Friday, May 27, 2022

வைகோ ஆற்றிய எழுத்து எனும் கருவறை என்னும் உரை

உலக மனித குல வரலாறு தெரிய வேண்டுமா?

இதோ வைகோ அவர்கள் 'எழுத்து எனும் கருவறை' என்னும் தலைப்பில் 7.8.2010 இல் ஆற்றிய உரையின் ஒரு பகுதி...

மனித குல வரலாற்றில், எழுத்துகள்தாம் தலைகீழ் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

எழுத்து எனும் கருவறையில் பிறக்கின்ற உணர்வுகள் எரிமலையாக வெடிக்கின்றன.

அடக்குமுறையை, கொடுங்கோலர்கள் எதிர்ப்பதற்கு, பூட்டப்பட்ட விலங்குகளை உடைத்து எறிவதற்குப் பயன்பட்டன.

மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான் ; அவன் விலங்குகளால் பூட்டப் பட்டுக் கிடக்கிறான்.

‘Man is born free ; but he is everywhere in chains’

இந்த விலங்குகளை உடைப்பது எப்படி?

உடைத்த சம்மட்டிதான் எழுத்து என்கின்ற சம்மட்டி.

அந்தக் கருவறையில் வார்ப்பிக்கப்பட்ட ஆயுதங்கள், சர்வாதிகாரிகளின் கோட்டை, கொத்தளங்களைத் தகர்த்துத் தரைமட்டமாக ஆக்கி இருக்கின்றன.

சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் பற்றி இங்கே சொன்னார்கள். அந்தக் குரல் முழங்கிய இடம், பாரிஸ் பட்டணம்.  அந்த மூல முழக்கத்துக்குக் காரணமான வால்டேர், லூயி மன்னனை எதிர்த்தான் என்பதால், பாஸ்டைல் சிறையில் அடைக்கப்பட்டுக் கிடந்தான். அங்கேதான், சாக்ரடீசின் நூல்களைப் படித்தான். அதை நாடகமாக ஆக்கினான். சிறையிலேயே நூல்களைத் தீட்டினான்.

1778 ஆம் ஆண்டு மே 30 ஆம் நாள், வால்டேர் மறைந்தார். தலை சிறந்த சிந்தனையாளன் இயற்கை எய்தினான். ஆனால், அவன் எழுதிய எழுத்துகள், அவனது சிந்தனைக் கருவறையில் இருந்து புறப்பட்ட படைப்பு கள், அவன் எடுத்து வைத்த முழக்கங்கள், இவையயல்லாம் ஆயுதங் களாகி, மண் குடிசைகளை நிமிர வைத்தன. அடிமைகளின் கைகளில் வாள்களை ஏந்தச் செய்தன.

பாஸ்டைல் சிறைக்கூடம் தகர்த்து எறியப்பட்டது. வெட்டுப் பாறைகளில் தீர்ப்புத் தரப்பட்டது. உடைந்து நொறுங்கி சிதறிக் கிடக்கின்றது பாஸ்டைல் சிறைக்கூடம். ஜூலை 14. 11 ஆண்டுகள் கழித்து, எந்தக் கருவறையில் இருந்து ஆயுதங்களை பேனா முனையிலே தந்தானோ, எந்த பாஸ்டைல் சிறையில் அவன் வைக்கப்பட்டு இருந்தானோ, அந்த சிறை உடைத்து நொறுக்கப்பட்டு, குப்பை மேடு போலக் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

வால்டேரின் கல்லறை எங்கே இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடித்துத் தோண்டினார்கள். வால்டேரின் சவப்பெட்டியை எடுத்து வந்தார்கள். பாஸ்டைல் சிறையின் மண் குவியல் கிடக்கிறது அல்லவா, அதற்கு மேலே கொண்டுவந்து வைத்தார்கள். ஆடிப்பாடி ஆனந்தக் களிநடனம் புரிந்தார்கள்.

வால்டேர் உயிரோடு இல்லை ; ஆனால், அவனது எழுத்து உயிரோடு இருந்தது. ஜீவனோடு இருந்தது. சர்வாதிகார மாளிகைகளைத் தரை மட்டமாக ஆக்கியது.

வரலாற்றின் விந்தையான காட்சியைப் பாருங்கள். அதே பாரிஸ் நகரில், பிரெஞ்சுப் புரட்சிக்கு மற்றொரு ஆயுதத்தை வார்ப்பித்துக் கொடுத்தவன் ரூசோ. 

சமுதாய ஒப்பந்தத்தைத் (Social Contract) தந்தவன். அந்த நூலை அவன் எழுதிய போது, எப்படி ஈரோடு என்ற பெயரைச் சேர்த்தே இந்தத் திருவிழாவுக்கு ஸ்டாலின் குணசேகரன் பெயர் சூட்டி இருக்கிறாரோ, அது போல, ரூசோ சென்ற இடமெல்லாம் ஜெனீவாவின் பெயரைச் சேர்த்தே சொல்லிக் கொண்டிருந்தான்.

அந்த ஜெனீவா வீதிகளில், அவனுடைய நூல் தீயிட்டுக் கொளுத்தப் பட்டது. அவமானப்படுத்தப்பட்டான். நாடு கடத்தப்பட்டான். துன்பங்களை அனுபவித்தான். 

ஆனால், அவன் மறைந்ததற்குப் பிறகு, பிரெஞ்சு நாட்டில் புரட்சிக் கொடி ஒளி வீசிய போது, எங்கோ ஒரு மூலையில், யாரும் கேள்வி கேட்பார் அற்ற முறையில் புதைக்கப்பட்டுக் கிடந்த ரூசோவின் கல்லறை யைத் தோண்டி எடுத்து, அவனுடைய சவப்பெட்டியைக் கொண்டுவந்து, மேன்மக்கள் புதைக்கப்பட்ட கல்லறைத் தோட்டத்துக்கு ஊர்வலமாகக் கொண்டுவந்து புதைத்தார்கள்.

எந்த சமுதாய ஒப்பந்தம் நூலைத் தீயிட்டுக் கொளுத்தினார்களோ, அந்த நூலை, அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து எடுத்துக் கொண்டு வந்தார்கள். ரூசோவை அழிக்க முடிந்தது. அவன் தந்த சமுதாய ஒப்பந்தத்தை அழிக்க முடியவில்லை.

இந்த நூல்களை எல்லாம் படித்தேன். அதனால், என் நாட்டின் அடிமை விலங்குகளை உடைத்து எறிய நான் முடிவு எடுத்தேன் என்று சொன்னவன் ஹோ-சி-மின். வியட்நாமின் விடுதலைக்குக் களம் கண்டவன்.

 ‘வால்டேர், ரூசோவின் நூல்கள்தாம், விடுதலை தாகத்தை எனக்குள் ஏற்படுத்தின’ என்று சொன்னான்.

அதைப் போலத்தான், சரித்திரத்தைத் திகைக்க வைத்த புரட்சியைச் சீனத்திலே நடத்திக் காட்டிய மாவோ, 6000 மைல்கள் அடவிகளில் நடந்தானே, மரண வளையத்தை உடைத்து எறிந்துவிட்டுச் சென்றானே, குடியானவர்களைத் திரட்டி ஆயுதம் ஏந்தச் செய்தானே, அவன் ஒரு தலை சிறந்த எழுத்தாளன். அவன் தூக்கிய ஆயுதங்கள் அந்தப் புரட்சியில் வெற்றியைத் தேடித் தந்தது என்று சொல்வதைவிட, இரவு வேளைகளில் எல்லாம் சிமினி விளக்கை வைத்து மாவோ எழுதிய எழுத்துகள்தாம் புரட்சியைத் தூண்டின என்று சொல்லலாம். 

மாவோவின் மற்றொரு முகம் பலர் அறியாதது. 100 மலர்கள் பூக்கட்டும் ; 100 சிந்தனைகள் மலரட்டும் என்பது போல, மாவோ ஒரு சிந்தனையாளன். அவன் தந்தவை, சிந்தனைப் பேரருவி. கன்பூ´யசின் நூல்களைப் படித்தவன்; சன்-யாட்-சென் கருத்து களைப் பார்த்தவன். மார்க்சின் கருத்துகளை உணர்ந்தவன். 

லெனின் வகுத்த பாதையை அறிந்தவன். அதுபோலத் தனக்கு என்று ஒரு பாதையை வகுத்துக் கொண்டு, அதிலே பயணித்தான். செங்கொடியை ஏற்றினான் சீனத்தில். அந்தப் புரட்சிக்கு, அவனுடைய எழுத்துகளும், நூல்களும் துணையாக நின்றன.

அதைப் போலத்தான், பல நூறாண்டுகளாக, விலங்குகளை விடக் கேவலமாக, அடிமைத் தளைகளில் பூட்டப்பட்டு, சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்யப்பட்டார்களோ நீக்ரோக்கள், அவர்களுக்கும் ஒரு விடியல் வந்தது என்று ஸ்டாலின் குணசேகரன் இங்கே குறிப்பிட்டாரே, அந்த விடியலுக்குக் கையயழுத்து இட்டவன் ஆபிரகாம் லிங்கன். 1863 ஆம் ஆண்டு, ஜனவரி முதல் நாளில் அவன் இட்ட ஒரு கையயழுத்து, அதை அவன் எழுதுகிற போது, ஒரு கணம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

அருகில் இருந்தவர்கள் திகைத்து, என்ன? என்று கேட்டார்கள். இன்று, என் வாழ்வில் மாபெரும் திருநாள். அடிமைமுறையை ஒழிப்பதற்கான பிரகடனத்தில் என் கையயழுத்தை இடப் போகிறேன். பலரோடு கைகுலுக்கிக் களைத்துப் போய் வந்து இருக்கிறேன். சற்றே நடுக்கம் ஏற்பட்டு விட்டாலும், எனது கையயழுத்தில் ஒரு நடுக்கம் தெரிந்தாலும், இந்தப் பிரகடனத்தை வெளியிடுவதில், ஆபிரகாம் லிங்கனுக்குத் தயக்கம் இருந்தது என்று வருங் காலத்தில் யாராவது என்னை விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காக, நான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன் என்று லிங்கன் குறிப்பிட்டார்.

வெள்ளை மாளிகையின் தாழ்வாரத்தில் லிங்கன் நடந்து வருகின்ற போது, ஒரு பெண் அவரைச் சந்தித்தார்.

‘பெண்ணே நீ யார்?’ என்று கேட்டார் லிங்கன்

தன் பெயரை அந்தப் பெண் சொன்னார். ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் என்று சொன்னார்.

‘ஓ நீதானா அந்த பெண்மணி? அமெரிக்க உள்நாட்டு யுத்தத்துக்குக் காரணமான அந்தப் பெண்மணி?’ என்று கேட்டார்.

‘Uncle Toms Cabin’ என்ற ஒரு புத்தகத்தின் மூலமாக, கோடிக் கணக்கான இதயங்களை உலுக்கினார். அடிமை முறையை ஒழிப்பதற்கான அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு இந்த ஒரு நூல்தான் காரணம் என்று ஆபிரகாம் லிங்கன் சொல்லுகிறார்.

எழுத்துகள் எண்ணங்களை உருவாக்குகின்றன, புரட்சியைத் தூண்டுகின்றன. 27 ஆண்டுகள் சிறைக் கொட்டடியில் வாடி வதங்கியவர் மாமனிதர் நெல்சன் மண்டேலா. அவர் ஆயுதம் ஏந்திப் போராடியவர். 

ஆயுதப் போராட்டத்துக்காக ஆள் திரட்டியவர். அதை நியாயப்படுத்தி  நீதிமன்றத்திலே வாதிட்டவர். அவர் சொல்கிறார், ‘என் வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது ஒரு புத்தகம். அதை எழுதியவர் ஜான் ரஸ்கின். புத்தகத்தின் பெயர் கடையனுக்கும் கடைத்தேற்றம்’.‘Unto the last’ எவ்வளவு வியப்பாக இருக்கிறது?

அதே மண்டேலாவின் மனங்கவர்ந்த தலைவர், போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. 

அண்மையில் அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா சொல்லுகிறார், ‘காந்தியைப் பின்பற்றுங்கள்’ என்று. லிங்கனைத் தந்த அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிபர், ஆப்பிரிக்க நாடுகளில் உரையாற்றிவிட்டுச் செல்லுகிறார். அவர் காந்தியைப் பின்பற்றச் சொல்லு கிறார். (சங்கொலி, 20.08.2010).

காந்தியார்தான், ஆகஸ்ட் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார். ஆம், நாளை விடிந்தால் ‘ஆகஸ்ட் புரட்சி’ வெடித்த நாள் (ஆகஸ்ட் 8, 1942). ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முழக்கம் கேட்ட நாள். இந்த ஆகஸ்ட் இயக்கத்தைத் தொடங்கிய போது, அண்ணல் காந்தியார் சொன்னார் : ‘என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையைத் தந்தது, ஜான் ரஸ்கினின், கடையனின் தேற்றம்’.

# விநாயகம் கந்தசாமி

No comments: