Tuesday, August 31, 2021

தோழர் ஏ.ஜி.கே

 தனிவாழ்க்கை- சிறைவாழ்க்கை_ பொதுவாழ்க்கை இவையாவும் இணைந்தவைதான் ஒருமுழுமையான வாழ்க்கை எனும் உறுதிப்பாட்டுடன், உழைக்கும் மக்களின் போராட்ட களமான கீழதஞ்சை மண்ணில் ஏழை எளிய மக்களின் உரிமைகளையும் தன்மானத்தையும் மீட்டு தந்திட சமரசமில்லாமல் போராடிய போராளி"ஏஜிகே" என்று அனைவராலும் அழைக்கப்படுகிற இணைமிகுஅ.கோ.கஸ்தூரி ரெங்கன்.

 1932ல் பிறந்திட்ட அவர் மார்க்ஸிய அணுகுமுறையினையும்,பெரியாரிய கோட்பாடுகளையும் இணைத்து களமாடியகலகக்காரன்.

மாணவப்பருவமாக இருக்கும் போது 1952களிலேயே பெரியாரிய கருத்துக்களில் ஈர்க்கப்பட்ட அ.கோ.க 1957-ல்திராவிடக்கழகப் பேச்சாளராக பரிணாபம் பெறுகிறார்.உழைக்கும் மக்களுக்காக உழைக்கிற அவர் திராவிட விவசாய சங்கத்தின் பணிகளில் தீவிரம் காட்டி மிராசுதாரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் களமாடினார்.

நாகை அவுரித்திடலில் தந்தை பெரியார் தலைமையில் ஒருபொதுக்கூட்டம் அந்த கூட்டத்திற்கு பேரணியும் நடைபெறுவதாக இருந்தது அப்பேரணியை பண்ணையார்கள் சீர்குலைத்து கலவரம் செய்யபோவதாக பெரியாருக்கு வந்தஒதகவலின் பேரில், பெரியார் அகோகவை பேரணியை நெறிபடுத்துமாறு கேட்டுக்கொண்டார் ..அப்பேரணி கிளம்பிய சில மணித்துளிகளிலேயே கலவரத்தை துவக்கிய பண்ணைகளை தன் போராட்ட கள உத்தியால் திணரடிக்கவைத்து ஓடவும் விட்டார்.

இக்கலவர நிகழ்வில் எழுந்திட்ட கருத்து வேறுபாட்டினால் 1962_ல் பொதுவுடமை கட்சியில் இணைந்தார் நிலவுடமை ஆதிக்கத்திற்கெதிராகவும்..பண்ணை ஆதிக்க சுரண்டலுக்கெதிராகவும் ஊர் ஊராக இவர் உழைக்கும் மக்களை சந்தித்தார் போராட்ட தீமூட்டினார்.கீழதஞ்சை மாவட்டம் முழுவதிலும் நிலபிரபுக்களின் ஆதிக்கத்தை எதிர்த்து களப்போராட்டங்களை பரவச்செய்தார்.

குறிப்பாக மைனர்கள் எனப்படுகிற பெரும் மிராசுதாரர்கள், சிக்கல் கோயில் பண்ணைகள், பெருங்கடம்பனூர் சூரிய மூர்த்தி செட்டியார் பண்ணை,மஞ்சக்கொல்லை முதலியார் பண்ணை,பாப்பாகோயில் கோவிந்தராஜ் பிள்ளை பண்ணை,ஆய்மழை ராமதேவர் பண்ணை,தலையாமழை செட்டியார் பண்ணை,வலிவலம் தேசிகர்பண்ணை ,வடவூர்பண்ணை, இரிஞ்சியூர் கோபால கிருஷ்ண நாயுடு போன்ற பண்ணை ஆதிக்கத்தின் வயிற்றில்  நெருப்பை  கனக்க வைத்த கீழத்தஞ்சையின் ஆளுமை போராளியாக இவரே விளங்கினார்.

முக்கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட அகோக பதினான்கு ஆண்டுகள்.... தூக்குதண்டனைபிறகு ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு சிறையிலிருந்த காலக்கட்டத்தில்  சிறைக்குள்ளும் போராட்ட தீமூட்டினார்."குற்றவாளி இல்லை குற்றம்சாட்டப்பட்டவர்கள்" "சிறைவாசி அல்ல சிறைபடுத்தப்பட்டோர்" "சிறை இல்லம் இல்லை  சிறை அடைப்பான்"என்றார். 1881ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட வெள்ளையர்களின் சிறை விதிமுறைகளே அமலில் இருந்தது.அந்த சிறை விதிமுறைகளை எதிர்த்து தீவிரமாக களமிறங்கினார்.

உணவுமுறை, சிறைப்படுத்தப்பட்டவர்கள் நடத்தப்படும் முறைகள் பரிதாபத்துக்குரியதாக இருந்தது. இதனை எதிர்த்து 1973 -ல் திருச்சி மத்திய சிறையில் சிறைபடுத்தப்பட்டோர் நல உரிமைச்சங்கத்தை தொடங்கினார்.அதனின் கருத்துக்கருவியாக "உரிமைக்குரல் " எனும் கையேட்டையும் துவக்கி 1000 நபர்களை உறுப்பினர்களாக்கினார்.

அங்கே பணிசெய்கிற காவலர்களுக்கும் பணிகள் சம்மந்தமாக கொடுமைகள் இருந்தன இதனை எதிர்த்தும் களமாடினார். 1974 மே-1ல் பல கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைக்குள் போராட்டத்தை துவக்கினார்.சிறைக்குள்ளிருந்தே அப்போதிருந்த இந்திராகாந்தி எதிர்கட்சி தலைவர் வாஜ்பாய் உள்ளிட்ட ஆயிரம் பேர்களுக்கு மேல் உள்ளிருந்துகொண்டே வலியுறுத்துதல்களையும் தகவல்களையும் அனுப்பி.. சட்டநடவடிக்கைகளிலும் திறன்பட இறங்கி போராட்ட வடிவத்தை நடைமுறைப்படுத்தினார். போராட்டத்தை ஒடுக்க..  போராட்டக்காரர்களை சிறைநிர்வாகம் பலசிறைகளுக்கு பிரித்துப்போட்டது.

அகோக அவர்களை பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றினார்கள்.அங்கும் செவ்வொளி என்கிற கையேடு தொடங்கி போராட்ட களத்தினை விரிவுப்படுத்தினார்.இதன் பயனாகவும் தன்னலமற்ற உழைப்பினாலும் சிறைசாலை வரலாற்றில் ஆங்கிலேய விதிமுறைகள் தடுக்கப்பட்டு புதிய சிறைவிதிகள் புகுத்தப்பட்டது போராட்டம் முழுவெற்றிப் பெற்றது

2000-மாவது ஆண்டில் செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியமே பெரியாரியம் என்கிற முழக்கத்தோடு தமிழர் தன்மானப் பேரவை என்கிற இயக்கத்தை தொடங்கி களமாடினார். 

மார்சிய பெரியாரிய கோட்பாடுகளை இணைத்து இயக்கம் கட்டிய தமிழ்தேசியப் போராளி ஆகத்து -10 நாள் நம்மிலிருந்து பிரிந்தார்.

களப்போராட்ட நாயகர் #ஏஜிகே_

--------------------------------------------------------

நன்றி :புகழ்ச்செல்வி மாத இதழ்

No comments: