Tuesday, December 31, 2019

வே.சாமிநாதையரின் கொடுமையும் திருப்பனந்தாட் காசி மடத் தலைவர் மதி யிழப்பும்


வே.சாமிநாதையரின் கொடுமையும்
திருப்பனந்தாட் காசி மடத் தலைவர் மதி யிழப்பும்
- குடந்தை கூத்தப்பிரனார்

சென்ற வாரத்தில் கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் தன்னிலும் மிக்க தமிழ் கல்வியாளரில்லையயனத் தருக்கிப் பிறரை ஏமாற்றி வஞ்சப் புகழச்சி செய்து திரியும் வே. சாமிநாதையார் தலைமயில் கீழ்பார்ப்பனக் கூட்டமொன்று கூட்டி நீதியின்றி ஒரு ஆரியனுக்கு மட்டும் r காசி மடத் தலைவராகிய ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரானவர்களும் ஸ்ரீலஸ்ரீ சாமிநாத தம்பிரானவர்களும் பார்ப்பனர் யாவரும் கண்டு கேட்டு மகிழுமாறு ஆயிரம் பரிசாகக் கொடுத்த செய்தியை சுதேசமித்திரன் முதலிய பத்திரிகை வாயிலாகத் தெரிந்து ஒருபுறம் தமிழ் கல்வி படித்துத் தேர்ந்த ஆரியனுக்குக் கொடுத்தமைக்கு மகிழ்ச்சியும், அவ்வாறே முதன் முதல் சென்னைப் பல்கலைக் கழகத்துத் தமிழ் வித்துவானாக முதல் வகுப்பில் சென்ற வரு­த்தில் தேறிய இரண்டு தமிழர்களுக்குக் கொடுத்தற்குரிய எண்ணமு மின்றி ஏமாற்றிய ஆரியச் சூழ்ச்சியையுண்ணுந்தோறும் அடங்காப் பெரு விருத்தமும், உண்மையாகத் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் உண்டாகா மற் போகாது. ஆரியர் பல நூற்றாண்டுகளாகத் தமிழரை ஏமாற்றிப் பல வகையிலும் வஞ்சகமாகப் பிழைத்து வந்த செய்திகள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிபட்டும் மேலும் தம் சாதிக் கொள்கையை வலுப்படுத்துகின்றனரே யன்றிச் சிறிதும் தளர விட்டாரில்லை. பார்ப்பனர் மந்திரத்தாற் கட்டுண்டு உழலும் நமது காசி மடத் தம்பிரான்கள் போன்ற போலித் தமிழரை நம் நாடு பெற்றிருக்கும் வரையில் ஒரு நாளும் முன்னுக்கு வராது.

சென்ற ஆண்டில் வித்துவான் வகுப்பிற் தேறிய முதல் மாணவராகிய தண்டபாணி தேசிகரும், மற்றவர்களாகிய சிலப்பிரகாச தேசிகர், குஞ்சிதபாத தேசிகரும், கோதண்டராமையரும் ஆகிய நால்வரையும் கூட்டிக்கொண்டு சென்னையில் r காசிமடத்துச் சின்னத்தம்பிரான் இருக்கும் சாகைக்கு வே. சாமி நாதையரவர்கள் சென்று கண்டபொழுது தற்போது கைவசம் பணமில்லையயனச் சொல்லிக் கொண்டு 10 ரூபாயோ அதற்குக் குறைவாகவோ கொடுத்து அனுப்பிய செய்தி பலருக்கும் தெரியும். சின்னத் தம்பிரானாகிய சாமிநாத தம்பிரானவர்கள் ஒரு தந்தி கொடுத்தாவது அல்லது வேறு எவ்விதத்திலாவது தமிழ் கல்வி பயின்றவருக்குப் பணமளித்துப் புகழ் பெறக் கருதியிருந்தால் கொடுத்திருக்கலாமே? முதன் முதல் வித்துவான் பரீட்சையில் தேறியவர்கள் தம்மைப் பார்க்கத் தாம் பரிசளிக்க மனமில்லாமல் வாளாயிருந்த சமயத்தில் மேற்படி சாமிநாதையரவர்கள் இப்போது ஆரியச் சிறுவனுக்குக் கொடுத்ததற்கு அல்லல் பல பட்டும், அடிக்கடி திருப்பனந் தாளுக்குச் சென்று தமது மநதிரத்தால் மயங்கும்படி செய்த முயற்சியைத் தனித் தமிழர்களுக்குச் செய்திருந்தால் அவர் கல்விப் பெருமைக்கு ஏற்றதாகும். என்ன செய்தும் நாய் வாலை நிமிர்க்க முடியுமா? என்ற பழமொழிப்படி பற்பல பிறப்புகளால் ஏறிய ஆரியர்களது அடாத செய்கைகளை ஒரே பிறப்பிற் பயின்ற தமிழ் கல்வியால் திருத்த முடியுமா? முடியாது. ஆரியச் சேர்க்கையே அல்லும் பகலும் விரும்பியுள்ள அம்மடத்துத் தம்பிரான்களைத் தனித்த தமிழ் மக்கட் பகுதியினர் இனிச் சும்மா விடுதல் ஒன்றுமா? மடங்களில் அவர்கள் செய்யும் ஒவ்வொரு நீதியற்ற செயலையும் வெளிப்படுத்தி அவர்களுக்கு நல்ல நீதி புகட்டுவதன்றோ தமிழராகிய நம்மனோர்க் குக் கடனாகும். இவ்வாறு கூறி, அவர்களைத் திருந்தச் செய்தலால் புண்ணியமும் புகழும் ஒருங்கே கை கூடுமே யன்றிப் பாவம் என்பது ஒரு பொழுதும் நம்மிடத் தணுகாதெனத் துணிந்தே கூறலாம்.

தனித் தமிழருடைய உணவும், உடையும், அறிவும், பொருளும் பெற்ற ; தமிழராகிய நம்மனோரை முன்னுக்கு வரவொட்டாது செய்து வருகின்ற இவ்வாரியர் குழுவை அடியோடு வேரறுத்தற்குரிய காலம் என்று வாய்க்குமோ? ஆரியரது மந்திரத்தால் மயங்கிய தமிழருக்கு வீரமென்பது சிறிதேனுமுண்டா? தாய் நாடாகிய தமிழ்நாட்டில் தமிழ்மொழி பயிலும் தாய்க்கும், தமிழ்மொழி பயிலும் தகப்பனுக்கும் உண்மையாக பிறந்த தமிழர்களா யிருப்பின் இவ்வாரியர் சூழ்ச்சிக்கு உடனபட்டு நடந்து வருவார்களா? தமிழ் வளர்ச்சி கருதியும் சமய வளர்ச்சி கருதியும்  தனித் தமிழ் மக்கள் தமது உண்மை உழைப்பினால் பெற்ற செல்வம், அறநெறியான் ஈட்டப்பெற்ற செல்வம் இவ்வாறு பாழாக ஆரியர் வஞ்சகமாய்க் கொண்டுண்டு உடுத்து மகிழ்ந்திருக்கத் தமிழ் மக்களிற் பெரும்பாலோர் வருந்துவது அறமாகுமா? இப்போது தமிழகத்திலுள்ள மடாதிபதிகள் யாவரும் தன் அப்பன் தேடிவைத்த செல்வத்தைப் போல மதித்துத் தத்தம் மனம்போனவாறு பயனற்ற வழியில் அழித்தல் நன்றாகுமா? தாம் மடத்திற் சென்று ஆதின கர்த்தராகவோ,தம்பிரான்களாகவோ மாறுவதற்கு முன் தானும், தன் தகப்பனும், பாட்டனும் ஆகிய இவர்கள் முழங்கால் தேயப் படி அரிசிக்குப் பல வீடுகளில் யாசித்து வாங்கியதைச சிறிது நினைத்தால் இவ்வாறு அடாத நெறியில் மடாதிபதிகள் நடக்கத் துணிவார்களா? ‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான்என்ற பழமொழிப்படியும் முன்னிருந்த நிலையை எண்ணாது தற்போது வந்த அற்ப வாழ்வினால் மகிழும் ஆதீன கர்த்தர்களையும் தம்பிரான்களையும் அடக்குவாரொருவரும் தமிழகத்தி லில்லையா?

பார்ப்பனச் சேர்க்கை நமக்கு வேண்டுமானால் அதற்காக வந்த அப்பன் வீட்டுச சொத்து கிடக்கிறதென வாரி யிறைப்பது? தமிழ் கல்வி வளர்ச்சிக்கென வைத்த பொருள் முழுவதும் அந்தோ ஒரு முயற்சியுமின்றி வெள்ளி கட்டித் துள்ளித் திரியும் பார்ப்பனருக்கும் கல்விக்கென உலவிவரும் கவின் மங்கைகளிலும் அள்ளியள்ளித் தருதல் அடக்குவாரின்றி அட்டகாசம் செய்யும் தம்பிரான்களுக்கும் மடாதிபதிகளுக் கும்  ஏற்றதாகுமா? 1,500 வேலி நிலம் காசி மடத்துக்கு முன்னோர் தேடி வைத்திருக்க அதன் வரும்படி முழுவதையும் மதன்செயும் வழியில்  செலவழிப்பது தவிர கல்வி வளர்ச்சியேதேனும் உண்டா? கலவிக்குப் பாதியும், கல்விக்குப் பாதியுமாவது செலவிடலாகாதா?

எவ்வகையிலும் தமிழ்ப் பெரு மக்களை முன்னுக்கு வரவொட்டாத ஆரியர் கட்டுரைகள் ஆங்கிலமும், தமிழும், ஆரியமும், பிற மொழிகளும் ஒருங்கே கற்று ஆராய்ச்சி செய்துவரும் தமிழ்ப் பெருமக்களால் வெற்றுரைகளாயின. ஆகின்றனஇனி ஆவன. இவற்றை மறுத்துரைக்க எந்த ஆரியனுக்காவது திறனுண்டா? வேதம், இதிகாசம், புராணம், தர்ம சாஸ்திரம் முதலிய நூல்களில் ஆரியராகிய பார்ப்பனர் செய்த பாவத்துக்குக் கழுவாயயான்றும் தமிழ் மக்கள் செய்யும் பாகத்துக்குக் கழுவாயயான்றுகாகக் கட்டிப் புரளிசெய்து அரசரையும் ஏமாற்றி வயிறு வளர்த்த ஆரியர் குட்டுக்களெல்லாம் ஆங்கலங் கற்ற தனித் தமிழ் வீரர்களால் வெளிப்படுத்தப் பட்டு வருகின்றன.

இவற்றிற்கெல்லாம் தமிழர் தாம் படிக்காமல் காலத்தை வீணாக்கி ஆரியர் சூழ்ச்சியிற் பட்டுழல்வதே யாகும். இனியாவது தமிழ்ப் பெரு மக்கள் யாவரும் தாம் தம் மக்களைத் தனித் தமிழ் நூல்களை முற்றந் கற்கும்படி செய்தால் நமது தமிழ்நாட்டில் முன்னோர் ஆரியர் சூழ்ச்சியிலகப்படாமல் தனித் தமிழரசு நடத்திய செய்திகள் வெளியாகும். புறநானூறு முதலிய தமிழ் நூல்களில் ஆராயப்புகின. இப் பார்ப்பனர்கள் புலாலுண்டமையும், கள்ளுண்டு களித்தன்மையும் புலனாகும். தமிழர்கள் கேள்வி செய்யலாகாதென ஆரியர் கூறி நூல்களிலும் ஏற்றிய அடாத மொழிகளெல்லாம் அவர்கள் தமிழ் மக்களது பொருளை வஞ்சகமாகப் பெற்று யாகங்களைச் செய்து தாம் சுவர்க்காதி போகங்களை யனுபவித்தற்கேயாகும். தமிழ் மூவேந்தரும் வேள்வி யியற்றிய செய்தி பண்டைத் தண்டமிழ் நூல்களைப் படிப்பார் யாவரும் எளிதினுணரத் தக்கதாகும். சங்கராச்சாரியார் என்னும் ஆரியர்களுக்குக் குருவானவர் லோக குரு எனத் தமிழரை ஏமாற்றிப் பணத்தைப் பிடுங்கி ஆரியருக்குச் சோறு போடுவதைத் தவிர தமிழருக்குச் செய்த நன்மைகள் ஏதேனுமுண்டா?

வேதத்தைத் தமிழ் மக்கள் படித்தலாகாதென ஆரியர் கட்டிய போது ஆரிய மொழியில் வல்லுநர்களாகிய தமிழர்கள் ஆகமங்களைத் தொடுத்து வேதநெறி யயான்று மட்டும் உள்ளவர் தாழ்ந்தவரென்னும் ஆகம நெறியைக் கைக் கொண்டவர்களும் தீட்சை முதலிய சடங்குகளும் செய்யப் பெற்றவர் களுமாகிய தமிழர்கள் வேத நெறியைக் கைகொண்ட அத் தாழ்ந்தவராகிய ஆரியரிடத்து உண்பதுங் கூடாதென விலக்கி யுள்ளார்கள்.

வேதத்தில் கூறிய வேள்வி செய்யும் பார்ப்பனர்கள் வேள்வியில் மாமிசங்களையே போட்டு எஞ்சியதைத் தாம் புசித்து வருகின்றனர். புறநானூற்றில் ஆராயப் புகுந்தால் பார்ப்பனர் மாமிசம் பொய்யாது நெய் பெய்து வேள்வி செய்ததையும், வேள்வி முடிந்த விடத்தில் கல்நாட்டுவதையும் அறியலாம். யாக பசுவைக் கொல்லுவதற்காக முதலில் நாட்டப்படும் தூண் தனித்த தமிழ் நூல்களில் சொல்லப்படவில்லை.

ஆகமங்களில் கூறப்படும் வேள்விகளெல்லாம் தமிழர் செய்யும் செய் பேய் வேள்வியேன்றி வேறல்லஆகமம் தனித் தமிழருக்குரியதே. அவைகளில் சில ஆரியர்களால் கட்டியவை யுளவேல் அறிஞரால் ஆராய்ந்து ஒதுக்கத் தகுந்தனவே. இனிப்பார்ப்பனர்என்ற சொல் சிறந்த அறிஞர்களைக் குறிப்பதாகும்ஆதலால் ஒழுக்கங்கெட்ட ஆரியனைப் பார்ப்பனன் என்ற சொல்லால் தமிழர்கள் அழையாமலிருப்பாராக ; ஆரியன் என்றே கூறுக. ஆரியன் என்ற தன் பொருள் மிலெச்சன் என்பது.

 இச் சொல்லை மிலேச்சர் என்ற பொருளில் பண்டைத் தண்டமிழ் நூல்கள் கூறுதல் குறிப்பிடத்தக்கதாகும்.

தனித்த தமிழருக்குப் பழந்தமிழ்க் கடலாகவுள்ளதும், அக்காலத்து ஆரியரொழிந்த தமிழரது தனித்த நாகரிகத்தைத் திறம்பட மொழிவதுமாகியஒவ்வாப் பெருமைத் தொல்காப்பியத்தி லும்ஆரியர் குழுவினுள் ஒருவராகிய உச்சி மேற்புலவர் கொள் உச்சினார்க்கினியர் தமது ஆரியக் கொள்கைக்கேற்ப ஆரியப் பார்ப்பனர் முதலிய நால்வகைச் சாதிகளெனக் கொண்டு உரையயழுதித் தமிழரை மயமாக்கியிருக்கின்றனர். வலிந்து பொருள் கொண்ட இடங்கள் பல, ஆரியரால் சில சூத்திரங்கள் செருகப்பட்டுளதோ என ஐயுறுதற்குரிய இடங்களுமுண்டு. தனித்த தமிழ்ப் பெருமகனாகிய திருவள்ளு வரது நூலிலும் பரிமேலழகர் உரை செய்யப் புகுந்த பல இடங்களில் ஆரியர் சூழ்ச்சியைப் புகவிட்டனர்.

இவைகளையயல்லாம் தமிழர் அறிய வேண்டுமாயின் தமிழ் நூல்களைப் பார்ப்பனரல்லாத தமிழரிடத்து முறையாகக் கற்றுணர்தல் இன்றியமையாததாகும். பிற்காலத்துப் பொருளிலக்கணங்களாகிய நம்பி அகப் பொருளிலும், புறப் பொரள் வெண்பாமாலை முதலியவற்றிலும் ஆரியக் கொள்கையிலுள்ள சாதி வேற்றுமைகளைப் புகுத்திவிட்டனர்.

தமிழ் நாட்டிலுள்ள மூவேந்தரது குடிமைகளுக்கும் சூரிய குலம், சந்திர குலம், வன்னி குலம், எனத் தேவரொடு குடியைத் தொடுத்துவிட்டனர்.

தமிழகத்திலுள்ள அறிவர்களுக்குள்ள ஐயர், பார்ப்பனர் என்ற பட்டங்களுக்கியையத் தாமும் அவர் வேடந்தாங்கி (இப்போதுசங்கராலோககுருவெனத் திருநீறு தரித்தச் சைவரையும், வைணவரையும் ஏமாற்றிப் பணம் பறிப்பது போல) தப்பட்டப் பெயர்களை நாளாவட்டத்தில் தாங்கொண்டு தமிழ் மக்களுக்குச்சூத்திரர்என்பது ஒரு பட்டம் என வழங்கி ஏமாற்றினர். இவ்வாரியர், ஆரிய நாட்டிலிருந்து வந்த இவ்வாரியர் தம் குழுவிற்குள் அதாவது ஆரியருக்குள் பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரன் என்றிருந்த வகுப்புகளையயல்லாம் தமிழரிடத்தும் ஏற்றி இடையிலிருக்கும் இரண்டையும் ஒழிந்த பிராமணன், சூத்திரன் என்ற இரண்டு பட்டங்களையே நமக்கும் தமிழருக்கும் முறையே வைத்து வழங்குவராயினர்.

தமிழகத்துள்ள கற்றறிந்த அறிஞர்கள் தவிர மற்றவரெல்லாம் அவர் மயக்கிற்காளாகி வந்தனர். மற்றும், தமிழருட் சிலர், ஆரியக் கொள்கைப் படியேற்படுத்தப்பட்ட சத்திரிய வகுப்பினர் எனத் தம்மைச் சொல்லிக் கொண்டு பூசலிடுகின்றனர். சிலர், தம்மை வைசியரில் அடக்குவர். சில பகுப்பினர் தம்மைப் பிராமணன் என்னும் பகுப்பில் அடக்கிக் கொள்வர். இம் மூவரையும் அவ் வாரியர் தம் குறும்பின் படி சூத்திரர் எனவே அழைக்கக் காண்கிறோம்.

 தமிழ் நாட்டுக் குடிகளைத்  தமிழர் என்பது தவிர வேறு பகுப்பு ஆரியர் போல ஏற்றுக் கொள்ளுதல் சாலாது. பிராமணர், பிராமணரல்லாதார் என எந்த ஆரியன் சொன்னாலும் அவனைத் தக்க விடை சொல்லாதவரையில் சும்மா விடுதல் கூடாது. பிராமணர் என்பவர் வேள்வி செய்தவராயும், வேத மோதியவராயும் நல்லொழுக்கமுடையவ ராயுமுள்ளவர் என வேதங் கூறுகிறது. அவ்விதச் செயல் இல்லாதவர் சூத்திரர் எனக் காணப்படுகிறது.

பெரும்பாலும் பிராமணன் என்று சொல்லிக் கொள்பவரெல்லாரும் தமிழ் மக்களிடத்தில் ஊழியஞ் செய்த கூலி பெற்றுப் பிழைப்பவரே யாவர். இத்தகையவர் சூத்திரரா? அல்லது உழவு தொழில் செய்து உத்தமமா யயாழுகும் வேளாளர் சூத்திரரா? வேதம் ஓதி யிருக்கின்றீரா? கேள்வி செய்திருக்கிறீரா? என்பன போன்ற கேள்விகளை யயல்லாம் கேட்டு அவர் வாயை அடக்குதலே தமிழர் கடனாகும்.

தமிழரும் நல்லொழுக்க முடையவராகவும், தமிழ்க்கல்வியை நன்கு பயின்றவராகவு மிருந்தால் ஆரியர் தம் முடைய சூழ்ச்சியை யடக்கிக் கொண்டு வந்த வழியைப் பார்த்துக் கொண்டு ஓட்டம் பிடிப்பார்கள்.

இதுவன்றிச் சும்மா தமிழர் படியாமலிருந்து கொண்டு அவரை யடக்குதல் பெருமதிதமல்ல. தமிழகத்திலுள்ள தமிழர் யாவரும் தமிழைக்கற்று வல்லவராக முன் வருவார்களாக. தமிழைப் புறக்கணித்தால் தமிழ் நூல்களில் கூறியுள்ள தனித்தமிழரது நாகரீகத்தை யறிய முடியாது பின்னும் ஆரியரால் ஏமாற்றவேபடுவோம். தமிழ் மக்கள் யாவரும் தளர்ச்சியின்றித் தமிழ் பயில்வாராக. மற்றும், கம்பர் ஒரு தனித்த தமிழ் வீரன் என்பதையும் நேயர்கள் மனத்தில் வைப்பாராக. தமிழரது நாகரிகத்தை உலகத்தில் நாட்ட வந்த நமது கம்ப நாட்டாரும் ஆரியருடைய கதையாகிய இராமாயணத்தை யயடுத்துக் கொண்டு அக்கதைத் தலைவனாகிய இராமனைத் தமிழ் இராமனாகவும், சீதையைத் தமிழ் சீதையாகவும், அனுமானைத் தமிழ் அனுமானாகவும் பிற உறுப்பினர் எல்லோரையும் தமிழராகவே வைத்துத் தமிழ் காவியச் சுவையையேற்றி யாவரும் போற்றுமாறு வைத்தனர்.

இச்சுவையைத் தமிழ் நூல்களை வரன்முறையிற்கற்ற தமிழறிஞர்களின் வாயிலாகக் கேட்டுணரற்பாலது. அன்றி ஆரியர் மூலமாக வுணர்தலால் தமிழ் வீரம் ததும்பாது. இவ்வாறே ஏனைய நூல்களையும் தமிழர் முகமாக அறிதல் வேண்டும். தமிழரைத் தலையயடுக்க வொட்டாது ஆரியர் செய்யும் பல சூழ்ச்சிகளில் இரண் டொன்று கூறி இக்கட்டுரையையை முடிப்பாம்.

ஆறுமுக நாவலரவர்கள் அச்சிட்டுள்ள திருக்குறட் பரிமேலழகருரையில் 110 /உம் திருக்குறட்குஎந்நன்றி கொன்றார்க்கும்என்ற குறளுரையின் கீழ் எடுத்துக் காட்டிய புறநானூற்றுச் செய்யுளில்குரவர்த்தப்பிய கொடுமையோர்க்கும்என்ற பாடம் காட்டப்பட்டுள்ளது. புறநானூறு பதித்த சாமிநாத ஐயரவர்கள்பார்ப்பார்த்தப்பிய கொடுமையோர்க்கும்எனத் திருத்திவிட்டதுடன் பாட பேதமுங் காட்டாது விட்டனர். பரிமேலழகர் மேற்கண்ட குறளுக்கு விளக்கஞ் செய்யப்புகுந்துபார்ப்பாரத்த புதல்என்று புகுத்திய ஆரியச் சூழ்ச்சியே இவர் திருத்தியதற்கும் காரணமாகும். இதனைக்குரவர்த்தப்பியஎனப் பாடங்கொண்டால் பொருட் சிறப்புண்மை அறிஞர்க்குப் புலனாகும். சிந்தாமணி 252 ஆம் பாட்டில் நச்சினார்க்கினியர் குரவராவார் அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தம்முன் என ஐவர் எனக் குறித்தது ஈண்டு பொருத்த முடைத்தாகும்.

அன்றி நிகண்டில்ஆரியர் - மிலேச்சர்என்றிருப்பதை அச்சிட்டவர் திருத்திவிட்டனரென்றும்அநாரியர்- மிலேச்சர்என்றே இருக்கவேண்டுமெனவும் சென்னையில் செய்த ஒரு விரிவுரையில் கூறினதாகப் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தமிழர் யாவரும் அறிந்ததொன்றாம்.

இவ்வாறு ஆரியர் தம் மணம் போனவாறு திருத்துதலைத் தமிழர் அறியாமலிருப்பதற்குக் காரணம் தமது தாய் மொழியாகிய தமிழைக் கைவிட்டு அன்னிய மொழியைப் பயின்று தொழில் முயற்சியிலிருந்து காலங் கழிப்பதேயாகும்.

 தமிழரது பணத்தைக் கொள்ளை கொள்ளையாகக் கொண்டு பழந்தமிழ் நூல்களை அச்சிட்டு ஒன்றிற்கொன்பது மடங்கு விலையுடன் நந்தமிழரிடத்திலேயே விற்று மேலும் பொருளீட்டித் தம்மினத்த வராகிய ஆரியரையே பாதுகாத்தலைக் கண்டும் தமிழர் யாவரும் விழியாது தூங்கிக் கொண்டிருத்தல் வருந்தத் தக்கதாகும்.

கும்பகோணத்தில் பரிசளித்த மேற்படி தம்பிரானும் ஆரியர் மந்திரத்தால் மயங்கித் தமிழ் கற்றுணர்ந்த தமிழ்ப் பெரு வீரர்கள் பல பேரிருக்கும் போது கூட அவ்வையரவர்களையே தலைமையாக இருக்கச் செய்தது வியப்பினும் வியப்பே. இத்தகைய ஐயரவர்களுக்குச் சில ஆண்டுகட்கு முன் மதுரைத் தமிழ் சங்கத்தார் பொற்கிழியயான்று வழங்கினர்.

 அவ்வமையத்து இவ்வையரவர்கள் தம்மினும் படித்த பெரியார் பலரிருக்கின்றனரெனச் சுட்டி ஆறேழு ஆரியர் பெயரையே கூறினர். இவ்வாறு கூறியதன் கருத்து பிறகு வழங்கும் பொற்கிழி களையும் அவ்வாரியருக்கே கொடுக்க வேண்டுமென்பதேயாகும். நிற்க, மதுரைத் தமிழ் சங்கத்திலிருந்து பதவி பெற்றவர் யாவரும் ஆரியரேயாவார். இவரால் தமிழ் வளருமா? பொற்கிழிக்குதவியவர் யாவரும் நமது தமிழ் மக்களேயாவர். ஆரியர் காசு அதில் அரைக் காசேனுமுண்டா?

மற்றும், சில வருடங்களுக்கு முன் காலஞ்சென்ற தமிழறிஞரேறாகிய அரசஞ் சண்முகனாரைப் பாண்டித் துரைத் தேவரவர்கள் அச்சங்கத்துத் தலைவராக விருத்துதற்கு ஆலோசித்த போது திரு.நாராயணைய்யங்கார், ரா.ராகவையங்கார், மு.ராகவையங்கார், சுந்தரேசையர் முதலிய ஆரியர் குழுவினரிற் பல கூடி அவரைப் பற்றிய சில பொய்மொழிகளைக் கூறி பாண்டியத்துரையை நம்பும்படி செய்து சண்முகனது ஆக்கத்தை அழித்தனர்.

கொல்லவும் வழி தேடினர். கொன்றும் விட்டனர். அந்தோ பரிதாபம்! மயூரகிரிக் கோவையை அச்சிட்டு பகரித்த சர்க்கரைப் புலவர்கள் பாண்டித்துரையிடம் சென்றிருந்த போது ரூபாய் ஒரு நூற்றுக்கு மேல் தரப் பொக்கி­தாரரிடம் உத்தரவிடப் பக்கத்திலருந்த நமது திரு. நாரயணையங்காரவர்கள் தொகைக்காக அவர்கள் வரவில்லையயனக் கூறிக் கொடாமற் றடுத்த செய்தியும் குறிப்பிடத்தக்கதாகும்.

 மற்றும் சேற்றூர் சுப்பிரமணியக் கவிராயரவர் களைப் பாணடித்துரையவர்கள் தமிழ் சங்கத்தில் சைவ நூற் பரிசோதகராக நியமித்த போது அவர்கள் வேலை ஒப்புக் கொள்ளும் சமயத்தில் ஓய்! நீர் யார்? உமக்கு இலகு வேலையில்லையயன, அவ்வமயம் அங்கு வேலை பார்த்துவந்த நமது ரா.ராக வையங்காரவர்கள் சீறியதைக் கூறக் கேட்ட துரையவர்கள் கடுஞ்சினங்கொண்டு தனித் தமிழ் வீரர்களையே சேதுபதி யன்னத்தைத் தின்றுகொண்டே எங்களுக்குத் தீங்கிழைத்தனையே யயன இன்னோரன்ன பல சீற்றப் பேச்சுக்களுக்காளாயின ரென்பதும் தமிழர் பலருக்கும் தெரியும்தமிழ் சங்கத்தில் வேலையிலிருந்த இன்னுஞ் சிலரைப் பொறாமை காரணமாக இவ்வாரியர்கள் அகற்றிய சூழ்ச்சியும் அறியத்தக்க தாகும்.
சிறுவேலை முதல் பெரிய வேலைவரையிலுள்ள எல்லாவற்றிலும் இவ் வாரியர் மானமிழந்து பல செய்கைகளால் உபகரித்துப் பெரிதும் பயனெய்தி வருவது டன் தமிழருக்கே பெரிதும் இன்னல் விளைவித்து வருகின்றனர். இவ்வாறு உள்ளூறு செய்துவரும் ஆரியர்களுக்கே தமிழ்ச் செல்வர்கள் பல வழியிலும்பாம்புக் குப் பால் வார்ப்பதுபோல நன்மை பல செய்வதும் விடமூறுவது போல இவர்கட்குக் கெட்ட எண்ணங்களே விருத்தியாகின்றன. பாம்பு என்பதன் வலித்தல் விகாரமன்றோ இப்பாப்புஎன்னும் சாதிப் பெயர்.

இப்பாம்புகளின் விடத்தால் மூர்ச்சித்துள்ள நமது காசிமடத் தலைவரவர்கள் இக்கட்டுரையாகிய மந்திரத்தால் விடந்தெளிந் தெழுந்து சாமிநாதையரவர்கள் சூழ்ச்சியால் இவ்வரு­த்தில் தேறிய சுப்பிரமணிய ஐயருக்குக் கொடுத்த பரிசே போல் சென்ற வருடத்தில் முதல் முதல் தேறிய முதல் மாணவர்களாகியுள்ள வித்வ சிங்கங்களாகிய சீகாழி அருணாசல தேசிகரவர்களுக்கும், சிதம்பரம் தண்டபாணி தேசிகரவர்களுக்கும் முறையே தனித்தனி ஆயிரம் ரூபாய் பரிசளித்து தமது மறச் செய்கையை அறச் செய்கையாக்குவிக்குமாறு இதனால் நன்கு அறிவிக்கப்படுகிறது.

தமிழருக்கு வேண்டும் கடமைகளை யயல்லாம் இனியாது அறிஞர்களாயுள்ள தனித்த தமிழருடனிருந்து ஆராய்ந்து செய்வார்களாக. தமிழரது செல்வம் அறநெறி யால் ஈட்டப்பட்டதேயாகலின் தமிழருக்கே பயன்படுமாறு செய்க. இவ்விருவருக்கும் பரிசளிக்கும் காலத்தைத் தமிழ் மக்களனைவரும் வெகு விரைவில் எதிர் பார்த் திருக்கிறார்கள். தனித்த தமிழ் சிங்கவேறுகளாகிய தமிழர் தலைமையின் கீழேயே அப்பரிசுகளை வழங்குக.

சாமிநாதையரவர்களும் இப்பொழுது தமது தேகம் தனித்த தமிழரது பெருஞ் சோற்றால் வளர்ந்தென்பதையும், வந்த பெருவாழ்வெல்லாம் தமிழ்ப் பெருமக்களா லேயே யயன்பதையும் சிறிது தனித்திருந்த சிந்தனைக்குக் கொணர்ந்து உடனே புறப்பட்டுத் திருப்பனைந்தாட்கு வந்து முன்னிலும் பல மந்திரங்களைக் கூறி அறிவுறுத்தி மேலே கண்ட இரண்டு தமிழருக்கும் பரிசு வாங்கித் தரும் தமது கடமையில் சிறிதும் சோர்விலராய் வாங்கித் தந்து தமது ஆரியச் சூழ்ச்சியினின்றும் விலகிய முறையைத் தமிழுலகம் ஏற்குமாறு உண்மையை செய்வார்களா? (குடிஅரசு, செப்டம்பர் 9, 1929). 


No comments: