பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்தபின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், தாக்கங்களும் ஒவ்வொருநாளும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அதன் தொடர்ச்சியாக மற்றொரு செய்தியையும் பார்ப்போம்.
அது 21.12.1946 நாளிட்ட ‘குடிஅரசு’ இதழில் துணைத் தலையங்கமாக “தாழ்த்தப்பட்டோரும் தப்பட்டை வாசித்தாலும்” என்ற தலைப்பில் வந்துள்ள வேண்டுகோள் அறிவிப்பு.
“சென்ற சில மாதங்களுக்கு முன்பு (கடந்த நவம்பர் மாதம் என்பதே சரி) பெரியார் ஈ.வெ.ராமசாமியவர்கள் வாணியம்பாடியில் சொற்பொழிவு நிகழ்த்தும்போது (சொற்பொழிவு முடிந்தவுடன் என்பதேசரி) அக்கூட்டத்திலேயே “பறையர்கள்” எனப்படுவோர் தமது இழிவுக்கு காரணமான தப்பட்டைகளைக் கொளுத்திவிட்டனர் என்ற செய்தி யாவரும் அறிந்ததே. இந்நிகழ்ச்சியை அப்பகுதியில் பல இடங்களில் பலர் தமது பறைகளைக் கொளுத்தி வருகின்றனராம்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் ஒருவரான “பறையர்” எனப்படுவோர் தமது தொழிலின் காரணமாகவே பறையர் என்று அழைக்கப்படுவதும், அதனாலேயே இழிவாக எண்ணப்படுவதும், நடத்தப்படுவதும் யாவரும் நன்கு அறிந்த செய்திகளே யாகும். எனவே, வாணியம்பாடி தோழர்களைத் தொடர்ந்து எல்லா ஊர்களிலுள்ள பறையர் என்றழைக்கப்படும் தோழர்களும் தம்பரம்பரை இழிவுக்கே காரணமானதும் வேண்டிய வருவாய் கொடுக்க வழியற்றதுமான இத்தொழிலைக் கைவிடுவதற்கு அறிகுறியாக தமது தப்பட்டைகளை கொளுத்தி தமது வெறுப்பை வெளிப்படையாய் தெரிவித்துக் கொள்வார்களாக!
“இதற்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் தருமாறு ஆங்காங்குள்ள உள்ள திராவிடர்கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.”
இதுவே அந்த வேண்டுகோள் அறிவிப்பாகும்.
மேற்கண்டவாறு 1946ஆம்ஆண்டு நவம்பர் மாதத்தில் தன் முன்னிலையில் பறைகள் எரிக்கப்பட்டதை அனுமதித்த பெரியார் - 1946 டிசம்பர் மாதத்தில் இவ்வாறான எரிப்புகளை நடத்துமாறும், நடத்துவதற்கு திராவிடர் கழகத் தோழர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டு தனது ஏடான குடிஅரசு ஏட்டில் வேண்டுகோளை வெளியிட்ட பெரியார்தான், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1948 டிசம்பரில் தன்னை சந்தித்து ஆதரவுகேட்ட இளையபெருமாள் அவர்களிடம் “ பறையடிப்பதை நீங்கள் செய்யாவிட்டால் யார்செய்வார்கள்?” என்று கேட்டாராம்.
'கேழ்வரகில் நெய்வடிகிறது' என்று 2010ல் ரவிக்குமார் எழுதியுள்ளதை சரிபார்த்தல் ஏதுமின்றி பாலசிங்கம் ராஜேந்திரன் 2023இல் மீள்பதிவு செய்துள்ளார்.
புத்திஉள்ளவர்கள் புரிந்துகொள்ளவே இவ்விளக்கங்கள்:
ஆனால் தோழர் ரவிக்குமார் எழுதியுள்ள நூலில் 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி சிந்தாதிரிப்பேட்டை பெரியார் அவர்கள் இல்லத்தில் சந்தித்த இளையபெருமாள் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை மட்டும் ஏனோ தோழர் பாலசிங்கம் ராஜேந்திரன் பதிவுசெய்யவில்லை. தேதி, மாதம் ஆகியவற்றை அப்படியே மீள்பதிவு செய்யாமல் 1948ஆம்ஆண்டு என்பதோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார்.
இதற்கும் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. 1948ஆம் ஆண்டின் பிற்பகுதியில்தான், சுதந்திரம் பெற்ற இந்தியாவில் சென்னை மாகாண அரசாங்கம் மீண்டும் இந்தியைத் திணிக்க எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த காலக்கட்டம் அது.
20-6-1948 அன்று சென்னை மாகாணத்தில் ’கட்டாயஇந்தி’ என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. தமிழ்பேசும் பகுதிகளில் இந்திமொழி விருப்பப் பாடமாகவும், தெலுங்கு, மலையாளம், கன்னடம்பேசும் மக்கள் வாழும்பகுதி யில் கட்டாயப் பாடமாகவும் அரசின் அந்த அறிவிப்பு கூறியது.
அதனைக்கண்டித்து 17.7.1948 அன்று சென்னை புனிதமேரிமண்டபத்தில் “இந்தித்திணிப்பு எதிர்பாளர்கள் மாநாடு” திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் மறைமலை அடிகள் தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் பெரியார், திரு.வி.க., பாரதிதாசன், ம.பொ.சி, அண்ணா, நாரண. துரைக்கண்ணன், டாக்டர் தருமாம்பாள், அருணகிரி அடிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.
தொடர்ந்து பலமாநாடுகள், புலவர் மாநாடு, மாணவர் மாநாடு, பெண்கள் மாநாடுகளும், கவர்னர்ஜெனரல் ராஜாஜிக்கு கருப்புகொடி, அமைச்சர்களுக்கு கருப்புகொடி, கண்டன ஊர்வலங்கள் என பலவகைப் போராட்டங்கள் தொடர்கின்றன.
22 8 1948 அன்று சென்னையில் திராவிடர்கழகத்தின் மத்திய நிர்வாகக்குழு இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து ஆலோசிக்கக் கூடியபோது பெரியார், அண்ணா, தி.பொ. வேதாச்சலம், குத்தூசி குருசாமி உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைவரும் (சுமார் 100 பேர்கள்) கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் சிறையில் வைத்திருந்து 27.8.1948 அன்று விடுவிக்கப்படுகின்றனர்.
ஐதராபாத் சமஸ்தானத்தில் இந்தியப்படைகள் நுழைந்துள்ள போர்ச்சூழலைக் கருத்தில் கொண்டு இந்திஎதிர்ப்புப்போர் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு, மீண்டும் 2.11.1948 முதல்தொடங்கியது.
இந்தகட்டத்தில்தான் காவல்துறை யின் வெறியாட்டங்கள் தொடங்குகின்றன. 2.11.1948 அன்றே 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. தடையை மீறி கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்கள் நடக்கின்றன. தூத்துக்குடி, மதுரை, கோவில்பட்டி, திருக்கோவிலூர், திருவாரூர், நன்னிலம், குடவாசல், பேரளம், கள்ளக்குறிச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் 144 தடையைமீறி ஊர்வலங்கள் நடந்த போது காவல்துறை கண்மூடித்தனமாக தோழர்களைத் தாக்கி எலும்புமுறிவு, மண்டை உடைப்பு என்ற அளவுக்கான காவல்துறை அத்துமீறல்கள் நடந்தேறின.
அதனால் பெரியார் 144 தடைஆணை உள்ள கும்பகோணத்தில் 18.12.1948 அன்று மறியலில் ஈடுபடுகிறார். அன்று நள்ளிரவு 2:30 மணிக்கு கைது செய்யப்பட்ட பெரியார் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு வந்த சப்கலெக்டர் “144 சீக்கிரத்தில் எடுக்கப்பட்டுவிடும்; நீங்கள் ஊர்வலத்தை நிறுத்திவிடுங்கள்” என்று கேட்க, பெரியார் “ சீக்கிரம் என்றால் எனக்கு ஒருகுறிப்பு வேண்டும், ஒருவாரத்தில் எடுத்து விடுவீர்களா?” என்கிறார்.
அதற்கு சப்கலெக்டர் "அரசாங்கத்தோடு கலந்தாலோசிக்க வேண்டும் என்கிறார். “அதற்கு இரண்டுநாள் போதுமே! அதுவரை நிறுத்துகிறேன்“ என்கிறார் பெரியார். ஆனால் நாள்குறிப்பிடாமல் நிறுத்துங்கள் என்று வேண்டுகிறார் சப்கலெக்டர். “என்னுடைய முடியாமையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முடித்துக்கொள்கிறார் பெரியார்.
19.8.1948 இரவு எட்டுமணிக்கு 9 நாட்கள் ரிமாண்ட் என்று அறிவிக்கிறார்கள். இரவு 10 மணி வரை அழைத்துபோகப்படாததால் அங்கேயே படுத்து அனைவரும் தூங்கிவிடுகிறார்கள். அடுத்தநாள் காலை பெரியார் மட்டும் திருச்சி சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் என்று கூறி ஒரு லாரியில் ஏற்றிக்கொண்டு அழைத்துச் செல்லப்படுகிறார். திருச்சி சிறைக் கண்காணிப்பாளரோ “151 பிரிவில் கைது செய்யப்பட்டவர்களை அரசின் ஆணையின்றி சிறையில் வைக்க முடியாது“ என்று மீண்டும் கும்பகோணத்திற்குத் திருப்பி அனுப்பிவிடுகிறார். தஞ்சை வந்து காவல்துறை கண்காணிப்பாளர் தஞ்சை சப்ஜெயிலில் ஒன்பது நாட்களுக்கு வைக்குமாறு ஆணைவழங்குகிறார். ஆனால் தஞ்சை சப்மாஜிஸ்திரேட் கும்பகோணம் சப்கலெக்டர் கொடுத்த ரிமாண்டை ஏற்றுக்கொள்ளமுடியாது உள்ளூர் அதிகாரி கொடுத்தால்தான் ஒத்துக்கொள்வேன் என்று திருப்பி அனுப்புகிறார். பின்னர் தஞ்சை அடிசனல் மேஜிஸ்திரேட்டிடம் ஆணைபெற்று வந்து தஞ்சை கிளைச்சிறையில் அடைக்கப்படுகிறார் பெரியார். (20.12.1948) அன்றுமாலை 4 மணியளவில் ஒரு உளவுத்துறை காவலர் பெரியாரின் அறைக்குவந்து உங்களுக்கு இப்போது எங்கு செல்ல ஆசை என்று கேட்கிறார். பெரியாரும் எந்த சிறைக்கு செல்கிறீர்கள் என்று கேட்பதாக கருதிக்கொண்டு சென்னைக்கு அனுப்புங்கள் என்று கேட்கிறார். அவர் சென்ற சிறிது நேரத்தில் சப்மாஜிஸ்திரேட் வந்து உங்களை விடுதலை செய்யச் சொல்லி ஆணைவந்துவிட்டது. ஆனால் அவ்வாணையில் அடிஷனல் மாஜிஸ்ட்ரேட் கையெழுத்து இல்லாததால் மீண்டும் அனுப்பியுள்ளேன் என்று கூறுகிறார்.
மாலை 5 மணிஅளவில் பெரியாரைக் காண பெரியகூட்டம் வெளியே கூடிவிட்டது. பெரியாரும் பயணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கும்போது காவல்துறை 6.30 மணிக்குதான் விடவேண்டும் என்று சொல்லிவிட்டதாக பெரியாருக்குத் தெரிவிக்கப்படுகிறது. அதுபோலவே 6.30 மணிக்கு காவல் துணை கண்காணிப்பாளர், ஒருசார்ஜண்ட், ஒருஉதவிஆய்வாளர், நான்கு காவலர்கள், ஒரு கார், லாரியுடன் வந்து பெரியாரைவெளியே அழைத்துச் செல்கிறார்கள்.
வெளியேமக்களும் தோழர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொடிகளுடன் முழக்கம் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் பேசக்கூட முடியாதவாறு பெரியார் காரில் ஏற்றப்பட்டு காவல்துறை லாரி ஒன்று பின்தொடர மக்கள்கூட்டத்தை விரட்டித் தள்ளிகொண்டு வெளியேசெல்கிறது.
பத்துமைல் தூரத்திலிருந்த அய்யம்பேட்டை ரயில்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். தஞ்சையில் கட்டுப்படுத்த முடியாத அளவு மக்கள் இருந்ததால் இங்கு அழைத்துவரவேண்டியதாகிவிட்டது என்று துணைகண்காணிப்பாளர் விளக்கம் கொடுத்துவிட்டு 20.12.1948 அன்று இரவு அங்கிருந்து தொடர்வண்டியில் ஏற்றி அனுப்பிவைக்கிறார்கள்.
21.12.1948 அன்று காலை 5.40 மணிக்கு தொடர்வண்டி சென்னை எழும்பூர் வந்து சேர்ந்துள்ளது.
அன்றே சென்னை டாக்டர்சடகோபன் அவர்களிடம் பெரியார் அவர்களுக்கு உடல்நிலை பரிசோதனை செய்யப்படுகிறது.
மேற்கண்டசெய்திகள் 21.12.1948, 22.12.1948 நாளிட்ட விடுதலை இதழில் வெளிவந்துள்ள செய்திக்குறிப்பிலும், பெரியார் எழுதியுள்ள “ எனது அரஸ்ட் வேடிக்கை” என்ற நீண்டகட்டுரையிலும் காணக்கிடக்கின்றன (இந்தி எதிர்ப்புப் போராட்டம் 31.12.1948 இல் நிறுத்திக் கொள்ளப்பட்டது. 1949ஆம்ஆண்டில் இந்தித்திணிப்பு ஆணைதிரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
பெரியார் 18.12.1948 இரவு கைது செய்யப்பட்டு 20.12.1948 அன்று மாலை தஞ்சையில் விடுதலை செய்யப்பட்டு தொடர்வண்டியில் அனுப்பப்பட்டு 21.12.1948 காலையில் சென்னை வந்து சேர்ந்துள்ளார் என்பதை எடுத்துக் கூறுவதே இவற்றை விரிவாக எழுதவேண்டி வந்ததன் நோக்கம் ஆகும்.
தோழர்ரவிக்குமார் 2010ஆம் ஆண்டில் வெளியிட்ட “எல். இளையபெருமாள் வாழ்வும்பணியும்” என்ற நூலில், இளையபெருமாள் அவர்களின் கூற்றாக (21.12.1948 அன்று காலை சென்னை வந்து சேர்ந்த பெரியாரை) 20.12.1948 அன்று சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் சந்தித்து பெரியாரிடம் பறைஒழிப்புக்கு ஆதரவுகேட்டபோது “ நீங்கள் செய்யாவிட்டால் யார் செய்வார்கள்?” என்று பெரியார் எதிர்க்கேள்வி எழுப்பியதாக குறிப்பிட்டுள்ளது தவறானதாகும், பொய்யானதாகும்.
பொய்யை உருவாக்கியவர் இளையபெருமாளா? ரவிக்குமாரா? அவரவர் யூகித்துக் கொள்ள வேண்டியதுதான். - (தொடரும்)
நன்றி : புரட்சி பெரியார் முழக்கம் 14-9-2023
No comments:
Post a Comment