Monday, May 16, 2022

மணியரசனுக்கு கொளத்தூர் மணி பதில்

#அய்யா_பெ_மணியரசன்_அவர்களுக்கு,

#கழகத்_தலைவர்_தோழர்_கொளத்தூர்_மணி_அவர்களின்_பதில் !

கடந்த மே மூன்றாம் நாள், 

புலிகள் - திராவிட முன்னேற்ற கழகம் என்ற எதிரெதிர் விவாதங்கள் குறித்து, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் இப்படிப்பட்ட தேவையற்ற தரம் தாழ்ந்த விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என்று கூறி விடுக்கப்பட்ட அறிக்கையின் சில வரிகள் மீதான கேள்விகளை எழுப்பி, தோழர் - மன்னியுங்கள் - அய்யா மணியரசன் அவர்கள், "கொளத்தூர் மணியும், சுப.வீ.யும் பிரபாகரன் எதிர்ப்பாளர்களை ஆதரிக்கலாமா?" என்ற தலைப்பில் நீண்டதொரு அறிக்கையை எழுதியுள்ளார்.

இறுதிப்பகுதியில் சில கேள்விகளையும் நம்மை நோக்கி வைத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியை எதிர்க்கின்ற அளவுக்காவது மோடி ஆட்சியை, இதுவரை திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆவேசத்தோடு எதிர்த்ததுண்டா?

அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது. இதுதான் பாஜக எதிர்ப்பு கூட்டணியா?

தோழர் கொளத்தூர் மணி கட்சி, பாஜக மதவாத எதிர்ப்பு வேலைத் திட்டம் தயாரித்து அதை பரிசீலித்து ஏற்குமாறு ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்குமா?

போன்ற கேள்விகளோடு முடித்திருக்கிறார்.

எப்போதுமே அய்யா பெ. மணியரசன் அவர்கள் கேள்விகளை எழுப்பி விடுவார். நாம் பதில் சொன்னால், அதற்கு எந்த விளக்கமும் எழுதமாட்டார். மாறாக, திசை திருப்பிவிட்டு வேறு ஏதாவது ஒன்றைப் பேசி அதை மறக்கடிக்கச் செய்து விடுவார்.

அது குஷ்பூ - கற்பு பற்றிய விவாதத்தின் போதானாலும் அல்லது 2016 ஆம் ஆண்டில் ஒரு மாத காலம் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மணியரசன் பதில் சொல்லுவாரா? என்று கேட்டு தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் எழுப்பிய கேள்விகளானாலும் இதுவரை பதிலோ, விளக்கமோ சொன்னதில்லை. 

தமிழறிஞர்கள்தான் சுயமரியாதைத் திருமணத்தை - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை - தமிழ்நாடு தமிழருக்கே போராட்டத்தைத் தொடங்கி வைத்தவர்கள் என்று பேசியதற்கு, நாம் ஒரு புத்தக வடிவில் பதில் சொல்லி இருந்தாலும், அது குறித்து மூச்சு கூட விட மாட்டார். ஆனால் அவ்வப்போது கேள்விகளை மட்டுமே எழுப்பி தனது தோழர்களை உற்சாகப்படுத்துவதில் மட்டும் மிக மிக உற்சாகமாக இருப்பார்.

நிற்க,

அக்கேள்விகளோடுகூட சில ஆய்வு முடிவுகளையும் அய்யா மணியரசன் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

"கொளத்தூர் மணி, சுப.வீ. போன்றவர்கள் நடைமுறையில் ஒன்றைக் கற்றுக் கொண்டார்கள்; பிரபாகரனை எவ்வளவு புகழ்ந்தாலும், ஈழத்தமிழர்களை எவ்வளவு ஆதரித்தாலும், அவர்களைத் திராவிட தத்துவத்திற்கும் திராவிட அரசியலுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

பிரபாகரன் என்ற படிமம் தமிழ் தேசியத்தின் வடிவமாகத்தான் காட்சியளிக்கிறது. எனவே பிரபாகரனைத் தூற்றுவோரை அரவணைக்க வேண்டும்" என்ற முடிவுக்குத் தோழர் கொளத்தூர் மணியும், தோழர் சுப.வீ.யும் வந்துவிட்டார்கள் என்று தெரிகிறது" 

என்பது ஓர் ஆய்வு முடிவு

அதைவிடவும், பெரியார் தமிழீழ விடுதலைக்கு ஆதரவு கொடுக்காமல் ஒதுங்கிக் கொள்வதற்காக, தந்திரமாக "நானே இந்தியாவுக்கு அடிமையாக இருக்கிறேன்; ஒரு அடிமை இன்னொரு அடிமையின் விடுதலைக்கு எப்படி உதவ முடியும்" என்று விடை கூறி, ஆதரவு தர மறுத்துள்ளார் என்பதையும் புலனாய்வு செய்து அறிவித்துள்ளார்.

முதல் வரியில் உள்ள 'உதவ முடியும்' என்ற சொல், அடுத்த வரியில் 'ஆதரவு தர மறுத்தார்' என்று மாற்றும் வல்லமை அய்யா மணியரசன் அவர்களைத் தவிர வேறு எவருக்கு வரும்?! 

அந்த காலகட்டத்தில் மட்டுமில்லை; அதற்குப் பின்னரும் ஒரு பத்து ஆண்டுகள் அகில இந்தியாவைத் தொடர்ந்து பேசி வந்த 'தமிழ்த்தேசியர்' 'அய்யா' மணியரசன் அவர்களுக்கு, வேறு சில கேள்விகளை இப்போது முன்வைக்க விரும்புகிறோம்

1) தமிழீழ விடுதலைக்கு ஆதரவுகூட தெரிவிக்காமல் தந்திரமாக ஒதுங்கிக் கொண்ட பெரியாரின் திடலுக்கு 1992 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை ஆணை பிறப்பிக்கப்பட்ட போதும், அவை ஒவ்வொரு முறையும் நீட்டித்த போதும் அந்த தடை ஆணைகளை, 'தமிழீழ விடுதலைப்புலிகள், மே/பா. பெரியார் திடல், சென்னை -7 ' என்ற முகவரிக்கு ஏன் அனுப்பப்படுகிறது?

2) 1983 ஆம் ஆண்டு எதற்காக திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் மதிப்புக்குரிய கி. வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில், அனைத்து கட்சி, தரப்பு, உணர்வாளர்களையும் ஒன்றுதிரட்டி "தமிழீழ விடுதலை மாநாட்டை" இரண்டு நாட்கள் மதுரையில் எப்படி நடத்தினார்?

அந்த மாநாட்டுக்கு முன்னேற்பாடாக தமிழகத்தின் 6 முனைகளிலிருந்து திராவிடர் கழகத் தோழர்களைக் கொண்ட பரப்புரை குழுக்கள் 10 நாட்கள் தமிழகம் முழுதும் முழுதும் நடந்தே பரப்புரையை ஏன் நடத்த வைத்தார்?

3) திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், எவ்வாறு புலிகளுக்குப் பயிற்சிப் பாசறை க்கான இடங்களை அளித்தும், நிதி திரட்டியும், ஆயுத உற்பத்திக்கு ஆன ஏற்பாடுகளை செய்து கொடுத்தும், தமிழகமெங்கும் ஈழவிடுதலை கண்காட்சிகளையும் ஏன் நடத்தினார்கள்? 

ஜெயவர்த்தனே தில்லிக்கு வந்தபோதும், பெங்களூர் வந்தபோதும் ஏன் போராட்டம் நடத்தினார்கள்?

ஆகிய கேள்விகளுக்கும் விடையளித்து இவை குறித்த ஆய்வு முடிவுகளையும் விரைவில் அறிவிப்பார் என்றும் ஆவலுடன் எதிர் பார்ப்போமாக!

ஒருவேளை, தமிழ்த் தேசியத்தின் மீது அவ்வளவு வெறுப்புடன் இருந்த - தமிழீழ விடுதலைக்கு ஆதரவு தெரிவிக்காமல் தந்திரமாக ஒதுங்கிக் கொண்ட - பெரியார் அறிவித்ததை போல 

"தமிழ்நாடு தமிழருக்கே" என்று அறிவித்துவிட்டும்,

அவரது 'விடுதலை' ஏட்டில் செய்ததைப் போல - 1956-ஆம் ஆண்டிலிருந்து 1976ஆம் ஆண்டு அவசரகால நிலை காலத்தில் தடை செய்கிறவரை ஏட்டின் தலைப்பில் வெளியிட்டு வந்ததைப் போல "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கத்தை தன்னுடைய 'தமிழ்தேசிய கண்ணோட்டத்'திலும் அட்டையிலேயே வெளியிட்டுவிட்டும், -

தமிழ்நாடு நீங்கலான இந்திய வரைபடத்தை எரித்துவிட்டும், - இந்தி எதிர்ப்புக்காக இந்திய தேசியக் கொடியை எரித்து விட்டும்,

அந்த ஆய்வு முடிவுகளையும் கேள்விக்கான விடைகளையும் அறிவிப்பார் என்ற உறுதியான நம்பிக்கையோடு, இப்போதைக்கு இந்த அறிக்கையை நிறைவு செய்கிறேன்.

அய்யா மணியரசன் அவர்களுடைய ஆய்வு முடிவுகள், விடை ஆகியவை வந்தாலும் வராவிட்டாலும் ஊரடங்கு காலம் முடிந்ததும், எங்களுடைய ஏடான 'புரட்சிப் பெரியார் முழக்கத்'தின் வழியாக பிறவற்றையும் எழுதுவோம் என்பதைக் கூறி இப்போதைக்கு முடித்துக் கொள்கிறேன்

#கொளத்தூர்_மணி,

#தலைவர்,

#திராவிடர்_விடுதலைக்_கழகம்

15.05.2020

No comments: