Tuesday, September 7, 2021

பாரதியார் மறைவு கவிச்சிங்கம் ராஜரி´ சேலம் அர்த்தநாரிச வர்மா

 பாரதியார் மறைவு   

கவிச்சிங்கம் ராஜரி´  சேலம் அர்த்தநாரிச வர்மா

(27.7.1874 - 7.12.1964)

ராஜாஜியை விட 4 ஆண்டுகளும், மகாகவி பாரதியாரைவிட 8 ஆண்டு களும் வயதில் மூத்தவர். பாரதியார் மறைவுக்குப் பின் ‘வீரபாரதி’ என்று பாரதியாரின் பெயரில் பத்திரிகை நடத்தியவர். 

இப்பாடல் பாரதியார் மறைந்த மறுநாள் 13.09.1921 அன்று எழுதப்பட்டு, அடுத்த நாள் 14.9.1921 ‘சுதேசமித்திரன்’ இதழில் வெளி வந்துள்ளது. 

பாரதியார் ‘காலனுக்கு உரைத்தல்’ என்ற பாடலில் ‘காலா, உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன் - என்றன் காலருகே வாடா, சற்றே உனை மிதிக்கிறேன்’ என்று பல்லவியில் கூறி 1919 டிசம்பர் மாதம் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியிட்டார்.

‘காலன் தன்னைக் கெட்ட மூடன் என்று கேவலப்படுத்திய பாரதியாரைக் கொல்லச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். அவன், பாரதியார் தேங்காய் பழம் கொடுத்து, அன்பு செலுத்திய பார்த்தசாரதி கோயில் யானை மதம் பிடித்து அவரைத் தூக்கியயறிந்து காயப்படுத்தும்படி செய்து (பல நாட்கள் துயருற்ற நிலையில்) 11.9.1921 அன்று அவரது உடலையும் உயிரையும் வேறாக்கினான்’.

மறுநாள் வர்மா காலனைப் பழித்து பாரதியாருக்கு இரங்கற்பா பாடினார். இப்பாடல் 14.9.1921 அன்று ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் வெளியிடப்பட்டது.

 இக்கவிதையில் ‘நேற்று’ என்று குறித்திருப்பதைப் பார்த்தே இக்கவிதை இவர் பாரதி மறைந்த மறு நாளிலேயே, பாடி இருக்கிறார் என்பதை உணரலாம். தேச பக்தராகவும்,தேசிய கவிஞராகவும், (வன்னிய சமுதாயப் பிரமுக ராகவும்), விளங்கிய கவிச் சிங்கம் ராஜரி´ அர்த்த நாரிச வர்மா மகாகவி பாரதியாரைப் போலவே தேச பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். 

இவர்சமஸ்கிருதத்தை கசடறக் கற்றவராகவும், ஆங்கிலப் புலமைப் பெற்றவராகவும், தமிழ்க் கவிஞராகவும், தமிழிசையான கர்நாடக சங்கீ தத்தை அறிந்தவராகவும் திகழ்கிறார்.

இவர் மகாகவி பாரதியின் பெயரால் வீரபாரதி என்ற வார மும்முறை இதழைக் காங்கிரசு கட்சியை ஆதரித்து வெளியிட்டார். பிரிட்டிஷ் அரசு அப் பத்திரிகையை எதிர்த்து வழக்குத் தொடுத்து நிறுத்தி விட்டது. (ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று கூறுவது மரபு. வர்மா மீண்டும் பிறப்பாய் பணி புரிவாய் என்று கூறுகிறார்.)

                       - பேரா.தி.வ. மெய்கண்டார்

கவிச்சிங்கம் வர்மா பாரதி மீது எழுதிய இரங்கற்பா....

இடியேறு எதிர்த்து படவர வென்னச்

செந்தமிழ் மாது நொந்து வருந்தவும்

இசைத்தமிழ் வாணர் அசையா தழுங்கவும்

நேற்று நின்னுடலுயிர் வேற்றுமை கண்ட

கூற்றுவ னென்னும் மாற்றலன் நின்னுயிர்

பருகின னன்றி யுருகின னின்றே

தமிழ்ச்சுவை யின்பஞ் சற்று மறியான்

அமிழ்த்தின் றேறல் அதுவென வறியான்

ஒப்பிலா பாரதி சுப்பிர மணியநின்

நாட்டுப் பாட்டின் நலஞ்சிறி துணரான்

கண்ணன் பாட்டின் கருத்தைத் தேறான்

வீரச் சுவையதில் விளங்குவ துணர்கிலான்

நேர மின்னும் நெருங்கிலை யுண்டான்

நினைக்க நினைக்க நெட்டுயிர்ப் பெடுக்கும்

வினைவிளை காலம் வேறில்லை

பினையும் பிறப்பாய் பெறுவாய் பணியே!

 -ஆர்வலன் சு. அர்த்தநாரீச வர்மா

இரங்கல் பாடலுக்கு விளக்கம்: 

இடிபோல் முழங்கும் ஆண் யானை குணங்கெட்டு மதம் பிடித்து வர, செந்தமிழ் அன்னை மனம் நொந்து வருந்தவும் இசை பாடுவோரும் தமிழ்ப் புலவரும் காலசையாமல் மனம் வருந்தி யழியவும் நேற்று எமன் என்னும் பகைவன் உன் உடலையும் உயிரையும் பிரித்து வேறாக்கினான். அவன் உன் உயிரைக் குடித்தானே தவிர இரக்கப் பட்டவனல்லன் ; உன் தமிழின் சுவையின் இன்பத்தைச் சிறிதும் அறிய மாட்டான். அது அமிர்தத்தின் தெளிவென்று அவனுக்குத் தெரியாது. இணையற்ற சுப்பிரமணிய பாரதி! கூற்றுவன் நின்று நாட்டின் நன்மையைச் சற்றும் உணரமாட்டான். கண்ணன் பாட்டின் கருத்தைத் தெரிந்து கொள்ள மாட்டான். அதற்குள் உன் உயிரையுண்டான். இதை நினைக்க நினைக்க மூச்சு திணறுகிறது. ஊழ்வினை உருத்து வந்து உன் உயிரைக் குடிக்கும் கலம் இதைவிட வேறில்லை. மீண்டும் பிறப்பாய் சுதந்திரப் போராட்டப் பணி புரிவாய்.

(கவிதா மண்டலம், நவம்பர் 2001, மற்றும் ஜனவரி 2011)

No comments: