பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்த பின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், அதனால் ஏற்படும் அதிர்வுகளும் தாக்கங்களும் ஒவ்வொருநாளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
பாரதிய ஜனதாகட்சி, நாம்தமிழர் கட்சி, தோழர் அல்லது அய்யா பெ.மணியரசன் (நோக்கம் வேறு வேறாகக்கூட இருக்கலாம்) போன்ற விபீசண, அனுமார் கூட்டங்கள் சில வரிகளை உருவிஎடுத்தும், திரித்தும் எப்படியேனும் பெரியாரை, திராவிடத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்று செயல்பட்டவண்ணம் உள்ளனர். இவர்களுக்கு தரவுகளைத் தேடும் சிரமத்தை இவர்களது முன்னோடிகளான ரவிக்குமார், குணா, ம.பொ.சி, வ.வே.சு அய்யர் போன்ற பலரின் அன்றைய பதிவுகள் பயன்படுகின்றன.
ஒருமுறை பார்ப்பன பேச்சு அடியாள் எச்.ராஜாவிடம் “பெரியாரைப் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு “நான் மணியரசன் எழுதிவருவதைப் படிக்கிறேன்; அதுவே போதும்”என்றான்.
அப்படித்தான் பல வாழ்க்கை வரலாறுகளும்கூட எழுதப்பட்டு வருகின்றன.
ஓர் எடுத்துக்காட்டாக தோழர் ‘பாலசிங்கம் இராஜேந்திரன்’என்பவர் எழுதி ‘நீலம்’ வெளியீட்டில் “இளையபெருமாள் வாழ்க்கைசரித்திரம்”என்ற நூலும் வெளிவந்துள்ளது. நான் கடந்தமாதம் மதுரையில் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கிற்கு முன்னதாக இந்நூலை எழுதிய ஆசிரியருக்குப் பாராட்டுவிழா நடந்தது. அந்த நாளில் அந்த நூல் எனக்குக் கிடைக்கவில்லை, அதன்பின்னர் தோழர் ஒருவர் வழியாக இந்தநூல் அண்மையில்தான் எனக்கு கிடைத்தது.
‘அரசியல் தலைவர்களுடனான உறவும் முரணும்’என்ற தலைப்பிட்ட அந்நூலின் 13வது அத்தியாயத்தில் ஈ.வெ.ரா. பெரியார் என்ற உட்தலைப்பில் சிலசெய்திகள் பதிவாகியுள்ளன.
1948ஆம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த பெரியார் வீட்டில் அவரை சந்தித்து “எங்களது சமூகம் அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு இழிதொழில் செய்ய நிர்பந்திப்பதும் ஒரு முக்கியக்காரணமாகும். ஆகையால் எங்களின் இழிதொழில் ஒழிப்புப் போராட்டங்களுக்கு தங்களது ஆதரவைத் தரவேண்டும்”என்று கேட்டார் இளையபெருமாள்.
இதற்கு பெரியார், “உங்களுடைய சமூகத்தவர்கள் இந்த தொழில்களை செய்யவில்லை என்றால், யார் செய்வார்கள்?' என்று கேட்டார்.
(அதன்மீது நூலாசிரியர் தன் கருத்தாக, “பிராமணர்களுக்கு எதிராக அனைத்து சமூகத்தவர்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று சொன்ன பெரியார், நடைமுறையில் இப்படிப்பட்ட சாதி இந்துக்குரிய குணத்தையே பெற்றிருந்தார்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.)
இவை எந்த ஆதாரத்தின்மீது எழுதப்பட்டுள்ளது என்பதற்கு எந்த குறிப்பும் அதில் இல்லை, ஆனாலும் பிற்சேர்க்கையாக “பயன்பட்ட ஆவணங்கள்”என்ற பட்டியல் உள்ளது. அதில் முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள ரவிக்குமார் எழுதிய ‘இளையபெருமாள் – வாழ்வும்பணியும்’ என்ற 2010ஆம் ஆண்டில் வெளியிப்பட்டிருந்த நூல்.
அது என்னிடமே இருந்தது, அதில் தேடினேன். அந்நூல் முழுவதும் இளையபெருமாள் அவர்களின் வரலாற்றை அவரே சொல்வது போன்று எழுதப்பட்டுள்ளது.
நூலாசிரியர் தோழர் ரவிக்குமார் தனது முன்னுரையில் “அவரது 75வது பிறந்தநாளின் போது அவரிடம் பதிவுசெய்யப்பட்ட அவரது சுருக்கமான தன் வரலாற்றை ‘சித்திரைநெருப்பு’ என்ற பெயரில் சிறுநூலாக வெளியிட்டேன்”என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலின்தொடக்கமும் ‘சித்திரைநெருப்பு’ என்று தான் தலைப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை தோழர் ரவிக்குமார் அவர்கள் முன்னர் வெளியிட்டிருந்த ‘சித்திரைநெருப்பு’ என்ற சிறுநூலின் மறுபதிப்பாக இந்நூல் இருக்கக்கூடும். நூலின் தலைப்பை மட்டும் ‘எல்.இளையபெருமாள் வாழ்வும் பணியும்’என்று மாற்றியிருக்கலாம்.
எப்படியோ, அந்நூலில் உள்ள “பறை அடிப்பது பற்றி”என்ற உட்தலைப்பில் உள்ள பகுதியில் பெரியார் பற்றி அவதூறு பதிவாகியுள்ளது.
“சமூகத்தில் இழித்தொழிலாய் இருக்கின்ற இந்த தொழில்களை ஒழிப்பதற்கு அரசியல்வாதிகள் முன்வரவில்லை. சமூகசீர்திருத்தவாதிகளும் முன்வரவில்லை. ஏன் பெரியார் அவர்களிடமே கேட்டேன். ‘இந்தத் தொழில்களை வேறு யார் செய்வது? இளையபெருமாள், நீயே ஒருமாற்று கூறு’என்று சொன்னார். 1948, டிசம்பர் 20ம்தேதி சிந்தாதிரிப்பேட்டை வீட்டிலே சந்திக்கும்போது சொன்னார்” என்பதுதான் அந்தபகுதி.
இது ஒரு புனையப்பட்ட பொய்யே ஆகும். எந்த அடிப்படையில் அதனைப் பொய் என்கிறோம்?
23.11.1946 அன்று திராவிடர்கழக ஏடான ‘விடுதலை’ இதழில்
'ஜாதியை ஒழிப்பதற்குக் காங்கிரசில் திட்டமில்லை, ஹிந்துமதஸ்தாபனமே காங்கிரஸ் வாணியம்பாடியில் பெரியார் பேச்சு!
பறைகள், தப்பட்டைகள் தீக்கரையாயின!'
எனும் தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது.
22.11.1946 அன்று வாணியம்பாடி சந்தைப்பேட்டையில் செட்யூல்டுவகுப்பார் பெடரேசனால் ஏற்பாடு செய்யப்பட்டு ஒருகூட்டம் நடைபெற்றுள்ளது.
அப்போது இந்தியாவில் அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில், (பெரியார் அந்த உரையில் ‘இந்திய மத்திய அதிகாரசபை’யில் என்கிறார்) முஸ்லீம்லீக்குக்கு ஒதுக்கப்பட்ட 5 இடங்களில் ஒருஇடத்தை செட்யூல்டு வகுப்பார் பெடரேசன் தோழர் ஒருவருக்கு முஸ்லீம்லீக் அளித்தது. அதற்காக ஜனாப் ஜின்னா அவர்களை பாராட்டி நடத்தப்பட்ட கூட்டம் அது.
(அவ்வாறு ஒதுக்கப்பட்ட இடத்தில் நியமிக்கப்பட்டவர் வங்காளத்தைச் சேர்ந்த ஜோகேந்திரநாத் மண்டல் என்பவர். இடைக்கால அமைச்சரவை 2.9.1946ல் அமைக்கப்பட்டபோது காங்கிரசுக்கு இணையான இடங்கள் தங்களுக்கும் ஒதுக்கப்படவேண்டும் என்ற முஸ்லிம்லீக் கோரிக்கை ஏற்கப்படாததால் முஸ்லீம்லீக் பங்கேற்க மறுத்துவிட்டது. அதனால் 12 இடைக்கால அமைச்சர்களும் காங்கிரசாராகவே நியமிக்கப்பட்டனர். வைசிராய் வேவல் அவர்களின் முயற்சியில் மீண்டும் அமைச்சரவை புதுப்பிக்கப்பட்டது. அதில் இந்திய முஸ்லீம்லீக்குக்கு 5 இடங்கள் என்றும், காங்கிரசுக்கு 8 இடங்கள் என்றும் முடிவாகிறது. அவ்வாறு முஸ்லீம்லீக்குக்கு ஒதுக்கப்பட்ட 5 இடங்களில் ஒருஇடத்தைதான் செட்யூல்டு வகுப்பார் பெடரேசன் உறுப்பினர் ஜோகேந்திரநாத் மண்டல் அவர்களுக்கு வழங்கி முகமதுஅலிஜின்னா அவரை இந்தியாவின் சட்ட அமைச்சராக்குகிறார்.
ஜோகேந்திரநாத் மண்டல் என்பவர் யார்?
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் 1942 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 'செட்யூல்டுவகுப்பார் பெடரேசனின்' வங்காள மாகாணத் தலைவரே ஜோகேந்திரநாத்மண்டல் ஆவார்.
அவர் வங்காள மாகாண முஸ்லீம் லீக் தலைமையிலான அமைச்சரவையில் நிதி, பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஆவார்.
இந்தியாவின் அரசியல் நிர்ணயசபைக்கு பம்பாய் மாகாணத்திலிருந்து அம்பேத்கர் அவர்கள் தேர்வாக முடியவில்லை.
வங்காளத்தின் செட்யூல்டுவகுப்பினர், பழங்குடி உறுப்பினர் ஆகியோரின் வாக்குகளை முயன்று பெற்று அரசமைப்பு அவைக்கு அம்பேத்கரை அனுப்பிவைத்தவர் இதே ஜோகேந்திரநாத் என்பவர்தான்.
1947ல் பாகிஸ்தான்பிரிந்தபோது இவர் கிழக்கு வங்காளத்தை சேர்ந்தவர் (கிழக்குபாகிஸ்தான்) என்பதால், பாகிஸ்தான் அரசமைப்பு அவையின் தற்காலிகத் தலைவராகவும், பின்னர் பாகிஸ்தானின் சட்டம், நீதித்துறை அமைச்சராகவும், கூடுதல் பொறுப்பாக தொழிலாளர் நலத்துறை, காமன்வெல்த், காஷ்மீர் விவகாரத்துறை அமைச்சராகவும் இருந்தவர். அந்த ஜோகேந்திரநாத் மண்டல் இந்திய இடைக்கால அமைச்சரவையில் சட்டஅமைச்சராக 25.10.1946 அன்று பதவிஏற்றார். பாகிஸ்தான் பிரிவினைவரை அப்பதவியில் தொடர்ந்தார்).
அவ்வாறு செட்யூல்டு வகுப்பார் பெடரேசன் உறுப்பினரான ஜோகேந்திரநாத் மண்டலுக்கு அமைச்சர் பதவியை வழங்கிய ஜனாப் முகமது அலிஜின்னாவை பாராட்டவே நடத்தப்பட்டது அக்கூட்டம்.
அவ்வாறு 22.11.1946 அன்று வாணியம்பாடியில் செட்யூல்டுவகுப்பார் பெடெரேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கூட்டத்திற்கு தோழர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். தொடர்ந்து செட்யூல்டு வகுப்பார் பெடரேசனின் மாநில செயலாளர்கள் தளபதி பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி, ஆதிமூலம் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து பெரியார் உரையாற்றியுள்ளார்.
அவ்வுரையில் 'இழிவைத் துடைக்க இஸ்லாமியராவதே சிறந்தவழி' என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கூட்டத்தின் முழுஉரையும் 23.11.1946 நாளிட்ட 'விடுதலை' ஏட்டில் வெளிவந்துள்ளது.
இறுதியில் ‘பறைகள் தீக்கிரை’என்ற உட்தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது.
பெரியார் (மேடையில் இருந்து இறங்கி மேடையின் எதிரில்) உட்கார்ந்தவுடன் செட்யூல்டுவகுப்புத் தோழர்கள் தப்பட்டைகள், தாசாக்கள், மத்தளங்கள் முதலிய பலதரப்பட்ட தோற்கருவிகளுடன் சுமார் 100 பேர்கள் திடீரென்று மேடை அருகே வந்தார்கள். வந்தவுடன் கூட்டத்தில் தடபுடல் ஏற்பட்டது. பெரியார் அமைதியாய் இருக்கும்படி வேண்டி, அமைதி ஏற்படுத்திய பிறகு, பெரியாரின் முன்னிலையில் அவைகளை போட்டு குவித்துவிட்டு ஒருவர் மேடைமீது ஏறிநின்று, “நாங்கள் பறை அடிப்பதால்தானே பறையர்கள் என்று அழைக்கப்படுகிறோம். இனிமேல் பறை அடிப்பதில்லை. சாவுவீட்டிற்கும், வாழ்வு வீட்டிற்கும், சாமிவீட்டிற்கும் கண்டிப்பாக பறைஅடிப்பதில்லை என்று இப்போது உறுதிசெய்து கொண்டோம். அதற்காக அந்தக்கருவிகளை இதோகொளுத்திவிடுகிறோம்”
என்று சொல்லி 4,5 புட்டி மண்ணெண்ணையை ஊற்றி நெருப்பு வைத்தார். நெருப்பு திகு,திகு என்று எரிந்தது. யாவரும் ஆரவாரித்தார்கள்.
“டாக்டர் அம்பேத்கர் அனுமதி வந்ததும் நாங்கள் பெண்டுபிள்ளைகளுடன் மதம் மாறுவோம்”என்று ஒலித்துக் கொண்டு கலைந்து சென்றார்கள் என்பதுவே அந்த செய்தி.
நாடு முழுவதும் பறைகளை எரிக்க பெரியார் வேண்டுகோள் விடுத்த வரலாற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.
(தொடரும்) நன்றி 'புரட்சி பெரியார் முழக்கம்' 7.9.2023
No comments:
Post a Comment