Monday, December 23, 2019

காந்தியும் ஜாதிப் பாகுபாடும்

காந்தியும் ஜாதிப் பாகுபாடும்

தோழர் அம்பத்கார் அவர்கள் இந்து மதத்தை விட்டுவிட வேண்டும் என்று சொன்னவுடன், காந்தியார் உள்பட பல இந்துமத பிரசாரகர்களுக்கு ஆத்திரம் பொங்கிவிட்டது. ஆனால், ஜாதி வித்தியாசம் தீண்டாமை ஆகிய வி­யங்களில் காநதியார் அபிப்பிராயத்தைப் பற்றி பிரபல சீர்திருத்தவாதியும், தேசீயவாதியும், காங்கிரஸ் தலைவருமான சர்.சி.சங்கர நாயர் சொல்லி இருப்பதைக் கவனித்துப் பாருங்கள். (அவர் சுயமரியாதைக்காரர் அல்ல).
தோழர் காந்தியார் எல்லாப் பொது மக்களுக்கும் கல்வி புகட்டப்படவேண்டியதில்லையயன்றும், அதிலும் ஆங்கிலக் கல்வி அறிவே ஒழிக்கப்பட வேண்டும் என்றும் விரும்புகிறார்.

 ஏன் அவர் அவ்வாறு கருதுகிறார் என்று பார்த்தால், கல்வி கற்றுவிடுவதினால் பொது மக்கள் தாங்கள் இருந்துவரும் வாழ்வில் அதிருப்தியடைந்து விடுவார்கள் என்பது ஒன்றேயாகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், அந்தந்த வகுப்பார் தங்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தற்கால நிலைமையோடு திருப்தியடைந்திருக்க வேண்டும் ‡ அதாவது அடிமை எப்பொழுதும் அடிமையாகவே இருக்க வேண்டும் என்பதாகும். அவர் அந்த முடிவிற்கு வந்ததற்குக் காரணம், தாம் வருணமுறைப்படி ஜாதி பாகுபாட்டை ஒப்புக் கொண்டுதேயாகும்.

மேலும் காந்தியார் ‘வருணாச்சிரமம் - ஜாதிப்பாகுபாடு என்பது மனித இயற்கைக்கே இயல்பானது என்றும், இந்துமதம் அவ்வியல்பான ஒரு குணத்தை சாஸ்திரீக முறைப்படி வகுத்திருக்கிறது என்றும், இவ்வெண்ணம் மனிதனுக்குப் பிறப்பிலிருந்தே தோன்றக் கூடியதாகும் என்றும், எவனும் தான் நினைத்த மாத்திரத்தில் தனது வருணத்தை (ஜாதியை) மாற்றிக் கொள்ளவோ அல்லது, நிர்ணயித்துக் கொள்ளவோ முடியாது என்றும், ஆத்மா வளர்ச்சியைக் கருதும் ஒவ்வொருவனும் சமபந்தி போஜனத்தையும் கலப்பு மணத்தையும் தடுக்க வேண்டும்’ என்றும் கூறியிருக்கிறார்.

‘பஞ்சமர்கள் என்றோ அல்லது மற்றும் அதுபோன்ற பலபேர்கள் என்றோ அல்லது வேறு எந்த நாமத்தால் அழைக்கப்பட்ட மக்களானாலும் சரியே, அவர்கள் யாவரும் தனியாகப் பிரிக்கப்பட்டு, உயர் ஜாதிக் காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிற மக்களுக்கு ஊழியஞ் செய்து உழல்வதே அவர்களின் கடமை என்பதாக அவர் நினைக்கிறார் போலும்!’

‘அவர் எழுதினலிருந்து நாம் அறியக்கிடப்பதாவது, இந்திய சரித்திரத்தைப் பற்றிய அறிவு அவருக்கு மிகக் குறைவு என்றோ அல்லது அவரது ஜீவியத்தின் முக்கிய பாகம் பிற நாடுகளில் வாழ்க்கையை நடத்தினவர் என்றோ அல்லது ஒரு வேளை இந்நாட்டில் ஜாதி பாகுபாட்டால் ஏற்பட்டுவரும் தீமைகளை தாம் அறியாமல் இருந்திருக்க வேண்டும் என்பதாகவோ அது காட்டுகிறது. அப்படி இல்லையானால் கீழே காணப்படுகிற வி­யங்களை அறிந்திருப்பார்.

1. இந்தியாவை அந்நியர் -அதாவது மகமதியர், ஆங்கிலேயர் முதலானவர்கள் ஜயித்து ஆளுவதற்கு இந்நாட்டில் உள்ள ஜாதி பாகுபாடே காரணமாகும். மேலும் அவர்கள் தங்களது ஆட்சியை செலுத்தி வருவதற்கும் தாழ்த்தப்பட்ட மக்களே காரணமாகும். அவர்களது உதவிதான் மிகவும் ஆதரவை அளித்து வரக் கூடியதாகும்.

2. இந்தியாவில் அதிகமான பேர் கிறிஸ்துவ மதத்திலும் மகமதிய மதத்திலும் மாறினதற்கு இந்தியாவில் உள்ள ஜாதிப் பிரிவினையேயாகும்.

3. மனித வர்க்கத்தின் இழிவிற்கே இதுதான் பொறுப்பாகும். பழைய காலத்திலிருந்த அடிமையின் இழிவோ அல்லது தற்காலத்தில் உள்ள அடிமையின் இழிவோ அல்லது வேறு எதுவானாலும் இத்தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எள்ளளவும் சமமாகாது.

4. இந்தியாவின் கண் உள்ள இந்துக்கள் - மகமதியர்கள், பிராமணர்கள்‡ பிராமணரல்லாதார்கள் என்று சொல்லக் கூடிய கட்சி பிரதி கட்சிகள் இருப்பதற்கும் இந்த ஜாதிப்பிரிவே காரணமாகும்.

5. சமூக முன்னேற்றத்திற்கோ அல்லது பொருளாதார முன்னேற்றத்திற்கோ ஆனாலும் சரியே இந்த ஜாதிப் பிரச்சனைதான் பெரும் தடையாய் இருக்கிறது.
ஆகவே ஏதோ அங்குமிங்குமுள்ள சில அற்பமான குறைகளைத் துடைத்துவிட்டு, முக்கியமான, ஜாதிப் பிரிவினைக்கே அஸ்திவாரமான கோட்பாடுகளையயல்லாம் தோழர் காந்தியார் அவ்வாறே ஆதரித்து வருகிறார்.

மெக்காலே பள்ளிக்கூடத்தில் 4 வது பாரம் படிக்கிற ஒரு பள்ளிப் பையன்கூட நம்ப முடியாத ஒரு பெரிய விசாரணையில் இறங்கியிருக்கிறார். அதாவது ஜாதிப் பாகுபாடுகளின் அவசியமும் அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மையும் என்பதைக் குறித்த ஜாதிப் பாகுபாடு இருந்துவர வேண்டும் என்பது பற்றியும் அதனால் லாபம் இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்க பெரியதொரு ஆராய்ச்சியில் இறங்கி இருக்கிறார்.

இந்த ஜாதிப் பாகுபாடு சம்மந்தமான வி­யங்களால் ஏற்படக்கூடிய தீமைகளையும் குறைவுகளையும் பற்றிய ஞானம் அவருக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அது சம்மந்தமான ஆதாரங்களையும் அவர் பார்த்திருக்கவில்லை என்றுதான் தெரிகிறது.

அன்றியும் அவர் ஜாதி பாகுபாட்டை ஆதரிப்பதானது உயர் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர் களுடைய ஆதரவை தேடிக் கொள்வதற்காகவே யாகும். ஏன் அவர்களுடைய ஆதரவைத் தேடுகிறார் என்றால், அவர்கள்தான் அவருடைய வேலைக்கு பணஉதவியளிக்கிறார்கள். அவர்கள் உதவாவிடில் அவருடைய திட்டமெல்லாம் பாழாய் போய்விடும்.

அவருடைய கோஷ்டியார்களிலே ஒருவர் இந்நாட்டில் இருந்த கலைகளையும் சாஸ்திரங்களையும் இந்த ஜாதிப் பிரிவே அழிந்துவிட்டது என்று கூறியிருக்கிறார். ‘இந்தியாவானது ஒரு காலத்தில் எல்லா கலைகளுக்கும் (விஞ்ஞான) சயன்சு முதலிய சாஸ்திரங்களுக்கும் பிறப்பிடமாயிருந்து புகழ்ப் பெற்றும் வந்தது. அத்தகைய ஒரு நாடு இப்பொழுத தாழ்த்தப்பட்டு, சுதந்திரமற்று, அடிமையாக்கப்பட்டு இருப்பதற்கும், மக்கள் சுதந்திரமற்று வாழ்வதற்கும் காரணமாய் இருந்து வருவது இந்த ஜாதி பாகுபாடு ஒழிந்து போகும் என்ற பயமேயாகும்’ என, ஹிந்து ரசாயண சாஸ்திரத்தைப் பற்றிய சரித்திரம் எழுதிய ஸர்.பி.சி.ரே அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நாட்டில் உயர்ந்த சர்க்கார் உத்தியோகத்திற்கு இன்றியமையாத கல்வி வேண்டாம் என்பதும், இந்தியர் கைத் தொழில் உற்பத்திக்கும் உலோக அபிவிருத்திக்கும் அவசியமான கல்வி தேவையில்லை என்பதும் தோழர் காந்தியாரின் அபிப்ராயம்.

இவ்வெண்ணத்திற்கேற்பவே காந்தியார் காசியில் உள்ள நே­னல் ஹிந்து சர்வ கலாசாலையையும் அலிகாரி லிருக்கும் மகமதிய சர்வகலாசாலையையும் ஒழிப்பதற்காக அரும்பாடுபட்டார். மேல்நாட்டு கல்வியையும் கீழ்நாட்டுக் கல்விçயையும் அக்கலாசாலைகளில் போதிக்கப்பட்டு வந்திருந்தது. காந்தியாருடைய பெருமுயற்சி யாவும் இவ்வி­யத்தில் நல்லதிர்ஷ்ட வசமாக சித்தியளிக்காமல் போய்விட்டது.

தோழர் காந்தியார் அவ்வாறு ஜாதி பாகுபாட்டை ஆதரித்தால் உயர்ந்த ஜாதியார்களின் ஆதரவும், ஹிந்து மதத்தின் முன்னுக்குப் பின் முரணான கொள்கைகளும் அவருக்கு பக்கபலமாயிருக்கின்றன. அவரும் அவருடைய சகாக்களும், மகமதியர்களும், மகமதியரல்லாதார்கள் என்ற பிரச்சனையை பலப்படுத்தி அவ்விரு வகுப்பாருக்குள்ளும் பெரிய பிளவுகளை உண்டுபண்ணியும் வருகிறார்கள். இதைவிட மேலாக இந்தியர்கள், ஆங்கிலேயர்கள் என்ற பிரச்சனையை உண்டாக்கி இவர்களுக்குள்ளும் தீராப் பகையையும், வெறுப்பையும், பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ஆகவே சீர்திருத்தவாதிகள் எனப்படுபவர்கள் யாவரும் சிறப்பாக இந்துப் பெண்கள் மகமதியப் பெண்கள் முதலானவர்களிடம் உள்ள குறைகளை நீக்கி அவர்களின் நிலையை உயர்த்தப்பாடுபட வேண்டும். அவர்களின் ஒத்துழைப்பும் முன்னேற்றமுமில்லாமல் இந்திய நாடானது ஒரு நாளும் நாகரீக தேசங்களேடு சமமாகப் பாவிக்க முடியாது என்பதாகும்.

தோழர் காந்தியார் மற்றொரு புறம், மகமதியர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வீண் எண்ணம் எல்லாம் ஆசைகளுக்கு இடங்கொடுக்கக் கூடியதென்றும், இந்து மதத்தில் உள்ள குலாச்சாரம் நியாயமானதென்றும் நினைக்கிறார். தற்காலத்தில் உள்ள பெண்களின் நிலைககுந் காரணமான ஜாதி அனுஷ்டானத்தையே நாம் ஆதரிக்க வேண்டும் என்றும் அதையே பின்பற்ற வேண்டும் என்றும் வற்புறுத்திக் கூறுகிறார்.

ஒடுக்கக் கூடிய அல்லது அடக்கி ஆளக் கூடிய சட்டங்களை ஆதரித்தும் வருகிறார். இச்சட்டங்கள் தான் தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேறவிடாமல் அடிமைப்படுத்தி, அறிவற்று, சுயமரியாதையற்று இருக்கச் செய்திருக்கிறது. நம்முடைய எதிரிகள் நமக்கு சுய ஆட்சி நடத்தும் சக்தியில்லை என்று சந்தேகிக்கச் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், நமக்குச் சுய ஆட்சி ‘’இந்தியாவிற்கு அளிப்பதை தாமதிக்கும்படியாகவும், அதற்கான நியாயங்களை அவர்கள் கூறுவதற்கான வசதிகளையும் தோழர் காந்தியர் ஏற்படுத்திவிட்டார். நான் முன் கூறியபடி, அவர் எல்லாத் துறைகளிலும் அதாவது சீர்திருத்தவாதிகள் முயல்கிற சகல மார்க்கங்களிலும், குல வித்தியாசத்தையும் வகுப்பு வித்தியாசத்தையும் கிளர்ச்சி செய்துகொண்டும் தேசம் பிற்போக்கடையும்படியான காரியங்களைச் செய்து கொண்டும் வந்திருக்கிறார்’.(குடிஅரசு 1935, அக்டோபர் 27)









No comments: