Tuesday, December 31, 2019

வர்ணாச்சிரமப் புரட்டு - (அலங்கை இரத்தினவேல்)


வர்ணாச்சிரமப் புரட்டு 
-(அலங்கை இரத்தினவேல்)

படித்த மக்களையும்பாமர மக்களையும், கண்ணிற் பொடி தூவி ஏமாற்றிப் பறிக்கும் பார்ப்பன சூழ்ச்சிகளிற் பிரதானமானது, வர்ணாச்சிரமப் பித்தலாட்டமே. நமது சமூகத்திலுள்ள மூடப்பழக்க வழக்கங்களை அதாவது பால்ய மணம், தீண்டாமை, ஜாதி வித்தியாசம் முதலான கொடுமைகளைஒழித்து, விதவா விவாகம், கலப்பு மணம், சமதர்மம் முதலான சீர்திருத்தங்களைப் பரந்த நோக்கத்துடன் செய்யும் சீர்திருத்தவாதிகளை வைதீகர்களும், சனாதனிகளும், வர்ணாச்சிரமிகளும் தாக்கி வசைமாரி பொழிகிறார்கள்.

வர்ணாச்சிரம தர்மங்கள் போச்சே! சனாதன தர்மங்கள் போச்சே!! ஜாதி குலம் போச்சே!! மதம் போச்சே!!! கடவுள் போச்சே!!! ! கலி காலம்; இன்னும் என்னென்ன நடக்குமோ? எனக் கதறுகிறார்கள்.

தோழர்களே! இவர்கள் கூப்பாடு போடும் வர்ணாச்சிரம தர்மங்களின் யோக்கியதை யைச் சற்று ஆராய்ந்து கவனித்தால்தான் உண்மை விளங்கும்.

வர்ணங்கள் நான்கு, ஆச்சிரமங்கள் நான்கு, பிரஹ்ம, சத்ரிய, வைசிய, சூத்ர என்பன நான்கும், வர்ணங்களாம். இவ்வாதி வர்ணத்தவர்கள் முறையே பிர்மாவின் முகம், தோள், தொடை, பாதங்களினின்றும் உதித்தவர்களாம், பிரம்மச்சார்ய, கிரகஸ்த, வானப்பிரஸ்த, சன்யாசம் என்பன நான்கும் ஆச்சிரமங்களாம் ; இவை மனித வாழ்வின் மாறுதல்களாம். இந்த வர்ணாச்சிரம தர்மங்கள் தற்போது என்ன நிலைமையில் இருக்கிறதென்பதையும், அவை நடைமுறையில் அனுஷ்டிக்கப் படுகிறதா? என்பதையும் குறித்து ஆராய்வோம்.

பிராம்மண தர்மம்

பார்ப்பனர் எனச் சொல்லிக் கொள்வோர், தாங்களே மேலான - உயர் முதல் ஜாதி- என்றும், பிரம்மாவின் சிரசில் வெடித்து வேதத்தோடே குதித்து வந்ததாயும், வேதங்களை ஓதவும் ஓதுவிக்கவும் தங்களுக்கே அதிகாரம் உண்டென்றும் சொல்லிக் கொள்ளுகின்றனர். ஆனால் தற்சமயம் பிராம்மண தர்மம் எப்படியுள்ள தென்று சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த வி­யமே.


ஓதல், ஓதுவித்தல், வேட்டல் வேட்பித்தல், ஈதல் ஏற்றல் எனும் அருவகைத் தொழில்களே பிராம்மணர் தர்மங்கள், தற்போது வேதம் ஓதுகிறார்களா? ஓதுவிக்கிறார்களா? அதுதான் இல்லை. ஆனால், ஓர் காலத்தில் மிலேச்ச பாஷை என்றொதுக்கிய ஆங்கிலக் கல்வியை ஓதுகிறார்கள். அரசாங்கத்தில் சேவிக் கின்றனர். ‘அதர்மம் சேவகாவிர்த்திபிறருக்கு சேவிப்பது கீழ்மையானது என்ற கொள்கை மறைந்தது. வக்கீல்களாகி கட்சிக்காரர்களுக்கு பொய்ப் பித்தலாட்டங் களை ஓதுவிக்கிறார்கள். இதுதான் பிராம்மண தர்மமோ?

யாகம் செய்தல், செய்வித்தல் தற்சமயம் கூட பூரி சங்கராச்சாரியார் கும்ப கோணத்தில் ஆடுகளின் பீஜத்தைப் பிசைந்து யாகம் செய்தார்களாம். வெட்கம்! வெட்கம்!! முன்பு, யாகப் புகை மேக மண்டலத்தை யளாவினதாம் ; இப்போது பார்ப்பனர்களின் சிகரெட் புகை வானத்தையளாவும் போலும் ஹோட்டல்களில் அரிசியை விற்காமல் அவித்து விற்கிறார்கள். . இதுவா பார்ப்பன தர்மம்.

ஈதல், ஏற்றல் என்பதில் ஈதல் இம்மியளவு கூட கிடையாது. பச்சைத் தண்ணீர் கூட பார்ப்பனர் அகத்தில் மற்றவனுக்குக் கிடைக்காது? ஏற்றலுக்கு மாத்திரம் அவர்கள் தயார். உத்தியோகம் ஏற்றல், பட்டம் ஏற்றல், பொருள் ஏற்றல் முதலான ஏற்றல் தர்மங்கள் தான் ஏராளமாக நடக்கின்றன. ! இந்த அநீதமும் உண்டா? ஜாதிகளில் முதல் ஜாதியான பிராம்மண தர்மம் இதுவா? அறுவகைத் தொழில்கள் எங்கே? அந்தண தர்மம் எங்கே?

முன்பு, இந்தியாவில் ஈஸ்ட் இந்தியக் கம்பெனியார் வர்த்தக நிமித்தம் வந்து நாடுகளைக் கைப்பற்றி ஆதிக்கத்துக்கு வந்த சமயத்தில், தங்கள் அரசாங்க நிர்வாகத்துக்கு சுதேசிகளைத் தேடினர். பார்ப்பனர்கள் சற்று புத்திக் கூர்மையும் ; கல்வியுமுற்றவர்களாதலால் அவர்களையே தங்கள் கம்பெனியில் சேர்க்கப் பிரியமுற்றனர். அப்பொழுது பார்ப்பனர்கள் எல்லாம் கூடிஅன்னிய நாட்டவரும் பிறமதஸ்தரும் வேறு பாஷைக்காரரும் நம் ஆசாரத்துக்கு விரோதமான மிலேச்சர் களாகிய கும்பினிக்காரர்களுக்கு தங்கள் வர்ணத்தவர்களில் யாரும் உத்தியோகஸ் தர்களாகவோ? குமாஸ்தாவாகவோ? துபா´யாகவோ சேரக் கூடாதென்றும் மீறி கும்பினியார்களுடன் சம்பந்தம் வைத்துக் கொள்பவர்கள் ஜாதிப் பிரஷ்டம் செய்யப் படுவார்கள்என்று தீர்மானித்தனர்.

 ஏராளமான சம்பளம் கொடுப்பதாக ஆசை காட்டினர். பொருளுக் காசைப்பட்டு இத் தீர்மானங்களை மீறி வர்ணாச்சிரமத்தை மீறி மதக் கட்டுப்பாட்டைக் கடந்து ஏராளமான பார்ப்பனர்கள் கும்பினிக்காரர்களுக்கு உத்தியோகஸ்தரு குமஸ்தாவும், துபா´யும் ஆகினர். இவர்களெல்லாம் அசல் பார்ப்பனர்களால் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டன். நாளாக நாளாக பிரஷ்டம் செய்யப் பட்டவ்கள் தொகை அதிகரித்தது. அவர்கள் செல்வாக்கும் அதிகாரமும் அதிகரிக்கவே எல்லா வைதீக பிராமணர்களும் பிரஷ்டமானவர் களுக்குள்ளேயே ஐக்கியமாகி விட்டார்கள்.

சுவாமி விவேகனாந்தாவின் இக் கூற்றுப்படி ஜல்லடை போட்டுச் சலித்தாலும் ஓர் அசல் பார்ப்பனர் கூட, தற்போது இந்தியாவில் கண்டுபிடிப்பது கஷ்டம்.

இன்னும், மற்றும் சாத்தாணிகள் செளராஷ்டிரர்கள், ஆச்சாரிகள், ஆசாரிகள் முதலான வகுப்பார்கள் தாங்களும் உயர்ந்த ஜாதி என்றும் பார்ப்பனர்களென்றும் கூறுகின்றனர். வர்ணாச்சிரம தர்மப் படி இவர்களில் யாரைப் பிராம்மண ரென்பது.

சத்திரிய தர்மம்

சத்திரியன் என்றால் சத்துருக்கனை ஹதம் செய்பவன், அரசன் என்பது எப்படி காலக் கிரமத்தில் பார்ப்பன தர்மம் அழிந்துபட்டதோ, அதற்கு முன்பே சத்ரிய தர்மமும் தலைகீழாய் விட்டது. அவர்கள் தொழில்களும் சீரழிந்து சிதைந்தது. படையாச்சி, பள்ளி, ராயர், ரெட்டி, வன்னியர், வள்ளுவர், கள்ளர், மறவர், நாயுடு, நாயக்கர், நாடார், பாணர் முதலான எல்லாரும் தங்களைச் சத்திரியர்களெனக் கூறிக் கொள்கின்றார்கள், வர்ணாச்சிரம தர்மப்படி யார் சத்திரியா? சத்திரிய தர்மம் எங்கே? என்று சிந்தித்துப் பாருங்கள்.


வைசிய தர்மம்

வேளாளர் தங்களைப் பூவைசியர் என்றும், நாட்டுக் கோட்டையார் தங்களைத் தன வைசியர் என்று, கோனார்கள் தங்களைக் கோவைசியர் எனவும், கோமுட்டி செட்டியார்கள் தங்களை ஆரிய வைசியர்கள் எனவும் கூறுகின்றனர். தவிர, வர்ணாச் சிரம தர்மப்படி தனதான்ய கொடுக்கல் வாங்கல் வியாபாரம் செய்பவர்கள் எல்லாம் வைசியர்களாவர்கள். அப்படிப் பார்க்கப்போனால் கப்பலேறி வர்த்தகம் செய்யும் கம்பெனியார் முதல் களத்துக்கடை விற்கும் கிழவி வரை எல்லாரும் வைசிய தர்மத்தை  நடத்தி வருகின்றனர். இவர்களில் யார் வைஸ்யர்? வைசிய தர்மங்கள் எங்கே?


சூத்திர தர்மம்

மேல்கண்ட மூன்று உயர் ஜாதியார் கட்கும் ஏவல் - அடிமைத் தொழில் - புரிவதே சூத்திர தர்மம், தற்போது சூத்திரர் எனச் சொல்லிக் கொள்வோர் எவருமிலர். ஆனால் பார்ப்பனர்கள் கிராமந்திரங்களில்மற்ற ஜாதி இந்துக்களை சூத்திரர் என்ற பாஷை யிலேதான் கூப்பிடுகின்றனர். மக்களுக்குள் விழிப் பேற்பட்டவுடனே - சூத்திரன் எனும் பதத்தின் அர்த்தம் தெரிந்தவுடனே - இப்பதம் தற்போது அனேகமாக மறைந்து விட்டது. பஞ்சமர்கள் என்பவர்களும் சூத்திரன் எனும் வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதில்லை. ஆதலால் சூத்திரன் என்று சொல்லிக் கொள்வோருமில்லை ; சூத்திர தர்மங்களும் இல்லை.


அன்பர்களே! இன்னும் இந்நான்கு வர்ணங்கள் தவிர அனுமலோம, பிரதிலோம, சங்கர, சண்டாள முதலான கலப்பு ஜாதிகளும், அக்கலப்பு ஜாதிகளுக்கும் கலப்பு ஜாதியாக நாலாயிரத்து நானூற்று நாற்பத்து நான்கு ஜாதிகளும் தோன்றிவிட்டன.

அய்யர் அய்யங்கார், பள்ளி படையாச்சி, செட்டி ரெட்டி, நாயுடு, நாடார், கள்ளர், பள்ளர், மறவர், குறவர், பறையர், சக்லியர் முதலான எண்ணிறந்த ஜாதி பேதங்கள் உண்டாகி, மதத்தின் பேரால்- வர்ணாச்சிரம தர்மத்தின் பேரால் - மனித சமூகத்தைக் கெடுத்து வருகிறது. ஜாதி பேதத்தால் எத்தனை சண்டை சச்சரவு, கலகம் கொலை முதலியன ஏற்படுகின்றன? மனிதனை மனிதன் சந்தித்தால் முதலில் ஜாதிப் பேய்தான் வந்து உறுமுகிறது. அந்தோ! இச்சாதி பேதங்கள் என்று ஒழியும்! அன்னானே நன்னாள்!!!

வேத காலத்திலேஅதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே -ஜனத் தொகை குறைந்துள்ள காலத்திலேஜனங்கள் நாகரீகமற்றவர்களாய்க் குடிசை களைப் பிடுங்கிக் கொண்டு காடு காடாய்த் திரிந்த காலத்திலே-அப்போது ஜன சுமுதாய ஒற்றுமைக்கு இவ்வர்ணங்கள் தேவையாக இருந்திருக்கலாம். தற்காலத் திலோ, இவைகள் தேவை இல்லை. இவ்வர்ண பேதங்கள் ஒழிவதே- ஜாதி குல பேதங்கள் ஓழிவதே -மத பேதங்கள் ஒழிவதே -நாட்டுக்கு நன்மை என  அறிஞர்கள் ஒழியும்வரை ஜாதி பேதங்கள் ஒழிய முடியாது. ஆதலால் வெறும் தோற்றலான - பித்தலாட்டமான - கொடுமையான-குருட்டு வழக்கமான வர்ணங்களை முதலில் ஒழிக்க முற்படுவோமாக. இனி ஆச்சிரமங்களை ஆராய்வோம்.

பிரமச்சாரிய ஆச்சிரமம்

பிரமச்சாரிய ஆச்சிரம நியமத்தின்படி, ஒரு பிரமச்சாரிய மாணவன் குருகுல ஆசிரமத்திலிருந்து கல்வி கற்று, தன் சுய ஊருக்குள் வராமலும், தாய் தந்தையரைப் பார்க்க வீட்டுக்குச் செல்லாமலும், தலைக்கு எண்ணை தேய்ந்து வாரிக் கொள்ளாமலும், சவரம் செய்து கொள்ளாமலும், வெற்றிலை பாக்கு முதலான வஸ்துக்களைப் போடாமலும், சந்தனம் சாந்து முதலான பரிமள வஸ்துக்களைப் பூசாமலும், பரஸ்திரீகளைப் பாராமலும், ஐயமேற்று உண்டு, குரு, குரு பத்தினி யிடத்தில் பணிவிடை புரிந்து அவரால் கற்பிக்கப்படுகிற நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், பதினெண் புராணம், அறுபத்து நாலு கலைக்யானம், இதிகாசம் முதலான சாஸ்திரங்களையும், வர்ண தர்மங்களையும் கற்றுணர்ந்து - மேதாவியாய் - குருகுல வாசமாயிருக்கதகுந்த பிராயம் வந்தவுடன் பெற்றோர்  வந்து அழைக்க, மாணாக்கன் பார்ப்பன குருவுக்கு குருதட்சணை சமர்ப்பித்து தனது ஊர் திரும்பி வரல் வேண்டுமாம்.


நேயர்களே! இவ்விதிப்படி-மற்ற வர்ணத்தவர்கள் கிடக்கட்டும் - முதல் வர்ணமான-வேதனின் முகத்தில் வெடித்துக் குதித்த குலமான- பார்ப்பனர்களாவது பிரமச்சாரிய விருதத்தை அனுஷ்டிக்கிறார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். வர்ணாச்சிரம சனாதனிகளென வாய்ப் பறையறையும் பார்ப்பனச் சிறார்களின் யோக்கியதை களைக் கண் கொண்டு பாருங்கள். முதலாவது குருகுலம் உண்டா? வர்ணாச்சிரமக் கல்வியுண்டா? நான்கு வேதங்கள் எப்படி இருக்கும் என்றாவது தெரியுமா? ஐந்து வயதிலா பள்ளி செல்கிறான்.

வாஸ்லைன், காமினியா ஆயில் தடவி சீவி விட்ட கிறாப் தலை; முக சவரம் செய்து மழு மழுவென கண்ணாடி போல் ஸ்னோ தேய்த்திலங்கும் முகம் ; சந்தன சாந்துப் பொட்டிட்ட நெற்றி ; அசோகா பாக்குடன் கலந்த ஜிண்டான் வாசம் கமழும் தாம்பூலம் தரித்த வாய் ; எலிபெண்ட், ஹிஸர், கோல்ட் பிளாக் ஸிகரெட் புகையும் நாசி ; கண்ணாடி அணிந்த கண்கள்; டிரெளசர், சட்டை, காலர், மேஜோடு, பூட்ஸ், அணிந்த தோற்றம் ; ஒய்யார நடை ; அழகிய இள மங்கையர் மேல் கடைக்கண் பார்வை ; பனிரெண்டு வயதுக்குள் பரஸ்திரி கமணம் ;தாசி வேசி முதலியன. பிஞ்சிலே பழுக்கிறான்.

தற்கால நவநாகரிக சிறுவர்களிடம் பண்டைய - அனேக ஆயிர ஆண்டுகளுக்கு முன் - காட்டுமிராண்டித் தன்மையில் இருந்த காலத்தில் - அனுஷ்டித்த - அனுஷ்டித்த முயன்ற - கொள்கையின் படி நடக்கச் சொன்னால் கண்டிப்பாக நாம் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதுதான்.

ஏட்டளவில்-வாயளவில் சொல்லிக் கொள்ளலாம். நடைமுறையில் இப்பிரமச்சாரிய விதி நடவாது. பிரமச்சாரியமென்பது பரம ஆச்சரியமாகவே இருக்கிறது. ஆதலால் பிரமச்சாரிய ஆச்சிரமமென்பது வெறும் புரட்டு. பண்டைய விதிகளின்படி நடந்தால் நாம் காட்டுமிராண்டி வாழ்வுக்கு திரும்ப வேண்டியதுதான். F.A., B.A., படிக்க முடியுமா? சைன்ஸ் ஆராய்ச்சி செய்ய முடியுமா? ஆகாயத்தில் பறக்க முடியுமா? வீட்டிலிருந்தே ஆயிரக்கணக்கான, மைல் களுக்கப்பால் பாடும்பாட்டைக் கேட்க முடியுமா? எலக்ட்ரிக் பவர் கண்டுபிடிக்க முடியுமா? தோழர்களே! சற்று சிந்தியுங்கள்!

கிரகஸ்தாச்சிரமம்

குருகுலம் ஆச்சிரமத்தில் பயின்ற மாணவனுக்கு 25 வயது பூர்த்தியானதும், அவனது பெற்றோர்கள் தங்குலத்திதித்த நற்குண நற்செய்கையுடைய ஓர் கண்ணிகையை - முன்பின் அறிமுகமில்லா ஓர் பெண்ணை மணம் புரிய பிரயத்தனம் செய்வார்கள். மாணவனோ தனக்குக் கல்யாணம் வேண்டாமென்று காசிக்குப் புறப்பட்டு தீர்த்த யாத்திரைக்குப்போவான். பெற்றோர்களும் மற்றோர்களும் அவனையழைத்து சமாதானம் செய்துஉன் குலம் - வம்சம் -விளங்க சந்ததிகளை உண்டு செய்யவே நீ மணம் முடித்து கிரகஸ்தாஸ்ரமத்தை நடத்த வேண்டும்என்று சொல்லி அவனுக்கு ஓர் பெண்ணை -தசவித பொருத்தம் பார்த்து - மணம் முடிப்பார்கள். தென் புலத்தார், தெய்வம், விருந்து இவர்களுக்கு திருப்தி செய்வித்து, தன்னையும் தன் குடும்பத்தை யும் காப்பதே இல்லற தர்மமாம். கிரகஸ்தன் தன் வர்ணத் தொழில்களால் நியாயமாகப் பொருள் சம்பாதிக்க வேண்டும். பின்பு,


தென்புலத்தார் அதாவது, இறந்து போனவர்களுக்காகபிதிர்களுக்காக - பிதிர் லோகத்துக்கு அனுப்ப - இவ்வுலகத்திலிருக்கும் தபால் பெட்டியாகிய- பார்ப்பனப் புரோகிதர்கள் மூலம் -கிரகஸ்தன் கஷ்டப்பட்டு ஈட்டிய பொருள்களை அவன் காலில் விழுந்து கொட்டிக் கொடுத்து- அனுப்புதல் எந்தப் பிதிருக்குத் திருப்தியோ?

தெய்வம்

கடவுள் பேரால் - தெய்வம் -சாமி என்று கோயில்களுக்குச் சென்று அங்குள்ள பார்ப்பன குருமார்களுக்கு - கிரகஸ்தன் கண்மூடித்தனமாக பொருள்களை  விரையம் செய்தலும், தேர் திருவிழா ஊர்வலம் முதலான பண்டிகைகள் மூலம் பார்ப்பனர்கள், கிரகஸ்தன் பொருளைக் கொள்கையடித்தலும், இதுவும் எந்த தெய்வத்துக்குப் பிரீதியோ?

விருந்து

பார்ப்பனர்களுக்கு இந்த இரு வகையிலும் கொடுத்து அழுத்து போக மீதியைக் கொண்டு சமைத்து சோம்பேறியாக - பிச்சைக்காரகளாக - சாமியார்களாக - பரதேசிகளாக -அதிதியாக வந்த தடியர்களுக்கு முதலில் அன்னம் படைத்தல் ; இது எந்த ஆத்மாவுக்குச் சம்மதமோ?


சுற்றம்

பின்பு தன்னை அண்டி சுற்றத்தார்களுக்கு இடுதல் ; அதன் பின்னர்தான் மீதியைத் தானும் தன்மனைவி மக்களும் புசிக்க வேண்டும். அதுவும் தான் சம்பாதிப்பது தனக்காகவல்லாமல் மேற்படி தென்புலத்தார் தெய்வம் விருந்து உற்றார் முதலானவர்களுக்காகவே, தான் கிரகஸ்தன் பொருள் ஈட்டி வாழ வேண்டுமாம். தனக் கென்று வாழ்ந்தால் அவனுக்கு நரகம்  உண்டாம் -பாவமாம்- நற்கதி இல்லையாம். மேல் கண்ட கிரகஸ்த விதிகளைப் பகுத்தறிவால் ஆராய்ந்தால் - இக்கட்டுப் பாடுகள் எல்லாம் பார்ப்பனர் பிழைக்கவே- பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் என்றும் சாஸ்வத அடிமைகளாயிருபபதற்காகவே செய்யப்பட்ட சூட்சம சூழ்ச்சி என்பது - ஆழ்ந்து ஆராய்ச்சி செய்வோர்களுக்குத் தான் - தெளிவாய் விளங்கும்.

மற்றும் இல்லற தர்மத்தின் படி ஓர் பெண்ணை வாழ்க்çத் துணைவியாகக் கொண்டு, இல்வாழ்க்கைகாமக், குரோத, லோப, மோக, மது, மாச்சர்ய, பஞ்சமாபாதகங்கள் இன்றி நல்வாழ்க்கையாக நடத்தல் வேண்டுமாம். புத்திர சந்தானத்துக்காகவே மனைவியிடம் கூடல் வேண்டுமாம்.

இந்த விதிகளையாவது- தற்போது கடவுள் உண்டென்று நம்பி, தெய்வத்துக்குப் பயந்து, வர்ணாச்சிரம தர்மத்தைப் பின்பற்றும் ஆஸ்திகர்கள் புத்திர சந்தானத்துக் காகவே பூவையரைப் புணர வேண்டுமெனில் - உலகில் விபசாரம் எது? கோவில் களில் சாமிக்காகப் பொட்டுக் கட்டிவிட்டு ஆஸ்திகர்கள் அனுபவிக்கும் தாசி வேசி ஏது? ஆடவர்கள் துன்மார்க்கத்தால் பெண்களை முன்னிட்டு நடக்கும் மோசம், கலகம், குத்து, வெட்டு, கொலை எது? பருவமடையாத இளங் கன்னியர்களைக் கலியாணம் செய்து, செயற்கை முறைகளால் புஷ்பவதியாகச் செய்து அடுத்தமாதமே சாந்தி முகூர்த்தம் செய்து பத்து வயதுக்குள் - படுகஷ்டத்துடனும், பரதவிப்பதுடனும்- தேவாங்குக்குட்டிபோல் பாலனைப் பெற்றெடுக்கச் செய்யும் பாதகச் செயல்கள் ஏது? வருஷா வரு­ம் பிள்ளைகளைப் பெற்றுப் பெற்ற மனம் சோர்ந்து தேகம் இளைத்து எலும்பும் தோலுமாய் எமனுலகுக்கு எட்டிப்பார்க்கும் - பரிதாபகரமான நிலைமை யிலுள்ள மனைவியை மாமிச இச்சைக்குட்படுத்தும் மகாமோசமான செய்கை ஏது? தன் மனையாளைத் தனி மனையிருத்திப் பிறன் மனைச் சேரும் பேதமை ஏது? கற்பகத் தடை முறைகளை அனுஷ்டிப்பது ஏது? அன்பர்களே! சற்று சிந்தியுங்கள்!!

தற்போதைய உலகில் இல்லற வாழ்க்கை நரக வாழ்க்கையாக இலங்கி வருகிறது. பொருளாதார மந்தத்தாலும், பணக்காரர்களின் கொடுமைகளாலும், மதவாதிகளின் மகாமோச ஏமாற்றங்களினாலும், வரிச்சுமைகளாலும், குடும்ப பாரதத்தாலும், ஒருவன் உழைக்க ஒன்பது பேர் குந்தியுண்ணும் நிலைமையாலும், நவநாகரிகப் பகட்டு இச்சைகளாலும் அந்தோ! கிரகஸ்தன் படும் அவஸ்தை சொல்லத்தரமன்று!!

இருக்க இடமில்லை, போதிய சம்பாத்யமில்லை. உண்ண உணவில்லை, உடுக்க உடையில்லை, தேக ஆரோக்கியமில்லை, மக்களுக்குக் கல்வி இல்லை, கொஞ்ச நஞ்ச சம்பாத்யத்தையும், மதம், கடவுள், புரோகிதன் என்னும் முதலைகள் விழுங்க வாயைத் திறந்தால், சம்சார சாகரத்தில் தத்தளிக்கும் கிரகஸ்தன் என் செய்வான் பாவம்!! அவன் கதி அதோ கதிதான்!! ஹே! வர்ணாச்சிரம உபதேசிகளே! உங்கள் வர்ணாச்சிரமப்படி இருகஸ்தாஸ்ரமம் நடைபெறுகிறதா?

வானப் பிரஸ்த ஆஸ்ரமம்

கிருகஸ்தாஸ்ரமத்தில் உழன்ற இல்லறவாசி. தனக்குப்பின் தன் மக்கள் குடும்ப பாரமேற்க வந்ததும்- அதாவது ஐம்பது வயதுக்கு மேல் இல் வாழ்வைத் துறந்து மனைவியுடன் காட்டுக்குச் சென்று ஐம்புலன்களையும் அடக்கித் தவம் செய்வதே வானப் பிரஸ்த ஆச்சிரமத்தின் நியமமாம்.


இந்த வானப்பிரஸ்த ஆச்ரமம் தற்போது வானத்துக்கே போயவிட்டது போலும். வர்ணாச்சிரம வாதிகளில் யார் ஐம்பது வயதுக்கு மேல் தவம் புரிய வனவாசம் சென்றிருக்கின்றனர் கூறுங்கள்!!?

காந்திஜீ, மாளவியாஜீ, இராஜாஜீ ஜீ, ஆனேஜீ, பாய்மரமானந்தர், கிருஷ்ண மாச்சாரியார், விஜயராகவாச்சாரியார், சர். சி.பி.ராமசாமி அய்யர், அல்லாடி, சத்திய மூர்த்தி முதலான - வர்ணாச்சிரமத்தை நிலை நாட்டும் தூண்கள்ஏன் வானப் பிரஸ்தாச்சிரமத்தைக் கைக் கொள்ளவில்லை.

ஐம்பது வயதுக்கு மேலும் உத்யோகம், பட்டம், பதவி, சட்டசபை, ஜில்லா போர்டு, காங்கிரஸ் முதலான துறைகளில் பொருள் ஈட்ட அவாவுறுகின்றனர். வாய் வர்ணாச்சிரமம் ; கை காசு சம்பாதித்தல் ; ! வர்ணாச்சிரம வாதிகளே!! நீங்கள் சொல்வதொன்று ; செய்வதொன்றா? உங்கள்  வர்ணாச்சிரமப்படி நீங்கள் நடந்து காட்டியல்லவா, பிறருக்கு வர்ணாச்சிரம தர்மங்களைப் போதிக்க வேண்டும். நீங்களே நடக்காவிட்டால் பின் யார் தான் நடப்பது, ஏமாந்த சோணகிரிகளான பார்ப்பன ரல்லாதாரா? ஒன்று நீங்கள் காட்டுக்கு ஓடுங்கள் ; இல்லையேல் வர்ணாச்சிரமம், சனாதர்மம் என்ற பேச்சையே எடுக்காதீர்கள். அந்த வர்ணாச்சிரமங்களைக் குழிவெட்டிப் புதையுங்கள். வர்ணாச்சிரமத்தின் பேரால் இனி, மற்ற பார்ப்பன ரல்லாதாரை ஏமாற்ற முடியாது.

சந்நியாச ஆச்சிரமம்

வானப்பிரஸ்த ஆச்சிரமத்தை கடைப்பிடித்தொழுகிய மனிதன் எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின், சந்யாசியாகி சற்குருவையடைந்து உபதேசம் பெற்று, சாதன சதுட்ய சம்பன்னனாய், சிரவண மனை நிதித்யா சன சீலனாய்தேகமுதல் அபிமானம் அணுவுமின்றி, திடமாகப் பரப்பிரஹ்மம் நானே என்று மோகமதாம் துணிவற்று பரமானந்தம் எப்பொழுது மிசைந்திடும் ஜீவன் முக்தநிலையடைந்து, அதுவே தானாய், தானே யதுவாய ஐக்கிய, அத்வைத நிலையடைந்து, தேக நிழுவுங் கால் விதேக முக்தியடைதல் வேண்டும். இதுவே சந்யச ஆச்சிரம விதி.


தோழர்களே! வானப்பிரஸ்த ஆச்சிரமத்தைக் கண்டு பயந்து ஓடிய வர்ணாச்சிரம வாதிகள் சந்யாசம் அடைவது சாத்தியமா? உலக ஆசாபாசாங்களை உதறித் தள்ளுவது சாத்தியமா? யோசித்துப் பாருங்கள்.

வர்ணாச்சிரம விதிகளைக் கடைப்பிடித்தொழுகி காலக்கிரமத்தில் விதேக முத்தி யடைந்த வர்ணாச்சிரமிகள் லட்சத்தில் ஒருவராவது உண்டா?

எல்லாம் வாய் வேதாந்தம் ; திண்ணை வைதீகம் ; குருட்டு வர்ணாச்சிரமம் ; நடைமுறையில் ஒன்றுக்கும் உதவாது. அனுஷ்டானத்தில் நடக்க இயலாத ஓர் முடிக்கட்டுப்பாடான வர்ணாச்சிரம தர்மங்களை ஏன் முதலைப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஏட்டில் உள்ளதை நாட்டிற்குச் சொல்லலாம் ; ஆனால் வீட்டிலும் முடியுமா? ’என்று, தன் ஆசை நாயகியிடம் ஓர் மத போதகன் கூறியது போல், ஏட்டளவில் பரம யோக்கியர்தான் ; செய்கையிலோ பரம அயோக்கியத்தனமாக மதவாதிகளும், ஆஸ்திகர்களும், வர்ணாச்சிரமிகளும், சனாதனிகளும் நடந்து கொள்ளுகிறார்கள்.

பண்டைய நாட்களில் - ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்- அக்கால நியதியின் படி ஏற்பட்ட ஒர் கொள்கையை -அனுபவத்துக்கு இயலாத ஒரு தர்மத்தை  ஒரு வகுப்பாரின் சுயநலத்துக்காகவே கட்டப்பட்ட ஓர் கட்டுப்பாட்டை ; மனித சமூகத்தின் ஒற்றுமைக்குழைக்கும் விசயத்தை ; மூட வர்ணாச்சிரமத்தை ஏன் இன்னும் வைத்திருக்க வேண்டும்.

ஆதலால் தோழர்களே! இளைஞர்களே!! விழியுங்கள். வர்ணாச்சிரமக் கோட்டையைத் தகர்த்தெறிய முன் வருவீர்களாக! (குடிஅரசு, 1935 ஏப்ரல் 28).


No comments: