Monday, September 6, 2021

வ.உ.சி. எனும் நவீனன்

 வ. உ. சி எனும் நவீனன்.


(வ. உ. சி குறித்த புதிய ஆவணத்தின் நகல் ஒன்று என்னிடம் சில ஆண்டுகளாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக எழுந்த சிந்தனைகளை வ. உ. சி பிறந்த நாளை யொட்டி கட்டுரையாக எழுதலாம் என நினைத்தும் ஒவ்வொரு ஆண்டும் தள்ளிப்போயிற்று. இந்த ஆண்டு அவரது நூற்றைம்பதாவது தொடக்கம் ஆகும். இனியும் தள்ளிப்போட முடியாது என்பதால் இப்பதிவு. இன்றும் கூட காலையில் தொடங்கிய பணி இடையூறுகளைக் கடந்து பின்னிரவில் தான் முடிந்தது,) 

 

வ. உ. சி ஒரு நவீன சிந்தனையாளர். அவரது சைவப் பின்புல மரபும், அரசியலில் திலகரின் சீடராக அறியப்படுவதும் அவரை ஓவியமாகத் தீட்டிய ஓவியர்களின் கை வண்ணமும்  மட்டுமல்லாமல் அவரது கருத்தியல்கள் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்படுவதும் அவரது நவீன சிந்தனயை மறைக்கிறது. 


அவர்தான் இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியவர்களில் ஒருவர். இந்தியாவிலேயே வேலை நிறுத்தம் மூலமாக 50 விழுக்காடு ஊதிய உயர்வை கோரல் மில் தொழிலாளர்களுக்கு பெற்றுத் தந்தவர். 


இந்தியாவின் அனைத்து பாரம்பரிய தொழில்களையும் காலனி அரசு தனது வன்முறைகள் மூலம் அழித்தொழித்தது. அன்னிய மூலதனத்தில் தொடங்கப்பட்ட தொழில்கள் மட்டுமே ஆதரிக்கப்பட்டன. இதனால் இந்தியாவின் பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் பிச்சைக்காரர்கள் ஆக்கப்பட்டனர். அல்லது புதிய மூலதனத்தில் தொடங்கப்பட்ட ஆலைகளில் கூலித் தொழிலாளர்கள் ஆனார்கள். 


இந்த இரட்டைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு கப்பல் நிறுவனத்தை வ. உ. சி தொடங்கினார். காலனி ஆட்சி தயவு இல்லாமல் பங்குகள் வெளியீடு மூலம் ரூபாய் 10 லட்சம் மூலதனத்தில் ஒரு சுதேஷி நிறுவனம் நிறுவப்பட்டது மட்டுமல்லாமல் அந்த நிறுவனத்தில் கப்பல்கள் வெற்றிகரமாக வருவாய் ஈட்டியதன் பின்னணியில் வ. உ. சி குழுவினரின் வனிக உத்திகள் பெரும் பங்கு வகித்தன. 


இலங்கைக்கு கிழக்கிந்திய கப்பல் கம்பெனி கட்டணம் ஒன்னேகால் ரூபாய் என்றால் சிதம்பரனார் ஒரு ரூபாயில் மகக்ளை ஏற்றிச்சென்றார். கம்பெனி கப்பலும் ஒரு ரூபாய் என கட்டணத்தைக் குறைத்தால் சிதம்பரனார் அரை ரூபாய்க்கு ஏற்றிச்சென்றார். இந்த வெற்றி தொடர்ந்திருந்தால் மேலும் பல சுதேஷி நிறுவனங்கள் தென்னிந்தியாவில் உருவாகி இது சுதந்தரமான பொருளாதார மண்டலமாக உருவாகியிருக்கும். மேலும் விதேஷி - சுதேஷி வனிகப்போட்டியால் தொழிலாளர்களின் கூலி பேர சக்தியும் வலுவடைந்திருக்கும்.


இதனால்தான் சிதம்பரனார் தனது அடிமடியிலேயே கை வைப்பதாக காலனி ஆட்சி எண்ணியது. அவரை அற்ப காரணம் காட்டி கைது செய்து சிறையில் அடைத்து வன்கொடுமைகள் மூலம் முடக்க நினைத்தது. ஆனாலும் அவர் உடல் முடங்கியதே தவிர அவரது நவீன சிந்தனைகள் முடங்க வில்லை. 


ஒரு பக்கம் தேசியத் தலைவர்கள் வ. உ. சியை பகிரங்கமாகப் புறக்கணித்தனர்.  இருந்தும் தொழிற்சங்கப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார். திரு. வி. க, பெரியார் போன்ற மறுமலர்ச்சி சிந்தனையாளர்களுடன் இணைந்து பணியாற்றினார். மறுபக்கம் வறுமையில் வாடினார். அவரது குடும்பம் அன்றாடங்களை கழிக்கவே திண்டாடியது. அவருக்குக் கொடுந் தண்டணை விதித்த வெள்ளையின நீதிபதி வாலேஸ் அவர்களே  வ. உ. சி குடும்பத்தின் வறுமையை அறிந்து அவரிடம் இருந்து பறித்த வழக்கறிஞர் உரிமத்தை மீண்டும் வழங்கினார். ஆனால் ஒரு அன்னிய அதிகாரிக்கு இருந்த இரக்க சிந்தனைகூட சுதேஷி வழக்கறிஞர்களுக்கு இல்லை. அவரை உதவி வழக்கறிஞராகக்கூட சேர்த்துக் கொள்ள ஒரு தமிழரும் முன்வரவில்லை.  ஒருவேளை தமிழக காங்கிரஸ் தலைவர்களும் பிரமுகர்களும் ஆதரித்திருந்தால் சிதம்ரனார் இன்னும் பிரமாண்டமாக வெளிப்பட்டிருப்பார். 


இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது அரசியல் அறத்தை வளர்த்துக் கொண்டார். அரசியல் விடுதலை மட்டுமல்லாமல் பொருளாதார விடுதலை, பண்பாட்டு விடுதலை மூன்றும் இணைந்தால் தான் முழுமையான விடுதலை என்பதை அறிந்தார். பெரியாருடன் மேலும் நெருக்கமாகி, காங்கிரஸ் மாநாட்டில் வகுப்பு வாரி பிரதிநித்துவம் கோரி தீர்மானம் முன் மொழிந்தார். மறுபுறம் தமிழரின் அறப்பண்பாட்டின் மீது கவனம் செலுத்தினார். திருக்குறளை ஆழ்ந்து கற்று புதிய உரையுடன் ‘மெய்யறம்’ எனும் நூலை எழுதினார். ஆசிரம சனாதன அமைப்புக்கு மாறாக குறள் அறத்தை முன்வைத்தார். தொடர்ந்து மேலும் பல நூல்களுக்கு உரை எழுதினார். இறுதியாக தொல்காப்பியரின் இளம்பூரணர் உரையை தனது விளக்கத்துடன் பதிப்பித்தார். 


அத்துடன் அனைத்து மதங்களையும் சமமாகப் பாவித்து மதநல்லிணக்கத்தைப் பேணினார். பகுத்தறிவை வளர்த்தெடுத்தார். பெரியாரின் கொள்கைகளை ஏற்று பல கூட்டங்களில் பேசினார். வ. உ. சி தலைமையிலேயே பகுத்தறிவு மாநாடு நடைபெற்றது. இறுதியாக பார்ப்பனியம் நீக்கப்பட்ட தமிழகமே முன்னேறும் என்று பிரகடனம் செய்தார். இந்த பிரகடனம் அவர் இறப்பதற்கு சில நாள்கள் முன்னர் மதுரையில் நடந்த பகுத்தறிவு மாநாட்டுக்கு வ. உ. சி அனுப்பிய வாழ்த்துச் செய்தியாகும். 


இதேபோன்று நவீன பொருளாதார சிந்தனைகளையும் வளர்தெடுத்துக் கொண்டு செயல்பட்டார். கப்பல் போக்குவரத்து நிறுவனம் இருபதாம் நூற்றாண்டின் நவீன மூலதன திரட்டல் முறையான பங்கு முதலீட்டின் மூலம் தொடங்கப்பட்டது. எனில் அவர் இறப்பதற்கு 23 நாள்களுக்கு முன்னர் அவர் எழுதிய உயில் போன்ற கடிதம் ஆச்சரியப்பட வைக்கிறது.


என்னதான் தனது குடும்பத்தின் அன்றாடங்களைச் சமாளிக்கவே அல்லல்பட்டாலும் தனது குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்து இரண்டு காப்பீட்டு நிறுவனங்களில் தலா ஆயிரம் ரூபாய் வீதம் தனது ஆயுளை காப்பீடு செய்துள்ளார் என்பது அந்த உயில் போன்ற கடித்தத்தில் தெரியவருகிறது. தனது பிற கடன்களுக்கு எந்தெந்த நகை. சொத்துகளை விற்றுக் கடனை அடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தகவல்களைக் கூறும் அக் கடிதத்தில் மேற்சொன்ன காப்பீடுகள் மூலம் தனது மரணத்துக்குப் பிறகு கிடைக்கும் தொகையைக் கொண்டு தனது இரு மணமாகாத மகள்களின் திருமணங்களை நடத்திவைக்க வேண்டும் என்று கோருகிறார். 


அப்போதே பங்குச் சந்தை, காப்பீடு போன்ற புதிய பொருளாதார சிந்தனைகள் கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. இந் நிலையில் சில ஆண்டுகள் முன்னர் கோயில்பட்டி சென்றபோது சிதம்பரனார் குறித்த புதிய ஆவணம் ஒன்றின் நகல் கிடைத்தது. அது கோவில்பட்டி கட்டிட கூட்டுறவு சங்க இயக்குனர்களில் ஒருவராக வ. உ. சிதம்பரனால் பங்காற்றியதைக் குறிக்கும் ஆவணம் ஆகும். இந்த ஆவணம் 11. 09. 1925 அன்று நடைபெற்ற கூட்டுறவு சங்க இயக்குநர் குழு கூட்டம் வ. உ. சிதம்பரனார் தலைமையில் நடைபெற்றதைக் குறிப்பிடும் அலுவலக குறிப்பு ஆகும். 


இக் கூட்டத்தில் அடுத்த நிதி ஆண்டு (1926 -27) நிதி நிலை அறிக்கை குறித்து கூட்டுறவு பதிவாளர் அவர்களிடம் வந்த சுற்றறிக்கை ஆங்கிலத்தில் வாசிக்கப்பட்டு தமிழில் மொழியாக்கம் செய்தும் கூறப்பட்டதையும் அடுத்த ஆண்டு கூட்டுறவு சங்க செயல்பாட்டுக்காக அரசிடம் இருந்து ரூ 30,000/- கடனுதவி கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் ஆவணம் தெரிவிக்கிறது. 


இக் காலகட்டங்களில் கோவில்பட்டியில் வாழ்ந்த வ. உ. சி வாழ்க்கை குறித்த சில அடிப்படை தகவல்களும் கிடைத்தன. பொதுவாக அங்கு அவர் வழக்கறிஞர் தொழில் செய்ததாக கூறப்பட்டாலும் தனித்து பெரிய வழக்குகளை எடுத்து நடத்தியதாக நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை. மிகச் சிறிய வழக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அப்படியே இருந்தாலும் பெரிய வழக்குகளில் வெற்றிபெற தேவையான சட்ட நுணுக்கங்களை வழங்குபவராக அல்லது உதவியாளர் என்ற அளவிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். அதாவது சிதம்பரனாரின் சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்திக்கொண்ட சமுதாயம்  அவரை வெளிப்படையாக அங்கிகரிக்கவில்லை என்பதாகவே தெரிகிறது.


இதனை எதற்கு இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் இங்கு சிதம்பரனாரின் வாழ்க்கை என்பது ஒரு நடுத்தர வகுப்பாரின் நிலைமைக்கு மேல் இல்லை. கடன்களை நம்பிதான் வாழ்ந்துள்ளார். ஆனால், அவரது நவீன சிந்தனைகள் மேலும் உரம் பெற்றுள்ளன. தமிழ்நாடு போன்ற ஒரு சமுதாயத்தில் கூட்டுறவு இயக்கத்தின் தேவையை இன்றிலிருந்து நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து செயலாற்றி உள்ளார் என்பது இந்த ஆவணத்தில் இருந்து தெரிகிறது. 


அதேபோல தமிழர்கள் பார்ப்பனிய நீக்கத்தின் அவசியத்தை உணர வேண்டும் என்பதை தனது செய்தியாக கூறிச் சென்றுள்ளார்.

கடைசிகாலம் வரை தமிழ் பண்பாட்டு மரபை ஆய்வு செய்தார். தொல்காப்பியத்தின் முக்கியப் பகுதிகளின் இளம்பூரணர் உரையை விளக்கங்களுடன் பதிப்பித்துள்ளார்.


ஆனால் இந்த தகவல்கள் அதன் ஆழ அகலத்துடன் வரலாற்றில் பதிவு செய்யப்பட வில்லை. கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் ஆகியவற்றுடன் சைவப் பற்றாளர் எனும் அடையாளம் மட்டுமே பதியும் படி செய்யப்பட்டிருக்கிறது.


வ. உ. சிதம்பரனாரின் ஆவது 150 ஆண்டு தொடக்கத்தை தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக கொண்டாட திட்டங்களை அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இச் சூழலில் வ. உ. சி என்ற ஆளுமை நவீன சிந்தனையின் ஊற்றாக சித்தரிக்கப்பட வேண்டும் என்பது பகுத்தறிவாளர்களின் அவா ஆகும்.

No comments: