நான் புவியில் 85 ஆண்டுகள் வாழ்ந்து 86 வது ஆண்டில் புகுகிறேன்.
இந்த நாட்டில் மக்கள் வாழும் சராசரி வயது 10 ஆண்டுகளுக்கு முன் 32 வயதாக இருந்தது. இன்று 48 வயதாக மாறியுள்ள இக்காலத்தில் ஒரு மனிதன் 85 ஆண்டு வாழ்ந்து, அதுவும் ஓய்வு என்பதை அறியாத தொண்டும் சுகம் என்பதை அறியாத வாழ்வும், கிடைத்ததைத் தின்று கொண்டு, வாய்த்த இடத்தில் தூங்கிக் கொண்டு திரிந்த நான் 85 ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன் என்றால் என் ஆயுளைப் பற்றி நான் பாராட்டிக் கொள்ள வேண்டாமா?
என்ன செய்து சாதித்து விட்டாய்? என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பதில் நீங்களே (வாசகர்கள்) தான் தேடிப்பிடித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஓய்வு ஒழிச்சல் இன்றி, சோம்பல் கழிப்பிணித்தனமின்றி உழைத்தேன். திருட்டு, புரட்டு, மோசடி இன்றி வெள்ளையாய் நடந்து கொண்டேன். என் நடத்தையில் பல தவறுதல்கள், தகாத காரியங்கள் ஏற்பட்டு இருக்கலாம். என்னையே நீதிபதியாகக் கொண்டு எனக்கு சரி என்று பட்டதையும் , தேவை என்று பட்டதையும் செய்தேன். அதுவும் ஒளிவு மறைவு இல்லாமல் செய்து வந்தேன்.
வாழ்வில், செயலில் பல ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். ஆனாலும் அதையே ஒரு படிப்பினையாகக் கொண்டு முயற்சியில் சளைக்காமல் நடந்து கொண்டுதான் வருகிறேன்.
நான் ஒரு அநாமதேய வாழ்வு வாழவில்லை என்பதும், அநாவசியமான மனிதனாய் இருந்து வரவில்லை என்பதும் எனக்கு ஒரு ஆறுதல் தரத்தக்க விஷயமாக இருந்து வந்தது.
இப்படிப்பட்ட எனது வாழ்நாள் பற்றிய விளக்கம் என்னவென்றால் 1964 செப்படம்பர் 17-ந்தேதி வியாழக் கிழமைக்கு சரியான குரோதி வருஷம் புரட்டாசி மாதம் 1 ந்தேதிக்கு எனக்கு 85 வயது முடிகிறதென்றால், அது நான் பிறந்து ஓராயிரத்து இருபது (1020) மாதங்கள் ஆகிறதுடன் , நான் பிறந்து இன்றைக்கு (17.9.1964 -க்கு) முப்பத்தி ஓராயிரத்து நாற்பத்தேழு நாட்கள் வாழ்ந்து விட்டேன் என்று ஆகிறது.
மற்றும் நான் (1034) ஓராயிரத்து முப்பத்தி நான்கு அம்மாவாசையையும், 1034 பவுர்ணமியையும் , 1034 பிறையையும் கண்டு விட்டேன் என்று ஆகிறது.
ஆயிரம் பிறை கண்டவன் முழு ஆயுள் வாழ்ந்தவனாவான் என்று சொல்லுவார்கள். அதுபோல் முழு வாழ்நாள் வாழ்ந்துவிட்டேன்.
(86 ஆம் பிறந்த நாள் விடுதலை மலரிலிருந்து 17.09.1964)
No comments:
Post a Comment