Tuesday, August 31, 2021

ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பெரியாரியல் ஆய்வுரை -2

 ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் பெரியாரியல் ஆய்வுரை- 2


பெரியாரை கடவள் மறுப்பாளராக சிலர் பார்க்கலாம். சிலர் பார்ப்பன எதிர்ப்பாளராக பார்க்கலாம். சட்டத்தைக் கொளுத்தியவர், சிலையை உடைத்தவர், இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தோடு பார்ப்பார்கள்.

 எல்லாவற்றிற்குமே அடிப்படை என்ன என்பதைப் பற்றி அய்யா அவர்கள் சொல்லுகின்றார்கள்.

சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்ததேன்? என்று அய்யா அவர்கள் சொல்லுகின்றார்கள் :

 இதை ஏறத்தாழ ஒரு 50 ஆண்டுகளுக்கு(1988 இல் ஆசிரியர் இதை பேசுகிறார் -கவி ) முன்னாலே எழுதியிருக்கின்றார்கள். ‘குடிஅரசு’ ஏட்டிலே அய்யா அவர்கள் எழுதிய கட்டுரையை எடுத்து தான், சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்? என்று ஒரு நூலையே போட்டிருக்கின்றோம்.

அய்யா அவர்கள் தன்னைப் பற்றி சொல்லுகின்றார்கள், ‘எனக்கு சிறுவயது முதற்கொண்டே சாதியோ, மதமோ கிடையாது. அதாவது நான் அனுசரிப்பது கிடையாது’ என்று சொல்லுகின்றார்.

அய்யா அவர்களுடைய குடும்பம் பெரிய வைஷ்ணவக் குடும்பம். அய்யா அவர்களே வட நாமம் போட்ட படம் இருக்கின்றது. போட்டிருக்கின்றார்கள்.

அய்யா அவர்களுடைய குடும்பத்திலே அய்யா அவர்களுக்கு ராமசாமி என்ற பெயர் மட்டும் வைக்கவில்லை, ஒரு நீண்ட பெயரை வைஷ்ணவ முறைப் படி வைத்திருக்கின்றார்கள். அவருடைய அண்ணாருக்கும் கிருஷ்ணன் என்றுதான் பெயர் வைத்திருக்கின்றார்கள்.

அடுத்து அய்யா அவர்கள் சொல்லுகின்றார் :

‘அதுபோலவே கடவுளைப் பற்றி ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டது இல்லை. எந்தக் காலத்திலும் நம்பிக்கையும் வந்ததில்லை. பயமும் வந்த தில்லை.

நான் செய்ய  வேண்டும் என்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப் பாரே என்றோ, கடவுள் தண்டிப்பாரே என்றோ கருதி எந்தக் காரியத்தையும் செய்யாமல் விட்டிருக்கமாட்டேன்.

 எனது வாழ்நாளில் என்றைக்காவது சாதியையோ, மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பி இருந்தேனா என்று இன்னமும் யோசிக்கின்றேன்.

 எப்பொழுதிலிருந்து இவைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் யோசித்து, யோசித்துப் பார்க்கிறேன். கண்டுபிடிக்க முடியவே இல்லை. எனது 6 ஆவது வயதில் நான் ‘திண்ணைப் பள்ளிக் கூடத்’திற்கு அனுப்பப்பட்டேன்.

நான் சென்ற அந்த  பள்ளிக் கூடம் டவுனுக்கு சற்று விலகிய தூரத்தில் இருந்தது. இப்பொழுது அது நடு ஊராக ஆயிற்று. பள்ளிக் கூடத்தைச் சுற்றி வாணியச் செட்டியார்களின் வீடுகள் உண்டு. ‘எண்ணெய் செக்குகள்’ சதா ஆடிக் கொண்டிருக்கும். 

மூங்கில் பாய், முறம், கூடை பின்னுகிறவர்கள் குடிசை களில் இருந்து கொண்டு தங்களது வேலைகளைச் செய்வார்கள். சில முஸ்லீம் கள் வீடும் குடிசைகளுக்குப் பக்கத்திலே உண்டு. ஆகவே அப்பள்ளிக் கூடத்தை சூழ்ந்திருந்த மக்கள் வாணியச் செட்டியார்கள், வேதக்காரர்கள், சாயபுகள் ஆகியவர்கள். அந்தக் காலத்தில் இவர்கள் வீட்டில் எவ்வித சாதிக் காரர்களும் உணவு அருந்த மாட்டார்கள் அல்லவா?

ஆகையால் என்  வீட்டார்கள் நான் பள்ளிக்குப் போகும் பொழுது ஞாபக மாய்ச் சொல்லி அனுப்புவார்கள். என்னவென்றால், அங்குள்ள சாதிக்கார்கள் புழங்கக் கூடாத சாதிக்காரர்கள். அவர்கள் வீட்டில் நீ தண்ணீர் குடித்து விடாதே! வேண்டுமானால் வாத்தியார்  வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடி. வாத்தியார் வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடிப்பதில் விசயமிருக்கிறது. ஏனென்று சொன்னால் இவர் பணக்காரர் வீட்டுப் பிள்ளை. வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்டால் கொடுத்து விடுவார்கள்.

அதுபோலவே இரண்டொரு தடவை வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்டேன். வாத்தியார் ஓதுவார் சாதி; மாமிசம் சாப்பிடாத சைவர்கள். அவர்கள் வீட்டு சிறு பெண்  எனக்கு தண்ணீர் கொடுக்கும் பொழுது ஒரு ‘வெங்கல டம்ளரை’ கீழே வைத்து ‘தண்ணீர் ஊற்றிய’ பிறகு எடுத்து, ‘தூக்கி குடி’க்கச் சொல்லும். நான் குடித்த பிறகு (டம்ளரை-கவி) கவிழ்த்து வைக்கச் சொல்லும். அதன் பிறகு அதன் மீது தண்ணீர் ஊற்றி அதை நிமிர்த்தி உள்ளேயும் தண்ணீர் ஊற்றி கழுவி பிறகு உள்ளே எடுத்துச் செல்லும்.

இதற்குள், எனக்கு ‘தூக்கிக் குடி’க்கத் தெரியாது. குடிக்கும் பொழுது அதில் பகுதி தண்ணீர் உடல்மீது விழும். பகுதி தண்ணீர்தான் வாயில் விழும்.

 மூக்கில் விழுந்த தண்ணீரால் புரையேறி தும்மல் வந்து, வாய் தண்ணீர் கீழே விழும். இதைப் பார்த்த அந்தப் பெண் அசிங்கப்படும்’.

எவ்வளவு தெளிவாக அய்யா அவர்கள் வர்ணிக்கிறார் பாருங்கள். 

‘சில சமயம் அந்த பெண் கோபித்து வையும். அதனால் எனக்கு தாகம் ஏற்பட்டாலும் வாத்தியார் வீட்டில் தண்ணீர் கேட்பதில்லை. வாணியஞ் செட்டியார் பிள்ளைகள் வாத்தியார் வீட்டில் தாகத்திற்கு தண்ணீர் கேட்பதில்லை.

பள்ளிக் கூடத்தில் தண்ணீர் தாகம் ஏற்படும் பொழுது வாத்தியாரிடத்தில் ‘பெருவிரலை’ காட்டுவோம்.

 வாத்தியாரும் ‘போய்விட்டு சீக்கிரம் வா’ என்று சொல்லுவார். ஒரு நாள் ஒரு செட்டியார் பையன் தண்ணீர் வேண்டுமென்று பெருவிரலைக் காட்டி வாத்தியாரிடம் கேட்டான். நானும் உடனே தண்ணீர் வேண்டுமென்று வாத்தியாரிடம் பெருவிரலைக் காட்டினேன். இருவரையும் வாத்தியார் அவர்கள் ‘சீக்கிரம் போய்விட்டு வாருங்கள்’ என்று சொன்னார்.

உடனே, ‘ராமா நீ எங்கே ஓடுகிறாய்?’ என்று வாத்தியார் கேட்டார் .

 ‘தண்ணீருக்காக அய்யா’ என்று சொன்னேன். தண்ணீருக்காக அவன் கூட போறியே? என்றார். அதன் பிறகு நான் வாத்தியார் வீட்டிற்குப் போனேன். 

அதாவது ஒரு கூரை வீட்டில் திரைச்சீலையை கட்டிய ஒரு பாகத்தில் வாத்தியார் குடியிருப்பார். நான் தண்ணீர் குடித்துவிட்டு தேகமெல்லாம் நனைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டேன். அடுத்த நாள் தண்ணீர் தாகம் எடுத்த பொழுது - ஒரு செட்டியார் பையன் கூட போக தீர்மானம் பண்ணிக் கொண்டு, அந்த பையனிடம் பேசி வைத்து, அவன் தண்ணீர் குடிக்க பெரு விரலைக் காட்டும் முன்பே நான் ஒரு விரலை, அதாவது ‘ஆள்காட்டி விரலைக்’ காட்டி (சிறுநீர் கழிப்பதற்கு - கவி) வாத்தியாரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு, வாத்தியார் வீட்டுப் பின்புறம் வந்து நின்று கொண்டேன்.

 அடுத்து அந்த பையன் தண்ணீர் குடிக்க வாத்தியாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு வெளியே வந்தான். நானும் அவனும் அந்தச் செட்டியார் வீட்டிற்கு ஓடினோம்.

 ‘லோட்டா’வில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். சாதாரணமாக எங்கள் வீட்டில் குடிப்பது போல் ‘லோட்டா’ விளிம்பை உதட்டில் வைத்து குடித்தேன். 

அந்த செட்டியார் வீட்டம்மாள் என்னைப் பார்த்து, ‘நீ நாயக்கர் வீட்டு தம்பியா?’ என்றார். நான், ‘ஆமாம்’ என்றேன். ‘இங்கு தண்ணீர் குடிக் கிறாயே! உங்கள் வீட்டில் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?’ என்றார். ‘சொல்ல மாட்டாங்கோ!’ என்று சொல்லிவிட்டு என் கூட வந்த பையனுடன் கூட ஓடி வந்து விட்டேன்.

அதற்குள் அந்த அம்மா அந்தப் பையனைக் கூப்பிட்டு, ‘டேய் பழனியப்பா! அந்தச் சொம்பை கழுவி வைத்துவிட்டுப் போடா ! ’என்று சொன்னார்கள். அதே மாதிரி  அந்த பையன் லோட்டாவைக் கழுவி வைத்துவிட்டு, வீதியாக முன்புறம் பள்ளிக் கூடத்திற்கு வந்தான். நான் போன வழியிலே பின்புறமாக பள்ளிக் கூடத்திற்கு வந்தேன்.

இதே மாதிரியாக, மற்றொரு சமயம் வேதக்காரர் வீட்டில் தண்ணீர் சாப்பிட்டேன். மெல்ல, மெல்ல அவர்கள் வீட்டில் பலகாரங்களும், பிறகு அவர்கள் வீட்டில் விசேச காலங்களில் செய்யப்படும் காய்கறி பதார்த்தங்களும் கூட சாப்பிடும்படியாக ஆகிவிட்டது. எங்கள் வீட்டிற்கு இந்தச் செய்தி எட்டியது.

 எங்கள் வீட்டில் நல்ல பணம் வருவாய் பெருகி, அப்பொழுதுதான் பார்ப்பனர் களைப் போல ஆச்சார, அனுஷ்டானங்களுடனும் நடக்க ஆரம்பித்தது’

என்று குறிப்பிட்டுள்ளார். 

இதிலே கூட அய்யா அவர்களுடைய நகைச் சுவை உணர்வையும், சமுதாயப் பார்வையையும் நீங்கள் நன்றாகப் பார்க்க வேண்டும்.


நம்முடைய நாட்டிலே ‘பணம் வந்தால் ஆச்சார அனுஷ்டானங்கள் தானே வரும்? தான் மேல் சாதிக்காரன் என்று காட்டக்கூடிய எண்ணம் வரும்’ இதை அய்யா அவர்கள் எவ்வளவு நாசுக்காகப் படம் பிடித்திருக்கிறார்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.


பதிவு: கந்தசாமி விநாயகம்

No comments: