Wednesday, March 2, 2022

பாசிசமே பார்ப்பனியம்

பாசிசமே பார்ப்பனியம் - பேராசிரியர் அ. கருணானந்தன் - கருஞ்சட்டைப் பதிப்பகம் - முதல் பதிப்பு பிப்ரவரி 2022 - பக்கங்கள் 198 - விலை ரூ 200/

●  பேராசிரியர் அ. கருணானந்தன் ( பி. 1944 ) சென்னை கல்லூரிகளில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றியதுடன் பல ஆய்வு கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி சமூக சிந்தனையாளர்களுக்கு வழிகாட்டியாய் விளங்கி வருபவர். ஆண்டு 2020ல் திராவிடர் கழக பண்பாட்டு மய்யத்தால், ' பெரியார் விருது ' வழங்கப் பெற்றவர் !

●  இந்திய வரலாற்று திரிபுகள் | திராவிடர் - தமிழர் வரலாற்று உண்மைகள் | புத்தவியல் | பெரியாரியல் | பார்ப்பன மோசடிகள் ஆகிய பல தலைப்புகளில், தொடர்ந்து மாணவர்களிடையே உரையாற்றி வருகிறவர் !

●  இன்று - வஞ்சனையும், வன்முறையும் தேசிய தர்மங்களாக கட்டமைக்கப் படுகின்றன ! பொதுமக்கள் தங்கள் உரிமைகளை, நலன்களை மறந்து விட்டு பண்பாட்டுக்கு ஆபத்து, பழைமைக்கு ஆபத்து என்ற சங்கிகளின் கோஷத்தில், திசை மாற்றப்பட்டு வருகின்றார்கள் !

●   இந்த சூழலில் - நம் நிலைப்பாடு என்ன ? இவற்றிற்கு காரணங்கள் என்ன ? இதன் வரலாற்று உண்மைகள் என்ன ? என்ற கேள்விகளுக்கான வரலாற்று அடிப்படையிலான பதில்களை தருகின்ற நூலாக படைத்துள்ளார் - பேராசிரியர் அ. கருணானந்தன்.

●  பாசிசம் என்றால் என்ன ? | பார்ப்பன அரசியல் கொள்கைகளின் வரலாறு. பார்ப்பன புரூட்டஸ்கள் | சமூகநீதிக் குரல்களும் ஆர்எஸ்எஸ் தொடக்கமும் | கீழடி : அவர்கள் ஏன் பதறுகிறார்கள் ? பார்ப்பன புரட்டுக்கு பதிலடி | நமது தேவையும் புதிய கல்விக் கொள்கையும் | புதிய கல்விக் கொள்கை 2019 - கேள்வி பதில் | என்ற ஆறு கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். 

●  பாசிசம் - பார்ப்பனியம் - பாசிசமே பார்ப்பனியம் போன்ற கருத்துக்களை தெளிவாக அறிந்து கொள்ள நூலில் பல தகவல்களை தந்துள்ளார். 

அவைகளிலிருந்து சில தகவல்கள் கவனத்திற்காக :

●  பாசிசம் என்றால் என்ன?

பேராசிரியரின் மொழியில் - " பாசிசம் என்பது தேசத்தை முன்னிலைப்படுத்தி, அந்த தேசத்து மக்களை, அந்த தேசத்திற்காக பலியிடப்பட வேண்டிய உறுப்பினர்களாக மாற்றுகின்றது. தேசம் தான் முக்கியம். Nation First and Last என்ற கொள்கை. அப்படி என்றால் என்ன ? - தனிமனித உரிமை, தனிமனித சுதந்திரம், சோசலிசம், கம்யூனிசம், தேர்தல் ஜனநாயகம், தாராளவாதம், பலகட்சி ஆட்சி இவைகளெல்லாம் தேசத்துக்கு விரோதமானது என்ற கொள்கை !"

●  பாசிசம் பற்றி மேலும் விளக்குகிறார் - " ஒற்றைக் கொள்கை, ஒற்றை ஆட்சி, ஒற்றைத் தலைமை, ஒற்றைக் கட்டுப்பாடு ! தேசம் என்பதற்காக -  நாம் இந்த மக்களை தேசத்திற்காக பலியிடக்கூடிய, தேசத்திற்காக தங்கள் உழைப்பை சிந்தக்கூடிய, ரத்தத்தை சிந்தக்கூடிய பலியாடுகளாக மாற்றுகின்ற மன நிலையின் மீது, அந்த ஒரு மனத் தளத்தின் மீது உருவாக்கப்படுகின்ற கட்டமைப்புதான் - பாசிசம் ! " என மாணவர்களுக்கு விளக்குவது போல எழுதியுள்ளார், பேராசிரியர்.

●  இந்தியாவிற்கு பாசிசம் என்றால் பார்ப்பனியம் அல்லது இந்துத்துவமே என எழுதுகிறார் பேராசிரியர். " பாசிசம் நமக்கு தெரியும் ! அதைவிட கொடுமையானதும் பழைமையானதும் இந்த இந்துத்துவம் " என விவரிக்கின்றார். 

●  இந்திய பாசிசம் அதாவது பார்ப்பனியம் என்பது 2000 ஆண்டுகள் தொன்மையானது. தொடர்ந்து வருவது என்பதையும் வரலாற்று காட்சிகளை சாட்சியாக்குகின்றார் ! 

அவ்வளவு ஏன் ? இன்றைய ஒன்றிய ஆட்சியை உற்றுக் கவனித்தால் - பாசிசமே இந்துத்துவம் என்ற கருத்தோடு ஒன்றிப் போவோம் !

●  பார்ப்பனியத்தின் புனித நூல் கீதை சொல்வதை ஆராய்ந்தால், இவர்கள் எவ்வளவு பெரிய பாசிசவாதிகள் என விளங்கும். கீதை சொல்ல வருகின்ற செய்தி என்ன ? கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்தது என்ன ? கொலை செய்ய தூண்டுவது தானே கீதை ? தங்கள் நலனுக்காக கொலையும் சரியென்று உபதேசிப்பது தானே கீதை ? அதனால் தானே - மராட்டிய சித்பவன் பார்ப்பான் நாத்துராம் கோட்சே, மகாத்மாவை கொலை செய்தான் ?

●  கீதையில் கிருஷ்ணன் சொல்கிறான், " போர் செய்வது உன் ( அர்ச்சுனன் ) கடமை ! கொலை செய்வது உன் கடமை ! கொலை செய்தே ஆக வேண்டும் ! எதற்காக கொலை, யாருக்காக கொலை, அதன் விளைவு என்ன என்பதைப் பற்றி கவலைப்படாமல் கொலை செய்தே ஆக வேண்டும் ! " என்று அவாள் தர்மத்தை வலியுறுத்துவதான் கீதை !

●  இதைப் போலத்தானே  இரண்டாம் உலகப்போரில், ஜெர்மனின் சர்வாதிகாரி ஹிட்லர், தனது நாசிப்படையினரை யூதர்களை கொல்லுமாறு ஏவினான் ! லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்தான் ! அதற்கு பெயர் பாசிசமென்றால், பார்ப்பனியத்தின் மறுபெயரும் பாசிசம் தான் ! பேராசிரியர் அ. கருணானந்தனின் இந்த நூல் நிறைய விஷயங்களை நமக்கு கற்றுத் தருகின்றது !

பொ. நாகராஜன். சென்னை. 02.03.2022.

********************************************

No comments: