Tuesday, December 31, 2019

வடலூரில் பெரியார்

வடலூரில் பெரியார்
பெரியாரின் பண்பு நலன்
(1950 களில் நடைபெற்ற நிகழ்ச்சி)

தவத்திரு ஊரன் அடிகளார்

சென்னை இராமலிங்கர் பணி மன்றத்தின் 20 வது ஆண்டு வள்ளலார்‡மகாத்மா காந்தி விழாவில் தவத்திரு ஊரன் அடிகள் அவர்களின் பேச்சின் ஒரு பகுதி,
வடலூரில் சத்திய ஞான சபை 80 ஏக்கர் பெருவெளியில் அமைந்துள்ளது. இது நெய்வேலி, கடலூர் நெடுஞ்சாலையில் உள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து ஒரு பர்லாங் தூரம் உள்ளே சென்றால் ஞானசபையை அடைய முடியும். நெடுஞ் சாலையின் முகப்பில் சத்திய ஞானசபை என்று எழுதப்பட்ட ஒரு கட்டிட வளைவு உள்ளது. அந்த வளைவின் ஓரத்தில் ஒரு நாள் மாலை நேரத்தில் நானும் எனது நண்பர் ஒருவரும் நின்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு வேன் எங்கள் அருகே வந்து நின்றது. நாங்கள் இருவரும் வேனுக்கு உள்ளே யார் இருக்கிறார்கள் என்று பார்த்தோம். அப்போது தான் தெரிந்தது, வேனுக்கு உள்ளே பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் அமர்ந்திருந்தார்.
எனது நண்பருக்கு பெரியாரோடு நெருங்கிய தொடர்பு உண்டு. மாணவப் பருவத்தில் பெரியாரோடு எனக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. மாணவப் பருவத்துக்கு பிறகுதான் வள்ளலார் மீதும், சன்மார்க்கத்தின் மீதும் பற்றுக் கொண்டு சந்நியாசத்தை ஏற்றேன்.

நண்பரும் நானும் பெரியாருக்கு வணக்கம் சொன்னோம். அப்போது பெரியார் அவர்கள் வடலூர் ஞானசபையை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நான் நினைத்தேன். இப்பொழுதுதான் இந்தப் பக்கம் வர முடிந்தது; ஞான சபையை பார்த்து விடலாமே. நீங்கள் இருவரும் இப்பொழுதே வந்து எனக்கு ஞானசபையைக் காட்ட முடியுமா? என்று கேட்டார்.

நாங்களும் ஐயா அவர்களின் வேனிலேயே ஏறிக் கொண்டோம். உள்ளே ஒரு பர்லாங் தூரத்திற்கு வேன் பாதி தூரம் சென்றிருக்கும்; உடனே பெரியார் வேனை அங்கேயே நிறுத்தும்படி கூறினார். ஐயா, ஞானசபை நுழைவு வாயில் வரை வேனிலேயே செல்லலாம் என்றோம். அதற்கு ஐயா அவர்கள் வேண்டாம்  நடந்தே போகலாம் என்று சொல்லிக் கொண்டே வேனை விட்டு கீழே இறங்க  சென்றார். எங்களுடைய வற்புறத்தலின் பேரில் மீண்டும் வேனில் அமர்ந்தார். ஞானசபை நுழைவாயில் வரை வேன் சென்று நின்றது. நாங்கள் இறங்கி வாருங்கள் ஐயா என்று அழைத்துக் கொண்டே முன்னே சென்றோம்.

ஞான சபையின் முன் வாசலைக் கடந்து தான் உள்ளே செல்ல வேண்டும். எத்தனையோ அமைச்சர்களையும், பிரமுகர்களையும் , அதிகாரிகளையும் கோயில் நிர்வாகஸ்தர்கள் உள்ளே அழைத்துச் சென்றிருப்பார்கள். அதேபோல் பெரியார் அவர்களையும் உள்ளே வந்து ஜோதியை பார்க்கும்படி கேட்டோம். ஆனால் பெரியார் அவர்கள் எங்களை சைகையால் அழைத்து முன் வாசலில் எழுதி வைக்கப் பட்டிருக்கும் ஒரு வாசகத்தைச் சுட்டிக் காட்டினார்.
அதில், கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும் என்ற வாசகம் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. அதே சமயம் இதனை தர்மச் சாலையில் எழுதவில்லை.

நானும் நண்பரும் ஐயா அவர்களை எவ்வளவோ வற்புறுத்தியும் உள்ளே வர மறுத்து விட்டார். இப்படி எழுதி வைத்துள்ள போது அதனை மீறி நடக்கலாமா? என்று கேட்டார். முன் வாசலிலேயே நின்று கொண்டு சுற்றுப்புறத்தில் உள்ளவைகளைப் பார்த்தார். பிறகு ஐயா அவர்களை வேனில் ஏற்றி வழியனுப்பி வைத்தோம்.

எத்தனையோ அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் ஞான சபைக்குள் வந்திருக்கிறார்கள். அங்கு எழுதி வைக்கப்பட்டிருக்கும் வாசகத்தைப் பார்த்தார்களோ, என்னவோ? ஆனால் அந்த வார்த்தைகளைப் படித்து அதன்படி நடந்தவர் பெரியார் ஒருவர் தான். (இளந்தமிழன், சூலை 2009).

(குறிப்பு  / இந்த நிகழ்வு குறித்து நான் ஊரன் அடிகளைச் சந்தித்த போது கேட்டேன். புதுச்சேரியில் பாவலர் பண்ணை கடையில் அய்யா முனைவர் இரா. திருமுருகன் அவர்களைச் சந்திக்கச் சென்ற  போது அங்கு ஊரன் அடிகள் இருந்தார். அப்போது இந்நிகழ்வு குறித்து கேட்டேன். அப்போது அவர், நாங்கள் நான்கைந்து பேர் சாலை யோரத்தில் வளைவில் நின்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு வேன் வந்து எங்கள் அருகில் நின்றது. தந்தை பெரியார் அவர்கள் எங்களிடம் வள்ளலார் ஞான சபைக்கு வழி கேட்டார். நாங்கள் பெரியாரை அழைத்துச் சென்றோம். அப்போது இந்த நிகழ்வு நடந்தது என்று கூறினார். மிகுந்த மகிழ்ச்சி அடைந்த நான், அவருக்கு என்னுடைய பெரியார் பார்வை இதழ்த் தொகுப்பு நூலை வழங்கினேன்.)

No comments: