Friday, September 17, 2021

சிங்கப்பூர் தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவுநாள்

 சிங்கப்பூர் தமிழவேள் கோ. சாரங்கபாணி நினைவுநாள் (16.03.1974)


தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்கள், நாகை மாவட்டம் வேதாரண்யம் (திருமறைக்காடு) அருகில் உள்ள கொட்டையிடி என்ற சிற்றூரில்1903-ஆம் ஆண்டு ஏப்பிரல் 20 ஆம் நாள் பிறந்தார். திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் பள்ளியிறுதிப் படிப்பை முடித்தார்.


பின்பு, 1924-ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்து சேர்ந்த தமிழவேள், அங்காடிச் (மார்க்கெட்) சாலையிலுள்ள வணிக நிறுவனம் ஒன்றில் கணக்கெழுதுபவராக வாழ்க்கையைத் தொடங்கினார். 

தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளும் சீர்திருத்த கருத்துகளும் மலையகத் தமிழர் நடுவிலே நிலையாக வேரூன்ற வேண்டுமென்ற பேரவாவால் தமிழவேள், 16.1.1929-இல் வெ.சி. நாராயணசாமி அவர்களுடன் சேர்ந்து முன்னேற்றம் என்னும் பெயரில் ஒரு கிழமை (வார) இதழைத் தொடங்கி தமிழர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். தொடக்கத்தில் அவ்விதழின் துணையாசிரியராகப் பணியாற்றிய தமிழவேள் 1930-ஆம் ஆண்டுவாக்கில் அவ்விதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.


‘முன்னேற்றம்’ தொடங்கப்பெற்ற அதே ஆண்டு இறுதியில் 20.12.1929-இல் தந்தை பெரியார் அவர்கள், தம் துணைவியார் நாகம்மையார், ச. இராமநாதன், அ. பொன்னம்பலம், சி.நடராசன், சாமி சிதம்பரனார் ஆகியோருடன் பினாங்கு வந்து சேர்ந்தார்.


தமிழர்களை ஒன்று சேர்க்கும் அரியதொரு உணர்வால் உந்தப்பட்டுத் 1930/ஆம் ஆண்டு திரு. உ.இராமசாமி (நாடார்) அவர்கள் தலைமையில், திருவாளர்கள் காந்தரசம் அ.சி. சுப்பய்யா, கா.தாமோதரம், பி. கோவிந்தசாமி போன்றோருடன் இணைந்து கோ. சா., ‘தமிழர் சீர்திருத்த சங்கம்’ அமைக்கும் அரிய முயற்சியில் ஈடுபட்டு 1930-ஆம் ஆண்டு தமிழர் சீர்திருத்த சங்கம் உருக்கொண்டது.


அக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ‘சீர்திருத்தம்’ என்னும் மாத இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று நடத்தினார். தொடக்கத்தில் இக்கழகத்தின் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்த கோ. சா., பிறகு அதன் தலைவரானார்.


தமிழ் முரசு

1935-ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 6-ஆம் நாள் காரி (சனி)க் கிழமையன்று மாலை 6.00 மணிக்குச் சிங்கப்பூரில், 20, கிள்ளான் சாலையில், தமிழவேள் ‘தமிழ் முரசு’ என்ற பெயரில் ஒரு செய்தி இதழைத் தொடங்கினார். அன்று சிறிய அளவில் 4 பக்க அளவில் 1 காசு விலையில் கிழமை இதழாக வெளிவந்தது. நான்கு திங்கள் கடந்து இதழைக் கிழமை மும்முறை வெளியிட்டார். இவ் வளர்ச்சிக்கு ஏற்ப இதழின் விலை 3 காசாக உயர்த்தப்பட்டது.


1937-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் முதல் தமிழ்முரசு, நாளிதழாக வெளிவரலாயிற்று. இரண்டாம் போருக்குப் பின் பதினைந்து காசு விலையில் பன்னிரண்டு பக்கங்களுடன் வெளிவரத் தொடங்கியது.


தமிழர்களின் அறியாமை, சிந்தனையின்மை போன்ற இருள்களை அகற்ற தமிழ்முரசு தோன்றியது.

தந்தை பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்களின் பகுத்தறிவு-தன்மான-சீர்திருத்த- முன்னேற்றக் கருத்துகளை ஏற்று அவற்றை இந்நாட்டில் பரப்பி மக்களை மக்களாக வாழ வழி வகுப்பதற்கெனப் பிறந்த ஏடு தமிழ் முரசு.

அறியாமை இருளில் வேரூன்றிவிட்ட மக்களிடையே சீர்திருத்த இதழை நடத்த அஞ்சா நெஞ்சம் வேண்டும். இடையறாத இன்னல்களும் இடர்களும் பரிசாகக் கிடைத்தும், கொண்ட கொள்கைக்காகத் தமிழவேள் இறுதிவரை மனந்தளராமல் போராடினார்.


1952-ஆம் ஆண்டு பிற்பகுதியில் எழுத்தாளர்களுக்கென ‘எழுத்தாளர் பேரவை’ என்ற ஒரு புதுப் பகுதியைத் தொடங்கிற்று தமிழ் முரசு.


மாணவர்களையும் சிறுவர்களையும் எழுத்துலகில் நுழையச் செய்து அவர்களில் பலரைத் தமிழ் எழுத்துலகம் போற்றும் எழுத்தாளர்களாக உருவாக்குவதற்கு பயிற்சிக்களமாக இலவய இதழ் ஒன்றினைத் தமிழ்முரசுடன் இணைத்து வெளியிட்டார். அதுதான் ‘தமிழ் முரசு’ மாணவர் மணிமன்ற மலர். முதல் மலர் 6.7.1953-இல் மலர்ந்தது. இது மலேசியாவில் ஓர் எழுத்தாளர் மரபினரையே தோற்றுவித்தது.


Reform என்னும் திங்கள் இதழையும் Indian Daily Mailஎன்னும் நாளிதழையும் ஆங்கிலத்தில் சில காலம் வரை நடத்தினார். ‘தேச தூதன்’என்னும் மாலை நாளிதழும் இவரால் சில காலம் தலைநகரில் நடத்தப்பட்டது.


தமிழர் பிரதிநிதித்துவ சபை


சிங்கையில் இயங்கி வந்த 32 கழகங்களையும் (சங்கங்களையும்) இணைத்துத் ‘தமிழர் பிரதிநிதித்துவ சபை’யைக் கண்டார்.


தமிழர் திருநாள்


தமிழர் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, விளையாட்டு ஆகியவற்றைப் பேணிக் காக்கவும் சாதி சமய வேறுபாடுகளால் பிளவுபட்டு நின்ற தமிழர்கள் தமிழன் என்ற தன்மான உணர்வோடு ஒன்று சேரவும், 1952-ஆம் ஆண்டு ‘தமிழர் திருநாள்’ என்னும் விழாவை ஏற்படுத்தினார்.


தமிழ் எங்கள் உயிர்

மலாயாப் பல்கலைக் கழக இந்தியப் பகுதியில் தமிழை ஒழித்து வாய் செத்த சமற்கிருதத்தை ஆட்சியேற்ற வந்த நீலகண்ட சாஸ்திரியாரை புறமுதுகுகாட்டி ஓடச் செய்து தமிழுரிமையைத் தமிழவேள் பேணினார்.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தாயை வீற்றிருக்கச் செய்ய ‘தமிழ் எங்கள் உயிர்’ என்ற பொருட் கொடைத் திட்டத்தை செயல்படுத்தினார். அவரின் பெரு முயற்சியால் பல்கலைக்கழக இந்தியப் பகுதியில் சிறந்த நூல் நிலையம் ஒன்று அமைந்தது. தமிழ்ப் பகுதியில் மாணவர்களை ஈர்ப்பதற்காக உதவிச் சம்பளத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதிலும் வெற்றியே கண்டார்.


மறைவு

சிங்கை-மலையகத் தமிழர்களுக்காகவும் தமிழ் மொழிக்காகவும், தமிழ் மன்பதையின் மேம்பாட்டிற் காகவும் ஏறத்தாழ 45 ஆண்டுக் காலம் அயராது- ஒழியாது- ஓயாது பாடுபட்ட முத்தமிழ்க் காவலர் தமிழவேள் கோ. சாரங்கபாணி 1974-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 16-ஆம் நாள் இயற்கை எய்தினார்.


தனித்தமிழ் அரிமா தரங்கை பன்னீர்செல்வம் அவர்கள் சிங்கை வந்த போது நானும் அவரும் சிங்கப்பூரிலுள்ள தமிழவேள் கல்லறைக்குச் சென்று மரியாதை செய்த போது எடுத்தப்படம் (2010)

No comments: