்கும் உள்நாட்டிலேயே வாழ்பவர்க்கும் தமிழ் வாயிற் கல்வியும், அவ்வாற்றலுள்ளவர்க்கும் வெளிநாடு செல்பவர்க்கும் ஆங்கில வாயிற் கல்வியும் இருத்தல் வேண்டுமென்பதே பொருத்தமாம்.
இனி, ஆங்கிலங் கற்கும் ஆற்றல் பிராமணர்க்கேயுண்டு என்று மானங் கெட்டுப் பிதற்றுவாருமுண்டு. இந்துச் செய்தித் தாளில், அடிக்கடி ஆங்கிலரும் வியக்குமாறு அழகாகவும் ஆற்றலொடும் ஆங்கிலத்திற் கட்டுரை வரைந்து வரும் ஜி.கே. இரெட்டியும் அவர் போன்றார் பலரும் பிராமணரல்லாதாராயிருத்தல் காண்க. தமிழகத்தில் இந் நூற்றாண்டில் தலைசிறந்த ஆங்கில நாவலராயிருப்பவர் வயவர் .இராமசாமி முதலியாரே.
தந்தைக்கு ஆங்கிலம் கற்கும் ஆற்றலில்லாவிடினும், மகனையாவது சிறிது பெறச் செய்தல் வேண்டும். அது தலைமுறை தோறும் படிப்படியாய் வளரும்.
ஆங்கிலவாயிற் கல்வியை அறவே அகற்றிவிடின், இனி இராமசாமி முதலியார்களும் இலக்குமணசாமி முதலியார்களும், ஆர்.கே.சண்முகஞ் செட்டியார்களும், இரத்தினசமிப் பிள்ளைகளும், அண்ணாதுரைகளும் தமிழ்நாட்டில் தோன்றுவது அரிதினம் அரிதாகும்....
ஆங்கில அல்லது மேலை நூல்களைச் செவ்வையாய் மொழி பெயர்த்தலுமே, நாம் ஆங்கிலர்க்கும் மேலையர்க்கும் சமமான அறிஞராக முடியாது. அவர் அறிவை விளைவிப்பவர்; நாம் கொள்பவர். அவர் மேன்மேலும் அறிவை வளர்த்துக் கொண்டிருப்பதால், நம் மொழிபெயர்ப்பு முடியுமுன் அவர் மிக முன்னேறிவிடுவர். நாம் மொழிபெயர்த்த நூல்கள் பழமைப் பட்டும் வலிமையற்றும்போம். இருந்தவன் எழுமுன் நின்றவன் நெடுந் தொலைவு. மொழி பெயர்ப்பு நூல்களைக் கற்றபின் மேற்கொண்டு கற்கவும் நம்மிடம் நூலில்லை. கற்றுக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் நீடு பயன்படா . நாம் சப்பானியர் போற் பொறியாக்க வினை பயின்று தேர்ச்சி பெறினும், உலகச் செய்திகளறிதற்கும் உலகஞ் கற்றற்கும் உலக மாநாடுகளிற் கலந்து கொள்ளற்கும் ஆங்கில அறிவு வேண்டியுள்ளது.
ஆங்கிலரும் செர்மானியரும் இரசியரும் சப்பானியரும் அறிவியலை வளர்ப்பவரேனும், ஒன்றிய நாடுகளின் அமெரிக்கர் போல் திங்களையடையும் நிலையில் இல்லை என்பதை உணர்தல் வேண்டும். அமெரிக்கர் மொழி ஆங்கிலமே....
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு (குறள் 397)
என்று திருவள்ளுவர் பண்டு தமிழுக்குச் சொன்னது, இன்று ஆங்கிலத்திற்கே முற்றும் பொருந்தும்.
...இயன்ற வரை ஆங்கிலம் தாய்மொழி ஆகிய இரு மொழியும், இயலாத நிலையில் ஆங்கிலந் தனியாகவும், கல்வி வாயிலாகவு மிருத்தல் வேண்டும். ஆங்கில வாயிலாகவே இந்தியர் சிறப்பாகத் தமிழர், முன்னேற முடியும். ஆங்கிலத்தைப் புறக்கணிப்பவரெல்லாம் தம் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்பவரேயாவார். கல்வித் துறையிலும் மொழித் துறையிலும் இராசாராம் மோகன்ராயையே முற்றும் பின்பற்றுதல் வேண்டும்."
இப்படியயல்லாம் கூறுபவர் பெரியாரல்ல. 32 மொழிகளை ஆய்ந்தறிந்த மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர். இதைத்தான் பெரியார் தன்னுடைய பாணியில் வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றார். மறைமலையடிகளும் பெருஞ்சித்திரனார் அவர்களும் ஆங்கிலத்தைப் போற்றி வந்துள்ளனர். ஆனால் தமிழ்ப் புலவர்கள் வசதியாக இதை மறைத்து பெரியார் மீது அவதூறு பரப்புகின்றனர்.
.பொ.சி அவர்கள் வடமொழி வழிபாட்டை போற்றி வந்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இந்தி எழுத்துக்களை அழித்தபோது அவற்றை தார் கொண்டு அழித்து இந்தி திணிப்புக்கு ஆதரவாக இருந்தவர் .பொ.சி. பெரியார் 1965 இந்தி எதிர்ப்புப் போருக்கு ஆதரவு காட்டவில்லை என்று பெரியாரை வம்புக்கிழுக்கும் தமிழ்ப்புலவர்கள், தமிழ்த்தேசியத்தின் தந்தையாக தூக்கிப்பிடிக்க முயலும் .பொ.சி. பற்றி விமர்சனம் செய்ய வேண்டாமா? அப்படியானால் .பொ.சி. தமிழரா? இதற்கு தேவநேயப் பாவாணர் மேற்கண்ட நூலில் தமிழர் யார் என்ற தலைப்பில் பின்வருமாறு கூறுகிறார்:
தமிழ் நாட்டிற் பிறந்து தமிழரென்று பெயர் தாங்கினும், வட மொழியில் வழிபாட்டை விரும்புபவரும், இந்தியை இந்தியப் பொது மொழியாக ஏற்பவரும், தமிழர் முன்னேற்றத் திட்டங்களை தடுப்பவரும் தமிழராகார்.
ஏற்கனவே பெரியாரின் இடது சாரி தமிழ்த் தேசியம் என்ற நூலை எழுதிய சுப.வீரபாண்டியனுக்கு மறுப்பு கூறும் வகையில் பெரியாரின் மொழிக் கொள்கை பற்றி பெ.. எழுதினார். நான் அதற்கு அப்போது பெரியாரின் மொழிக் கொள்கை அறிவுப்பூர்வமானது என்று எழுதி அந்நூலை பெ.. அவர்களிடமே மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சியின் போது நேரிலேயே கொடுத்தேன்.
பெரியாரின் மொழிக் கொள்கை
மொழி பற்றி பெரியார் கொண்டுள்ள தெளிவான பார்வை பின்வருமாறு வெளிப்படுகிறது,
மொழி என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? என்று முதலில் கவனிக்க வேண்டும். ஒருவனுடைய கருத்தை மற்றொருவனுக்குத் தெரிவிக்க மொழி முக்கிய சாதனமாக இருந்து வருகிறது. அது ஒலி மூலமாகவே பெரிதும் இருக்கிறது. மேலும் இச் சாதனம் மனிதர்களுக்கே சிறப்புடையதாக அமைந்திருக்கிறது. மிருகங்களும் பட்சிகளும் கூட சில செய்கைக் குறிப்புகளாலும் சில வித சப்தங்களாலும் தம் கருத்தைத் தமக்குள் பரிமாறிக் கொள்கின்றன. ஆனால், அவற்றை மொழி என்று கூறாவிட்டாலும் ஒலிக் குறிப்பு என்று கூறலாம் .
இப்படி மொழி பற்றி வரையறை செய்த பெரியார், மேலும் கூறுகிறார், ஒருவரைப் பார்த்து, உங்கள் மொழி என்ன? என்று கேட்பதற்கு, நீங்கள் எந்த மொழியில் உங்கள் கருத்தைப் பரிமாறிக் கொள்கிறீர்கள்? என்றுதானே பொருள். ஆக, மேலே தெரிவித்ததிலிருந்து மொழி என்பது ஒருவருக்கொருவர் தம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உபயோகப்படுத்தும் சாதனம் என்று நன்கு விளங்குகிறது .
இப்படி பெரியார் விளக்கிய பிறகு மீண்டும் அவரைப் பார்த்து குதர்க்கமாக கேள்வி கேட்க விரும்புபவர்களுக்கு மீண்டும் இப்படி விளக்கம் கூறுகிறார், மக்களிடையே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் சாதனம் மொழி என்றால் அம்மக்களிடையே பல மொழிகள் வழங்கப்படக் காரணம் என்னவென்று நீங்கள் கேட்கலாம். பல மொழிகள் வழங்க வேண்டுமென்று யாரும் விரும்பியதில்லை என்றும், தற்போது வழங்கப்பட்டு வரும் எம்மொழியும் கற்பனை செய்யப்பட்டதல்லவென்றும் உங்களுக்கு விளக்கிக்காட்ட விரும்புகிறேன் என்றெல்லாம் கூறிய பெரியார் சில உதாரணங்களையும் கூறுகிறார், அதாவது, யாழ்ப்பாணத்தான், அவர்கள் அப்பொழுதே வந்துவிட்டார்கள் என்று கூறுவதை, திருநெல்வேலியான், அவா அப்பமே வந்தா என்பான். கிராமத்தான், அவியயா அப்பளையே வந்தாங்கோ என்பான். இப்படி ஒரு மொழி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகப் பேசப்படக் காரணம் என்ன? அவர்கள் ஒருவருக்கொருவர் சுலபத்தில் கலந்து கொள்ள வசதியான போக்குவரத்துச் சாதனங்கள் இல்லாமையும், அவர்களைப் பிரித்து வைக்கும் மலைகள், ஆறுகள், சமுத்திரங்கள் உள்ளமையும் ஆகிய இவைகள்தான் காரணம்என்று பகுத்தறிவு கொண்டு விளக்கிக் காட்டியுள்ளார்.
இதோடு விட்டுவிட வில்லை பெரியார். அறிவியல் பூர்வமாகவும் விளக்குகிறார்,
மற்றும் மொழியானது அந்தந்த நாட்டுச் சீதோஷ்ணத்திற்கேற்பவும் அவரவர்களுக்கு வேண்டிய வாழ்க்கைப் பழக்க, வழக்க, பண்பு, குறிப்புகளுக்கேற்பவும் அமைந்துள்ளன. சில மொழிகள் அதிக சக்தி செலவிடாமல் சுலபமாய் பேசக் கூடிய ரீதியிலும், சில அதிக சக்தியைச் செலவிட்டுச் சிரமத்தோடு பேசக்கூடிய ரீதியிலும் அமைந்திருக்க காண்கிறோம். உதாரணமாக வடமொழியிலுள்ள போன்ற சப்தங்கள் அடிவயிற்றிலிருந்து ஆழ் துளைத்துக் கொண்டு வருவது போல் ஒலிக்கிறது’.
உதாரணமாக ஆங்கிலேயனை எடுத்துக் கொள்வோம். அவன் சாதாரணமாக குளிர் தேசத்தில் வாழ்பவன். குளிரானது அவனுக்கு ஹா என்கிற - பெரும் காற்றைத் தள்ளிக் கொண்டு உச்சரிக்க வேண்டிய சப்தத்தை இயற்கையாக உண்டாக்கச் சுலபமாக அம் மொழியும் ஏன்- அது போன்ற வட மொழியும் பேச முடிகிறது. ஆனால் என்னதான் அவன் தமிழில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும், சுத்தமான தமிழில் இலக்கணக் குற்றமில்லாமல் பேசினாலும் , - இந்த சப்தங்களைச் சரியாக உச்சரிக்க முடிவதில்லை. இந்த சப்தத்திற்கு அவருக்குப் பழக்கமான அந்தச் சீதோஷ்ணம் சரிப்படாமற் போவதுதான் காரணம். அந்தச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைக்கப்பட்ட அவர் நாக்கு, இந்த சப்தத்தை உச்சரிப்பதற்கேற்பச் சுலபத்தில் திரும்ப முடியவில்லை என்பது தான் காரணம்.
, என்ற எழுத்துக்களின் ஒலி அமைப்பையும் உச்சரிப்பு முறையையும் விளக்கிய பெரியாருக்கு மொழிப் பற்றிய பார்வை இல்லை என்று தமிழ் நன்கு கற்றறிந்த பெ.மணியரசன் கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.
ஒரு மொழிக்குச் சிறப்பு எவ்வாறு அமைகிறது என்பதை பற்றியும் கூறுகிறார் பெரியார், இனியும் கவனிக்கும் பட்சத்தில் ஒரு மொழியில் சுலபமாக விளக்கக் கூடும் ஒரு கருத்தை, மற்றொரு மொழியில் விளக்குவது வெகு கஷ்டமாயிருக்கும். அதாவது அந்தக் கருத்தை வெளியிடுவதற்கு வேண்டிய வார்த்தைகள் அம்மொழியில் இருக்காது. காரணம் என்ன? அந்த மொழி பேசும் மக்களிடத்து அந்தக் கருத்து இருந்ததில்லை என்பது தான்.
இத்தோடு பெரியார் விட்டுவிட வில்லை. மேலும் ஒரு அழுத்தம் கொடுக்கிறார். அதாவது, அந்தக் கருத்து அவர்களிடம் ஏற்பட வேண்டிய அவசியமோ, தேவையோ இருந்ததில்லை என்பதுதான் காரணம் என்று வலியுறுத்துகிறார்.
இந்த இடத்தில் சாதி என்ற வட மொழிச் சொல்லைத் தமிழிலிருந்து எடுத்து விட்டால் அதற்குச் சரியான தமிழ்ச் சொல் ஒன்று கூறுங்களேன்! பண்டிதர்கள்தான் கூறட்டுமே. வார்த்தையில்லையே! ஆதலால் நம் மக்களிடையே ஆதியில் சாதிப் பிரிவினை இல்லை என்பதும் இது வடநாட்டுத் தொடர்பால்தான் ஏற்பட்டது என்பதும் தெரிகிறதா இல்லையா? அந்த வார்த்தையே இல்லாவிட்டால் சாதி பேத உணர்ச்சி அற்றுப் போகுமா, இல்லையா? கூறுங்களன். இதே போல் திவசம், திதி, கலியாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம், சாலோக, சாரூப, சாமீப, சாயுச்சிய என்ற இவ்வார்த்தைகள்-வடமொழியா? தமிழா? இவ்வார்த்தைகளின் தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா? சிந்தித்துப் பாருங்கள் என்று கூறியுள்ளதையும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.
எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம் மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துக்களைப் பொறுத்துதான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துக்களைக் கொண்டு பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட அறிவைக் கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள சில பிரபலமான புத்தகங்ளை வாங்கிப் படித்தால் அவற்றில் காணப்படும் கருத்துக்களைக் கொண்டே அம்மக்களின் நாகரிகத்தின் முன்னேற்றத்தை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலும் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு மொழியை ஏற்பதும் தள்ளுவதும் கூட, பெரும்பாலும் அந்தந்த மொழியின் பாற்பட்ட முன்னேற்றக் கருத்துக்களைப் பொறுத்துதான் இருக்கிறது. ஒரு மொழியின் சிறப்புக்கும் வளர்ச்சிக்கும் மற்றொரு காரணமும் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கெவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாக கற்றுக் கொள்ளப்படுவதற்கு எழுத்துக்கள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும் .
ஒரு மொழி சிறப்புத் தன்மையடைவதற்கு அடிப்படையான விசயங்களை பெரியார் இவ்வாறு தெளிபடுத்தியுள்ளதை பெ.மணியரசன் ஊன்றிப் படிக்க வேண்டும்.
அடுத்து தமிழை நமது தகைமைசால் தமிழ் என்று அழைத்து அது பற்றியும் கூறுகிறார்.
தமிழ் என்றால் என்ன? மக்களா? நாடா? மொழியா? நாட்டைப் பொறுத்து, மக்களைப் பொறுத்து- மொழிக்குத் தமிழ் என்கின்ற பேர் வந்ததா? அல்லது மொழியைப் பொறுத்து நாட்டுக்கும், மக்களுக்கும் தமிழகம், தமிழ்நாடு, தமிழர் என்கின்ற பேர் வந்ததா! என்ற கேள்விகள்-தமிழைப் பொறுத்தவரை வித்து முந்தியா? மரம் முந்தியா என்ற தர்க்கத்தைப் போன்றதாகவே எனக்குத் தோன்றுகின்றன. எப்படி இருந்தாலும் தமிழ் நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி என்று மூன்று பண்டங்கள் இருக்கின்றன. இந்த மூன்றையும் முதல் பொருளாகக் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் தமிழ், தமிழ் நாடு, தமிழ் மொழி என்கின்ற சொற்களைக் காண்பதற்கு முன்பிருந்தே, இவற்றை காணாதவர்களிடமிருந்து இந்த மூன்றையும் குறிக்கும்படியாக திராவிடம், திராவிடர், திராவிட மொழி என்பதாகச் சொற்கள் இருந்து வந்ததையும், வருவதையும் பார்க்கிறோம். தமிழ் மொழியும் அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும், நாடுகளும் கூடத் தமிழைச் சேர்ந்ததே என்றும் அந்தக் கருத்தைக் கொண்டே திராவிடம் என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும், ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன.
வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம் ஆகியவற்றிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும், மக்களையும் குறிக்கப் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தேச சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறதையும் காண்கிறோம். ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள், இட நெருக்கத்தால் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்று ஆங்காங்கு குடி வாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்களது மொழியில் சில நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக்காலத்திய போக்குவரத்து வசதிக் குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்கும் தொடர்பில்லாமல் போனதால், நாளடைவில் அந்தந்த இடத்தில் வட நாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல மகத்துவங்களை எடுத்துக் கூறி, அந்தந்தப் பிரதேச மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியை அதிகமாக உபயோகப்படுத்தும்படி செய்து, அதன் மூலம் தமது கலை, ஆச்சார அனுஷ்டானம் ஆகியவைகளைப் புகுத்தி விட்டனர். அந்த வட மொழிக் கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல் காரணமாகவும், அந்தந்த மக்களுக்குத் தமது மொழி தமிழ் அல்லாத வேறு மொழியேயாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிறது .
ஆனால் என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ, அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப்பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப் படுகிறேன்.
இவ்வளவு ஆழ்ந்த விளக்கத்தை தமிழ் மொழிக்குக் கொடுத்த பெரியார், தமிழிலிருந்து சிதைந்தவைதான் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என்று வலியுறுத்திய பெரியார் மேலும் விளக்குகிறார்,
நான்கு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அனேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். அகராதி கொண்டு மெய்பிக்கவும் முடியும். சமீப காலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை. தெலுங்கு வைணவர்கள் சமீப காலம் வரை தமிழ்ச் சப்தத்தில்தான் நாலாயிரப் பிரபந்தத்தையும், திருப்பாவையையும், தெலுங்கு எழுத்தில் படித்து பாடி வந்திருக்கின்றனர். அந்தப் புத்தகங்கள் தெலுங்கெழுத்தில், தமிழ்ச் சப்தத்தில்தான் அச்சிடப்பட்டிருக்கின்றன. கன்னடியர்களுக்கும் மலையாளிகளுக்கும் முதல் நூலே கிடையாது.
இதையெல்லாம் இன்று வரை தமிழறிஞர்கள் ஆராய்ந்தார்களா அல்லது பெரியாருக்கு மறுப்புத் தெரிவித்து கருத்துக்களையாவது வெளியிட்டார்களா என்பதற்கு ஆதாரம் இல்லை.
மொழி வழி மாநிலம் அமைக்கப்படும் போது தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரம் பிரிந்து சென்றதை தொலைந்தது சனியன் என்று கூறிய பெரியார், அதற்கு முன் கூறிய கருத்துக்களையும் இங்கு காண்போம்.
வட நாட்டு ஆதிக்கமும் வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய்மொழி தமிழ்தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. அந்தந்த மொழி வல்லுனர்கள், பண்டிதர்கள் சிலர் இன்று ஓரளவு இந்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது நமக்கு மேலும் நம் கருத்துக்கு வலிமை ஊட்டுகிறது. இத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது தமிழ் மொழி தாய் மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது என்ற கிளர்ச்சி செய்தேன்.
இவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்த பெரியார் தமிழ்புலவர்களின், அறிஞர்களின் நடத்தையின் காரணமாக அவர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்தார் என்பது விளங்குகிறது.
தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி பெரியார், அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல. அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல. சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல. அகத்திய முனிவரால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல. மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல. பின் எதற்காக? தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப அமைந்துள்ளது. இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும் விடத் தமிழ், நாகரீகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது. வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம் மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துக்கள் கேடு பயக்கும் கருத்துக்கள் நம்மிடைப் புகுந்து நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான் வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான் அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி- தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக்கூடியது என்பதற்காக அல்ல .
தனித்தமிழ் குறித்தெல்லாம் பெரியார் இங்கு கூறியுள்ளார். இவற்றை எல்லாம் பெ.மணியரசன் படித்தாரா? இல்லையா என்பதெல்லாம் தெரியவில்லை. ஆனால் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறியதை மட்டும் இவரும் தமிழறிஞர்களும் மேற்கோள்காட்டி கூறி வருவது இவர்களின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.
(தொடரும்)

- கவி

No comments: