தேச படத்தைக் கொளுத்துங்கள்
அருமைத் தமிழ்ப் பெருமக்களே!
இந்திய யூனியன் ஆட்சி (டெல்லி ஆட்சி) இந்தி மொழியைத் தீவிரமாகப் பரப்ப ‘கச்சையை’ வரிந்து கட்டிக் கொண்டு தீவிரமாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு வருகிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் 343 வது ஷரத்து சொல்கிறது; ‘யுனியனின் ராஜாங்க பாஷை தேவநாகரி லிபியில் எழுதப்பட்ட இந்தியாக இருக்க வேண்டும்’ என்று.
அதில் குறிப்பிடப்பட்டப்படி ஏற்படுத்தப்பட்ட அரசாங்க மொழிக் கமிஷன் -திரு. பி.ஜி. கெர் என்பவர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது-நாம் முன் கூட்டியே சொன்னபடி ‘இந்தி மொழிக் கமிஷன்’ என்று கூறும் அளவு இந்திதான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதையும் இங்கிலிஷிலிருந்து இந்திக்கு மாற்றங்கள் விரைவில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் எழுதிவிட்டது. பார்லிமெண்டும் அதன் சிபாரிசுகளை ஏற்றுக் கொண்டது. நமது நாட்டைச் சார்ந்த திரு. டாக்டர் சுப்பராயன் அவர்கள் அக் கமிஷனில் ஒரு மெம்பராக இருந்து ஆட்சேபக் குறிப்பு தெரிவித்த போதிலும் அவர்கள் காரியம் இதனால் எள்ளளவும் பாதிக்கப்படவில்லை.
ஆறு பேர் கொண்ட கமிட்டி அமைத்து அதில் டாக்டர் அம்பேத்கார் அவர்களையும் ஒரு அநாமதேய முஸ்லிமையும் போட்டு 4 பார்ப்பனர்கள் கூடி, கல்லுப் பிள்ளையார் மாதிரி அமர்ந்து, அசைக்க முடியாதபடி பார்ப்பன நலச்சட்டம் ஒன்றை-நவீன மணுதர்மத்தை-எழுதி அதற்கு ‘இந்திய அரசியல் சட்டம்’ என்று பெயரிட்டுக் கொண்டது போல், இந்திக் காரர்களையே போட்டு. பெயருக்கு ஒரு தமிழரைப் போட்டு அவரது ஆட்சேபக் குறிப்புக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல், இந்தி நுழைப்புக்குச் சரியானபடி அடிகோலி ஆணி அடித்துவிட்டார்கள்.
முன்பு ஒரு தடவை திருப்பதியில் இந்திய யூனியன் ஆட்சியின் தலைவரான ஜனாதிபதி திரு. ராஜேந்திர பிரசாத் அவர்கள் இந்தித் திணிப்பிற்கு முழு ஆதரவு கொடுத்துப் பேசியதைத் தமது அடுக்கடுக்கான உத்தரவுகள் மூலம் செயல்படுத்திக் காட்டுகிறார்.
முன்பு நாம் இந்தியைப் புகுத்துவதை எதிர்த்து இந்திய யூனியன் கொடியைக் கொளுத்துவது எனப் பிரகடனம் செய்தோம். ‘இல்லை, இல்லை; இந்தி பேசாத மக்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தியைத் திணிப்பதில்லை’ என்று அரசாங்கத்தினர் உறுதிமொழி கொடுத்து, நம்மைக் கொடி கொளுத்தும் போராட்டத்தைக் கை விடும்படி கேட்டுக் கொண்டனர்.
நான் அப்போதே இவர்களது நாணயத்தையும் வாக்குறுதியையும் எடை போட்டுப் பார்த்துத்தான் கைவிட வில்லை. தற்போதைக்கு நிறுத்தி வைக்கிறேன்-அதாவது ஒத்தி வைத்திருக்கிறேன் என்று அறிக்கை விட்டேன்.
பிறகு சாமர்த்தியமாக, கொடியைக் கொளுத்தினால் மூன்று வருஷ தண்டனை என்பதாக ஒரு சட்டத்தை (இந்நாட்டுச் சட்டசபைக்கு உத்தரவிட்டு)ச் செய்து வைத்துக் கொண்டு, இந்தியைத் தீவிரமாகப் புகுத்தும் கைங்கர்யத்தில்’ டெல்லி ஆட்சியினர் இறங்கியுள்ளனர்.
மைல் கற்களில் எல்லாம் இந்தி எழுப்படுகிறது. தமிழ்நாடு மந்திரிகள் ஆட்சேபித்தாலும் கூட அதற்கு டெல்லிக்காரர்கள் செவி சாய்ப்பதில்லை.
மணியார்டர், கார்டு மற்ற தபால் தந்தி ரசீதுகளில் இந்தி மயம்!
(வெளிநாடான இலங்கையில் சிங்களவர் அரசாங்கத்தால் கூட தமிழில் இவைகள் எல்லாம்-அதாவது கார்டு, ஸ்டாம்பு முதலியன இருக்கின்றன என்பது இங்கு நாம் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்)
வானொலிப் பெட்டியைத் திருப்பினால் அங்கு ஆகா·வாணி’ என அலறுவதைக் காணூகிறோம்.
மத்திய இலாக்காக்களான தபால், ரயில்வே,சுங்கம் போன்ற பல துறைகளில் வேலையில் உள்ளவர்களை எல்லாம் இந்திபடித்து பாஸ் செய்யும்படி சுற்றறிக்கைகளும், தாக்கீதுகளும் தூண்டுதல்களும் இடைவிடாமல் நடந்தவண்ணமே இருக்கின்றன.இலாக்காவினரோ இந்தி வாத்தியார் போட்டு வேலை நேரத்தில் ஒரு பகுதியை அதற்கும் தந்து இந்தி படிக்கும்படி செய்துகொண்டு இருக்கிறார்கள்.
பள்ளிக்கூடங்களில் எல்லாம் இந்தி கட்டாயமாகவே மாணவர்களுக்குப் புகுத்தப்படுவதுடன், இந்தியில் மார்க் வாங்காத மாணவர்கள் ஃபெயிலாக்கப்படுகின்றார்கள்.
இந்தி பேசாத ராஜ்யங்களிலிருந்து பிரதிநிதிகள் டெல்லி சட்டசபையில் மந்திரிகளைக் கேள்வி கேட்டால் அவர்களுக்குப் புரியாதவகையில் இந்தியிலேயே பதில்கள் தரப்படுகின்றன. இதைத் தட்டிக் கேட்டுப் பரிகாரம் தேட அவர்களுக்கு வசதி ஏதும் இல்லை.
இந்தியைப் பிரதான மொழியாகக் கொண்ட உத்திரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற ராஜ்யப் பிரதிநிதிகள் கணிசமான அளவு அங்கு இருப்பதால் இந்தி ஆதிக்கத்தை-ஆதிபத்தியத்தை எதிர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று பல பார்லிமெண்ட் உறுப்பினர்களுக்கே தெரியும்.
மற்றும், அகில இந்தியக் கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் எந்தக் கட்சியும் இந்தித் திணிப்பை எதிர்ப்பது- பேசுவது என்பது இயலாத காரியமாகும்.
சென்ற இரண்டு வாரங்களுக்குமுன் ஜனாதிபதி போட்டுள்ள உத்திரவு-இந்தியை எப்படியேணும் சீக்கிரம் திணித்து இங்கிலிஷைப் புதைகுழிக்கு அணுப்பியாக வேண்டும் என்கிறது.
இந்தி எதிர்ப்பாளர்கள் கருத்துக்கு மதிப்புத் தருவது போல, பிரதம மந்திரி நேரு சிற்சில நேரங்களில் பார்லிமெண்டிலும் வெளியிலும் வாய்ப்பேச்சு-உறுதிமொழிகள் தருகிறார். அந்தப் பேச்சு அச்சுப் போட்டு வெளியே வருவதற்குள்-அச்சு மை உலருவதற்கு முன்பே உள்நாட்டு மந்திரி இலாக்காவிலிருந்தோ அல்லது ‘இரா·டிரபவன’த்திலிருந்தோ இந்தி நுழைப்புத் திட்டம் வந்துவிடுகிறது.
ஆகவே இந்தியைத் தீவிரமாக எதிர்க்கிறோம் என்கிற தோழர்களே! கட்சிக் காரர்களே!
இந்தியாளர்களை ஆட்சிப் பீடத்தில் கொண்ட இந்திய யூனியன் ஆட்சி இருக்கும் வரை இந்தி நுழைக்கப்படாமல் இருக்க முடியுமா? என்று தீவிரமாக நாணயமாக யோசியுங்கள்!
நண்பர் ஆச்சாரியார் அவர்கள் இரண்டு ஆண்டுகளாக ‘இந்தி நுழைப்பு தேச அய்க்கியத்தைக் குலைக்கும்’ என்று சொல்லி வருகிறார். அதன் அர்த்தம், கருத்து எல்லாம்- இந்தியை ஒழிக்க முடியாவிட்டால் நாம் இந்தி ஆட்சியாகிய இந்திய ஆட்சிலிருந்து பிரிந்து கொள்வது என்பதுதானே?
இந்தியை எதிர்க்க, அதன் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட ஆட்சியின் பிணைப்பிலிருந்து நாம் விடுபடுவதைத் தவிர வேறுவழியுண்டா? சொன்னால் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றேன்.
மைல் கற்களில் இந்தி எழுதப்படுவதை எதிர்த்து ஒரு போராட்டம். உண்ணாவிரதம்
‘ஆகாசவாணி’யை எதிர்த்து ஒரு போராட்டம்! உண்ணாவிரதம்! மறியல்!
தபால், கார்டு, கவர்கள், மணியார்டர் கூப்பன்களில் இந்தி இருப்பதை எதிர்த்து ஒரு போராட்டம்! மறியல்! கிளர்ச்சி!
இப்படித் தனித்தனியாகக் கிளர்ச்சிகள் நடத்துவதனால் இலட்சியம் எந்த அளவுக்குக் கைகூடும்? எந்த அளவு இந்திக் கேடு நம்மைவிட்டு நீங்கும்? என்று யோசியுங்கள்! தனிப்பட்டவர்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும், விளம்பரம், வோட்டு, தியாக முத்திரை இவை கிடைக்குமே தவிர, காரியத்தில் அது இந்தி ஒழிப்புக்கு எந்த அளவு பயன்படும்?
எனவே இந்தி விஷவிருட்சத்தின் ஆணி வேரைக் கெல்லி எறிய ஒரே வழிதான் உண்டு. அதுதான் நாடு பிரிவினை.
ஆகவே அருமை இந்தி எதிர்ப்பாளர்களே! நீங்கள் வேறு எதற்காகவும் இந்திய தேசப் படத்தை எரிக்கவில்லை என்றாலும் இதற்காகவாவது கொளுத்துங்களேன்!
ஜுன் 5 ஆம் தேதி மாலை தயார்தானா? பல நாட்கள் அவகாசம் இருக்கிறது! நிதானமாகச் சிந்தியுங்கள்! இலட்சியத்தில் கவலை இருந்தால் தீ வையுங்கள், இந்தியத் தேசப்படத்திற்கு (விடுதலை-21-5-1960)
தமிழ்நாடு எதற்காக யூனியன் (டெல்லி) ஆட்சியின் கீழ் அடிமையாக இருக்க வேண்டும்? இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும்?டெல்லி ஆட்சி அப்படி என்ன நீதிக்கும், நிர்வாகத் pதிறமைக்கும், நேர்மைக்கும் ஜனநாயகத்திற்கும், பாதுகாப்பிற்கும், பலத்திற்கும் சிறப்பான பேர்போன ஆட்சி?
1. வரலாற்றுப்படி நாம், டெல்லியுடன் இணைந்து கூட்டாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரங்கள்; உண்டா? 56 நாடுகளில் நாம் ஒரு நாட்டாராய் இருந்து வந்தவர்கள்!
வெள்ளைக்காரன் வியாபாரம் நிமித்தம் இங்கு வந்து பல பகுதிகளில் இருந்த நாடுகளையும் பிடித்துத் தனது சவுகரியத்தை முன்னிட்டு இதை ‘ஒரு குடைக்கீழ்’ கொண்டு வந்தானே தவிர அதற்கு முன்பு எப்போதாவது டெல்லியை எஜமானனாகக் கொண்டு தமிழ்நாடு இருந்தது என்று சரித்திரத்தைப் புரட்டிக் காரணம் காட்ட முடியுமா? ‘கா·மீரம் முதல் கன்னியாகுமரி வரை’ என்ற சொற்றொடருக்கு அய்க்கியப்பட்ட ஒரே நாடு இந்தியா என்ற பொருள் இதற்கு முன் எப்போதாவது இருந்திருக்கிறதா? அல்லது,
2. புராணப்படியோ, இதிகாசப்படியோ;ஒரே நாடாக இருந்திருக்கிறதா? ‘சுயம்வரத்திற்குக் கூட 56 தேசத்து ராஜாக்கள் வந்திருந்தார்கள்’ என்றுதான் அவைகள் கூறுகின்றன. இராமாயணத்தில் வில் உடைப்பதற்குக் கூட பல தேச ராஜாக்கள் வந்தார்கள் என்று இல்லையா?
ஆகவே அப்போதும் கூட பற்பல ராஜ்யங்கள், அவைகளுக்குத் தனித்தனி ல்லைகள், ராஜாக்கள் இருந்திருக்கின்றனர் என்று தானே அறிகிறோம்?
3. பூகோளப்படி எந்த நாடாவது 2000 மைல்களுக்கு அப்பால் எஜமான் ஆட்சியை வைத்திருப்பதும், எதற்கெடுத்தாலும் அங்கு ஓடி ஓடி கருத்தும் உத்தரவும் என்ன என்று தெரிந்து, பிறகு செயலாற்றும் தன்மையைக் கொண்டுள்ளதா? எந்த வகையில் இது சரியானதாகும்?
4. கலாசாரப்படியாவது டெல்லி எஜமான ஆட்சிப் பீடர்களாகிய அவர்களுக்கும் நமக்கும் சம்பந்தம் ஏதாவது உண்டா?
உணவில், உடையில், மொழியில் எல்லாவற்றிலுமே ஒன்றுக்கு மற்றொன்று ஏறுமாறான நிலை?
ஆகவே, வரலாற்றுப்படியும் காரணமில்லை;
பூகோளப்படியும் காரணமில்லை;
புராணப்படியும் காரணமில்லை;
கலாசாரப்படியும் காரணமில்லை.
இந்தப்படியான எத்தன்மையாலும் நாம் டெல்லி ஆதிக்கத்திற்கு அடிமையாவதால் நமக்கு ஏதாவது சமுதாயம், பொருளாதாரம், ஆட்சிமுறை ஆகிய ஏதாவது ஒரு துறையிலாவது பலன் ஏற்படுகிறதா? ஏற்படுகிறது என்ற நிலையிலிருந்தாலாவது யூனியன் ஆட்சியின் கீழ் நாம் இருப்பதில் அர்த்தம் உண்டு.
இந்த ஆட்சியில் நீதி இல்லை என்பதைச் சில ஆண்டுகளுக்கு முன்பே சென்னை அய்க்கோர்ட்டில் என்மீது போடப்பட்ட ஒரு வழக்கின் போது தெளிவாக எடுத்து விளக்கி ‘பார்ப்பான், நீதிபதியாய்-ஆட்சியாளனாய் உள்ள நாடு கடும்புலி வாழும் காடேயாகும்’ என்று குறிப்பிட்டுள்ளேன்.
நிர்வாகத் திறமையோ நேர்மையோ இல்லை. ஒவ்வொரு வருஷமும் ஆடிட்டர் ஜெனரல் தரும் ரிப்போர்ட் ஒன்றே அதற்கு நல்ல ‘சர்ட்டிபிகேட்’டாக இருக்கிறது. பலகோடி நம்மிடம் சுரண்டும் வரிப்பணம் நாசத்திற்கும் மோசத்திற்கும் ஈடாக்கப்படுகிறது.
நம்மிடமிருந்து நம்மைக் கசக்கிப்பிழிந்து வாங்கி அதை அவர்கள் டாட்டா, பிர்லா, முந்திராக்கள் இடம் கோடி கோடியாகத் தந்து, அதற்குக் கைமாறாக (காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு இலட்சம் இலட்சமாகப் பெற்றுக் கொள்ளுகின்றனர்.
சென்ற ஆண்டு பிரதம மந்திரி திரு. நேருவின் காரியதரிசியாக இருந்த திரு. மந்தாய் என்பவர் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு அதிபராகவும், அதைக் கொண்டு அவர் தாயார் பெயரில் ‘ஜக்கம்மா டிரஸ்ட்’ என ஏற்படுத்தியும், செய்த ஜகஜாலப் புரட்டுகளையும், அதைப் பூசி மெழுகி மூடி மறைக்க நேரு பட்டபாட்டினையும், கடைசியில் முந்திரா விவகாரம் போலவே அது அமிழ்த்தப்பட்டதும் நாம் அவ்வளவு சுலபமாக மறந்து விடுவதற்குரியவைகளா?
பிர்லா, டாட்டா, டால்மியா போன்றவர்களிடம் வாங்கும் தேர்தல் நன்கொடையும் அதற்குப் பிரதிஉபகாரம் என்ற முறையில் சர்க்கார் அவர்களுக்கு வழித்துறை வகுப்பதும் நாம் எடுத்துக் காட்டி வராதவைகள் அல்லவே? இந்திய யூனியன் ஆட்சியின் நிர்வாகத் திறமைக்கும் நீதிக்கும் இன்ணும் வேறு எடுத்துக்காட்டுகள் வேண்டுமா?
ஜனநாயகத்திற்கும், இந்த ஆட்சிக்குந்தான் ஏதாவது சம்பந்தமுண்டா? ‘எனது கொடி, அரசியல் சட்டம், ஆட்சி பிடிக்காதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும்’ என்று பார்ப்பன சர்வாதிகாரத் திமிருடன் பேசும் ஒரு பிரதம மந்திரியைக் கொண்ட இந்த ஆட்சிக்கு ஜனநாயக ஆட்சி என்று பெயரிட்டு அழைப்பதை விட வடிகட்டிய முட்டாள்தனம் வேறு உண்டா?
அதிலும், கேரளத்தில் முறைப்படி நடந்த கம்யூனிஸ்ட் ஆட்சியைக் காலித்தனம் மூலம் கவிழ்க்க ஏற்பாடுகள் செய்து, பிறகு அதைக் காட்டி, ஒரு வரி உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டினார்களே, அந்தப் பிரத்யட்சநிலையைவிட வேறு உதாரணம் வேண்டுமா?
யூனியன் ஆட்சியின் கீழ் இருப்பதால் மற்ற எவையும் இல்லாவிட்டால் கூட நமக்கு பாதுகாப்பாவது இருக்கிறதா? வருஷம் ஒன்றுக்கு சுமார் 250 கோடி ரூபாய்க்கு மேல் இராûவத்திற்குச் செலவழிக்கப்படுகிறது. அதாவது 55ரூ இதற்குச் செலவழிக்கப்படுகிறது. ஆனாலும் பலன் உண்டா?
ஒரு பக்கத்தில் சீனாக்காரன் ஆக்கிரமிப்பு; இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான்காரனிடம் தினம் தினம் உதைபடும் நிலை. ‘சுண்டைக்காய்’ கோவாவை இதுவரை முயற்சி செய்தும் இவர்களால் எடுத்துக் கொள்ள முடியாத நிலை; வீணாகப் பல உயிர் பலியானதுதான் மிச்சம். உலகமெல்லாம் சென்று ‘தோட்டாக்கள்’ பெற்று வரும் பண்டித நேருவால் கடுகளவு உள்ள இதற்குப் பரிகாரம் காண இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளாக முடியவில்லை.
கடன், கடன் என்று வெளி நாட்டாரிடம் பல்லைக் காட்டிக் கெஞ்சி பல கோடிகள் மடிப்பிச்சை வாங்கி, கா·மீர் முனையிலும் இது போன்ற மற்ற காரியங்களிலும் அவை பாழடிக்கப்பட்டு வருகின்றன. கா·மீர் பிரச்சினைக்கு மாத்திரம் இதுவரை சுமார் ரூ 300 கோடிக்கு மேல் செலவழித்தனர். ‘காதொடிந்த ஊசியளவும்’ பயன் விளையவில்லை.
இந்த நிலையில் எதற்காக நாம் டெல்லி ஆட்சியின் கீழ் இருக்கவேண்டும்? ஆண்டு ஒன்றுக்கு 66 கோடி ரூபாய் எதற்காகக் ‘கப்பம்’ கட்ட வேண்டும்?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! ஏக இந்தியத் தோழர்களே, நன்றாகச் சிந்தியுங்கள்!
தெளிவடைவீர்களானால், ஜுன் 5-ந்தேதி மாலை இந்தியத் தேசப் படத்தில் தீ வையுங்கள்! நாடு பிரிக்க, மேற்கூறிய அநியாய அக்கிரமங்களைக் கண்டிக்க , அடக்கி ஒழிக்க இது ஒன்றுதான் வழி! வேறு மார்க்கம் இருந்தால் காட்டுங்கள்; வேறு வழி இருந்தால் சொல்லுங்கள், இல்லை என்றால் நீங்கள் எங்கள் வழிக்கு வாருங்கள்! நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! பந்தத்தை ஏந்துங்கள்! படத்தைப் பொசுக்குங்கள்! (விடுதலை -22.5.1960)