Tuesday, December 31, 2019

திராவிட தேசீயம் - பேரறிஞர் அண்ணா -1


திராவிட தேசீயம்
பேரறிஞர் அண்ணா

பெரிதும் வணிகப் பெருங்குடி மக்கள் நடமாடும் இந்த சென்னை வட்டாரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கூட்டம் ஏற்பாடு செய்து, அருள் கூர்ந்து தேர்தல் நிதியும் கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக, கொத்தவால்சாவடிக்கு நாம் வந்தால், காசு கொடுத்துவிட்டு அவர்கள் கொடுக்கும் சரக்கை எடைபோட்டு வாங்கிக் கொண்டு செல்வது வாடிக்கை. ஆனால், இன்று நாம் கொடுக்கும் சரக்கை (பேச்சை) அவர்கள் எடை போட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.

எப்படி மதிப்போம்

ஒரு கடையில் நீண்ட நாள் வேலை பார்த்த ஒரு தொழிலாளி, அக்கடையி லிருந்து விலகிச் சென்றபின், ‘அந்தக் கடையில் தராசு சரியில்லை; வீசைக் குண்டு 40 பலம் இருக்காதுஎன்று சொன்னால் என்ன பொருள்? ‘ஏனப்பா, நீ தானே அந்தக் கடையில் இதுவரை நிறுத்துக் கொடுத்து வந்தாய்? அப்பொழுது உனக்கு இது தெரியாதா? இப்பொழுது வந்து இப்படிச் சொல்லு கிறாயேஎன்றுதான் கேட்போம். அதற்கு அவன், ‘அப்பொழுது அப்படி! ஆனால், இப்பொழுது இப்படிஎன்பானானால் அவனை நாம் எப்படி மதிப்போம்.
அறம் அதுதான்!

ஒருவர் கொத்தவால்சாவடிக்குச் சாமான் வாங்க வந்தால், சாமான் வாங்கும் போதே, அது நல்ல சரக்குதானாஅளவு சரியாக இருக்கிறதாஎன்று ஆராய்ந்து பார்த்து உன்னிப்பாகக் கவனிப்பதுதான் வாங்குவோரின் கடமை ; சரியாக நிறுத்துக் கொடுப்பதுதான் வியாபாரிக்கும் அறமாகும்.

அந்திக் கடையுமல்ல, அழுகல் சரக்குமல்ல!

இன்று சிலர் திராவிட நாடு இலட்சியத்தை மறுக்கிறார்கள்; மனமாச்சரியத் தால் இந்த இலட்சியம் தேவையில்லை என்கிறார்கள்.

ஒருவர் இப்படிச் சொல்லி, இந்த இலட்சியத்தை எடுத்துவிடுவதற்கு, இது ஒன்றும் அவசர வியாபாரமுமல்ல ; சைனாபஜாரில்போனால் வராது  - பொழுது விடிந்தால் கிடைக்காதுஎன்று விற்பார்களே - அப்படிப்பட்ட அந்திக் கடையுமல்ல. ஒரு வாரம் போனால் அழுகி விடக் கூடிய அழுகல் சரக்குமல்ல நம்மிடமிருப்பது.

எனவே, உங்களுக்குள்ள சந்தேகம் தீரும்வரை கழகத்திற்கு வராதீர்கள்; சந்தேகம் தீர்ந்த பிறகு வந்தால், பின்னர் சந்தேகப் படாதீர்கள்! சந்தேகம் அறவே நீங்கும் வரை உள்ளே வரவேண்டாம்.

அந்த பதில் நமக்குத் தேவைதானா?

கடையில் சாமான் வாங்கும் போதே, ‘சரியாக நிறுக்கப்படுகிறதா?’ என்று பாருங்கள். அப்படியல்லாமல், வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் அதன் பிறகு திரும்பி வந்து, ‘சாமான் அளவு சரியில்லை என்று என் மனைவி சொன்னாள் ; அதனால் திரும்பி வந்தேன்என்று சொன்னால், புத்தியுள்ள கடைக்காரன் என்ன சொல்வான்? ‘இனிமேல் அந்த அம்மாவையே சாமான் வாங்க வரச் சொல்லுங்கள் ; நீங்கள் வரவேண்டாம்என்றுதான் சொல்லு வான்!

ஏமாளியல்ல நாம்!

திராவிட நாட்டுக் கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கு முன் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு ஆராய்ந்து பாருங்கள். ஒரு கட்டத்தில் ஒரு வி­யம் புரிந்தது ; இன்னொரு வி­யம் புரியவில்லை என்றால், இன்னொரு கூட்டத்தையும் கேளுங்கள் ; உங்கள் சந்தேகம் தீரும் வரை நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.


எல்லாம் புரிந்துவிட்டதாகக் கழகத்திற்குள் வந்துவிட்டு, அதன்பிறகு கொள்கை பிடிக்கவில்லை என்றால், கொத்தவால்சாவடியில் சரக்கை வாங்கி இராயபுரத்திலுள்ள வீட்டுக்குச் சென்று பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்து விட்டுக் கூட அல்ல-பக்குவமாகச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு மிச்சமிருப்பதைப் பொட்டலமாக மடித்துக் கொண்டுவந்து கடையில் கொடுத்து, ‘சரக்கு நன்றாக இல்லைஎன்றால்எந்தக் கடைக்காரனும் வாங்க மாட்டான். அதைப் போல்இந்தக் கடைக்காரனும் (தி.மு..) ஏமாளியல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

எனவே, ஆற அமர ஆராயுங்கள். இது 1962 ‡க்குப் பிறகு அழிந்துவிடும் என்றல்ல ; அதன்பிறகு அறிவுக்கண் அடைப்பட்டு போய்விடாது. நன்றாகக் கழகக் கொள்கைகளை ஆராயுங்கள்; இவ்வளவுக்கும் இடம் கொடுத்துதான் இயக்கம் நடத்துகிறோம் நாங்கள்.

கதையும்-கருத்தும்!

ஒரு சிறு கதையை உங்களுக்கு உதாரணமாகக் கூற விரும்புகிறேன். ஒரு வைத்தியர், ஜோதிடர், சங்கீத வித்துவான் ஆகிய மூன்று பேரும் வெளி யூருக்குப் போனார்கள். பாழடைந்த சத்திரம் ஒன்றில் அவர்கள் தங்கி, சமைத்துச் சாப்பிடத் திட்டமிட்டார்கள்; வைத்தியர் காய்கறி வாங்கப் போனார் ; ஜோதிடர் அரிசி வாங்கப் போனார் ; சங்கீத வித்துவான் அடுப்பு மூட்டினார் ; வைத்தியர் காய்கறிக் கடைக்குச் சென்றுஎன்ன இருக்கிறது?’ என்று கடைக்காரனைக் கேட்டார். கடைக்காரன், ‘கத்தரிக்காய் இருக்கிறதுஎன்றான்.  ‘கத்திரிக்காய் சூடுஎன்றார் வைத்தியர். ‘அப்படியானால் வெண்டைக்காய் வாங்கிப் போங்கள்என்றான் கடைக்காரன்.  ‘வெண்டைக் காய் உடம்புக்கு நல்லது என்றாலும், இது குளிர் காலமாகையால் சளி பிடிக்கும்என்றார் வைத்தியர்இப்படியே ஒவ்வொன்றுக்கும் ஆராய்ச்சி செய்தார். கடைசியில் அவர்வாங்குவதற்குப் பொருத்தமான காய்கறி என்ன என்று பார்த்தால் அந்தக் கடையிலே ஒன்றும் இல்லை. தட்டும் கூடையும் தான் மிஞ்சின.


அரிசி வாங்கப் புறப்பட்ட ஜோதிடர் குறுக்கே கருப்புப் பூனை ஒன்று வந்ததால்அபசகுனம்என்று கருதி அந்த இடத்திலேயே ஒரு மணி நேரம் அமர்ந்துவிட்டார். அதன் பிறகு புறப்பட்டார். அப்பொழுதும் சிலஅப சகுனங்கள்ஏற்பட்டதால் தனது இராசி பலனை ஆராய்ந்தார். ‘நமது ராசிக்கு இன்று சரியில்லை ; இன்னும் மூன்று மணி நேரம் போக வேண்டும் ; இப்பொழுது போனால் அரிசியும் கிடைக்காது ; அப்படிக் கிடைத்தாலும் வேகாது; வெந்தாலும் உடம்புக்கு ஆகாதுஎன்று கருதி அங்கேயே மூன்று மணி நேரம் உட்கார்ந்துவிட்டார்.

பாத்திரத்தில் தண்ணீரை வைத்து அடுப்பு மூட்டிய சங்கீத வித்துவான் தண்ணீர் நன்கு கொதித்துதள தளவென்று ஓசை எழுப்பியதும், அந்த ஓசைக்குத் தகுந்தாற் போல் தாளம் போட ஆரம்பித்துவிட்டார். தமது தாளமும் தண்ணீர் கொதிக்கும்தளதளவென்னும் ஓசையும் ஒத்துவராததால், ‘இந்தத் தப்புத்தாளம் சபைக்கு எடுக்காது!’ எனக் கூறி, சட்டுவத்தை எடுத்து அந்தப் பானை மீது அடித்து உடைத்துவிட்டார் - இப்படி ஒரு கதை உண்டு.
எவ்வாறு கிட்டும் வெற்றி!

இலட்சியப் பாதையில் செல்லும்போது இந்தக் கதையில் சொல்லப் பட்ட மூன்று பேருக்கும் ஏற்பட்டதைப் போல, சந்தேகம் ஏற்படுமானால் இலட்சியத்தில் வெற்றிகிட்டாது.

நம்முடைய இலட்சியத்தைப் பற்றி பல பேருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. படித்தவர்களுக்கும் ஏற்பட்டது; படிக்காதவர்களுக்கும் ஏற்பட்டது; காங்கிரஸ் காரர்களுக்கும் ஏற்பட்டது ; கம்யூனிஸ்ட்களுக்கும் ஏற்பட்டது. அவர்களுடைய சந்தேகங்களையயல்லாம் தம்பி சம்பத் போக்கினார் ; துரதிருஷ்டவசமாக, போக்கிய அவருக்கே அந்தச் சந்தேகம் வந்துவிட்டது.

காலரா நோய்க்கு மருந்து கொடுப்பார் டாக்டர் ; பலருக்கு அந்த நோய் தீரும்; ஆனால், அவருக்கே அந்த நோய் வருதுண்டு. குஷ்ட நோய்க்கு மருந்து கொடுத்துப் பலருடைய நோயைத் தீர்க்கும் டாக்டருக்கே அந்த நோய் ஏற்படுவதுண்டு. அதைப்போல, நம் சம்பத்துக்கே அந்தச் சந்தேகம் வந்திருக்கிறது.

பிரதமப்பூசாரியானாரே!

சந்தேகப் பேயை ஓட்டுவதற்கு ஒரு நல்ல பூசாரியாக சம்பத்தை அமர்த்தியது தி.மு..

பேய் பிடித்தவர்கள் பல ரகம் ; ஒவ்வொரு பேயையும் ஓட்டும்போது அந்தப் பேய், தான் யார் என்றும், தனக்குத் தேவை இன்னதென்றும் சொல்லும். அதைப் பேய் சொல்லுவதில்லை - சொல்ல வைப்பவன் பூசாரி!

அதைப்போல, நம்முடைய பிரமப்பூசாரியான சம்பத் சந்தேகப்பட்டவர் களை யயல்லாம் ஆட்டிவைத்தார். ‘காமராசரே! உமக்குச் சந்தேகமா? உமக்குப் பூகோளம் தெரியாததால் இந்தச் சந்தேகம் வந்தது ; பூகோளம் வாங்கித் தருகிறேன்படித்துப் பாரும்என்று சம்பத் சொன்னார். இப்படிப் பலபேருடைய சந்தேகப் பேயை விரட்டினார். ஆனால், அவருக்கே அந்தச் சந்தேகப் பேய் பிடித்திருக்கிறது.

எனவே, சந்தேகம் ஏற்படுபவர்கள், தங்கள் சந்தேகத்தை என்னிடம் தனியாக எடுத்துரைத்தாலும் அதற்கு விளக்கம் தரக் காத்திருக்கிறேன். இப்படிப்பட்ட கூட்டத்தில் கேள்வியாகவும் கேட்கலாம். எந்த வழியிலேனும் உங்கள் சந்தேகத்தைத் தெளிய வைத்துக் கொள்ள வேண்டும்.