Monday, December 23, 2019

இந்திய சமுகத்தில் சாதிய அமைப்புமுறை

இந்திய சமுகத்தில் சாதிய அமைப்புமுறை 

இந்தியச் சமூகத்தில் இந்துக்களின் வாழ்க்கையில் சாதியின் பங்கு முக்கியமானது. எனவே இந்திய சமுகத்தையோ, இந்து சமூகத்தையோ ஆய்வு செய்யும் போது சாதியின் கூறுகளை புறந்தள்ளிவிட முடியாது.
இவ்வுண்மைய உணர்ந்தே கல்வியாளர்கள் சாதியின் தோற்றம் குறித்து ஆய்வுசெய்யத் தொடங்கினர். அதில் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் பங்களிப்பு முதன்மையானது. வருணம்- சாதி என்ற இரண்டும் வெவ்வேறானவை- ஒரு கட்டத்தில் வருணம் சாதியாக மாற்றம் பெற்றுள்ளது என்பதை அம்பேத்கர் எடுத்துரைக்கிறார்.

இந்தியச் சாதிகளை புரிந்து கொள்ள விரும்பும் எவரும் வருணம் என்பதை பற்றி தெளிவு பெறாமல் புரிந்து கொள்ள முடியாது.

வருணம் என்பது சாதிகளாக வகைப்படுத்தப்படும் முன்னர் அது மக்களுக்குள் மாற்றிக் கொள்ளக்கூடிய, மாறிக் கொள்ளக் கூடிய ஒன்றாக இருந்திருக்கிறது. அதாவது செய்யும் தொழிலை மட்டும் அடிப்படையாக கொண்டிருந்திருக்கிறது. பிறப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.
ரிக் வேதத்தில் இடம்பெறும் முனிவர் ஒருவர் கவிஞராகவும், அவரது சகோதரர் மருத்துவராகவும், அவரது தாய் நெல் குத்தும் பெண்ணாகவும் இருந்துள்ளனர் (9:112-113).

வருணம் நான்கு வகைப்படும். அவை முறையே பிராமணர் - சத்திரியர் -வைசியர் -சூத்திரர் என அவை வழங்கப்பட்டன.

சத்வ (சத்துவம்),  ரஜஸ்(ராஜசம்), தாமஸ் (தாமசம்) என்ற முக்குணங்களை அடிப்படையாகக் கொண்ட முக்குணக் கோட்பாட்டை கொண்டுள்ளது வருணம்.

சத்துவ பண்புகள் உடையவர் பிராமணரெனவும், ராஜச குணமுடையவர் சத்திரியர் அல்லது வைசியர் என்றும் தாமச குணமுடையவர் சூத்திரர் எனவும் வகைப்பட்டனர்.

ஆனால் அம்பேத்கர் அவர்கள் வருணம் என்பதை பின்வருமாறு வகைப்படுத்துகிறார் - நான்கு வருணங்களின் தோற்றம் குறித்து ரிக் வேதத்தில் புரு­ சுக்தம் குறிப்பிடுகிறது. புரு­சுக்தத்தின் பதின் மூன்றாவது மந்திரம் பிரம்மனால் நான்கு வருணங்கள் படைக்கப்பட்டன என்பதை,
‘ப்ராஹமணன் இவருடைய முகமானான், கைகள் ­த்திரயனாகச் செய்யப்பட்டன. அப்பொழுது துடைகள் வைச்யனாக ஆயின. திருவடிகளிலிருந்து சூத்ரன் உண்டானான்’

என்று குறிப்பிடுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த நான்கு வருணங்களின் வேலைப் பிரிவினைகள் பின்வருமாறு வகுக்கப்பட்டன.

பிராமணர் - வேதம் ஓதுதல்
சத்திரியர் - நாட்டை ஆளுதல்
வைசியர் - செல்வம் ஈட்டுதல்
சூத்திரர் -ஏவல் புரிதல்

ஆனால் புரு­சுக்தம் ரிக் வேதத்தின் பிந்திய காலத்தில் சேர்க்கப்பட்ட பகுதி என்றும் அதில் நான்கு வருணங்களின் தோற்றத்தைக் குறிக்கும் சுலோகங்கள், புரு­சுக்தம் சேர்க்கப்பட்ட பிறகு புகுத்தப்பட்டவை என்றும் அம்பேத்கர் கூறுகிறார்.

வருணம் சாதியாக மாற்றமடைந்ததை அம்பேத்கர் விரிவாக ஆராய்கிறார்.
கி.மு.185 இல் புஷ்யமித்திரன் என்ற பார்ப்பனப் படைத் தளபதி மெளரிய பரம்பரையில் வந்த தன் மன்னனைக் கொன்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுகிறான். இதை ஒரு தனி மனிதனின் செயலாக அம்பேத்கர் பார்க்க வில்லை.

புஷ்யமித்ரனின் செயலை ‘பார்ப்பனியப் புரட்சி’ என்று அழைக்கிறார் அம்பேத்கர். புஷ்யமித்திரனைக் கருவியாகக் கொண்டு பார்ப்பனர்கள் பெற்ற வெற்றியை ஏழு தலைப்புகளில் பட்டியலிடுகிறார். இவற்றின் மைய இழையாக இருப்பது வருணம் எப்படி சாதியாக மாற்றப்பட்டது என்பதுதான். அதை அம்பேத்கர், ‘வருணதரும முறையைச் சாதியாக உருமாற்றம் செய்ததுதான் பார்ப்பனியம் தனது வெற்றிக்குப்பின் முதன்மையாக ஈடுபட்ட மிகப் பெரிய சுயநல நோக்குள்ள செயலாகும்’ என்கிறார்.

இம்மாற்றம் மூன்று காலக்கட்டங்களாக நிகழ்ந்து என்கிறார் அம்பேத்கர்.
முதல் கட்டத்தில், வருணம் ஒரு யுகம் அளவுக்கு நீடித்தது. அதாவது நான்கு ஆண்டுகள் வரை நீடித்தது. நான்கு ஆண்டுகள் கழித்து, ‘மன்வந்தரம்’ என்பது நிகழ்கிறது ( ஒருவருடைய வருணம் நான்கு ஆண்டு காலம் இருக்க வேண்டுமா அல்லது நீடிக்க வேண்டுமா என்பதை மன்வந்தரம் முடிவு செய்தது). இதன்படி ஒரு குழு நேர்காணல் செய்து, சிலருடைய வருணத்தை நீடித்தது. சிலருடைய வருணத்தை மாற்றியது. சிலருக்கு அது உயர்வாக அமையலாம். சிலருக்கு அது தாழ்வாக அமையலாம்.

இரண்டாவது கட்டத்தில் வருணத்தை மாற்றும் இடமாக குருகுலம் அமைகிறது. கல்வி முடித்தவுடன் உபநயனம் என்ற சடங்கு நடைபெறுகிறது. இதில் மாணவன் பெற்ற கல்வித் தகுதியின் அடிப்படையில் அவனுடைய வருணம்  முடிவு செய்யப்படுகிறது. அந்த வருணம் அவனது ஆயுட்காலம் வரை நீடிக்கிறது.

குருகுலக் குருவால் முடிவு செய்யப்பட்ட வருணம் ஆயுட் காலம் வரை நீடிப்பதை ஏற்க பிராமணியத்தால் இயலவில்லை.  இதை அம்பேத்கர் அவர்கள்,

 ‘இந்த முறையில், ஆசாரியர் ஒருவர் ஒரு பிராமணனின் குழந்தையைச் சூத்திரனாக இருப்பதற்குத்தான் தகுதியுடையவன் என்று அறிவிக்கக் கூடிய நிலை இருந்தது. இத்தகைய ஒரு முடிவு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதில் பிராமணியத்துக்கு இயல்பாகவே அக்கறை ஏற்பட்டது. வருணம் பரம்பரையாக வர வேண்டும் என்று அது விரும்பியது. வருணத்தை பரம்பரையாக வருவதாகச் செய்தால்தான் பார்ப்பனர்களின் குழந்தைகள் சூத்திரர்களாக அறிவிக்கப்படாமல் காப்பாற்ற முடியும்’

என்று என்று நினைத்தனர் என்று குறிப்பிட்டவர், முடிவாக, ‘வருணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை குருவிடமிருந்து எடுத்துவிட்டுத் தந்தையிடம் அதைக் கொடுத்ததன் மூலம் பார்ப்பனியம் இறுதியாக வருணத்தை சாதியாக மாற்றியது’ என்று வரையறுக்கிறார். இதுதான் மூன்றாவது கட்டமாகும்.

சரி, வருணத்தை சாதியாக மாற்றியதன் நோக்கம்தான் என்ன? அதையும் அம்பேத்கர்,

‘பிராமணர்களில் சிலருக்கு அவர்களுடைய சிறப்பியல்பு காரணமாகக் கிடைத்திருந்த உயர்ந்த அந்தஸ்துக்கு ஒவ்வொரு பிராமணனையும் அவன் எவ்வளவு இழிதகைமை கொண்டவனாக இருந்தாலும், உயர்த்தி வைக்க வேண்டும் என்பதே நோக்கம். பிராமண சமுதாயம் முழுவதையும் ஒருவர் கூட விடுபடாமல் உயர்ந்தோர் என்று ஆக்கும் முயற்சி இது
என்று விளக்கினார்.

‘அவர்ணர்கள்’ என்ற ஒரு பிரிவினர் ‘சண்டாளர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் நால் வருணத்திற்குள் ஆட்பட மாட்டார்கள். இவர்கள் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளானார்கள். இந்த பிரிவை உண்டாக்கியவன் மனு.
மனுவுக்கு முன்பே வருணங்கள் சாதிகளாக மாற்றமடைந்திருந்தாலும் தீண்டாமையை உருவாக்கியதில் மனுவின் பங்களிப்பு முதன்மையானது என்கிறார் அம்பேத்கர். சாதியை தாங்கிய நிற்கும் புனித நூலாக பார்ப்பனர்களால்  கருதப்படும் மனுதர்மத்தை  1927 டிசம்பரில் மனுதர்மத்தை எரித்தார் அம்பேத்கர்.


No comments: