Saturday, December 21, 2024

பெரியார் எனும் சுய மரியாதையின் அடையாளம் : அ. மார்க்ஸ்

 பெரியார் 5

1969 -1970  ஆம் ஆண்டுகளில் நான் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைக் கல்வி படித்துக் கொண்டிருந்த போது கல்லூரி மற்றும் விடுதி வளாகங்களில் தந்தை பெரியார் உரை ஆற்றினார். கல்லூரி வளாகத்தில் பேசும்போது மாணவர்களுக்கான முதல் வரிசையில் அமர்ந்து அவரது உரையைக் கேட்கும் பேறு பெற்றவன் நான். 

கல்லூரியில் உரையாற்ற வந்தபோது அவர் தனது மூத்திரப் பையையும் சுமந்து வந்தார். அமர்ந்தவாரே பேசத் தொடங்கிய அவர், “பிள்ளைகளே! முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும். எனக்கு ரொம்பவும் உடல் நலமில்லை. திடீர் திடீர் என தாங்க முடியாத வலி வந்து என்னை அறியாமல் கத்தி விடுகிறேன். இன்று நான் பேசும்போது திடீரென அப்படிச் சத்தம் போட்டால் பயப்படாதீங்க…”- என்று கூறி அவர் தன் உரையைத்  தொடங்கியது இன்று என் நினைவுக்கு வருகிறது. அன்று நல்ல வேளையாக அப்படி ஏதும் நடந்துவிடவில்லை. ஆனால் இப்போது அந்தக் காட்சியும் நினைவும் கண்முன் தோன்றி கண்களில் நீர் கசிகிறது. நான் என் நினைவில் இருந்துதான் இதைச் சொல்கிறேன். அப்போது இன்றைப்போல கைபேசிகள் எல்லாம் கிடையாது. 

அடுத்த சில ஆண்டுகளில் அவர் நம்மை விட்டுப் பிரிந்தார்.

அவரது கருத்துக்கள் அத்தனை எளிதாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவை அல்ல. ’கடவுள் இல்லை’ என்பதையும், ‘தாலி’ ஒரு ஆணாதிக்க அடிமைச் சின்னம் என்பதையும் அத்தனை எளிதாக மக்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆனாலும், அவற்றை ஏற்றுக் கொண்டவர்களும் அப்போது இருந்தனர். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஆனபோதிலும் அவரை நேசித்தவர்களும் இருந்தனர். 

தஞ்சை மாவட்டம் ஒன்றில் என் இளமைக்காலம் கழிந்தது. அப்போது நான் படித்த ஒரத்தநாடு அரசுப் பள்ளிக்கு அருகில் நடந்த திராவிடர் கழகக் கூட்டம் ஒன்று இப்போது என் நினைவுக்கு வருகிறது. சுற்று வட்டாரத்தில் உள்ள மிகச் சாதாரணமான எளிய மக்கள் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு. மாட்டு வண்டிகளில் வந்து இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி அங்கு பேசப்பட்ட உரைகளைத் தரையில் அமர்ந்து கேட்டுச் சென்ற காட்சியின் நினைவுகள் நிழலாடுகின்றன. 

தனது அரசியலை ஏற்ற மக்களுக்கு அப்படி அவர் என்ன சொன்னார். கடவுளை நம்பாதே என்றார். சுய மரியாதையை இழக்காதே என்றார். 

ஒருமுறை ’பகுத்தறிவுக் கல்வி’ எனச் சொல்கிறீர்களே அதென்ன? - என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டபோது அவர் சொன்ன பதில் இதுதான்:

“பகுத்தறிவுப் பள்ளிகளை’ வைத்து ’நிர்வாணமான’ சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்து மக்களை எதைப்பற்றியும் எந்தப் பற்றுமற்ற வகையில் செல்லும் வரை சிந்தித்து முடிவுக்கு வரக் கற்பிப்போமே ஆனால்…..” 

என்று போகிறது அவரது கூற்று.

’பகுத்தறிவு’, ‘நிர்வாணம்’ ’பற்றறுப்பு’ ஆகியன பெரியாரியத்தில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவை. இந்தச் சமூகம் மக்கள் மீது ஏராளமான மூட நம்பிக்கைகளைப் பதிய வைத்துள்ளது. அவற்றின் மீதான நம்பிக்கைகளையும் பற்றுகளையும் துடைத்தெறிந்து நாம் நம்மை, நம் சிந்தனை வெளியை நிர்வாணம் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான். புத்தருக்கு மிக நெருக்கமானவர் பெரியார். ‘நிர்வாணம்’ எனும் கருத்தாக்கம் புத்தர் நமக்களித்த பெரும் கொடை. ஆழமான ஒரு சிந்தனை. 

கல்வி என்பது ”எந்தப் பற்றும்’ இல்லதவர்களாக மனிதர்களை ஆக்க வேண்டும்” - எனப் பெரியார் சொல்வது மிக மிக ஆழமான ஒரு கருத்து. எதெல்லாம் உன்னதமானவை என நம் சாத்திரங்களிலும், பொதுப் புத்தியிலும் முன்வைக்கப் படுகின்றனவோ அவை எல்லாவற்றில் இருந்தும் விடுதலை பெறுவதே நிர்வாணம். ஆம். கல்வி என்பது ஒரு வகையில் சமூக ‘உண்மைகளில்’ இருந்து விடுதலை பெறுவதே. அதாவது சமுகம் நம் மீது பதித்துள்ள பொய்யான மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதே.  பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தின் ஒரு சார்ரின் உழைப்பில் வாழ்வதில்லை. அதாவது உழைப்பைச் சுரண்டுவது இல்லை என்பதுதான்.

“ஒழுக்கம்” என்பதையும் கூடப் பெரியார் ஒரு "சூழ்ச்சியான கற்பிதம்” என்பார். 

'ஒழுக்கம்’ என்பதன் சமூக வரையறை எல்லோருக்கும் ஒன்றாக இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுவார்.  “தாசிக்கு ஒழுக்கம் ஒரு புருஷனையே நம்பி ஒருவனிடத்திலேயே காதலாய் இருக்கக் கூடாது என்பது. குலஸ்திரீ என்பவளுக்கு ஒழுக்கம் அயோக்கியன் ஆனாலும்,  குஷ்டரோகியானாலும் அவனைத் தவிர வேறு யாரையும் மனசால் கூட சிந்திக்கக் கூடாது என்பது...” என இப்படிப் பெரியார் சமூகப் பொதுப்  புத்தியில் நிலவும் மதிப்பீடுகள் குறித்து அவர் நிறையச் சொல்லுவார். முதலாளிக்கு ஒழுக்கம் தொழிலாளியைச் சுரண்டி பெரிய அளவில் லாபம் சம்பாதிப்பது. தொழிலாளிக்கு ஒழுக்கம் முதலாளிக்கு துரோகம் செய்யாமல் இருப்பது. பசுவை இரட்சிக்க வேண்டும் என்பது ஒருவர் நம்பிக்கை ஆனால்  இன்னொருவருக்கு பசுவைப் புசிக்கலாம் என்பதும் ஏற்புடைய ஒன்றுதான். கற்பு முறை ஒழிந்தால்தான் பெண்களுக்கு விடுதலை என்பார் பெரியார். இப்படிச் சமூகத்தில் நிலவும் நம்பிக்கைகள், வழமைகள், பொதுக் கருத்துக்கள், சாத்திரங்கள் என எல்லாவற்றைக் குறித்தும் ஆழமான சிந்தனைகளை முன்வைத்தவர் பெரியார்.

இரண்டு

ஒன்றை நாம் புரிந்துகொள்வது அவசியம். இப்படியெல்லாம் சொல்வதன் ஊடாகப் பெரியார் கல்விக்கு எதிரானவர் என்பதாகக் கருத வேண்டியதில்லை. இன்றைய கல்வி முறையில் உள்ள சிக்கல்கள், அவை மக்களுக்கான விடுதலைக் கல்வியாக அமையவில்லை என்பதை எல்லாம் இப்படிச் சுட்டிக்காட்டிய அதே நேரத்தில் அடித்தள மக்களின் கல்விமுறை, இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் அக்கறை உள்ளவராகவும். அடித்தள மக்களின் கல்வி உரிமைக்காகவும், இட ஒதுக்கீடு முதலியவற்றிற்காகவும் களத்தில் நின்றவராகவும் அவர் இருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இந்தக் கல்வி முறையின் போதாமையைச் சுட்டிக் காட்டுவதே அவர் நோக்கம். கல்வியின் ஆக முக்கியமான நோக்கம் கற்பவர்களைச் சுய மரியாதை உள்ளவர்களாக ஆக்குவது. அதற்கு இன்றைய கல்வி முறை பயனற்றதாக மட்டும் அல்ல அதற்கு எதிராகவும் உள்ளதைச் சுட்டிக் காட்டத்தான். 

கடவுள் நம்பிக்கை குறித்த அவரது கருத்தும் நுணுக்கமான ஒன்று. 

“நான் ஒரு நாத்திகனல்ல. தாராள எண்ணமுடையவன். நான் ஒரு தேசியவாதியுமல்ல. தேசாபிமானியுமல்ல. ஆனால் தீவிர ஜீவரஷா எண்ணமுடையவன். எனக்கு சாதி என்பதோ, சாதி என்பதன் பெயரால் கற்பிக்கப்படும் உயர்வு தாழ்வுகளோ கிடையாது.”  - இது பெரியார் தன்னைப்பற்றி சொல்லிக் கொண்டது.

பெரியாரை ஆக இறுக்கமான ஒரு நாத்திகர் என நம்பிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒருவேளை அவரது இந்தக் கூற்று அதிர்ச்சியாக இருக்கக் கூடும். இது ஏதோ அவர் விளையாட்டாய்ச் சொன்னதல்ல. படு ‘சீரியசாகச்’ சொன்னது. 

கடவுள் இருக்கா இல்லையா என்பதெல்லாம் ஒரு வெட்டி வாதம். அதற்கு முடிவே கிடையாது. இருப்பதாக நம்புகிறவன் இல்லை எனச் சொல்பவனையும், இல்லை என்பவன் இருக்கிறது எனச் சொல்பவனையும் ஒருவனை ஒருவன் முட்டாள் எனச் சொல்லிக் கொண்டே காலம் கழிப்பதுதான்  என்பதே பெரியாரின் கருத்து. 

ஒருவர் கேட்டார்: 

’உங்கள் முன் கடவுள் தோன்றி இப்போது என்ன சொல்கிறாய் எனக் கேட்டால் என்ன பண்ணுவீர்கள்?’ 

பெரியார் சொன்ன பதில்: “அப்படி கடவுளே என் முன்னால் வந்து நின்றால் அவரை கும்பிட்டுட்டுப் போறேன்..”

பெரியார் லேசுப்பட்டவர் அல்ல. “மக்களுக்கு ஆத்திகம் நாத்திகம் என்பதற்குப் பொருள் தெரிவதே இல்லை. நாத்திகன் என்று சொன்னால் கடவுள் இல்லை என்று சொல்கிறவன் அல்ல. இருக்கிறது என்று நான் ஒப்புக்கொள்ளவும் இல்லை. புராண, இதிகாச, வேத, சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர் களையே பார்ப்பனர் நாத்திகர் என்று குறிப்பிடுகின்றனர்” – என்பதுதான் இது குறித்த பெரியாரின் விளக்கம். 

“சமூக சீர்திருத்தம் என்றால் ஏதோ அங்கும் இங்கும் ஆடிப்போன, சுவண்டுபோன, இடிந்துபோன, பாகங்களைச் சுரண்டி, கூறுகுத்தி, சந்துபொந்துகளை அடைத்துப் பூசி மெழுகுவதுதான் என்று அநேகர் நினைத்திருக்கிறார்கள். ஆனால் நம்மைப் பொருத்தவரை நாம் அம்மாதிரித் துறையில் உழைக்கும் ஒரு சமுதாய சீர்திருத்தக்காரன் அல்லன் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். மற்றபடி நாம் யார் என்றால், என்ன காரணத்தினால் மக்கள் சமுதாயம் சீர்திருத்தப்பட வேண்டிய நிலைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடி அந்நிலை ஏற்படாமலிருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில் அடியோடு பேர்த்து, அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்கிறதான தொண்டை ஏற்றுக் கொண்டிருக்கிற படியால், சமுதாய சீர்திருத்தம் என்பதைப் பற்றி மற்ற மக்கள் அநேகர் நினைத்திருந்ததற்கு நாம் மாறுபட்ட கொள்கைகளையும், திட்டத்தையும், செய்கையையும் உடையவராய்க் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இதனாலேயேதான் பலவற்றில் மக்கள் உண்டு என்பதை இல்லை என்றும், சரி என்பதைத் தப்பு என்றும், தேவை என்பதை தேவையில்லை என்றும், கெட்டது என்பதை நல்லது என்றும், காப்பாற்றப்பட வேண்டியது என்பதை ஒழிக்க வேண்டும் என்றும், பலவாறாக மாறுபட்ட அபிப்பிராயங்களைக் கூறுபவராக, செய்பவராக காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.”

அத்தோடு நிறுத்தவில்லை. பெரியார் தொடர்வார்: 

”ஆனால் நம்போன்ற இப்படிப்பட்டவர்கள் பழிக்கப்படாமலும் குற்றம் சொல்லப்படாமலும் இருப்பதும் உலகில் நல்ல பெயர் சம்பாதிப்பதும், மதிக்கப்படுவதும், அருமை என்பது மாத்திரம் (எனக்கு) நன்றாகத் தெரியும்.”

பகுத்தறிவுக் கல்வி எனச் சொல்கிறீர்களே அதென்ன? - என்கிற கேள்விக்குப் பெரியார் சொன்ன பதில்: “இந்த நாட்டில் இன்று கல்வி என்னும் பெயரால் பலகோடிக் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து பல்கலைகழகம், கல்லூரி, உயர்தரப்ப பள்ளி என்பதாகப் பல்லாயிரக் கணக்கான பள்ளிகளை வைத்து கல்வி கற்பிப்பதைவிட, பகுத்தறிவுப் பள்ளிகளை’ மாத்திரம் வைத்து நிர்வாணமான சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்து மக்களை எதைப்பற்றியும் எந்தப் பற்றுமற்ற வகையில் செல்லும் வரை சிந்தித்து முடிவுக்கு வரக் கற்பிப்போமேயானால்...” - என்பதாகப் பெரியாரின் ‘பகுத்தறிவுப் பள்ளியின்’ வரையறை செல்கிறது. பெரியாரின்  ‘நிர்வாணம்’ எனும் கருத்தாக்கத்தை இப்படி நாம் பல்வேறு திசைகளின் ஊடாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

இரண்டு அம்சங்களை நாம் இதில் கவனிக்க வேண்டும்:

1. கல்வி ஒருவருக்கு நிர்வாணமான சிந்தனா சக்தியை அளிக்க வல்லதாக இருக்க வேண்டும்.

2. கற்பவரை அது எந்தப் பற்றுமற்ற நிலையிலிருந்து சிந்திக்கத் தக்கவராக ஆக்க வேண்டும்.

எனவே கல்வியின் நோக்கம் ஏதொன்றையும் திணிப்பது என்பதைக் காட்டிலும், ஏற்கனவே இந்தச் சமூகத்தால் திணிக்கப்பட்டவற்றிலிருந்து ஒருவரை மீட்டு நிர்வாணமாக்குவதே. எத்தகைய முன்முடிவுகளும் பற்றுகளுமின்றி ஒன்றை அணுகும்போதே சரியான முடிவுக்கு வர இயலும். எனவே முன்முடிவுகளைத் துறந்து நம்மை  நிர்வாணமாக்கிக் கொள்வது கற்றலின் முதற் படி.

மொத்தத்தில் அவர் சொல்வது இதுதான். இந்தச் சமூகம், உன் பெற்றோர் உட்பட, உனக்குச் சொல்லி வைப்பதை எல்லாம் காதில் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அப்படியே புத்தியில் ஏற்காதே என்பதுதான். 

மூன்று

இப்படி ஒரு சுய சிந்தனையாளனாக நம் முன் வாழ்ந்து மறைந்தவர் பெரியார், மக்களுக்கு, குறிப்பாகத் தமிழ் மக்களுக்குச் சுய மரியாதையையும், சுய சிந்தனையையும் ஊட்டுவதைத் தன் வாழ்நாள் பணியாக முன்வைத்து நீண்ட காலம் நம்மோடு வாழ்ந்து தனது 94 வது வயதில் மறைந்தவர் அவர். தனது கருத்துக்களை அவ்வப்போது எழுத்தாக்கி இன்றளவும் நமக்குத் தந்து சென்றுள்ளவர். இன்று உலகளவிலும், இந்திய தமிழ்ச் சூழல்களிலும் பல்வேறு மட்டங்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக மிகப் பெரிய அளவில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. .

பெரியார் உயிருடன் இருந்த போதும் பல்வேறு எதிர்ப்புகளையும் எதிர்கொண்டுதான் வாழ்ந்தார். அவர் மறைந்தபின்னும் இப்படியான எதிர்ப்புகளையும் அவதூறுகளையும் எதிர்கொள்பவையாகவே அவரது கருத்துக்கள் உள்ளன.

பெரியார் குறித்து ஏராளமாகப்பேசலாம். சுயமரியாதையுடன் வாழ வேண்டும் எனும் கருத்துடைய யாரும் இதை எளிதாகப் புரிந்துகொள்வார்கள். பெரியாரைக் கொண்டாடுவார்கள்.


(இப்போதைக்கு முற்றும். தேவையானால் இன்னும் இன்னும் தொடரும்)

Thursday, January 25, 2024

மாவோவின் நெடும்பயணம்- 3

 மாவோவின் நெடும்பயணம்- 3

"கோமின்டாங்"

1912 இல் மஞ்சு அரசகுலம் கவிழ்க்கப்பட்டு சீனா முதன் முறையாகக் குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டபோது, ஒரு பழமை வாய்ந்த நாட்டுக்கு அப்போது அவசியமாயிருந்த நவீன நிர்வாகத்தை வழங்குவதில் தலைமை ஏற்க மிகவும் ஆயத்தமாக இருந்ததாகத் தோன்றிய அரசியல் அமைப்பு "கோமின்டாங்"தான்.

"கோமின்டாங்" என்றால் நேரடிப் பொருளில் 'மக்கள் கட்சி' என்பதாகும். ஆனால் அது மேற்கத்திய மொழிகளில் "தேசியவாதக்கட்சி" என்று வழக்கமாக மொழி பெயர்க்கப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் சீனாவின் அரசியல் திசைவழியைத் தீர்மானிப்பதில் ஈடுபட்டிருந்த பல்வேறு தனிநபர் குழுக்கள், இராணுவக் குழுக்கள் போன்றவற்றிலிருந்து வேறுபட்டிருந்த கோமின்டாங் கட்சி முதலில் முன்னணிக் கட்சியாக ஆகியது.

சீனக் கிராமப்புறங்களில் இருந்த சீனப் பொதுவுடைமை அதிகாரத்தளங்களை அழித்து அவர்களை விரட்டுவது கிட்டத்தட்ட கோமின்டாங்குகளின் வெற்றியாக இருந்தது. அதுவே 1934இல் நெடும் பயணத்திற்கு இட்டுச் சென்றது.

கோமின்டாங்கின் தோற்றம் 1894-க்கு முந்திச் செல்கிறது. அப்போதுதான் ஒரு வெற்றிகரமான 27 வயது மருத்துவரான சன்-யாட்- சென் தனது மருத்துவத் தொழிலைத் தூக்கியெறிந்துவிட்டு முழுநேரப் புரட்சிகர அரசியலில் நுழைந்தார்.

ஒரு சில உறவினர்களுடனும் நண்பர்களுடனும் அவர் "சிங்சுங்கய் அல்லது சீனாவின் புத்துயிர்ப்பு சங்க"த்தை உருவாக்கினார். அது செயலூக்கமற்ற மஞ்சூக்களைத் சாக்கியெறிவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. 

சன், ஒரு அசாதாரணப் பண்பு நலன்களைக் கொண்ட 'கான்டனிய அறிவுஜீவி' ஆவார். அவர் கான்டனிலும் வியர்காங்ல் ஆங்கிலேய மருத்துவப் பேராசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்டவர்.

மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக சீனா பலம்பெற வேண்டுமானால், மேற்கத்திய அறிவியல் மற்றும் சமூக முன்னேற்றத்தை சீனா எட்டவேண்டுமானால் எண்ணற்ற மாறுதல்களைத் தூண்டிவிட வேண்டியிருக்கும் என்று அவர் நன்கு அறிந்திருந்தார்.

அவருடைய குழுவுக்கு ஹாங்காங்கிலும் மலேயாவிலும் இன்னும் தென் கிழக்காசியாவின் பிற பகுதிகளிலுமிருந்த கடல்கடந்த சீன வணிகர்கள் நிதியளித்தார்கள்.

அவர்களும்கூட மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்கும், பலவீனமான முதுகெலும்பற்ற மஞ்சு பேரரசுக்கும் உள்ள இடைவெளியைப் பற்றிக் கவலைப்பட்டார்கள்.

சன் புகழ்பெற்ற மூன்று கொள்கைகளைப் போதித்தார். 

சீனர்களின் குறுகிய பிராந்திய மற்றும் குழு விசுவாசத்தை அகற்றுவதற்கான தேசியவாதம், கிராமப்புறங்களில் நிலவும் சுயாட்சி நடைமுறையை தேசிய வாழ்க்கைக்குக் கொண்டுவரும் ஜனநாயகம், சாதாரண மனிதனின் பொருளாதாரத் தரத்தை முன்னேற்றுவதற்கான பொருளாதார வளர்ச்சி ஆகியவையே அவை.

தனிப்பட்ட முறையில் களங்கமற்ற சன், ஒரு எளிய ஏமாற்றமடைந்த மனிதராக இறந்தார். 

அவரது பங்களிப்புகள் தேசிய மறு கட்டமைப்புக்கான நிர்வாக அம்சங்களாக இருந்ததைவிட புரட்சிக்கே மிகவும் உகந்தவையாக இருந்தன. சீனக்குடியரசுப் புரட்சி பற்றிய நெருங்கிய அறிவு பெற்றிருந்த- அமெரிக்க வரலாற்றாசிரியர் ஒருவர், 'அவரது பலம் ஆக்கபூர்வமான அரசியல்வாதியுடையதல்ல, சிலை வழிபாட்டையும் மூடநம்பிக்கையையும் ஒழிப்பவருடையதாக இருந்தது' என்று எழுதினார்.' 

லட்சியவாதமும் உற்சாகமும் மிக்க சன், புரட்சியின் வெகுஜன ஈர்ப்பை மிகையாக மதிப்பிட்டார். மேலும் தனது அமைப்புக்கு ஒரு உண்மையான அதிகார அடித்தளத்தை நிறுவத் தவறினார்.

அவருடைய குழு பேரரசனுக்கு எதிரான ஒரு கலகத்தை நடத்தி ஆட்சியைக் கைப்பற்றத் திரும்பத் திரும்ப முயன்றது. ஆனால் வெற்றியடைய வில்லை. அதன் காரணமாக சன் தானே நாட்டைவிட்டு வெளியேறி ஐரோப்பாவிற்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டார்.

 'குத்துச்சண்டையர் கலகத்தின்' போது அவரைப் பின்பற்றியவர்கள் க்வாங்டங் மாகாணத்தில் அரசின் மீது ஒரு தாக்குதலைத் தொடுத்தனர். அது வெற்றிபெறவில்லை.

1905இல் அவரது குழு டோக்கியோவில் 'டுங்மெங்குய்' அல்லது 'கூட்டணி சங்கம்' என்ற பெயரில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டது. அது ஜப்பானில் இராணுவ அறிவியல் பயின்றுவந்த பல சீனர்களைக் கவர்ந்தது (அவர்களில் ஒருவர் சியாங் கே-ஷேக்).

1911-12 இல் புரட்சி தொடங்கியபோது சன் அமெரிக்காவில் இருந்தார். இரண்டு மாதங்கள் வரை அவரால் சீனாவை வந்தடைய முடியவில்லை.

இப்பொழுது 'கோமின்டாங்' அல்லது 'புரட்சிகரக்கட்சி' என்று அழைக்கப்பட்ட அவரது குழு போரில் முன்னணியில் இருந்தது.

புதிய கலக அரசாங்கத்தின் தற்காலிகத் தலைவராக சன் இதர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் சன்யாட்- சென்னுக்கும் அவரது நண்பர்களுக்கும் கடமைப்பட்டிராத, பேரரசு எதிர்ப்புப் போரணியில் கலந்து கொண்ட தனிநபர்களும் குழுக்களும் இருந்தனர். இவர்களில் ஒருவர் பேரரசு இராணுவத்தின் முன்னாள் படைத்தலைவர் யுவான் ஷிஹ்-காய் ஆவார். இவர் வடக்குப் பகுதியைச் சேர்ந்த உயர்குடியைச் சார்ந்தவர்; மஞ்சு அரச குடும்பத்தோடு மோதலில் ஈடுபட்டிருந்தவர்: வெளிப்படையாகவே வரம்புக்குட்பட்ட முடியாட்சி பற்றியும் பிற சீர்திருத்தங்கள் பற்றியும் பேசியவர். 

சன் தனது கட்சிக்கு 'கோமின்டாங்' என்று மறுபெயரிட்டார். ஏனெனில் புரட்சி அடையப்பட்டு விட்டது. தேசிய ஒற்றுமை இப்பொழுது உடனடி முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதாக இருந்தது. மேலும் மஞ்சு எதிர்ப்பு சக்திகளிடையே ஒரு ஐக்கிய முன்னணியை நிலைநாட்டும் பொருட்டு அவர் தம்மிச்சையாகவே தமது தலைமைப் பதவியை யுவானுக்கு ஒப்படைத்தார்.

ஆனால் யுவான் கூட்டணியின் மீது மேலாதிக்கம் செலுத்த முனைந்தார். மேலும் பல்வேறு சீர்திருத்தவாதிகளும் சீன விவகாரங்கள் நடத்தப்பட வேண்டிய முறைகள் பற்றி மிகவும் மாறுபட்ட கருத்துகளைத் தாம் வளர்த்துக் கொண்டு விட்டதை அறிந்தனர். பதட்டம் விரைவாக சீறியெழுந்தது. 

யுவான் தன்னைத்தானே பேரரசனாக அறிவித்துக் கொள்ள முடிவுசெய்தபோது, அவர் விரைவிலேயே வடக்கிலிருந்த பலம் வாய்ந்த போட்டியாளர்களால் வீழ்த்தப்பட்டார். 1917 வாக்கில் ஜப்பானின் கூட்டணியுடன் (நிதியளிக்கப்பட்டு) வடபகுதி யுத்தப் பிரபுக்களின் ஒரு குழுவின் கட்டுப்பாட்டில் பீஜிங் இருந்தது. அப்போது சன் யாட்-சென் தெற்கு மாகாணத்தின் தலைமைத் தளபதியாக அமர்ந்திருந்தார். சீனா பிரிக்கப்பட்டது. ஆனால் தேச முழுவதுமாக இருந்த அளவுக்கு சன் தெற்குப் பகுதியில் வெற்றிகரமாக இல்லை. அவரால் தெற்குப் பகுதிப் படைத்தலைவர்களை தனது உத்தரவுகளைப் பின்பற்றுவதற்கு இணங்க வைக்க முடியவில்லை.

மேலும் 1921இல் அவர்களில் ஒருவர் க்வாங்டாங் மாகாணத்தில் கைப்பற்றினார். வேறு எந்தப் பகுதியிலிருந்தும் பல்வேறு வடக்கு யுத்தப் பிரபுக்கள் மற்றும் அந்நிய சக்திகளிடமிருந்து சன் உதவி நாடவேண்டியிருந்தது.

இந்தக் கட்டத்தில் ஒரு, உண்மையான நட்புரீதியான அந்நிய உதவிக்கரம் சீனாவின் நன்றியறிதலைப் பெற முடிந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான அந்நிய நாடுகள், இன்னும்கூட சீன அறிவுஜீவிகளால் நம்பப்பட முடியாதவையாக இருந்தன.

 1917இல் சீனக்குடியரசு, ஜெர்மன் மீது போரை அறிவித்திருந்தபோதிலும் வெர்செய்ல்ஸ் கூட்டணி வெற்றியாளர்கள் ஷான்டுங் மாகாணத்தில் முன்னாள் போது, 'சோவியத் யூனியனின் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் நமது கட்சியுடன் சேர்ந்து பணியாற்ற ஆர்வம் கொண்டுள்ளனர், அனுபவ மற்ற பொதுவுடைமைக் கட்சி மாணவர்களுடனல்ல' என்று பொதுவுடைமை அகிலத் தூதுவர்களில் ஒருவரது சொற்களை, அநேகமாகத் திரும்பவும், சன் குறிப்பிட்டார்.

சன் தற்போது தனது கட்சியையும் அதன் இராணுவத்தையும் சோவியத் வழியில் மறு ஒழுங்கமைப்பு செய்யத் தொடங்கினார். அவரது இளம் அதிகாரிகளில் ஒருவரான சியாங் கே-ஷேக் இராணுவப் பயிற்சிக்காக மாஸ்கோவுக்கு அனுப்பப்பட்டார்.

பொரோடின் என்று அறியப்பட்ட மிகாயில் மார்க்கோவிட்ச் குருஜென்பெர்க், சன்னுக்கு அவரது தாயகத்தில் உதவ, ரசியர்களால் அனுப்பிவைக்கப்பட்டார்.

1924இல் கோமின்டாங்கின் முதலாவது பேராயம் அதிகாரபூர்வமான முறையில் மூன்று கோட்பாடுகளுக்கு மறுவிளக்கம் அளித்தது. நிலவுடைமையைச் சமப்படுத்துதல், தொழிற்துறையின் மீதான அரசுக் கட்டுப்பாடு, மற்றும் பல்வேறு சமூக சீர்திருத்தங்களை அது உள்ளடக்கியிருந்தது, பின்னர் அந்த ஆண்டின் பிற்பகுதியில் பொரோடின் மற்றும் பொதுவுடைமை அகிலத் தூதுவரான (கேலென் என்று அறியப்பட்ட) வாசிலி ப்ளூச்சர் இருவரும் கோமின்டாங் வேம்போவா இராணுவக்கழகத்தை உருவாக்கினர். அதில் சன்னின் இராணுவம் பயிற்சியளிக்கப்படவிருந்து.

சீனப்பொதுவுடைமையர்களுக்கும் கோமின்டாங்குக்கும் இடை யில் முதலாவது ஐக்கிய முன்னணி என்று தற்போது அறியப்பட்ட ஏற்பாட்டிற்கு சியாங் கே-ஷேக் தலைவராகவும் செள-என்-லாய் அதன் அரசியல் தலைமையின் துணைத்தலைவராகவும் இருந்தனர். இந்த நிகழ்வு இந்தக் காலகட்டத்தின் சின்னமாக இருந்தது.

நெடும் பயணத்தின்போதும் அதற்குப் பிறகும் மிகுந்த கசப்புணர்வுடன் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்ட, படைத்தலைவர்களில் பலர் இந்தப் நிறுவனத்தின் பட்டதாரிகளாக இருந்தனர்.

ஆனால் சன் 1925 இல் ஒரு ஏமாற்றமடைந்த மனிதராக இறந்துபோனார்; கோமின்டாங்கில் வாரிசுரிமைக்கான போராட்டம் தொடங்கியது. சன் இல்லாத நிலையில், அவரது இடதுசார்பு மற்றும் வலதுசார்பு ஆதரவாளர்கள் கட்சியில் தொடர்ந்து நீடிப்பதைக் கடினமாக உணர்ந்தனர். பொரோடினே இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் இருந்தார். 

ஒரு குழுவின் தொடக்கத்தில் சியாங் கே-ஷேக் இடம்பெற்றிருந்த ஒரு குழுவிற்கு அவர் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாறு- 2

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாறு- 2

தீக்குளித்த தியாகிகள்:

தமிழக வரலாற்றிலேயே- ஏன், உலக வரலாற்றிலேயே- இந்நாள் வரை கேட்டறியாத கண்டறியாத தியாக நிகழ்ச்சி 1965 சனவரி 26ஆம் நாள் நடந்தது.

சின்னச்சாமி:

திருச்சி மாவட்டம் கீழப் பழுவூர் என்ற சிற்றூரைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற தமிழ்மகன், அன்னை தமிழைக் காக்கத் தனக்குத்தானே தீயிட்டுக் கொண்டு உயிர் துறந்தார். தீக்குளித்த சின்னசாமிக்கு வயது 27. திருமணமானவர். திராவிடச் செல்வி என்ற அருமை மகள் உண்டு. கழகத்தின் பல போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர். கழக வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு உழைத்தவர்.

இந்தி மொழி ஆட்சி மொழியாவதைக் கண்டு சகிக்காமல் தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றித் தீயிட்டுக் கொண்டு மடிந்தார். இப்படி இதற்கு முன்பு தாய் மொழிக்காகத் தன்னைத் தானே சாம்பலாக்கிக் கொண்டவர் வேறு யாரும் இலர். மொழிப்போரில் இப்படி தன்னைத் தானே தூக்கி நெருப்பில் போட்டுக் கொண்ட முதல் மனிதன்- முதல் வீரன்- முதல் தியாகி -சின்னச்சாமி ஆவார்.

சிவலிங்கம்:

கழகம் அறிவித்த துக்க நாளான சனவரி 26-ஆம் நாள் காலை, சிவலிங்கம் தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, தீயிட்டுக் கொண்டார். தீயில் கருகி அவர் மாண்ட கோரக் காட்சியைக் கண்ட ஆண்களும் பெண்களும் ஓ வெனத் கதறி அழுதார்கள்.

இவர் சென்னை கோடம்பாக்கம் விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர். தி.மு.கழகத்தின் தீவிர உறுப்பினர். சென்னை மாநகராட்சியில் ஏவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அரங்கநாதன்:

இந்தியின் ஆதிக்கத்தால் மனம் வெதும்பிய விருகம்பாக்கம் அரங்கநாதன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீயிட்டு மடித்தார்.

வீரப்பன்:

கடந்த சில நாட்களாக நடந்து வந்த கொடுமைகளைக் கண்டு மனங்கலங்கிய வீரப்பன். பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீயில் கருகிச் செத்தார். திருச்சி மாவட்டம் ஐயம்பாளையம் என்னும் கிராமத்துப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர் அவர்.

முத்து:

விவசாயியான முத்து, தி.மு.க.வின் அனுதாபி. இந்தியை எதிர்க்கத் தன் உடலில் தீயிட்டுக் கொண்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிப்போய்த் தீயை அணைத்தனர். மருத்துவ மனைக்குத் தூக்கிச் சென்றும் அவர் பிழைக்கவில்லை-மாண்டு போனார்.

கோவை மாவட்டம் சத்தியமங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அவர்.

மாயவரம் ஏ.வி.சி .சுல்லூரி மாணவரான சாரங்கபாணி, கல்லூரித்திடலில் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொண்டு, "இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!" என்ற முழக்க மிட்டவாறு சுருண்டு விழுந்தார். அந்த முழக்கத்தைக் கேட்ட மாணவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். குற்றுயிராக இருந்த அவரை மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள். "தமிழ்த் தாய்க்கு என் உயிரைத் தந்து விட்டேன்!" என்று முணுமுணுத்தவாறு அவர் உயிர் பிரிந்தது.

சிதம்பரத்தில் மாணவர் பலி!

அண்ணா மலை நகரில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் சென்றார்கள். போலீசார் சுட்டதில் இராசேந்திரன் என்று கல்லூரி மாணவனின் நெஞ்சிலே குண்டு பாய்ந்தது. அவன் துடிதுடித்து இரத்த வெள்ளத்தில் விழுந்து அங்கேயே உயிரை விட்டான்.

(கே.ஜி.இராதாமணாளன் எழுதிய 'திராவிட இயக்க வரலாறு' என்னும் நூலில் இருந்து)

1965 இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாறு...1

1965 இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாறு...1

ஆட்சி மொழிச் சட்டத்தால் கொந்தளிப்பு!

பாராளுமன்றத்தில் 1963 ஏப்ரல் 13இல் உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ஆட்சி மொழி மசோதாவைத் தாக்கல் செய்தார்.

1965 சனவரி 26ஆம் நாள் முதற்கொண்டு இந்தி மொழி மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கும் என்று அறிவிக்கும் மசோதா ஆகும் இது. அதன்பிறகு அரசாங்கத்தின் ஆணைகள் அனைத்தும் இந்தி மொழியிலேயே வெளியாகும். எல்லாநடவடிக்கைகளும் இந்தியிலேயே நடக்கும். இவை மசோதாவின் முக்கிய விதிகளாகும்.

இம்மசோதாவின் மூன்றாவது விதியின் படி ஆங்கிலத்தின் இடத்தை இந்தி பூர்ணமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. இதனால் இந்தி பேசாத மக்களுக்கு நிரந்தரத் தீங்கு ஏற்படும். இந்தி ஆதிக்கத்துக்கு அவர்கள் அடிமைகளாக வாழ நேரிடும்.

டில்லி மேலவையில் அறிஞர் அண்ணாவும் மக்கள் அவையில் நாஞ்சில் மனோகரனும், க. இராசாராமும் இம்மசோதாவைக் கண்டித்துப் பேசினார்கள்.

எதிர்ப்பை எல்லாம் துச்சமென உதறித் தள்ளிவிட்டுக் காங்கிரசு அரசு இம்மசோதாவை நிறைவேற்றி விட்டது.

இம்மசோதாவைக் கண்டித்துச் சென்னைக் கடற்கரையில் 1963 ஏப்ரல் 29ஆம் நாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடை பெற்றது. ஆட்சி மொழிச் சட்டத்தைக் கண்டித்துப் பல கட்சித் தலைவர்கள் பேசினார்கள்.

கடைசியாகப் பேசிய அண்ணா, "ஆட்சி மொழி மசோதா மக்களின் எண்ணத்துக்கு மாறாக நிறைவேறிவிட்டது. தென்னக மக்கள் இதைத் தடுத்தே தீர வேண்டும். தமிழ் நாடெங்கும் அதற்கான கிளர்ச்சியில் மக்கள் ஈடுபடவேண்டும். இந்த அக்கிரமத்தைத் தடுத்து நிறுத்த நாம் போர்க்கோலம் பூண வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை உணருகிறேன். அந்த உணர்வு ஒவ்வொருவர் மனதிலும் உருவாக வேண்டும் என்று விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

ஆட்சி மொழிச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது என்று கூட்டம் முடிவு செய்தது. 

எரிப்புப் போராட்டம்!

சென்னையில் இந்தி எதிர்ப்புப் பொதுமாநாடு 1963 அக்டோபர் 13-ஆம் நாள் நடைபெற்றது. அறிஞர் அண்ணா தலைமை வகித்தார்.

மாநாடு தொடங்குவதற்கு முன்பு மாபெரும் ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. மாநாட்டில் தலைவர்கள் அனைவரும் பேசிய பின்பு அண்ணா போராட்டத்திட்டங்களை அறிவித்து, உணர்ச்சி மிகு பேருரை நிகழ்த்தினார்.

அண்ணா பேசியதாவது:

திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டங்களுக்காக அலைந்து திரியாது. போராட்டம் நடத்த வேண்டிய நிலை வந்தால் சும்மா இருக்காது.

இந்த மாநாடு வெறும் மாநாடு அல்ல! இந்த நாட்டிற்கு வந்த கேட்டினை விளக்கவும், அலசி ஆராய்ந்து முடிவெடுக்கவும் கூட்டப்பட்ட மாநாடு ஆகும்.

தி.மு. கழகத்தினால் நடத்தப் படும் இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்- இரண்டு வகையில் நடைபெறும்.

ஒன்று அரசியல் சட்டத்தின் மொழிப்பிரிவான 37 வது விதியைப் பகிரங்கமாக அறிவித்துவிட்டுப் பொது இடத்தில் கொளுத்துவது, மற்றொன்று அரசாங்க அலுவலகங்களிலும், இந்திப் பிரச்சார சபைகளிலும் மறியல் செய்வது.

இந்தப் போராட்டங்கள் இரண்டையும் ஐந்து ஐந்து பேராக நடத்திச் செல்வார்கள்.

1963 நவம்பர் திங்கள் 17-ஆம் நாள் சென்னையில் துவங்குகின்ற இந்தப் போராட்டம், 1965 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 24-ஆம் நாளோடு முடிவடையும்.

இந்தப் போராட்டத்தின் முதல் அணியில் நான் பங்கு கொண்டு சட்டத்தை எரிக்க இருக்கிறேன்! அதற்கடுத்து பதினைந்து நாட்கள் பிரச்சாரம் நடைபெறும்! அதற்கு அடுத்த நாள் மறியல் போராட்டம் நடைபெறும்! இந்த மறியலிலும் ஐந்துபேர் பங்கு கொள்வார்கள்.

அதற்கு அடுத்து இன்னொரு மாவட்டத்தில் சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறும். அதன்பிறகு பிரச்சாரம், அதன் பிறகு மறியல் போராட்டம்! இப்படியே எல்லா மாவட்டங்களிலும் சட்ட எரிப்பும், மறியலும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்! 1965ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 24 ஆம் நாள் இந்தப் போராட் டத்தின் முதல் கட்டம் முடிவடையும். அதன்பிறகு இரண்டாவது கட்டப் போராட்டம் பற்றி முடிவு எடுக்கப்படும்.

உங்களிடத்தில் துப்பாக்கி இருக்கிறது. எங்களிடத்தில் உயிர் இருக்கிறது!

நீங்கள் சுடத் தயார் என்றால், நாங்களும் சாகத் தயார் என்ற உறுதியோடு ஆட்சியாளர்களுக்கு அறிவித்து விட்டுப் போராட்டக் களம் நோக்கிப் புறப்பட உங்களை அழைக்கிறேன்!

அண்ணாவின் இந்தப் போர்ப்பரணியைக் கேட்டு, மக்கள் வீறு கொண்டார்கள். எந்தத் தியாகத்துக்கும் தயார் தயார் என்று தோள் தட்டி எழுந்தார்கள். போர்க்களம் காணத் துடித்து நின்றார்கள்.

தி.மு.கழகத்தின் போராட்டத்தை அண்ணா வெளியிட்டதும் காங்கிரசு அரசு அடக்கு முறைகளைக் கட்டவிழ்துவிட்டது. முக்கிய நகரங்களில் 144 வது தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 12-ஆம் நாள் இரவு கழக முன்னணியினர் பலர் கைது செய்யப் பட்டார்கள்.

சென்னைக் கடற்கரையில் சட்டப்பிரிவை எரித்துப் போராட் டம் நடத்துவதற்காக நவம்பர் 16-ஆம் நாள் அண்ணா காஞ்சி காரில் புறப்பட்டார். அவரோடு சட்ட எரிப்பில் ஈடுபடவிருந்த ஐவர் அணியினரும் வந்தனர். அமைந்தகரை அருகில் அண்ணாவின் காரைப் போலீசார் மறித்தனர். அண்ணாவையும், அவரோடு வந்த ஐவர் அணியின ரான டி.எம்.பார்த்தசாரதி, டி.கே.பொன்னுவேல், தையற்கலை கே.பி. சுந்தரம், வி.வெங்கா ஆகியோரையும் கைது செய்தனர்.

அறிஞர் அண்ணா மற்றும் நால்வர் கைது செய்யப்பட்ட செய்தி நகர்முழுவதும் காட்டுத்தீ போல் பரவி விட்டது. இவர்களை அழைத்துப் போகும் சாலையின் இருபக்கங்களிலும் மக்கள் கூடியிருந்து "அறிஞர் அண்ணா வாழ்க!"" "இந்தி ஒழிக!" என்று தொடர்ந்து முழக்கமிட்டவாறு இருந்தார்கள்.

அண்ணா கைது செய்யப்பட்டதால் அன்று சட்ட எரிப்புப் போராட்டம் நடைபெறவில்லை. இதனால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அண்ணாவுக்கு ஆறுமாதக் கடுங்காவல்:

அரசியல் சட்டப் பிரிவைக் கொளுத்த முயன்றதாக அண்ணா மீதும். டி. எம். பார்த்தசாரதி, டி.கே. பொன்னுவேல். கே.பி. சுந்தரம். வி. வெங்கா ஆகியோர் மீதும் வழக்குத் தொடுக்கப் பட்டது. இந்த வழக்கில் வழக்கறிஞரை வைக்காமல் அண்ணாவே வாதாடினார்.

இந்த வழக்கில் டிசம்பர் 10-ஆம் நாள் தீர்ப்புக் கூறப்பட்டது. அண்ணாவுக்கும் மற்ற நால்வருக்கும் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

அண்ணா சிறைக்கோட்டம் புகுந்ததும், போராட்டம் தீவிர மடைந்தது.

தொடர்ந்து மாதந்தோறும் நடைபெற்றதால் தி.மு.கழகத் தலைவர்களும் தொண்டர்களும் நாடுமுழுவதும் போராட்டத்தில் குதித்துச் சிறைத் தண்டனை பெற்றார்கள். காஞ்சிபுரத்தில் ஏ.கோவிந்தசாமியும் அவர் அணியினரும் சட்டத்தை எரித்து 6 மாதம் கடுங்காவல் பெற்றார்கள். எஸ்.எஸ். தென்னரசு திருப்பத் தூரிலும், நாவலர் நெடுஞ்செழியன் கோவையிலும், பேராசிரியர் அன்பழகன், கே.ஏ. மதியழகள் சென்னையிலும் மறியல் செய்து தண்டனை பெற்றார்கள். சட்டத்தை எரித்து 75 மறவர்களும், மறி யல் போரில் 1200 மறவர்களும் சிறைக் கோட்டம் புகுந்தார்கள்.

சட்டஎரிப்புப் போராட்டமும் மறியல் போராட்டமும் தமிழக மக்களிடையே பெரும் எழுச்சியையும் துடிப்பையும் ஏற்படுத்தின.

( கே.ஜி.இராதா மணாளன் எழுதிய திராவிட இயக்க வரலாறு என்னும் நூலில் இருந்து)

Wednesday, January 24, 2024

தமிழ் புத்தாண்டு அறிவிப்பு செல்லும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை செப். 23, 2006

தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தது செல்லும் என உயாநீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த எஸ் . சிவசுப்பிரமணிய ஆதித்தன் என்பவர்,

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். சித்திரை மாதம் 1-ம் தேதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். எனவே, சித்திரை 1-ந் தேதி கோவிலில் தமிழ் பத்தாண்டு சிறப்பு பூஜை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி கே.சந்துரு விசாரித்து நேற்று (செப்-22) தீர்ப்பு அளித்தார். 

சித்திரை 1-ம் தேதி தான் தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்பதற்கான ஆதாரத்தை மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. கோவிலின் பழக்க வழக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மனுதாரர் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளை சட்டப்படி அணுக வேண்டும் அவர்களை அணுகாமல் மனுதாரர் நேரடியாக நீதிமன்றத்தை அணுகமுடியாது.

பொதுவாக நாட்காட்டிகள் சம்பந்தமாக பல்வேறு விவாதங்கள் உள்ளன. மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகள் குறித்து பல்வேறு காரசார விவாதங்கள் நடந்து வருகின்றன...

முற்காலங்களில் தமிழ் நாட்காட்டிகள் மாற்றப்பட்டுள்ளன. எனவே தற்போது அரசு மாற்றி உள்ளது ஒன்றும் புதிதல்ல. அரசியல் சட்டப்படி அதுபோன்று மாற்றுவதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. அரசு ஒரு வல்லுனர் குழுவை அமைத்து மொத்தம் உள்ள 60 தமிழ் ஆண்டுகளின் சுழற்சியில் மாற்றம் கொண்டு வருவதற்கு ஆலோசனை கேட்கலாம்.

அதேபோன்று சமஸ்கிருதத்தில் உள்ள தமிழ் ஆண்டுகளின் பெயர்களை மாற்றம் செய்யவும் ஆலோசனை கேட்கலாம். தமிழ் மொழி தான் ஆட்சி மொழி என்று கொண்டு

வர அரசுக்கு எப்படி அதிகாரம் உள்ளதோ, அதேபோன்று தமிழ் நாட்காட்டிகள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கவும் அரசுக்கு அதிகாரம் உள்ளது.

எனவே தை மாதம் 1-ம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது சட்டவிரோதம் இல்லை . சித்திரை மாதத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இந்து மத வழிபாடுகளில் ஒரு பகுதி என்று மனுதாரர் தெரிவித்து இருப்பது மதசாயம் பூசும் செயலாகும் என்று தனது தீர்ப்பில் கூறிய நீதிபதி மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்தார்.

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்'

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 23-1-2008-ல் சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், தை மாதத்தின் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பை காங்கிரஸ் சார்பில் இ.எஸ்.எஸ். ராமன், பாமக சார்பில் கி. ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என். நன்மாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வை. சிவபுண்ணியம், மதிமுக சார்பில் மு. கண்ணப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கு. செல்வம் ஆகியோர் சட்டப்பேரவையில் வரவேற்றுப் பேசினர்.

1939-ல் திருச்சியில் நடைபெற்ற அகில இந்தியத் தமிழர் மாநாட்டில் சோமசுந்தர பாரதியார், பெரியார், மறைமலை அடிகள், பாரதிதாசன், திரு.வி.க., தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், பி.டி. ராஜன், பட்டுக்கோட்டை அழகிரி, உமாமகேசுவரனார், ஆற்காடு ராமசாமி முதலியார் ஆகியோர் பங்கேற்றனர். அதில் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவிக்கப்பட்டது.

2008-ல் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டதும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து ஆகியோர் அதனை ஆதராங்களுடன் வரவேற்றனர்.

ஆனாலும் 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தனர்.

இதனால் திமுகவுக்கு எந்த அவமானமும் இல்லை. அதிமுக அரசின் முடிவால் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு இல்லை என ஆகிவிடாது. நான் ஏற்கெனவே தெரிவித்தவாறு, சித்திரை முதல் நாளில் விழா கொண்டாடுவோரை நாம் தடுக்க மாட்டோம். தை முதல் நாளை ஏழை - பணக்காரர் வேறுபாடின்றி தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.


மாவோவின் நெடும்பயணம் - 2

மாவோவின் நெடும்பயணம் - 2

சீன வரலாற்றில் விவசாயிகள் கிளர்ச்சி ஒரு பெரும் பங்கை வகிக்கிறது. பெரும்பாலான பேரரசர்கள், தம் மக்களிடமிருந்து வரி வசூல் கெடுபிடி, கட்டாய ராணுவ சேவை, கட்டாய உழைப்பு ஆகிய நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகள் கிளர்ச்சியும் கலமும் நடைபெற்றன.

இத்தகைய விவசாயிகள் எழுச்சி முதன் முதலில் ஷேண்டங் மகாணத்தில் கி.பி.18 ஆம் ஆண்டில் தொடங்கிய சிவப்பு புருவங்கள் ஆகும். புரட்சியாளர்களின் குழுக்கள் தங்கள் புருவங்களில், புரட்சியின் அடையாளக் குறியீடாக, சிவப்பு வண்ணத்தை தீட்டுக் கொண்டு, அரசு அதிகாரிகளையும் நிலப் பிரபுக்களையும் கொன்று குவித்தனர். இக் கிளர்ச்சி கி.பி.25 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

பின்பு கி.பி.184 இல் 'மஞ்சள் தலைப்பாகைகள்' கிளர்ச்சி தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட மதம், சித்தாந்தத் தலைமை உருவானது.

கி.பி. 589 இல் சூய் அரசகுலம், டாங் அரசகுலம் ஆட்சிக்கு வந்தது. பண்ணை நிலங்களின் சமமான விநியோகத்தையும், விவசாயிகளின் உடைமையும் பாதுகாத்தது. கி.பி. 860 இல் செக்கியாங் மகாணத்தில் பஞ்சம் ஏற்படுத்திய பேரழிவு மீண்டும் ஒரு விவசாயிகள், படிப்பாளிகள் கிளர்ச்சியை தோற்றுவித்தது. கி.பி. 960 இல் சுங் அரசகுலம் நிறுவப்படும் வரை இது தொடர்ந்தது. கி.பி. 1280 இல்  மங்கோலியர் படையெடுப்பு நடைபெற்றது. பின் வாரிசு வகையில் துறவியான சூ யுவான் - சாங் என்ற விவசாயியால் மங்கோலியர்கள் தூக்கி எறியப்பட்டனர். அத்துறவி மிங் அரச குலத்தின் முதல் பேரரசன்.

சீனாவின் வடக்கில் மஞ்சுக்களின் படையெடுப்பு, ரகசியக் குழுக்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றோடு விவசாயிகள் எழுச்சியும் சேர்ந்து மிங் வம்சத்தை முடிவுக்கு கொண்டு வந்தன.

மஞ்சு அல்லது சிங் வம்சம் தொடக்கத்தில் புகழ்மிக்க ஒன்றாக விளங்கியது. சி யென்- லுங் காலத்தில், 18 ஆம் நூற்றாண்டில் மிகப் புகழ் பெற்று விளங்கியது.

பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் 'வெண்தாமரை', 'சொர்க்கத்தின் சட்ட சங்கம்' போன்ற ரகசியக் குழுக்கள் செயல்பட்டன. இதில் முதன்மையானது 'டாய்பிங்' எழுச்சியாகும்.

டாய்பிங்குகள் , பல அம்சங்களில் காலத்துக்கு முந்தியவர்களாக இருந்தார்கள். நிலங்களையும், உணவையும், உடையையும் தங்களுக்குள் நியாயமாகப் பகிர்ந்து கொண்டார்கள்.

அபின், புகைப்பிடித்தல், காலங்காலமாக இருந்து வந்த பழக்கமான பெண்களின் பாதங்களை கட்டி வைப்பது போன்றவற்றிக்கு எதிராக இருந்தார்கள். பெண் விடுதலை, விதவை மறுமணம் ஆகியவற்றிற்கும் குரல் கொடுத்தனர்.

சொத்தில் மீதுள்ள எல்லாப் பற்றுக்களையும் துறந்தார்கள்.

ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் பொதுவுடமையாளர்கள் செய்தது போல பெரும் நகர்ப்புற மையங்களின் எதிர்ப்பைப் புறக்கணித்து கிராமப் புறங்களில் தங்களது ஆதரவைக் கட்டியமைத்தார்கள்.

"உலகின் நிலம் உலகின் மக்களால் பொதுவில் உழப்பட வேண்டும்" என்று டாய்பிங்கின் பாடநூல் ஒன்று கூறியது.

"இங்கே நமக்குப் பற்றாக்குறையிருந்தால் மக்கள் வேறு பகுதிக்குக் குடிபெயர்க்கப்பட வேண்டும். இதேபோல பிற இடங்களில் இப்படிச் செய்தால் ஒரு பகுதியின் உபரி இன்னொரு இடத்தின் பஞ்சத்தைப் போக்கலாம். சொர்க்கத்திலிருக்கும் தந்தையாகிய கடவுளால் வழங்கப்பட்ட மகிழ்ச்சியை உலகம் முழுவதும் அனுபவிக்க வேண்டும்.

நிலம் உணவு, உடை மற்றும் பணம் அனைத்தும் பொதுவில் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும்; அதனால் சமத்துவமின்மை என்பது எங்கும் இருக்காது; யாரும் உணவோ, கதகதப்பான ஆடையோ இன்றி எங்கும் இருக்கமாட்டார்."

ஒரு கட்டத்தில் சீனாவின் தென்பாதியை 'டாய்பிங்குகள்' வசப்படுத்தியிருந்தனர். 1853இல் அவர்கள் தங்கள் தலைநகரத்தை 'நான்கிங்'கில் நிறுவினார்கள். ஆனால் அவர்களிடம் பயிற்சி பெற்ற நிர்வாகிகள் இல்லாததால் தாங்கள் ஆட்சிசெய்த கிராமப்புறங்களுக்கு எந்த முறைப்படுத்தப்பட்ட அமைப்பையும் உருவாக்கித் தர முடியவில்லை. மேலும் அவர்கள் தங்களது தீவிர நம்பிக்கைகள், விநோதமான பழக்க வழக்கங்கள் மற்றும் ஒரு அந்நிய நம்பிக்கையைப் பின்பற்றியமை காரணமாகப் பல கற்றறிந்த சீனர்களைத் துரத்தி விட்டிருந்தனர்.

அவர்களது வளர்ந்து வந்த மூர்க்கம் மற்றும் ஒரு தெய்வீக லட்சியத்தின் நம்பிக்கை ஆகியவையும் அவர்களை சாங்காய், கான்டோன் மற்றும் பிற உடன்படிக்கைப் பகுதிகளில் வலுவாகக் காலூன்றியிருந்த மேலைநாட்டு சக்திகளிடமிருந்து அந்தியப்படுத்தியிருந்தது. 

சீனாவிலிருந்த பல மேலை நாட்டினர், டாய்பிங் இயக்கம் வாழ்க்கையின் மீதான நவீனப் பார்வையைக் கொண்டிருந்த அடையாளங்களைக் காட்டியதால் அதனை ஆரம்பத்தில் ஆதரித் திருந்தாலும், இறுதியில் அவர்களின் கலகத்தை நகக்குவதில் பேரரசின் உதவிக்கு வந்தனர். 'அரசப் பொறியாளர்கள்' (ராயல் என்ஜினியர்கள்) தலைவர் சார்லஸ் கோர்டான் என்பவர் டாய்பிங் படைகளின் இறுதித் தோல்விக்கு ஒரு முக்கியப் பங்காற்றினார்!

டாய்பிங்குகள், ஒரு நூற்றாண்டுக்குப் பின் வந்த பொதுவுடைமையாளர் களை தெய்வீகச் சாயலில் இளம் காட்டியிருந்தனர். அவர்களும் அதே இக்கட்டான நிலைமையைச் சந்தித்தனர். 

1852இல் டாய்பிங்குகள் மஞ்கு பேரரசனை பதவியிறக்குவதற்கு வூகானிலிருந்து வடக்கு நோக்கி அணி வகுத்து இருக்க முடியும். ஆனால் வாய்ப்பை தவற விட்டார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற குத்துசண்டையர் கலகம் தோல்வி அடைந்தது. சிங் வம்சம் முடிவுற்றது.

1898 இல் ஷாண்டுங் மாகாணத்தில் ஒரு ரகசிய குழுவாக குத்துச்சண்டை யர் கலகம் தோன்றியது.

குத்துச் சண்டையர் கலகம், மஞ்சூ எதிர்ப்பு மற்றும் அந்நிய எதிர்ப்பு என்பதாகத்தான் தொடங்கியது.

ஆனால் புகழ்பெற்ற டாவேஜர் ஜு சி என்ற பேரரசி கலகத்தின் பேரரசு எதிர்ப்பு சக்திகளை மழுங்கச் செய்வதில் வெற்றியடைந்தார். பின்னர் அச்சக்திகள் தேசியவாத, அந்நிய எதிர்ப்பு சக்திகளாக மட்டுமே ஆயின. 

இவ்விதமாக அது 1900ஆம் ஆண்டில் பீகிங்கில் புகழ்பெற்ற அந்நியத் தூதரகங்களின் முற்றுகையின்போது சிகரத்தை அடைந்தது. அந்த முற்றுகை ஐரோப்பாவில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு வலிமை வாய்ந்த சர்வதேசப் படையினால் தான் அகற்றப்பட்டது.

'குத்துச்சண்டையர் கலகம்' தோல்வி யடைந்தது. ஆனால் குத்துச்சண்டையர் கள்தான் நவீன சீனாவின் தேசியவாதத்தை உண்மையில் தோற்றுவித்தவர்கள். சீனக் கருத்துக்களில் இந்தக் கலகம் ஒரு தொடர்ந்து வளர்ந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது.

அது 'கோமின்டாங்' தேசியக்கட்சியின் நிறுவனராகிய சன் யாட்-சென்னின் கீழ் இருந்த தீவிரப் புரட்சிகரக் குழுக்களின் நிலைமையைப் பெரிதும் பலப்படுத்தியது. மஞ்சூ வம்சத்தைத் தூக்கியெறிந்த 1911-12-ன் புரட்சிக்குக் கட்டியங் கூறுவதாக குத்துச்சண்டையர் கலகம் அமைந்தது.

விவசாயிகளைத் தமது முதன்மையான ஆதரவாளர்களாகக்ப்கொண்டு ஒன்று அல்லது பல தளப்பிரதேசங்களிலிருந்து நீண்ட இராணுவப் போராட்டத்தின் பாரம்பரிய விவசாயிகள் கிளர்ச்சியின் ஒரு உருமாதிரியை (வரைபடத்தை) இந்த சீனாவின் சுருக்கமான வரலாறு எடுத்துக்காட்டுவதாக பொதுவுடைமையரல்லாத 'மாசேதுங்கின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் ஜெரோம் செ-யென்' குறிப்பிடுகிறார். 

நெடும் பயணத்திலிருந்த மாவோவும் பொதுவுடைமைத் தலைமையிலிருந்த அவரது கூட்டாளிகளும் விவசாயிகளின் முந்தைய யுத்தங்களின் கதாநாயகர்களின் ஆழ்ந்த செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்தனர். 

மாவோ தனது படைப்புகளிலும் உரைகளிலும் பற்பல குறிப்புகளைத் தருகிறார்.

உதாரணமாக, வடக்கு சங் வம்சத்தின் இறுதிப்பகுதியில் ஒரு விவசாயிகள் எழுச்சியைத் தலைமைதாங்கி நடத்திய 'லி குவெயின்' பற்றிக் குறிப்பிடுகிறார். லி குவெயின் வீரச் செயல்கள் 'நீர் எல்லை' என்ற புகழ்பெற்ற சீன நாவலில் வர்ணிக்கப்பட்டிருந்தன. அந்நாவல் 'மனிதர்கள் யாவரும் சகோதரர்களே' என்ற தலைப்பில் 'பேர்ல் பக் 'அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

'நெடும் பயணம்' முழுவதும் மாவோ தன்னோடு எடுத்துச்சென்று படித்த

ஒரு சில நூல்களில் இதுவும் ஒன்றாக இருந்தது.

சீனாவில் உயர்நிலையை அடைவதற்காக பொதுவுடைமையாளர்கள் போராடிக் கொண்டிருந்த சமயம், முன்னர் நடந்த பல புரட்சிகளின் காலக்கட்டத்தைப் போலவே சீன விவசாயிகளின் நிலைமை மோசமாக இருந்தது. 

ஒரு சீன விவசாயப் பண்ணை சராசரி அளவு 3.3 ஏக்கர்களாக இருந்தது. அதிலிருந்து ஒரு வயது விவசாயி ஆண்டு ஒன்றுக்கு 65 யுவான்கள் (அல்லது 16 அமெரிக்க டாலர்கள்)தான் வருவாய் ஈட்ட முடிந்தது. நிலப்பிரபு வழக்கமாக இதில் பாதியை எடுத்துக்கொண்டான் மீதிப் பாதி அந்த விவசாயிக்கும் அவனது குடும்பத்திற்கும் வாழ்க்கைச் செலவிற்கும் போதுமான இல்லை. அவன் மந்தமான விளைச்சல் காலங்களில் ஈட்டிக்காரர்களிடம் கடன் வாங்கவும் ஆண்டுக்கு முப்பது சதவீதமும், மேலாகவும் வட்டி செலுத்தவும் நிர்ப்பந்திக்கப்பட்டான்''

1920களில் பயிர்செய்யும் நிலப்பரப்பின் அளவில் ஒரு சீரான வீழ்ச்சி ஏற்பட்டு வந்தது. மேலும் சொந்தமாகப் பயிரிடும் நிலங்களின் குறைந்தது. 1918இல் பண்ணை மக்கள் தொகையில் ஏறத்தாழ முப்பது சதவீதத்தினர் குத்தகைதாரர்களாக இருந்ததாக மதிப்பிடப்பட்டது.

ஆனால் ஒரு பத்தாண்டுக் காலத்திற்குப் பின்பு இந்த விகிதாச்சாரம் பாதிக்கும் மேலே உயர்ந்ததாக கருதப்பட்டது.

புகழ்பெற்ற ஆங்கில பொருளாதார நிபுணர் ஆர். எச். டானி 'சீனாவில் நிலமும் உழைப்பும்' என்ற தனது நூலில் ஹுனான் மாகாணத்தில் கிராமப்புற மக்கள் தொகை எண்பது சதவீதம் அளவுக்கு குத்தகை விவசாயிகளாக இருந்தனர் என்றும் குவான்டாங் மற்றும் ஃபுகியான் பகுதிகளில் இந்த சதவீதம் மூன்றில் இரண்டு பங்காக இருந்தது என்றும் முடிவு செய்துள்ளார்.

1934இல் வெளியிடப்பட்ட சர்வதேச சங்கத்தின் கணக்கெடுப்பு ஒன்றிலும் இதேபோன்ற முடிவுகள் காணப்பட்டன. 

இந்த ஏழைக் குத்தகை விவசாயிகள் முன் நூற்றாண்டுகளில் போலவே, மைய அரசாலும், மாகாண அல்லது பிராந்திய யுத்தப் பிரபுக்களின் அளவுக்கதிகமான வரிவிதிப்பாலும் கடின உழைப்பாலும் துன்புற்று வந்தனர்.

சுழற்சியின் அடுத்த தவணைக்குப் பொருத்தமாக நிலைமைகள் தெளிவாகவே கனிந்திருந்தன. சீனப் பொதுவுடைமைக் கட்சியின் யுத்த தந்திரத்தில் ஒரு பாதுகாக்கும் அம்சமாக அவர்களது துயரங்களைப் பயன்படுத்தி விவசாயிகளைத் திரட்டுவதற்கான திறமை இருந்தது.

"விவசாயிகளின் நிலத்திற்கான போராட்டம் சீனாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்திலும் அடிப்படை அம்சமாக இருக்கிறது. சீனாவின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி அதன் சாராம்சத்தில் ஒரு விவசாயப் புரட்சியேயாகும்.

எனவே முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் சீனப் பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படைக் கடமை விவசாயிகளின் போராட்டத்திற்குத் தலைமையளிப்பதாகும்” என்று மாவோ அறிவித்தார்.(3)

மாவோவின் நெடும்பயணம் - 1

மாவோவின் நெடும் பயணம்....(1)

1994 இல் நடைபயணம் தொடங்கிய தலைவர் வைகோ அவர்கள், அப்போது வெளியிட்ட அறிக்கையில் மாவோவின் நெடும்பயணம் பற்றி குறிப்பிட்டார். பின்னர் 1996 இல் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் உடன் கூட்டணி வைத்த போதும் மாவோவின் நெடும் பயணம் பற்றி குறிப்பிட்டார்.

அப்போது இருந்து நெடும் பயணம் குறித்த நூல்களைத் தேடினேன். சிறு, சிறு குறிப்புகள் நூல்களாக கிடைத்தன. 

இந்நிலையில், சென்னை புத்தகச் சாலையில் டிக் வில்சன் எழுதிய 'மாவோவின் நெடும் பயணம்' நூல் கிடைத்தது. தமிழில் நிழல் வண்ணன் அவர்கள் மொழிப்பெயர்ப்பு செய்திருக்கிறார். அலைகள் வெளியீட்டகம் வெளியீடு செய்திருக்கிறது.

சீனாவில் ஆட்சிபுரிந்த சியாங்கே ஷேக்கின் கொடூரமான ராணுவத்தை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் நடத்திய நெடிய பயணம்.

மாவோ தலைமையில் 1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜியாங்ஷி யிலிருந்து தொடங்கிய இந்த பயணம் 370 நாட்கள் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு நடைபெற்றது.

1935 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் நாள் ஷான்ஸி மாகாணத்தில் செஞ்சேனையின் மூன்று பிரிவுகளும் ஷான்ஸி நகரில் சங்கமித்தபோது, உயரமான மலைகளையும் ஆறுகளை யும் அவை கடந்து வந்திருந்தன. ஆயிரக்கணக்கான வீரர்கள் இந்தப் பயணத்தில் தங்கள் உயிர்களை இழந்திருக்கிறார்கள்.

அந்த நூலின் முன்னுரையில்,

"1934ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள், ஆண்களும் பெண்களுமாக ஏறத்தாழ ஒரு லட்சம் சீனப் பொது வுடைமை வாதிகள் மனித குல வரலாற்றின் வியத்தகு அணி வகுப்பைத் தொடங்கினார்கள்.

கியாங்சியின் தென் மத்திய மாகாணத்தில் உள்ள தமது சோவியத் தளத்தைத் (பெல்ஜியம் அளவிற்குப் பெரியது) துறந்து அவர்கள் தமது எதிரி சியாங் கே ஷேக்கின் தேசிய வாத அல்லது கோமின்டாங் படை களின் மரணப்பிடியைப் பிளந்து கொண்டு கால் நடையாய் ஒரு பயணத்தைத் தொடங்கினார்கள். அப்பயணம் ஒரு முழு ஆண்டுக்குத் தொடர்ந்தது. அது அவர்களைச் சுற்றி வளைத்து 6000 மைல் தொலைவுக்கு சீனாவின் மறுகோடிக்கு அழைத்துச் சென்றது.

கூறுபட்ட, கட்டுக்கோப்பற்ற ஒரு நெடும்பயணத்தைத் தலைவர்கள் தொடங்கினார்கள். கியாங்சி தளத்தைக் கைவிட்டுக் கிளம்பியதை ஒரு தோல்வியாகத்தான் காண வேண்டும்; 

சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் ரசிய மற்றும் ஐரோப்பிய மார்க்சிய ஆலோசகர்களின் தவறுகளும் மோசமான கணிப்புகளுமே இதற்குப் பெரும்பகுதி காரணமாக இருந்தன. 

நெடும் பயணத்தின் உடனடித் தேவை கள் இத்தகைய கருத்து வேறுபாடு களைத் தீர்த்து வைத்தன; இந்தக் காலக் கட்டத்தின் போக்கில் மாவோ சே-துங் சக்திமிக்க தலைவராய் எழுந்தார். இந்தத் தலைமைப்பதவி எப்போதுமே சொந்த வழியில் செல்ல அவரை அனுமதிக்கா விடினும் அதன் பின்னர் ஒருபோதும் முழுவதுமாக அவர் அதை இழக்கவே யில்லை.

ஆர்ப்பரிக்கும் ஆறுகள், பனி படர்ந்த மலைத் தொடர்கள், சேறும் சகதி யுமான சதுப்புநிலம் மற்றும் மரங் களடர்ந்த காடுகள் வழியாகப் பதினொரு மாகாணங்களினூடே நெடும்பயணம் பொதுவுடைமையாளர்களை நடத்திச் சென்றது.

அவர்கள் தேசியவாதப் படை களோடும், மாகாண யுத்தப் பிரபுக்களின் துருப்புகளோடும். உள்ளூர் கொள்ளையர்களோடும், பகை கொண்ட பழங்குடி மக்களோடும் போரிட வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் தண்ணீரே அற்றுப்போன ஒரு பகுதியில் அவர்கள் தமது சொந்த சிறுநீரைப் பருகி உயிர்வாழ வேண்டியிருந்தது. 

தமது நெடும்பயணத்தைத் தொடங்கிய மிக விரைவிலேயே, சிதறிக்கிடந்த பல்வேறு பொது வுடைமைத் தளங்களின் சரிவின் காரணமாக சீனாவில் பொது வுடைமையை உயிர்பிழைக்க வைக்கும் தமை நெடும் பயணத்தி லிருந்த மாவோ மற்றும் அவரது தோல்களில் விழுந்தது. ஊடுருவ இயலாத மேற்குச் சீனாவின் உட்பகுதிகளில் மாவோவின் ஆட்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போனதால், பல பார்வையாளர்கள் சியாக் கே ஷேக் தனது உள்நாட்டுப் போரில் வெற்றிபெற்று விட்டதாகவும் தீர்மானகரமாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்றும் கருதினார்கள்.

ஆனால் கந்தலான உடைகளுடன் மாவோவின் எஞ்சிய வீரர்கள் வடக்குச் சீனாவில் பெருஞ்சுவரின் நிழலில் இருக்கும் ஏனானை நெருங்கிய போது, அலையின் எழுச்சி எதிர்பாராது திரும்பியது.

நெடும்பயணமெனும் உலையில் வார்த்தெடுக்கப்பட்ட அர்ப்பணிப் போடும் கட்டுப்பாட்டோடும் செயல்பட்ட மாவோவின் தலைமை பொது வுடைமை இயக்கத்தை ஒரு இயங்கு சக்தியாக மாற்றியமைத்து, பதினாறு ஆண்டுகளுக்குப் பின்பு தேசிய வாதிகளை தூக்கியெறிந்து முழு தேசத்தையும் தனது ஆளுகைக்குக் கொண்டுவரச் செய்தது. இவ்விதமாக நெடும்பயணம் நம்பிக்கையிழந்த பின்வாங்கலை வெற்றிக்கான முன்னுரையாக மாற்றியது.

இந்த வியத்தகு காவியம் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் வெற்றிக் கதைகளில் ஒன்றாகிவிட்டது. நீண்ட பயணத்தின் நிறைவுக்குப் பின்னர் மாவோவின் தலைமையகத்தை முதலில் அடைந்தவர்களில் ஒருவரான அமெரிக்க இதழியலாளர் எட்கர் ஸ்நோ, 'சீனாவின் மீது ஒரு சிவப்பு நட்சத்திரம்' என்ற தனது நூலில், வியந்துநின்ற உலகிற்கு 'நெடும் பயண'த்தின் சில பகுதிகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

'சாகசம், ஆராய்ச்சிப் பயணம், கண்டுபிடிப்பு, மனிதத் துணிச்சல் மற்றும் கோழைத் தனம், களிப்பு மற்றும் வெற்றி துன்பம், தியாகம் மற்றும் விசுவாசம் இவையெல்லாம் கடந்து மனிதனிடமோ, இயற்கைவிடமோ, கடவுனிடமோ, மரணத்திடமோ தமது தோல்வியை அனுமதிக்காத ஆயிரக்கணக்கான இளைஞர்களின் சவாலைப் போன்ற மங்கா மனவெழுச்சி. இறவா நம்பிக்கை மற்றும் வியத்தகு புரட்சிகர தன்னம்பிக்கை இவையெல்லாமும் இன்னும் கூட பலவும், நவீன காலங்களில் இணையற்றதானதொரு இந்த நெடும்பயணத்தின் வரலாற்றில் புதைந்து கிடப்பதாகத் தெரிகிறது".

இக்கதையைக் கேட்ட முதலாவது வெளியுலக நபரின் கருத்தாக இது இருந்தது. ஆனால், இத்தகைய அருஞ்செயல்கள் கடந்த காலத்திற்குச் சொந்தமானவை என்று நினைத்திருந்த ஒரு உலகத்தின் அச்சத்தையும் போற்றுதலையும் பதிவு செய்த முதலாவது நபராகவே இருந்தார் ஸ்நோ . ஃபீல்டு மார்ஷல் மாண்ட்கோமரி நெடும்பயணத்தை தாக்குப் பிடிக்கும் பொறுமையில், 'ஒரு வியத்தகு அருஞ்சாதனை' என்று அழைத்தார்.' சீமோன் டி பொவார் 'நெடும் பயணம்' என்ற தலைப்பில் நவ சீனத்தின் வரலாற்றை எழுதினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 7

வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 7

தலைவர் வைகோ அவர்களுடன் ஜூன் 29 - திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் சோழவந்தான் 65 வயது திரு.பி.எஸ்.மணியம் அவர்கள் பங்கேற்றார்.  அவரும் பொடா சிறைவாசத்தை ஏற்றுக்கொண்டார்.

அவரைப்பற்றி வைகோ அவர்கள், "ஒவ்வொருமுறை பூவிருந்தவல்லி 'பொடா' வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு வரும்போதும் அவரது உடல்நலனைத்தான் கவலையுடன் அவரிடம் விசாரிப்பேன்.

மாறாத புன்முறுவலுடன் "எந்தக் கவலையும் வேண்டாம் உங்களுக்கு. நான் நன்றாக இருக்கிறேன்" என்று என் கைகளைப் பற்றிக் கொண்டு அவர் சொல்லும்போதெல்லாம் நெஞ்சம் நெகிழ்ந்து போவேன்.

நீதிமன்றத்தில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் நின்றபோது அவரைப் பற்றிய வேதனை வாட்டியது.

அவரது பெயர்த்திக்குச் சிவமணி என்று பெயர் சூட்டி உள்ளனர். தன் பாட்டனின் பெயரைச் சொல்ல வேண்டும் என்ற ஆசையுடன்தானே பெற்றோர் "மணியம்” அவர்களின் பெயரை இணைத்து 'சிவமணி' என்று அழைத்து மகிழ்ந்து இருப்பர்?" என்று நெஞ்சுருக எழுதியிருப்பார்.

அந்த மணியம் அவர்களின் பெயர்த்தி சிவமணி மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். பெயர்த்தியின் இழப்பு மணியம் அவர்களை மிகவும் பாதித்துவிட்டது.

இது குறித்து வைகோ அவர்கள் தன் கடிதத்தில், 

"சிறைத்துறை அலுவலர்களிடம் அண்ணன் பி.எஸ். மணியம் அவர்களைப் பற்றி விசாரித்தேன். மிகவும் மனம் உடைந்தவராக வேதனையில் தவிக்கிறார் என்றனர். தனது பெயர்த்தி செல்வி சிவமணி சிறையில் வந்து நேர்காணலில் சந்திக்கும் நாள்களில் மிக்க உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் இருப்பாராம். தன் பெயர்த்தியின் மீது அளவுகடந்த பாசமாம். ஆனால் அவர் தலையில் விழுந்த இடிபோலத் தாக்கி விட்ட மரணச் செய்தியால் நொறுங்கிப் போய்விட்டாராம். நான் இருந்த பகுதியின் சிறை மதில் சுவருக்கு அப்பால் கொட்டடியில் அடைக்கப்பட்டு உள்ளார் அண்ணன் மணியம். நேரில் கண்டு துயரில் பங்கேற்கத் துடித்தேன். வாய்ப்பு இல்லாமல் கலங்கினேன்.

டிசம்பர் 30ஆம் நாள் பூவிருந்தவல்லி 'பொடா' வழக்குச் சிறப்பு நீதிமன்றத்தில் அண்ணன் மணியம் அவர்களைக் கண்டேன். அவரது கைகளைப் பற்றிக் கொண்டேன். கண்ணீர்த்துளிகள் உருண்டன. தாக்கிய துக்கத்தால் துவண்டு போயிருந்த அவரது உடல் லேசாக நடுங்கியது. தான் எழுதி வைத்து இருந்த கடிதத்தை என்னிடம் தந்தார்.

எனது உள்ளம் துயரவெள்ளம் ஆகியது அம்மடல் கண்டு, இதோ அந்த அவலம் சுமக்கும் கடிதம்:

"பெருமதிப்புக்கு உரிய பொதுச் செயலாளர் அவர்களின் மேலான கவனத்துக்கு, எனது பேத்தி சிவமணி பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று கூட்டுறவு பயிற்சியில் D.co-op., பட்டம் பெற்றாள். மதுரையில் ஒரு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டேன். மாதம் ரூ. 1,500 சம்பளம் கிடைத்தது. 'பொடா' சட்டத்தில் நான் கைது செய்யப்பட்ட போது, மகிழ்ச்சியாகவே என்னை அனுப்பி வைத்தாள். அதன் பிறகு 20 நாள்களுக்கு ஒரு முறை வீட்டில் இருந்து பார்க்க வந்த போதெல்லாம் என்னைப் பார்த்து "ஐயா நீங்கள் வீட்டில் இல்லாமல் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" என்று கூறிக்கொண்டே இருப்பாள். நான் தைரியம் சொல்லி அனுப்புவேன். 

சிவமணி அழகான பெண்ணாக இருந்ததால் பலரும் பெண் கேட்டு அனுப்பினார்கள்.

நாங்கள் இது குறித்துக் கேட்டபோது "அஞ்சல் வழிக் கல்வியில் பி.ஏ., தேர்வில் வெற்றிபெற்று B.A., D.co-op., எனப்பட்டம் பெறும்வரை திருமணப் பேச்சைப் பேச வேண்டாம் என வைராக்கியமாகச் சொல்லிவிட்டாள். நான் வீட்டில் இல்லை என்பதுதான் அவளுடைய மனச்சோர்வுக்குக் காரணம். என்னைப் பார்க்காமல் பேசாமல் சிவமணியால் இருக்க இயலவில்லை. கடைசியாக அவள் எனக்குத் திருச்சிக்கு மடலினை இங்கு குறிப்பிடுகிறேன்:

அன்புள்ள ஐயாவுக்கு, எழுதுவது. இந்த வாரம் எனக்குத் தேர்வு வருவதால் 20.12.2002 என்னால் வர முடியாது. அதனால் அப்பத்தாவும், சிவராஜாமணியும், மனோகர் மாமாவும் வருவார்கள். எனக்கு பி.ஏ. அஞ்சல் வழிக் கல்வி இரண்டாம் ஆண்டுத் தேர்வு இருப்பதால்தான் வரமுடியவில்லை. எனக்கு வீட்டுவசதி சங்கத்தில் இந்த மாதம் வேலையை நிரந்தரம் செய்து சம்பளத்தைக் கூட்டுவதாகத் தீர்மானம் செய்து விட்டார்கள். உங்களுக்கு என்ன வாங்கி வரவேண்டும் எனக் கடிதத்தில் எழுதுங்கள். 1ஆம் தேதிக்கு மேல் நான் வாங்கி வருகிறேன். உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அப்பத்தாவும் மற்றவர்களும் 23ஆம் தேதி திங்கட்கிழமை அங்கு வருவார்கள். எனக்கு 20ஆம் தேதியில் இருந்து இம்மாதம் முழுவதும் தேர்வு வருவதால் 1ஆம் தேதிக்கு மேல் கண்டிப்பாக வருகிறேன். 

மற்றவை நேரில்.

இப்படிக்கு 

ஆர்.சிவமணி

(மதுரை 15.12.2002)

இந்நிலையில் சிவமணியும் இன்னொரு பெண்ணும் தேர்வு எழுதும் பள்ளிக்குச் சென்று இருக்கிறார்கள். ஆனால் போன இடத்தில் அவர்களைப் பல்கலைக் கழகத்துக்குச் செல்லுமாறு சொல்லிவிட்டார்கள். அங்கு போய்க் கேட்டபோது இனி அடுத்த ஆண்டுதான் நீங்கள் தேர்வு எழுத முடியும் என்று கூறிவிட்டார்கள்.

அப்பொழுதே மனம் உடைந்துபோன சிவமணி, 'எங்கள் ஐயா இருந்தால் Hall Ticket வாங்கிக் கொடுத்து விடுவாரே, அன்றைக்கு எனது தலைவர் அண்ணா, இன்றைக்கு என் தலைவர் வைகோ என்று பேசியதற் காக ஜெயலலிதா ஜெயிலில் அடைத்துவிட்டாளே - அவள் நாசமாகப் போவாள் என்று பேருந்தில் வரும்போதே முனகிக்கொண்டே வந்து இருக்கிறாள். இருந்தவர்கள் பலர் சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை. வீட்டுக்கு வந்ததும் எல்லோரிடமும், தெருவில் உள்ள எல்லா வீடுகளுக்கும் சென்று, என் ஐயா வீட்டில் இல்லாததால் என் வாழ்க்கையே இருட்டாகிவிட்டது என்று சிவமணி கூறி இருக்கிறாள். என்னைப் 'பொடா' சட்டத்தில் அடைத்து இருப்பதுதான் சிவமணியின் பரிதாப முடிவுக்குக் காரணம். B.A. தேர்வில் வெற்றி பெற்றுத்தான் திருமணம் என்கிற வைராக்கியம் உடைந்து சிதறிவிட்டது. இந்த மாதம் முதல் சம்பளம் உறுதி என்கிற கனவும் கலைந்துவிட்டது. அறிஞர் அண்ணா அவர்களின் வழி நடக்கும் வணக்கத்துக்கு உரிய பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகவலை அறிவிக்கிறேன்.

குறிப்பு : என் மீது அளவுக்கு அதிகமான பாசமும், பரிவும் பேத்தி சிவமணிக்கு உண்டு. ஆகையால் கடந்த 5 மாதங்களாகச் சிறிது சிறிதாகக் குழம்பிய நிலைக்கு ஆளாகி இறுதியில் அரளிக்கொட்டை தின்று வாழ்வை முடித்துக் கொண்ட பரிதாப நிலைமை உண்டாக்கி விட்டது. ஒவ்வொரு கடிதத்திலும் நீங்கள் வீட்டில் இல்லாததால் நாங்கள் அநாதைகளைப் போல உள்ளோம் என்று எழுதுவாள். ஒவ்வொரு தடவையும் பார்க்க வரும்போதும் 'பொடா' சட்டம் நமக்கு எமனாக வந்து உள்ளது எனக் கூறுவாள். நான் சமாதானப்படுத்தி அனுப்புவேன். நான் வீட்டில் இருக்கும்போதெல்லாம் எனக்குச் சிவமணிதான் உணவு பரிமாறுவாள்.

இப்படிக்கு

பி.எஸ். மணியம்

விம்மலையும் கண்ணீரையும் உள்ளடக்கிய கடிதம்.

இந்தத் துன்பத்துக்கு யார் காரணம்?ஓர் இளந்தளிரின் உயிரைப் பறித்த கொடுமைக்கு யார் காரணம்? பண்பின் பெட்டகமாகத் திகழ்ந்த குலக்கொடி, தன் உயிரை மாய்த்துக்கொள்ள யார் காரணம்? எந்தச் சூழ்நிலை காரணம்?

பி.எஸ். மணியம் வெளியில் இருந்திருந்தால் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்து இருக்க மாட்டேன் என்றுதானே அத்தங்கை புலம்பித் துடித்து இருக்கிறாள்!

 'பொடா'' சட்டம்தான் எமனாக வந்துவிட்டது என்று குமுறி இருக்கிறது அந்த உள்ளம். அடக்கு முறையைப் 'பொடா' வழி ஏவிவிட்ட நடவடிக்கையால்தான் தனது வாழ்வில் இருள் சூழ்ந்தது என்று சிவமணி கதறிய கூற்றுதான் அந்த இளந்தளிரின் மரண வாக்குமூலம் ஆகும்.

 தனது உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணிய நேரத்தில் தனது பாசமுள்ள பாட்டனைக் கொடுஞ்சிறையில் பூட்டிய அக்கிரமத்தை, அநீதியை எண்ணியே எரிமலையாய்க் கொதித்து இருக்கும் சிவமணியின் இதயம்.

"அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை'

என்றார் திருவள்ளுவர்.

 'கொடுங்கோன்மை' எனும் அதிகாரத்தில்! திட்டமிட்டுத் தவறு செய்யாவிடினும் ஆராயாது தீர்ப்பு அளித்த பாண்டிய வேந்தனின் கொற்றம் வீழ்ந்தது. மாடமதுரையைத் தழல் பற்றி எரித்தது கண்ணகியின் துயரால்! அதே மதுரை மாநகரில் வெடித்துச் சிதறிய நெஞ்சுடன் சாக்காட்டைத் தேடிக் கொண்டே சிவமணியின் உள்ளக் குமுறலும் விழிநீரும் 'கெடுமதியால் கொக்கரிக்கும் கொடுங்கோலர்களுக்கு உரிய தண்டனையைத் தந்தே தீரும்.' செல்வி சிவமணியின் சாம்பல் மீது ஆணையிட்டுச் சொல்வேன்! அராஜக வெறி ஆட்டம் ஆடும் கொடுங்கோல் ஆட்சியை அகற்றுவோம். அதற்கு மக்கள் சக்தியைத் திரட்டுவோம். வருங்காலம் வழி அமைத்துக் கொடுக்கும் என்று எழுதியுள்ளார் வைகோ.

வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 6

வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் -6

தலைவர் வைகோ அவர்கள் பொடா சிறைக்காவலில் இருந்த போது நடுவண் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் சந்தித்தார். அது குறித்து, வைகோ அவர்கள் தனது மடலில்,

"வேலூர்ச் சிறைவாசம் தொடங்கி விட்டது அல்லவா? இடையில் உள்ள சில அனுபவங்கள், நேர்காணல் சந்திப்புகளைத் தற்சமயம் விட்டு வைத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்பாளரும், நடுவண் அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சருமான மாண்புமிகு ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் என்னைச் சிறையில் சந்தித்த நிகழ்ச்சியைக் கூற விரும்புகிறேன்.

ஈழத்தமிழர் உரிமைப் போருக்கு எந்நாளும் தோள் கொடுக்கும் மாண்புமிகு ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்னைச் சந்திக்கக் காலை 11 மணி அளவில் வந்தார்.

 'பொடா' மசோதா குறித்துத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நான் தெரிவித்த எதிர்ப்புக் கருத்துகளை நினைவூட்டினேன். இதே உணர்வினால் தான்  'பொடா' விவாதத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பங்கேற்று உரையாற்றவில்லை என்பதை அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டதையும் நினைவு கூர்ந்தேன்.

அரசியல் பழி வாங்கவும், வஞ்சம் தீர்க்கவும் எதிர்க்கட்சியினரை மிரட்டிப் பார்க்கிற 'பொடா'வினை 'ஜெ' அரசாங்கம் ஏவி இருக்கிறது.

இந்நிலையில் என்னைச் சிறையில் இருந்து விடுவிப்பது குறித்து மத்திய அரசின் சார்பில் மாநில அரசாங்கத் திடம் பேசவேண்டாம். எந்தக் காரணத்தினை முன்னிட்டும் பிரதமர் அவர்களோ, துணைப் பிரதமர் அவர்களோ தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் இது குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசுவதை நான் துளியும் விரும்ப வில்லை. சிறையில் இருந்து வெளியேற மத்திய அரசின் துணையை நான் நாடுவதாகத் தமிழக முதல்வர் நினைப்பதற்குக் கிஞ்சிற்றும் இடம் தரலாகாது.

மத்திய அரசின் தயவு பல விஷயங் களில் அவருக்குத் தேவைப்படுகிறது. எனவே, பேரத்துக்கு முயல இடம் தரலாகாது அரசியல் போர்க்களத்தில்! தமிழக முதல்வர் ஏவி விட்டுள்ள அடக்குமுறைத் தாக்குதலை வைகோ தானே சந்தித்துக் கொள்வான்.

ம.தி.மு.க. தலைவணங்காமல் போரிடும். 

தமிழக அரசு ஒரு பாசிச அரசு என்பதும் வெட்ட வெளிச்சம் ஆகி விட்டது. ஆகையால் மத்திய அரசு இதில் விலகியே நிற்கட்டும். அதுதான் எங்கள் மாநிலத் தன் ஆட்சிக் கொள்கைக்கும் ஏற்றது. இந்த எனது கருத்துகளைப் பிரதமர் அவர்களுக் கும், துணைப்பிரதமர் அவர்களிடமும் தெரிவித்து விடுங்கள்" என்றேன்.

 'உறுதியாகச் சொல்லி விடுகிறேன்' என்றார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

விடை பெற இருந்த வேளையில், 'உங்கள் பயணத் திட்டம் எப்படி?" என்று நான் கேட்டதற்கு, "மாலை 4 மணிக்குச் சென்னை தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல் அமைச்சரைச் சந்திக்க இருக்கிறேன்" என்றார். 

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. சந்தித்தால், 'வைகோவுக்காக ஜார்ஜ் பெர்னாண்டஸ் தது' என்று அல்லவா செய்தி போடுவார்கள்?" என்றேன்.

 "உங்களைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியாதா? நான் ஏன் பேசப் போகிறேன்?" என்றார்.

எனக்குத் தெரியும். "யூகங்களும் ஆரூடங்களுமே பெரும் அளவில் உண்மைச் செய்திகள் ஆக்கப்படும் காலத்தில் அல்லவா வாழ்கிறோம்? சூழ்நிலையின் அடிப்படையில் 'தூது' என்ற செய்தி வெளிவந்தால் எங்கள் இயக்கத்தின் நன்மதிப்புக்கு உகந்தது அல்ல. நீங்கள் இச்சந்திப்பை தவிர்ப்பது தானே நல்லது' என்றேன். அவர் புன்முறுவல் பூத்தவாறு, 'உங்கள் விருப்பப்படியே' என்றார்.

சிறைவாசலில் செய்தியாளர்களிடம், வைகோ வைராக்கியத்துடன் இருக்கிறார். அவர் புரட்சிக்காரர் என்றார் பெர்னாண்டஸ்.

முதல்வரைச் சந்திக்காமல் சென்னையில் இரண்டு மணி நேரம் இருந்து விட்டு டில்லிக்குப் பறந்தார் இராணுவ அமைச்சர். எத்தனையோ பேருக்குப் பேட்டிக்கு நேரம் ஒதுக்கிப் பின்னர் ரத்து செய்கிற முதல்வர் அன்று கோட்டையில் வந்து இருந்து கோபக்காய்ச்சலுடந்தான் தோட்டத்துக்குப் போயிருப்பார்' என்று எழுதியுள்ளார்.

வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 5

 வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 5

வழக்கு மன்றத்தில் 2002 நவம்பர் 22 ஆம் நாள் தலைவர் வைகோ அவர்களும் மற்ற 8 ம.தி.மு.க. நிர்வாகிகளும் நேர் நிறுத்தப்பட்ட போது, நீதியரசர் நீங்கள் உட்காரலாம் என்று சொன்ன பிறகும் வைகோவும் மற்ற 8 பேரும் நின்று கொண்டிருந்தனர்.  தலைவர் வைகோ அவர்கள் தன் தரப்பு கருத்துகளை பதிவு செய்ய விரும்பினார். நீதியரசரும் அனுமதித்தார். அது குறித்து வைகோ அவர்கள் எழுதியிருப்பதாவது:

"நீதிமன்றத்தில் எங்களை உட்காருமாறு மாண்புமிகு நீதிபதி அவர்கள் கூறினார்கள், தொடர்ந்து நீதிமன்றக் காவல் நீட்டிக்கப் படுவதற்கு வாய்ப்பாக, செப்டம்பர் 4ஆம் நாள், செப்டம்பர் 30ஆம் நாள், அக்டோபர் 4ஆம் நாள் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப் பட்டோம்." அக்டோபர் 9ஆம் நாள் நான் மட்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது கொண்டு வரப்பட்ட போதும் உட்கார்ந்து இருக்க அனுமதிக்கப் பட்டேன்.

ஆனால், அக்டோபர் 28ஆம் நாள் அன்று நீதிமன்றத்தில் நாங்கள்

வழக்கம்போலவே அமர்ந்து இருந்த போது, வழக்கினைக் குறித்த வாதங்கள் தொடர இருந்த வேளையில், 'எழுந்து நிற்குமாறு' மாண்புமிகு நீதிபதி அவர்களால்

அறிவிக்கப்பட்டோம். எழுந்து நின்றோம்.' நம்மிடம் ஏதோ விளக்கம் கேட்கப் போகிறார்கள்' என்றுதான் தொடக்கத்தில் நினைத்தேன். ஆனால் நீதிமன்ற வாதங்கள் முடியும் மட்டும் நாங்கள் நின்று கொண்டே இருக்க வேண்டும் என மாண்புமிகு நீதிபதி அவர்கள் முடிவு செய்துவிட்டதைச் சில மணித்துளிகளிலேயே உணர்ந்து கொண்டேன்.

நீதிமன்றத்தில் இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்கள் முடிவுற்று "காவல் நீட்டிப்பு" அறிவிக்கப்பட இருந்த தருணம் வரையில் ஒன்றரை மணி நேரமும் நின்று கொண்டே இருந்தோம். அதன் பின்னர், "நாங்கள் உட்காரலாம்" எனச் சைகையின் மூலமும், சன்னமான மெல்லிய குரலின் மூலமும் மாண்புமிகு நீதிபதி அவர்கள்தெ ரிவித்தபோது "நாங்கள் உட்காரவில்லை." சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை அறிந்தவன் நான். 

இம்முறை நவம்பர் 22ஆம் நாள் நீதிமன்றத்தில் நாங்கள் நின்று கொண்டு இருந்தபோது “உட்காரலாம்" என மாண்புமிகு நீதிபதி அவர்கள் கூறியவுடன், நான் எனது கருத்தைச் சொல்ல அனுமதிக்க வேண்டும் என அவரைப் பார்த்துச் சொன்னபோது அவரும் அனுமதித்தார்.

"இந்த நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 07, செப்டம்பர் 04, செப்டம்பர் 30, அக்டோபர் 04, அக்டோபர் 09. நாள்களில் நாங்கள் உட்கார்ந்து இருக்க அனுமதிக்கப்பட்டோம். ஆனால் திடீரென்று அக்டோபர் 28ஆம் நாள் அன்று நாங்கள் நிற்கவேண்டும் என்று நீங்கள் அறிவித்தீர்கள். அய்ந்து முறையும் உட்கார்ந்து இருக்க அனுமதித்ததன் அடிப்படை என்ன? ஆறாவது முறை நிற்கவேண்டும் எனக் கூறியதன் அடிப்படை என்ன என்பதைச் சிந்தித்துப் பார்க்கும்பொழுது, 'அந்த அடிப்படயின் அணுகுமுறையை" என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. நான் இந்த நீதிமன்றத்தில் எந்தவிதமான தனிப்பட்ட சலுகைகளையும் எதிர்பார்க்கிற அளவுக்கு நீதிமன்ற நடைமுறைகளை அறியாதவன் அல்லன். எங்காவது உட்காருவதற்கு ஒரு நாற்காலி கிடைக்காதா? என்று ஏங்குபவனும் அல்லன்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றங்களுக்குக் கொண்டுவரப் படுகையில், வழக்கு நடைபெறும் நேரங்களில் அவர்கள் அங்கு நிற்பதா?

உட்காருவதா? என்பது குறித்து இந்திய நாட்டின் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக ஒரு வரைமுறையை வகுத்து உள்ளது. மத்தியப் பிரதேச மாநில அரசுக்கும். அவ்தார்சிங் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் இடையில் நடைபெற்ற சிறப்பு மேல்முறையீட்டு வழக்கில் இக்கேள்வி குறித்து உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்து இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்புமிகு ஓய்.வி. சந்திரசூட், நீதிபதி மாண்புமிகு டி.ஏ. தேசாய், நீதிபதி மாண்புமிகு அமரேந்திரநாத்சென் ஆகியோர் அமர்ந்த உச்சநீதிமன்ற ஆயம் 1981ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் அன்று மேலே குறிப்பிட்ட வழக்கில் தெரிவித்த கருத்துகள், 1982 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற வழக்குகள் அறிவிப்புப் புத்தகத்தின் 438ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றை இங்கே நான் கூறுவது பொருத்தமானது என்பதால் தெரிவிக்க விரும்புகிறேன்.

விசாரணை நீதிமன்றங்களில் நடைபெறும்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள்உட்கார்ந்து இருக்க அனுமதிக்கப்பட வேண்டும்; சாட்சிகள் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அடையாளம் காட்ட வேண்டிய கட்டம் போன்ற தேவைகளின்போது மட்டுமே அவர்கள் நிற்கவேண்டும்;

நீதிமன்றங்களில் நீதிபதிகள் நுழைகின்ற வேளைகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், எழுந்து நிற்கும் மரபு தொடரும்" என்றும் உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தியது.

எனவே, உச்சநீதிமன்றம் இப்பிரச்சினை குறித்து மிகச்சரியாகத் தெளிவுபடுத்திய பின்னரும் இந்த நீதிமன்றத்தில் கடந்தமுறை நாங்கள் விவாதங்கள் முடியும்வரை நின்று கொண்டு இருக்க வேண்டும்" என்று மாண்புமிகு நீதிபதி அவர்கள் அறிவிக்க வேண்டியதன் காரணம் என்ன? என்பதனையும் - திடீரெனச் சூழ்நிலை மாற்றம் ஏன் என்பதனையும் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை" என்றேன்.

உடனே மாண்புமிகு நீதிபதி அவர்கள் "நான் பாரபட்சமாக நடத்தவில்லை.

அன்றைய நாளில் (அக்டோபர் 28) அரசுக் குற்றவியல் வழக்கறிஞர் தனது வாதத்தைத் தொடங்கியபோது நீங்கள் அதனைச் செவிமடுக்க வேண்டும் என்பதற்காகவே எழுந்து நிற்கச் சொன்னேன். கொடூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களைக் கூட நீதிமன்றத்தில் உட்கார அனுமதித்து இருக்கிறேன். அமெரிக்க நீதிமன்றத்தின் நடைமுறைகளையும் நன்கு அறிந்தவன் நான். இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ள கோட்பாட்டினையும் அறிவேன். கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். உங்களை நிற்கச் சொன்னேன். பின்னர் உங்கள் வழக்கறிஞர் தேவதாஸ் அவர்களிடம் நீங்கள் உட்காரலாம் எனக் கூறினேன். நீங்கள் மறுத்துவிட்டீர்கள். (உண்மையில் 1% மணி நேரம் இருதரப்பு வாதங்கள் நடைபெற்று முடிவுற்ற பின்னரே. நீதிமன்றக் காவல் நீட்டிப்பு அறிவிக்கப்பட இருந்தபோதுதான் 'நாங்கள் உட்காரலாம் எனச் சொல்லப் பட்டது) என் முன்னால் நிற்பது யார் என்பதும் எனக்குத் தெரியும் அய்ந்து முறையும் நீதிமன்றத்தில் நான் உட்கார அனுமதித்தது 'சிறப்புச் சலுகையா?' என்று கேட்டீர்கள். நான் சிறப்புச் சலுகை எதுவும் தரவில்லை. இதில் தவறாக நீங்கள் புரிந்துகொண்டு இருப்பது வருந்தத்தக்கது. அம்மாதிரி எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள்' என்று கூறிணர்கள்".

வழக்கு மன்றத்தில் தனக்கும் தோழர்களுக்கும் அநீதி இழைக்கப்பட்ட போது வெகுண்டு எழுந்து போராடி, அடிப்படை உரிமையை நிலைநாட்டினார் வைகோ.

வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 4

 வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள்- 4

'சிகாகோவில் இருந்து வேலூர் வரை" என்ற தலைப்பில் இரண்டு மடல்கள் வரைகிறார் தலைவர் வைகோ.  அதில் மூன்று செய்திகள் உள்ளன.

1. வழக்கு மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்காரக் கூடாது என்று நீதியரசர் கூறிய போது, அதற்கு தலைவர் ஆற்றிய எதிர் வினை.

2. மின்விசிறி வேண்டாம் என்று மறுத்த தலைவர்.

3. நடுவண் அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தன்னை சந்தித்துவிட்டு, தமிழ்நாடு முதல் அமைச்சரை சந்திக்கப் போவதாக சொன்ன போது அச்சந்திப்பை தவிர்க்குமாறு தலைவர் வைகோ வேண்டுகோள் விடுத்தது. அதை ஏற்றுக்கொண்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டு அமைப்பும், தமிழ்நாடு

அறக்கட்டளையும் ஆண்டுதோறும் இணைந்து நடத்தும் தமிழ் விழாவை

'மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் நூற்றாண்டு விழாவாக நடத்திட முடிவு செய்து அதில் தலைவர் வைகோ அவர்கள் உறுதியாக பங்கேற்க வேண்டும் என்ற அழைப்பினை ஏற்று, அமெரிக்காவுக்குச் சென்றார்.

ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அரசு தன்னை சிறைப் பிடிக்க முடிவு செய்து விட்டதை அறிந்து ஒரு மணி நேரத்திற்குள் ஓர் அறிக்கையினை வெளியிட்டார் தலைவர் வைகோ. அதில்,

"ஜூலை 14-ஆம் தேதி இரவில் சென்னை திரும்புவதாகத் திட்டமிட்ட

பயணத்தை மாற்றி அமைத்துக் கொண்டு, மூன்று நாள்களுக்கு முன்னதாகவே தமிழகம் வருகிறேன்" என்று குறிப்பிட்டார்.

அதிகாலை மூன்று மணியில் இருந்து நாலரை மணி வரை காவல்துறை அதிகாரிகள் தனியாக விவாதித்து இறுதியில் மதுரை மத்திய சிறைவாசலுக்கு முன்னால் வாகனங்கள் போய் நின்றன.

 'வேலூர்க்கு நீங்கள் கொண்டு செல்லப்படுகிறீர்கள்" என்றனர்.

புறப்பட்ட எங்கள் வேன்களை நோக்கி ஓடிவந்த செய்தியாளர்களிடம் "வேலூர்" எனக் குரல் கொடுக்கிறார் வைகோ.

தூங்காத மாமதுரையில் வைகறையிலேயே பரபரப்பு. நகரின் எல்லையில் தமிழ்நாடு சிறப்புக் காவலர் குடியிருப்பினை அடுத்துள்ள இடத்தில் வேன்களுக்கு டீசல் நிரப்ப ஓட்டுநர்கள் முற்பட்டபோது, திடீரென்று அதிகாரிகளின் அவசரமான தகவல், 'மதுரை மத்திய சிறைக்கே திரும்பட்டும்' என்று ஆணை.

"சிறிதுநேரம் இங்கு ஓய்வு எடுங்கள்,

பத்து மணிக்கு மேல் வேலூர் புறப்படலாம்" என்று காவல் அதிகாரிகள் தெரிவித்த போது, "நினைத்த வேளையில்

எல்லாம் 'ஓய்வு' எடுத்துவிட முடியாது. 'சிறைக்குள் செல்லும்போது சில சாங்கியங்கள்  இருக்கும். மதுரைச் சிறையிலேயே எனக்குக் காவல் என்றால் சரி. ஆனால் உடனே

மீண்டும் பயணம் என்றால், இப்போதே பயணம் செய்யலாம்"என்று தலைவர் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்.

 'காவலர்கள்  களைப்பாக உள்ளனர்' என்று அவர்கள் தெரிவித்த போது, "உண்மைதான். அவர்களை ஒய்வுக்கு

அனுப்பிவிட்டு புதிதாக வேறு காவலர்களை அனுப்பலாமே? என்றார் வைகோ.

அரசும், காவல்துறையும் இப்படிப் பந்து ஆடுவது குறித்து வைகோ மனதில் உறுத்தல்.

 "முதலில் வேலூர் பயணம் என்றீர்கள். வேனும் புறப்பட்டது. மதுரை தாண்டியபின் திரும்பவும் இங்கேயே கொண்டு வந்தீர்கள். இந்தச் சிறையில் சிறிது நேரம். பின்னர்  வேலூர்ச் சிறை நோக்கி மீண்டும் பயணம் என்கிறீர்கள், நான் காவல்துறையை மதிப்பவன். தேவை இன்றிப் பிரச்சினை தரமாட்டேன். ஆனால் சுயமரியாதைக்குப் பங்கம் என்றால் வைகோவுக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்" என்று கொதித்தார் வைகோ.

வழக்கு மன்றத்தில் நேர் நிறுத்தம் செய்யப்படுகிறார் தலைவர் வைகோ. இங்கு பொடா வழக்கின் போது நடந்த ஒரு நிகழ்வைப் பதிவு செய்கிறார் வைகோ.

பொடா வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நவம்பர் 22இல் நடந்தது என்ன  என்பதை தலைவர் வைகோ கூறுகிறார்.

ஏழாம் முறையாக பொடா வழக்கு மன்றத்தில் 'நீங்கள் உட்காரலாம்' என்று நீதியரசர் கூறிய போது தலைவர் வைகோ அவர்கள், "மீண்டும் இது குறித்து எனது கருத்தினைத் தெரிவிக்க இந்த நீதிமன்றத்தின் அனுமதி கேட்கிறேன். எங்களை அய்ந்துமுறை உட்கார்ந்து இருக்க

அனுமதித்தது சிறப்புச் சலுகையா என்று நான் கூறவே இல்லை. நான் ஒன்றும் சிறப்புச் சலுகை எதையும் எதிர்பார்க்கவில்லை' என்றுதான் கூறினேன். நாங்கள் ஒன்றரை மணிநேரம் நின்று கொண்டு இருந்தோம். வாதப் பிரதிவாதங்கள் எல்லாம் முடிந்தபின்னரே நாங்கள் உட்காரலாம் எனக் கூறப்பட்டது என்றேன்.

"இனி வழக்கு நடவடிக்கைகளைத் தொடரலாமா?” என்று மாண்புமிகு நீதிபதி அவர்கள் என்னைப் பார்த்துக் கேட்டதற்கு, "அது பற்றி முடிவெடுக்க வேண்டியது நீங்கள்" எனப் பதில் அளித்தேன் என்று தெரிவிக்கிறார்.

 வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 3

நவம்பர் 16ஆம் நாள் முதல் தலைவர் வைகோ 'பொடா' சட்டத்தின் 21ஆவது பிரிவினை எதிர்த்து, உச்சநீதிமன்றத்துக்குச் சிறையில் இருந்து 'ரிட்' மனு தாக்கல் செய்த செய்தி வலம் வரத் தொடங்கியது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 32ஆவது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு நேரடியாகச் சிறையில் இருந்து இந்த 'ரிட்' மனுவை நவம்பர் 8 ஆம் நாள் அனுப்பி வைத்தார் வைகோ.

இச்செய்தியை வெளியிட்ட 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு, 'பொடா' மசோதாவை ஆதரித்து நாடாளுமன்றத்தில் "தொண்டை வலிக்கப் பேசிய" வைகோ இன்று அதனை எதிர்த்து 'ரிட்' மனு தாக்கல் செய்து உள்ளார் எனக் குறிப்பிட்டு உள்ளது.

இது குறித்து வைகோ அவர்கள் தனது மடலில்,

'நான் 'பொடா' மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்கவில்லை; பேசவே இல்லை' என்ற அடிப்படை உண்மையைக் கூட அறிந்து கொள்ளாமல், அறிய முயற்சி செய்யாமல் நம் மீது ஏற்கெனவே ஏற்படுத்திக் கொண்டுவிட்ட ஒருதலைப்பட்சமான எண்ணங்களை இதனை எழுதிய நண்பர் பொரிந்து தள்ளி உள்ளார் என்று எழுதியுள்ளார்.

பொடா சட்ட விவாதத்தின் போது உண்மையில் நடந்தது என்பது குறித்து வைகோ அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்:

ஆண்டுக்கணக்கில் சிறையில் பூட்டப்பட்டாலும், உயிருக்கே இறுதி நேரிடும் எனத் தெரிந்தாலும், அடக்குமுறைக்கு வைகோ அடிபணியமாட்டான் என்பதை

நம்மை எதிர்க்கின்ற நாகரிகமான மாற்றார்கூட மறுக்கமாட்டார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 'பொடா' மசோதா குறித்த விவாதம் நடைபெற்றபோது நிகழ்ந்தவற்றை நான் தெரிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுவிட்டதால் அதனைச் சொல்லத்தானே வேண்டும்.

பிரதமர் இல்லத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் ஒரு மாலை வேளையில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. 'பொடா மசோதா' தான் நிகழ்ச்சி நிரல், இந்தப் பொடா மசோதாவினை அதன் பிரிவுகள் வாரியாக ஒருமுறைக்குப் பலமுறை ஊன்றிப்படித்து என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டு இருந்தேன். இந்த விவாதத்தில், மசோதாவைக் கடுமையாக எதிர்த்தவர்கள் இருவர். அவ்விருவரும்

தமிழகத்தினர்; திராவிட இயக்கத்தினர்! ஆம். அண்ணன் முரசொலிமாறனும், நானும்தான் எதிர்த்தவர்கள்.இவன்

மசோதாவின் பிரிவுகளை விவரித்து அன்று நீண்டநேரம் நான் பேசினேன்!

"பிரதமர் வாஜ்பாய் அவர்களே! உங்கள் ஆட்சியில் அடிப்படை வாழ்வு உரிமைகளை நசுக்கும் 'பொடா' மசோதாவினைச் சட்டம் ஆக்க முனைவது எவ்வளவு வேதனைக்கு உரியது என்பதை அருள்கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். நானும் 'மிசா' கொட்டடியை ஓராண்டுச் சந்தித்தவன் என்பதால் சொல்கிறேன்.

இம்மசோதாவினை நாடாளுமன்றத்தில்

நிறைவேற்ற முனையாமல் தவிர்ப்பதே சாலச் சிறந்தது ஆகும்.

எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் வழியாக ஏவிவிடும் பேரபாயத்தினைத் தடுத்திட, அசாதாரணமான சூழ்நிலையில் இந்த அசாதாரணமான மசோதாவைக் கொண்டு வருவதைத் தவிர வேறு வழி இல்லை என்று நீங்கள் எடுத்து வைத்த வாதத்தினையே வலுவாகப் பற்றிக் கொண்டு நிறைவேற்ற

முனைவீர்களானால், அருள் கூர்ந்து இந்த மசோதாவில் உள்ள, மக்கள் ஆட்சித் தத்துவத்துக்குத் தீங்கு விளைவிக்க வாய்ப்புத் தரும் பிரிவுகளை நீக்க முன்வரவேண்டும்.

இந்த மசோதாவின் எட்டாவது பிரிவு செய்தியாளர்களை அச்சுறுத்தவும்,சிறையில் அடைக்கவும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ள மிகத் தீங்கான பிரிவு ஆகும். இதனால் 'மக்கள் ஆட்சி' என்ற மாளிகையினைத் தாங்கி நிற்கும் ஒரு தூணையே தகர்க்கும் நிலை ஏற்பட்டுவிடும். நம்மீது எதிர்க்கட்சிகள் வீசும் கண்டனக் கணைகளுக்கு நாம் தக்க பதில் தரவும் இயலாது. எனவே இப்பிரிவினை நீக்க வேண்டும்.

இம்மசோதாவின் '21'ஆவது பிரிவு பேச்சு உரிமைக்கும், கருத்து உரிமைக்கும் வேட்டு வைக்கிறது. மூன்று பேர் ஓரிடத்தில் கூடிப் பேசினாலே அதனைக் கூட்டத்தில் பேசிய பேச்சு எனக் குற்றம் சுமத்திக் கைது செய்து சிறையில் அடைக்கும் அதிகாரத்தைத் தருகிறது. இப்பிரிவினை அகற்ற வேண்டும். (இப்பிரிவின் கீழ்தான் நானும், நம்மவர் எண்மரும் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கிறோம்).

முரசொலி மாறனும், நானும் எதிர்ப்புத் தெரிவித்த செய்திகள் வெளிவந்தன.

'21'ஆவது பிரிவினை அன்றே நான் எதிர்த்ததாக டில்லியில் வெளியாகும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு - நான் கைது செய்யப்படுவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னர்ச் செய்தி வெளியிட்டது.

இக்கூட்டம் நடைபெற்ற மறுநாள் உள்துறை அமைச்சர் அத்வானி அவர்கள் தன் அறைக்கு என்னை அழைத்து, 'செய்தியாளர்கள் குறித்த பிரிவினை மட்டும் நீக்கி விடலாம். நீங்கள் கூறிய மற்றப் பிரிவுகளை நீக்கினால் இம்மசோதா கொண்டுவந்த

நோக்கமே நிறைவேறாது' எனக் கூறினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைச் சந்திக்க இம்மசோதாவைச் சட்டம் ஆக்குவதைத் தவிர வேறு வழி இல்லை" எனஅரசு முடிவு எடுத்தது.

பல அரசியல் கட்சிகள் இணைந்து உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பெரும்பான்மை முடிவினை மன இறுக்கத்துடன் ஏற்க வேண்டியது ஆயிற்று. இதன்

பின்னர் 'பொடா' மசோதா நாடாளுமன்ற மக்கள் அவையில் விவாதத்துக்கு வந்தது.

இந்த விவாதத்தில் என்னைப் பங்கேற்குமாறு சட்ட அமைச்சர் அருண் ஜெட்லியும், பாரதீய ஜனதா கட்சிக் கொறடா விஜயகுமார் மல்கோத்ராவும் வேண்டியபோது,

'இம்மசோதாவில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே நான் ஆதரித்துப் பேச விரும்பவில்லை - கூட்டணியின் நெறிக்காக வேறு வழி இன்றி வாக்கு அளிக்கிறோம்’ என்றேன்.

இம்மசோதா மக்கள் அவையில் நிறைவேறி, பின்னர் மாநிலங்கள் அவையில் தோற்கடிக்கப்பட்டது. அதன் பின்னர் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் மய்ய மண்டபத்தில் நடைபெற்றது (Joint Session). அங்கு நடைபெற்ற இந்த விவாதம்

முழுவதும் நேரடியாக நாடு முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

பரபரப்பாக, அனல் பறக்க விவாதம் நடந்தது. சட்ட அமைச்சர் அருண்ஜெட்லி இருமுறை நான் அமர்ந்து இருந்த இடத்துக்கு வந்து, 'இம்மசோதாவை நீங்கள்

கட்டாயம் ஆதரித்துப் பேசவேண்டும்' என்று கூறியபோது, 'உறுதியாக இயலாது. என் கருத்துக்கும் உணர்வுக்கும் முற்றிலும் மாறானது' என்றேன்.

தமிழகத்தைச் சேர்ந்த என் மீது பற்றுக் கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்னிடத்தில், 'முக்கியமான எத்தனையோ விவாதங்களில் நாடாளுமன்றத்தில்

நீங்கள் பேசுகிறீர்கள். மக்களுக்குத் தெரியவில்லை. இதில் பேசினால்

கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சி வழியாகக் கேட்க வாய்ப்பு ஆகுமே? மசோதா மீதான உங்கள் எதிர்ப்புக் கருத்துகளை உள்ளடக்கியே 'கொஞ்சம் உல்டா

செய்து திறமையாக நீங்கள் பேசிவிடலாமே' என நல்ல எண்ணத்துடன் கூறினார்.

அவரிடம் நான், 'பொடாவை ஆதரித்து ஒரு வரி பேசியதாகக் கூடப் பதிவு செய்ய விரும்பவில்லை' என்றேன்.

நிலைமை இப்படி இருக்க, நான் பொடாவில் கைது செய்யப்பட்டபின்

நாடாளுமன்றம் கூடியபோது மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி 'பொடாவை ஆதரித்து வைகோ நாடாளுமன்றத்தில் தீவிரமாகப்பே சினார். இப்போது அவரே பலியாகி விட்டார்' எனப் பேசினார். 

மறுநாள் வேலூர்ச் சிறையில் இருந்து சோம்நாத் சட்டர்ஜி அவர்களுக்கு 'நான் மக்கள் அவை விவாதத்திலோ, கூட்டுக் கூட்ட விவாதத்திலோ பங்கு பெறவில்லை; பொடாவை

ஆதரித்துப் பேசவில்லை' என நீண்ட தந்தி கொடுத்தேன் என்று விரிவாக எழுதினார் வைகோ.

வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 2

 வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 2

அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அணியமானார் தலைவர் வைகோ...

வானூர்தியில் அவர் ஏறியவுடனேயே,  செய்திகள் பறக்க தொடங்கின பொடாவில் 'தளை' செய்யபட போவதாக.

29.11.2002  மடலில் வைகோ அவர்கள், 'அடக்குமுறைக்கு அஞ்சிடோம்!' ஆண்டுக்கணக்கில் சிறையில் பூட்டப்பட்டாலும்,

உயிருக்கே இறுதி நேரிடும் எனத் தெரிந்தாலும், அடக்குமுறைக்கு வைகோ அடிபணியமாட்டான்!' என்று எழுதினார்.

அவ்வாறே, ஏற்கெனவே திட்டமிடப்பட்டு இருந்தற்கு இரண்டு நாள்கள் முன்னதாகவே சென்னை வந்து சேர்ந்தார். வானூர்தி நிலையத்தில் வைத்து தலைவர் வைகோ 'தளை' செய்யப்பட்டார். 

காவலில் வைக்கப்பட்டு  நான்கு திங்கள் கடந்த பின்னர் 29.11.2002 நாளிட்ட மடலில் கண்மணிகளுக்கு எழுதுகிறார்.

மடல் இலக்கியத்திற்கு ஏற்ப நயத்துடன் தொடங்குகிறார். அதில், 'நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பேரறிஞர் அண்ணா அவர்கள் இங்குதான் சிறைவாசம் ஏற்றார். உங்களின் அளப்பரிய அன்பும் வரையற்ற வாஞ்சையும், எல்லையற்ற பாசமும்,  எத்தகைய இன்னல்களை யும் நான் எதிர்கொள்ள இயக்குவிக்கும் உயிர்ச் சக்தி அன்றோ!

ஆயிரமாயிரம் நினைவுகள் இதயக் கபாடத்தில்! எதைச் சொல்வது? எனத்

திகைக்கிறேன். காளிதாசன் மேகத்தைத் தூது அனுப்பினாள். தென்னாட்டுப்புலவன். விண்ணில் சிறகடித்த பறவையிடம் தூது சொன்னான். நான் உங்களின் உணர்வுகளுடன் சங்கமிக்க வாய்த்ததுதாளே நமது "சங்கொலி" என்று தொடங்குகிறார்.

மேலும் ''சிறைப்பிடிப்போம்' என்றா மிரட்டுகிறீர்கள்? குறிப்பிட்ட நாளுக்கு இரண்டு நாள்கள் முன்னரே தமிழகம் வருகிறேன்; 'எச்சரிக்கை' எனக் காட்டுக் கூச்சலிடும் தர்பார் இந்த 'அண்ணாவின் தம்பி'யை மிரட்ட முடியாது; ஓங்கி ஒலிக்கும் எனது

உரிமைக்குரல்'" எனப் பிரகடனம் செய்துவிட்டுச் சிகாகோ நகரில் இருந்து புறப்பட்டேன் என்றார் வைகோ.

வானூர்தி நிலையத்திலேயே தலைவர் வைகோ 'தளை' செய்யப்பட்ட செய்தியினைக் கேட்டுப் பதறித்துடிக்கத் தழலுக்கு தன்னையே தந்து உயிரை மாய்த்துக் கொண்ட அந்த நல்லூர் அறிவழகன், அரவேணு சிவன், நல்லாம்பள்ளி சுப்பன், கீழ்ப்புளியஞ்சை வைகோதாசன் ஆகியோரின் ஈகங்களை  நினைவு கூர்ந்து எழுதுகிறார்.


வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் -1

 தலைவர் வைகோ அவர்கள் எழுதிய 'சிறையில் விரிந்த மடல்கள்'....

தலைவர் வைகோ அவர்கள் நூலின் முன்னுரையில், 'நுழைவாயில்' என்னும் தலைப்பில்,

"இனிமை விளையும்; ஏற்படும் இன்னலால்!'

(Sweet are the uses of adversity)

என்றார் ஷேக்ஸ்பியர்,

இந்தச் சிந்தனையுடன்தான் வாழ்க்கையில் எண்ணற்ற போராட்டங்களைச் சந்திக்கிறேன்.

19 மாத கால வேலூர் மத்திய சிறைச்சாலை வாசம் எனக்கு வாய்த்த அற்புதமான அனுபவம், மனத்தாலும், உடலாலும் நான் தவம் இருந்த அந்நாள்களில் நெஞ்சில்

அலைமோதிய நிளைவுகளை, ஊற்றாகப் பெருகிய உணர்வுகளை, எனது ஊனிலும் உதிரத்திலும் இரண்டறக் கலந்து இயக்கிடும் கண்மணிகளுக்குக் கடிதங்களாக

எழுதினேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வார ஏடான

"சங்கொலியில்" அம்மடல்கள் வெளிவந்தன.

உன்னதமான தியாகத்தாலும், உழைப்பாலும் கட்டி எழுப்பப்படும் எங்கள் இயக்கம், அதன் கொள்கை கோட்பாடு குறித்து, சிறைப்பட்ட காலத்து அரசியல் சூழலை மனதில் கருதி எழுதி உள்ளேன்.

துன்பங்களையும், துயரங்களையும், தாங்கிக் கொண்டு, மாறாத உறுதியுடன் சிறைவாழ்வை ஏற்று இயக்கத்துக்குப் புகழ் குவித்த தியாக வேங்கைகளான எனது ஆரூயிர்ச் சகோதரர்கள் அ. கணேசமூர்த்தி, புலவர் சே. செவந்தியப்பன், வீர. இளவரசன், புதூர் மு. பூமிநாதன், பி.எஸ். மணியம், க. அழகுசந்தரம், நாகராசன், கணேசன் இக்கடிதங்களை எழுதிட என்னை ஊக்குவித்தனர்.

தமிழ்க்குலத்தின் சகாப்த நாயகனாம் போறிஞர் அண்ணா அவர்கள் எழுதி அச்சேறிய அனைத்தையும், நூல்வடிவம் கண்ட அவரது உரைகள்மு ழுவதையும் இரண்டு திங்கள் ஓய்வு இன்றிப் படித்ததில் என் இதயத்தை ஈர்த்த பகுதிகளை "ஒளி மலர். இருள் அகல..." என்ற தலைப்பில் எழுதி கடிதங்கள் ஆக்கினேன்.


இந்தியத் துணைக்கண்டத்தின் ஈடில்லாம் பகுத்தறிவாளராம் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களைக் குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் கூறியவற்றையே ஆங்காங்கு தந்து உள்ளேன்.

இலட்சியங்களுக்காகப் போராடி, தியாகம் எனும் பலிபீடத்தில் தங்கள்

உயிர்களைத் தாரை வார்த்த மாவீரர்களின் வரலாறு எனக்குச் செயல் ஊக்கம் தரும் உந்து சக்தி ஆகும்.

ஸ்பார்டாவின் 'தெர்மாப்பிளே போர்க்களம்;

ஒருவரை ஒருவர் அறிந்திடா நிலையில் வாள்முனையில் தந்தையும், தனயனும் மோதிய பெர்சிய வீரகாவியம் ஆன 'சொகரப்பும், ருஸ்தமும்";

தூக்கு மேடையில் நிறுத்தப்பட்ட உமர் முக்தார்;

மரண பயங்கரம் சூழ்ந்தபோதும் மடியும் நிமிடம் வரை

போராடிய 'சே குவேரா;'

நினைக்கும்போதே உள்ளத்தில் கிளர்ச்சி ஊட்டும் இவையெல்லாம் மடல்கள் ஆயின!

பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் "உலக சரித்திரக் கடிதங்கள்" ஏற்படுத்திய வேட்கைதான் "களங்களின் மாவீரன் கரிபால்டி' ஆயிற்று.

அடிமை விலங்கை ஓடிக்க நடைபெற்ற இந்திய விடுதலைப்போரில் வங்கத்துச் சிங்கம் நேதாஜியின் போராட்டமும், துணிச்சலும், தியாகமும்

மெய்சிலிர்க்கச் செய்யும் சரித்திரம் ஆகும் என்பதால்தான் 'நெஞ்சில் நிறைந்த நேதாஜி" யை வரைந்தேன்.

அறைகூவல்கள் அனைத்தையும் சந்தித்து, அவனியைத் திகைக்கச் செய்து சாதனை புரிந்த லிங்கனின் சரிதம் பொதுவாழ்வில் உள்ளோர் பயில வேண்டிய பாடம் என்பதால், "அரசியலுக்கோர் ஆபிரகாம் லிங்கன்” என விவரித்தேன்.

முத்தமிழ் அறிஞர் ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களுடன் நான் கொண்ட பாசப்பிணைப்பினைப் பிரதிபலிக்கும் சம்பவங்களைப் பதிவு செய்து இருக்கிறேன்.

வழிப்போக்கர்களுக்கு வழிகாட்டும் வேலை!

ஒரு நூலக ஊழியனின் பணி!

இவைதாம் எனது கடிதங்கள்! என்று தலைவர் வைகோ எழுதியிருக்கிறார்.

இந்நூலில்,

1. 60 கடிதங்கள்

2. சிக்காகோவில் இருந்து வேலூர் வரை -2 கடிதங்கள்(2,3)

3.சேகுவேரா பற்றிய கடிதம் (7)

4. உமர்முக்தார் பற்றிய மடல் (13)

5. நேதாஜி பற்றிய 3 மடல்கள் (23-25)

6. ஒளி மலர ! இருள் அகல!! அண்ணாவைப் பற்றிய மடல்கள் 7 (29-35)

7. அரசியலுக்கோர் ஆபிரகாம் லிங்கன் பற்றிய மடல்கள் 5 (40 - 44)

8. களங்களின் கரிபால்டி பற்றி 4 மடல்கள் ( 53-56)

9. திரும்பிப் பார்க்கிறேன் ( தன் வரலாறு) மடல் (22)

10. நல்லதோர் கடமை செய்தேன் மடல் ( குட்டிமணி கைது)

ஆகியன குறித்து சுருக்கமாக எழுத விரும்புகிறேன். இந்த திருவள்ளுவர் ஆண்டு 2055 இல் தொடங்குகிறேன்.