Thursday, November 28, 2019

நினைவு அலைகள்’ - ‘நெ.து.சு’

‘நினைவு அலைகள்’ மூன்றாம் தொகுதி-  ‘நெ.து.சு’ அவர்கள் முன்னுரையில் எழுதியுள்ளவையிலிருந்து....

முதல்வர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் பெரியார் வரலாற்றைச் சிறுவர்களுக்கு வண்ணப்படங்கள் வாயிலாகவும் பெரியவர்களுக்கு எழுத்தில் ஆயிரம் பக்கங்களிலும் உருவாக்கித் தருமாறு என்னைப் பணித்தார். அப்பெரும் பணிகளுக்குத் துணையாக, டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் தக்கார் குழு ஒன்றையும் நியமித்தார். பெரியார் வரலாறு-வண்ணப்படங்கள் என்ற நூலை முடித்துக் கொடுத்து நான்காண்டுகள் ஓடிவிட்டன. பெரியாரின் முழு வரலாற்றில் முதல் இருபகுதிகளை நான் அறுநூறு பக்கங்களில் கொடுத்து சில ஆண்டுகள் கழிந்து விட்டன. முதல் பாகத்தை எழுத்தெண்ணிப் படித்த நாவலர் ஈன்ற ஒப்புதலுக்குப் பின், அப்பகுதியை அச்சகம் ஒன்றிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகக் கேள்வி.(12.10.1988).

‘நினைவு அலைகள்’ நூலின் மூன்றாம் தொகுதியின் 905‡906 ஆம் பக்கத்தில் எழுதியுள்ளவையிலிருந்து...

பெரியார் நூற்றாண்டு விழா வந்தது. அதைச் சிறப்பாக ஈடுஇணையற்ற முறையில் கொண்டாட ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அரசு பெரியார் நூற்றாண்டு விழா எடுத்தது. அவ்விழா ஒவ்வொன்றிலும் எனக்கும் பங்கு கொடுத்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்னைப் பெருமைப்படுத்தினார். பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவை யயாட்டி, மாவட்டத் தலைநகரங்களில் பெரியார் நினைவுத் தூண் நிறுவப்பட்டது. அதற்கான விழாக்களிலும் எனக்கு இடம் கொடுத்துச் சிறப்பித்தது தமிழக அரசு.

பெரியார் நூற்றாண்டு விழாவினையயாட்டி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றினை சிறுவர்களுக்கேற்ற வண்ணப்படங்கள் வாயிலாக வெளியிடுவது என்றும் பெரியோர்களுக்காக ஏறத்தாழ ஆயிரம் பக்கங்களில் வெளியிடுவது என்றும் பெரியாரின் புரட்சி மொழிகள் என்ற நூலினைத் தொகுப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. அதற்கு  ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைவர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் ஆவார். அக்குழுவின் துணைத்தலைவராக அரசு என்னை நியமித்தது.

வண்ணப்பட நூலையும் முழு வரலாற்றையும் தொகுக்கும் பொறுப்பினை என்னிடம் ஒப்படைத்தது. வண்ணப் படநூலையும் வரலாற்றில் முதல் பாகத்தையும் 300 பக்கங்களுக்கு மேலும் எழுதி முடித்துக் கொடுத்தேன். தம்முடைய பல அலுவல்களுக் கிடையிலும் நாவலர் நேரத்தை ஒதுக்கி வைத்து நான் தொகுத்த நூல்களிரண்டையும் வரி வரியாகப் படித்துப் பார்த்து வெளியிட ஒப்புதல் அளித்தார். பெரியார் வரலாற்றின் இரண்டாவது பகுதியையும் முடித்துக் கொடுத்திருக்கிறேன். 
(பெரியார் பார்வை, (16.12.2006)

No comments: