Thursday, March 31, 2022

ஆர்.எஸ்.எஸ். முன்னோடி பாரதி

ஆர்எஸ்எஸ் முன்னோடி பாரதி - மஞ்சை வசந்தன் - திராவிடர் கழக (இயக்க) வெளியீடு - பக்கங்கள் 80 - நன்கொடை ரூ 80/

●  " மூட நம்பிக்கையில் முதல்நிலை மூடநம்பிக்கை - பலர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வது ! அப்படிப்பட்ட ஒரு மூடநம்பிக்கை தான் - பாரதி முற்போக்காளர்; புரட்சியாளர்; சமத்துவ போராளி; பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தவர்; ஜாதி ஒழிப்புக்கு பாடுபட்டவர்; பொதுவுடைமைவாதி; தமிழை உயர்த்திப் பிடித்தவர் என்பன போன்ற சிறப்புகளை அவருக்கு சேர்ப்பது ! " ...என தனது முன்னுரையில் நூலாசிரியர் மஞ்சை வசந்தன் விளக்கம் தந்துள்ளார் !

●  மேலும் தனது முன்னுரையில், " உண்மையில் பாரதி அப்படிப்பட்ட பெருமைகளுக்கு உரியவரா என அறிய, உண்மையை உள்ளது உள்ளபடி ஒளிக்காமல், விருப்பு வெறுப்பின்றி இந்நூலில் உறுதி செய்துள்ளேன் ! " ..என தெளிவு படுத்தியுள்ளார். நூலின் பொருளடக்கமாக பத்து கட்டுரைகள் உள்ளன :

●  பாரதி ஓர் இந்து சனாதனவாதி | பாரதி ஜாதி ஒழிப்புப் போராளியா ? | ஆரிய இன மேலாதிக்கம் காத்தவர் | ஆரியத்தை உயர்த்தி தமிழைத் தாழ்த்தியவர் | திராவிட எதிர்ப்பாளர் ஆங்கில அரசின் ஆதரவாளர் | பாரதியின் இந்து மத வெறியும் மற்ற மத வெறுப்பும் | மத மாற்றத்தை எதிர்த்த பாரதி | ஆர்எஸ்எஸ் சித்தாந்த கர்த்தா பாரதி | பாரதியும் பெண்ணுரிமையும் | பாரதியும் பொதுவுடைமையும் |

●  பாரதி ஓர் இந்து சனாதனவாதி என்ற கட்டுரையில் இந்துத்துவாவின் முதன்மைக் கொள்கைகளை நூலாசிரியர் இவ்வாறு பட்டியலிடுகிறார் :

1) வர்ணாசிரம தர்மப்படி - பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்ற பிரிவுகள் இருக்க வேண்டும். அவை கடவுளால் செய்யப்பட்டவை.

2) வர்ணாசிரம தர்மப்படி, தாங்கள் தங்களது குலத் தொழிலை செய்ய வேண்டும்.

3) சமஸ்கிருதமே தேவமொழி. சமஸ்கிருதமே இந்தியாவின் ஒரே மொழியாக இருக்க வேண்டும்.

4) இந்தியா முழுக்க இந்து மதம் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற மதங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

5) இந்துக்களுக்கு ஒரே கடவுள் இராமன் மட்டுமே.

6) மனுதர்மமே சட்டம். அதையே பின்பற்ற வேண்டும்.

7) இந்தியா முழுக்க ஒரே கலாச்சாரம் தான். மற்ற கலாச்சாரங்கள் ஒழிக்கப்பட வேண்டும். 

இந்த கொள்கைகளை முழுமையாக தீவிரமாக ஆதரித்தவர் பாரதியார் என நூலாசிரியர் குறிப்பிடுகின்றார் !

●  ஆர்எஸ்எஸ்க்கு அடித்தளம் அமைத்தவர் பாரதி என்பதை நிறுவ - " பாரதி ஓர் இந்து மத வெறியர். இந்தியாவெங்கும் சமஸ்கிருதத்தை திணிக்க வலியுறுத்தியவர். மற்ற மதத்தினரை வெறுத்து பேசினார். நால்வருண முறை உயர்ந்தது. அது பாதுகாத்து நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றார். இந்தியாவை ஆரிய நாடு என்றழைத்தார். இந்து மதத்தை காக்கவே இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டும் என்றார். ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையை கொண்டிருந்தவர். அதையே வலியுறுத்தியவர் ! " ...என தனது ஆணித்தரமான வாதங்களையும் அதற்கான ஆதாரங்களையும் நூலாசிரியர் வைத்துள்ளார் !

●  நம் நாட்டில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பாரதி காணும் ஒரே தீர்வு - கலியுகம் ஒழிந்து மீண்டும் கிருதயுகம் வரவேண்டுமாம் ! அப்போது மீண்டும் நால்வருணம் ஏற்படுமாம். மேலும் வர்ணாசிரம முறை கைவிடப்பட்டதே பிராமணர் வீழ்ச்சிக்கு காரணமாம் ! என்னே ஜாதிய உணர்வு ! என்னே முற்போக்கு சிந்தனை !  

●  தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழிப்போம் என பாரதி பாடியது - தனியொரு பிராமணர்க்கு உணவில்லையெனில் என்ற பொருளிலா ? பிராமணர் வீழ்ச்சிக்காக அவரின் துயரம் அதைத்தானே விளக்குகிறது ?

●  பாரதி தனது இந்தியா ஏட்டில் (18.08.1906) கிறித்தவ பள்ளிகளில் இந்துப் பிள்ளைகளை சேர்க்க கூடாது என்று வலியுறுத்தி எழுதியை கண்டு, எவரும் பாரதியை ஆர்எஸ்எஸ் சங்கி என்று தான் முடிவுக்கு வருவார்கள். " அப்பள்ளியில் படிப்பவர்களுக்கு இந்துக் கடவுள் பற்றி கூற மாட்டார்கள். அதனால் இந்து பிள்ளைகளுக்கு இந்துக் கடவுள் பற்றி தெரியாமல் போகிறது. அதனால் அவர்களுக்கு தேசபக்தி வராது. கிறித்தவர்களாக மாறி விடுவார்கள். எனவே அவர்களை அப்பள்ளிகளில் சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்துகிறேன் ! " ...என்று தனது உண்மை முகத்தை காட்டுகிறார் !

●  பாரதியின் இந்து மத விசுவாசத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு - " இந்து மதம் ஜாதியைக் காக்கின்ற மதமாக இருந்தாலும், அந்த மதத்தால் பல கேடுகள் வந்தாலும், அது ஏழ்மைக்கும் வறுமைக்கும் காரணமாய் இருந்தாலும், அதன் சாஸ்திரங்களையும் நாம் கட்டாயம் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் நாம் அழிந்தே போவோம் ! "..

●  பாரதி, இந்து மதத்தை எந்த அளவிற்கு தூக்கி பிடிக்கிறார் பார்த்தீர்களா ?

அதனால் தான் தந்தை பெரியார் சொன்னார் - கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன் !

●  சோவியத் நாட்டில் லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்ய புரட்சியை, முண்டாசு கவிஞர் பாரதி எப்படி பாடினாரென்றால் - 

மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் | கடைக்கண் வைத்தாள் அங்கே | ஆகாவென் றெழுந்தது பார்யுகப் புரட்சி | கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான் | 

●  போற்றத்தக்க போல்ஷ்விக் புரட்சியை, மந்திரத்தால் வந்த மாங்காய் போல மாகாளி கடைக்கண் திறந்ததால் வந்ததாம் ! ஏன் அந்த மாகாளி தனது தாயகமான இந்தியா மீது கடைக் கண்ணை ஒரு முறை கூட திறக்க வில்லை என எந்த பாரதி விசுவாசிகளும் சிந்தித்து பார்க்க வில்லை ?

●  பாரதி தனது தொடக்க காலங்களில் (1908 - 26 வயது வரை ) முற்போக்கும் எழுச்சியும் கொண்டு எழுதியதை மறுக்கவில்லை.. ஆனால் பிற்காலத்தில் ( 1909 - 1921) முரண்பாடுகளும் பிற்போக்கு சிந்தனையாளராக தனது படைப்புகளை படைத்துள்ளார். பாரதியை ஆஹா ஓஹோ என தலையில் வைத்து கொண்டாடுபவர்கள் அவரது ஆரம்ப கால படைப்புகளை மட்டும் படித்து விட்டு பிற்கால படைப்புகளை படிக்காமலோ அல்லது கவலைப்படாமலோ கடந்து சென்றிருக்கின்றார்கள் என்பதைத்தான் இந்த நூல் நமக்கு புரிய வைக்கிறது !

●  பாரதி - யார் என்ற கேள்விக்கு

பாரதியாரின் படைப்புகளிலிருந்தே

பதில்களை தந்துள்ள பயனுள்ள நூல் !

பொ. நாகராஜன்.

பெரியாரிய ஆய்வாளர், சென்னை. 31.03.2022.

********************************************

No comments: