Tuesday, December 31, 2019

பிராமணரல்லாதாரின் முன்னோடித் தலைவர் சர்.பிட்டி.தியாகராயரின் குணாதிசியங்கள்

பிராமணரல்லாதாரின் முன்னோடித் தலைவர் சர்.பிட்டி.தியாகராயரின் குணாதிசியங்கள்

சர்.பி.தியாகராய செட்டியார் ஒரு வாழ்க்கை ஓவியம்

1925 இல் தியாகராயர் மறைந்த போது வெளிவந்தது

சென்ற நூற்றாண்டின் சென்னை நகரில் மிக மதிப்பிற்குரிய தலைவராகத் திகழ்ந்தவர் சர்.பி.தியாகராய செட்டியார். அன்று கவர்னருக்கு அடுத்த செல்வாக்கு மிக்கவராக வாழ்ந்தவர். தன்னைத்தேடி வந்த அமைச்சர் பதவியை மறுத்து, தனது துணைவர்களுக்கு பெற்றுத் தந்தவர்.

பிராமணரல்லாதாரின் முன்னோடித் தலைவராக விளங்கினார். என்றாலும் அவர் மீது காவல்துறை கண் வைத்திருந்தது.

ஏனெனில் அவர் மிகவும் துணிவாக செயல்பட்டார். வெளிப்படையாக நடந்து கொண்டார்.

ஆங்கிலேயர்களுக்கும் பெரும் பணக்காரர்களும் கூடும் காஸ்மாபாலிட்டன் கிளப் வளாகத்தில் பட்டவர்த்தனமாக தான் செய்யப் போவதைப் பற்றி அஞ்சாமல் சொல்வார்.

அதனால் அவரின் செயல்பாடுகள் அவரை எதிர்ப்பவர்களுக்கு முன்னதாகவே தெரிந்துவிடும். தன் மீது அளவற்ற நம்பிக்கைக் கொண்டிருந்தார். தனது முயற்சிகள் தோல்வி அடைந்தால் அவர் கலங்குவதில்லை. கலகல என்று நகைத்து அதை பொருட்படுத்தமாட்டார். எனக்கு வயதாகிவிட்டது. எனது எதிரிகள் என்னிலும் இளைஞர்கள், சாமர்த்தியமாக நடந்து கொண்டார்கள், போகட்டும் என்று விட்டுவிடுவார்.

தாம் என்ன செய்யப் போகின்றோம்  என்பதை அச்சமின்றி பலர் முன்னிலை யில் வெளிப்படுத்துவதால் அவரைக் கண்டு சூழ்ச்சிமிக்க பிராமணர்கள் வெறுத்தனர்.

பிராமணர்கள் எதிர்ப்பை எப்போதும் அவர் தனது மீது விழும் மலர் மாலை களாகக் கருதினார். ஆனால், ஆங்கில வியாபாரிகளும் அவருக்கு எதிரணியாக செயல்பட்டனர். அதுபற்றி அவர் சற்றுக் கவலைப்பட்டார்.

பி.தியாகராய செட்டியார் தென்னிந்திய வர்த்தக அமைப்பை தோற்றுவித்தார். தொழில் முனைவோர் மாநாட்டை சென்னையில் கூட்டினார். அதன் வரவேற்புக் குழுத் தலைவராக பணியாற்றினார். அவரது அறிவிப்புகள் அனைத்தும் மிக வெளிப்படையாக இருந்தன. அவர் யார் மீதும் வெறுப்பை காட்டியதில்லை. அவரது செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை எதிரியாக கருதினர்.

அவரை ஒரு பிராமணரல்லாதாரின் மிகப் பெரிய தலைவர் என்பதைவிட, ஐரோப்பிய வர்த்தகர்களின் நலன்களுக்கு எதிராக தென்னிந்திய வர்த்தக சபையின் தலைவராக அவர் விளங்கியதால் அஞ்சினர்.

அன்றிருந்த மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சில் என்ற சட்டமன்றத்தில், சென்னை மாநகராட்சியின் சார்பாக தலைவர் தியாகராயர் இடம் பெறுவதை தடுத்தனர். ஐரோப்பிய உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு எதிராக வாக்களித்தனர்.

பின்னர், அவர் பிராமணரல்லாதாரின் தலைவரான பின்னர், தங்களின் வர்த்தக நலன்களுக்கு எதிராக, இந்திய வர்த்தகர்களின் நலன்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதையும் மறந்தனர்.

ஐரோப்பியர்கள் ஒட்டு மொத்தமாக தியாகராயருக்கு வாக்களித்தனர். அன்றைய சென்னை மாநிலத்தின் ஒப்புயர்வற்ற தலைவராக விளங்கினார். பிரிட்டிஷ் ஆட்சியில் ஒரு மக்கள் தலைவராக விளங்கினார்.

தியாகராயரின் முதன்மையான பண்பு, அவரது எளிமை, குழந்தைப் போன்ற மனம், அவரைச் சுற்றியிருந்த அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளால் பல நேரங்களில் அவர் சிக்கல்களில் மாட்டிக் கொண்டார். நம்பத் தகாதவர்களை எட்டி வைக்கத் தவறினார். அவரது பெருந்தன்மையை எப்போதும் மறந்ததில்லை.

வாக்குறுதி என்று கொடுத்துவிட்டால், மோசமானவர்கள் என்று தெரிந்த பின்னரும், அதனை தயக்கமின்றி நிறைவேற்றுவார். இப்படி கண்டவர்களுக் கெல்லாம் உதவுவது பற்றி நண்பர்கள் அவரைக் கண்டிப்பதுண்டு. என்றாலும் உதவி என்று வந்துவிட்டால் மோசமானவர்களைக் கூட தனது காரில் ஏற்றிச் சென்று உதவி செய்வார்.

அவரது வீட்டைச் சுற்றி வாழ்ந்த மக்களுக்கு அவர் ஒரு மாமனிதர்.  அவரைப் பெரிதும் மதித்துப் போற்றினர். வணங்கினர். அஞ்சவும் செய்தனர்.
அவர்களைப் பொறுத்தவரை அவர் கவர்னரைவிடவும் பெரியவர். எனவே அவரை பின்பற்றினர். அவர் தங்களை காப்பாற்றுவார் என்ற தைரியத்தில் போலீஸ்காரர்களிடம் கூட மல்லுக்கு நிற்பார்கள்.

தனது பகுதி மக்களுக்கு உதவ கவர்னர் விருந்தைக் கூட புறக்கணித்தார்.
ஒரு மறக்க இயலாத நிகழ்ச்சி, இந்திய தேச பக்தன் (Indian Patriot)என்ற பத்திரிக்கை மீது வழக்குத் தொடரப்பட்டது. தனக்கு நேரடி சம்பந்தம் இல்லை யயன்றாலும் தனது பணத்தை ரூ 2000 க்கு மேல் செலவிட்டார்.

வழக்கைத் தொடுத்தவர், இவருக்கு எப்போதும் எதிரணியில் செயல்பட்ட டாக்டர் நாயர். இருவருக்கும் ஏழாம் பொருத்தம். பத்திரிக்கை ஆசிரியர் திவான் பகதூர் கருணாகரமேனன். இந்திய வர்த்தகர்களின் நலன்களை அந்தப் பத்திரிக்கை ஆதரித்ததால் கவர்னர் பென்ட்லன்ட் பிரபுவிற்கும் தியாகராயர் வேண்டாதவர் ஆனார்.

இந்தியாவில் பல இடங்களுக்கும் சென்று வந்தபின் சென்னை மக்களின் மதிப்பிற்குரிய தலைவராக விளங்கிய தியாகராயரை கவர்னரும் மதித்தார்.
பிராமணரல்லாதார் அமைப்பை பலரும் மதிக்க மறுத்தனர். அதன் தலைவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்தனர். எனினும் தியாகராயரை பெரிதும் மதித்துப் பாராட்டினர். அவர் கடுமையாகப் போராடிய போதும் அவரது எதிரணியில் இருந்த கஸ்தூரி ரங்கன் ஐயங்காரும், சீனிவாச ஐயங்காரும், தியாகராயரின் வெளிப்படைத் தன்மையை பெரிதும் மதித்தனர்.
தியாகராயர் எப்பொழுதும் பிராமணர்களை வெறுத்தவர் என்று சொல்ல முடியாது. பிராமணர்கள் என்பதற்காக அவர் யாரையும் வெறுக்காததால், அவருக்கு பார்ப்பன ரல்லாதவர்களின் தலைவர்களைவிட, பிராமணர்களில் அதிக நண்பர்கள் இருந்தனர். அவரது எதிரிகளில் பலர் பிராமணரல்லாதவர்களாகவே இருந்தனர். நேர்மையானவை, வெளிப்படையானவை அல்லாத எவற்றையும் அவர் ஏற்றுக் கொண்டதில்லை. அவர் களங்கமற்றவர். அவர் ஏழைகளின் ஆதரவாளர் என்ற வகையில் முன்னணியில் செயல்பட்டார்.

சமுதாய மாற்றங்களைப் பொறுத்தவரை அவர் பழமையைப் போற்றும் பிற்போக்கான மனம் படைத்திருந்தார். மிகப் பழமைவாதி. மாற்றங்களை எதிர்த்தவர். திருமண சீர்திருத்தத்திற்கான சட்ட முன்வரைவு விவாதிக்கப்பட்ட போது அதனை ‘விளக்குமாறு’ என்று கேவலமாக சாடினார். கண்மூடித்தனமான பழமைவாதியாக திகழ்ந்தார்.(இளந்தமிழன், பிப்ரவரி 2015). 

No comments: