Sunday, April 26, 2026

அரசியல் சட்ட எரிப்பு ஏன்-4 - பெரியார்

 அரசியல் சட்ட எரிப்பு ஏன்-4

சட்டக்குழு உறுப்பினர்கள்:

1. அல்லாடி கிரு·ணசாமி அய்யர் (பார்ப்பனர்)

2. டி.டி.கிரு·ணமாச்சாரி (பார்ப்பனர்)

3. என். கோபாலசாமி அய்யங்கார் (பார்ப்பனர்)

4. கே.எம். முன்ஷி (வடநாட்டு பார்ப்பனர்)

5. டாக்டர் பி. ஆர். அம்பேத்கார் (ஆதித்திராவிடர்)

6. முகமது சாதுல்லா (முஸ்லிம்)

1. 1077 நாள் செலவு செய்து உருவாக்கிய இந்தச் சட்டத்தில் வெகு ஜாக்கிரதையாக பார்ப்பனர் (ஆரிய பிராமணர் ) உயர்வும், பார்ப்பனரல்லாத மக்கள் ( திராவிடர்-‘சூத்திரர்’)இழிவும் சாஸ்திரப் படிக்குக் கொண்ட இந்து மதத்தைக் காப்பது, மத உரிமை அளிப்பது என்கிற தன்மையில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் தகுந்தபடி பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.

2. மேலும், ‘சூத்திரர்’ என்று கூறப்படுகின்ற மக்களின் பிரதிநிதிகள் அறவே இல்லாமல் 6 பேர்களில் 4 பேர் பார்ப்பனர்களாகவே கொண்டு -மற்றும் இரு இனத்தின் பிரதிநிதிகளுக்கும் கூட விலை கொடுத்து விட்டுச் செய்து கொண்டதுதான் இந்திய அரசியல் சட்டம் என்ற இந்த அரசியலமைப்பாகும்.

3. இந்த நாட்டு வாக்காளர்களின் உண்மையான பிரதிநிதிகளைக் கொண்டல்ல, இந்தச் சட்டம் செய்யப்பட்டது. எவ்வாறெனில், 1946 இல் நடைபெற்ற தேர்தலின் முலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டசபை அங்கத்தினர்களால் ஓட்செய்யப்பெற்று, அரசியல் நிர்ணயசபை அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பிரிட்டிஷார் அளித்த இந்திய சுதந்திரச் சட்டமே 1947இல் தான் நமக்குக் கிடைத்தது! நாடு இரண்டாகப் பிரிந்த பிற்பாடு எஞ்சியிருந்த உறுப்பினர்களால், மாகாணங்களிலிருந்த 235 பேர்களும், சமஸ்தானங்களிலிருந்து 72 பேர்களுமாக-மொத்தம் 307 பேர்கள்தான் அப்போது இருந்தார்கள். அப்போது ஓட்டு உரிமை பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை இன்றைய வாக்களர்களின் எண்ணிக்கையில் பன்னிரண்டு சத விகிதத்தினரேயாவர். எனவே, இது எப்படி மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்டதாகும்? நாடு ‘சுதந்திர’ மடையாத காலத்தில் நடந்த எலக்ஷன் பிரதிநிதிகளால்-காங்கிரஸ் பார்ப்பனப் பிரதிநிதிகளால் ஏற்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் நம்மை-அதாவது பார்ப்பன ஆதிக்கத்தினின்று விடுதலை பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிற நம்மை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?

4. மற்றும், மொழி சம்பந்தமாகவும், வரி சம்பந்தமாகவும் பொருளாதார உரிமை சம்பந்தமாகவும், வெளி நாட்டார் சுரண்டுதல் சம்பந்தமாகவும் அதிகாரங்களைத் தங்களுக்கே வைத்துக் கொண்டு-எந்த வகையிலும் மாற்ற முடியாத அளவுக்கு இரும்புக் கூட்டுப் பாதுகாப்பை இந்தச் சட்டத்தின் மூலம் பார்ப்பனர்களும் வட நாட்டார்களும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். அதிலிருந்து விடுபட ஆசைப்படுகிறோம் என்பதைக் காட்டுவதற்காகத்தான் ‘அரசியல் சட்ட எரிப்பு’ என்பதாகும்.

இந்திய அரசியலமைப்புப் பீடிகை:

இந்தியாவின் மக்களாகிய நாம். இந்தியாவை ஒரு சம்பூரண அதிகார ஜனநாயகக் குடியரசாக அமைத்து அதன் குடிகள் அனைவருக்கும்-சமூகம்,பொருளாதாரம்,ராஜியம்-இவற்றில் நீதியும்; எண்ணம், வெளியிடு கோட்பாடு, மதம், வழிபாடு இவற்றில் சுதந்திரமும்; 

அந்தஸ்து, வாய்ப்பு -இவற்றில் சமத்துவமும் கிடைக்குமாறு செய்யவும் தனியொருவரின் கண்ணியமும் தேச சமுதாயத்தின் ஒருமைப்பாடும் நிலைபெறும் வண்ணம் அவர்கள் அனைவரிடமும் சகோதரத்துவம் ஓங்குமாறு செய்யவும் மனப் பூர்வமாகச் சங்கற்பம் செய்து கொண்டமையால், நமது அரசியல் நிர்ணய சபையிலே 1949 ஆம் வருஷம் நவம்பர் மாதம் இருபத்தாறாம் தேதியாகிய இன்று, இதனால் இந்த அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு. சட்டம் இயற்றி நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.

அடிப்படை உரிமைகள்:

13(2) இப்பாகத்தால் அளிக்கப்பட்ட உரிமைகளைப் பறிக்கும் அல்லது சுருக்கும் சட்டம் எதையும் ஒரு இராஜ்யம் இயற்றலாகாது. இப்பகுதியை மீறி இயற்றப்படும் சட்டம் எதுவும் அப்படி மீறிய அளவிற்குப் பயனற்றதாகும்.

மத சுதந்திர உரிமை:

25 (1) அமைதி. நல்லொழுக்கம், ஆரோக்கியம்  இவற்றிற்கும் - இந்தப் பாகத்திலுள்ள மற்றைய ஷரத்துக்களுக்கும் உட்பட்டு, மக்கள் அனைவரும், மனச்சாட்சி சுதந்திரத்திற்கும் தடையின்றி எம் மதத்தையும் தழுவுதல், அணு·டித்தல், பரவச் செய்தல் இவை பற்றிய உரிமைக்கும் சமமான பாத்தியதை உடையவராவார்.

பண்பாடு, கல்வி இவைபற்றிய உரிமைகள்:

29. (1) தனிப்பட்ட மொழி, லிபி, அல்லது பண்பாடு இவற்றை ஏற்கனவே உடையவராய், இந்தியாவின் ஆட்சிப் பரப்பின் அல்லது அதன் ஒரு பாகத்தில் வசிக்கும் குடிகளின் எப்பிரிவினரும் அவற்றைச் சிதையாமல் காக்க உரிமை உள்ளவர் ஆவார்.

(2) மதம், இனம், சாதி, மொழி இவை காரணமாக அல்லது இவற்றுள் எவையேணும் காரணமாக இராஜ்யத்தினால் பராமரிக்கப்பட்ட அல்லது இராஜ்ய நிதிகளிலிருந்து உதவி பெறுகின்ற எந்தக் கல்வி ஸ்தாபனங்களிலும் சேருவதற்கு எக் குடியும் மறுக்கப்பட்டலாகாது.

அரசியலமைப்பின் திருத்தம்:

368. இந்த அரசியலமைப்பின் திருத்தம் அதற்கென பார்லிமெண்ட் சபை ஒன்றில் ஒரு மசோதாவைக் கொண்டுவருவதால் மட்டுமே ஆரம்பிக்கப்படலாம். அச்சபை ஒவ்வொன்றிலும்-அம் மசோதா அச் சபையின் மொத்த அங்கத்தினர்களில் பெரும்பான்மையோராலும். வந்திருந்து ஒட்டுச் செய்யும் அச் சபையின் அங்கத்தினர்களில் முன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மையோராலும் நிறைவேற்றப்பட்டால்.அது ரா·டிரபதியிடம் அவர் அணுமதிக்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்; அம் மசோதாவிற்கு அணுமதி அளிக்கப்பட்டதும் இந்த அரசியலமைப்பு அம்மசோதாவின் ஷரத்துக்களின்படி திருத்தம் பெற்றதாகும்.

இவை போன்றே இன்ணும் பல அணுமதிகள் உள்ளன.

குறிப்பு: இந்த அரசியல் சட்டத்தை உருவாக்கின ஆறுபேர்களில் நான்கு பேர் பார்ப்பனர்; இதை நிறைவேற்றிய அரசியல் நிர்ணய சபை என்பது வயது வந்தோரின் வாக்குரிமை பெறாதவர்களை-பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களையே கொண்டதாகும்.

இந்தச் சட்டத்தில் இந்து மதத்துக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது; இந்து மதத்தில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது; சாதியைக் காப்பாற்றத்தான் இடமிருக்கிறது. இதை எளிதில் திருத்தியமைப்பதற்கும் சாதி ஒழிப்புக்காரருக்கு வசதியில்லை. வாய்ப்பும் இல்லை (368 வது பிரிவைப் படியுங்கள்)

ஆதலால், சாதியை ஒழிக்க விரும்புகிறவர்கள், தனித் திராவிட நாடு பெற விரும்புகிறவர்கள், தமிழ்நாடு சுரண்டப்படுவதைத் தடுக்க விரும்புவர்கள்-என்ன செய்வது?

இதை எரிப்பதன் மூலம் நம் எதிர்ப்பைக் காட்டிக் கொள்வதைத்தவிர, வேறு வழி என்ன? (விடுதலை 17.11.1957)

சட்ட எரிப்பு ஏன்-5

26 ஆம் தேதி கிளர்ச்சியில் நீதி மன்றத்தில் கூற வேண்டியது;

நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலணுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.

ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச் சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிருக்கும்., எந்த பொருளுக்கும் சேத மில்லை. ஆதலால். நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்ப வில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். (விடுதலை-21.11.1957)

No comments: