Monday, December 23, 2019

தமிழர் யார்? - கவி, (ஆசிரியர், பெரியார் பார்வை, தமிழ்நாடு)

தமிழர் யார்? 
- கவி, (ஆசிரியர், பெரியார் பார்வை, தமிழ்நாடு)

தமிழ் மொழி வடமொழிக்குப் பிந்தைய காலத்திற்குரியது. தமிழர் நாகரிகம் ஆரியரால் அறிமுகப் படுத்தப்பட்டது என்பன போன்ற திரிபு வாதங்களை உடைத்தெறிந்தவர் மனோன்மணியம் பெ.சுந்தரனார். அவர் கல்வெட்டு ஆய்வாளர் என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

பெ.சுந்தரனார் அவர்கள் பட்டப்படிப்புகளில் வரலாற்றை துணைப்பாடமாக எடுத்துப் படித்ததால் இயல்பிலேயே வரலாற்றுத் துறையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அறிவியல் ரீதியான பார்வை ஆராய்ச்சிக்கு மிகவும் தேவை என்பதை உணர்ந்திருந்த பெ.சுந்தரனார், திருவிதாங்கூர் அரசின் உதவியுன் ஓர் அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பில் சுவாமி விவேகானந்தரும் சொற்பொழிவாற்றியிருக்கிறார்.

கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியாக இருந்த அலக்சாண்டர் கன்னிங்காம் என்பவர் இந்தியாவின் தொன்மையான சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று முயன்று 1870 இல் தொல்லியல் துறை தலைவரானார். 1878 இல் இந்தியத் தொல்லியல் சட்டம் உருவாக்கப்பட்டது. 1890 இல் இந்திய சாசனங்களின் தொகுப்பை இந்திய தொல்லியல் துறைத் தலைவர் டாக்டர் இ.ஹால்சர் வெளிக்கொண்டுவந்தார்.

இந்த அதிகாரத் தொகுப்பிற்கு முன்பே பெ.சுந்தரனார் அவர்கள் சிரஸ்தார் (Commissioer of separate revenue) என்ற பதவியில் 1882-85 இல் இருந்த போது தொல்லியில் துறையில் ஈடுபாடுகொண்டார். பெ.சுந்தரனாரின் கல்வெட்டு ஆய்வுகளை அவருடைய கையயழுத்துப் பிரதிகளிலிருந்து 1902 இல் திருவிதாங்கூர் தொல்லியல் துறை இயக்குநர் டி.எ.கோபிநாத்ராவ் பெற்றிருக்கிறார்(1).

மொகஞ்சதரோ அகழ்வாராய்ச்சிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பெ.சுந்தரனார் அவர்கள்,

‘சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ யனாதியயன மொழிகுவதும் வியப்பாமே’
என்று கூறியது வியக்கத்தக்கது என்று ந.சி.கந்தையா பிள்ளை அவர்கள் கூறுகிறார்.

சிந்துவெளியில் மறைந்து கிடந்த தமிழர் வரலாறு 1931 இல் சர்.யான் மார்­ல் என்பவரின் ஆராய்ச்சியால் வெளிவந்தது.

மிக மிக பண்டையக் காலத்தில் பூகோளப் பரப்பில் தெற்குப் பகுதியில் ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்தது.  அங்கு ‘தேவாங்கு’ என்ற உயிரினம் வாழ்ந்ததால் அப்பகுதி ‘லெமுரியா’ என்று வழங்கப்பட்டது. ‘லெமூர்’ என்னும் பெயர் தேவாங்கைக் குறிக்கும்.

தமிழ் நூல்களும் இந்நிலைப்பரப்பை ‘நாவலந்தீவு’ என்று அழைத்தன.
பெரிய கடல்கோள்களும் பெரிய காற்றுக் குழப்பங்களும் எரிமலைக் குழப்பங்களும் ஏற்பட்டதால் நாவலந் தீவு சிதைக்கப்பட்டது. இந்து மாக்கடல், பசிபிக்கடல்களின் இடையிடையே காணப்படும் தீவுக்கூட்டங்கள் நாவலந் தீவுகளே ஆகும். இது குறித்து கடல்ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.

சிந்துநதிப் பள்ளத்தாக்கில் மொகஞ்சதரோ, அரப்பா நகரங்கள் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டன. அவை இன்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

மொகஞ்சதராவில் கிடைத்த ஆயிரத்து எண்ணூறு முத்திரைகளை யஹராஸ் பாதிரியார் ஆய்வு செய்து அவை  திராவிட மொழியைச் சார்ந்தது என்று உறுதி செய்தார்.

நாவலந் தீவு அழிவுற்ற காலத்தில் இந்தியாவிற்கு தெற்கே பெரிய நிலப்பரப்பு இருந்தது. அது கன்னியா குமரிக்கு தெற்கே எவ்வளவு தூரம் பரவியிருந்தது என்பது வரையறுத்துக் கூற முடியாது.

குமரி நாட்டில் நாற்பத்தொன்பது பிரிவுகள் இருந்தன என்று சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதும்போது அடியார்க்கு நல்லார் கூறுகிறார்.  குமரி, பஃறுளி என்று ஆறுகளும் குமரி என்ற மலையும் இருந்தன(3).

‘செங்கோன் தரைச் செலவு’ என்னும் நூல் குமரி நாட்டில் இருந்த பெருவள நாட்டு அரசன் செங்கோன் மீது பாடப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூலில்  மணிமலை, பேராறு என்னும் மலைகளும் சில இடங்களும் குறிப்பிடப் படுகின்றன. இந்நூல் மொகஞ்சதாரோ காலத்துக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டது.

குமரி நாடு சிறிது சிறிதாகக் கடல்கோளுக்கு ஆட்பட்டது. இக்கடல்கோளில் பிழைத்த மக்கள் வடக்கு நோக்கிச் சென்று தென்னிந்தியாவில் குடியேறினர். குமரி நாட்டிலிருந்து வந்து குடியேறிய மக்கள், தமது நாட்டுக்கு, கடல் கோளால் மறைந்த நாவந்தீவின் பெயரையே(4) இட்டனர்.

மக்கள் வடக்கே பெருந்தொலைவில் செல்லமுடியாதவாறு ‘தண்டகம்’ என்னும் அடர்ந்த காடு தடுத்தது. எனவே மக்கள் இங்கேயே அகண்ட நிலப்பரப்பில் அரசாட்சி அமைத்து வாழ்ந்தனர். இவ்வாறு புதிய நாவலந் தீவில் மூவரசர் ஆட்சி ஏற்பட்டது.

தெற்கே இருந்த அரசு மிகவும் பழமையான அரசு என்பதால் ‘பண்டுநாடு’ என அழைக்கப்பட்டது. ‘பண்டு’ என்பது பழமை என்பதைக் குறிக்கும். இதிலிருந்தே பாண்டியன் என்ற சொல் உருவாயிற்று.

நாவலந் தீவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகமானவுடன் அவர்கள் பல நாடுகளுக்கு செல்லத் தொடங்கினர். வடக்கே விந்திய மலை பெருங்காடாக இருந்ததால் அவர்கள் தரைவழியே வடக்கு நோக்கிச் செல்ல முடியவில்லை. எனவே தமிழர்கள் கடல் வழியே வடக்கு நோக்கிச் சென்றனர். அவ்வாறு சென்ற ஒரு கூட்டத்தினர் சிந்து நதி முகத்துவாரத்தை அடைந்தனர்.

அம்மக்கள் ஆற்றோரங்களில் தானியங்களை விளைவித்து வாழ்ந்தனர். இம் மக்களின் நாகரிகம் பற்றி 1921 வரை யாரும் அறிந்திருக்கவில்லை. இவர்கள் வாழ்ந்த நகரங்கள் மொகஞ்சதரோ, அரப்பா என்று அழைக்கப்பட்டன.
1921 ஆம் ஆண்டில் தயாராம் சாஹ்னி தலைமையில் அரப்பாவிலும், 1922 இல் ராக்கல் தாஸ் பானர்ஜி தலைமையில் மொகஞ்சதரோவிலும் அகழ்வாராய்ச்சிகள் தொடங்கப்பட்டன.

இதன் பிறகு இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர் ஜான் மார்­ல் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு, சிந்துவெளிப் பண்பாடு, இந்தோ-ஆரியர்கள் வருவதற்கு முன்பே இந்தியாவில் இருந்தது என்பதை வெளிப்படுத்தினார்.

முப்பதுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இரண்டாம் உலகப்போர் பேரழிவு இரண்டும் அகழ்வா ராய்ச்சிகளை முடக்கிவிட்டது. 1947 இல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு பல சிந்துவெளிப் பகுதிகள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டன. அதனால் இந்தியாவில் ராஜஸ்தான், அரியனா, குஜராத், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்டன.

‘சிந்துவெளி மொழி’யை முறையாக ஆய்வு செய்தவர் ஜி.ஆர். ஹண்டர். இவரே சிந்துவெளிக் குறியீடுகளின் தொகுப்பை 1934 இல் அட்டவனைப்படுத்தினார். ஐராவதம் மகாதேவன் அவர்கள் 1977 இல் சிந்துவெளிக் குறியீடுகளை முழுமையாக தொகுத்து வெளியிட்டார்.

ஏறக்குறைய 3000 சிந்துவெளி எழுத்துச்சின்னங்கள், முத்திரைகள், முத்திரைப் பதிவுகள், பானை ஓடுகள், செப்புத் தகடுகள் முதலியனவற்றை அட்டவனைப்படுத்தினார். சிந்துவெளிக் குறியீடுகளை புள்ளியியல் மற்றும் கணிணி  (மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்)(5) உதவியுடன்  பல்வேறு ஆய்வுகளையும் செய்திருக்கிறார்.  இவரைத் தொடர்ந்து அஸ்கோ பர்போலோ, ப்ரையன் வெல்ஸ் போன்றவர்களும் சிந்துவெளிக் குறியீடுகளின் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். ‘சிந்துவெளிக் குறியீடுகள், திராவிட மொழிகளுடன் தொடர்புடையது’ என்று முதன் முதலில் சொன்னர் ஹிராஸ் பாதிரியார் ஆவார்.
அடிக்குறிப்புகள் :
1  அ.கா.பெருமாள் எழுதிய 'மனோன்மணியம் சுந்தரனாரின் இன்னொரு பக்கம்' என்னும் நூல்

2&4 . யாழ்ப்பாணத் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை எழுதிய 'தமிழர் யார்' என்ற நூல்.

5.  ச. சுப்பிரமணியன் எழுதிய 'சிந்துவெளி ஆய்விற்கு ஒரு மையம்' என்ற கட்டுரை


No comments: