Tuesday, December 31, 2019

காங்கிரஸ் தப்புப் பிரசாரத்திற்கு மறுப்பு : பொப்பிலி ராஜா அவர்கள் பிரசங்கம்


காங்கிரஸ் தப்புப் பிரசாரத்திற்கு மறுப்பு
பொப்பிலி ராஜா அவர்கள் பிரசங்கம்

நாட்டிற்கு ஜஸ்டிஸ் கட்சியார் செய்திருக்கும் அரிய சேவை
அக்டோபர் மாதம் 22  விசாகப்பட்டணம் ஜில்லாவில் மாரடம் என்னும் நகரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் சென்னை அரசாங்க முதல் மந்திரி கனம் பொப்பிலி ராஜா அவர்கள் செய்த பிரசங்கமாவது :-

தோழர்களே! ஜஸ்டிஸ் கட்சியானது, தான் ஏற்பட்ட 18 வரு­ காலத்திற்குள் பொது ஜனங்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்துகொண்டு வந்திருக்கிறது. இது இனிமேலும் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்யவும் ஏற்பாடுகள் செய்துகொண்டு இருக்கிறது. நான் அவற்றை யயல்லாம் உங்களுக்கு விவரித்துச் சொல்வதற்கு முன்பாக எங்கள் கட்சியானது இன்ன கொள்கைகளைக் கையாளுகிறதென்று உங்களுக்கு எடுத்துக் கூற ஆசைப்படுகிறேன். எங்கள் கொள்கைகளாவன :

1. சமாதானமுடையதும் சட்ட சம்மதமுடையதும் ஒழுங்கு முறைக்கு ஒத்ததும் ஆன எல்லா வழிகளாலும் எவ்வளவு சீக்கிரம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் ஒரு அங்கமாக இந்தியாவுக்கு சுயராஜ்யம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுயராஜ்யம் சம்பாதிக்க வேண்டியது.

2. பல திறப்பட்டனவாக இருக்கப்பட்ட மதத்தினர்களுக்குள்ளும் சமூகங் களுக்குள்ளும் ஒன்றுக்கொன்று ஒற்றுமையுடனும் நல்லணத்துடனும் இருக்கும்படி செய்ய வேண்டியது ; அதற்காக வேண்டிய, சகல பொது ஸ்தாபனங்களிலும் உத்தியோகங்களிலும் சகல மதத்தினர்களுக்கும் சகல சமூகங்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் இருக்கும்படி செய்து அவரவர்களுக்குரிய நலன்களையும் உரிமைகளையும் காப்பாற்ற வேண்டியது. அத்துடன், மக்களுக்குள் ஆங்காங்கு இருக்கின்ற தாழ்மை, ஏழ்மை ஆகியவற்றைப் போக்கிநிலைமைகளை உயர்த்தி- மக்களை முன்னுக்குக் கொண்டுவந்துமுடிவான பயனாய் சாதி வேற்றுமைகளை யயல்லாம் ஒழியும்படி செய்து மக்களையயல்லாம் ஒன்றாய் இருக்கும்படி வைப்பது.

3. சகல வகுப்பார்களின் கல்வியபிவிர்த்திக்காகவும், சமூக சமத்துவதற்திற்காக வும், பொருளாதார மேம்பாட்டிற்காவும், கைத்தொழில் வளர்ச்சிக்காகவும், விவசாயப் பெருக்கத்திற்காகவும், அரசியல் முன்னேற்றத்திற்காகவும் மேன்மேலும் பாடு படுவது.

4. தென்னிந்தியாவில் உள்ள ஜனங்களுக்கு எந்த ஒரு பொது வி­யத்தைப் பற்றியும் சரியானசெம்மையான அறிவு ஏற்படும்படி செய்து, நாட்டின் ஒவ்வொரு முக்கிய பொது விவகாரத்திலும், அவர்கள் தங்கள் அபிப்பிராயத்தை விளக்கமாய்த் தெரிவிக்கும்படி செய்தல் ; அதன் மேல் அவற்றைப் பின்பற்றி நடப்பது.

5. மேற் சொல்லியபடி நம் கட்சியின் கொள்கைகளை அனுபவத்தில் சாதித்துக் கொள்வதற்கு என்ன காரியங்கள் - என்ன முறைகளை அனுசரித்தால், தகுமானதா யும் வெற்றியளிக்கக் கூடிய தாயும் இருக்குமோ அவற்றையயல்லாம் அனுசரிப்பது.

தாழ்த்தப்பட்டார்க்கு சேவை

இந்தியாவிலேயே முதன் முதலாக ஜஸ்டிஸ் கட்சிதான், தாழ்த்தப்பட்டும், கொடுமைப்படுத்தப்பட்டும் இருக்கிற சாதியார்களையயல்லாம் அவர்களது தாழ்மை, கஷ்டம் என்பவற்றிலிருந்து விடுவித்து அவர்களை க்ஷேம அபிவிருத்தி அடையும்படி செய்விக்கப் பாடுபடத் தொடங்கிற்று. நாங்கள் அவ்விதம் பாடுபட்டுக் கொண்டு வருகை யில்காங்கிரஸ் கட்சியார் சும்மா நின்று கொண்டு, சுயராஜ்யம் வந்தால்தான் அவர்களுக்குத் தாங்கள் ஏதும் செய்ய முடியுமென்று மேடைப் பிரசங்கங்கள் செய்து விட்டுப் போகிறார்கள். நாம் என்ன சொல்லுகிறோமென்றால், அரசியல் முன் னேற்றம் ஏற்படுகிறபடி ஏற்பட்டும். ஆனால் அது பூராவும் கிடைத்து முடியும் வரைக்கும் ஏழை மக்களை தாழ்மையையும் வறுமையையும் அனுபவிக்கும்படி விட்டுவிட்டுப் பார்த்துக் கொண்டு சும்மா இராமல், அவர்கள் முன்னுக்கு வரக்கூடிய ஒவ்வொரு வழியையும் பின்பற்ற வேண்டும் என்பதே. இப்படி இவர்களை முன்னுக்குக்குக் கொண்டு வருவதில் நாம் மேலே இருக்கிறவர்ளை கீழே பிடித்துத் தள்ள வேண்டும் என்று சொல்ல வரவில்லை. ஆனால், கீழே இருக்கிறவர்களை மேலே தூக்கிக்கொண்டு வரவேண்டும் என்று சொல்லுகிறோம். குடியரசு என்றால் என்ன பொருள் எனில், ஜனங்களின் நன்மைக்காக-ஜனங்களுடைய அரசாங்கம் என்பதாகும். ஆதலால், நாம் இத்தகைய அரசியலைப் பெற வேண்டுமாகில், எந்த சாதியில்- எந்த சமூகத்தில் பிறந்த யாராயிருநதாலும் அவரையயல்லாம் நாம் நாட்டின் அரசாங்கத்திலுள்ள எப்படிப்பட்ட பதவியையும் அடைவதற்குண்டான சம சந்தர்ப்பத்தையும் செளகரியத்தை உடைத்தாயிருக்கும்படி செய்ய வேண்டும்.

 சுருங்கச் சொல்லவோமாகில், நம் நாட்டிலுள்ள எந்த ஒரு ஆசாமியும் முன்னுக்கு வருகிற வி­யத்தில், தன் பிறவி காரணமாக எந்த ஒரு இடைஞ்சலையும் தடங்கலை யும் அடையக் கூடாது. இன்றைக்குப் பொது மக்களின் பிரதிநிதித்துவம் விளங்குகிற ஸ்தானங்களிலெல்லாம் மக்களின் சமூகத்தில் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் காணப்படுகிறார்களென்றால் அது ஜஸ்டிஸ் கட்சியார் அரசியல் அதிகாரத்தை ஒப்புக்கொண்டு ஆட்சி செலுத்தி வருகிற தன்மையினாலும் அவர்களது பத்திரிகைகளாலும் அவர்களது பிரசார வேலையினாலும் விளைந்திருக்கிற பயலே.

ஜஸ்டிஸ் கட்சியின் சேவை

ஜஸ்டிஸ் கட்சியினால் நாட்டுக்கு விளைந்த நலன்கள் பல உண்டு என்று நான் வேறு சில இடத்தில் கூறியிருக்கிறேனானாலும், அவற்றை இந்த இடத்திலும் எடுத்துக் கூறும்படியாக நேர்கிறது. அதற்கு என்ன காரணமெனில், காங்கிரஸ்காரர்கள் சதா காலமும்அதிலும் தற்சமயம்மிக மும்முரமாக எங்களைத் திட்டுவதிலும், எங்கள் மேல் பழி சொல்லி எங்களுக்கு விரோதமாகத் தப்பான அபிப்பிராயத்தைப் பரவ வைப்பதிலும் பிரமாதமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதே, நாங்கள் ஒரு சமூகத்தாரின் (பார்ப்பனர்களின்) கட்டுப்பாடான எதிர்ப்புக் கிடையிலும் மக்களுக்கு நம்மாலான நன்மையைச் செய்வோம் என்று பதவி ஏற்கையில் நமக்கு முன்னொரு போதும் ஏற்பட்டில்லாத பெரும் பணத் தட்டு ஏற்பட்டுவிட்டது.

 ஆனால் கையிலுள்ள வருவாயைக் கொண்டு நம் கட்சியானது கிராம ஜனங்களின் க்ஷேமாயி விர்த்தியை கட்சித் திட்டத்தின் முதல்அம்சமாக வைத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் போக வர உள்ள சாதனத்தையும். வைத்திய வசதியையும் இலகுவில் கிடைக்கும்படி செய்திருக்கிறோம்.

கிராம வைத்திய சாலைகளையும் ஆங்காங்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கி றோம். முனிசிபாலிட்டி (நகர பரிபாலன சபை)களுக்கு தண்ணீர் கிடைப்பதற்கு நிலையான வசதிகள் உண்டுபண்ணிக் கொடுத்து வருகிறோம். பஞ்சாயத்து சபைகளுக்கும், இப்படிப்பட்ட வசதிகள் கிட்டும்படி செய்திருக்கிறோம். நாங்கள் சுகாதார இலாக்காவின் வேலையைப் பெருக்கி, விழா நாட்கள்சந்தை நாட்கள் ஆகிய இப்படிப்பட்ட காலங்களில் தொத்து வியாதி பரவாமல் தடுக்க எல்லா வித ஏற்பாடு களையும் நடத்துகிறோம்.

நில அடமான பேங்குகள் ஏற்படுத்தல், பயிர்ச் செலவில் அதிகப்படியான பயன் அடைவிக்கிறதற்கான மார்க்கங்களை ஜனங்களுக்கு கற்றுக் கொடுத்தல் ஆகிய நன்மைகளும் செய்கிறோம். விளைச்சலான பொருளைச் சேமித்து வைக்கக் களஞ்சியங்களும் கட்டிக் கொடுத்திருக்கிறோம். அதைக் காலம் பார்த்து நல்ல விலைக்கு விற்பதற்காகவும், வேண்டுங்கால் அவற்றின் மேல் அரசாங்கத்தார் கடன் கொடுப்பதற்காகவும், வசதிகளும், ஏற்பாடுகளும் நடத்திக் கொடுக்கிறோம். கூட்டுறவுச் சங்கங்களையும் அமைத்து அவற்றால் மக்கள் நன்மை அடையச் செய்திருக்கி றோம். கிராமத்தில் பலர் கடனாளிகளாய் - தமது சொத்துக்களைக் கடன்காரர்கள் வசம்விட்டுவிட்டு அவஸ்தைப்படுகிற நிலைமைகளைத் தடுத்து, அவர்களது கடன் பளுவைக் குறைக்க மார்க்கங்கள் செய்திருக்கிறோம். விவசாயிகள் கடன் சட்டம் என்ற ஒரு சட்டத்தை விரிவாக்கி அதிலும் கிராமத்தாரது கடன்கள் இலகுவில் ஒழிவதற் குண்டான மார்க்கங்களை அமைத்திருக்கிறோம். நில அடமான பேங்குகள் இல்லாத இடங்களில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வழக்கு விவகாரம் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில், அவ்விவகாரத்தைக் கோர்ட்டுகளுக்குக் கொண்டு போகாமல் ராசியாக்கமத்தியஸ்த ராசி சபைகள் அமைத்திருக்கிறோம். இத்தகைய மத்தியஸ்த ராசி சபைகளில், தற்சமயம் சில மட்டுமே அமைக்க முடிந்தவரையில் முடித்து விடலாம் என்று எண்ணியிருக்கிறோம்.

நாங்கள் சட்டசபையில் அரங்கேற்றி அமுலில் நடத்திக் கொண்டிருக்கிற ஹிந்து மத தர்ம பரிபாலன சட்டத்தினால், ஹிந்து மதக் கோவில்களும்  மத ஸ்தாபனங்களும் ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நாம் மாட்டு வண்டித் தீர்வையை எடுத்துவிட்டிருக்கிறோம். அதனால் விவசாயிகளுக்கு சங்கடம் தவிர்த்திருக்கிறோம். கிராமத்தைத் தொழில் வளர்வதற்கு உதவி செய்கிறோம். அதற்காக சட்டமும் செய்திருக்கிறோம்.

இந்நாட்டு சுதேச வைத்தியம் அபிவிருத்தியடைய வேண்டுமென்று இந்திய வைத்தியக் கல்விக் கழகம் நிறுவியுள்ளோம். நாட்டில் அகவிலை குறைந்துவிட்டதால் நிலவரியை எவ்வளவு குறைக்கலாமோ அவ்வளவு குறைக்க வேண்டுமென்று அரசாங்கத்துடன் நாங்கள் மன்றாடிக் கொண்டு இயன்றதைக் குறைத்துக் கொண்டு வருகிறோம். சமீபத்தில் அரசாங்கத்தார் நடத்திய ரீசெட்டில்மெண்டின் பயனாய், புதுவரி விதிப்பதை நிறுத்தி வைக்கும்படி செய்துவிட்டோம். ஜமீன்தார்களின் ஆளுகைக்குட்பட்ட இடங்களில் குடியானவர்கள் இலகுவாகத் தங்கள் பயிர்ச்செலவு வேலைகளை நடத்தவும் வீண் நிலங்கள் என்ற பகுப்பை மாற்றவும் நிலங்களை விற்று விடுதல் என்ற காரியத்தை இலேசாய் முடித்துவிடாமல் செய்யவும் நாங்கள் வழிகள் கோலியிருக்கிறோம். தானிய விலை குறைந்திருந்தால் அதற்குத் தகுந்தாற் போல் குத்தகை வீதத்தையும் குறைக்க வேண்டுமென்று கூட சட்டம் செய்திருக்கி றோம்.

இனாம் மசோதா

கடைசியாக நாம் இனாம் குடியானவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்று ஒரு சட்டம் கொண்டுவந்து அதைச் சட்டசபையில் நிறைவேற்றி வைத்திருக்கிற செய்தி உங்களுக்குத் தெரியும். இதனால் 50 இலட்சம் ஜனங்கள் சமாதானமாகவும் கவலையில்லாமலும் வாழ முடியும். இதில் கிட்டதட்ட 10 லட்சம் குடியானவர்களுக்கு வோட் அளிக்கும் உரிமையும் ஏற்படும். இதனால் வோட்டர்கள் தொகையும் விரிவடைந்திருக்கிறது. இந்தச் சட்டமானது கூடிய சீக்கிரம் வைஸ்ராயின் அங்கீகாரம் பெற்று அமுலுக்கு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். (இது, வைஸ்ராயின் அங்கீகாரம் பெற்றுவிட்டது. -ர்).


நாங்கள் மாகாண பொருளாதார கெளன்சிலையும் ஜில்லா கெளன்சில் களையும் தொடக்கம் செய்திருக்கிறோம். இவைகள் நாட்டில், கல்வியையும் பொருளாதாரத்தையும் விவசாயத்தையும் கைத் தொழிலையும் மேன்மேலும் சிறப்படையச் செய்யும். நான் குறிப்பிட்ட இந்த கெளன்சில்கள் பொது ஜன அபிவிர்த்திக்குண்டான எல்லா இலாக்காக்களுடனும் அரசாங்க உத்தியோகஸ்தரல் லாதவர்களுடனும் கலந்து மக்களுக்கு பல வழியிலும் நல்ல நிலைமையை எய்து விக்கும்.

தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவிக்கும் நன்மைகள்

இந்தியாவிலேயே ஜஸ்டிஸ் கட்சியார்தான் தாழ்த்தப்பட்டவர்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமென்கிற நோக்கத்தை தம்முடைய திட்டத்தில் முதலாவது அம்சமாகக் கொண்டவர்கள். இது உங்களுக்கு ஐயமறத் தெரிந்த செய்தி. இன்றைக்கு நாட்டிலுள்ள பொது ஜனப்பிரதிநிதித்துவ சபைகளிலெல்லாம் தாழ்த்தப்பட்டஒடுக்கப்பட்ட சமூகத்தார் வீற்றிருக்கும்படி ஏற்பட்டதே ஐஸ்டிஸ் கட்சியாரின் தீவிர வேலையினால்தான். அவர்களை நாங்கள் இன்னமும் எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வரப்போகிறோம்.


கடந்த சில வரு­ங்களில் அரசாங்கத்துக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களிலிருந்து 9908 மனைகள் வீடுகட்டிக் கொள்வதற்காக இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக் கின்றன. 11128 வீட்டு மனைகள் கவர்ண்மெண்டாரால் இவர்களுக்காக தயார் செய்யப்பட்டும் இருக்கின்றன.

லேபர் டிபார்ட்டுமெண்டார் இவர்களுக்காக ஒவ்வொரு வரு­மும் ஆங்காங்கு கிணறுகள் வெட்டிக் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் இவர்களுக்கு நிலங்கள் வாங்கப் பொது ஜனப் பண்டுகளிலிருந்து பாதியளவுக்கு பணம் தர உத்தேசித்திருக்கிறோம். அவர்களைக் கல்வியில் தேர்ச்சி பெறுவிக்க, அவர்களது மாணவர்களுக்கு உபசாரச் சம்பளங்களும் மற்ற வசதிகளும் வர வர அதிகமாக ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.

 கவர்ண்மெண்டாரின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவுப்படி அவர்களுக்கு சகல பதவிகளிலும் வீதாசாரம் கிடைத்தே தீரும். அவர்களுக்காக நாம் அரங்கேற்றி அமுல் நடத்தி வருகிற சட்டங்களின்படி எல்லா பொதுஸ்தலங்களிலும் அதாவது குளங்கள், கிணறுகள், பாட சாலைகள், கச்சேரிகள் ரஸ்தாக்கள் ஆகியவற்றிலெல்லாம் அவர்கள் புழங்குவதற்கு எவ்வித தடங்கலும் ஏற்படாதபடி தடுத்திருக்கிறோம்.

இன்னும் நாம் அனேக சட்டங்களை நிறைவேற்றி அவர்களுக்கு ஜனசமூகத்திடை பிறவி காரணமாக ஏற்படுகிற எவ்வித தங்குதடைகளும் இல்லாதபடி செய்யவும் போகிறோம்.

தாழ்த்தப்பட்டோரைக் காங்கிரஸ்காரர் ஏமாற்றியது

நாம் இவர்களுக்காக எவ்வளவோ காலமாக உழைத்துவருகிறதைக் கண்டு தான், சமீப காலத்திற்குமுன் காங்கிரஸ்காரர்கள் நாமும் அவ்விதம் செய்து ஐனங்களின் ஆதரவை அடையவேண்டுமென்று கருதித் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஹரிஜனம் என்ற பெயரைக் கொடுத்தழைத்துத் தாமும் நன்மை செய்யப் பாடுபடுவதாகச் சொல்லுகிறார்கள்.

காங்கிரஸ்காரர்கள் எங்களைப் போல் சமாதானமாகவும் அனுபவ சாத்திய மாகவும் ஆகக்கூடிய எந்த ஒரு அலுவலையும் செய்து தாழ்த்தப்பட்டவர் களுடைய நிலைமையை மேன்மைப்படுத்தி வந்தவர்களல்ல. அவர்கள் எடுத்த உடனேயே தாழ்த்தப்பட்ஒடுக்கப்பட்ட சமூகத்தார்களை ஏமாற்றி விட எண்ணினார்கள். கோவில் நுழைவையே கிடைப்பிப்பதாக காங்கிரஸ்காரர்கள் அவர்களுக்குச் சொன்னார்கள். அதற்காகச் சட்டம் செய்யப் போவதாகவும் பொய் சொன்னார்கள். இந்த வார்த்தையில் தாழ்த்தப்பட்ட சமூகத்துத் தலைவர்கள் நம்பிக்கை வைத்து விட்டார்கள். அப்படி நம்பிக்கை வைத்து விட்டார்கள். அப்படி நம்பிக்கை வைத்துப் பூனா பேக்ட்-ல் காந்தி முன்னிலையில் கையயழுத்துப் போட்டார்கள்.

இவ்வண்ணம் இவர்களிடம் கையயழுத்து வாங்கித் தங்கள் நோக்கத்தைப் பூர்த்தி செய்த கொண்ட பிற்பாடு தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதன் பயனாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரண்டுவித சங்கடங்கள் ஏற்பட்டுவிட்டன! அவர்கள் இரண்டு தடவை தேர்தலுக்கு நிற்க வேண்டி இருக்கிறது! கவர்ண்மெண்டார் இந்த பூனா பேக்டை யயாட்டி வகுப்புவாரி உரிமைத் திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்துவிட்டனர். இந்த மாறுதல் ஆனவுடன் காங்கிரஸ்காரர்கள் கோவில் நுழைவு மசோதாவை தற்சமயம் வேண்டாம் என்று வாபீஸ் வாங்கிக் கொண்டனர். என்ன மோசம் பார்த்தீர்களா! தாழ்த்தப்பட்டோர்களுக்கு காங்கிரஸ்காரர்கள் மேலும் இழைத்த தீங்கைக் கேளுங்கள்.

அவர்கள் ஹரிஜன நிதி என்று பெயர் கொடுத்துத் தாழ்த்தப்பட்ட வர்களுக்காக ஒரு நிதி பொது ஜனங்களிடமிருந்து வசூலித்தார்கள். வசூலித்தபின் அந்தப் பணத்தை தங்கள் கட்சியின் ஆதிக்கத்தையே பெருக்குவதற் காக ஏற்படுத்தப் பட்ட ஒரு சூழ்ச்சிக் கூட்டத்தின் நிர்வாக செலவுக்கு உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

ரஸ்தாக்கள் அபிவிருத்தி

இது நிற்க, நாங்கள் பத்து ஆண்டுத்திட்டமொன்று அமைத்திருக்கிறோம். அதன்படி இந்த மாகாணத்திலுள்ள எல்லா கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதிக்கான ரஸ்தாக்கள் போட்டு ஆகிவிடும். பாலங்கள் கூட வேண்டிய இடங் களுக்குப் பாலங்களும் கட்டி ஆகிவிடும். இத்திட்டத்திற்குரஸ்தா அபிவிர்த்திக்குரிய வைப்பன் திட்டம்என்று பெயர்.


வரப்போகிற சீர்திருத்தங்களின் பயன்

கூடிய சீக்கிரத்தில் நம் அரசியல் அமைப்பில் பெரிய மாறுதல்கள் ஏற்படப் போகின்றன. பூரணமான சுய ஆட்சி கிடைக்கப்போகிறது. மாகாணத்தின் ஒவ்வொரு இலாக்காவையும் - ஒவ்வொரு காரியத்தையும் ஜனப் பிரதிநிதியாக இருக்கக் கூடிய ஒவ்வொருவரே அமுல் நடத்திக் கொண்டிருக்கப் போகின்றார். அவ்விதம் நடத்துபவர் எவரும் சட்ட சபைக்கு உள்ளடங்கித்தான் இருக்க நேரும். ஆகவே நம்மை நாமேதான் ஆளப் போகிறோம். மத்திய கவர்ண்மெண்டில் அகில இந்திய ஐக்கிய அரசாங்கம் ஏற்படப் போகிறது. அதில் இந்திய சுதேச சமஸ்தானங்களும், தம் பங்கு வீதப்படி பிரதிநிதித்துவ உரிமையை அடையும். இடைக்காலம் என்று சொல்லப்படுகிற கொஞ்ச காலம், இந்தியப் பாதுகாப்பும் அந்நிய நாட்டு விவகாரங்களும் வைஸ்ராயின் கையில் இருக்கும். அவை மாற்றப்படாத இலாகாக்கள் ஆகும். மற்ற இலாகாக்களை பொது ஜனப் பிரதிநிதிகளே நிர்வகிப்பார்கள். இதனால் மத்திய கவர்ண்மெண்டில் பூரணமான பொறுப்பாட்சி கொடுக்கப்பட்டதாக இல்லை. இதை நாம் உணர்ந்திருக்கிறோம்.

 ஆயினும், இதுவரைக்கும் இருந்த இரட்டை ஆட்சியை விட இப்போது கிடைத்திருக்கிற  ஆட்சி எவ்வளவோ பங்கு மேலானாது. இதை என் அனுபவத்தினால் சொல்லுகிறதாக நினையுங்கள். கொடுக்கப்படுகிற சீர்திருத்தம் மத்திய கவர்ண்மெண்டில் சில வி­யங்களை வைஸ்ராயின் நேர் அதிகாரத்தில் இருக்கும்படி செய்கிறதானாலும், ஒழுங்கு முறைப்படி அரசியல் உரிமைகளுக்குப் போராடி வருகிற நாம் இப்போழுது கிடைக்கிற ஆட்சியை ஏற்று நடத்தினால் நாட்டுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்ய இயலும்

காங்கிரஸ் நிர்வாக ஊழல்கள்

ஆகவே இப்பொழுது வாக்காளர்கள், சட்ட வரம்புக்கு உட்பட்டு அனுபவ சாத்தியமான கொள்கைகளைச் சொல்லி டீக்களுக்குப் பாடுபடுகிற ஜஸ்டிஸ் கட்சியாராகிய எங்களுக்கே வோட் செய்து ஆதரவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பொது ஜனங்களுக்குக் காங்கிரஸ் கட்சியாரின் அழிவு வேலைத் திட்டங்கள் தெரியாததல்ல. கலகம் பண்ணிக் கொண்டு- எதைக் கொடுத்தாலும் மறுத்துத் தள்ளிக் கொண்டு - மக்களுக்கு ஒரு நன்மையும் செய்யாமல் இருக்கிற அவர்களுக்கு ஸ்தல ஸ்தாபன இலாகாக்களைக் கூட சரிவர நிர்வகிக்கத் தெரியாமல்  போனதோடு அவர்கள் நடத்தும் நிர்வாகம் மிக்க ஊழல் நிரம்பியதாயும், லஞ்சம் வழங்குதல் சர்வசாதாரணமானதாயும் தன் இனத்தையே ஆதரித்துக் கொண்டு மற்றோரைக் கைவிடும் பட்சபாதம், நிரம்பியதாயும் , ஏற்கனவே ஜஸ்டிஸ் கட்சியாரின்  கீழ் ஊழியஞ் செய்தவர்களின் பிழைப்பில் மண்ணள்ளிப் போடுவதாயும் அற்பச் செய்கைகளெல்லாம் நிறைந்ததாயும் இருக்கிறது. அவர்கள் இந்த ஸ்தலஸ்தாபனங் களைக் கைப்பற்றச் செய்த சூழ்ச்சிகளோ மகாகேவலமானவை.


காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

அவர்களின் தேர்தல் அறிக்கை ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாததாயும் அனுபவ சாத்தியமில்லாததாயும் இருக்கிறது. அவர்கள், இந்திய சட்டசபைத் தேர்தலில் வெற்றி கிடைத்தால் அரசியல் அமைக்கப் போவதாயும் வாக்களர்களிடம் சொல்லி, வோட் வாங்கியனதையயல்Vம் நினைக்கவே இல்லை.


அந்த வெற்றியினால் அவர்கள் நாட்டுக்குச் செய்த நன்மையும் ஒன்றுமே இல்லை. அவர்கள் இனி வெற்றி பெற்றாலும் நாட்டுக்கு ஏதும் நன்மை செய்யப் போவதாகக் காணோம். அவர்கள் வருகிற சீர்திருத்த அரசியலமைப்பை உடைக்கப் போவதாகத் தான் சொல்லுகிறார்கள். இப்படி உடைத்துத் தகர்க்கப் போகிறவர்கள் கராச்சி திட்டத்தை எவ்விதம் நடத்தப் போகிறார்களோ தெரியவில்லை. ஒரு திட்டபடி வேலை செய்ய வேண்டுமென்றால் பதவிகளை ஏற்று ஒழுங்காக ஊழியம் செய்தால் தானே முடியும். இந்திய நே­னல் காங்கிரஸ் தலைவரான ஜவஹர்லால் அவர்கள் காங்கிரஸ்கட்சியானது வர போகிற சீர்திருத்தத்தை உடைத்துதத்தான் எறியும் எனறு சொல்லிவிட்டார். காங்கிரஸ்காரர்கள் தங்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாதவர்கள், ஒருவரை ஒருவர் அழுத்தப்பார்க்கிறவர்கள், இந்த நிலைமை காரணமாகத் தான் அவர்கள் பதவியேற்றல் என்ற வி­யத்தைப் பின்னால் வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்துவிட்டார்கள். அவர்கள் இன்னது உங்களுக்குச் செய்யப் போகிறார்கள் என்று நீங்கள் ஒன்றும் தெரிந்துகொள்ளாமல் வோட்டுக் கொடுத்தல் வேண்டுமென்றும், ஆனால் அவர்கள் உங்களுக்கு ஏதும் கட்டுப்பட்டு நடக்க ஜவாப்தாரித்தனம் கொண்டில்லாமல், எங்கேயோ அவர்களுக்கு வேண்டியவர்களாக இருக்கிற யாரோ சிலருடைய கட்டளைகளின்படி நடக்க உத்தேசித்திருக்கிறார் என்றும் சொல்லுகிறார்கள். இது உலகத்தில் குடிஅரசு தத்துவம் உள்ள எங்காவது யாராவது சொல்லுவார்களா? என்ன விபரீதப் போக்கு! இதனால் காங்கிரஸ்காரர்கள் ஜனங்களை முட்டாள்கள் என்று கருதிவிட்டதாக ஏற்படவில்லையா? காங்கிரஸ் கட்சிக்கு எப்பொழுது ஒழுங்காக நடந்துகொள்ள வேண்டுமென்ற நோக்க மில்லையோ அப்பொழுது அவர்கள் சட்டசபைகளுக்கும் பிரவேசிக்கக்கூடாது. அவர்கள் ஒழுங்கு மீறி நடந்து இந்த கவர்ண்மெண்டை எந்த வழியில் அசைத்துவிட முடியும் என்று கேட்கிறேன்.

இவர்களுடைய ஒழுங்கு தப்பான பேச்சுவார்த்தை:

 கோட்பாடு-நடவடிக்கைகளினாலும் இவர்களுடைய கடன் மறுப்பு-சட்ட மறுப்பு- ஒத்துழையாமை ஆகிய தாறுமாறான செய்கைகளாலுமே பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியாவுக்கு வழங்குகிற சீர்திருத்தங்களில் பாதுகாப்பாக விதிகளை ஏற்படுத்தினார்கள். காங்கிரஸ்கார்கள் அரசியலை நடக்கவொட்டாமல் செய்ய நடவடிக்கைகள் அனுசரிக்கும்போது அந்தப் பாதுகாப்பு விதிகள் பிரயோகிக்கப்படும். கவர்னரே அந்தச் சமயத்தில் மாகாண ஆட்சியை தன் கையில் எடுத்துக் கொள்வார். ஆகவே, காங்கிரஸ்காரர் அரசாங்க வேலைகள் நடைபெற வொட்டாமல் செய்ய நடவடிக்கைகள் அனுசரிக்கும்போது அந்தப்பாதுகாப்பு விதிகள் பிரயோகிக்கப்படும். கவர்னரே அந்தச் சமயததில் மாகாண ஆட்சியை தன் கையில் எடுத்துக்கொள்வார். ஆகவே, காங்கிரஸ்காரர் அரசாங்க வேலைகள் நடைபெற வொட்டாமல் தடைகள் செய்வார் களேயானால், அப்பொழுது ஜனநாயக ஆட்சி என்பது ஒழிக்கப்பட்டுப் போய், யதேச்சாதிகார அதிபதிகளின் ஆட்சி ஏற்பட்டுப் போகும். நாம் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களான இரட்டையாட்சி ஏற்படுவதன் முன் நாம் எப்படியிருந்தோமோ அந்தப் பழைய நிலையை அடையும்படி ஆகிவிடும். காங்கிரஸ்காரர்களின் ஒத்துழையாமையும் சட்ட மறுப்பும் நம் நாட்டை படுத்திய பாடு கள் உங்களுக்குத் தெரியாததல்ல. அவர்களது திட்டமே அனபவ சாத்தியமில்லாதது. ஆனால் பகட்டு மிகுந்தது.

முடிவுரை

இந்த மாகாணத்தார் எப்பொழுதும் நிதான புத்திக்கும் ராஜ தந்திர ஞானத்திற்கும் பேர்போனவர்கள். ஆகையால் நான் உங்களிடம் என்ன நிச்சயமாக எதிர்பார்க்கிறேனென்றால், நீங்கள் ஜஸ்டிஸ் கட்சி அபேட்சர்களையே சட்டசபை களுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அவர்களே சட்டசபைகளுக்குப் பெரும்பாலோராக வர வேண்டும். நீங்கள் அவ்வண்ணம் செய்தால்தான் நாங்கள் எங்களது திட்டத்தை நிறைவேற்றி வைத்து, மேன்மேலும் ஆக்க வழிகளை நாட முடியும்.


நாங்கள் உங்களை வரவேண்டுமென்று கேட்டுக் கெண்டதற்கிணங்க நீங்கள் ஏராளமாக இங்கு கூடி பொறுத்திருந்து, என் பிரசங்கத்தைச் செவி சாய்த்துக் கேட்டதற்கு நான் உங்களுக்கு வந்தனம் செய்கிறேன். என்னுடைய தேர்தல் வட்டத்து ஜனங்களாகிய உங்ளைக் கண்டு பேசுதல் எனக்கு எப்பொழுதும் மிகவும் பிரியமானவொரு காரியம்.

 நீங்கள் இதுவரைக்கும் என்னிடம் நம்பிக்கை வைத்தது போல் இனி மேலும் நம்பிக்கை வைத்து, வோட் செய்து ஆதரித்து, நான் முக்கியமாக, இந்த ஜில்லாவுக்கும் - பொதுவாக இந்த மாகாணத்திற்கும்- ஊழியம் செய்யும்படியான சந்தர்ப்பம் தருவீர்கள் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன். உங்களுக்கெல்லாம் என் வந்தனம். நான் அமரப் போகுமுன், பொப்பிலி ஜில்லா போர்டின் தலைவராகிய மிஸ்டர் செலிகண்ண ஸ்ரீ ரங்கநாயகலு அவர்களுக்கும் இந்த மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்த மற்ற தலைவர்களுக்கும் மிகுந்த வந்தனம் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.(கரகோச­ம்).( குடிஅரசு, 1936 நவம்பர் 8).


No comments: