Thursday, May 5, 2022

காரல் மார்க்ஸின் மறுபக்கம்

 கே.ஜீவபாரதி 

               மார்க்சின் மறுபக்கம்!

கார்ல் மார்க்ஸ் வரலாற்றை முதன் முதலில் தமிழில் எழுதியவர் அறிஞர் வெ.சாமிநாத சர்மாதான். இந்த நூலுக்கு இணையாக இதுவரை தமிழில் மார்க்ஸ் பற்றி வேறு எந்த நூலும் வெளிவரவில்லை.

இந்த நூலில், "மார்க்ஸ் இல்லா விட் டால் எங்கெல்ஸ் இல்லை; எங்கெல்ஸ் இல்லாவிட்டால் மார்க்ஸ் இல்லை; இருவரும் இல்லாவிட்டால் உழைப் பாளிகள் உழைத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்; சுரண்டுகிறவர்கள் சுரண்டி கொண்டிருக்க வேண்டியது தான்" என்கிறார் சாமிநாத சர்மா. 

அவரின் இந்த முடிவு முழுமையான முடிவன்று.

1818 மே 5 நள்ளிரவு இரண்டு மணிக்கு ஜெர்மன் தேசத்தில், ரைன் மாநிலத் தில், டிரியர்  என்ற நகரத்தில் ஹென்றி மார்க்ஸ் - ஹென்றியேட்டோ பிரெஸ் பார்க் என்ற தம்பதிக்குப் பிறந்த குழந்தைதான் கார்ல் மார்க்ஸ். 

1883 மார்ச் 14 அன்று பிற்பகல் 3 மணி அளவில் லண்டனில் கார்ல் மார்க்ஸ் மறைந்தார். இந்த மண்ணில் மார்க்ஸ் வாழ்ந்தது 65 ஆண்டுகள், 10 மாதங்கள், 9 நாட்கள்.

சிறுவன் கார்ல் மார்க்ஸ் குடும்பம் டிரியர் நகரத்தில் வாழ்ந்தபோது பக்கத்து வீட்டில் லுட்விக்வான் வெஸ்ட் ஃபாலன் குடும்பத்தினர் வசித்தனர். இரண்டு குடும்பமும் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தது. 

சிறுவன் கார்ல் மார்க்ஸ் மனத்தில் சமூகச் சிந்தனையை விதைத்த சிறப்பு லுட்விக்வான் வெஸ்ட் ஃபாலனையே சாரும். அதனால்தான் டாக்டர் பட்டத் திற்காக தாம் எழுதிய ஆய்வுக் கட்டு ரையை லுட்விக்வான் வெஸ்ட் ஃபாலனுக்கு கார்ல் மார்க்ஸ் காணிக்கையாக்கினார்.

லுட்விக் வான்வெஸ்ட் ஃபாலனின் மகள்தான் ஜென்னி. கார்ல் மார்க்ஸை விட ஜென்னி நான்கு வயது மூத்தவர்;

கார்ல் மார்க்ஸைவிட ஜென்னி அழகானவர். 

கார்ல் மார்க்ஸ் குடும்பத்தைவிட பொருளாதாரத்திலும் அந்தஸ்திலும் ஜென்னி குடும்பம் உயர்ந்தது. இருப் பினும் சின்னஞ்சிறு வயதிலேயே கார்ல் மார்க்ஸ்மீது ஜென்னி அன்பைச் செலுத்தினார். அந்த அன்பே வளர்ந்து காதலாக மலர்ந்தது. 

வசதி படைத்த குடும்ப இளைஞர்கள் சிலர் ஜென்னியின் அழகில் மயங்கி, அவருடைய காதலுக்காகக் காத்திருந் தனர். அவற்றைப் புறந்தள்ளி கார்ல் மார்க்ஸின் அறிவுக்கு அடைக்கலமானவர் ஜென்னி.

1836 - ல் பெர்லின் பல்கலைக் கழகத் தில் பயில்வதற்காக கார்ல் மார்க்ஸ் தயாரானார். அப்போது கார்ல் மார்க்ஸின் தந்தை ஹென்றி மார்க்ஸின் முயற்சியினால் ரகசிய மாக கார்ல் மார்க்ஸ் - ஜென்னி திருமண நிச்சயம் நடந்தது. இது ஜென்னியின் தந்தைக்குக்கூடத் தெரியாது.

இதுபற்றி எழுதிய ரஷ்ய எழுத்தாளர் நி. இவனேவ், "அறிவுக் கூர்மையும், இயல் திறமையும் அழகும் வாய்ந்த ஜென்னி, பொதுவான ஆன்மீகத் தேவைகளாலும், நலன்களாலும் மார்க்ஸுடன் பிணைப்புக் கொண்டி ருந்தார். போதிய நிதி வசதிகளும், சமுதாயத்தில் ஓர் 'அந்தஸ்தும்' இல்லாத ஒரு மாணவனுடன் தனது வாழ்க்கையை இணைத்துக் கொள்ள முடிவு செய்ததன் மூலம் ஜென்னி, பொருளாயத சுபீட்ச வாழ்க்கையைத் தயக்கமின்றித் துறர்ந்தார். மார்க்ஸு டைய இயல்பின் அசாதாரணமான ஆழத்தை முதன்முதலில் உணர்ந்தவர் ஜென்னியே" என்று குறிப்பிடுகிறார்.

பெர்லின் சர்வகலாசாலையில் கார்ல் மார்க்ஸ் படித்துக் கொண்டிருந்தபோது அவருடைய நினைவாகவே ஜென்னி வாழ்ந்தார். கடிதத்தின் வழியாகத் தொடர்ந்து கார்ல் மார்க்ஸை ஜென்னி நலம் விசாரித்தார். 

இந்தக் காலகட்டத்தில் தான் எழுதிய கவிதைகளை கார்ல் மார்க்ஸ் ஜென்னிக்கு அனுப்பி வைத்தார். அவற்றில் 'தேடல்' என்ற கவிதையை ஜென்னிக்கு கார்ல் மார்க்ஸ் காணிக்கையாக்கி இருந்தார்.

கார்ல் மார்க்ஸின் தந்தை ஹென்றி மார்க்ஸ், மகனுக்கு எழுதும் கடிதத்தில் எல்லாம் ஜென்னி நிலையை விளக்க மறந்ததில்லை.

ஒரு கடிதத்தில், "உன்னைவிட்டு ஜென்னியைப் பிரிப்பதென்பது எந்த ஓர் அரசிளங்குமரனாலும் முடியாத காரியம். இதைப் பற்றி எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை. நீயும் இதை நிச்சயமாக நம்பு. அவள் தன்னு டைய உடலையும் ஆதாமாவையும் உன்னிலே ஐக்கியப்படுத்திக் கொண்டு விட்டாள். இது விஷயத்தில் உனக்காக அவள் மகத்தான தியாகம் செய்திருக்கிறாள்.அவளைப்போல சம வயதுடைய பெண்கள் இந்த மாதிரி யான தியாகத்தைச் செய்ய முடியாது. இதனை நீ மறந்து விடவே கூடாது" என்று கார்ல் மார்க்சின் தந்தை குறிப் பிடுகிறார்

கார்ல் மார்க்ஸிற்கும் ஜென்னிக்கும் பாலமாக இருந்த கார்ல் மார்க்சின் தந்தை ஹென்றி மார்க்ஸ், 1838 - ல் மறைந்தார். இதன்பின் கார்ல் மார்க்ஸ் குடும்பத்தில் தலைகீழ் மாற்றம் 

ஏற்பட்டது. கார்ல் மார்க்ஸின் தாய் கார்ல் மார்க்ஸிற்கு அனுப்பிவந்த சிறு தொகையையும் நிறுத்தினார்.

இதுபற்றி 'ஆர்னால்ட் ரூகே' 

என்பவருக்கு 1842 ஜூலை 9 - ல் எழுதிய கடிதத்தில், "என் குடும்பத்தில் ஏற்பட்ட மிகவும் மகிழ்ச்சியற்ற குழப்பங்களால் என் நேரம் பாழ் படுத்தப்பட்டு விட்டது. குடும்பத்திற்குச் செல்வம் இருந்தபொழுதிலும், என்னுடைய பாதையில் செல்ல விடாமல் தடைக் கற்களைப் போடு கிறது. தற்சமயம் என்னை மிகவும் கடுமையான சிரமத்தில் வைத் துள்ளது" என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

இந்தச் சூழலிலிருந்து கார்ல் மார்க்ஸ் விடுபடுவதற்கு ஜென்னியின் துணை தேவைப்பட்டது. அதனால், 1843 ஜூன் 13 அன்று 'க்ராயிஷ்னாக்' என்ற ஊரிலிருந்த பதிவு அலுவலகத்தில் ஜென்னியை கார்ல் மார்க்ஸ் திருமணம் செய்தார்.

ஆம்! திருமண நிச்சயம் நடந்து ஏழு ஆண்டுகள் கழித்துத்தான் ஜென்னி -

கார்ல் மார்க்ஸ் திருமணம் நடந்தது. இந்த ஏழாண்டுகால ஜென்னியின் மனப்புழுக்கத்தை வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது.

1843 அக்டோபர் மாதத்திலிருந்து ஜென்னியும் கார்ல் மார்க்ஸும் பாரிஸில் வாழ்க்கையைத் தொடங்கினர். இதன்பின் கார்ல் மார்க்ஸின் எழுத்துப் பணியும் இயக்கப் பணியும் தீவிரமாயிற்று.

கார்ல் மார்க்ஸின்  மனைவியாக ஜென்னி இருந்ததுடன் நண்பராகவும், ஆலோசகராகவும், முதல் விமர்சகராக வும் திகழ்ந்தார். இதற்குச் சான்றாக 1844 ஜூன் மாதத்தில் கார்ல் மார்க் ஸிற்கு ஜென்னி எழுதிய கடிதம் திகழ்கிறது.

அந்தக் கடிதத்தில், "மிகவும் அதிகமான வெறுப்புடனும் எரிச்சலுடனும் எழுதா தீர்கள். உங்களுடைய மற்ற கட்டுரை கள் எவ்வளவு அதிகமான விளைவை ஏற்படுத்தின என்பது உங்களுக்கே தெரியும். எதார்த்தமான முறையில் நயத்துடனும் நகைச்சுவையுடனும் இலேசாகவும் எழுதுங்கள் என்று ஜென்னி குறிப்பிடுகிறார்.

கார்ல் மார்க்ஸ் ஜென்னி இல்லற வாழ்க்கை துயரங்கள் நிறைந்த

தாகவே இருந்தது. அன்றாடச் செலவுக்குக்கூட அவர்கள் விழி பிதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜென்னி பட்ட துயரங்கள் கல் நெஞ்சையும் கரைத்துவிடும். இந்தக் காலகட்டத்தில் அவர் எழுதுகிறார்: "என் மார்பில் ஏற்பட்ட கட்டியால் என் குழந்தைக்கு என்னால் பால்கூட கொடுக்க முடியவில்லை. இதற்கு ஒரு தாதிப் பெண்ணை வைத்துக் கொள்ள வும் எங்களுக்கு பொருளாதார வசதி யில்லை. வேறு வழியின்றி என் குழந்  தைக்கு நானே வலியைப் பொறுத்துக் கொண்டு பால் கொடுத்தேன். பாலை யும் என் மார்புக் கட்டியில் இருந்து வடிந்த சீழையும் சேர்த்துக் குடித்ததது. ஒருநாள் அந்தக் குழந்தை செத்தும் போனது" இதுபோன்று ஜென்னி எழுதிய கடிதங்கள் அவருடைய தியாகத்திற்குச் சான்றுகளாகும்.

1881 டிசம்பர் 2 அன்று ஜென்னி மறைந் தார். இந்த இழப்பு கார்ல் மார்க்ஸை சோகத்தில் தள்ளியது. இதைத் தொடர்ந்து கார்ல் மார்க்ஸின் மூத்த குழந்தையும் மரணத்தைத் தழுவியது. இந்தக் குழந்தையின் பெயரும் ஜென்னிதான். மனைவி ஜென்னி,  மகள் ஜென்னி மறைவினால் கார்ல் மார்க்ஸ் ஒடிந்து போனார்.

1883 மார்ச் 14 அன்று கார்ல் மார்க்ஸும் மறைந்தார்.

பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்து, சின்னஞ்சிறு வயதிலேயே கார்ல் மார்க்ஸ்மீது அன்பு கொண்டு, அந்த அன்பைக் காதலாக்கி, காதலை இல்லறமாக்கி, அந்த இல்லறத்தின் பயனாகக் குழந்தைகளுக்குத் தாயாகி, வறுமை நிலையின்போது கார்ல் மார்க்ஸிற்கே தாயாகி, சோகத்தை மட்டுமே வாழ்வின் பெரும்பகுதியாகக் கொண்டு வாழ்ந்து சிறந்த ஜென்னி யின் தியாகத்தை எப்படி மறப்பது?

ஆம்! உலக உழைக்கும் மக்களுக்கு கார்ல் மார்க்ஸ் உயிர் போன்றவர். அவருக்கு ஏங்கெல்ஸும் ஜென்னியும் இருவிழி போன்றவர்கள்.  இதில் எவருடைய தியாகமும்  இளைத்த தன்று.

ஆம்! கார்ல் மார்க்சும் ஏங்கெல்ஸும் ஜென்னியும் உழைக்கும் மக்களின் மும்மூர்த்திகள்!      

(இன்று (05.05.2022) மாமேதை கார்ல் மார்க்ஸ் பிறந்தநாள்)

No comments: