Friday, May 27, 2022

பேரறிவாளன் விடுதலை குறித்து நியூஸ் 7 தொலைக்காட்சியில் வந்த தொகுப்பு

நியூஸ் 7 தொலைக்காட்சி சொன்னது என்ன? 

1991 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை வழக்கு, 

30 ஆண்டுகளாக, எந்த முடிவும் எடுக்கப்படாமல், அரசியல் விவாதங்களுக்கு இடையே சிக்கித் தவித்து வந்தது, 

இந்த நிலையில்தான், 

2022 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள், 

எழுவருள் ஒருவரான பேரறிவாளன் விடுதலை என்கின்ற செய்தி வெளியாகி,  

தமிழ்நாடு உட்பட, இந்தியா முழுமையும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியது. 

பேரறிவாளன் வீட்டிலும் மகிழ்ச்சி வெள்ளம் சூழ்ந்தது. 

என் விடுதலைக்காகப் போராடிய என் தாய்க்கும், அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி

எனக்கூறி, பறை இசைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பேரறிவாளன்.

அன்று மாலையில், 

சென்னை வான் ஊர்தி நிலையத்தில், முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்களை, பேரறிவாளனும், அவரது குடும்பத்தினரும் சந்தித்து, நன்றி கூறினர். பேரறிவாளனைக் கட்டி அணைத்து முதல்வர் வரவேற்றார். குடும்பத்தின் சூழ்நிலைகளைக் கேட்டு அறிந்ததாகவும், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், முதல்வர் உறுதி அளித்ததாக, ஊடகங்களிடம் கூறினார் பேரறிவாளன்.

அடுத்து அவர்கள், முன்னாள் முதல்வர் எடப்பாடியை, அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி கூறினர். 

அடுத்து ஒரு முக்கியமான தலைவரைச் சந்திக்க, பேரறிவாளனின் கால்கள் சென்றன. 

பேரறிவாளன் மட்டும் அல்லாது, 

ஏழு பேரையும் விடுதலை செய்ய, 

தமிழ்நாட்டுக்கும் தில்லிக்கும் மாறி மாறி அலைந்தவர் அவர்.

தூக்கு வரை சென்ற பேரறிவாளன் உட்பட மூவரைக் காப்பாற்றி, விடுதலைத் தீர்ப்பு வந்ததன் பின்னே, உறுதியாய், உறுதுணையாய் இருந்தவர் அவர்தான்; மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்கள் அவை உறுப்பினருமான, நாடாளுமன்றப் புலி என்று அழைக்கப்படுகின்ற வையாபுரி கோபால்சாமி என்கின்ற வைகோ.

மே 19 ஆம் நாள் காலையில், 

சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில், பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம் அம்மாளும், ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது, 

வழக்கின் போக்கு எங்கு தொடங்கியது என்பதில் இருந்து, அந்தப்  பயணம் முடிவுக்கு வந்தது வரை, மனம் விட்டு உரையாடினர். 

இங்கு செய்தியாளர்களிடம் பேரறிவாளன் கூறிய வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டி இருக்கின்றது.

இந்த விடுதலைக்கு முழுக்க முழுக்க  அண்ணன் வைகோ அவர்கள்தான் காரணமாக இருந்தார். 

அதற்கு நன்றி கூறுவதற்காகத்தான் வந்தோம். நேற்றைக்கே இங்கு வர நினைத்தோம்; 

ஆனால், நேரம் ஆகி விட்டது. 

இந்தியாவின் தலைசிறந்த வழக்கு உரைஞர் ராம் ஜெத்மலானி, அழைத்துவந்து வாதாடச் செய்தார் வைகோ. 

சிறைக்குச் சென்று கைதிகளைப் பார்க்கின்ற வழக்கம், ராம் ஜெத்மலானிக்குக் கிடையாது. 

ஆனால், வேலூர் சிறைக்கு வந்து எங்களைப் பார்த்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி, தூக்குத் தண்டனைக்குத் தடை ஆணை பெற்றுக் கொடுத்தார். அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோது, 

அத்தனை அமர்வுகளிலும் பங்கேற்று வாதாடினார். அவருடைய வாதங்கள்தான் எங்கள் விடுதலைக்கு வழி காட்டியது. 

ராம் ஜெத்மலானி தற்போது உயிருடன் இல்லை; ஆனால், அவர் செய்த உதவியை நாங்கள் என்றைக்கும் மறக்க முடியாது என நன்றிப்பெருக்குடன் பேசினார் பேரறிவாளன்.

எழுவர் விடுதலைக்கான சட்டப் போராட்டம் குறித்து, இரண்டு நிமிடங்களுக்குள் பேரறிவாளன் பேசி முடித்தாலும், 

அவர்கள் இருவருக்கான உறவும், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்காக வைகோ நடத்திய சட்டப் போராட்டங்களும் பல்லாண்டுகள் நீண்டவை. சில நிமிடங்களில் அவற்றைச் சொல்லி முடிக்க முடியாது.

1991 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாள், 

திருபெரும்புதூரில் நிகழ்ந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில், இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட மறுநாள், 

மே 22 ஆம் நாள், திருபெரும்புதூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 

இரண்டு நாள்களுக்குப் பிறகு, 

மத்திய புலன் ஆய்வுத் துறை புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்தது.

இந்த வழக்கின் முதல் கைதாக, 

ஜூன் 11 ஆம் நாள், நளினியின் தாயார் பத்மா, சகோதரர் பாக்கியநாதன் கைது செய்யப்பட்டனர். 

14ஆம் தேதி முருகனும், நளினியும் சென்னை சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டனர். 

 19 ஆம் தேதிதான், பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். 

அதற்குப் பிறகு, விசாரணை வளையம் விரிவு அடையத் தொடங்கியது. 

கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு,

 1992 மே 20 அன்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக, 

சிபிஐ தரப்பில், 55 பக்கங்கள் கொண்ட குற்ற அறிக்கை நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. 

41 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்த நிலையில், 

12 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனார்கள்.

மூன்று பேர் தலைமறைவு ஆகினர். 

பிடிபட்ட 26 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம்,

 1998 ஆம் ஆண்டு,ஜனவரி 28 ஆம் நாள், அந்த 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்தது. 

அதுவரை இந்தியாவில் இப்படி ஒரு தீர்ப்பை, எந்த நீதிமன்றமும் வழங்கியது இல்லை. 

இதுதான் முதன்முறை.

பழ. நெடுமாறன் தலைமையில் மீட்புக்குழு அமைக்கப்பட்டது. 

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வீட்டில் கூட்டம் நடத்தப்பட்டது. 

வழக்கு உரைஞர் எம்.நடராஜன் மூலம், 

மேல் முறையீடு செய்யப்பட்டது. 

1998 செப்டெம்பர் முதல், 1999 ஜனவரி வரை ஐந்து மாதங்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. நீதிபதிகள் கே.டி. தாமஸ், டி.பி. வாத்வா, சையத் ஷா முகமது கத்ரி ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

மே 5 ஆம் நாள் தீர்ப்பு வழங்கினர்.

நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு மட்டும் மரண தண்டனையை உறுதி செய்தனர். 

ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் மரண தண்டனையை,

 வாழ்நாள் சிறைத்தண்டனையாகக் குறைத்தனர். சண்முகவடிவேலு, குற்றம் அற்றவர் என விடுவிக்கப்பட்டார். 

மீதம் இருந்த 18 பேரும், குறைந்த அளவு குற்றம் செய்ததாகக் கூறி, அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததைக் கருதி, உடனே விடுதலை செய்தனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 

சிபிஐ மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடியானது.

அவர்கள் குற்றம் அற்றவர்கள், 

அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று, தொடக்கம் முதலே ஓங்கிக் குரல் கொடுத்து வந்த வைகோ, 

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரையும் எப்படியேனும் விடுதலை செய்து விட வேண்டும் என, 

அதிக உத்வேகத்துடன் இயங்கினார். 

அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களைச் சந்தித்து, நான்கு பேரின் தூக்குத் தண்டனையை, வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்ற உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.

இந்தப் பிரச்சினையை இப்போது நாங்கள் கையில் எடுத்தால், அது இந்தியா முழுமையும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். 

ஆனால், நீங்கள் கவலைப்படாதீர்கள்; பார்த்துக் கொள்வோம்; எதற்கும் உள்துறை அமைச்சரைச் சந்தித்து விட்டுச் செல்லுங்கள் என்று 

வைகோவிடம் தெரிவித்தார் வாஜ்பாய்.

அதன்படி, உள்துறை அமைச்சர் அத்வானியையும் சந்தித்து முறையிட்டார் வைகோ. 

இந்தியாவின் பிரதமராக இருந்தவரைக் கொலை செய்த வழக்கு என்பதால், நாங்கள் இதில் தலையிட முடியாது. ஆனால், முடிந்த அளவிற்கு கிடப்பில் வைத்து விடுகின்றோம் என்று தன்னிடம் அத்வானி சொன்னதாக, மேடைகளில் தெரிவித்தார் வைகோ. 

அந்தக் கால தாமதத்தின் மூலம் கிடைத்த இடைவெளிதான், அவர்களுடைய தண்டனைக் குறைப்பிற்கு வழி ஏற்படுத்தியது என்றார் வைகோ.

அதன்பிறகு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும், தமிழக ஆளுநர் ஃபாத்திமா பீவிக்குக் கருணை மனுக்கள் அனுப்பினர். 

ஆனால், ஆளுநர் ஃபாத்திமா பீவி, அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை; கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.

ஆளுநர் அரசைக் கலந்து ஆலோசிக்கவில்லை;  தன்னிச்சையாக முடிவு எடுத்தார் எனக் கூறி, தூக்குத்தண்டனை பெற்றவர்கள் 

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

ஆமாம்; ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுத்தது தவறு; தமிழ்நாடு அமைச்சர் அவை எடுக்கின்ற முடிவின்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என அழுத்தம் திருத்தமாக, 

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில், 2000 ஆவது ஆண்டு ஏப்ரல் 19 ஆம் நாள், தமிழக அமைச்சர்கள் அவை கூடி விவாதித்தது. 

நளினிக்கு மட்டும் தூக்குத்தண்டனையை, 

வாழ்நாள் சிறைத்தண்டனையாக மாற்றி, ஏப்ரல் 24 ஆம் நாள் அரசு ஆணை வெளியிடப்பட்டது. 

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர், 

ஏப்ரல் 26 அன்று குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பினர்.

ஆனால், 2000 ஆண்டு முதல், 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவர் பொறுப்பு வகித்த கே.ஆர். நாராயணன், அப்துல் கலாம் ஆகிய இருவரும், அந்தக் கருணை மனுக்களை நிலுவையில் வைத்து இருந்தனர்.

2007 இல் குடியரசுத் தலைவர் பொறுப்பு ஏற்ற பிரதிபா பாட்டீலுக்கும் கருணை மனுக்கள் அனுப்பினர்.

இந்த நிலையில், 2011 ஆம் ஆண்டு, வைகோவும், மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி எம்.பி.யும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தனர்.

ஒன்றிய அமைச்சர்கள் அவை எடுக்கின்ற முடிவுகளுக்கு, குடியரசுத் தலைவர் கட்டுப்பட்டாக வேண்டும் என்பதால், 

பிரதமரைச் சந்தித்தனர்.

மன்மோகன் சிங், உள்துறை அமைச்சரைத் தொடர்பு கொண்டு, 

வைகோவும், கணேசமூர்த்தியும் வருகின்றார்கள்; சந்தியுங்கள் என்று சொன்னார். 

அவர்களும் சந்தித்தனர். 

எந்தக் கவலையும் வேண்டாம்; நல்லது நடக்கும் என்று கூறி, வைகோவுக்கு நம்பிக்கை அளித்தார் உள்துறை அமைச்சர்.

மூவரையும், மரண தண்டனையில் இருந்து காப்பாற்றி விட்டோம் எனக் கருதி, அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார் வைகோ. 

அவர், மூவரையும் விடுதலை செய்து விட்டது போலவே கருதி, சென்னை வந்த அவருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 12 ஆம் நாள் காலை, தியாகுவிடம் இருந்து வைகோவுக்கு ஒரு அழைப்பு வந்தது. 

அவர் சொன்ன செய்தியைக் கேட்ட வைகோ, அதிர்ச்சியில் உறைந்து போனார். 

ஆம்; மூவரின் கருணை மனுக்களையும், குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார்; 

தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டு விட்டது என்பதுதான் அந்தச் செய்தி. 

அந்தச் செய்தி வெளியாகி இருந்த ஆங்கில நாளேட்டை வாங்கிப்  படித்து அதிர்ந்து போனார் வைகோ. 

தில்லி வீட்டின் மாடிப்படியில் இருந்து கீழே இறங்கும்போது, தலைசுற்றி மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார். 

ஏன் இவ்வளவு பதற்றம் என்று கணேசமூர்த்தி கேட்க, பதில் கூற முடியாமல் திணறினார் வைகோ.

அடுத்து என்ன செய்வது? என்று யோசித்தார். 

பிரபல வழக்கு உரைஞர் அந்தி அர்ஜூனாவைச் சந்தித்தார். 

ஆனால், அவர் இந்த வழக்கை எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறி விட்டார்.

மூவரும் தூக்கில் போடப்படுகின்ற தேதியை, 

ஆகஸ்ட் 26 ஆம் நாள் அறிவிப்பதாக செய்தி வந்தது. என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்தார் வைகோ. 

ஆகஸ்ட் 20 ஆம் நாள், வேலூர் மத்தியச் சிறைக்குச் சென்று, மூவரையும் சந்தித்தார். 

‘அண்ணா கவலைப்படாதீர்கள்’ என்று அவர்கள் வைகோவுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

கண்ணீர் வழிய, சிறைக் கம்பிகளுக்கு உள்ளே தன் கையை நுழைத்து, அவர்களுடைய தலைகளை வருடிக் கொடுத்தார் வைகோ.

அவர்கள் மூவரும், செப்டெம்பர் 9 ஆம் நாள் தூக்கில் இடப்படுவார்கள் எனத் தகவல்கள் வெளியாகின. 

தூக்குத் தண்டனையைக் கண்டித்து, காஞ்சிபுரத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது.

 மல்லை சத்யா, பாலவாக்கம் சோமு ஆகிய மதிமுக முன்னணியினருடன் வைகோ பங்கேற்றார். 

காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த செங்கொடியும் அந்தச் சங்கிலியில், வைகோவுக்கு அருகில்  கைகோர்த்து நின்றார். 

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் உரை ஆற்றிய வைகோ, மூவரையும் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே எனக்கூறி கண்ணீர் வடித்தார். 

அவரது உரை, செங்கொடி உட்படப் பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

அன்று இரவு, காஞ்சி மக்கள் மன்றத்தின் தலைவி மகேசிடம் பேசிய செங்கொடி, 

வைகோ அண்ணனே இப்படி அழுகின்றாரே, 

இனி அவர்களைக் காப்பாற்ற முடியாதா? என்று கூறி வேதனைப்பட்டு இருக்கின்றார்.

பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகியோரைக் காப்பாற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கு உரைஞர்கள் கயல் என்ற அங்கயற்கண்ணி, சுஜாதா, வடிவாம்பாள் ஆகியோர், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில், கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அந்தப் போராட்டத்தில் பங்கு கொள்வதற்காக, காஞ்சி மக்கள் மன்றத்தினரும் வந்திருந்தனர். 

ஆனால், நான் வரவில்லை; நீங்கள் செல்லுங்கள் என்று கூறி அவர்களை அனுப்பி விட்டு, பெட்ரோல் கேனுடன், தாசில்தார் அலுவலகத்திற்குச் சென்றார் செங்கொடி. மூவரையும் விடுதலை செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பிய செங்கொடி, பெட்ரோலைத் தன் மேனியில் ஊற்றிக்கொண்டு செந்தழல் ஏகி இறந்தார்.

அப்போது, சேலம் தமிழ்ச் சங்க மேடையில் பேச ஆயத்தம் ஆகிக்கொண்டு இருந்தார் வைகோ. மேடையில் இருந்த வைகோவுக்கு இந்தச் செய்தி வந்தது. தன் பேச்சை நிறுத்திவிட்டு, செங்கொடியின் உடலைப் பார்க்க விரைந்தார் வைகோ.

அடுத்து வேலூர் சென்று கொண்டு இருந்த வைகோவுக்கு அலைபேசி அழைப்பு வந்தது. 

நாங்கள் மும்பைக்கு வந்து, மூத்த வழக்கு உரைஞர்களைச் சந்திக்க முயன்றோம். ஆனால், யாரையும் சந்திக்க முடியவில்லை என்றார், பேரறிவாளனுக்காக வாதாடிக் கொண்டு இருந்த வழக்கு உரைஞர்களுள் ஒருவர்.

இந்த நிலையில், ஒருவரால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியும் என்று நம்பினார் வைகோ. 

அவர்தான், உலகப் புகழ் பெற்ற வழக்கு உரைஞர் ராம் ஜெத்மலானி. 

அவர், வைகோவுக்கு நெருங்கிய நண்பர் என்பதால், உடனே அலைபேசியில் அவரைத் தொடர்புகொண்டார் வைகோ.  

ஆனால் அவர் கிடைக்கவில்லை. அவரது தில்லி தொடர்பு கொண்டார் வைகோ. 

ஜெத்மலானி, மும்பையில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே தொடர்பு கொண்டபோது, பெங்களூருவில் இருப்பதாகச் சொன்னார்கள். 

அதன்பிறகு, அவரது மகன் மூலமாக, ஜெத்மலானியைத் தொடர்பு கொண்டு பேசினார் வைகோ. வழக்கு விவரத்தைச் சொன்னார்.

வைகோ, எனக்கு நிறைய வழக்குகள் இருக்கின்றன. இப்போது இந்த வழக்கை எடுத்துக் கொள்ள முடியாது என்றார் ஜெத்மலானி. 

உலகத் தமிழர்கள் சார்பாக, உங்களை மன்றாடிக் கேட்கின்றேன் என்று கெஞ்சினார் வைகோ. 

சரி; என் நண்பர் வைகோவுக்கு வருகிறேன் என்று சொன்னார்.

இதன்பிறகுதான், வழக்கு சூடு பிடிக்கத் தொடங்கியது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்து அவர் வாதாடியபோது,

“ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் முடிவுக்கு வந்திருந்தன. மூன்று பேரும் கொடுத்த கருணை மனுவை, 

பத்தே நாள்களில் ஆளுநர் தள்ளுபடி செய்து விட்டார்;

அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது;

ஆளுநரின் முடிவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், கருணை மனுவை மீண்டும் பரிசீலிக்க உத்தரவிட்டது;

எனவே, இரண்டாவது முறையாக, கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன; இதுகுறித்து, ஐந்து மாதங்களில் முடிவு எடுக்கப்பட்டது;

அதன்பிறகு மூவரும், 2000 ஆம் ஆண்டில், குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுக்கள் அனுப்பினர்;

அதன் மீது 11 ஆண்டுகள் எந்த முடிவும் எடுக்கவில்லை;

2011 ஆகஸ்ட் 27 அன்றுதான், நிராகரித்து  முடிவு எடுத்தார்; இதற்கு இடையில், மனுதாரர்கள் தரப்பில், ஐந்து முறை நினைவூட்டல் கடிதங்கள் எழுதப்பட்டன;

இவ்வளவு காலதாமதம் என்பது, சட்டத்திற்கும், நீதிக்கும் எதிரானது;

இந்திய அரசு அமைப்புச் சட்டம் பிரிவு 21 இன் கீழ் வழங்கப்பட்டு இருக்கின்ற உரிமைகளுக்கு எதிரானது; அந்தச் சட்டப் பிரிவின்படி, விரைந்து முடிவு எடுத்து அறிவித்து இருக்க வேண்டும்; 

ஆனால், குடியரசுத் தலைவர் 11 ஆண்டுகள் தாமதம் செய்தது, அந்தச் சட்டத்திற்கு எதிரானது. 

இந்த பதினோரு ஆண்டுகளும், மனுதாரர்கள் ஒவ்வொரு நாளும் தாங்க முடியாத வேதனையை அனுபவித்து இருக்கின்றனர்;

உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்;

ஒரு குற்றத்திற்கு ஒரு தண்டனைதான்; 

அவர்கள் தூக்குத் தண்டனைக்கும் மேலான தண்டனையை அனுபவித்து விட்டார்கள்;

எனவே, கருணை மனுவை நிராகரித்து குடியரசுத் தலைவர் பிறப்பித்த ஆணையை, நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்” என

வாதிட்டார் ராம் ஜெத்மலானி.

அவரது அந்த வாதம், அதுவரை யாரும் சிந்திக்காத கோணத்தில் அமைந்தது; 

வரலாற்றுத் திருப்பமாகவும் ஆனது.

அவரது வாதங்களை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், 

தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கி ஆணை பிறப்பித்தது.

அப்போது, சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் தனக்கு நன்றி சொன்னவர்களிடம், 

Not for Me. Thank Vaikoஎனக்கு அல்ல, வைகோவுக்கு நன்றி கூறுங்கள்;அவர்தான் என்னை இங்கு அழைத்து வந்தார் என்றார் ராம் ஜெத்மலானி.

அதன்பிறகு, அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அங்கே விசாரணை நடைபெற்ற அனைத்து நாள்களிலும், ராம் ஜெத்மலானியும், வைகோவும் ஆஜரானார்கள். 

அங்கேயும் சிறப்பாக வாதாடிய ராம் ஜெத்மலானியை, தூக்குத் தண்டனையை ரத்து செய்து, 

வாழ்நாள் சிறைத்தண்டனையாகக் குறைக்க வைத்தார்.

அந்தத் தீர்ப்பு வெளியான நாளில், 

தில்லியில் ராம் ஜெத்மலானியின் வீட்டுக்குச் சென்று, அவருக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினார் வைகோ. அவரைச் சென்னைக்கு அழைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராட்டு விழா ஏற்பாடு செய்தார் வைகோ. 

சென்னை வந்த ராம் ஜெத்மலானிக்கு எழுச்சியான வரவேற்பு அளித்தார்.

அந்த விழாவில் பேசிய வைகோ, 

இந்த வழக்கிற்காக, ராம் ஜெத்மலானி பணம் வாங்காமல் வாதாடினார் என்பதைச்சொன்னார். 

இந்தியாவின் மிகச்சிறந்த வழக்குஉரைஞர், மிக அதிகமாக சம்பளம் வாங்கும் வழக்கு உரைஞர், அவர் தங்களுக்காக ஆஜராவாரா என பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த வேளையில், வைகோவின் வேண்டுகோளை ஏற்று அவர் இந்த வழக்கில் வாதாடினார்; அவருக்குத் தமிழர்கள் நன்றிக்கடன் பட்டு இருக்கின்றார்கள் என்றார் வைகோ.

அந்த விழாவில், ராம் ஜெத்மலானி வைகோவைப் புகழ்ந்த வார்த்தைகள், 

பெரியார்தாசன் போன்றோரை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையச் செய்தது.

யாரும் காப்பாற்ற முடியாது: பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு தூக்குத் தண்டனை உறுதி என இந்தியாவே நம்பிக்கொண்டு இருந்தபோது, 

வைகோ என்ற ஒற்றை மனிதன் மேற்கொண்ட விடா முயற்சிகளாலும், துணிச்சலாலும், தூக்குத் தண்டனை தூக்கு எறியப்பட்டது.

அதன்பிறகும் வைகோ விடவில்லை. 

அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். 

நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும்போதெல்லாம், அந்தப் பேட்டிகளிலும் கூட, எழுவர் விடுதலை குறித்துப் பேசி வலியுறுத்தி வந்தார். 

அவர்கள் விடுதலைக்காகப் பல போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார். 

அவர் பட்ட துயரங்களுக்குப் பரிசாகத்தான் பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்து இருக்கின்றது. அவர்கள் தமிழர்கள் என்பதைத் தாண்டி, என் தம்பிகள் என்று மேடைகளில் பேசினார் வைகோ. 

நானும் அதே வேலூர் சிறையில் பொடா சிறைவாசியாக இருந்தபோது, ஒவ்வொரு நாளும் எனக்கு வருகின்ற பழங்களை, அவர்களுக்குத்தான் கொடுத்து வந்தேன். அவர்கள் சமைத்ததை, எனக்குக் கொண்டு வந்து கொடுப்பார்கள். 

சனிக்கிழமைகளில், சிறையில் இலக்கியக் கூட்டங்களும், பட்டிமன்றங்களும் நடத்தினோம் என்பதை எல்லாம் நினைவுகூர்ந்தார் வைகோ.

அத்துடன், எழுவருள் ஒருவரான ரவிச்சந்திரன், வைகோவின் தூரத்து உறவினர் என்பதால், 

வைகோ முயற்சிகள் எடுக்கின்றார் என்று கூற வாய்ப்பு இருப்பதைக் கருதி, 

அவரைச் சந்திக்கவே இல்லை என, வைகோவே கூறினார்.

இளைஞனாக இருந்தபோது தன் வீட்டுக்கு வந்து சென்ற பேரறிவாளன், 

31 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை பெற்று வந்தது வைகோவுக்குப் பெருமகிழ்ச்சி அளித்தது என்றாலும், எஞ்சிய ஆறு பேருக்கும் விடுதலை கிடைக்கும் வரை  அவர் ஓயப் போவது இல்லை. 

காணொளி உரை தட்டச்சு ..அருணகிரி

03.06.2022 நாளிட்ட சங்கொலி வார இதழில் 

முதல் பக்கம் வெளியீடு.

No comments: