Thursday, January 9, 2025

சிதம்பரம் கோவிலுக்குள் நீதியும் நுழையமுடியாதா?

சிதம்பரம் கோவிலுக்குள் நீதியும் நுழையமுடியாதா?

சிதம்பரம் நடராசர் கோவில் நிர் வாகத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது செல்லாது என்றும், நிர் வாகம் பொது தீட்சிதர்களின் கைகளில்தான் இருக்கவேண்டு மென்றும் உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ள தீர்ப்பு மெச்சத்தக்கதாக இல்லை. ஒரு குறிப்பிட்ட ஜாதியின் ஆதிக்கத்தில்தான் இந்தக்கோவில் இருக்க வேண்டும் என்று நாட்டின் உயர்ந்த நீதி பரிபாலன அமைப்பு கூறியுள்ளது சமூகநீதி சக்திகளுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தென்னாடுடைய சிவனே போற்றி என்றுபோற்றப்படும் சிதம்பரம் நடராசர் கோவிலின்சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாட, சிவனடியாரான ஆறுமுகசாமிக்கு தீட்சிதர்களால் அனுமதி மறுக்கப் பட்டது. தொடர்ந்து பலஆண்டுகளாக தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்தக் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்தப் பின்னணியில்தான் 2008 பிப்ரவரியில் சிதம்பரம் நடராசர் கோவிலை தமிழக அரசு கையகப் படுத்தியது. இதை எதிர்த்து தீட்சி தர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றத்தில் தீட்சிதர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமான்கள், நடராசர் கோவிலை தமிழக அரசு ஏற்றது செல்லாது என்றும், தீட்சிதர்கள் நிர்வாகத்தில்தான் கோயில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

முறைகேடு குறித்து புகார் வந்தால் அதை சரி செய்ய கோவில் நிர் வாகத்துக்கு தமிழக அறநிலையத் துறை பரிந்துரைகள் வழங்கலாம் அல்லது புகார்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்து அதை மேற்பார் வையிடலாம் என்று கூறியுள்ளனர். இந்த முரண்பாட்டை புரிந்துகொள்ள முடியவில்லை.

சிதம்பரம் கோவிலை பொறுத்தவரை தமிழக அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பரிந்துரை வழங்கலாம். ஆனால் அதை ஏற்க வேண்டுமென்ற அவசியம் எதுவும் தீட்சிதர்களுக்கு இல்லை என்றாகிறது. சிதம்பரம் நடராசர் கோவிலை பொது தீட்சிதர்கள் தான் கட்டினார் கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படவும் இல்லை.

தமிழகத்தில் ஏராளமான கோவில்கள் பல்வேறு ஜாதியினரால் நிர்வகிக் கப்பட்டு வந்தநிலையில் தமிழக அரசு அந்தக் கோவில்களை அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வந்துள்ளது. ஆனால் இப்போதைய தீர்ப்பு அனைத் துக் கோவில்களும் மீண்டும் ஜாதி களின் கையில் செல்லவும், அறநிலை யத்துறையே அர்த்தமற்றுப் போகவும் வழிசெய்யும் ஆபத்து உள்ளது.

தேவாரப் பாடல்களை பதுக்கி வைத்தது, நந்தனாரை தீயில் தள்ளிக் கொன்றது, வள்ளலாரை கோவில் கருவறைக்குள் அனுமதிக்க மறுத்தது, சிவனடியார் ஆறுமுகசாமியை அடித்து நொறுக் கியது நகைகள் திருட்டு என்று சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வரலாற்று காலந் தொட்டு ஏராளமான புகார்கள் உள்ளன.

கோவில் சொத்தை நிர்வகிப்பதிலும் வெளிப்படையான கணக்கு வழக்கு இல்லை. இந்த கோவில் நிர்வாகத்தை ஏற்ற தமிழக அரசு வழக்கை நடத்து வதில் உரிய அக்கறை காட்டவில்லை என்ற புகார் உள்ளது. சேது சமுத்திர திட்ட வழக்கிலும் கூட நம்பிக்கை என்பதற்கு கொடுத்த அழுத்தத்தை வளர்ச்சிப்பணி என்பதற்கு உச்சநீதிமன்றம் கொடுக்க வில்லை.

இந்த வழக்கிலும் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு (மறு சீராய்வு) செய்வதன் மூலம் நீதியையும், சமூக நீதியையும் நிலைநாட்ட முன்வரவேண்டும்.

நன்றி: தீக்கதிர், தலையங்கம், 8.1.2014

No comments: