Tuesday, August 31, 2021

கான்பூர் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட (பார்ப்பனரல்லாதார்) மாநாடு பெரியார் தலைமைப் பேச்சு

கான்பூர் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட (பார்ப்பனரல்லாதார்) மாநாடு பெரியார் தலைமைப் பேச்சு

கான்பூரில் கடந்த டிசம்பர் 29,30,31 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்ட (பார்ப்பனரல்லாதார்)  இந்து வகுப்பார்  சங்க மாநாட்டிற்குத் தலைமை வகித்த பெரியார். ஈ.வே.ரா. அவர்களின் முன்னுரை  வருமாறு:

அன்புள்ள தோழர்களே!

 உங்களை பெருங்கூட்டமாக இங்கு காணவும், உங்கள் எல்லோரையும் கண்டு பேசவும், அறிமுகப்படுத்திக் கொள்ளவும், சந்தர்ப்பம் ஏற்பட்டதை கொண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.  உங்களுடைய உணர்ச்சியையும், உற்சாகத்தையும், என்னைக் கண்டதும் நீங்கள் செய்த ஆரவாரத்தையும் பார்த்து நான் மிகப் பெருமையடைவதோடு  எனது ஆசையைப் பற்றி மிகவும்  நம்பிக்கை அடைகிறேன். 

மொழி பேதத்தாலும், நம் பழக்க வழக்கங்களாலும், நம் இருவர் நாட்டிற்கும் ஏற்பட்டிருக்கிற அதிக தூரத்தாலும், நாம் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழகுவதற்கு இல்லாமலும்  நம் இரு நாட்டார் நலத்திற்காகவும் ஒன்றுபட்டு வேலைசெய்து  போராட்டம் துவக்க முடியாமலும் இருந்து வருகிறோம்.

இவை ஒருபுறம் இருக்க நம் எதிரிகளின் கையாயுதங்களாகிய போலி தேசீயமென்பதும், தேசீய பத்திரிகைகள்  என்பவையும் நம்மை ஒருவருடன் ஒருவர் சேரஒட்டாமல்  செய்வதோடு  நமக்கு எவ்வளவு  கேடு செய்யவேண்டுமோ அவ்வளவையும்  செய்து வருவதல்லாமல் நமது முயற்சிகளையெல்லாம் திரித்துக்கூறி நம்மைப் பிரித்துவைத்து அடக்கி ஆதரவற்றவர்களாக ஆக்கி வருகின்றன. என்றாலும் இன்று ஒரு கூட்டம் வாலிபர்களும் சட்டம் பெற்ற வக்கீல்களும், காவி உடைதரித்த சில சாமியார்களும் எனது கொள்கைகள், ஆசைகள்  சம்பந்தமான பெரும்பாலான பிரச்சினைகளை ஆதரிக்கும் அறிகுறியோடு கிளத்தும் ஒலிகளும் , காட்டும் அன்பும் ஆரவாரமும்  நம் இருவருடைய நிலையும் ஒன்று என்பதையும் , ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்  என்ற முயற்சிகளையும் காண நேர்ந்ததை உண்மையிலேயே  ஒருபெரும்  பேறாகவே  கருதி அளவிலா ஆனந்தம் கொள்ளுகிறேன்.

எப்படி ஒரு அன்னிய அரசாங்கமானது, ஒரு நாட்டு மக்களை தங்கள் நலனுக்கு ஏற்ற வண்ணம் அடக்கி ஆளவேண்டுமானால் பிரிவினை செய்து ஆள வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்டு இருக்கிறதோ,  அதுபோல் இந்த நாட்டிலுள்ள பழங்குடி மக்களாகிய நம்மை ஒரு அன்னியநாட்டு ஆரிய இனமானது நம்நாட்டில் பிரவேசித்து நம்மையே அடக்கி நம்மீது நிரந்தரமாய் ஆதிக்கம் செலுத்துவதற்காகவே  கடவுள் மதம், வேத, சாஸ்திரங்கள் என்பவற்றின்  பேரால் நம்மை பல வகுப்புகளாக பிரித்து வைத்துவிட்டார்கள். இதனால்தான் இந்த நாட்டு பழங்குடி மக்களும் சகல விதத்திலும் செல்வமும் வீரமும் உள்ள சக்தி பொருந்திய பெரும்பான்மையுள்ள  மக்களுமாகிய  நாம், பிற்பட்ட மக்களாகவும், தாழ்த்தப்பட்ட மக்களாகவும், தொடக்கூடாத மக்களாகவும், மனித பிறவி உரிமைக்கு உரியமையாகாத மக்களாகவும்,  நம்முடைய நாட்டிலேயே  நாம் அடிமைகளாய் இருக்கிறோம். இதை நம்மில் இதுவரை ஒரு சிலராவது அறிந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

கடந்த பல நாட்களாக நம்முடைய ஈன நிலையைக் குறி வைத்து விளக்கிச் சொல்லிக்கொண்டு, சமுதாய சீர்திருத்தம் என்கின்ற பெயரை வைத்து  எத்தனையோ பேர் எவ்வளவோ வேலை செய்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். என்றாலும் அவர்களில் எவரும் வெற்றி பெறாமலே  போய் இருக்கிறார்கள். 

ஏன்னென்றால் அவர்கள் அத்தனை பேரும் இருக்கிற குறைபாடுகளை நீக்க வேண்டும் என்று கருதுகிறார்களே ஒழிய, அவை ஏற்படுவதற்கு அடிப்படையான மூலகாரணம் என்ன என்பதைப்பற்றி சிந்தித்து அதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவேயில்லை. ஆகையால் இன்று நான் சொல்லுவது என்னவென்றால், நமது சமுதாயத்திலுள்ள இழிவுகளையும் குறைபாடுகளையும் ஒழித்து நம்மை  மனிதத் தன்மைக்கு அருகதை உடையவர்களாக  ஆக்கவேண்டும் என்று கருதுகிறவர்கள்  இந்நிலைக்குக் காரணம் என்ன?  எதனால் நாம் இக்கேவலமான நிலையை இந்தப் பகுத்தறிவு சமதர்ம காலத்திலும் சுமந்துகொண்டு இருக்கிறோம்? என்பதைக் கண்டுபிடிக்க முயல வேண்டும் என்பதேயாகும். 

எனக்கு வயது இன்று  67. நான் சென்ற 40 வருஷ காலமாக நமக்குள்ள சமுதாயக் குறைகளையும்,  இழிவுகளையும் ஒழிக்க வேண்டுமென்ற துறையில் உழைத்து  வந்திருக்கிறேன். எனது குடும்பம் ஒரு வைதீகக் குடும்பமாகும். குடும்பத்தில்  எவ்வளவோ  கோவில் கட்டுதல்,  சத்திரம் கட்டுதல், அன்னதானம் செய்தல் முதலிய பல காரியங்கள் செய்திருப்பதோடு,  இத்தருமங்களுக்கு சொத்துக்களும் எழுதி வைத்து இருக்கிறார்கள் என்ற போதிலும், அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான் இன்று பல மக்களால் ஒரு புரட்சிக்காரனென்றும் தீவிரக் கிளர்ச்சி செய்கிறவன் என்றும் சொல்லப்படுகிறேன். 

காரணம் என்னவென்றால் நம்முடைய ஈன நிலைமைக்குக் காரணமாய் இருக்கும் அடிப்படையில் நான்  கையை வைப்பதால்தான் அது என்னவெனில் எவ்வளவு  காலத்திற்கு நாம் இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும், இந்து சாஸ்திரம், புராணம், வேதம், இதிகாசம் முதலியவைகளையும் நம்பி பின்பற்றிக் கொண்டு இருக்கிறோமோ அதுவரையில், நாம் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும் சம உரிமைக்கு அருகதையற்றவர்களாகவும்  இருப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவே முடியாது. 

அந்தமாதிரி அவைகளில்  இருந்து வெளியேறாமல் அவைகளை நம்பி பின் பற்றி நடந்து வந்தவர்களில் ஒருவராவது அவர்கள் வேறு வழிகளில் எவ்வளவு முயற்சித்தவர்களாய் இருந்தாலும் எவ்வளவு பெரியவர்களாக  ஆகி இருந்தாலும் அவர்களுக்கு ஏற்பட்ட இழிவிலிருந்து  தப்பித்துக் கொண்டவர்கள் இல்லவே இல்லை என்பதை ஒவ்வொரு சீர்திருத்தவாதி,  என்பவனும் நன்றாக உணரவேண்டும் என்று சொல்லி வருகிறேன். இதனாலேயே  நான் நாத்திகன் என்று கூட சொல்லப்படுகிறேன்.

 தோழர்களே! நான் ஏன் இப்படிச் சொல்லி வருகிறேன் என்றால், ஜாதி முறைகள் என்பவை எல்லாம் இந்து மதத்தினுடைய சிருஷ்டியேயாகும். இந்து கடவுள்கள்  பெயராலும்,  சாஸ்திரங்கள் பெயராலுமே தான் அவை நிலை நிறுத்தப்படுகின்றன.  பகுத்தறிவற்ற சில சமுதாய சீர்திருத்தக்காரர்  என்பவர்கள் இப்படிப்பட்ட கடவுள் மத சாத்திரங்களுக்கும்,  இந்து மதத்திற்கும், வேதாந்தமும், தத்துவார்த்தமும்  சொல்லி இதை ஏற்படுத்தினவர் களுக்கு நல்ல பிள்ளைகளாக  ஆவதற்கு முயற்சிப்பார்கள்.  இந்த அறிவீனமும், மோசமும், தந்திரமும் ஆன காரியங்களால்  தாங்கள் மாத்திரம்   மரியாதையடையலாமே தவிர  சமுதாயத்தின் இழிநிலை போக்க ஒரு கடுகளவும் பயன்படாது. 

ஆகையால்  உங்களுக்கு  முதலாவதாக  நான் என்ன சொல்லுகிறேன் என்றால், நீங்கள் உங்களுடைய  நிலையை  சிறிதாவது மாற்றிக் கொள்ள வேண்டும்  என்று உண்மையாய் ஆசைப்படுவீர்களானால், இந்து மதம் என்பதையும்  அது சம்பந்தப்பட்ட கடவுள்,  மத, புராண, சாஸ்திர, இதிகாசம்  என்பவைகளையும்   உதறித்தள்ளி அவற்றிலிருந்து வெளியாகுங்கள்.  அதைச் சொல்லவேதான்  நான் இவ்வளவு கஷ்டப்பட்டு  இங்கு வந்திருக்கிறேன். 

நீங்கள் அதைச் செய்யவில்லையானால்  இனியும் ஓர் ஆயிரம் ஆண்டிற்குக்கூட நீங்கள்  எப்படிப்பட்ட மாநாடுகளும்,  சங்கங்களும், பிரச்சாரங்களும், கிளர்ச்சிகளும்  நடத்தினாலும், எவ்வளவுதான்  அரசியல் சுதந்திரமும்,  பொருளாதார முன்னேற்றமும், பட்டம் பதவிகளும் பெற்றாலும் உங்கள்  சமுதாயத்திற்குள்ள  இழிவு  நீங்கப்போவதில்லை, இது உறுதி, உறுதி. உங்களுக்குமுன்   முயற்சித்தவர்கள்  செய்த தவறுகளையே நீங்களும்  செய்துகொண்டு இருந்தால்,  உங்கள் வாழ்நாள்களும்  அவர்களைப் போலவே தவறு செய்யத்தான் முடியுமே ஒழிய திருத்தம் காண முடியவே முடியாது.  

மலேரியாக் காய்ச்சலால் அவதிப்படும் மக்கள் கொயீனா சாப்பிடுவதையே அதற்குப் பரிகாரம் என்று கருதுவார்களேயானால்  அம்மக்களுக்கு  மருந்து சாப்பிடுகிற வேலையும், மருந்து வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கிற வேலையும் தான் நடைபெறுமே தவிர, அவர்களுக்கும் அவர்கள் சந்ததிகளுக்கும்  மலேரியா காய்ச்சல் ஏற்படுவது தடுக்கப்படமாட்டாது.

 உண்மையில் மலேரியா காய்ச்சலை ஒழிக்க வேண்டுமானால் மலேரியா காய்ச்சலுக்கு ஆதாரமான, அதை உற்பத்தி செய்கிற கொசுப்பூச்சிகள், விஷக்காற்றுகள் முதலியவைகளை ஒழிக்க வேண்டும்.  இவைகள் ஒழிக்கப்படவேண்டுமானால், மறுபடியும் அவைகள் உற்பத்தியாகாவண்ணம்  கசுமாலங்களையும், குப்பை கூலங்களையும் நெருப்பு  வைத்து எரித்து, அழுக்குத் தண்ணீர் குட்டைகளை மூடி ஆகவேண்டும். அது போலவேதான் நம் சமுதாய இழிவுக்கு  காரணங்களாய் இருக்கிற எப்படிப்பட்ட  மதத்தையும், கடவுள்களையும், ஆதாரங்களையும்  நாம் அடியோடு அறுத்தே தீர வேண்டியவர்களாய் இருக்கிறோம்.

இந்து மதத்தையோ, அதுசம்பந்தமான கடவுள், மதம், சாஸ்திரம்,  இதிகாசம், புராணங்களையோ சீர்திருத்தி விடலாம் என்று நினைப்பது வெறும் கனவும் வீண்வேலையும், கடைந்து  எடுத்த முட்டாள் தனமுமேயாகும். 

சரியான வழி,  புத்திசாலித்தனமான  வழி  என்னவென்றால்  அதிலிருந்து  தப்பித்துக் கொள்வதுதான். அதாவது, இந்து மதத்தைவிட்டு நாம் வெளியேறிவிட வேண்டியதுதான்.

அதாவது இந்துமதம் என்பதற்கு வேறு வார்த்தை சொல்ல வேண்டுமானால், ஆரியம், பார்ப்பனீயம் என்றுதான் சொல்ல வேண்டும். உங்களுக்கு சந்தேகமிருந்தால் அகராதி புத்தகங்களையும் அறிஞர்களால், ஆராய்ச்சி நிபுணர்களால் எழுதப்பெற்ற ஆராய்ச்சிக் குறிப்புகளையும், பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இதை நீங்கள் யாவரும் நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள். ஆஷாடபூதிகளைக்கண்டு  ஏமாந்துவிடாதீர்கள். 

புத்தர், சங்கரர்,  ராமானுஜர்  போன்றவர்களின் முயற்சிகள் என்னஆயின? புத்தரை ஒழிக்கவே, இராமன், கிருஷ்ணன், இராமாயணம்,  கீதை,  புராணங்கள், அவை சம்பந்தப்பட்ட கோவில்கள் முதலியவை கற்பிக்கப்பட்டன.  இராமாயணத்தையும், கீதையையும், பிற சாத்திரங்களையும், ஆதரித்து பிரச்சாரம் செய்யவே சங்கரர், ராமாநுஜர்கள் முயன்று வந்தார்கள்.  அவர்களைப் பின்பற்றித்தான் ஆழ்வார்களும் நாயன்மார்களும், பக்தர்களும், தாசர்களும், மகாத்மாக்களும், ஆனந்தாக்களும், சுவாமிகளும்  தோன்றின இதை உணர்ந்தவர்கள் தான் இன்று  இந்நாட்டு மனித சமுதாய சீர்திருத்தத்திற்கு ஒரு கடுகளவாவது  தகுதியுடையவர்களாவார்கள். 

 சமீபத்தில் தோழர் அம்பேத்கர் அவர்கள் சென்னையில் வந்திருந்தபோது என்னிடத்தில் இதுசம்பந்தமாக நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததிலிருந்தும், பஞ்சாப்,  லாகூரிலிருந்து,  மண்டலத் தலைவர் சாந்தராம்  அவர்களும், முன்பு  காரியதரியாய் இருந்த ஹரிபவன் அவர்களும் உங்களைப் பற்றி எனக்கு எழுதிய சில கடிதங்களிலிருந்தும், நீங்கள்  நான் சொல்லும் இந்த வார்த்தைகளைப் பொறுமையாய்க் கேட்கக் கூடியவர்களென்றும்., நடு நிலைமையிலிருந்து  கவலையாய் சீர்திருந்தக் கூடியவர்கள் என்றும் தெரிந்ததினால் இவ்வளவு ஆயிரம் பேர் கொண்ட இந்த மாபெரும் கூட்டத்தில்  இதை நான் சொல்லுகிறேன். 

 எங்கள் நாட்டில் நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவனாய் இருந்த 1922ஆவது வருடத்திலேயே ஒரு பெரியமாகாண காங்கிரஸ் மாநாட்டில் இராமாயணம் கொளுத்தப்பட்டால் ஒழிய தீண்டாமை ஒழியாது  என்று சொல்லி இருக்கிறேன்.  வெகு பேர்களுக்கு  அன்று ஆத்திரமாய் இருந்தது.  இன்று எங்கள் நாட்டில் இப்படிப்பேசுவதும், கொளுத்துவதும் சர்வசாதாரணமாய் ஆகிவிட்டது. இராமாயணத்தைக் கொளுத்த  ஒரு கூட்டமும், அதை ஆதரிக்க ஒரு கூட்டமும் தினமும் பொதுக் கூட்டம் கூட்டி பேசி வருகிறார்கள்.

 மற்றும் பதினாயிரக்கணக்கான சுயமரியாதைக்கார்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.  தங்கள் வடமொழிப் பெயர்களை எல்லாம் மாற்றிக் கொண்டார்கள்.  இந்து மத அறிகுறியாய் இருக்கிற சின்னங்களை எல்லாம் விட்டுவிட்டார்கள்.  

உச்சிக்குடுமிகளை எல்லாம் தாங்கள் கத்தரித்துக் கொண்டதுமல்லாமல் பிறருக்கும் கத்தரித்துவிட்டார்கள். அநேகர் புராணப் பண்டிகைகளையும் உற்சவங்களையும் கொண்டாடுவதில்லை. இதற்கு முன்பு ஏழைகள்  பணத்தை வஞ்சித்துக் கொள்ளை அடித்த  பணக்காரர்கள்  இதற்கு முன்பு  கோயில் கட்டி வந்ததை நிறுத்திவிட்டு,  பள்ளிக்கூடம்  முதலிய காரியங்களில்  செலவிட்டு வருகிறார்கள். சென்சசில்  தாங்கள் இந்துக்கள் அல்லவென்று அநேகம் பேர் சொல்லிவிட்டார்கள். 

புராண நாடகங்களையும், சினிமாக்களையும், பஜனைப் பாட்டுகளையும்  ஜனங்கள் வெறுக்கத் தொடங்கி விட்டார்கள்.  கூடிய சீக்கிரத்தில் பெரும் கிளர்ச்சிகள்  செய்து ஜெயிலுக்கும் ஆயிரக்கணக்கான  வாலிபர்கள் போகத்தயாராய் இருக்கிறார்கள். எங்கள் நாட்டார் பலர் எங்கள் திராவிட நாடு, வடநாட்டு சம்பந்தத்திலிருந்து பிரிந்து  தனியாக  இருக்க விரும்பும் முக்கியக் காரணம்கூட,  இந்துமதத்தால்  ஏற்பட்ட இழிவும், ஆரிய ஆதிக்கத்திலிருக்கும் இழிவும் சுரண்டலும் ஒழிய  வேண்டும் என்பதற்குமாகும்.


 தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களாகிய  டாக்டர் அம்பேத்கார், ராவ்பகதூர்  சிவராஜ் போன்றவர்கள்  எல்லாம்,  தாங்கள் இந்து மதஸ்தர்கள்  அல்லவென்றும்,  தாங்கள் இந்துக்கள்  அல்ல என்றும்  தங்கள் சமூகத்தார் இந்து மதத்திலிருந்து விலக வேண்டும் என்றும், 15வருடத்திற்கு  முன்பிருந்தே சொல்லி வருகிறார்கள். இந்து மதத்தை விட்டுவிட்டால் எங்களை  என்ன மதம் என்று சொல்லிக் கொள்வது  என்று கேட்கலாம்.  உங்களுக்கு  துணிவு இருந்து நீங்கள்  வேறு எந்த மதத்தின் பேரை  சொல்லிக் கொண்டால் சமுதாயத்தில் உங்களை தீண்டாமையும்  இழிவும்  அணுகாதோ  அதைச் சொல்லுங்கள், அப்படி சொல்லிக் கொள்வதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால் நீங்கள் திராவிடர்கள் என்றும், திராவிட  சமயத்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.   அதிலும் கஷ்டமிருந்தால்  சமரச  சமயத்தார் மனித சமுதாய  ஜீவகாருண்ய சமயத்தார் என்று சொல்லிக் கொள்ளலாம்.  பொருள் இல்லாததும், பித்தலாட்டமானதும்  இழிவையும் அந்நிய  ஆதிக்கத்தையும், சுரண்டலையும்   தருவதுமான ஒரு  கற்பனையான (இந்து) மதத்தின்  பேரைச் சொல்லிக் கொள்வது என்பது வெட்கக் கேடான காரியமாகும். மதம் வேண்டுமானால் மதம் வேண்டும் என்பவர்கள், மதத் தத்துவங்களையும், அவசியத்தையும் ஆராய்ச்சி செய்து பார்த்து ஒரு மதத்தைத் தழுவுவது அவரது அறிவுடைமையாகும்.   அப்படி இல்லாமல்  தான் ஒரு மதத்தில் பிறந்துவிட்டேன் என்பதற்காகவே அதை எப்படி விடுவது என்று சொன்னால் வருணாசிரம தர்மத்தை மற்றொரு முறையில்  பின்பற்றுவதேயாகும்.  பகுத்தறிவுவாதி  என்று சொல்வது  எல்லா மதத்திற்கும்  தாய் மதம் என்று  சொல்லிக் கொள்வதை நீங்கள்  திராவிடர்கள்  என்பதை உணராவிட்டாலும் நீங்கள்  ஆரியர்கள்  அல்ல, ஆரிய சம்பிரதயாத்திற்கு  போடாதவர்கள் அல்ல என்றும்,  ஆரியர்கள் இந்த நாட்டிற்குள் குடியேறி வந்திருக்கும் அந்நிய இனத்தார்கள்  என்றும் அவர்களுடைய ஆதிக்கத்திற்கும் ஏற்பட்ட  மத, சாத்திர, புராண இதிகாசங்களை  சுமந்து கொண்டிருக்கிறதன் பயனாகவே இந்த இழிநிலையில் இருக்கின்றீர்கள் என்றும்  தெரிந்தால் எனக்கு அதுவே போதுமானதாகும். 

தோழர்களே!

 முன்னுரையாக  அதிகநேரம் பேசிவிட்டேன், அநேக  காரியங்கள்  நடக்க வேண்டியிருப்பதால் மாநாட்டு காரிய  நடவடிக்கை ஆனபிறகு  சில வார்த்தைகள் சொல்லுகிறேன். நான் சொன்ன இவற்றை நீங்கள் நன்கு ஆலோசனை செய்தபார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று பேசினார். 

   (குடிஅரசு சொற்பொழிவு 13-01-1945)

No comments: