Thursday, November 28, 2019

ஆறுமுக நாவலர்


ஆறுமுக நாவலர் - கவி

யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூரிலே கார்காத்தார் இனத் தில், பாண்டி மழவர் குடியில் 18.12.1822 இல் பிறந்தார். ‘தமிழ் அறிஞர்கள் வரலாறு’ மற்றும் ‘இலக்கியங்களை’ சிறிய வயதி லேயே இவருக்கு பயிற்று வித்த னர். இவருடைய மைத்துனர் விசுவநாத மயில்வாகனர், இவ ரை கோயில்களுக்குக் கூட்டிச் சென்று அங்கு நடைபெறும் கந்த புரா ணம், திருவிளையாடற் புராணம் ஆகியவைகளைக் கேட்டறியச் செய்தார்.
இவருக்கு ஏற்கனவே தமிழில் ஆர்வம் இருந்தமையால், இவருடைய தமையனார், இவரை ‘பீற்றல் பார்சீவல்’ என்னும் பாதிரியாருடைய ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைத்தார். அதனால் ஆங்கில மொழியிலும் சிறப்பு தேர்ச்சிப்பெற்றவராக விளங்கினார். அக்காலத்தில் அப்பள்ளிக் கூட மாணவர்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிப்பெயர்ப்பதில் வல்லவர் என்ற பெயர்பெற்றவர்.

இதனை அறிந்த பாதிரியார் பார்சீவல் அவர்கள் பைபிளை மொழிப்பெயர்க்க தமிழ்ப்பண்டிதராக ஆறுமுக நாவலரை நியமித்தார். அக்காலத்தில் கிருத்துவ மதம் வளருதல் கண்டும், சைவமதம் வளர்ச்சிக்குன்றுதலையும் கண்ட ஆறுமுக நாவலர் அவர்கள், சைவ சித்தாந்த இலக்கியமாகிய ‘சிவஞான போதம்’, ‘சிவஞான சித்தியார்’, திருக்களிற்படியார் இன்னும் பல நூல்களை கற்றறிந்தார்.

சிவபெருமான்  இயற்றிய முதனூல்கள், ‘வேத சிவ ஆகமங்கள் என்றும், அவைகளுள் ‘வேதம்’ பொது நூல்’ என்றும் ‘ஆகமம்’ ‘சிறப்பு நூல்’ என்றும் தெரிந்து கொண்டார். அதோடு மட்டுமல்லாமல்  வேத சிவ ஆகமத்தை உள்ளடக்கிய தமிழ்நூல்கள், ‘தேவார திருவாசகங்கள்’ என்றும் அறிந்தார். அதோடல்லாமல் சம்ற்கிருதமும் கற்றார்.

பார்சீவல் பாதிரியார் இவரைத் தமிழ்ப் பண்டிதராக அமர்த்திய போது,  தம் உடம்பில் ‘உத்தூளனம் திரிபுண்டரம்’ என்று அழைக்கப்படும் இரு வகையாலும்  விபூதி பூசிக்கொண்டுதான் வருவேன் என்று கூறினார்.
பைபிள் மொழிப் பெயர்ப்புப் பணியில் பார்சீவல் பாதிரியாருக்கு கீழ் இருந்தவர்கள் சம்பளத்திற்கு பணியாற்றுபவர்கள் என்பதாலும் சைவ ருள்ளும் இவர் ஒருவரே சரியானவர் என்பதாலும் பார்சீவல் பாதிரியார் இவரது நிபந்தனைகளுக்கு ஒப்புகொண்டார்.

பைபிளை மொழிப் பெயர்க்கும் காலத்தில் அதனையும் அதற்கு பூர்வாசாரியர்களாலே செய்யப்பட்ட உரைகளையும் நன்றாகக் கற்றுக் கொண்டார்.

அதே காலத்தில் சென்னையிலும் பைபிள் மொழி பெயர்ப்பு பணி நடைபெற்று வந்தது. எனவே யாழ்ப்பாண மொழிப் பெயர்ப்பு பணியை சென்னçயில் ஏற்றுக் கொள்வார்களா என்ற அய்யம் பார்சீவல் பாதிரியாருக்கு ஏற்பட்டது.
எனவே சென்னப்பட்டனம் சென்று தமது பைபிள் மொழிப் பெயர்ப்பு பணியை சபையாருக்கு காட்டிட  விரும்பிய போது, ஆறுமுக நாவலரையும் உடன் அழைத்துச் சென்றார். சென்னைப்பட்டன மொழிப்பெயர்ப்பும் யாழ்ப்பாண மொழிப்பெயர்ப்பும் வைக்கப்பட்டு ஒரு நடுவரையும் நியமித்து எது சிறந்த மொழி பெயர்ப்பு என்பதை ஆய்வு செய்தனர்.
இறுதியில் ஆறுமுக நாவலர் செய்த பைபிள் மொழி பெயர்ப்பு சிறந்தது என்று முடிவு செய்தனர்.

அந்த காலத்தில் பெரும்பாலான சைவ ஆலயங்கள் ஆகமத்தில் கூறியுள்ளபடி கட்டப்படாமல் இருப்பதைக் கண்டு மனம் வருந்தினார் ஆறுமுக நாவலர்.
19 ஆம் நூற்றாண்டில் அந்நிய மதங்கள் பரவுவதை தடுக்க, சைவ சமய மக்களிடையே சமய அறிவினை வளர்க்க பாடுபட்டார். ஈழத்தமிழர்கள் தங்களை இந்துக்கள் என்று கூறத் தயங்குவதும், சைவ சமயத்தவர்கள் என்று கூறுவதற்கும் ஆறுமுக நாவலரின் பணிகளே காரணம்.

காமிகம்,காரணம், ரெளரவம், சர்வோக்தம், வாதுளம் முதலிய 28 சைவ ஆகமங்களும், மிருகேந்திரம் முதலிய 207 நூல்கள் துணை ஆகமங்களாகவும் உரைக்கப்பட்டன.  எனினும்  இவை குறித்த சமய அறிவு சைவ சமய மக்களிடையே இல்லை என்பதை உணர்ந்த ஆறுமுக நாவலர், இந்நிலைக்கு பார்ப்பன வகுப்பில் உள்ள ‘ஸ்மார்த்த பார்ப்பனரே’ காரணம் என உணர்ந்தார்.

எனவே சைவ தீட்சிதைப் பெறாத வைதீகப் பார்ப்பனர் கையால் விபூதி வாங்குவதை மறுத்து வந்தார். சிவதீட்சிதைப் பெறாதவரை வணங்குவதும் ‘சிரார்த்தம்’ முதலியவற்றில் அவர்களைப் பங்கெடுக்கச் செய்வதும், அவர்கள் கையாலே விபூதி வாங்குவதும் சிவ ஆகமப்படி கட்டப்பட்டக் கோவில்களில் அவர்களைக் கொண்டு பூசை செய்வதும் சிவ ஆகம விரோதம் என்பதையும் இப்படிச் செய்வோர் ஒரு பலனையும் அடைய மாட்டார் என்பதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்கினார். இதனால் ஆறுமுக நாவலர் பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.

 1863 இல் தமது வித்தியாசாலையில், வேதம் பொது நூலென்றும், ஆகமம் சிறப்பு நூலென்றும் வைதீக மார்க்கத்தில் ஒழுகுவோர் புண்ணிய லோகங்களை அடைவர் என்றும் சாலோகம், சாமீபம், சாருபம் என்னும் பத முத்திரையும், சாயுச்சியமாகிய பரமுத்தியையும் அடைவார்கள் என்றும் சொற்பொழிவில் பதிலடி தந்தார்.

உடனே வைதீகப் பார்ப்பனர்கள், தாங்கள் வைதீக மார்க்கத்தில் உயர்ந்தவர்கள் என்றும் சைவ மார்க்கத்தில் உள்ளவர்கள் வழிபடலாம் என்றும் ‘பரார்த்த ’பூசை செய்ய விதி இருப்பதாகவும் பொய் கூறிவந்தனர். எனினும் சபைகளிலே எழுந்து பேசவும் ஆறுமுக நாவலருக்கு உரிய விடையைத் தரவும் அவர்களால் முடியவில்லை. இதை உணர்ந்து கொண்ட ஈழ மக்கள், பார்ப்பனர்களை வழிபடுவதையும் சிரார்த்தம் (கருமாதி), விவாகம் (திருமணம்) முதலிய நிகழ்ச்சிகளில் அவர்களுக்கு தானம் வழங்குவதையும் நிறுத்திக் கொண்டார்கள்.

வைதீகப் பார்ப்பனர்களைக் கொண்டு பரார்த்த  பூசை செய்து வந்த கோவில் அதிகாரிகள், அவர்களை (பார்ப்பனர்களை) நீக்கி, சிவாச்சாரி களைக் கொண்டு பூசை செய்ய வைத்தனர். பார்ப்பனர் கையால் விபூதி வாங்கும் பழக்கத்தை பெரும்பாலோர் நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்தில் ஆலயங்களில் சிவ ஆகம ஆராய்ச்சியும் தேவார திருவாசகப் பாராயண ஓசையும், சிவபூசைக்கு சிறப்பினதாகக் கருதப்படும் மணியோசையும் கேட்கத் தொடங்கின. இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் இதனைப் பரப்பத் தொடங்கினார் ஆறுமுக நாவலர்.

‘சைவப் பிரகாச வித்தியசாலை’ முதலாம் சொற்பொழிவில் ஆறுமுக நாவலர்,
‘சிதம்பராலய பூசகர்களுள்ளே சிலர் சைவாகமங்கள் பிரமாணமல்ல என்றும், சிவ தீட்சையினால் உயர்ச்சி இல்லை என்றும் சிவ தீட்சைப் பெற்றவர்கள் ‘பிரஷ்டர்கள்’ என்றும் சிதம்பர ஆலயக்கிரியைகள், வைதீகக் கிரியைகளே என்றும் சிதம்பர ஆலயக் கிரியைகளுக்குச் சிவ தீட்சையில்லாதவர்களே ‘அருகர்கள்’ என்றும் துர்ப்போதனை செய்து பலரையும் மயக்கிக் கொண்டு திரிந்தார்கள்.

 மார்கழி மாதம் ரதோற்சவ தினத்துக்கு முதற் தினமாகிய 27 ஆம் நாள் சோமவாரத்திரவிலே நமது வித்தியாசாலையிலே, வெகுஜன சமூகத்திலே, அவர்கள் கூற்றுக்கள் எல்லாவற்றையும் கண்டித்து, சைவ ஆகமங்கள் ‘முக்கிய பிரமாணம்’ என்றும் சிவ தீட்சையே உயர்வுடையது என்றும், ‘கர்­ணாதிப் பிரதிஷ்டாந்தம்’, ‘பிரதிஷ்டாதி யுற்சவாந்தம்’, ‘உற்சவாதிப் பிராயச் சித்தாந்தம்’ என்னும் ‘தேவாலயக் கிரியைகள்’ சிவ ஆகமத்திலன்றி, வேதத்தில் இல்லை என்றும் யாவர்க்கும் சிவ தீட்சையின்றிச் சிவ ஆகமம் படித்தல் கூடாது என்றும் சிதம்பர ஆலயக் கிரியைகளின் பொருட்டுப் பதஞ்சலி மகாமுனிவர் வேத சிவாகம முறைப்படியே பத்ததி செய்தரு ளினார் என்றும் ஆதியில் இருந்த தில்லை வாழ் அந்தணர்கள் சிவ தீட்சையும் சிவ ஆகம உணர்ச்சியும் சிவ ஆகம அநுஷ்டானமும் உடையவர்கள் என்றும் தற்காலத்தில் உள்ள பூசகர்கள் சிவ தீட்சையும் சிவ ஆகம உணர்ச்சியும் சைவ அநுஷ்டானமும் இல்லாதவர்களாய் இருந்து கொண்டு சிதம்பர ஆலயக் கிரியைகளைச் செய்தல், சிவ வாக்கும் நடேசர் திருமேனியுமாகிய சிவ ஆகமத்துக்கும் வியாக்கிரபாத முனிவர் பதஞ்சலி முனிவர் தில்லை மூவாயிர முனிவர் என்பவர்களுடைய அனுஷ் டானத்துக்கும் விரோதமே என்றும் பல சாத்திரப் பிரமாணங்கள் கொண்டு விரித்து பிரசங்கித்தேன்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதே காலக்கட்டத்தில் வடலூர் இராமலிங்க வள்ளலார் அவர்கள் ‘அருட்பா’ வை எழுதத் தொடங்கினார். இதனால் அவர்  ‘திருவருட் பிரகாச வள்ளலார்’ என்று அழைக்கப்பட்டார். இவருடைய திருவருட்பா கோயில்களில் பாடப்பட்டன.  தேவாரம், திருவாசகப் பாடல்களோடு திருவருட்பாவையும் பாடி வந்தனர். சில ஆலயங்களில்  தேவார திருவாசகப்பாடல்களை நிறுத்தி, திருவருட்பாவை  மட்டுமே பாடி வந்தனர். இதனைக் கண்டு கோபமடைந்த ஆறுமுக நாவலர் ‘போலியருட்பா மறுப்பு’ என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்நிலையில் இராமலிங்க அடிகளும் ஆறுமுக நாவலரும் ஒரே நேரத்தில் சிதம்பரம் வர நேர்ந்தது. எப்போதும் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கொண்ட பார்ப்பனர்கள், ஏற்கனவே சைவ ஆகமத்திலும் சைவ தீட்சையாலும் ஆறுமுக நாவலர் மீது வெறுப்புக் கொண்டிருந்த சிதம்பர தீட்சிதர்கள் இச்சிக்கலை ஊதிப் பெரிதாக்கினார்கள்.

இதன் பொருட்டு சிதம்பரம் கோவிலில் இராமலிங்க வள்ளலாரை 1869‡ இல் அழைத்துக் கூட்டம் போட்டனர். கூட்டத்தில் இராமலிங்க அடிகள், ஆறுமுக நாவலரையும் மற்றவர்களையும் தூற்றிப் பேசி, அவ்வரலாற்றை ‘பேரம்பலப் பிரசங்கம்’ என்னும் தலைப்பில், சி.சொ. சண்முகப் பிள்ளை, சி.அ. வேலாயுத பிள்ளை மற்றும் சி.இரா. ஆறுமுகப் பிள்ளை என்னும் மூவரும் வெளிப்படுத்திய பத்திரிக்கையில் காணப்படும் என்று ‘ஆறுமுக நாவலர் சரித்திரம்’ என்னும் நூலை எழுதிய யாழ்ப்பாணம் நல்லூர் த. கைலாச பிள்ளை கூறுகிறார்.

இது குறித்து மஞ்சக்குப்பம் (கடலூர்) வழக்கு மன்றத்தில் 1869‡இல் நடைபெற்ற வழக்கில் இராமலிங்க அடிகள் மன்னிப்பு கேட்டார் என்று கூறப்படுகிறது. இது ஒரு ‘அவதூறு வழக்கு’ என்பதாகக் காணப்பட்டது. இறுதியில் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

எனினும் சிதம்பர தீட்சிதர்கள் ஆறுமுக நாவலரை விடவில்லை. அவர்மீது மற்றொரு வழக்குத் தொடுத்தனர். அவ்வழக்கில் யாழ்ப்பாணம் செளந்திர நாயகம் பிள்ளை என்னும் வழக்கறிஞர் ஆறுமுக நாவலருக்காக சிறப்பாக வாதாடினார். இவ்வழக்கின் போது,  எதிரி கேட்ட ஒரு கேள்விக்கு கண்ணீர் மல்க ஆறுமுக நாவலர் அளித்த விடையும் நீதிமன்றத்தில் இவர் நின்ற நிலையும் வழக்கில் வெற்றி பெற உதவிற்று.

ஆறுமுக நாவலர்,  நூற்களை அச்சிடுவதற்காக 1849- இல் அச்சு இயந்திரம் ஒன்றை சென்னையிலிருந்து வாங்கி வந்தார். இவ்வச்சு இயந்திரம் மூலம் நூற்களை அச்சிட்டு வெளியிட்டு வந்தார்.

நாவலர் முதன் முதலாகப் பதிப்பித்த நூல் ‘சூடாமணி நிகண்டு’ ஆகும். ‘பெரியபுராண’ வசனத்தையும் ‘நன்னூல் விருத்தியுரை’யையும் வெளியிட்டார்.

இவருடைய கல்வித் திறமையையும் புத்தகங்கள் அச்சிடும் திறமையையும் அறிந்த இராமநாதபுரம் பொன்னுசாமித் தேவர், திருக்குறள் பரிமேலகர் உரை, திருச்சிற்றம்பலக் கோவையுரை, தருக்க சங்கிரகவுரை, சேதுபுராணம் போன்ற நூல்களை ஆய்வு செய்து அச்சிட இவரை அணுகினார்.

சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களும் இவரின் உதவியுடன் ‘தொல்காப்பியம் சேனாவரய’த்தை அச்சிட்டு வெளியிட்டார்.

திருவாடுதுறை ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகர் அவர்கள், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையையும் சில ஓதுவார்களையும் கும்பகோணம் வந்திருந்த ஆறுமுக நாவலர் அவர்களிடம் அனுப்பி, மடத்தில் சில நாட்கள் தங்க வைத்து, இலக்கணக் கொத்து, தொல்காப்பியச் சூத்திர விருத்தி முதலிய இலக்கண நூற்களை இவரது ஆய்வுக்குப் பின் அச்சிட்டனர்.

இவ்வாறு ஆறுமுக நாவலர் அவர்கள் பதிப்புத் துறையில் சிறந்து, முதல் தலைமகனாக விளங்கினார்.

இவரது வரலாற்றை, அவரின் அய்ந்தாம் தமையனார் ஆராய்ச்சி தம்புவின் புதல்வர் த. கைலாச பிள்ளை, ‘ஆறுமுக நாவலர் சரித்திரம்’ என்ற பெயரில் எழுதினார்.

நாவலர் அவர்களின் சமயப் பிரச்சாரத்தினை, நிறுவனமாக்கும் முயற்சியில் கைலாசப்பிள்ளை பெரும்பங்கு வகித்தார். சைவ அபிமானிகள் சங்கம், சைவ சித்தாந்த சபை, சைவ கலா விருத்திச் சங்கம், கிருத்துவ கண்டன சபை முதலியவை அமைப்பதில் கைலாச பிள்ளை பெரும்பங்கு வகித்தார்.

நாவலர் அவர்களின் துண்டு பிரசுரங்களையும் பாடல்களையும் தொகுத்து ‘ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு’  என்று வெளியிட்டார் கைலாசபிள்ளை.

ஆறுமுக நாவலர் அவர்கள் கடைசியாக சொற்பொழிவு செய்தது யாழ்ப்பாணச் சைவப்பிரகாச வித்தியாசாலையில் 1879 இல். அதில்,  ‘நான் உங்களிடத்துக் கைமாறு பெறுதலை சிறிதும் எண்ணாது முப்பத்திரண்டு வரு­ காலம் உங்களுக்கு சைவ சமயத்து உண்மைகளைப் போதித்து வந்தேன். எனக்குப் பின் சைவ சமயம் குன்றிப்போகும் என்று பாதிரிமார்கள் கூறுகிறார்கள். ஆதலால் நான் உயிரோடிருக்கும் போதே உங்களுக்காக ஒரு சைவப்பிரசாரகரைத் தேடிக் கொள்ளுங்கள். ஆனால் உங்களுடைய வைவுகளைக் கேட்டுக் கைம்மாறு கருதாது சமயத்தைப் போதிக்க என்னைப் போல ஒருவரும் வரார். இதுவே என்னுடைய கடைசிப் பிரசங்கம்’  என்று கூறியுள்ளார். (பெரியார் பார்வை 16.2.2007)

No comments: