Saturday, December 28, 2019

மலாக்கா, தம்பின் மற்றும் சிரம்பான் ஆகிய ஊர்களில் பெரியார் பேசிய இடங்களில் கள ஆய்வு (1.09.2019)

மலாக்கா, தம்பின் மற்றும் சிரம்பான் ஆகிய ஊர்களில் பெரியார் பேசிய இடங்களில் கள ஆய்வு (1.09.2019)

கடந்த இரண்டு வாரங்களாக இந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்று திட்டம் வகுத்திருந்தோம். அது குறித்து  நேற்று முடிவு செய்து மலேசியத் திராவிடர் கழக மேனாள் தேசியத் தலைவர் ரெ.சு. முத்தையா அவர்களுடன் தொடர்பு கொண்டு எங்கள் திட்டத்தை எடுத்துக் கூறி தாங்களும் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நண்பர் ஒருவர் வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளேன்.  எனவே அவரிடம் கூறிவிட்டு காலையில் உறுதி படுத்துகிறேன் என்றார். எனினும் நானும் அய்யா பரமசிவமும் காலையில் புறப்படுவது என்று முடிவு செய்திருந்தோம். இன்று (1.09.2109) காலை 5.45 மணிக்கு அய்யா ரெ.சு. அவர்கள் தன்னுடைய வருகையை உறுதிப்படுத்தினார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 காலை 8.30 மணிக்கு அய்யா பரமசிவம் தன்னுடைய மகிழுந்தில் நேராக நான் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்தார். நானும்  அவரும் நேராக காஜாங் செராஸ் பகுதியில் குடியிருக்கும் அய்யா ரெ.சு. முத்தையா வீட்டின் அருகில் சென்றோம். அய்யா ரெ.சு. வீட்டை அடையாளம் காணுவதில் சற்று தடுமாற்றம். அவரோடு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கேட்ட போது, நீங்கள் எங்கேஇருக்கிறீர்கள் என்று கேட்டார். முண்டகன்னி அம்மன் கோயில் அருகில் என்றோம். அங்கேயே நில்லுங்கள் நான் வருகிறேன் என்று கூறி ஐந்து நிமிடத்தில் வந்துசேர்ந்தார்.

ஏற்கனவே அய்யா ரெ.சு. அவர்கள், மலாக்கா மாநிலம் அலோர் காஜாவில் இருக்கும் மாந்தநேயத் திராவிடர் கழகப் பொதுச்செயலார் அன்பரசன் அவர்களிடம் தங்கள் வருகையைப் பற்றி தெரிவித்து இருந்தார். நாங்கள் மூவரும் நேராக அலோர் காஜா நோக்கிச் சென்றோம். அன்பரசன் அவர்கள் வீட்டில் நான் தயார் செய்துகொண்டு போய் இருந்த உப்புமாவை வைத்து சாப்பிட்டுவிட்டு, நேராக  அலோர் காஜாவில் 27.12.1954 இல் பெரியார் பேசிய திடலை பார்வையிட்டோம்.

பின்பு அங்கிருந்து மலாக்கா நோக்கி 11.45 பயணமானோம். மலாக்கா நெருங்க நெருங்க சாலை போக்குவரத்து நெரிசல்.  நகரப் பகுதியில் கடும் நெரிசல். பிற்பகல் 1.45 மணி ஆயிற்று. நேராக பிற்பகல் உணவு அருந்த ஸ்ரீகாவிரி செட்டி நாட்டு உணவகத்துக்குச் சென்றோம். 5 வகை காய்கறிகளுடன் உணவு தமிழ்நாட்டில் உள்ளது போல் பரிமாறப்பட்டது. கடையில் காந்தி, நேரு, திருவள்ளுவர், பாரதியார், இந்திராகாந்தி ஆகியோரின் படங்கள் மாட்டப்பட்டிருந்தது. சுவற்றில் தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கடிகாரம் மாற்றப்பட்டிருந்தது. அதில் தமிழ் மொழி நமது அடையாளம் என்று எழுதப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த உணவகத்தில் காலை 11 மணிக்கே நண்பகல் உணவு தயாராகிவிடும்.  அங்கு கடைவைத்துள்ள நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அனைவரும் முதலில் தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். அதன் பிறகே பொதுமக்கள் சாப்பிட வருவார்கள் என்ற அரிய செய்தியை நண்பர் அன்பரசன் தெரிவித்தார். அப்போது இந்த உணவகம் பின்புற தெருவில் இருந்ததாகவும் கூறினார். 

பிற்பகல் உணவை முடித்துக் கொண்டு நேராக முகாமையான சாலையான ஜலான் துக்கான் இமாஸ்(Jalan Tukang Emas)’வழியாக நடந்தே சென்றோம்.

‘Harmony Street’ என்று அழைக்கப்படுகிறது என்றார் நண்பர் அன்பரசன். ஏனென்றால் இந்த சாலையில்‘Kampung Kling Mosque’ என்ற மசூதியும் Cheng Hoon Teng என்ற சீனக் கோயிலும் 1781 இல் டச்சுக்காரர்கள் ஆட்சியில் தெய்வநாயகம் செட்டியார் அவர்களால் கட்டப்பட்ட ஸ்ரீ பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயிலும் உள்ளது. இக்கோயில் 15,879 சதுர அடியில் லாட் எண் 62. Town Area XIU இல் உள்ளது.

மலாக்காவில் நாட்டுக்கோட்டை செட்டியார் அந்த காலத்தில் வைத்திருந்த அடகுக் கடைகள் வழி நெடுக காணப்பட்டன. கடைகளின் வெளிப்புற முகப்புகளில் லெட்சுமி படங்கள் மாட்டப்பட்டிருந்தன. நேராக நாட்டுக் கோட்டை செட்டியார்கள் கட்டிருந்த பிள்ளையார் கோயிலைக் கண்டோம். ‘Hang Jebat’s Tomb’ என்ற இஸ்லாமிய கல்லறையைக் கண்டோம். நேராக பழைய இஸ்லாமிய மசூதியான ‘Kampung Kling Mosque’க்குச் சென்றோம். உள்ளே சென்று பதிவேட்டில் கையயாப்பம் இட்டோம். பின்பு அங்கிருந்து நடந்து மலாக்கா கோட்டைப் பகுதிக்குச் சென்றோம்.

பின்பு 1929 இல் பெரியார் பேசிய ‘St. Francis School’ பள்ளிக்குச் சென்றோம்.

அங்கிருந்த பாதுகாப்பு ஊழியரிடம் எங்கள் நோக்கத்தை விளக்கினோம். எங்களை நேராக பள்ளியின் திடலுக்கு அழைத்துச் சென்று காட்டினார். பின்பு அங்கு இருந்த பள்ளி மண்டபத்தைக் கண்டோம். பள்ளி மண்டபத்தில் பெரியார் பேசியதாகக் குறிப்பு குடிஅரசு 2.2.1930 இதழில் ,

‘(30.12.1929) அங்கு மலாக்கா சேர்ந்ததும் பொது மக்களால் எதிர் கொண்டழைக்கப்பட்டு திரு. கே.பி. கேசவ மேனன் அவர்கள் வீட்டில் ஜாகை செய்தார்கள். அன்று பகல் உணவு முடிந்ததும் திருவாளர்கள் இராமசாமியார், நாகம்மாள், இராமநாதன் ஆகியவர்கள் அங்கு மருத்துவகுல சகோதரர் ஒருவரின் சுயமரியாதை திருமணத்திற்கு சென்று திரு. அய்யாரு அவர்களால் மணம் நடத்தி வைத்து, ஒரு சொற்பொழிவு நடத்தி மண மக்களுடன் புகைப்படமெடுத்து மணம் முடித்துவிட்டு, பிறகு மாலை 5 மணிக்கு திரு. கே.பி. கேசவ மேனன் அவர்கள் வீட்டிலிருந்து மேளவாத்தியங்களுடன் ஊர்வலமாக மலாக்கா பிரான்சிஸ் ஸ்கூல் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

அக் கூட்டத்திற்கு பெண்களும் ஆண்களுமாக ஐயாயிரம் பேர்கள் வரை வந்திருந்தார்கள். அதற்கு அவ்வூர் பிரபல வியாபாரியும் செல்வந்தருமான கனம் ஜனாப் என்.என்.பிச்சை ஜே.பி. அவர்கள் தலைமை வகித்தார்கள்.

மலாக்கா இந்திய சங்கத்தாரால் ஒரு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டிருக்கப்பட்டிருக்கிறது. 

இதையயல்லாம் முடித்துவிட்டு மலாக்காவை விட்டு புறப்படும் போது மணி 4.45 ஆகிவிட்டது. பிறகு மீண்டும் அலோர் காஜாவை நோக்கி திரும்பினோம்.

  வழியில் நாட்டுக்கோட்டை சமுகத்தாரின் நிர்வாகத்தில் உள்ள பழைய கோயிலான சன்னியாசி ஆலயத்திற்குச் சென்றோம். சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்த வந்த ஒரு சாமியார், ஒரு சிறு குடிசை கட்டி, சிவலிங்கத்தை வைத்து வழிபட்டு வந்ததாகவும். அதன் பின் நாட்டுக்கோட்டைச் சமுகத்தார் . அதில் முருகனை வைத்து ஆலயத்தை பெரிய அளவில் கட்டி தங்கள் நிர்வாகத்தில் நடத்தி வருகின்றார்கள்.
அன்பரசன் வீட்டிற்கு வரும் போது மணி 5.45 ஆகிவிட்டது.

அன்பரசனின் துணைவியார் குளம்பி கொடுத்தார். அருந்திவிட்டு அங்கிருந்து தம்பின் நோக்கிப் பயணமானோம்.

 அங்கேயிருந்து பிள்ளையார் கோயில் முன் இருந்த திடலில் பெரியார் 31.12.1929 இல் பேசியதாகவும், கூட்டம் முடிந்து இரவு உணவுக்குப் பிறகு  நிலவு வெளிச்சம் இருந்ததால் பங்களாவின் முன் இருந்து மரத்தடி யின் கீழ் பெரியாரும் அவருடைய தோழர்களும் உட்கார்ந்திருந்த போது  அருகில் உள்ள தோட்டங்களிலிருந்து திரளமான மக்களும் பெண்களும் திரண்டு வந்து பெரியாரைச் சந்தித்ததாகவும் அதில் ஒரு வயதான அம்மையார் தன் மகளுடன் வந்து பெரியாரைச் சந்தித்து, தன் மகளுக்கு திருமணமாகி அய்ந்து ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் இன்னும் அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றும் சாமி தாங்கள் தான் அருள் வழங்க வேண்டும் என்று கேட்டதாகவும் பெரியாரும் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்ததாகவும் குடிஅரசு இதழ் தெரிவிக்கிறது.

அந்த பிள்ளையார் கோவிலைச் சென்று பார்த்தோம். கோயில் தலைவர் கோவிந்தன் அவர்களையும், அண்ணாமலை அவர்களையும் சந்தித்து திடல் குறித்துக் கேட்டோம். அவர்களால் இடத்தை உறுதிப்படுத்த இயலவில்லை. ஆனால் கோயில் பின்பிறம் திடல் இருந்தது. முன்புறம் பெரிதாக, விரிவாக்கம் செய்து சாலை ஓரம் வரை கட்டியிருந்தார்கள்.  எனவே இரண்டு பகுதிகளையும் படம் பிடித்துக் கொண்டோம்.

இந்த நிகழ்வு குறித்து,

‘திரு. கே.பி. கேசவமேனன் வீட்டில் விருந்து உண்டு 31.12.29 நாள் காலை ஆகாரமும் நடந்த பிறகு புகைப்படமெடுக்கப்பட்டது. தம்பனிலிருந்து அழைத்துப் போக வந்தவர்களால் திரு.இராமசாமியாரும் கோஷ்டியாரும் கார்களில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். தம்பனில் சுயமரியாதை கோஷ்டி யாரின் வருகையை முன்னிட்டு, ஊர் முழுவதும் கொடிகளாலும் தோரணங் களாலும் வாழை கமுகளாலும் வளைவுகளாலும் அலங்கரித்து இருந்தது. ஊர் பொது மக்களால் கூட்டமாக எதிர்கொண்டு மேளவாத்தியங்களுடன் ஊர்வலமாக நகரத்தார் கடை ஜாகைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு பகல் விருந்து நடந்ததும் பல பெரியார்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு நாலரை மணிக்கு புஷ்பங்களாலும் கொடிகளாலும் தழைகளாலும் அலங்கரிக் கப்பட்ட மோட்டார் வண்டியில் திருவாளர்கள் இராமசாமியார், அவரது மனைவியார், இராமநாதன் ஆகியவர்களை உட்கார வைத்து மேள வாத்தியங்களுடன் பெருத்த கூட்டமாக அரை மைல் தூரமுள்ள அவ்வூர் பிள்ளையார் கோவிலுக்கு முன்னுள்ள மைதானத்திற்கு அழைத்துப் போனார்கள்.....’

‘எல்லோரும் ஜாகைக்குச் சென்று சாப்பிட்ட பிறகு நல்ல நிலவு  இருந்ததால் வெளியில் நாற்காலி போட்டு வேடிக்கையாக பேசிக் கொண்டிருக்கும் போது, தோட்டக்காரர்கள் பலர் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் வந்து, தாங்கள் இப்போதுதான் சமாச்சாரம் கேட்டு 4,5 மைலிருந்து வந்ததாகச் சொல்லி, வரிசையாக விழுந்து கும்பிட ஆரம்பித்தார்கள். அப்படிச் செய்யக் கூடாதென்று தடுத்து அவர்கள் சுக துக்கத்தைக் கேட்டு அவர்களுக்கு சில புத்திமதிகள் சொல்லிக் கொண்டிருக்கையில் ஒரு நடுத்தர வயதுடைய பெண் தனது இளம் வயது பெண்ணைக் கையில் பிடித்துக் கொண்டு அதற்குக் கல்யாணமாகி 5 வரு­மாகிறது என்றும், குழந்தை பிறக்க வில்லை யயன்றும் சொல்லி, திடீரென்று விழுந்து கும்பிட்டு ஒரு குழந்தைக்கு உத்திரவு கொடுக்க வேண்டும் என்று வெகு பக்தியுடன் வரம் கேட்கின்றவளைப் போல் கேட்டாள். 

அங்குள்ளவர்கள் சிரித்தார்கள். திரு. இராமசாமியார் தனக்குக் கல்யாண மாகி 35 வரு­மாயிற்றென்றும், தனக்கே குழந்தை இல்லை என்றும் சொன்னவுடன்  திரு. இராமசாமியார் கோஷ்டியும் அங்குள்ளவர்களும் வயிறு குலுங்கச் சிரித்து, உங்கள் பிரச்சாரத்தின் பலன் பார்த்தீர்களா? என்றும் பரிகாசம் செய்தார்கள். திரு.இராமசாமியார் இந்து மதம் இம்மாதிரி மக்களை ஆக்கிவிட்டதென்றும், இந்த எண்ணம் போகச் செய்வது கஷ்டமானாலும் அடுத்த தலைமுறையில் அடியோடு மறைந்து போகும் என்றும் சொல்லி அந்தப் பெண்களுக்கும்  உங்களுக்கு இப்போது பிள்ளை ஆசை வேண்டா மென்றும் 4,5 வரு­ம் பொறுத்து ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தை மாத்திரம் பெற்றுக் கொண்ட அப்புறம் நிறுத்தி விடு என்றும் பரிகாசமாய் சொன்னார். அந்தப் பெண் அதை ஒரு தெய்வ வாக்காகவே நினைத்து, சாமி உத்தரவு அப்படியே ஆகட்டும் என்று சொன்னாள்.  பிறகு இப்படி கேட்பது அர்த்தமற்றதென்றும் அப்படிப்பட்ட சக்தி என்பது பொய் என்றும் சொல்லி அவர்களுக்கு நன்றாய் பதியும்படி செய்தார்’ என்று குடிஅரசு, பிப்ரவரி 2, 1930 இதழில் பதிவாகியிருக்கிறது.

வழக்கம் போல அய்யா ரெ.சு. அவர்கள் தன்னுடைய கருத்துகளையும், பெரியார் பயணம்குறித்த செய்திகளையும் தெரிவித்தார். அவர் பொதுச் செயலாளராக இருந்த காலத்தில் இந்த பகுதிகளில் மோட்டாரில் சுற்றித் திரிந்து, பெரியார் பேசிய இடங்களைப் பார்த்ததையும், அய்யா ஆனைமுத்து அவர்களைக் அழைத்துக் கொண்டு கோலாலம்பூரிலிருந்து, பினாங்கு வரை சென்று பெரியார் பேசிய இடங்களைக் காட்டியதையும், ஆசிரியர் வீரமணி அவர்கள் தயாரிப்பில் உருவான பெரியார் திரைப்படம் எடுக்கப்பட்ட போது, பெரியார் படக் குழுவினருடனும், இயக்குனர் ஞானசேகரன் ஆகியோருடனும் இந்த பகுதிகளுக்குச் சென்று சூட்டிங் செய்யப்பட்டதையும் நினைவு கூர்ந்தார்.
இதே போன்று 2011 பிப்ரவரியில் நான் சிங்கப்பூரிலிருந்து வந்த போது, அய்யா கோவிந்தசாமி துணையுடன் ரெ.சு. முத்தையா அவர்கள் என்னை அழைத்துச் சென்று தைப்பிங், பட்டவொர்த்து, பினாங்கு ஆகிய ஊர்களில் பெரியார் பேசிய இடங்களைக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு அங்கிருந்து நேராக சிரம்பான் நகரத்திற்குச் சென்று அங்கு பெரியார் பேசிய நகராண்மைக் கழக மண்பத்தைப் பார்த்துவிட்டு புறப்பட்டோம். இது குறித்து குடிஅரசு பிப்ரவரி 9, 1930 இதழில்,

‘மறுநாள்(1.1.1930) காலையில் அங்கிருந்து சுங்கே ஐன்ஸ் எஸ்டேட்டைப் பார்க்க வரும்படி அழைக்க வந்திருந்த திருவாளர்கள் திருச்சு சுந்திரராஜுலு நாயுடு அவர்கள் அழைப்புக்கிணங்கி திரு. இராமசாமியாரும் அவர் கோஷ்டியும் சென்று அங்கு சிற்றுண்டி ஏற்று எஸ்டேட் சம்மந்தமான விவரங்கள் தெரிந்து புகைப்படம் எடுக்கப்பட்டன. அங்கிருந்து நேரே தம்பினுக்கு வந்தார்கள். தம்பினுக்கு வருவதற்கு முன்பே சிரம்பானிலிருந்து அழைக்க வந்து காத்துக் கொண்டிருந்தவர்களில் கார்களில் எல்லோரும் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு யாழ்ப்பாண கனவானாகிய திரு. ஆறுமுகம் அவர்கள் பங்களா வில் ஜாகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபடி அங்கு சென்றதும் பலமான விருந்து நடந்தது. பிறகு அவ்வூர் பிரபலஸ்தர்கள் எல்லோரும் வந்து இயக்கத்தின் பெருமையைப் பற்றியும் அது இவ்வளவு சீக்கிரத்தில் இந்திய மக்களுக்குச் செய்துள்ள அபார நன்மைகளைப் பற்றியும் மனமாற்றத்தைப் பற்றியும் பிரமாதமாகப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு மாலை 4.30 மணிக்கு அவ்வூர் நகர மண்டபத்தில் பிரபல டாக்டர் கிருஷ்ணன் ஜே.பி. அவர்கள் தலைமையில் மீட்டிங் கூட்டப்பட்டதுமறுநாள் காலையில் அங்கிருந்து சுங்கே ஐன்ஸ் எஸ்டேட்டைப் பார்க்க வரும்படி அழைக்க வந்திருந்த திருவாளர்கள் திருச்சு சுந்திரராஜுலு நாயுடு அவர்கள் அழைப்புக்கிணங்கி திரு. இராமசாமியாரும் அவர் கோஷ்டியும் சென்று அங்கு சிற்றுண்டி ஏற்று எஸ்டேட் சம்மந்தமான விவரங்கள் தெரிந்து புகைப்படம் எடுக்கப்பட்டன. அங்கிருந்து நேரே தம்பினுக்கு வந்தார்கள். தம்பினுக்கு வருவதற்கு முன்பே சிரம்பானிலிருந்து அழைக்க வந்து காத்துக் கொண்டிருந்தவர்களில் கார்களில் எல்லோரும் அழைத்துச் செல்லப்பட்டார் கள். அங்கு யாழ்ப்பாண கனவானாகிய திரு. ஆறுமுகம் அவர்கள் பங்களா வில் ஜாகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபடி அங்கு சென்றதும் பலமான விருந்து நடந்தது. பிறகு அவ்வூர் பிரபலஸ்தர்கள் எல்லோரும் வந்து இயக்கத்தின் பெருமையைப் பற்றியும் அது இவ்வளவு சீக்கிரத்தில் இந்திய மக்களுக்குச் செய்துள்ள அபார நன்மைகளைப் பற்றியும் மனமாற்றத்தைப் பற்றியும் பிரமாதமாகப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு மாலை 4.30 மணிக்கு அவ்வூர் நகர மண்டபத்தில் பிரபல டாக்டர் கிருஷ்ணன் ஜே.பி. அவர்கள் தலைமையில் மீட்டிங் கூட்டப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இரவு 9 மணி அளவில் இரவு உணவு செராசில் சாப்பிட்டுவிட்டு, அய்யா ரெ.சு. அவர்களை அவருடைய வீட்டில் இறக்கிவிட்டு நானும் பரமசிவமும் அவரிடமிருந்து விடைபெற்றோம்.

பிறகு நானும் அய்யா பரமசிவமும் சா அலாம் நோக்கிப் பயணமானாம். இரவு 11.15 மணி அளவில்  வந்து சேர்ந்தோம். பணம் எதிர்பார்த்த அளவு சிறப்பாக அமைந்தது.

No comments: