Tuesday, March 22, 2022

ருடால்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல்

 டீசல் இன்ஜினைக் கண்டுபிடித்து தொழில் வளர்ச்சியில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் ருடால்ஃப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (Rudolf Christian Karl Diesel) பிறந்த நாள் - மார்ச் 18:

பிரான்ஸில் (1858) பிறந்தவர். இவரது அப்பா புத்தக பைண்டிங், தோல் பொருள் உற்பத்தி தொழில்கள் செய்தவர். பெற்றோர் ஜெர்மனியை சேர்ந்தவர்கள் என்பதால், பிரெஞ்ச் - பிரஷ்யா போரின்போது பிரான்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இங்கிலாந்தில் குடியேறினர்.

 படிப்பைத் தொடர்வதற்காக சிறுவன் டீசல் மட்டும் பிரான்ஸில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டான். இயந்திரங்களுடன் அதிக நேரம் செலவிடுவதில் அவனுக்கு கொள்ளை ஆசை. படிப்பிலும் கெட்டிக்காரன்.

 பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஜெர்மனிக்குச் சென்றவர், ஆக்ஸ்பர்கில் புதிதாகத் தொடங்கப்பட்ட தொழிற்கல்விக் கூடத்தில் சேர்ந்தார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு முனீச் நகரில் உள்ள ராயல் பவேரியன் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

 உடல்நலம் குன்றியதால் 1879-ல் படிப்பைத் தொடரமுடியவில்லை. அந்த நேரத்தில், சல்ஸர் பிரதர்ஸ் மிஷின் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் சேர்ந்து பொறியியல் நுணுக்கங்களைக் கற்றார்.

 முனீச்சில் தனது பேராசிரியர் கார்ல் வான் லிண்டேவின் குளிர்சாதனப் பெட்டி தொழிற்சாலையில் சேர்ந்தார். நவீன முறையில் குளிர்சாதனப் பெட்டியை வடிவமைக்க உதவினார். அடுத்த ஆண்டே இந்நிறுவனத்தின் இயக்குநரானார். இருவரும் இணைந்து பல இயந்திரங்களை வடிவமைத்தனர்.

 இன்ஜின்கள் குறித்தும் டீசல் ஆராய்ந்தார். அந்த இன்ஜின்களின் திறனை 4 மடங்கு அதிகரிக்க முடியும் என்று நம்பினார். இதற்காக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 10 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து விதவிதமான இன்ஜின்களை வடிவமைத்தார்.

 நீராவி இன்ஜினில் 90 சதவீத எரிபொருள் வீணாவதைக் கண்டறிந்தார். கார்னாட் சுழற்சி அடிப்படையிலான இன்ஜினை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினார்.

 இறுதியில் நீராவி இன்ஜினுக்கு மாற்றாக ‘கம்ப்ரெஷன் இக்னிஷன்’ இன்ஜினை கண்டுபிடித்தார். அதுவே அவரது பெயரில் டீசல் இன்ஜின் எனப்படுகிறது. டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886-ல் வெளியிட்டார்.

 பல நாடுகளிலும் டீசல் இன்ஜினுக்கு காப்புரிமை பெற்றார். டீசல் இன்ஜினில் சில வகையான தாவர எண்ணெய்களையும் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். பெட்ரோலியத்தில் இருந்து எடுக்கப்பட்டு டீசல் இன்ஜினுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கும் ‘டீசல்’ என்ற பெயரே நிலைத்துவிட்டது. டீசல் இன்ஜின் கண்டுபிடிப்பு, தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

 1913-ல் ருடால்ஃப் டீசல் திடீரென காணாமல் போனதாகவும், ஒரு வாரம் கழித்து அவரது உடல் நார்வே அருகே வடகடலில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உலகின் மிக முக்கிய கண்டுபிடிப்பாகப் போற்றப்படும் டீசல் இன்ஜினை உருவாக்கிய டீசல் 55 வயதில் மறைந்தார்.

கடலூர் சுந்தரராசன் பதிவு

No comments: