Friday, August 6, 2021

சங்க கால வரலாற்றில் சில பக்கங்கள் - 2

 நான் படித்த நூல்களில் சில பக்கங்கள் -2


சங்க கால தமிழக வரலாற்றில் சில பக்கங்கள் (மயிலை சீனி.வேங்கடசாமி)

கி.பி.470 இல் வச்சிரநந்தி என்னும் ஜைன முனிவர் மதுரையில் ஒரு ‘திரமிள சங்கத்தை’ அமைத்தததைச் சுட்டிக்காட்டி அந்தச் சங்கத்தில் தொல்காப்பிய நூல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். இது பற்றி இங்கு ஆராய்வோம்.

‘திகம்பர தரிசனம்’ என்னும் ஜைன சமய நூலிலே அதை எழுதிய தேவசேனர் என்பவர், பூஜ்யபாதரின் சீடராகிய வச்சிரநந்தி விக்கிரம ஆண்டு 525 இல் (கி.பி.470 இல்) தென் மதுரையிலே திராவிட சங்கத்தை நிறுவினார் என்று கூறுகிறார்

(Journal of Bombay Branch of Royal Asiatic Society, Vol.XVII, Page 74). 

‘ஸ்ரீ பூஜ்ய பாதஸீஸோ தாவிட ஸங்கஸ்ஸ காரகோ விஷ்டோ

நாமேன வஜ்ஜநந்தீ பாஹுணவேதீ மஹாஸத்தோ’

‘பம்சஸயே சவீஸே விகரமார்யஸ்ஸ மரண பத்தஸ்ஸ

தக்கிண மஹுராஜாதோ தாவிட ஸங்கோ மஹாமஹோ’

இந்தச் செய்தியைக் கொண்டு திரு. எஸ்.வையாபுரி பிள்ளையவர்கள், ‘வச்சிரநந்தியின் பேர்போன சங்கம் கி.பி. 470 இல்அமைக்கப்பட்டது. தொல்காப்பியம் அந்தச் சங்கத்தில் வெளிவந்த நூலாக இருக்கலாம்’ என்றும்,

‘தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் தரமான முக்கிய நிகழ்ச்சி கி.பி.470 இல் நிகழ்ந்தது. வச்சிரநந்தியின் மேற்பார்வையில் மதுரையில் ஒரு திரமிள சங்கம் அமைக்கப்பட்டதுதான் அந்த நிகழ்ச்சி... முற்காலப் பாண்டியரைப் பற்றிய சாசனங்களில் சின்னமனூர் சிறிய செப்பேட்டுச் சாசனத்தில் மட்டும் (கி.பி. 10 ஆம் நூற்றாண்டு), தலையாலங்கானத்துப் போர்வென்ற நெடுஞ்செழியனுக்குப் பிறகு வந்த ஒரு பாண்டியன் நிறுவிய மதுரைத்தமிழ்ச் சங்கம் குறிப்பிடப்படுகிறது. இது வச்சிரநந்தியின் சங்கத்தைக் குறிப்பிடுவதாக இருக்கலாம்’ என்றும், தாம் ஆங்கிலத்தில் எழுதிய ‘தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாறு’ என்னும் நூலில் 14 ஆம் பக்கத்திலும், 58,59 ஆம் பக்கங்களிலும் எழுதுகிறார். 

மேலும் அந் நூல் 61 ஆம் பக்கத்தில், 

‘வச்சிரநந்தி சங்கத்தைப் பற்றிச் சரியான சாதனங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அச்சங்கத்தை நிறுவியவுடனே ஒழுக்க நூல்களும் இலக்கண நூல்களும் வெளிவந்திருப்பது அச்சங்கத்தின் பெரிய செயலைக் காட்டுகிறது’ என்று எழுதுகிறார்.

முற்காலத்தில் பாண்டிய மன்னர் அமைத்துத் தமிழராய்ச்சி செய்த தமிழ்ச் சங்கத்தையும் பிற்காலத்தில் வச்சிர நந்தி அமைத்த ஜைனமதப் பிரச்சாரச் சங்கத்தையும் ஒன்றாகப் பொருத்திக் காட்டுகிறர் வையாபுரிப்பிள்ளை. 

பொருத்திக் காட்டுவதுடன் அல்லாமல் தொல்காப்பியர், வச்சிரநந்தி காலத்தில் (கி.பி.470 க்குப் பிறகு) தொல்காப்பிய இலக்கணத்தை எழுதினார் என்றும் கூறுகிறார். இது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடி போடுகிற கதையாக இருக்கிறது.

பாண்டியர் அமைத்த தமிழ்ச்சங்கம் வேறு; வச்சிரநந்தி அமைத்த தமிழ்ச்சங்கம் (திராவிட சங்கம்) வேறு. 

பாண்டியர் அமைத்தது தமிழ் இலக்கிய இலக்கண ஆராய்ச்சிச் சங்கம். வச்சிரநந்தி அமைத்தது ஜைன சமய பிரசாரச் சங்கம். 

இதையறியாமல், வையாபுரிப் பிள்ளை இரண்டு வெவ்வேறு சங்கங்களையும் ஒன்றாக இணைத்துப் பிணைத்துக் குழப்பியிருக்கிறார். சாதாரண அறிவுள்ளவரும் இதனை எளிதில் அறிந்து கொள்ள முடியும். ஆனால், வையாபுரிப் பிள்ளையவர்கள் ஏனோ இவ்வாறு குழப்புகிறார்.

‘தமிழர் வரலாறு’ என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய திரு. பி.தி.சீனிவாச அய்யங்கார் அவர்கள் வச்சிர நந்தியின் திராவிட சங்கம் வேறு, பாண்டியரின் தமிழ்ச்சங்கம் வேறு என்று தெளிவாகக் கூறுகிறார்.

 ‘தமிழ்ச் சங்கம் என்று நாம் அறிந்திருக்கிற சங்கம் அன்று இது என்பதைக் குறித்துக் கொள்ள வேண்டும். இது (வச்சிரநந்தியின் சங்கம்) தமிழ்நாட்டு ஜைனர்கள் தம்முடைய மத தர்மத்தைத் தமது மாணாக்கர்களுக்குக் கற்பிப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்’(P.247, History of the Tamils, P.T.Srinivas Iyengar, Madras, 1927) என்று அவர் எழுதுகிறார்.

இந்த நான்கு பிரிவுகளில் நந்திகணம் பேர்பெற்றது. நந்தி கணத்தில் நாளடைவில் ஜைன முனிவர்கள் தொகை அதிகமாகிவிட்டது. 

ஆகவே, வச்சிரநந்தி முனிவர், கி.பி.470 இல் நந்திகணத்தை (நந்தி சங்கத்தை) இரண்டாகப் பிரித்து இரண்டாவது பிரிவுக்குத் திரமிள சங்கம் (தமிழ் நாட்டுச் சங்கம், தமிழ் ஜைனர் சங்கம்) என்று பெயர் கொடுத்தார். 

நந்தி சங்கத்திலிருந்து திரமிள (திராவிட) சங்கம் ஏற்பட்டது என்பதை மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது.

‘ஸ்ரீமத் திரமிள ஸங்கேஸ்மிம் நந்தி ஸங்கேஸதி அருங்களா

அன்வயோ பாதி நிஸ்ஸே­ ஸாஸ்த்ர வாராஸி பாரகைஹி’

‘நந்தி சங்கத்ததோடு கூடிய திரமிள சங்கத்து அருங்கலான்வய பிரிவு’ என்பது இதன் பொருள்.

இந்தத் திராவிட ஜைன முனிவர் சங்கத்தின் கொண்டகுண்டான் வயம் என்னும் பிரிவில் புஸ்தககச்சை என்னும் உட்பிரிவைச் சேர்ந்த முனிபட்டாரகர் என்னும் ஜைன முனிவரைக் கர்நாடக நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது.

திரமிள சங்கத்து அருங்கலான்வயப் பிரிவைச் சேர்ந்த சாந்தி முனி என்பவரை இன்னொரு சாசனம் கூறுகிறது.

திரமிள சங்கத்து அருங்கலான்வயத்து ஸ்ரீபால திரைவித்யர் என்னும் முனிவரை மற்றொரு இன்னொரு சாசனம் கூறுகிறது.

இதிலிருந்து, பாண்டியர் தமிழை வளர்ப்பதற்கு மதுரையில் ஏற்படுத்திய தமிழ்ச்சங்கம் வேறு என்பதும், வச்சிர நந்தி ஜைனசமயத்தை வளர்ப்பதற்காக மதுரையில் நிறுவிய நந்தி சங்கத்தின் பிரிவாகிய திரமிள சங்கம் வேறு என்பதும் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் விளங்குகிறதல்லவா? 

இது சாதாரண அறிவுடையவருக்கும் நன்கு விளங்குகிறது.

No comments: