Thursday, August 26, 2021

நீதிக்கட்சியை வளர்த்த அரும்பெருந் தலைவர்கள் - 1

 நீதிக்கட்சியை வளர்த்த அரும்பெருந் தலைவர்கள்-1

- டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன்


தென்னகத்தில், அறியாமையலும், ஏழ்மையிலும், இல்லாமையிலும் முழ்கி, வாழ்க்கை வசதிகளும் வாய்ப்புகளும் அற்றுக்கிடந்த பார்ப்பனர் அல்லாத மக்களாகிய திராவிடப் பெருங்குடி மக்களைத் தட்டி எழுப்பி, அவர்களுக்கு விளக்கங்கள் தந்து விழிப்புணர்ச்சி ஊட்டி, வழிகாட்டி, அவர்களை நெறிப்படுத்த உயர்நிலைக்குக் கொண்டுவரக் காரணமாக இருந்த, நீதிக்கட்சி என்ற அந்த மாளிகைக்குத் தூண்களாகவும் அந்த ஆலமரத்திற்கு ஆணி வேராகவும், விழுதுகளாகவும் இருந்து பாடுபட்ட பலரில், மிக முக்கியமான ஒரு சிலரையும் மட்டுமாவது சுருக்கமாக, இக்கால இளைய சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்துவது, ஈண்டுப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

டாக்டர் சி. நடேசனார் (1875-1937)

தென்னாட்டில் திராவிட இயக்கம் என்னும் அரசியல் கட்சி, அமைப்பு அளவில் வித்தினை ஊன்றி, அது வேர் கொள்ளவும் இலை விடவும் செய்த பெருமை டாக்டர் சி. நடேசனார் அவர்களையே சாரும். தமிழ்- தெலுங்கு- கன்னடம்- மலையாளம் ஆகியவற்றை இணைத்து ஒரே சொல்லாகக் கூறக் கூடிய ‘திராவிட’ என்ற சொல்லை, ஒரு இயக்கத்திற்கு அமைப்பு அளவில்  பயன்படுத்திக் காட்டியவர் டாக்டர் சி. நடேசனாரே ஆவார்.

 ( ‘பார்ப்பனர் அல்லாதார்’ என்ற எதிர்மறை பெயருக்குப் பதிலாகத்தான் ‘திராவிடர்’ என்ற சொல்லை நடேசனார் பயன்படுத்தியுள்ளார். ஆனால் நாவலர் அவர்கள் 'இடம்' குறித்த சொல்லாக நடேசனார் பயன்படுத்தினார் என்று கூறுகிறார். நாவலர் தி.மு.க.வை சார்ந்தும் அ.தி.மு.க.வை சார்ந்தும் இருந்ததால் அப்படி புரிந்து கொண்டிருக்கக் கூடும் - கவி).

டாக்டர் சி. நடேசனார் 1875 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் பிறந்தார். அவர் அந்தக் காலத்தில், மருத்துவத் துறையில் உயர்பட்டமாக விளங்கிய எம்.பி.சி.எம். என்ற பட்டத்தைப் பெற்று, மருத்துவராகப் பணி யாற்றியவர். அவர் சென்னைத் திருவல்லிக்கேணி பகுதியில் வாழ்ந்து மிகச் சிறந்த மருத்துவர் என்ற பெயரும் புகழும் பெற்றவர். அவர் திராவிடப் பெருங்குடி மக்களின் நலன் கருதி 1912 ஆம் ஆண்டில் ‘சென்னைத் திராவிடர் சங்கம்’ (Dravidian Association of Madras)  என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்.

சென்னைத் திராவிடர் சங்கத்தின் சார்பாக 1912 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் அமைக்கப்பெற்ற பாராளுமன்ற கூட்டுப் பொறுப்புக் குழுவிடம் திராவிடர் நிலையைப் பற்றி எடுத்துச் சொல்ல டாக்டர் சி. நடேசனார் முயற்சியால் சர். கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் ஒரு பிரதிநிதியாக அனுப்பிவைக்கப்பட்டார்.

டாக்டர் சி. நடேசனார் திராவிடர் ஏழை எளிய மாணவர்க்குப் பயன்படும் வகையில் ‘திராவிடர் இல்லம்’ என்ற பெயரில் மாணவர் விடுதி ஒன்றினை உருவாக்கினார். திராவிடரின் உரிமை நல்வாழ்வுக்காக, டாக்டர் சி. நடேசனார் பரப்பி வந்த கொள்கைளும், கோட்பாடுகளும், திட்டங்களும் புதியதொரு அரசியல் அமைப்பைக் காண, சர். பி. தியாகராயர் அவர்களுக்கும் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களுக்கும் உறுதுணையாகவும் அடிப்படைகளாகவும் அமைந்தன என்று கூறினால் அது மிகையாகாது. டாக்டர் சி. நடேசனார் இல்லை என்றால், தென் இந்திய  (தென் இந்தியர் -கவி) நலவுரிமைச் சங்கம் என்னும் திராவிட (ர்) இயக்கம் ஏற்பட்டிருக்கவே முடியாது.

‘தென் இந்திய (ர்) நலவுரிமைச் சங்கம்’ வளரவும், பரவவும், செல்வாக்குப் பெறவும், சிறந்து விளங்கவும் டாக்டர் சி. நடேசனார் ஆற்றிய அரும்பெருந் தொண்டுகள் அளப்பரியனவாகும்.

நீதிக்கட்சியின் மூளையாக சர்.பி. தியாகராயரும், அதன் வாயாக டாக்டர் டி.எம். நாயரும், அதன் கைகளாக சர். ஏ. இராமசாமி முதலியாரும், அதன் உடலாகப் பனகல் அரசரும் விளங்கினார்கள் என்றால், டாக்டர் சி. நடேசனார் அவர்கள் அதன் இதயமாகத் திகழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

டாக்டர் சி. நடேசனார் 1920, 1923, 1926, 1931 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் அவர் எப்பொழுதும் நீதிக்கட்சியின் கொள்கைகளுக்காகவும் குறிக்கோள்களுக்காக வும் மட்டுமே பெரிதும் வாதாடி வெற்றிப் பெற்று வந்தார். சட்டமன்ற உறுப்பினரைப் போலவே அவர் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராக மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு அரிய தொண்டுகள் பல ஆற்றினார். 

அவர் பல தொழிற் சங்கங்களில் ஈடுபாடு கொண்டு தொழிலாளர்களின் நலன்களுக்காகப் பெரும் பாடுபட்டார். டாக்டர் சி. நடேசனார் 1937 பிப்ரவரி 18 ஆம் நாள் இயற்கை எய்தினார். 

அவர் ஆற்றிய அரும்பெருந் தொண்டுகளைத் திராவிட இயக்கம் மறத்தற்கியலாது.

No comments: