Thursday, January 9, 2025

நியூட்ரினோ ஆய்வு மையம்… ஆராய்ச்சியா? அணுக்கழிவா?

அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தை அலறவைக்கப்போகிற சொல்… ‘நியூட்ரினோ’!

1,450 கோடி ரூபாய் செலவிலான நியூட்ரினோ ஆய்வு மையம் தேனி அருகே தேவாரம் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், இந்தத் திட்டம் தங்களுக்கு நன்மையானதா, தீமையானதா என்பது யாருக்கும் தெரியவில்லை. பலர் அஞ்சுகின்றனர்; சிலர் நன்மை நடக்கும் என்கின்றனர். ஆனால், யாருக்கும் நியூட்ரினோ திட்டம் என்பது என்ன என்பதுகூட தெரியவில்லை. தெரிந்தது எல்லாம், ‘பூமிக்குள்ள பெருசா குகை தோண்டி எதையோ ஆராய்ச்சி செய்யப்போறாங்க’ என்பது மட்டும்தான். இந்தப் பகுதியில் உள்ள அமைப்புகளும் இயக்கங்களும்கூட, இதைப் பற்றி அதிகம் அறியவில்லை. அந்த அளவுக்கு அரசு இந்தத் திட்டம் பற்றி மௌனம் காக்கிறது.

இதற்கிடையில் கேரள கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன், ‘நியூட்ரினோ ஆய்வு மையம் என்பது, அணுக் கழிவுகளைக் கொட்டுவதற்காகவே உருவாக்கப்படுகிறது’ என்று கூறியிருப்பது சர்ச்சையை வலுவாக்கியுள்ளது.

நியூட்ரினோ திட்டம் என்றால் என்ன?

”நியூட்ரினோ என்பது சூரியனில் இருந்தும், இந்தப் பேரண்டத்தின் மற்ற விண்மீன்களில் இருந்தும் வெளிப்படும் துகள். இது மிக, மிக நுண்ணியது. எந்த அளவுக்கு என்றால், ஒரு மில்லிகிராம் எடையில் பல கோடி, கோடி நியூட்ரினோ துகள்கள் இருக்கும். மனிதன் இதுவரை கண்டறிந்த பொருள்களிலேயே எடை குறைந்தது இதுதான். இந்த நியூட்ரினோ துகள், கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடியது. தன் எதிரில் உள்ள எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியது. உதாரணமாக, இப்போது இதை வாசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கணத்தில்கூட, பல்லாயிரம் கோடி நியூட்ரினோ துகள்கள் உங்களை ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கும். மனித உடம்பை மட்டுமல்ல… மொத்த பூமியையும் குறுக்கும் நெடுக்குமாக ஒவ்வொரு கணமும் கோடானு கோடி நியூட்ரினோக்கள் ஊடுருவிச் சென்றுகொண்டே இருக்கின்றன. பூமியின் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் ஊடுருவி சென்று அண்ட சராசரத்தில் கலந்துவிடுகின்றன.

பொதுவாக ஒரு பொருளை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றால், அது மற்ற பொருள்களுடன் எப்படி வினை புரிகிறது என்பதை வைத்தே அந்த ஆய்வு செய்யப்படும். ஆனால் நியூட்ரினோ என்பது, வேறு எந்தப் பொருளுடனும் வினை புரியாத, மின்காந்த சக்தியற்ற ஒரு துகள். யாருடனும் ஒரு வார்த்தைக்கூடப் பேசாத இறுக்கமான ஒரு நபரைப் புரிந்துகொள்வது சிரமம்தானே..? நியூட்ரினோவுக்கும் அது பொருந்தும். இதனால் நியூட்ரினோ மீதான உலக விஞ்ஞானிகளின் ஆய்வு மோகம் அதிகரித்தது.

1956-ல் ஃபெடரிக் ரெய்னஸ் என்கிற அறிவியலாளர், நியூட்ரினோ துகள் இருப்பதை தனது ஆய்வுகள் மூலம் அறிவியல்பூர்வமாக நிரூபித்தார். இதற்காக பின்னர் இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. எனினும், அதன் பிறகான நியூட்ரினோ ஆய்வுகள் ஒன்றும் சூடுபிடித்துவிடவில்லை. மெத்தப் படித்த அறிவியலுக்கு அந்தச் சின்னஞ்சிறிய துகள்கள் இப்போது வரை சவால்விடுகின்றன.

நியூட்ரினோ ஆய்வில் விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக இருப்பது, பூமியின் மேற்பரப்பின் மீது பரவியிருக்கும் காஸ்மிக் கதிர்கள்தான். நியூட்ரினோ சோதனையின் போது காஸ்மிக் கதிர்களும் வினை புரிகின்றன. இதனால் சோதனையின் முடிவில், இது காஸ்மிக் கதிர் ஏற்படுத்தியதா, நியூட்ரினோ ஏற்படுத்தியதா என்று குழப்பம் வந்துவிடுகிறது. ஆகவே, காஸ்மிக் கதிர் ஊடுருவாத இடத்தில் நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது.

1985-ல் ஜப்பானில் 1,000 மீட்டர் சுரங்கம் அமைத்து ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள். கனடாவின் சட்பரி (Sudbury) என்ற இடத்தில் 2,000 மீட்டர் ஆழத்திலும், ஃபிரான்ஸ் நாட்டில் ஆன்ட்டெரீஸ் (Antares) என்ற இடத்தில் கடலுக்கு அடியில் 2,500 மீட்டர் ஆழத்திலும் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அன்டார்டிகா பனிப் பிரதேசத்தில் 2,000 மீட்டர் ஆழத்தில் துளையிட்டு நியூட்ரினோ ஆய்வகத்தை நிறுவியுள்ளது அமெரிக்கா. இப்போது இந்தியாவில் முதன்முறையாக தேனியில் நிலத்துக்கும் கீழே சுமார் 2.5 கி.மீ. ஆழத்துக்கு சுரங்கம் தோண்டி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்போகின்றனர். இதுதான் உலகளாவிய அளவில் நியூட்ரினோ ஆய்வின் வரலாறு” என்று விளக்குகிறார் ‘சிறகு’ இணையதளத்தில் இதுகுறித்து கட்டுரைகள் எழுதி வரும் சாகுல் ஹமீது. மதுரையைச் சேர்ந்த இவர், இப்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

ஏன் தேனி?

தேனி, தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் கிராம எல்லையில் உள்ள மலைப்பகுதிதான் ஆய்வகம் அமையவிருக்கும் இடம். இதை India-based Neutrino Observatory (INO) என்கிறார்கள். சுருக்கமாக, ஐ.என்.ஓ.

கடந்த பிப்ரவரி மாதம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட மன்மோகன் சிங், இந்தத் திட்டத்துக்கு 1,450 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கினார். எனினும், பல்லாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் நியூட்ரினோ ஆய்வு தொடங்கிவிட்டது. கோலார் தங்கச் சுரங்கத்தில் 2,500 மீட்டர் ஆழத்தில் செயல்பட்டுவந்த ஆரம்ப நிலையிலான நியூட்ரினோ ஆய்வு, 1992-ல் சுரங்கம் மூடப்பட்டதும் தனது பணிகளையும் நிறுத்திக்கொண்டது. அதன் பிறகு புதிய ஆய்வகம் அமைக்க இடம் தேடி அலைந்தனர். முதலில் தேர்வு செய்யப்பட்டது முதுமலை காட்டில் உள்ள ‘சிங்காரா’ என்ற இடம். அது வனவிலங்குகள் செறிவாக வசிக்கும் ரிசர்வ் வனப்பகுதி என்பதாலும், எதிர்ப்புகள் பலமாக இருந்ததாலும் திட்டம் கைவிடப்பட்டது. பிறகு, பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் தேனியில் வந்து நிலைகொண்டது. இப்போது பொட்டிபுரத்தில் ஐ.என்.ஓ. செயல்படுத்தப்படும் இடத்தைச் சுற்றி சுமார் ஐந்து கி.மீ. சுற்றளவுக்கு கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளது. உள்ளே பிரமாண்டத் தண்ணீர் தொட்டி ஒன்று  கட்டப்பட்டுள்ளது. அந்தத் தொட்டிக்கு உப்புக்கோட்டை முல்லைப்பெரியாற்றில் இருந்து குழாய் மூலமாகத் தண்ணீர் வருகிறது. சுரங்கம் தோண்டுவதற்கான வேலைகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

என்னதான் பிரச்னை?

‘இதுதான் திட்டம், இதைத்தான் செய்யப்போகிறோம்’ என்று மக்களுக்கு விளக்காததுதான் முதல் பிரச்னை. உலகில் வெகுசில இடங்களில் மட்டுமே இருக்கும் அறிவியல் ஆய்வகத்தைக் கொண்டுவரப் போகும் நிலையில், அதுகுறித்து மக்களிடம் விளக்கிச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அரசோ, ஆரம்பத்தில் இருந்தே மிகவும் மர்மமான அணுகுமுறையைக் கையாள்கிறது. அரசியல் கட்சிகளும்கூட இந்த விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றன. வழக்கமாக இதுபோன்ற பெருந்திட்டங்களை ‘நாங்கள்தான் கொண்டுவந்தோம்’ என்று கட்சிகள் உரிமை கோருவார்கள். ஆனால், தேர்தல் சமயமாக இருந்தும்கூட யாரும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. யாருடைய கவனத்திலும் நிகழ்ச்சி நிரலிலும் இந்தத் திட்டம் இடம்பெறாதது ஏன்?

"நாங்கள் இந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதை எதிர்த்து சாலை மறியல் செய்தோம். ஆனால், ஊருக்குள் புகுந்து எங்களை எல்லாம் பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் உட்காரவைத்து, ஐந்து பேர் மீது வழக்குப் போட்டு கடுமையாக மிரட்டினார்கள்” என்று இப்போதும் அச்சத்துடன் பேசுகின்றனர் ஐ.என்.ஓ. திட்டத்தின் நுழைவிடத்தில் உள்ள புதுக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள். மிகவும் செழிப்பான இந்தப் பகுதியில் ஏராளமான காய்கறிகள் விளைகின்றன. எதிர்காலத்தில் நிலம் பறிக்கப்படலாம் அல்லது நீர் பஞ்சம் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படலாம் என்பது இந்த மக்களின் பயம். தங்களை ஊரைவிட்டே காலி செய்துவிடுவார்களோ என்றும் அஞ்சுகின்றனர். வைகை அணைக்கு தங்கள் கிராமங்களைத் தாரை வார்த்தவர்களை அறிந்துள்ள இவர்கள், தங்களுக்கும் அந்த நிலை வரலாம் என்று நினைக்கின்றனர்.

இந்தப் பகுதி கிராமங்களில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நியூட்ரினோ திட்டம் குறித்து சில விஞ்ஞானிகள் மூலம் விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்தியது ஐ.என்.ஓ. அதன் பிறகு, யாரும் எதையும் கண்டுகொள்ளவே இல்லை. ஒருவேளை, கூடங்குளம் போராட்டத்தில் இருந்து படிப்பினையைக் கற்றுக்கொண்டிருக்கும் அரசு, நியூட்ரினோ திட்டத்தை வேறுவிதமாக அணுக முடிவெடுத்து இப்படிச் செய்யக்கூடும்.

"முதலில் இந்தத் திட்டம் குறித்த முழுமையான விளக்கத்தை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதுதான் எங்கள் கோரிக்கை” என்கிறார் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலாளரான மோகன்.

தேவாரத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் பேசும்போது, ”கேரளாவைச் சேர்ந்த ஒருவர், ஐ.என்.ஓ. திட்டம் அமையும் இடத்தைச் சுற்றியுள்ள இடங்களை வளைத்து, வளைத்து வாங்குகிறார். நிலத்தைப் பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு பத்திரப்பதிவு முடிந்ததும், பத்திரத்தை நம்மிடமே கொடுத்து, ‘கேட்கும்போது நிலத்தைத் தந்தால் போதும்’ என்று சொல்லிவிடுகிறார். என்னிடம்கூட இப்படி 10 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். யாராவது பணத்தையும் கொடுத்து, நிலத்தையும் திருப்பித் தருவார்களா? ஐ.என்.ஓ-வுக்காக மறைமுகமாக நிலம் வாங்கப்படுகிறது என்பதுதான் எங்கள் சந்தேகம்” என்கிறார்.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பா?

நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு என்ன பிரச்னை வரும்? ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜனிடம் பேசியபோது, ”மேற்குத் தொடர்ச்சிமலை என்பது, பல்லுயிரியல் சூழலில் முக்கியமான பகுதி. தமிழ்நாட்டு நதிகளின் பிறப்பிடமும்கூட. நிறைய அணைகளுக்கான நீர்ப்பிடிப்புப் பகுதியும் அதுதான். தற்போது நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய உள்ள இடத்தைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட அணைகள் இருக்கின்றன. இந்த நிலையில், சுமார் 2.5 கி.மீ. ஆழத்துக்கு பூமிக்குள் சுரங்கம் தோண்டும்போது ஏராளமான வெடிமருந்துகளை வெடிக்கச் செய்து பாறைகளைத் தகர்க்க வேண்டும். அது அணைகளுக்கும், மலைகளுக்கும், காடுகளுக்கும், உயிரினங்களுக்கும் நிச்சயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மற்ற நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகங்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் செயல்பட்டு வந்த ஆய்வகம் மூடப்பட்டுவிட்டது. ஜப்பானில் செயல்பட்டு வந்த ஆய்வகத்தின் உள்ளே சோதனைக் குழாய்கள் வெடித்துச் சிதறி மறுபடியும் அமைத்தனர். இப்போது மீண்டும் அது செயல்படாமல் உள்ளது. ஆகவே, இங்கு எந்தப் பாதிப்புமே வராது என்று யாரும் உத்தரவாதம் தர முடியாது. மேலும், 2.5 கி.மீ. சுரங்கம் தோண்டும்போது உருவாகும் தூசி மண்டலம், அந்தப் பகுதியை கடுமையாக மாசுப்படுத்தும். உடைக்கப்பட்ட பாறைகளை அள்ளிக்கொண்டு நூற்றுக்கணக்கான லாரிகள் குறுக்கும் நெடுக்குமாகப் பாயும். அந்தப் பகுதி கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும்” என்கிறார்.


மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரசார்’ அமைப்பில் பணிபுரியும் விஞ்ஞானியும் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரனின் கருத்து வேறாக உள்ளது.

"நியூட்ரினோ ஆய்வகம் என்பது, 100 சதவிகிதம் தெளிவான அறிவியல். அந்த அறிவியலில் கடுகளவும் பிரச்னை இல்லை. அதேபோல சுரங்கம் தோண்டுவதால் அணை பாதிக்கும், சூழல் கெடும் என்பதும் கற்பனையே. உதாரணமாக, சென்னையில் இப்போது மெட்ரோ ரயில் வேலைகள் நடக்கின்றன. கிட்டத்தட்ட 50 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைக்கிறார்கள். அதனால் ஏதாவது பெரும் பிரச்னை வந்துவிட்டதா? சென்னை போன்ற நகர்ப் பகுதியிலேயே இதை வெற்றிகரமாகக் கையாள முடியும் எனும்போது அங்கு இன்னும் சுலபமாகச் செய்ய முடியும்” என்கிறார்.

அணுக்கழிவைக் கொட்டப்போகிறார்களா?

இதுதான் இருப்பதிலேயே ஆபத்தானதும், விடை காண வேண்டியதுமான சந்தேகம். அச்சுதானந்தன் மட்டுமல்ல… பத்மநாபன் என்கிற விஞ்ஞானிகூட இதுகுறித்து தொடர்ந்து எழுதிவருகிறார்.

அவர் தனது கட்டுரை ஒன்றில், ‘சென்னை தரமணியில் உள்ள கணிதவியல் அறிவியல் நிறுவனம் (The Institute of Mathematical Sciences)தான், ஐ.என்.ஓ-வுக்கான பணிகளைச் செய்து வருகிறது. இந்தக் கணிதவியல் கழகம், ஐ.என்.ஓ-வுக்கான சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பத்தில் ஐ.என்.ஓ. என்பதை, ‘அணு உலை/அணு உலை எரிபொருள் உலை/ அணு உலைக் கழிவுகள்’ என்று வகையின் கீழ்தான் குறிப்பிட்டுள்ளனர். அந்தப் பகுதியில் அணு உலை அமைக்கவோ, அணு உலை எரிபொருள் ஆலை அமைக்கவோ முடியாது. ஏனெனில், அந்த அளவுக்கான தண்ணீர் வளம் அங்கு இல்லை. ஆக, அணுக் கழிவுகளைக் கொட்டுவது மட்டும்தான் மிச்சம் இருக்கும் ஒரே வாய்ப்பு’ என்று எழுதியுள்ளார் பத்மநாபன்.

இதையேதான் சுந்தர்ராஜனும் கூறுகிறார். "2013 மே 6-ல் உச்ச நீதிமன்றம் கொடுத்தத் தீர்ப்பில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்திய அணு உலைக் கழிவுகளை எங்கு புதைப்பது (Deep geological repository) என்பதை இந்திய அணுசக்திக் கழகம் முடிவுசெய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுவரைக்கும் இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் அணு உலைக் கழிவுகளை ஆங்காங்கே வைத்துள்ளனர். அவற்றை மொத்தமாக ஓர் இடத்தில் புதைத்தாக வேண்டும்.

தேனியில், நியூட்ரினோ ஆய்வு மையம் என்ற பெயரில் இதைத்தான் செய்யப்போகிறார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை ஐ.என்.ஓ. தரப்பில் இருந்து எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை. மேலும், மதுரை –வடபழஞ்சியில் அணுக்கழிவு ஆய்வு மையம் அமைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதுவும் சந்தேகத்தை அதிகரிக்கிறது. அவர்கள் ஐ.என்.ஓ-வை அமைத்தாலும்கூட அதில் அணு உலைக் கழிவுகளையும் கொட்ட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” என்கிறார்.

ஆனால், த.வி.வெங்கடேஸ்வரன் இதை மறுக்கிறார். "ஐ.என்.ஓ. ஆய்வகத்தில் அணு உலைக் கழிவுகளைக் கொட்டுவது என்பது சாத்தியமே இல்லாதது. காஸ்மிக் கதிர்களை வரவிடாமல் தடுத்து நியூட்ரினோவைப் பற்றி ஆய்வு செய்யத்தான் பூமியின் அடியாழத்துக்குச் செல்கிறோம். அப்படி இருக்கும்போது, கதிர்வீச்சை உமிழக்கூடிய அணுக் கழிவை எப்படி அதற்குள் கொட்ட முடியும்? அதிகம் வேண்டாம்… ஒரே ஒரு சாக்கு மூட்டை அளவு அணுக் கழிவைக் கட்டி அந்தச் சுரங்கத்தில் போட்டுவிட்டால்கூட நியூட்ரினோ ஆய்வை நடத்தவே முடியாது. 10 ஆயிரம் வாட்ஸ் மின்விளக்கின் முன்பு ஒரு மெழுகுவத்தியை வைத்தால், அந்த ஒளியைப் பார்க்க முடியாது இல்லையா… அதுபோல” என்கிறார்.

ஆய்வின் நோக்கம் என்ன?

சரி, இவ்வளவு மெனக்கெட்டு, இத்தனை ஆயிரம் கோடிகளைக் கொட்டி, உலகம் முழுவதும் நடைபெறும் நியூட்ரினோ ஆய்வின் நோக்கம்தான் என்ன?

இதற்கு, தீர்மானமான விடை எதையும் சொல்ல இயலாது. ஏனெனில், அறிவியல் ஆய்வு என்பதே அனுமானங்களைச் சோதித்துப் பார்ப்பதுதான். சோதனையின் முடிவுகளில் இருந்து அது அடுத்த கட்டத்தை அடைகிறது. உதாரணமாக, நாம் பேசும் அலைபேசிகளின் அடிப்படை என்ன? ஒலி அலைகள் மின் சைகைகளாக மாற்றப்பட்டு, அவை மீண்டும் ஒலி அலைகளாகப் பெறப்படுகின்றன. இதுகுறித்த ஆரம்பக்கட்ட சோதனையின்போது, ‘இதனால் என்ன லாபம்?’ என்று கேட்டிருந்தால், என்ன விடை கூறியிருக்க முடியும்?

1897-ல் ரூதர்போர்டு எலெக்ட்ரானைக் கண்டறிந்தார். அந்த எலெக்ட்ரான் துகள் மூலம்தான் இன்று நம் கம்ப்யூட்டர்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இதை, அன்றைய நாளில் யாரும் யூகித்திருக்க முடியாது. ஆகவே, அறிவியல் ஆய்வுகளின் நோக்கத்தை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது.

ஒருவேளை, நியூட்ரினோவைக் கையாளும் சாத்தியத்தைப் பெற்றுவிட்டால், முற்றிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஓர் அறிவியல் உலகத்துக்குள் நாம் பிரவேசிக்கக்கூடும். ஒளியின் வேகத்துக்கு இணையாகச் செல்லும் திறன்கொண்ட நியூட்ரினோ பூமியையே ஊடுருவிச் செல்லும் என்றால், மொத்த பூமியின் ஒவ்வொரு விநாடி அசைவையும் கண்காணிக்கும் சாத்தியம் உருவாகலாம். இந்தப் பேரண்டத்தின் பல ரகசியங்கள் திறக்கப்படலாம். இவை எல்லாமே யூகிக்கப்படும் சாத்தியங்களே. ஆனால், அவை நடக்குமா, நடக்காதா, நடந்தால் எப்போது நடக்கும்… எதுவும் தெரியாது.

அறிவியலா? தொழில்நுட்பமா?

"அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. அறிவியல், ஒரு விஷயத்தைச் சோதனை செய்து கண்டுபிடிக்கும். தொழில்நுட்பம், அதைச் செயல்படுத்தும். அறிவியல் ஆய்வுகளுக்கு மிகப் பெரும் முதலீடு தேவை. இந்தியா போன்ற பொருளாதாரரீதியாக இன்னும் தன்னிறைவை அடையாத, கோடிக்கணக்கான ஏழைகளைக் கொண்ட ஒரு நாடு, அறிவியல் ஆய்வுகளுக்கு பல்லாயிரம் கோடி பணத்தை வாரி இறைப்பது மிகவும் தவறானது. மாறாக, மேலை நாடுகளில் கண்டறியப்படும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நாம் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்.

நியூட்ரினோ என்பது அறிவியல்; அதுவும் விடை தெரியாத, இந்தத் துகளின் மூலம் நன்மை விளையுமா, விளையாதா என்று யூகிக்க முடியாத அறிவியல். உலகம் முழுவதும் எத்தனையோ ஆயிரம் கோடிகளை அள்ளிக் கொட்டி ஆய்வு செய்தும் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது, இந்தியா களம் இறங்குகிறது. தொடக்கத்தில் 1,450 கோடி ரூபாய் என்றால், போகப் போக எவ்வளவு செலவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இந்திய மக்கள், இப்படி ஓர் ஆய்வகம் வேண்டும் என்று கேட்டார்களா? அவர்கள் கேட்பது எல்லாம் தரமான குடிநீர், நல்ல சாலைகள், வேலைக்கும் உணவுக்குமான உத்தரவாதம், குடியிருக்க வீடுகள், தரமான கல்வி, மருத்துவம் போன்றவைதான். இவற்றைச் செய்துதராத அரசு, நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதால் என்ன பயன்?

யாரோ சில நூறு விஞ்ஞானிகளின் அறிவை நிரூபிக்க, கோடிக்கணக்கான மக்களின் ரத்தமும் வியர்வையுமான வரிப்பணம் செலவிடப்படுவது என்ன நியாயம்? கேட்டால் வல்லரசு என்பார்கள். பொக்ரானில் அணுகுண்டு சோதனை செய்தபோதும், இதே போன்ற வெற்றுப் பெருமிதம்தானே பேசப்பட்டது?!” என்று கேட்கிறார் சாகுல் ஹமீது.

கண்ணுக்குத் தெரியாத நியூட்ரினோவைக் கண்டறிய பல்லாயிரம் கோடியை ஒதுக்கும் இந்திய அரசு, கண்ணுக்குத் தெரியும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் கேவலத்தை ஒழிக்க எத்தனை ஆயிரம் கோடியை ஒதுக்கியது? அதற்கு ஒரு கருவி செய்ய எந்த ஆய்வகத்தை அமைத்தது? இரண்டையும் நேருக்குநேர் வைப்பது பொருத்தமற்ற ஒப்பீடு என்று சொல்ல முடியாது. அடிப்படை வசதிகள்கூட நிறைவேறாத, தெருப் புழுதிகளில், சாக்கடை ஓரங்களில் தலைமுறை தலைமுறையாக வாழ்கிற மக்களைக்கொண்ட இந்தியா போன்ற ஒரு நாடு, எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற கேள்விதான் இதற்கான அடிப்படை.

வேலைவாய்ப்புக்கு வழி இல்லை!

இந்த ஐ.என்.ஓ. திட்டத்தின் செயல்பாட்டில் பல ஆய்வு நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் இணைந்துள்ளன. டாடா அடிப்படை ஆய்வு நிறுவனம், பாபா அணுசக்தி ஆய்வு மையம், சகா அணு இயற்பியல் நிறுவனம், இந்திரா காந்தி அணு ஆய்வு மையம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி-மும்பை என்று நீளும் இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகமும் இருக்கிறது.

பொதுவாக, இதுபோன்ற திட்டங்களில் வேலைவாய்ப்பு என்பது பிரதான அம்சமாகப் பேசப்படும். ஆனால், ஐ.என்.ஓ.-வைப் பொறுத்தவரை இது ஓர் அறிவியல் ஆய்வகம் என்பதால் பெரிய அளவில் வேலைவாய்ப்புக்கு வழியில்லை. வெகுசிலருக்கு, அடிமட்ட வேலைகள் கிடைக்கலாம்.

 இங்கு அமைக்கப்படும் ஐ.என்.ஓ. ஆய்வகம் என்பது, உலகளாவிய நியூட்ரினோ ஆய்வின் ஓர் அங்கம். மற்ற நாடுகளின் ஆய்வகங்களில் இருந்து நியூட்ரினோ இங்கு அனுப்பப்பட்டு, இங்கிருந்து அங்கு அனுப்பப்பட்டு ஆய்வுகள் நடத்தப்படும்.

No comments: