Friday, May 27, 2022

பிஜேபி ஒரு பேரபாயம்

பிஜேபி ஒரு பேரபாயம் - மஞ்சை வசந்தன் - திராவிடர் கழக வெளியீடு - பக்கங்கள் 220 - நன்கொடை ரூ 140/

●  இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை சீர் குலைக்கும் விதமாக; பல இன, மொழி, கலாச்சாரங்கள் கொண்ட மக்களை பிரிக்கும் முயற்சியாக; ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே அரசாங்கம் என்ற பாதையில் பயணிக்கும் அரசியல் கட்சி தான் பிஜேபி.

●  அந்த பிஜேபியின் தோற்றம், கொள்கை, செயல்பாடுகளைப் பற்றி மிகவும் தெளிவாக வரலாற்று அடிப்படையில் எடுத்து சொல்லும் ஒரு அரிய நூல் தான் - பெரியாரிய சிந்தனையாளர், எழுத்தாளர், உண்மை இதழின் பொறுப்பாசிரியர், தோழர் மஞ்சை வசந்தன் எழுதிய பிஜேபி ஒரு பேரபாயம் !

●  ' தாயைப் போல பிள்ளை '  என்ற கருத்துக்கு மிகவும் பொருத்தமான உதாரணம் ஆர்எஸ்எஸ் - பிஜேபி உறவு ! பிஜேபியை அறிய வேண்டுமென்றால் அதன் தாய் -  ஆர்எஸ்எஸ்  உருவாக்கத்திலிருந்து துவங்க வேண்டும் ! ஆர்எஸ்எஸ் மரத்தின் வேர் என்றால் - பிஜேபி அதன் கிளை ! ஆர்எஸ்எஸ் கொடிய  கிருமி என்றால் - பிஜேபி அதனால் உண்டாகும் கொடிய நோய் !

●  1925 ம் ஆண்டு ராம நவமியன்று நாக்பூரில் சித்பவன் பார்ப்பனரான டாக்டர் ஹெட்கேவரும் அவரது நான்கு சகாக்களும் சேர்ந்து தோற்றுவித்த அமைப்பு தான் ஆர்எஸ்எஸ் ( Rastria Samayam sevai Sangh ) 

●  ஆரியரும் ( பார்ப்பனர் ) ஆரிய தருமமும் ( வர்ணாசிரம, மநுநீதி ) ஆரிய மொழியும் ( சமஸ்கிருதம் ) ஆரிய நாடும் ( இந்தியா ) இவற்றின் உயர்வுக்காக பாடுபடுவதற்கும், அந்நிய மதத்தவர்களை எதிர்த்து போராடுவதற்கும், அதன் விளைவாக ' இந்து ராஷ்டிரா ' நிறுவச் செய்வதற்காகவும்  தோன்றியதே ஆர்எஸ்எஸ் ! இதுதான் சங்கிகளின் கொள்கை ! இதன் அடிப்படையில் உருவானதே பிஜேபியின் கொள்கை !

●  ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்த குரு, கோல்வல்கர் தனது சிந்தனை கொத்து நூலில் எழுதிய, சங்கிகளின் வேத வாக்கைப் படித்துப் பாருங்கள் :

●  " இந்து ராஷ்டிராவில் வணங்கத்தக்கவர்கள் ஆரிய பார்ப்பனர்களே ! மற்றவர்களெல்லாம் அவர்களது அடிமைகளே ! சூத்திரர்களே ! இழி மக்களே ! " ....

●  " மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தான் இருக்கிறது ! சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற வரை, இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து, நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கி கொள்ள வேண்டும் ! " ...

●  1925ல் ஆர்எஸ்எஸ் தோன்றிய பிறகு 1927ல் நாக்பூரில் பெரிய மதக் கலவரம் நடந்தது. அந்த கலவரத்தில் இந்துக்களுக்கு பாதுகாவலராகவும், முஸ்லீம்களுக்கு எதிராகவும் போராடி, வெற்றி பெற்று அதன் மூலம் நற்பெயரைப் பெற்று, தனது கிளைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆர்எஸ்எஸ் பெருக்கியது !

●  அரசியலில் தீவிரம் காட்ட 1930ல் என். பி. கார்வே உருவாக்கியது - இந்து மகாசபை !ஆர்எஸ்எஸ் உடன் அமைப்பு ரீதியான தொடர்பும், கொள்கையும் கொண்டது. இதன் தலைவரில் ஒருவரான டாக்டர் ஷியாம் பிரசாத் முகர்ஜி 1931ல் ஜனசங் கட்சியை நிறுவினார். இந்து மகா சபையில் தீவிர பங்காற்றிய நாதுராம் கோட்சே 1948 ஜனவரி 30ம் தேதி மகாத்மா காந்தியை சுட்டு கொன்றவன் !

●  ஜனசங் கட்சி 1977ல் ஜனதா கட்சியில் இணைந்தது. பின்பு 1980ல் வாஜ்பாயும் அத்வானியும் இணைந்து பாரதிய ஜனதா கட்சி என்ற பிஜேபியை துவக்கினார்கள் !

●   ஆர்எஸ்எஸ்ஸின் எல்லா கொள்கைகளுக்கும் அரசியல் வடிவம் கொடுக்கும் இயக்கமாக மாறியது பிஜேபி ! 

அரசியலை இந்து மயமாக்கு - இந்து மதத்தை ராணுவ மயமாக்கு என்ற கொள்கையோடு கட்சி வளர்ந்தது !

●  பிஜேபி தனது அரசியல் கனவை நனவாக்க, இந்துத்துவா கொள்கையின் முக்கிய திட்டமான , ' ராமர் கோயில் ' கட்டும் முயற்சியை முன்னெடுத்து, நாடெங்கும் மதவெறுப்பு கோஷங்களை கிளப்பி, இந்து ஒற்றுமை என்ற போர்வையில், மாற்று மதத்தினரை அச்சுறுத்தும் வகையில் பல இடங்களில் கலவரங்களை அரங்கேற்றி தன்னை வளர்த்து கொண்டது !

●  இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு தினம் - டிசம்பர் 6ம் தேதி  1992 ! அன்று அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கியது இந்துத்துவா - சங் பரிவாரங்கள் ! ஆர்எஸ்எஸ் வழி நடத்த, விஎச்பி, பஜ்ரங் தள், இந்து முன்னணி, சிவசேனா, சாது சமாஜ் மற்றும் பிஜேபி இயக்கங்களின் தொண்டர்களும் குண்டர்களும் அந்த நாசவேலையை செய்து முடித்தார்கள் !

●  ' இந்துத்துவா ஒரு பேரழிவு ' என்பதை இந்திய மக்கள் உணர்ந்த தருணம் அது !  பல இடங்களில் மதக் கலவரங்கள். எங்கெல்லாம் மதக் கலவரங்கள் நடந்ததோ அங்கெல்லாம் பிஜேபி ஆட்சியைப் பிடித்திருக்கின்றது.

●  பிஜேபி ஒரு பேரபாயம் என்ற கருத்தை விளக்குவதற்கு ஆசிரியர் மஞ்சை வசந்தன் நிறைய ஆய்வுகளை மேற் கொண்டிருக்கின்றார். ஆர்எஸ்எஸ் துவக்கம் முதல் அதன் பின்னே இந்து மகா சபையாகி, அதன் பின்னர் ஜன சங்காகி, இறுதியில் பிஜேபியாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது ! 

●  பிஜேபி ஒரு பேரபாயம் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த நூல் ஒரு எச்சரிக்கை மணியாக விளக்கம் தருகிறது ! நூலை சிறப்பாக எழுதியுள்ள ஆசிரியர் மஞ்சை வசந்தன் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் உரித்தவராவார் !

பொ. நாகராஜன்.

பெரியாரிய ஆய்வாளர்.

சென்னை. 27.05.2022.

********************************************

No comments: