Monday, December 23, 2019

கெளதம சன்னா அவர்கள் கலந்துரையாடல் 6.5.2017 நிகழ்ச்சியில் கவி ஆற்றிய உரை

கெளதம சன்னா அவர்கள் கலந்துரையாடல் 6.5.2017 நிகழ்ச்சியில் கவி ஆற்றிய உரை

இன்று புரட்சியாளர் அம்பேத்கார் அவர்களின் 58 ஆவது நினைவு நாளில் என்னுடைய வீர வணக்கத்தை செலுத்துகிறேன்.

எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் தலைவராக உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், வரலாறு மற்றும் சமூக அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர், சாகத்திய அகடெமி நிறுவனத்துக்காக அயோத்திதாசர் என்று நூலை எழுதிக் கொடுத்தவர், இட ஒதுக்கீட்டின் முல வரலாற்றை எடுத்தியம்பக் கூடிய அயோத்திதாசரின் கொடை என்ற நூலை எழுதியவர், மத மாற்ற தடைச் சட்டம் வரலாறும் விளைவுகளும் என்ற நூலை எழுதியவர், பண்டிதர் அயோத்திதாசரின் நூறாவது நினைவு நாளையயாட்டி வெளியிடப்பட்ட மலரை தொகுத்தவர் தோழர் கெளதம சன்னா....அவரை நான் அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளில் இரண்டு செய்திகளை குறிப்பிட விரும்புகிறேன்.

இது 1936  அக்டோபரில் வெளியான குடிஅரசு இதழ். இதில் டாக்டர் அம்பேத்கரின் தலைமைப் பிரசங்கம் என்ற பகுதியின் ஒரு பகுதி வெளியாகியிருக்கிறது. அதில், அம்பேத்கர் அவர்கள், புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான், போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய மாட்டான். இந்த அபிப்பிராயங்கள் இந்திய பிராமணர்களுக்கும் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்கிறார்.

மேலும் அவர், பிராமணனாகப் பிறந்தவன் சமூகப் புரட்சிக்காரனாயிருப்பான் என்று எதிர்ப்பார்ப்பது, ஒரு சந்தர்ப்பத்தில் தோழர் லெஸ்லீ ஸ்டீபன் கூறியது போல, நீலக் கண் உடைய குழந்தைகளையயல்லாம் கொன்றுவிட வேண்டுமென்று பிரிட்டிஷ் பார்லிமெண்ட் சட்டம் இயற்றும் என எதிர்பார்ப்பதற்கே ஒப்பாகும் என்கிறார்.

இன்னொன்றையும் அம்பேத்கர் மேற்கோள் காட்டுகிறார். அதாவது, சாதி ஒழிப்பு இயக்கத்துக்கு தலைமை வகித்க பிராமணர்கள் முன் வருவார்களா, மாட்டார்களா என்பது அவ்வளவு முக்கியமான பிரச்சனையாவென ஒருகால் நீங்கள் சொல்லக்கூடும். இவ்வாறு கூறுவோர் ஒரு சமூகத்திலுள்ள அறிவாளிகளுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்க முடியுமென்பதை அறியாதவர்களே ஆவர்....... அறிவாளிகள் மிகுந்த ஒரு சமூகம் நாட்டை ஆளாவிட்டாலும் மிக்க செல்வாக்குடையதாக இருக்குமென்பதை நீங்கள் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும்..... எந்த தேசத்திலும் பாமர மக்கள் சுயமாகச் சிந்திப்பதுமில்லை ; செயலாற்றுவதும் இல்லை...

இந்தியாவில் அறிவாளிகள் எல்லாம் பிராமணராயிருப்பதைப் பற்றி நீங்கள் வருந்தலாம். அறிவாளிகளும் பிராமணர்களும் ஒரே பொருளை குறிக்கும் இருவராயிருப்பதைப் பற்றியும் நீங்கள் சங்கப்படலாம். அறிவாளிகள் எல்லாம் பிராமணர்களாயிருப்பதையும் அவர்கள் தேச சேமத்தை முக்கியமாகக் கருதாமல் ஜாதி சேமத்தை முக்கியமாகக் கருதி உழைப்பதையும் பார்த்து நீங்கள் மனம் வருந்தலாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகிறார் அம்பேத்கர்.

இரண்டாவதாக இது 1935 பிப்பிரவரியில் வந்த குடிஅரசு. இதில் மோகனூரில் 2.2.1935 இல் நடைபெற்ற சேலம் ஜில்லா பள்ளர் சமூக மாநாட்டில்  பெரியார் பேசிய பேச்சு வெளியாகியிருக்கிறது. அதில் பெரியார் அவர்கள்,
நானோ ஜாதி மதம், அவற்றிற்கு ஆதாரமான கடவுள்கள் என்பவைகள் எல்லாம் ஒழிய வேண்டும் என்று சொல்லுகின்றவன். அப்பட்டிப்பட்டவன் இந்த சாதி மாநாட்டிற்கு எப்படி வரக்கூடும் என்று சிலர் கேட்கலாம்.
சாதி மதக் கொடுமைகளையும் அவற்றிற்கு ஆதாரமான கடவுள்களையும் புரட்டுகளையும் உங்களுக்கு விளக்கி அவ்வித கட்டுப்படாடுகளிலும் மூட நம்பிக்கைகளிலும் குருட்டு பழக்க வழக்கங்களிலும் இருந்து விடுபடப் செய்ய வேண்டும் என்கின்ற ஆசையின் பேரிலேயே வந்திருக்கிறேனே ஒழிய வேறில்லை என்கிறார்.

மேலும்,சாதி மதம்  வகுப்பு ஆகிய பிரிவுகள் எல்லாம் ஒழிந்து மக்கள் யாவரும் சமம் என்கிற நிலைமை சட்ட பூர்வமாய் ஏற்படும் வரை கஷ்டப்படும், இழிவுபடும் சாதி வகுப்புக்காரர்கள் தங்கள் தங்கள் சமூக மகா நாடுகளைக் கூட்டி கஷ்டங்களின்றும் இழிவுகளினின்றும் விடுபட வேண்டியது இன்றியமையாததாகும் என்கிறார்.

ஆனால் இப்போது கூட்டப்படுகின்ற மாநாடுகள் சாதியின் பெருமைகளையும் ஆண்ட பரம்பரை என்று சொல்லியும் சாதி கொடுமைகளைப் பற்றும் வகையிலும் சாதி வெறியை தூண்டுகின்ற வகையிலும் நடைபெறுகின்றன.
இந்த பேச்சியில் பெரியார் ஒரு செய்தியை பதிவு செய்கிறார், பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட போது டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கையயழுத்திட  காந்தியார் உண்ணா நிலை மேற்கொண்டு, கட்டாயப்படுத்திய போது, அய்ரோப்பிய சுற்றுப்பயணத்தில் இருந்த பெரியார் அவர்கள் அம்பேத்கருக்கு ஒரு தந்தி அனுப்புகிறார்.  இதை சொன்னால் நம்ப ஆளுங்க அதுக்கு எங்க ஆதாரம் என்று எல்லாம் கேட்ட காலம் உண்டு.

பெரியார் அவர்கள்,
நான் அய்ரோப்பாவிலிருந்து தோழர் அம்பேத்காருக்கு, 6,7 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரானது காந்தியாரின் உயிரை விட கேவலமானதல்ல ; காட்டுமிராண்டித்தனமான பூச்சாண்டிகட்குப் பயந்து சமூகத்தைக் கொலை செய்து விடாதீர்கள் என்று தந்தி கொடுத்திருந்தேன் என்று பேசுகிறார்.

இன்னொன்றையும் அந்த மாநாட்டில் பெரியார் சொல்லுகிறார். உங்கள் மகானத் தலைவர்களாக தோழர்கள் வீரையன், சிவராஜ் போன்றவர்களையும் இந்தியத் தலைவராக அம்பேத்கார் போன்றவர்களையும் நம்புங்கள் என்கிறார் என்பதைக் கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

No comments: