Saturday, May 7, 2022

கால்டுவெல் தமிழாற்றுப் படை - வைகோ உரை

'கால்டுவெல் தமிழாற்றுப்படை'

வைகோ ஆற்றிய தலைமை உரை....

1814 ஆம் ஆண்டு மே 7 ஆம் நாள், அயர்லாந்து நாட்டில், கிளாடி ஆற்றங்கரையில், செப்பேர்டு யார்டு என்று சொல்லப்படும் ஒரு பகுதியில் பிறந்து, பெற்றோரின் பூர்வீகம் ஸ்காட்லாந்து தேசம் என்பதனால் அங்கே சென்று கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பயின்று,

டேனியல் ஸ்டான் போர்டு என்கின்ற கிரேக்க மொழியறிஞர் பேராசிரியராக இருந்ததினால், மொழிகளின் ஒப்பிலக்கணத்தை ஒப்பு நோக்கிப் பயின்றால்தான் மொழிகளை ஆய்ந்து அறிய முடியும் என்பதனை ஆத்திச்சூடி அரிச்சுவடியாக மனதில் ஏற்றக் கொண்டு, 

20 அகவை கடக்கின்ற போதோ மொழி நூல் அறிவு பெற்றவராக தேர்ச்சிப் பெற்றவராக இருக்கின் போது, இலண்டன் கிருத்துவத் தொண்டர் சங்கத்தில் சேர்ந்த பிறகு, இந்தியத் துணைக் கண்டத்தின் தென் கோடியில் இருக்கின்ற தெற்குச் சீமைக்குக் கிறித்துவத் தொண்டு ஆற்றச் செல்ல வேண்டும் என்று சொன்னவுடன், அவரது அருமைத் தாயார், மகனே இந்தியாவின் தென்கோடி முனைக்குச் செல்கிறாய், கிறிஸ்துநாதரின் அருளைப் பெற்றவராகச் சேவை செய்யச் சொல்லுகிறாய்; நான் மனநிறைவோடு மகிழ்ச்சியோடு வாழ்த்தி அனுப்புகிறேன் என்று அனுப்புகின்றார்.

அன்னை மேரி என்கிற கப்பலில் புறப்பட்டு வருகிற வழியில் பிரளயம் தாக்கியதைப் போன்று பிரெஞ்சு மரக்கலம் மோதிய காரணத்தால், நூல் இழையில் உயிர் பிழைத்து, 1838 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் சென்னைக் கடற்கரையில் அடியயடுத்து வைத்து,

நான்கு மாத காலத்திற்கு பின்னர், திருக்குறளை மொழி பெயர்த்த ஆங்கில நாட்டைச் சேர்ந்த துரு என்கின்ற தமிழ் அறிஞரையும், போப் அடிகளையும், ஜான் ஆண்டர்சனையும் சந்தித்து, 

பைபிளை தமிழில் மொழிபெயர்த்த, பவர் என்ற அறிஞரோடு கலந்துரையாடி, பவனந்தி முனிவர் தந்த நன்னூலை முழுமையாகப் படித்து,

சீவக சிந்தாமணி உள்ளிட்ட காவியங்கள் படித்து, தமிழில் தேர்ச்சியும் பெற்று, தமிழர் தாயகத்தின் அனைத்துப் பகுதிக்கும் நடந்தே சென்று மக்களைக் காணப் போகிறேன் என்று புறப்பட்டு, நடந்தே வந்து தரங்கம்பாடி சேர்ந்து, குடந்தை, தில்லையைக் கண்டு,

சோழப் பேரரசன் எழுப்பிய ஆலயம் அமைந்து இருக்கின்ற தஞ்சை யைக் கடந்து, காவிரிக் கரையோரம் நடந்து திருச்சிக்கு வந்து உறையூருக்குச் சென்று,

அங்கிருந்து மேற்கு நோக்கிப் பயணித்து, நடக்க முடியாத முகடுகளாகக் காணப்பட்ட பகுதிகளில் ஏறி, நீலகிரி மலை உச்சிக்குச் சென்று திரும்பி வருகின்ற போது, குதிரை மீது ஏறி சிறிது தூரம் பயணிக்கலாம் என்று வருகின்ற போது, குதிரை இடறி பள்ளத்தில் விழுந்து, குதிரைக்குக் கால் ஒடிந்து, இவரும் காயப்பட்டு, அந்தக் காயங்களைச் சுமந்து கொண்டே அங்கிருந்து நடந்து வந்து, ஒரு குதிரையை விலைக்கு வாங்கலாமா? என்று முயன்று அது முடியாமல் போனதால், நடந்தே கொங்கு மண்டலத்தின் பகுதிகளை எல்லாம் கடந்து,

ஆலவாய் அழகன் குடி இருக்கின்ற மீனாட்சி அம்மன் ஆலயம் எழுந்திருக்கும் மதுரை மாநகர் கண்டு,

அழகியலில் திளைத்து, அங்கிருந்து பொருநை ஆற்றங்கரை வழியாக வந்த போது, இதே பாளையங்கோட்டை கிறித்துவ மக்கள் வரவேற்றனர்.

பின்பு, இங்கிருந்து நாசரேத்துக்குச் சென்று, 1841 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாசரேத்துக்குள்ளே நுழைந்த பின், முதல் ஞாயிற்றுக் கிழமை நவம்பர் 28 இல் நாசரேத் கிறித்துவ தேவாலயத்தில் அவர் ஆற்றிய உரை, இந்த மண்டலத்தில் முதல் கிறித்துவ உரை. அதில் ரோமர் 13 ஆம் அத்தியா யத்தில் 12 ஆம் வசனத்தை ஆங்கிலத்தில் சொல்லி, தமிழிலும் தருகின்றார். 

‘இரவு சென்று போயிற்று; பகல் சமீபமாயிற்று. அந்தகாரத்துக் கிரிகை களை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக் கடவோம். கங்குல் கழிந்தது. காலை மலரும்’.

இதை அடிப்படைத் தத்துவமாக வைத்து உரையாற்றி, அடுத்த ஞாயிற்றுக் கிழமை கிறித்துவ மக்கள் மட்டுமே குடியேறி உருவான முதலூரில் உரையாற்றி, அங்கிருந்து நடந்தே சென்று இடையன்குடி சேர்ந்து, ஓலைக் குடிசையாக இருந்த வேதியர் குடியிருப்பில் வசித்து, சின்னஞ்சிறு ஆலயத்து அடையாளமாக இருந்த பகுதியில் வாழ்ந்து தெருக்களைச் சீரமைத்து வகுத்து, கிணறுகளை உருவாக்கிக் கொடுத்து,

பாடசாலையை அமைத்து, பெண் பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, கல்வியே வாழ்வின் ஏற்றத்துக்கு ஏணி எனப் போதித்து, அந்த இடையன்குடி யில் இருந்து அதன் பின்னர் 1844 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் சார்லஸ் மன்னரின் தலையைச் சீவி இங்கிலாந்து நாட்டின் புரட்சியை நடத்திய ஆலிவர் கிராம்வெல் கொடி வழி வந்த மகளை மணந்த மால்ட் அவர்களுடைய அருமை மகள் எலியாவை மணந்து, ஒரு மகன், இரண்டு மகள்கள் என இல்லற வாழ்வை முறையாக நடத்தி,

'தியாமாலை' போன்று 23 நூல்களைப் படைத்து இருந்தாலும், திருநெல்வேலி சரித்திரத்தை எழுதுகின்ற போது அவர் சொல்லுகிறார்:

மகாபாரதத்தில் தாமிரபரணி வருகிறது; தும்பியின் மகனே மோட்சத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், முனிவர்களும் தேவர்களும் தவம் இருக்கின்ற ஆசிரமத்தை அரவணைத்துக் கொண்டு ஓடுகின்ற நதிக்குப் பெயர் தாமிரபரணி.

அந்தத் தாமிரபரணி கடலோடு கலக்கின்ற இடத்தில் கிடைக்கின்ற முத்துகள்தான் உலகத்தில் மிகச் சிறந்த முத்துகள். கொற்கை என்கின்ற துறைமுகம் இருந்தது. திருச்செந்தூர் ஆலயத்தில் கொற்கை என்ற கல் எழுத்து சுவரில் இன்றும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

‘குற்றாலத்து அருவியில் நீராடிவிட்டு, நான் உலகில் எத்தனையோ இடங்களுக்குச் சென்று இருக்கின்றேன். ஆனால் நேர்த்தியும், சுவையும், அழகும், மகிழ்வும் உடல் நலமும் பெறுகின்ற நீராடுதுறைக் குற்றாலத்தைப் போல இந்த உலகத்தில் எங்கும் இல்லை’ என்பதனைப் பதிப்பித்து இருக்கின்றார்.

இந்த மண்ணில் ஏற்பட்ட வீரப் போர்க்களங்களை வர்ணித்து, கம்மந்தான் கான் சாகிப்பையும், பிரித்தானியத் தளபதிகள் அத்தனைப் பேரையும் சிதற டித்த மாமன்னர் பூலித்தேவர் கண்ட களக்காட்டுப் போர்க்களத்தை, வாசுதேவ நல்லூர் போர்க்களத்தை வர்ணித்து இருக்கின்றார்.

வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியில் தொடுத்த போரை யும், இராமலிங்க விலாசத்தில் கிளார்க்கோடு நடைபெற்ற மோதலையும், பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை தகர்க்கப்பட்டதையும், கயத்தாறில் புளிய மரத்தில் தொங்கவிடப்படுகின்றபோது, அவன் காலடியை உறுதியாக எடுத்து வைத்து வலது பக்கமும், இடது பக்கமும் பார்த்தவாறு கம்பீரமாகவும், கர்வமாகவும் பாளையக்காரர்களை ஏளனமாகப் பார்த்துக் கொண்டு சென்று, தம்பி ஊமைத்துரையைப் பார்க்க முடியவில்லையே?

கோட்டையை விட்டு வெளியேறியது தவறு; அங்கேயே மடிந்திருக்க வேண்டும் என்று முழங்கியதை சொல்லி, அவன் மடிந்ததையும் சொல்லி, இதே பாளையங்கோட்டை காராக்கிரகத்திலே ஊமைத்துரை கட்டுக் காவலை உடைத்துக்கொண்டு வெளியே வந்து, வல்ல நாட்டுப் போர்க் களத்தைச் சந்தித்து, ஜெரால்டு படைகள் சிதறடிக்கப்பட்டு, எண்ணி சில நாட்களிலேயே கோட்டை மீண்டும் எழுப்பப்பட்ட சரிதத்தையும் சொல்லி இருக்கின்றார்.

‘சாகுந்தலம்’ எழுதிய காளிதாசரைச் சொல்கிறார் கால்டுவெல்.

இப்படி இந்தத் திருநாட்டின் வரலாறை எல்லாம் சொன்னது மட்டுமல்ல, ஆரிய மொழிகளே இந்தியாவின் ஆதி மொழிகள் என்றும், அந்த மொழி களில் இருந்து வந்தவைதான் நம் தென்னாட்டு தமிழ் உள்ளிட்ட மொழிகள் என்றும், ஐரோப்பியர் உள்ளிட்ட நூல் இலக்கணம் கண்டவர்கள் பேசி வந்த வேளையில், இல்லை, இல்லை, தொன்மை மொழி தமிழ் என்று ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்’தைத் தருகின்ற போது சொல் கின்றார், நான் அனைத்துமொழி களையும் பயின்று இருக்கின்றேன்.

ஆனால், இந்த மொழியில் காணப்படுவது போன்று எந்த மொழியிலும் உயர்திணை, அஃறிணை கிடையாது. தமிழிலும், திராவிட மொழிகளில் மட்டும்தான் இருக்கின்றது. பகுத்து அறிகின்ற உயிர்கள் எல்லாம் உயர் திணை. பகுத்தறிவற்ற மாவும், மாக்களும், ஏனைய பொருள்கள் எல்லாம் அஃறிணை.

இந்த மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளுவம், குடகு உள்ளிட்ட ஆறு மொழிகள் திருந்திய மொழிகள். நீலகிரி மலையில் உள்ள ‘தோடர்’ மொழி, கொண்டர் வனத்தில் உள்ள ‘கொண்டர்’ மொழி, ஒடிசி நாட்டில் உள்ள ‘சிலது’ மொழி, நாகபுரியில் உள்ள ‘ஒரிய’ மொழி, ராஜ வார் கிரியில் இருக்கக்கூடிய ‘மேலது’ மொழி, பலுசிஸ்தானத்தில் இருக்கக் கூடிய ‘பிராகி’ மொழி உள்ளிட்ட ஆறு மொழிகள் திருந்தா மொழிகள்.

தமிழ், திராவிட மொழிகளில் இருக்கக் கூடிய சிறப்புகள் வேறு எதிலும் இல்லை என்பதை நிலை நாட்டியவர் பெருமகனார் ராபர்ட் கால்டுவெல். தமிழ் உலகம் அவருக்குக் கடமைப்பட்டு இருக்கின்றது. தமிழர்கள் கடமைப்பட்டு இருக்கின்றார்கள்.

வேனில் காலத்தில் நெருப்பு வெப்பத்தைத் தாங்க முடியாமல் கழுத்தளவு தண்ணீரில் இருந்தவாறே எழுதிக்கொண்டு இருப்பாராம். இனிய இல்லற வாழ்வுதான். மூன்று முறை அவர் இலண்டனுக்குச் சென்றபோது, இங்கேயே தங்கிவிடுங்கள் என்று கூறி இருக்கின்றார்கள். ‘எந்த மக்களோடு வாழ்ந்தேனோ, எந்த மண்ணில் உறைந்து திரிந்தேனோ, அந்த மண்ணிலேயே நான் மரிக்க விரும்புகிறேன்’ என்று இங்கு வந்தார்.

கொடைக்கானலில் இறுதி நாட்களைக் கழித்தார். அவரது துணைவியார் எலிசா அம்மையார் அருகிலேயே இருந்தார். உயிர் பிரிந்தது. 

பேழையில் வைத்து பாண்டிய மண்டலத்து திருச்சபை நோக்கம் கொண்ட 24 பெரு மக்கள் அந்தப் பேழையை மலை வழியாகவேச் சுமந்து வருகின்ற வழியில் இந்தப் பாளையங்கோட்டை மக்கள் கண்ணீர் சிந்தினர். அவர் விழைந்தவாறே இடையன்குடியில் அடக்கம் ஆனார்.

அந்தக் கல்லறைத் திசை நோக்கித் தொழுகின்றேன். எங்கள் தமிழுக்கு உலகத்தில் அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த கருணை வள்ளலே அருட் தந்தையே ராபர் கால்டுவெல் அவர்களே, ஆற்றுப் படை எத்தனையோ தந்து இன்றைக்கு எங்கள் பொருநை ஆற்றங் கரையில் உங்களுக்கு ஆற்றுப்படை தரவந்திருக்கும் தமிழ்க்குலம் தந்த வரகவியை வாழ்த்துகின்றேன். வணக்கம். 

(25.8.2018 அன்று பாளையங்கோட்டையில் கவியரசு வைரமுத்து அவர்களின் ‘கால்டுவெல் ஆற்றுப்படை’ நிகழ்ச்சியில் வைகோ அவர்கள்  ஆற்றிய தலைமை உரை)

No comments: